11/6/08

ஈழம்: ஜெயாவின் “புலி” பூச்சாண்டி! கருணாநிதியின் கோழைத்தனம்!

கடந்த ஒரு மாத காலமாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போர்த் தாக்குதலைச் சிங்கள இனவெறி அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்பதைவிட, ஒட்டுமொத்த தமிழினத்தையும் வேரோடு அழிக்கும் கொடூரப் போரை நடத்தி வருகிறது, பாசிச சிங்கள அரசு. பல்குழல் பீரங்கிகளையும் அதி நவீனத் துப்பாக்கிகளையும் கொண்டும் விமானத் தாக்குதல் மூலமாகவும் கிளிநொச்சி பகுதியில் குண்டுமழை பொழிந்தும், கிளிநொச்சி நகரைத் தரைமட்டமாக்கியும் இறுதித் தாக்குதலுக்கான மூர்க்கத்துடன் சிங்கள இனவெறி பிடித்த இராணுவம் களமிறங்கியிருக்கிறது.
குண்டு வீச்சுத் தாக்குதலால் பிணமாகிக் கிடக்கும் பள்ளி செல்லும் குழந்தைகள், இரத்தக் கறையுடன் வீதியில் இறைந்து கிடக்கும் புத்தகங்கள், குவியல் குவியலாகப் பிணங்கள், படுகாயமடைந்து சிகிச்சை பெற வசதியின்றித் தவிக்கும் பச்சிளம் குழந்தைகள், வீடிழந்துபடுகாயமடைந்து சொந்த மண்ணிலே அகதிகளாகிக் காடுகளில் ஒளிந்து வாழும் அவலத்தில் தமிழ் மக்கள், உணவோ மருத்துவமோ கிடைக்காமல் பட்டினியாலும் நோயினாலும் பரிதவிக்கும் தாய்மார்கள், குழந்தைகள் என ஈழத்தமிழர்கள் மாளாத் துயரில் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்த அநீதியான போருக்கு எவ்வித சர்வதேசத் தடையுமில்லை என்று கொக்கரிக்கிறார், இலங்கை அதிபர் ராஜபக்ஷே. இலங்கை, சிங்கள நாடு என்பதை ஏற்றுக் கொண்டுதான் சிறுபான்மையினரான தமிழர்கள் வாழ வேண்டும் என்று வெளிப்படையாக பாசிச இனவெறியைக் கக்குகிறார், இராணுவத் தளபதி பொன்சேகா. தமிழ்த் தலைவர்களில் துரோகிகளையும் பிழைப்புவாதிகளையும் அடையாளம் கண்டு அவர்களுக்குப் பதவிகள் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளதோடு, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி சிங்கள அரசின் கைக்கூலியாகச் செயல்படும் கர்னல் கருணாவை எம்.பி.யாக நியமனம் செய்திருக்கிறது, ராஜபக்ஷே அரசு.
சிங்கள அரசின் இந்தத் திமிருக்கும் இனவெறிக்கும் மிக முக்கியமான காரணம், இந்திய அரசு அதற்கு உறுதுணையாக நிற்கிறது என்பதுதான். புலிகள் தொடுத்த எதிர்த்தாக்குதலில் இந்திய இராணுவ அதிகாரிகள் காயப்பட்டிருப்பது அம்பலமாகி, இந்தியா நேரடியாக சிங்கள இராணுவத்துடன் இணைந்து போரில் ஈடுபட்டுள்ள உண்மை உலகுக்குத் தெரிந்தது. மொத்தம் 265 இந்திய இராணுவ அதிகாரிகள் போர்க்களத்தில் இருப்பதாக இலங்கைப் பத்திரிகைகளே செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை இராணுவத்திற்கு நவீன ராடார்களையும் போர்த்தளவாடங்களையும் கொடுத்து உதவியது மட்டுமின்றி, அவற்றை இயக்குவதற்கான தொழில்நுட்ப வல்லுநர்களையும் இந்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது. இதுதவிர, இலங்கை அரசுக்குக் கடனுதவியாக ரூ. 400 கோடியைக் கொடுத்துள்ளது.
