2/13/11

"பென் அலி" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை

அமெரிக்காவின் உதவியுடன் பதவியை காப்பாற்றிக் கொள்பவர்கள். அமெரிக்காவை திருப்திப்படுத்த இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பவர்கள். எல்லோருக்கும் பென் அலியின் கதை ஒரு சிறந்த பாடம். அரபுலகின் முதலாவது மக்கள் எழுச்சியின் விளைவாக, உயிருக்கு பயந்து நாட்டை விட்டோடிய துனிசியா ஜனாதிபதி பென் அலி, இன்று சவூதி அரேபியாவில் சிறைக்கைதி போல வாழ்கின்றார். அதிகார மமதையுடன், டாம்பீகமான பணக்கார வாழ்வு வாழ்ந்தவர். துனிசியாவில் பல வர்த்தக நிறுவனங்களின் சொந்தக்காரர். 23 வருடங்களாக ஒரு தேசத்தின் அதிபதியாக எதிர்க்க ஆளின்றி அதிகாரம் செலுத்தியவர். இன்று உடல் தளர்ந்த வயோதிபராக, 74 வயதில் ஒதுங்க இடமின்றி பரிதாபகரமாக அலைந்தார். முதலில் மால்ட்டாவிடம் அடைக்கலம் கேட்டார். பின்னர் நெருக்கமான அயலுறவுக் கொள்கையைக் கொண்டுள்ள பிரான்சிடம் தஞ்சம் கோரினார். ம்ஹ்ம்.... யாருமே அந்த அரசியல் அகதியை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. இத்தனை காலமும் அமெரிக்காவின் விசுவாசியாக இருந்ததால், ஒபாமாவுக்கு தொலைபேசிப் பார்த்தார். வாஷிங்டனில் பென் அலியின் அழைப்புக்கு யாரும் பதில் சொல்லவில்லை. இறுதியில் மதச்சார்பற்ற கொள்கைப் பிடிப்பாளரான பென் அலி, மத அடிப்படைவாத சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார்.

பென் அலி காலம் பூராவும் யார் யாருக்கு சேவை செய்தாரோ, அவர்கள் யாரும் ஆபத்து நேரத்தில் உதவவில்லை. அரேபிய சகோதரர்களை பகைத்துக் கொண்டு, இஸ்ரேலுடன் நட்பு பாராட்டினார். ஒரு காலத்தில் துனிசியாவில் PLO தலைமையகத்தை இஸ்ரேல் குண்டு வைத்து தகர்த்தது. அப்படியிருந்தும் அதை எல்லாம் மன்னித்து விட்டு, முன்னாள் பிரதமர் ஆரியல் ஷரோனை கூப்பிட்டு விருந்து கொடுத்தார். ஆரியல் ஷரோன் ஒரு போர்க்குற்றவாளி என்று உலகமே குற்றஞ்சாட்டினாலும், தயக்கமின்றி கை குலுக்கினார். இருந்தும் என்ன? ஆபத்து நேரத்தில் உற்ற நண்பனுக்கு உதவ இஸ்ரேல் முன் வரவில்லை. இது தான் யதார்த்தம். சில தமிழர்கள் இப்போதும் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுமாறு எங்களை அழைக்கிறார்கள். அவர்களுக்கும் பென் அலி போல அடி பட்டால் தான் ஞானம் பிறக்கும்.

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர், தலைநகரான தியூனிசில் டாக்சியில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது, அமெரிக்க தூதரகத்தின் முன்னாள் செல்லும் பாதை தடுக்கப் பட்டிருந்தது. வேறு வழியால் சுற்றிச் சென்றதால் 20 நிமிடம் அதிகமாக பிடித்தது. டாக்சி சாரதி வழி நெடுக, அமெரிக்கர்கள் கேட்பதை எல்லாம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கும் தனது அரசை திட்டிக் கொண்டிருந்தார். அப்போது பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த காலம். அயல் நாடான அல்ஜீரியாவுடன் ஒப்பிடும் போது, துனிசியாவில் தனி நபர் வருமானம் அதிகம். அதனால் பெரும்பாலான துனிசியர்கள் பென் அலியின் சர்வாதிகாரத்தை பொறுத்துக் கொண்டார்கள். ஆனால் முன்பு பிரான்ஸ் இருந்த இடத்தில் இன்று அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அன்று நடந்து கொண்டிருந்த ஈராக் போரினால், அரபு இன உணர்வுகள் கொந்தளித்துக் கொண்டிருந்த காலகட்டம். அதனால் அரசு பகிரங்கமாக அமெரிக்கா பக்கம் நின்றதை, துனிசிய மக்கள் விரும்பவில்லை. துனிசியாவில் பயணம் செய்த நாட்களில் நான் சந்தித்த அனைவரும் அந்த விஷயத்தில் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனர்.

