8/21/08

ஆண்டு"0",அமெரிக்கா அழித்த கம்போடியாவின் உயிர்ப்பு

பொல்பொட் கால கம்போடியாவில் எடுக்கப்பட்ட ஒரேயொரு படம் Year Zero", அன்று அமெரிக்காவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. 1975 ம் ஆண்டு, வியட்நாம் யுத்தத்தின் நீட்சியாக கம்போடியாவில், அமெரிக்க விமானப்படை கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சில் இரண்டு மில்லியன் மக்களை கொன்று குவித்த போது, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் கூறிய விளக்கம்: "இது பைத்தியக்காரனின் போரியல் கோட்பாடு". கம்போடியா தொடர்பான சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கை, கம்போடிய இனப்படுகொலையில் கொல்லப்பட்ட நான்கு மில்லியன் மக்களில், குறைந்தது இரண்டு மில்லியன் ஆவது அமெரிக்க படைகளினால் கொல்லப்பட்டனர், என்று கூறுகின்றது.

அமெரிக்க குண்டுவீச்சின் எதிர் விளைவாக, அதுவரை மக்கள் ஆதரவற்றிருந்த, பொல்பொட் தலைமையிலான, "க்மெர் ரூஜ்" என்ற கெரில்லா இயக்கத்தின் பின்னால் மக்கள் பெருமளவில் அணிதிரண்டனர். மக்கள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய க்மெர் ரூஜ், உலகம் அதுவரை காணாத ஆட்சியதிகாரத்தை மக்கள் மீது திணித்தனர். தலைநகர் நோம்பென்னிற்கு வந்த க்மெர் ரூஜ் போராளிகள், அனைத்து மாநகரவாசிகளையும் சில மணிநேரத்துக்குள் வெளியேறுமாறு உத்தரவிட்டனர். (மீண்டும் அமெரிக்க விமானங்கள் வந்து தாக்கலாம் என்ற அச்சம் ஒரு காரணமாக வைக்கப்பட்டது)

நகரங்கள் வெறிச்சோடின. மக்கள் அனைவரும் நாட்டுப்புறங்களில், விவசாயக் கிராமங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் குடியேற்றப்பட்டனர். இந்த வரலாறு காணாத இடப்பெயர்வினால், குடும்பங்கள் பிரிந்தன, பாடசாலைகள் மூடப்பட்டன. எல்லா மதங்களும் தடை செய்யப்பட்டன. வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டன, அல்லது இழுத்து மூடப்பட்டன. மத்திய வங்கி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது, பணம் என்ற ஒன்றே இல்லாமல் போனது. மக்கள் அனைவரும் விவசாய உற்பத்திகளில் ஈடுபடுத்தப்பட்டனர். எல்லாமே பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பமாவதாக க்மெர் ரூஜ் கூறியது. அந்தப் புதிய காலகட்டத்தின் ஆரம்பம் தான் 0 (Year Zero).

க்மெர் ரூஜ் இயக்கம், மத்திய தர வர்க்கம் முழுவதையும் எதிரியாகப் பார்த்தது. அதன் விளைவு, ஆசிரியர்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள், வக்கீல்கள், பிற தொழில்துறை வல்லுனர்கள், வெளிநாட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள்... இவ்வாறு ஆயிரக்கணக்கான கம்போடியர்கள் சித்திரவதை செய்து கொன்று குவிக்கப்பட்டனர். இவ்வாறு எதிரிகளாக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உணவு மறுக்கப்பட்டு, பிள்ளைகள் போஷாக்கு குறைபாட்டால் இறந்தனர்.

கம்போடியாவில் நான்கு ஆண்டுகள் க்மெர் ரூஜ்ஜின் ஆட்சி நடந்தது. இறுதியில் அண்டைநாடான வியட்நாமுடன் எல்லைப்பிரச்சினையில் சண்டை மூண்ட போது, இது தான் தருணம் என்று, சில க்மெர் ரூஜ் அதிருப்தியாளர்கள் வியட்நாமுக்கு ஓட, வியட்நாமிய இராணுவம் படையெடுத்து வந்து, க்மெர் ரூஜ்ஜின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டியது. அந்த காலகட்டத்தில் அங்கே சென்ற ஆங்கிலேய ஊடகவியலாளர் John Pilger, அப்போது அங்கிருந்த நிலையை, பொது மக்கள் படும் துன்பத்தை பற்றி
"Year Zero" என்ற தலைப்பிலான படமாக எடுத்தார். அந்தப்படம் ஐரோப்பாவில் காண்பிக்கப்பட்ட பின்பு தான், சில உதவி நிறுவனங்கள் கம்போடியாவிற்கு சென்றன.