இவை குறித்த குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட பின்னரும், வாயே திறக்காமல் மவுனம் சாதித்தது மன்மோகன் சிங் அரசு. தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இப்பிரச்சினையை எழுப்பிய பிறகும் கருணாநிதி, இது குறித்து வாய் திறக்கவில்லை. பஜாரி அரசியல் நடத்தும் பாசிச ஜெயலலிதா, மன்மோகன் சிங்கையும் கருணாநிதியையும் அம்பலப்படுத்தி அறிக்கை வெளியிட்ட பிறகுதான் வேறுவழியின்றி கருணாநிதி வாய் திறந்தார்.
மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், ஈழத் தமிழர் துயரம் பற்றி அவர் பரிவுடன் கேட்டதாகவும் கூறிய கருணாநிதி, ஈழத் தமிழர் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு இலட்சக்கணக்கில் தந்தி அனுப்பக் கோரினார். இலங்கைத் தூதரை அழைத்துப் பேசவேண்டும், அரசியல் தீர்வு காண வலியுறுத்த வேண்டும் எனப் பொதுக் கூட்டம் நடத்திக் கோரிக்கை வைத்தார். மைய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி செய்வதை கருணாநிதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகச் சாடி, அவர் ஏன் பதவி விலகவில்லை என்று பாசிச ஜெயா அம்பலப்படுத்தியதும், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஈழத் தமிழர் மீதான போர்த் தாக்குதலை மைய அரசு தடுத்து நிறுத்த முயற்சிக்காவிடில் தமிழக எம்.பி.க்கள் பதவி விலகுவார்கள் என்று மிரட்டல் நாடகமாடினார். அதேநேரத்தில் போர் தொடரும் என்று வெளிப்படையாக இலங்கை அரசு அறிவித்தபிறகும், மைய அரசை நிர்பந்திக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மைய அரசுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாத வகையில் மனித சங்கிலி போராட்டம் நடத்திய கருணாநிதி, மைய அரசைக் கவிழ்க்கும் நோக்கமில்லை; மைய அரசை அவசரப்பட்டு யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பதவிக்காகவும் சொத்துசுகங்களுக்காகவும் இதைவிடக் கேவலமான முதுகெலும்பற்ற புழுவாய் யாரும் நடந்து கொள்ள முடியாது என்பதை கருணாநிதியின் பேச்சும் செயலும் நிரூபித்தன.
இதற்கிடையே ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து இராமேசுவரத்தில் பேரணிபொதுக்கூட்டம் நடத்திய திரைப்படத் துறையினர், புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக காங்கிரசு கழிசடை எம்.எல்.ஏ. ஞானசேகரன் உசுப்பி விட்டார். உடனே பாசிச ஜெயா, “பொடா சட்டம் இல்லாததால்தான் இப்படி புலி ஆதரவு பிரிவினைவாதம் பேசுகிறார்கள். நான் ஆட்சியிலிருந்தால் இத்தேசத் துரோகிகளைக் கைது செய்திருப்பேன்” என்று பெருங்கூச்சல் போட, அதற்கு பக்கமேளம் வாசித்துக் கொண்டு துக்ளக் “சோ”, சுப்ரமணிய சாமி, பா.ஜ.க., காங்கிரசு, இந்து நாளேடு எனப் பார்ப்பனபாசிச கும்பல் பிரிவினைவாதப் பீதியூட்டி பேயாட்டம் போடத் தொடங்கின. புலிகளை ஆதரித்து தனித் தமிழ்நாடு கோரிப் பேசிய ம.தி.மு.க. தலைவர் வைகோவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு காங்கிரசு கழிசடைகள் ஊளையிட்டன. ஈழ விடுதலையை ஆதரிப்பதையும், சிங்கள இனவெறி அரசை எதிர்ப்பதையும்கூடத் தேசவிரோதச் செயலாகச் சித்தரித்து, பிரிவினைவாத பயங்கரவாத பீதியூட்டி, 90களில் நடந்தது போல, மீண்டும் ஜெயா தலைமையிலான பாசிச ஆட்சியை நிறுவும் நோக்கத்துடன் பார்ப்பனபாசிசக் கும்பல்கள் ஓரணியில் திரண்டு புலி பூச்சாண்டி காட்டி பீதியூட்டி வருகின்றன.