துனிசியா முன்னாள் பிரெஞ்சுக் காலனி என்பதால், அங்கே போவதற்கு முன்னம் எனது பிரெஞ்சு மொழி அறிவை சற்று மெருகூட்டிக் கொண்டேன். நான் தட்டித் தடுமாறி துனிசியர்களுடன் பிரெஞ்சில் சம்பாஷணையை தொடங்கினால், அவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பதிலளித்தார்கள். சுற்றுலாப்பயணிகளின் வருகை மட்டுமல்ல, அமெரிக்காவின் நெருக்கமும் ஆங்கில மொழி கற்றோரின் அதிகரிப்புக்கு காரணம். சர்வதேச வர்த்தக சமூகத்திற்காக, துனிசியாவில் ஒரு ஆங்கில வாரப் பத்திரிகை கூட வெளி வந்து கொண்டிருந்தது. அமெரிக்கா அல்கைதாக்கு எதிரான போரில் வென்றதோ இல்லையோ. துனிசியாவில் அத்தகைய அமைப்புகளை அடியோடு அழித்து விட்டார்கள். மசூதியில் அரசியல் பேசினால் கூட, இரகசியப் போலீசார் பிடித்துச் சென்று சிறையில் போட்டார்கள். தற்போது நடந்துள்ள புரட்சியில் இஸ்லாமிய மத அரசியல் வாசகங்களைக் கொண்ட பதாகைகளை காணவில்லை என்று பலர் "வருத்தப்பட்டார்கள்." அப்படி வருத்தப் பட்டவர்கள் மேற்குலக ஊடகவியலாளர்கள். புரட்சிக்கு இஸ்லாமிய முலாம் பூச முடியாத வருத்தம் அவர்களுக்கு.

இதுவரை துனிசியாவை பார்க்காதவர்கள், அது துபாய், குவைத் போலிருக்கும் என்று நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பிரான்சில் வாழும் ஒருவரை கண்ணைக் கட்டி கூட்டி வந்து டியூனிஸ் நகரில், அல்லது வட துனிசியா பகுதியொன்றில் கொண்டு வந்து விட்டால், வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. இயற்கை, நில அமைப்பு மட்டுமல்ல, கட்டிடங்கள் தெருக்கள் எல்லாமே பிரான்சின் தெற்குப் பகுதி போன்றிருக்கும். ஒரு சராசரி "முஸ்லிம் நாட்டில்" நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் அங்கே கிடையாது. தெருவோர பெட்டிக் கடையில் சாதாரணமாக பியர், வைன் வாங்கலாம். பெண்கள் சுதந்திரமாக திரிகிறார்கள். நகரங்களில் நட்சத்திர ஹோட்டல் டிஸ்கோதேக்கில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நங்கைகளைக் காணலாம். துனிசிய பெண்கள் மிகவும் அழகானவர்கள். ஐரோப்பிய மகளிரைப் போல கவர்ச்சியான உடை அணிவதும் சர்வசாதாரணம். ஆனால்... ஆனால்... தலையில் முக்காடு போட்ட பெண்ணை துனிசியாவில் மிக மிக அரிதாகவே காண முடியும்.

பிரான்சில் முக்காடு தடைச் சட்டம் அமுலுக்கு வந்த பொழுது, உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பிரான்சில் அப்படி ஒரு சட்டம் வருவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, துனிசியா அரசு முக்காடு அணிவதை தடை செய்து விட்டது. முக்காடு அணிந்தவர்கள் எல்லாம் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் என்று பென் அலி நினைத்தாரோ என்னவோ? அல்லது மதச்சார்பற்ற லிபரல் கொள்கையை பின்பற்றுவதில் தான் மேற்குலகின் சிறந்த மாணவன் என்று காட்ட விரும்பினாரோ? காரணம் என்னவாக இருந்தாலும், பாடசாலை, கல்லூரி, அலுவலகம் போன்ற பொது இடங்களில் பெண்கள் முக்காடு அணிவதும், ஆண்கள் தாடி வைப்பதும் தடை செய்யப்பட்டது. தடையை மீறுபவர்களை காவல்துறை கைது செய்தது. ஒரு நாளாவது போலிஸ் நிலையத்தில் வைத்திருந்து விட்டு விட்டார்கள். எவராவது பிடிவாதமாக தொடர்ந்து செய்தால், மதத் தீவிரவாதியாக கணிக்கப்பட்டார்.

அமெரிக்காவும், இஸ்ரேலும் எந்தளவு மகோன்னத நட்பு கொண்டிருந்தாலும், ஆபத்து நேரத்தில் உதவ வர மாட்டார்கள். அமெரிக்காவை, இஸ்ரேலை விமர்சித்து நான் எழுதும் கட்டுரைகளை கடுமையாக எதிர்க்கும் "தமிழர்கள்" இருக்கிறார்கள். அவர்கள் யாரும் பென் அலி அளவுக்கு அமெரிக்க/இஸ்ரேல் விசுவாசம் காட்டியிருக்க முடியாது. பென் அலியின் கதை மேற்குலக விசுவாசிகளுக்கு ஒரு பாடமாக அமையட்டும். பென் அலி மட்டுமா அவரது மேற்குலக நண்பர்களால் கைவிடப்பட்டார்? ஈரானில் ஷா, பிலிபைன்சில் மார்கோஸ்.... மக்கள் புரட்சியால் விரட்டப்பட்டு நாடு நாடாக அலைந்தார்கள். எந்தவொரு மேற்குலக நாடும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வரவில்லை. இன்னும் சில துரதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் வேண்டுமா? பனாமாவில் நொரீகா, ஈராக்கில் சதாம், ஆப்கானிஸ்தானில் பின்லாடன்... இவர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் சி.ஐ.ஏ. யின் சம்பளப் பட்டியலில் இருந்தவர்கள். முற்காலத்தில் ஆதரித்து அரவணைத்த அதே அமெரிக்கா, பிற்காலத்தில் அவர்களை வில்லன்களாக்கியது. இந்த முன்னாள் அமெரிக்க விசுவாசிகளின் பரிதாபகரமான நிலைமை உங்களுக்கும் வர வேண்டுமா? தாராளமாக அமெரிக்காவையும், இஸ்ரேலையும் ஆதரியுங்கள்.