கம்போடிய மக்களின் அவலத்தை கண்முன்னே கொண்டு வரும் அதே வேளை, அன்று மேற்குலக நாடுகள் எந்த உதவியும் வழங்காமல் பாராமுகமாக இருந்ததையும், மனித அவலத்திற்கு காரணகர்த்தாக்களான "க்மெர் ரூஜ்" அன்று அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்டதையும் இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கின்றது. பனிப்போர் காலகட்டம் அது. சோவியத் முகாமை சேர்ந்த வியட்நாமை எதிர்க்க, க்மெர் ரூஜ்ஜிற்கு அமெரிக்கா ஆயுத/நிதி உதவி வழங்கியது. அதனால் அன்று க்மெர் ரூஜ் செய்த அட்டூழியங்களை, இனப்படுகொலைகளை எல்லாம் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை.

எங்கேயெல்லாம் மனித அவலம் நிகழ்கிறதோ, அங்கெல்லாம் தான் தலையிடுவேன், என்று கூறும் அமெரிக்கா; பிற்காலத்தில் "கம்போடிய இனப்படுகொலைக்கான நீதிமன்றம்" அமைத்து, பொல்பொட் உட்பட க்மெர் ரூஜ் தலைவர்களை விசாரிக்க துடிக்கும் இதே அமெரிக்கா, அன்று இதே குற்றவாளிகளுக்கு உதவி புரிந்தது! நண்பர்கள் பகைவர்களாவதும், பகைவர்கள் நண்பர்களாவதும், அமெரிக்க சரித்திரத்தில் சகஜம். சர்வதேச நீதிமன்றம் அமைத்தால், அதில் அமெரிக்க அரச அதிகாரிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என பொல்பொட் கூறியதால், கடைசி வரை பொல்பொட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாமல், வீட்டுக்காவலில் இறந்த பின்னர் தான், கம்போடிய படுகொலைகளுக்கான ஐ.நா. சபையின் கீழான நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

எப்போதும் வெல்பவர்களே சரித்திரத்தை எழுதுவதால், கம்போடிய இனப்படுகொலையில் அமெரிக்காவின் பங்கு பற்றி, இன்றைய தலைமுறை எதுவுமே அறியாமல் இருக்கலாம். இந்த ஆவணப்படம் அவர்களது அறியாமையை தகர்க்கின்றது.

ரஷ்ய கரடியும் ஐரோப்பிய காகிதப் புலிகளும்

"உலகப்போர்" , "பனிப்போர்", என்பன ஐரோப்பிய மையவாத சொற்பதங்கள். அதாவது ஐரோப்பாவை சுற்றியே உலகம் சுழலுவதாக காட்டுவதற்கு புனையப்பட்டவை. "முதலாம் உலகப்போர்" என்பது ஐரோப்பாவில் மட்டுமே நடந்தது. அமெரிக்கா மட்டுமே ஐரோப்பாவிற்கு வெளியே இருந்தது. "இரண்டாம் உலகப்போரில்" ஐரோப்பியரின் காலனி நாடுகளும் பங்குபற்றின(தமது எஜமானர்களுக்காக). அப்போதே ஐரோப்பிய நாடுகள் ஒரு முடிவுக்கு வந்தன. தமக்குள் சண்டையிடுவதை நிறுத்தி, அதனை(போரை) புதிதாக விடுதலையடைந்த, அல்லது அடையப்போகும் நாடுகளுக்கு திருப்பி விட்டன. அப்போது வந்தது தான் "பனிப்போர்" என்ற சொற்பதம். ஏனெனில் "பனிப்போர்" ஐரோப்பாவில் மட்டும் தான், அதன் காலனிகள் நிஜப்போரினால் பாதிக்கப்பட்டன.
சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் விளைவுகளில் ஒன்று, நிஜப்போர் ஐரோப்பாவையும் தாக்கியது. முன்னாள் யூகோஸ்லேவியா, முன்னாள் சோவியத் யூனியன் போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், எதோ ஒரு வகையில், அமெரிக்க-ஐரோப்பிய அல்லது ரஷ்ய தலையீட்டுதன் இடம்பெற்ற யுத்தங்கள், தற்போது சர்வதேச பிரச்சினைகளாகியுள்ளன.