அவ்வளவுதான்! தொடை நடுங்கிய கருணாநிதி உடனடியாக வைகோவையும் கண்ணப்பனையும் கைது செய்து சிறையிலடைத்தார். திரைப்பட இயக்குனர்களான அமீர், சீமான் ஆகியோரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று பாசிச ஜெயா கூச்சலிட்டதும், அவர்களையும் கைது செய்து சிறையிலடைத்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் ஆலோசகரும் சகோதரருமான பாசில் ராஜபக்ஷே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசிய பிறகு, இலங்கைக்கு இந்தியா 800 டன் நிவாரணப் பொருட்களை அனுப்புவது; ஈழத்தமிழர் பாதுகாப்புக்கு உத்தரவாதம்; அமைதியான முறையில் பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது; மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் அரசியல் சட்டத்தை இலங்கை அரசு செயல்படுத்த வலியுறுத்தல் ஆகியவற்றைக் கொண்ட கூட்டறிக்கை இலங்கைஇந்திய அரசுகளின் சார்பில் வெளியிடப்பட்டு, பிரணாப் முகர்ஜியும் கருணாநிதியைச் சந்தித்தார். “மத்திய அரசை வேதனைக்குள்ளாக்கும் சிக்கலை உருவாக்க மாட்டோம்; அனைத்துக் கட்சித் தலைவர்கள் பேசி முடிவு செய்வோம்” என்று கூறி தமிழக எம்.பி.க்கள் பதவி விலக மாட்டார்கள் என்பதைச் சூசகமாக அறிவித்து விட்டார், கருணாநிதி. ராமன் பாலம் விவகாரத்தில் சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டு பின்வாங்கியதைப் போல, இப்போதும் பார்ப்பனபாசிசக் கும்பலுக்கு அஞ்சிப் பம்மிப் பதுங்கிவிட்டார்.
இந்தக் கூட்டறிக்கை எவ்வளவு மோசடியானது என்பதற்கு கிளிநொச்சியில இன்னமும் இலங்கை அரசு நடத்திவரும் போர்த்தாக்குதலே சாட்சியம் கூறப் போதுமானது. “பயங்கரவாதப் புலிகளுக்கு எதிராக இராணுவத் தீர்வு; ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு” என்பதே தமது அரசின் கொள்கை என்கிறார் அதிபர் ராஜபக்ஷே. இலங்கையில் போர்நிறுத்தம் செய்வது பற்றி இந்த அறிக்கையில் எதுவுமே இல்லை.
இவ்வளவுக்குப் பின்னரும் ஈழ ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் இந்திய அரசின் தயவில் ஈழ விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்புகின்றனர். “சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு இராணுவ உதவிகள் செய்து இந்தியாவுக்கு எதிரான தளமாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றன. இதனால் இந்தியாவுக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது. சிங்களனை நம்புவதைவிட ஈழத் தமிழனை நம்புவதுதான் இந்திய நலனுக்கு ஏற்றது. எனவே ஈழ விடுதலையை இந்தியா ஆதரிக்க வேண்டும்” என்கிறார் பழ.நெடுமாறன். இந்த வாதம் சரியானதென்றால், நேபாளத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இந்தியா செய்த சதிகளும் நியாயமாகி விடும். ஏனென்றால், நேபாள பிற்போக்கு மன்னராட்சியை ஆதரிக்காவிட்டால், அவர் சீனா பக்கம் சாய்ந்து இந்தியாவுக்கு ஆபத்தாகி விடும் என்று கூறித்தான் நேபாள மன்னராட்சியை இந்திய அரசு முட்டுக் கொடுத்து ஆதரித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவில் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை துப்பாக்கி முனையில் ஒடுக்கிவரும் இந்திய அரசு, ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் என்று நம்பி ஏமாற முடியுமா?