"லைலா": துனிசியாவின் தனியார்மயக் கொள்ளைக்காரி

துனிசியாவின் முதல் பெண்மணியும், முன்னாள் அதிபர் பென் அலியின் இரண்டாவது தாரமுமான லைலா, அந் நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட நபராவார். லைலா பற்றிய மரியாதையான வார்த்தை எதுவும் சாதாரண மக்கள் வாயில் இருந்து வராது.
முதல் பெண்மணி பெயரை சொன்னால், பொது மக்கள் அவரை ஒரு "விலைமாது" என்று தூற்றுகின்றனர். டியூனிஸ் நகரில் சிகையலங்கார நிபுணராக பணியாற்றியவர், எப்படியோ பென் அலியின் மனத்தைக் கவர்ந்து விட்டார். பிடித்தாலும் புளியங் கொம்பாக பிடித்தார். வேறு யாரையாவது மணந்திருந்தால், தேசத்தின் பொருளாதாரத்தையே குடும்பச் சொத்தாக மாற்றியிருக்க முடியுமா?

லைலாவின் குடும்பப் பெயர் டிரபெல்சி (Trabelsi). (லிபிய தலைநகரமான திரிபோலியை சேர்ந்தவர்கள் என்று அர்த்தம்.) பென் அலி, 1992 ல் லைலாவை திருமணம் செய்து பட்டத்து ராணியாக்கியதுடன் நின்றிருந்தால் பரவாயில்லை. அவரது பத்துக்கும் குறையாத சகோதரர்கள், உறவினர்கள் எல்லோருக்கும் குறைந்தது ஒரு வர்த்தக நிறுவனமாவது பரிசாகக் கிடைத்தது. துனிசியா புரட்சிக்கு வித்திட்ட காரணிகளில் ஒன்றாக கருதப்படும் விக்கிலீக்ஸ் கேபிளிலும் அந்த தகவல் குறிப்பிடப்பட்டது. துனிசியா ஊழலினால் உள்ளுக்குள் அழுகிக் கொண்டிருப்பதை அமெரிக்க தூதுவரே எழுதியுள்ளார். பென் அலியின் மனைவி லைலாவும், அவரது டிரபல்சி இனக்குழுவும் மாபியா கிரிமினல்கள் போன்று செயற்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். மக்கள் எழுச்சியின் பொழுது, லைலாவினதும், அவரது உறவினர்களுக்கும் சொந்தமான நிறுவனங்கள் யாவும் தாக்கப்பட்டன. அவை சூப்பர் மார்க்கெட்கள் என்றால், அங்கிருந்த பொருட்களை மக்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

ஐ.எம்.எப். முன்னெடுக்கும் பொருளாதாரத்தை தனியார்மயமாக்கும் திட்டம் பல நாடுகளில் ஊழலுக்கு காரணம். முன்பெல்லாம் இதைச் சொன்னால், "இடதுசாரிகளின் வெற்றுப் பேச்சு" என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் நிராகரித்து வந்தார்கள். ஆனால் துனிசியா தொடர்பான விக்கிலீக்ஸ் கேபிள், தனியார்மயத்தினால் விளைந்த தீமைகளை விலாவாரியாக எடுத்துச் சொல்கின்றது. ஐ.எம்.எப். தனியார்மயத் திட்டத்தை செயற்படுத்த ஆலோசனை கூறிய உடனேயே, பென் அலியின் குடும்ப உறுப்பினர்கள் அரச நிறுவனங்களை வாங்கி விட்டார்கள். ஆளும் வர்க்கம் என்பதால், தனியார்மயமாக்கல் என்ற பெயரில், அவர்களே அரச நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கினார்கள். பின்னர் அதே நிறுவனங்களை பிற தொழிலதிபர்களுக்கு இலாபத்துடன் விற்றுள்ளனர். விக்கிலீக்ஸ் கேபிளில் அமெரிக்க இராஜதந்திரியே அப்படியான சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகின்றார்.