"இரண்டு யானைகள் சண்டையிட்டால் புல்லுக்கு தான் சேதம்" என்று ஒரு ஸ்வஹிலி(ஆப்பரிக்க) பழமொழி ஒன்றுண்டு. பெரும் வல்லரசுகளுக்கிடயிலான பனிப்போரில் பாதிக்கப்படுவது சிறிய நாடுகள் தான். கொசோவோ தனிநாடாக(ஐ.நா. சபையின் ஒப்புதலைப் பெறாமல்) பல மேற்குலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட போது, ரஷ்யா அதனை கண்டித்தது. தற்போது அதற்கு பதிலடியாக, ரஷ்யா அப்காசியா, தெற்கு ஒஸ்ஸெத்தியா ஆகிய (ஜோர்ஜியாவின் பகுதிகளை), தனி நாடாக அங்கீகரித்துள்ளது. சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட யுகோஸ்லேவியா என்ற நாட்டை ஆறு புதிய நாடுகளாக்கிய போது, வரவேற்ற மேற்குலக நாடுகள், ரஷ்யாவின் செயலை கண்டித்துள்ளன. (பக்கச் சார்பற்றவை என்று சொல்லப்படும்) மேற்குலக ஊடகங்களும் தமது இரட்டைவேடத்தை வெளிக்காட்டியிருந்தன. கொசோவோ சுதந்திரப் பிரகடனத்தை, தமது முதல் பக்கத்தில் "ஆஹா, ஓஹோ" என்று புகழ்ந்த பத்திரிகைகள், அப்காசியா, தெற்கு ஒசெத்திய சுதந்திரத்தை ரஷ்யா அங்கீகரித்த போது, "மேற்குலகம் சீற்றமடைந்துள்ளது" என்று தலைப்புச் செய்தி வெளியிட்டன.

அப்காசியா, ஒஸ்ஸெத்தியா சுதந்திரப் பிரகடனத்தை வாபஸ் பெற வேண்டுமென்றும், அல்லாவிட்டால் ரஷ்யா மீது தடைகளை கொண்டு வரப்போவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவும் "இது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது" என்று கூறியது நகைப்புக்கிடமானது. யுகோஸ்லேவியா, ஈராக் மீது படையெடுக்கும் போது ஐக்கிய நாடுகள் சபையை மதிக்காமல் நடந்து கொண்ட அமெரிக்கா, தற்போது சர்வதேச சட்டம் பற்றி பேசுவதனாது, அதனது வழக்கமான இரட்டை அளவுகோலை காட்டுகின்றது. அதாவது மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம். அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் "சர்வதேச வர்த்தக மையம்", "G 7(+ரஷ்யா)" ஆகிய அமைப்புகளில் இருந்து ரஷ்யாவை விலக்குவதாக பயமுறுத்துகிறது.

முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி புத்தின், தற்போதைய "பனிப்போர் 2" குறித்து ஏற்கனவே கடந்த 2007 நவம்பரில் நடந்த G 8 மகாநாட்டில் தெரிவித்துள்ளார். அப்போது புத்தினுடன் நடந்த பத்திரிகையாளர் மகாநாடு, மேற்குலக ஊடகங்களில் முக்கியத்துவம் பெறாத போதும்(அல்லது தணிக்கைக்கு உள்ளான போதும்), அப்போதே தற்போதைய பிரச்சினைகளுக்கான பல விளக்கங்கள் கிடைத்தன. புத்தின் தனது உரையில், நேட்டோ அமைப்பானது ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம் சாட்டியிருந்தார். அதாவது சோவியத் யூனியனின் கடைசி ஜனாதிபதி கோர்பச்சேவும், அமெரிக்க ஜனாதிபதி ரீகனும் செய்து கொண்ட, "ஆயுதக் களைவு ஒப்பந்தப்" படி சோவியத் யூனியன் முன்னாள் வார்ஷோ ஒப்பந்த நாடுகளில் இருந்த தனது படைகளை விலக்கிக் கொண்டது. அணுவாயுதங்களை ரஷ்யாவின் யூரல் மலைகளுக்கு அப்பால்(ஐரோப்பாவுக்கு வெகு தொலைவில்) நகர்த்தியது. ஆனால் அதற்கு மாற்றாக, நேட்டோ அமைப்பு நாடுகள் என்ன செய்தன? "வடக்கு அட்லாண்டிக் இராணுவக் கூட்டமைப்பை" கலைத்திருக்க வேண்டாமா? குறைந்த பட்சம் அமெரிக்கா தனது (அணுகுண்டு பொருத்திய) கண்டம் விட்டு கண்டம் பாயும் எவுகணைகளையாவது ஐரோப்பிய கண்டத்தை விட்டு அகற்றியிருக்க வேண்டாமா?