நெடுமாறன் கதைப்பதைப் போலின்றி, இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கமும் நலனும் வேறானதாக இருக்கிறது. தென்கிழக்காசிய நாடுகளின் “ஏசியான்” (ASEAN) ஐரோப்பிய நாடுகளின் “ஐரோப்பிய ஒன்றியம்” (EU) போலவே, தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை (SAARC) பொருளாதார ஒன்றியமாக உருவாக்கவே இந்திய ஆளும் வர்க்கங்கள் விரும்புகின்றன. இந்தியத் தரகு அதிகார வர்க்க முதலாளிகள் வெளிநாடுகளில் மூலதனமிட்டுள்ள வகையில், அவர்களுக்கு இலங்கை முக்கிய பொருளாதாரமாக உள்ளது. ஆயுத விற்பனை உள்ளிட்டு பொருளாதார வர்த்தக உறவிலும் முக்கிய இடத்தை வகிக்கிறது. தேயிலை எஸ்டேட்டுகள், கட்டுமானத் துறை, இலகுரக மோட்டார் வாகனங்கள் முதலானவற்றில் ஏற்கெனவே காலூன்றியுள்ள இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள், தற்போது தொலைதொடர்புத் துறையிலும் இலங்கையில் மூலதனமிட்டுள்ளனர். இந்தியப் பெருங்கடலில் இராணுவப் போர்த் தந்திர முக்கியத்துவம் வாய்ந்த திரிகோணமலை, கொழும்பு ஆகிய துறைமுகங்களும் கடல்வழித் தடங்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. தெற்காசியக் கூட்டமைப்பில் பாகிஸ்தானை எதிர்கொள்ள, அதற்கடுத்த பெரிய நாடான இலங்கையுடனான நட்புறவு இந்தியாவுக்கு அவசியமாக உள்ளது. இந்திய ‘அமைதிப்படை’ இலங்கையை ஆக்கிரமித்த போது பிரேமதாசா ஆட்சிக் காலத்தில் இந்தியஇலங்கை உறவுகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டதே தவிர, மற்றபடி நீண்ட காலமாக இலங்கை ஆளும் வர்க்கங்கள் இந்தியாவுடன் நட்புறவையும் அதன் வட்டார மேலாதிக்கத்தையும் ஆதரித்தே வந்துள்ளன.
இன்றைய உலகமயச் சூழலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ளதைப் போல, இந்தியாஇலங்கை இடையே உள்ள வரி, கடவுச் சீட்டு கட்டுப்பாடுகளை அகற்றி நெருங்கி வர இந்தியஇலங்கை அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக ஒப்பந்தம்கூடக் கொள்கையளவில் ஏற்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற “சார்க்’ மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தெற்காசிய நாடுகளிடையே ஒரே நாணயமுறையை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படி இலங்கை அரசின் பக்கம் இந்தியா நிற்பதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், ஈழ விடுதலையை ஆதரிப்பதற்கு ஒரு காரணமும் இல்லை. இலங்கை மீது மேலாதிக்கம் செலுத்தவும் மிரட்டிப் பணிய வைப்பதற்கும் பகடைக் காயாகப் பயன்படுத்துவதற்கு வேண்டுமானால், ஈழப் பிரச்சினையை இந்திய அரசு ஆதரிக்கலாம். இதை நம்பி இந்திய அரசிடம் ஆதரவு கோருவதும் பெறுவதும் அப்பட்டமான துரோகமாகும்.