ஐ.எம்.எப். தனியார்மயத்தை அறிவிப்பதற்கு முன்னமே, பென் அலியின் புதல்வன் மார்வன் மப்ரூக் "Attijari வங்கி" யின் 17 % பங்குகளை வாங்கினார். தனியார்மய அமுலாக்கத்தின் போது, 35 % பங்குகளாக அதிக லாபத்திற்கு விற்கப்பட்டன. துனிசியாவில் தனியார்மயமாக்கல், அந்த "தேசத்தின் மாபெரும் பகற்கொள்ளை" என்று அழைக்கப்படுகின்றது. துனிசியாவின் பொருளாதாரத்தில் எந்தத் துறையையும் டிரபல்சி குழுவினர் விட்டு வைக்கவில்லை. வங்கி,ஹோட்டல், வீட்டு மனை, போக்குவரத்து, தொலைத்தொடர்பு எல்லாவற்றிலும் அவர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது. தனியார்மயமாக்கல் என்ற பெயரில் நாட்டை கொள்ளையடித்த டிரபல்சி ஆளும் வர்க்கம், மக்கள் எழுச்சியைக் கண்டு ஓடி ஒளிந்தது. விமான நிலையத்தில் தப்பியோட முயன்ற டிரபல்சி உறுப்பினர் ஒருவர், இனந்தெரியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டார்.

ஜனாதிபதி பென் அலி குடும்பம் நாட்டை விட்டு தப்பியோடும் பொழுதும் வெறுங்கையோடு ஓடவில்லை. மத்திய வங்கியின் சேமிப்பில் இருந்த தங்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு சென்றார்கள். 45 மில்லியன் யூரோ பெறுமதியான, ஒன்றரை தொன் தங்கப்பாளங்கள் பென் அலியின் மனைவி லைலா தன்னோடு எடுத்துச் சென்றுள்ளார். முதலில் லைலாவின் கையில் தங்கத்தை கொடுக்க மத்திய வங்கி நிர்வாகி மறுத்து விட்டாலும், பென் அலி வற்புறுத்தியதால் கொடுத்திருக்கிறார். பென் அலி குடும்பம் தற்போது சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில், கொள்ளையடித்த தங்கத்துடன் ஓய்வெடுக்கின்றனர். லைலா சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்த செய்தியை கேள்விப்பட்ட துனிசியா மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஏனென்றால், துனிசியாவில் பெண்கள் பர்தா அல்லது முக்காடு அணிவதை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வந்தவர் அவர் தான். இன்று பழமைவாத சவூதி அரேபியாவில், லைலா கருப்பு ஆடையால் போர்த்து மூடிக் கொண்டு செல்லும் காட்சியை மனக்கண்ணால் கண்டு இரசிக்கின்றார்கள்.

துனிசிய புரட்சியில் இஸ்லாமிய- அரசியல்வாதிகள் பங்கெடுத்ததாக இது வரை எந்த தகவலும் இல்லை. வேலையில்லாப் பிரச்சினை, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, போன்ற பொருளாதாரக் காரணிகள் தான் துனிசியாவில் மக்கள் எழுச்சியை தூண்டியது. இஸ்லாமியவாதிகளைப் பொறுத்த வரை, இவையெல்லாம் "காலாவதியான இடதுசாரிகளின் கொள்கைகள்." "மக்களுக்கு வாயும், வயிறும் முக்கியமல்ல. உயிரை விட மத உணர்வு மேலானது." என்று நம்மூர் தமிழ் உணர்வாளர்கள் போல வாதாடுகிறவர்கள். அவர்கள் இந்த புரட்சியில் கலந்து கொள்வார்களா? அரபுலகின் முதலாவது புரட்சியில் துனிசிய கம்யூனிஸ்ட்கள், சோஷலிஸ்டுகள் பெருமளவில் கலந்து கொண்டனர். கணிசமான அளவு பெண்களும் ஆர்ப்பாடங்களில் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்

"குறிப்பாக ஒடுக்கப்பட்ட அரபு மக்களுக்கும், முழு உலகிற்கும் துனிசிய மக்கள் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகின்றனர். எவரிடமிருந்தும் எதனையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாமே உங்களிடம் உண்டு. மனதையும், சக்தியையும் முடமாக்கும் அச்சத்தில் இருந்து விடுபட்டு மேலெழுந்து வாருங்கள்."
- ஒரு துனிசிய பதிவர்
துனிசிய புரட்சி ஒன்றுமில்லாத இடத்தில் இருந்து எழவில்லை. வெறும் கலவரங்கள் மட்டும் புரட்சியை தோற்றுவிப்பதில்லை. காட்டுத்தீ பரவுவதற்கு காய்ந்த மரங்களும், வெப்பநிலை அதிகரிப்பும் காரணமாக இருந்திருக்கும். அத்தகைய அகவய, புறக் காரணிகள் நமது கண்களுக்கு தெரிவதில்லை. துனிசிய மக்களின் எழுச்சியையும், பி.பி.சி. போன்ற சர்வதேச ஊடகங்கள் நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்து வந்தன. அதனால் தமிழிலும் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இல்லை. தகவல்கள் கூட குறைவாகவே ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டன. துனிசிய புரட்சியில் இருந்து பெற்ற படிப்பினைகளை, தமிழ் உழைக்கும் மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் வரலாற்றுக் கடமை எமக்குண்டு. துனிசிய புரட்சி எவ்வாறு சாத்தியமாகிற்று? எத்தகைய அரசியல் சக்திகள் வழிநடத்தின? அது ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியா? பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் ஏன் தலையிடவில்லை?