இல்லை, எதுவுமே நடக்கவில்லை. ஒப்பந்தத்தால் ஏமாந்தது சோவியத் யூனியன் தான். புருஸ்செல்சில் தலைமையகத்தை கொண்ட "நேட்டோ"அமைப்பு அப்படியே இருந்தது. அது மட்டுமல்ல புதிய அங்கத்தவர்களாக முன்னாள் வர்ஷோ ஒப்பந்த நாடுகளான, போலந்து, ஸெகொஸ்லொவெக்கிய, ருமேனிய நாடுகளையும் சேர்த்துக் கொண்டது. மேலும் முன்னாள் சோவியத் குடியரசுகளான எஸ்டோன்யா, லாட்வியா போன்றவற்றையும் இணைத்துக் கொண்டது. அது மட்டுமல்ல அணுவாயுத ஏவுகணைகளை அந்நாடுகளிலேயே கொண்டு வந்து நிறுத்தியது. அந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் புத்தின் கேட்டது போல, ரஷ்யா தனது ஏவுகணைகளை கியூபாவிலேயோ, அல்லது மெக்சிகொவிலேயோ கொண்டு வந்து பொருத்தினால் என்ன நடந்திருக்கும்?

G 8 பத்திரிகையாளர் மகாநாட்டில் புத்தின் ஐரோப்பாவின் எரிபொருள் பிரச்சினை பற்றியும் பதிலலளித்திருந்தார். சோவியத் யூனியன் இருந்த காலத்தில், அதன் குடியரசுகள் பெட்ரோல், எரிவாயு போன்றவற்றிற்கும் மானியம் அளிக்கப்பட்டது. அதாவது சந்தை விலையை விட அரைவாசி விலைக்கு விற்கப்பட்டது. இது சோவியத் யூனியன் மறைந்த பின்னரும் தொடர்ந்தது. இதனால் எண்ணை வளமற்ற உக்ரைன், ஜோர்ஜியா, எஸ்டோனியா, லாட்வியா போன்ற குடியரசுகள் பலனடைந்து வந்தன. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக இந்த நாடுகளில் ஆட்சிக்கு வந்த மேற்குலக சார்பு அரசியல் தலைவர்கள், ரஷ்யாவை பகிரங்கமாக எதிர்த்து வந்தனர். இதன் எதிரொலியாக ரஷ்யா, அந்நாடுகளை எரிபொருளுக்கு சந்தை விலையை கொடுக்குமாறு கோரியது. அப்போது நெருக்கடிக்கு தள்ளப்பட்ட இந்த நாடுகள் தம்மை காப்பாற்றுமாறு மேற்கு ஐரோப்பிய நாடுகளை கெஞ்சின. ஆனால் மேற்கு ஐரோப்பா கூட ரஷ்ய எரிபொருளில் தங்கியிருக்கின்றது என்ற விடயம் அப்போது அம்பலத்திற்கு வந்தது.