தற்போது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதலில் சிங்கள இராணுவம் வெற்றி பெற்றால், தமிழர்கள் இலங்கையின் இரண்டாந்தரக் குடிமக்கள் என்பது சிங்கள இனவெறியர்களால் உறுதி செய்யப்படும. தெற்காசியப் பிராந்தியத்தில் எல்லா விடுதலைப் போராட்டங்களையும் நசுக்கி அழிப்பது என்ற இந்திய அரசின் நோக்கமும் நிறைவேறும். தமிழினத்தின் நியாய உரிமைக்கு வாய்திறக்கக் கூட முடியாதபடி பிரிவினைவாத பயங்கரவாதப் பீதியூட்டிக் கருப்புச் சட்டங்களும், ஒடுக்குமுறையும் ஏவப்படும். எனவே, சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் போராடுவது மட்டுமின்றி, இந்தியாவின் மேலாதிக்கத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும். ஈழத் தமிழருக்கு சிங்கள அரசு மட்டுமல்ல, இந்திய அரசும்தான் எதிரி என்பதைப் புரிந்து கொண்டு போராடாதவரை ஈழத்தின் கண்ணீருக்கு விடிவே இல்லை.

11/3/08

ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !

தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் ….பண்டிகை நாட்களையெல்லாம் திரைப்பட நடிகர்களின் வாழ்த்துச் செய்தி, நேர்காணல்கள், படங்களால் நிரப்பியது போய் இப்போது ஈழப் போராட்டம் கூட சினிமாக்காரர்களை வைத்துத்தான் நடத்தவேண்டுமென்றால் என்னவென்று சொல்ல?
80களில் பல்லாயிரக்கணக்கில் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தங்களது விடுதலைப் போராட்ட உணர்வை எடுத்துச் சென்றார்களோ இல்லையோ தமிழ் சினிமாவையும் கூட மறக்காமல் கொண்டு சென்றனர். அதன் விளைவாக 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களுக்கு உலகச் சந்தை தோன்றியது. தமிழ் சினிமா வசூல், தமிழகத்தில் ஏ,பி.சி என்று பிரிக்கப்படுவது போல சர்வதேச அளவிலும் வினியோகம் செய்து விற்கப்பட்டது. வரவு அதிகமாகியதால் செலவும் பல கோடிகளில் செய்யலாம் என்ற நிலைமையும் உருவானது. சிவாஜி போன்ற குப்பைத் திரைப்படங்கள் இந்த சூழ்நிலையை நன்கு அறுவடை செய்து கொண்டன. இப்படி தமிழ் சினிமாவின் கலெக்ஷன் கல்லா பிரம்மாண்டமாகக் கட்டுவதற்கு ஈழத் தமிழர்களும் ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டனர்.