முதலில் துனிசிய மக்கள் எழுச்சி பற்றிய செய்திகள், ஏன் இவ்வளவு காலதாமதமாக நமக்கு வந்து சேர்ந்தன என்று பார்ப்போம். ஒரு மாதத்திற்கு முன்பு வரை, மக்கள் எழுச்சியினால் துனிசிய ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு தப்பியோடுவார், என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நீண்ட காலமாக, துனிசியா எந்தவிதமான உள்நாட்டுப் பிரச்சினைகளுமற்ற ஸ்திரமான ஆட்சியைக் கொண்ட நாடாக அறியப்பட்டது. அயல்நாடுகளில் நடந்த அசம்பாவிதம் எதுவும் துனிசியாவில் நடக்கவில்லை. மத அடிப்படைவாதிகளுக்கு எதிரான போர், குண்டுவெடிப்பு, எதுவுமே இன்றி துனிசியா அமைதிப்பூங்காவாக காட்சியளித்தது. டிசம்பர் 17 , "சிடி புசிட்" என்ற சிறிய நகரத்தில், முஹமட் புவாசிசி என்ற இளைஞன் தீக்குளித்து மரணமடைந்தான். ஜனவரி 14 , ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு தப்பியோடினார். இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் நடந்த மாற்றங்கள் தாம், அரபுலகின் முதலாவது மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தது.

பென் அலியின் வெளியேற்றத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் இருந்து தான் பி.பி.சி. துனிசியா பக்கம் கவனத்தை திருப்பியது. அது வரையில் அல்ஜசீரா மட்டுமே செய்தி தெரிவித்துக் கொண்டிருந்தது. துனிசியாவின் பெரு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்குபற்றிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. கடந்த ஒரு மாத காலமாக, நாட்டின் பல பாகங்களிலும், தினசரி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது போலிஸ் சுட்டது. குறைந்தது பத்துப் பேராவது மரணமடைந்தனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை என்பது என்று, ஊர்ஜிதப் படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருந்த பதிவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த செய்திகள் எதுவுமே வெளியுலகத்தை எட்டவில்லை. சர்வதேச ஊடகங்கள் அத்தனை கரிசனையுடன் நடந்து கொண்டன.

சர்வதேச ஊடகங்களின் மௌனத்திற்கு காரணம், இது மேற்குலகின் நிகழ்ச்சிநிரலின் படி நடக்கவில்லை என்பது தான். ஈரானில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு, மேற்குலக ஊடகங்களில் இரட்டிப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவி கொல்லப்பட்டதும், அந்த மாணவியின் இரத்தம் தோய்ந்த முகம் அனைத்து பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் பிரசுரமானது. மேற்குலக தலைவர்கள், கண்டனத்திற்கு மேல் கண்டனங்களை விடுத்துக் கொண்டிருந்தார்கள். துனிசிய சம்பவங்களை யாரும் அந்தளவு கவனம் எடுத்து பொருட்படுத்தியதாக தெரியவில்லை. பென் அலி தப்பியோடிய விமானம் மேலெழும் வரையில், அமெரிக்க அரசு வாய் திறக்கவில்லை. மிகவும் தாமதமாகத் தான் வாஷிங்டனில் இருந்து அறிக்கை வந்தது. அதுவும் எப்படி? "துனிசிய அரசின் நடவடிக்கைகளையிட்டு கவலையடைகிறோம். ஆர்ப்பாட்டக்காரர்களின் நடவடிக்கைகளும் சமாதான வழியில் இருக்காததால் கவலையடைகிறோம்." (இது தானா நடுநிலைமை?)

துனிசிய மக்கள் தமது புரட்சியை, "மல்லிகைப்பூ புரட்சி" என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். மேற்குலக ஊடகங்கள் அந்த சொற்பிரயோகத்தை புறக்கணித்துள்ளன. இதே ஊடகங்கள், லெபனானில் நடந்ததை "சிடர் புரட்சி" என்று வர்ணித்தன. (அமெரிக்கா அப்படி பெயரிட்டு அழைத்தது.) லெபனானின் சிடர் புரட்சி, சிரிய நாட்டு படைகளை வெளியேற்றுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தது. ஜோர்ஜியாவில் "ரோஸ் புரட்சி", உக்ரைனில் "ஆரஞ்சுப் புரட்சி" என்று கலர் கலரான புரட்சிகள் நடந்துள்ளன. பிற்காலத்தில் அதிகாரத்திற்கு வந்த, மேற்குலக சார்பு எதிர்க்கட்சிகளின் வர்ணத்தின் பெயரால் புரட்சிகள் நடந்தன. அந்தப் புரட்சிகளுக்கு எல்லாம், வெளிநாட்டு நிதி, மேற்குலக தொண்டு நிறுவனங்கள் ஊடாக கிடைத்துக் கொண்டிருந்தது. குறிப்பாக அமெரிக்க கோடீஸ்வரரின் "சோரோஸ் நிதியம்" ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்த தேவையான செலவுகளை பொறுப்பேற்றது. துனிசிய புரட்சி இவற்றில் இருந்து பெருமளவு வேறுபடுகின்றது. எந்தவொரு வெளிநாட்டு சக்தியின் தூண்டுதலோ, நிதியுதவியோ இன்றி, தன்னெழுச்சியாக திரண்ட மக்கள் சர்வாதிகார அரசை தூக்கியெறிந்தனர்.

ஈரானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் டிவிட்டரை பயன்படுத்தியதை, மேற்குலக ஊடகங்கள் "டிவிட்டர் புரட்சி" என்று பெருமையாக குறிப்பிட்டன. துனிசியாவிலும் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி புரட்சி நடந்தது. நிச்சயமாக, இணையப் பாவனையாளர்கள் மட்டுமே புரட்சி நடத்தி விட முடியாது. வேலையற்ற இளைஞர்களின் கலவரம், உழைக்கும் வர்க்க மக்களின் ஆர்ப்பாட்டம், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் போன்ற பல்வேறு காரணிகளும் கவனத்தில் எடுக்கத் தக்கன. இணையத்தை விட, இன்னொரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு புரட்சிக்கு பெரிதும் உதவியது. வீடியோ கமெரா கொண்ட செல்லிடத் தொலைபேசிகள், இன்று எல்லோர் கைகளிலும் பரவலாக புழங்குகின்றன. தெருவில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் உடனுக்குடன் படமாக்கப்பட்டன. இப்போது தான் நேரடியாக தொலைபேசியில் இருந்து இணையத்திற்கு அனுப்பும் வசதி வந்து விட்டதே? கலவரங்கள், ஆர்ப்பாட்டங்களை காட்டும் வீடியோக்கள் சுடச்சுட "யூ டியூப்" பில் வெளியிடப்பட்டன. துனிசிய அரசின் அடக்குமுறையினால், பல யூடியூப் வீடியோக்கள் பின்னர் அழிக்கப்பட்டன. ஏற்கனவே துனிசியாவில் எதிர்க்கட்சிகளின் இணையத்தளங்களை பார்வையிடத் தடை இருந்தது. ஆயினும், டிவிட்டர், பேஸ்புக் தடை வருவதற்கு முன்னர், புரட்சியாளர்கள் முந்திக் கொண்டனர். கடுமையான செய்தித் தணிகை இருந்த நாட்டில், டிவிட்டர், பேஸ்புக் மூலம் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பின்னர் அந்தத் தகவல்கள், தெருவில் ஆர்ப்பாட்டம் செய்த பாமரர்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள், பதிவர்கள், இணையப் பாவனையாளர்கள் அனைவரதும் கூட்டு முயற்சி இன்றி புரட்சி சாத்தியமாகி இருக்காது.

துனிசிய பதிவர்கள், டிவிட்டர், பேஸ்புக் பாவனையாளர்கள் மட்டுமல்ல, ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த துனிசியர்களும் விரைவான தகவல் பரிமாற்றத்திற்கு உதவியுள்ளனர். ஆனால் எந்தவொரு மேற்குலக ஊடகமும் இவற்றை கூர்ந்து கவனித்ததாக தெரியவில்லை. (ஈரான் மாணவர்களின் டிவிட்டர் தகவல்களுக்கு அவை தமது இணையத்தளத்தில் இடம் ஒதுக்கிக் கொடுத்திருந்தன.) துனிசிய மக்களில் பெரும்பான்மையானோர், அல்ஜசீரா தொலைக்காட்சி மூலமே தமது நாட்டில் நடக்கும் மாற்றங்களை அறிந்து கொண்டனர். சம்பவங்களை உடனுக்குடன் தெரிவித்தது மட்டுமல்ல, விவாதங்கள், ஆய்வுகள் மூலம், அல்ஜசீரா மக்கள் மனதை மாற்றிக் கொண்டிருந்தது. இவை எல்லாவற்றையும் விட, துனிசிய மக்களின் மனவுறுதி இறுதி வெற்றியை தேடித் தந்தது. அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தால் தண்டனைக்குள்ளாவோம் என்று தெரிந்து கொண்டும் வீதியில் இறங்கி போராடினார்கள். சனத்தொகையில் சரிபாதியான பெண்களும் தீரத்துடன் போராட்டத்தில் குதித்தனர். புரட்சியில் பலதரப்பட்ட மக்கள் பங்குபற்றினர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வேலையற்றவர்கள், உழைக்கும் வர்க்க மக்கள், நடுத்தர வர்க்க மக்கள் எல்லோரும் கலந்து கொண்டனர்.