ஜோர்ஜிய பிரச்சினையால் போலந்து, உக்ரைன் போன்ற நாடுகள் அமெரிக்காவுடன், நேட்டோவுடன் நெருக்கமாகி வருகின்றன. போலந்து அணுகுண்டு பொருத்திய ஏவுகணைகளை தன்நாட்டில் வைத்துக்கொள்ள ஒப்பந்தம் போட்டது. உக்ரைன் கூடிய சீக்கிரம், தன்னையும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளுமாறு கெஞ்சுகின்றது. அப்படி சேரும் வேளை, ரஷ்யா அந்நாட்டையும் தாக்கும் அபாயம் உள்ளது. ஏனெனில் உக்ரைனின் கருங்கடல் குடா நாடான, "கிரீமியா" ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. அங்கே இப்போதும், லெனின் சிலைகள், பழைய சோவியத் ஞாபக சின்னங்கள் நிலைத்து நிற்கின்றன. மேலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 1917 ம் ஆண்டு, போல்ஷெவிக் புரட்சியை அடக்கும் பொருட்டு ஆங்கிலேய, பிரெஞ்சு படைகள் கிரீமியாவை ஆக்கிரமித்திருந்தன. சோவியத் யூனியன் உடைந்த பின்னர், ரஷ்ய கடற்படை கிரீமிய தலைநகர் செவஸ்தபோலில் பெரிய தளத்தை வைத்திருக்கின்றது. இதற்காக 2017 ம் ஆண்டு வரை, உக்ரைன் அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
உக்ரைன் நேட்டோவில் சேரும் பட்சத்தில், கிரீமியா பிரச்சினைக்குரியதாக மாறலாம். அப்பகுதி ஒரு காலத்தில் ரஷ்யாவுக்கு சொந்தமானது என்பதையும், குருஷேவ் காலத்தில் உக்ரைனுக்கு தாரை வார்க்கப் பட்டது என்பதையும், நிகழ்கால ரஷ்ய அரசு சுட்டிக்காட்டி உரிமை கோரலாம். அதே நேரம் உக்ரைனின் மேற்கு பகுதியில் (மொல்டோவிய என்ற நாட்டின் ஒரு பகுதியான) "ட்ரான்ஸ் ட்நியெஸ்தர்" என்ற அங்கீகரிக்கப்படாத தனி நாடு ஒன்றில் ரஷ்ய இராணுவம் தளம் அமைத்துள்ளது. அப்காசியா, தெற்கு ஒசேத்தியா போன்றே, டிரான்ஸ் ட்நியெஸ்தர் சுதந்திரப்பிரகடனம் ரஷ்யாவினால் அங்கீகரிக்கப்படலாம்.

"நாம் புதிய பனிப்போருக்கும் அஞ்சவில்லை" என்று ரஷ்ய ஜனாதிபதி மெட்வெடேவ் அறிவித்திருப்பதானது, ரஷ்யா இந்த நெருக்கடியை ஏற்கனவே எதிர்பார்த்தது, என்பதை குறிப்பிடுகின்றது. தாம் நினைப்பது போல, தமது நலனுக்காக மட்டுமே உலகம் இயங்க வேண்டும் என்பது, மேற்குலக அரசியல்வாதிகளின் அவா. இதுவரை ரஷ்யா பல விடயங்களில் மேற்குலகுடன் ஒத்துழைத்தது. ஆனால் அந்த நிலைப்பாடு இனி மாறலாம். ரஷ்யாவை தண்டிக்க நினைக்கும், மேற்குலக நாடுகள் விரைவிலேயே அதன் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். வட கொரியா, ஈரான் போன்றவற்றின் அணுவாயுத தயாரிப்பை தடுக்க நினைக்கும், மேற்குலக பிரயத்தனத்திற்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். அதே நேரம் பல அமெரிக்க எதிர்ப்பு நாடுகள்(ஈரான், வெனிசுவேலா போன்றன), பனிப்போர் நெருக்கடியை தமக்கு சாதகமாக பயன்படுத்த காத்திருக்கின்றன. ஏற்கனவே முன்னாள் சோவியத் நட்பு நாடான சிரியா, ரஷ்யாவின் நவீன ஆயுதங்களை வாங்க விரும்புகின்றது. முக்கியமாக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மீது சிரியா கண்வைத்துள்ளது. அதற்கு மாறாக, சிரியாவுக்கு சொந்தமான மத்தியதரைக் கடல் பகுதியில் ரஷ்ய கடற்படைத்தளம் அமைத்துக்கொள்ள இணங்கியுள்ளது.

வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களின் நஷ்டத்தால், பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கும் அமெரிக்கா ஒரு பக்கம். பெட்ரோல் விலையேற்றத்தால் அதிக லாபம் சம்பாதித்த ரஷ்யா மறுபக்கம். வருடக்கணக்காக நீடிக்கும் டாலரின் மதிப்பு சரிவு, வங்கிகளின் வருமான இழப்பு என்பனவற்றால், ஐரோப்பிய நாடுகள் கூட அமெரிக்காவில் தங்கியிருக்க முடியாது என்ற நிலையை தோற்றுவித்துள்ளது. இதனால் சீனா, ரஷ்யா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் (ரஷ்யா பொருளாதாரம் ஆண்டொன்றுக்கு 7 % வளர்கின்றது), முதலீடு செய்ய யோசித்து வருகின்றன. இதனால் தற்போது நிலவும் "பனிப்போர் அபாயம்" எதிர்காலத்தில் பல இராஜதந்திர பேரம் பேசல்களை ஏற்படுத்தலாம்.