தமிழ்நாட்டின் மக்களெல்லாம் ஈழத்தமிழர்களை அவர்களது போராட்டங்களை வைத்து தெரிந்து வைத்திருக்கும் போது சினிமா நடிகர்கள் மட்டும் தங்கள் படங்கள் வெளிநாடுகளில் ஓடுவதற்கு இலங்கை எனப்படும் நாட்டில் வாழக்கூடிய தமிழர்கள் எனப்படும் சில ஜீவன்கள் காரணமாக இருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதோ ஒரு பிரச்சினை என்பதை வைத்து கொஞ்சம் தோராயமாகவும் அறிந்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் வர்த்தகம்தான் தமிழ் சினிமாவின் சமூக உணர்வைத் தீர்மானிக்கிறது என்பதை குசேலன் பிரச்சினையில், பெங்களூருவில் படம் ஓடவேண்டும் என்பதற்காக ஒகேனக்கல் பிரச்சினையில் தான் பேசியவற்றுக்கு ரஜினி மன்னிப்பு கேட்டதை வைத்து அறிந்து கொள்ளலாம். அதே மாதிரிதான் தங்கள் படங்களுக்கு கொட்டிக்கொடுக்கும் ஈழத் தமிழ் மக்களுக்காக ஒரு ஆறு மணிநேரம், காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை குளிரூட்டப்பட்ட, கழிப்பிட வசதியெல்லாம் கொண்ட கேரோவான் வண்டிகளெல்லாம் இல்லாமல் நடிகர் சங்கக் கட்டிடத்தின் முகப்பில் பந்தல் போட்டு உண்ணாமல் நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். இந்த ஆறுமணிநேர உண்ணாநோன்புத் தியாகம்தான் இனிவரும் ஒருவாரம் ஊடகங்களில் அடிபடப்போகிறது என்பதால் அதற்கு முன் அந்தத் தியாகத்தைப் பற்றி நாமும் நினைவு கூரவேண்டுமென்பதால் இந்தப்பதிவு.
இந்த ஆறு மணிநேர உண்ணா நோன்புத் தியாகமும் கூட இயல்பாக முடிவெடுக்கப்பட்டு வரவில்லை. ராமேஸ்வரத்தில் பாரதிராஜாவின் தலைமையில் இயக்குநர்கள் நடத்திய பேரணியில் தாங்கள் கலந்துகொள்ளவில்லை என்பதை சரி செய்வதற்காக, வேறு வழியில்லாமல் ஒரு நிர்ப்பந்தத்திற்காக நடத்தப்பட்டதுதான் இந்தப் போராட்டம். ஒரு பத்திரிகையில் பாரதிராஜா சொன்னது போல இழவு வீட்டிற்கு செல்வதென்றால் பிணம் இருக்கும் இடத்திற்குத்தான் செல்லவேண்டுமே ஒழிய பிணம் என்னுடைய இடத்திற்கு வரவேண்டும் என ஒருவர் கோரமுடியாது. ராமேஸ்வரம் சென்றால் தங்களுக்குரிய ஆடம்பர வசதிகள் கிடைக்காது என்பதால் நடிகர்கள் அதை புறக்கணித்தார்கள். அதனால் ராமேஸ்வரத்துக்கு தார்மீக ஆதரவு அளித்து விட்டு தங்கள் கணக்கிற்காக நடிகர் சங்கத்தில் கூடி போராட்டம் என்று அறிவித்தார்கள்.
நாயகன் நாயகியை தூக்கி ஒரு ரவுண்டு அடிப்பதற்காக ராஜஸ்தானுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும், ஆல்ப்ஸ் மலைக்கும் செல்லும் ஜன்மங்கள் ஈழப் பிரச்சினைக்காக ராமேஸ்வரம் செல்லமாட்டோம் என்று புறக்கணித்ததை என்னவென்று சொல்ல? இவர்களெல்லாம் போராடவில்லை என்று யார் அழுதார்கள்?
நடிகர் சங்க கட்டிடம் இருக்கும் ஹபிபுல்லா சாலை ஆறுமணிநேர உண்ணாவிரதத்துக்காக அமர்க்களப்பட்டது. நட்சத்திரத் தெய்வங்களை ரசிகர்கள் தரிசிப்பதற்காக தெரு முழுக்க சவுக்கு கம்பால் கட்டி க்யூ அமைக்கப்பட்டது. ஆறு மணிநேரமும் திருப்பதி கோவிலுக்கு நிற்பதைப் போல ரசிக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தல, தளபதி, சூப்பர் ஸ்டார், என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். யாரும் ஈழம் என்று மறந்தும்கூட உச்சரிக்கவில்லை. நேரில் வரமுடியாத பக்தர்களுக்காக சன் தொலைக்காட்சி தனது செய்தி அலைவரிசையில் நேரடியாக ஒளிபரப்பி சேவையாற்றியது. உலகத்திலேயே ஒரு நாள் முழுக்க சினிமாவை வைத்து நீயூஸ் சேனல் நடத்திய பெருமை சன்னுக்கு மட்டும்தான் சேரும்.