எந்த நாட்டிலும் பாட்டாளிகளின் எழுச்சி மட்டுமே புரட்சியை வெல்ல போதுமானதல்ல. நடுத்தர வர்க்கம் எந்தப் பக்கம் சாய்கின்றது என்பதும் அவசியம். பொருளாதார நெருக்கடியினால் ஒரு சிறிய மேட்டுக்குடியினர் மட்டுமே தப்பிப் பிழைக்க, பெரும்பான்மை நடுத்தர வர்க்கமும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. நடுத்தர வர்க்கத்திற்கு ஊதியம் குறைவது பிரச்சினை. தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு பிரச்சினை. வேலையற்றவர்களுக்கோ உணவு வாங்க பணமற்ற பிரச்சினை. ஒரு நாட்டின் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் ஒன்று சேரும் போது தான் புரட்சி சாத்தியமாகின்றது. துனிசியாவில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் பக்கம் சார்ந்திருந்தமை பெரிய பலமாகும். துனிசிய தொழிலாளர் கூட்டமைப்பு, வேலைநிறுத்தங்களை ஒழுங்குபடுத்தியது. குறிப்பாக மக்கள் எழுச்சி நகரங்களில் பரவிய பொழுது, ஒரே நாளில் நாடளாவிய வேலை நிறுத்த போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அரசியல் கொள்கையைப் பொறுத்தவரை, "இஸ்லாமிய- தேசியம்" அல்லது "அரபு- தேசியம்" பேசிய யாருமே ஊர்வலங்களில் பங்குபற்றவில்லை. அவர்களுக்கு வர்க்க அரசியல் ஒத்துக் கொள்ளாது. ஒதுங்கியே இருந்தார்கள். கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், பல்வேறு இடதுசாரி சிந்தனை கொண்டவர்களை அதிகமாக காண முடிந்தது. இதே நேரம், இராணுவம் எந்தப் பக்கம் நிற்கின்றது என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. இராணுவம் மக்களின் பக்கம் நிற்பதாக பரவலாக நம்பப்படுகின்றது. ஆனால் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். உண்மையில் பென் அலி வெளியேறுவதை இராணுவமும் விரும்பியதால், அமைதியான சதிப்புரட்சிக்கு உடந்தையாக இருந்திருக்கும் என்ற சந்தேகமும் உண்டு. இதுவரை காலமும் பாதுகாப்புப் படைகள் வசம் மட்டுமே ஆயுதங்கள் இருந்துள்ளன. தற்போது பொதுமக்கள் கைகளில் ஆயுதங்கள் சென்று விட்டதாக வதந்திகள் உலாவுகின்றன. இராணுவத்தில் புரட்சிக்கு ஆதரவான சிலராலேயே அப்படி நடந்திருக்க வாய்ப்புண்டு என்பதால், இராணுவம் எந்தவித நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்றும் கருதப்படுகின்றது.

துனிசியாவின் புரட்சி எத்தகைய குணாம்சத்தைக் கொண்டிருந்தது என்பதை ஆராய்வது அவசியம். எப்போதும் மேற்குலக நிலைப்பாட்டில் இருந்து உலகைப் பார்ப்பது பல தவறான புரிதலுக்கு வழிவகுக்கின்றது. மேற்குலக ஊடகங்கள் சில இதனை "விக்கிலீக்ஸ் புரட்சி" என்று குறிப்பிட்டன. விக்கிலீக்ஸ் கசிய விட்ட இரகசியங்கள் பல ஏற்கனவே பலருக்கு தெரிந்த சங்கதி தான். அவற்றை இப்போது தான் மேலைத்தேய வெகுஜன ஊடகங்கள் கண்டுபிடித்துள்ளன. தாங்கள் சொல்லித் தான் உலக மக்களுக்கு இவை எல்லாம் தெரிய வேண்டும், என்பது போன்ற நினைப்பில் மிதக்கின்றனர். துனிசியாவில் சர்வாதிகாரி பென் அலி குடும்பத்தின் ஊழல் குறித்து, விக்கிலீக்ஸ் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்று நினைப்பது மகா அபத்தம். அந்த கேபிளை எழுதிய அமெரிக்க தூதரக அதிகாரிக்கு அப்போது தான் ஞானம் பிறந்திருக்கலாம். 23 வருடங்களாக கொடுங்கோல் சர்வாதிகாரியின் கீழ் வாழும் துனிசிய மக்களுக்கு, இவை எல்லாம் அன்றாட வாழ்வியல் அனுபவம். சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய எத்தனையோ அரசியல் ஆர்வலர்கள், இரு தசாப்தங்களாக பிரான்சில் வாழ்கின்றனர். அவர்கள் அங்கிருந்த படியே பென் அலியின் அடக்குமுறை ஆட்சி பற்றியும், ஊழல் பற்றியும் தமக்கு தெரிந்த வழிகளில் எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். துனிசிய சர்வாதிகாரி மேற்குலக சார்பானவர் என்ற ஒரே காரணத்திற்காக, சர்வதேச ஊடகங்கள் அரச எதிர்ப்பாளர்களை புறக்கணித்து வந்துள்ளன.

கடந்த வருடம் பெல்ஜியத்தில் நடந்த சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் மகாநாடு நடந்தது. பிரான்சில் அரசியல் அகதியாக வாழும், துனிசிய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி ஒருவரும் வந்திருந்தார். அவர் உரையாற்றும் பொழுது இஸ்லாமிய- தேசியவாதிகளுடனான வெகுஜன எதிர்ப்பு முன்னணியில் தமது கட்சி பங்கெடுப்பதை குறிப்பிட்டார். குறிப்பாக ரஷ்யாவை சேர்ந்த கம்யூனிஸ்டுகளுக்கு, "பிற்போக்கு மதவாதிகளுடனான கூட்டமைப்பு" என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரசாரமான விவாதத்தின் முடிவிலும், அவர்களை தனது கருத்தோடு இணங்க வைக்க துனிசிய பிரதிநிதியால் முடியவில்லை. அரபுலகில் புரட்சி என்பது, "இன்டிபதா" என்றே புரிந்து கொள்ளப்படுகின்றது. இன்டிபதா என்றால் "அநீதிக்கு எதிரான மக்கள் எழுச்சி" என்றும் அர்த்தம் கொள்ளலாம். இன்டிபாதாவில் பாட்டாளி வர்க்கம் மட்டுமல்லாது, பிற பாதிக்கப்பட்ட வர்க்கங்களும் கலந்து கொள்வார்கள். அது சிறு முதலாளிகளாக இருக்கலாம், மத்தியதர வர்க்கமாக இருக்கலாம். மேற்கத்தய அரசியல் சித்தாந்தப்படி புரிந்து கொள்ள வேண்டுமானால், இதனை "ஜனநாயகப் புரட்சி" என்று அழைக்கலாம். சோஷலிசப் புரட்சிக்கு முந்திய, புதிய ஜனநாயகப் புரட்சி குறித்து மாவோ கூட நிறைய எழுதியுள்ளார். பிரெஞ்சுப் புரட்சி, பூர்ஷுவா வர்க்கத்தின் எழுச்சியாக இருந்த போதிலும், அது வரலாற்றில் முற்போக்கான பாத்திரம் வகித்ததை கார்ல் மார்க்ஸ் வரவேற்றுள்ளார்.

துனிசியாவில் இடம்பெற்றது பாட்டாளி வர்க்கப் புரட்சியோ, அன்றி சோஷலிசப் புரட்சியோ அல்ல. அத்தகைய மாயை யாருடைய மனதிலும் இல்லை. துனிசிய மக்கள் மேற்குலகில் நிலவுவதைப் போல, அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக போராடினார்கள். கருத்துச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம், எல்லோருக்கும் உணவு கிடைக்கும் வசதி, இவை எல்லாம் மேற்கு ஐரோப்பாவில் தனி மனிதனுக்கு உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள். மேற்கத்திய நெறிகளுக்கு உட்பட்ட தனி மனித உரிமைகள் தான், துனிசிய மக்களின் குறிக்கோளாக இருந்துள்ளது. புரட்சி அவற்றை சாத்தியமாக்கும் என்றே எல்லோரும் நம்புகின்றனர். அத்தகைய உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காக துனிசிய மக்களுக்கு உதவ வேண்டிய மேற்குலகம், ஒதுங்கியிருந்து மௌனம் சாதிக்கின்றது. ஜனநாயக விழுமியங்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதாக கூறும் மேற்குலகின் இரட்டைவேடம் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.

துனிசிய தொழிற்துறையில் 40 % முதலீட்டை செய்துள்ள பிரான்ஸ், சர்வாதிகாரி பென் அலிக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்தது. அதற்கு காரணம், பிரான்ஸ் துனிசிய மக்கள் பால் கொண்ட கரிசனை அல்ல. பிரான்சில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த துனிசியர்கள் வாழ்கிறார்கள். தனது நாட்டினுள்ளும் துனிசிய மக்களின் எழுச்சியை எதிர்கொள்ள பிரான்ஸ் தயாராக இல்லை. துனிசியா எண்ணெய் வளமற்ற சிறிய நாடு. அதனால் அமெரிக்காவும் தலையிடாமல் பிரச்சினையை தவிர்த்துக் கொள்கின்றது. "எண்ணெய் இல்லாத சின்னச்சிறு துனிசியாவில் வாழ்ந்த அதிர்ஷ்டசாலிகள் நாங்கள்." என்று புரட்சி வென்றதற்கான காரணமாக துனிசியர்கள் கருதுகின்றனர்.

தற்போது எழுந்துள்ள அபாயம் என்னவெனில், சர்வதேசம் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதன் மூலம் புரட்சியை தோல்வியடைய வைக்க முனையலாம். வேலையில்லாப்பிரச்சினை, உணவுப்பொருள் விலையேற்றம் போன்ற பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க, திறந்த சந்தைக் கொள்கையை முன்வைக்கலாம். "சந்தைக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்." என்று நவ-தாராளவாத பொருளாதாரக் கொள்கையை போதிப்பார்கள். ஏற்கனவே ஐ.எம்.எப். ஆலோசனைப் படி, திறந்த சந்தை, உலகமயமாக்கல் என்று கிளம்பித் தான் பிரச்சினை இந்தளவு விஸ்வரூபம் எடுத்தது. சர்வதேச சமூகம் அந்த உண்மையை மறைக்கப் பார்க்கும். சிறிது காலத்தின் பின்னர் துனிசியர்கள் மீண்டும் ஒரு புரட்சியை நோக்கி தள்ளப்படுவார்கள். துனிசிய புரட்சியை, உலக நாடுகளில் தோன்றும் பல புரட்சிகளின் ஓர் அங்கமாகவே கருதப்பட வேண்டும்.