இந்த ஆறு மணிநேர உண்ணாவிரத அறப்போராட்டம் எவ்வளவு பிரச்சினைகள், இழப்புகள், தியாகங்களோடு நடக்கிறது என்பதை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவி தனது உரையில் தெரிவித்தார். இதற்காக பல படபிடிப்புக்கள் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டதாம். நடிகை திரிஷாவிற்கு பெங்களூருவில் ஒரு முக்கியமான ஷூட்டிங்க இருந்ததால் வர இயலாது என்றாராம். பிறகு ராதாரவி வற்புறுத்தியதன் பேரில் அதை ரத்து செய்து விட்டு வந்திருக்கிறார். நயன்தாராவும் கூட அப்படித்தான் வந்திருக்கிறாராம். இந்த தாரகைகளும் ஃபுல் மேக்கப்போடு கண்ணாடிகளைத் தூக்கிவிட்டவாறு இடையில் கரைந்து விட்ட அரிதாரத்தை ஈடுகட்ட முடியவில்லையே, உண்மை முகம் அம்பலமாகிவிடுமோ என்ற சோகத்தோடு குந்தியிருந்தார்கள்.
சேர்ந்தாற் போல நாலு வார்த்தை தமிழலில் பேசத் தெரியாமல் அதற்கும் டப்பிங் வைத்திருக்கும் த்ரிஷா போன்ற அக்மார்க் தமிழ் நடிகைகளெல்லாம் ஈழத்திற்காக ஒரு கிழமையை தியாகம் செய்திருக்கிறார்கள் என்பது ஈழத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதிவாகப் போகிறது என்றால் ஈழமே நீ செய்த பாவம்தான் என்ன?
பேசிய பல நடிகர்களுக்கு பிரச்சினை என்னவென்றே தெரியவல்லை. ஒன்பது சென்டிமெண்ட் கதைகளை மட்டும் மாற்றி மாற்றி பன்றிக்குட்டிகளைப் போன்ற படங்களாய் எடுத்தும், அதற்கு ஒன்பது பெருக்கல் இரண்டு உணர்ச்சிகளை மட்டும் காட்டத் தெரிந்த நடிகர்களின் உலகம் எவ்வளவு சிறியது என்பது அவர்கள் பேச்சில் தெறித்தது. சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் ஈழத்துப் பிரச்சினைக்காக ஏதோ ஒரு வெட்டி வாரியத்தின் பதவியை ராஜினாமா செய்தாராம். அதை வெளிநாட்டுப் படப்பிடிப்புகளுக்குச் சென்ற போது பல ஈழத் தமிழர்கள் பாராட்டினார்களாம். அதன் பிறகுதான் சிம்பு தன் தந்தையிடம் இலங்கையில் என்ன பிரச்சினை என்று கேட்டாராம். அப்பாவும் முப்பது ஆண்டு வரலாற்றை மூன்று நிமிடத்தில் விளக்க ஈழப் பிரச்சினை என்றால் என்ன என்று சிம்புவுக்கு தெரிந்ததாம்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்மையை சிம்பு பேசிய போது அனைவரும் என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை சன் டி.வியின் ஆன்லைன் எடிட்டர், நயன்தாரா அந்தப் பேச்சை எப்படிக் கவனித்துக்கொண்டிருந்தார் என்பதைக் காட்டியதன் மூலம் புரியவைத்தார். ஈழம் மறைந்து அந்த ஜோடியின் காதல், ஊடல், நெட்டில் வளைய வந்த காட்சிகள் எல்லாமும் பார்ப்பவர்களின் மனதில் ஓடிக்கொண்டிருந்திருக்கும் என்பதை சன் டி.வியின் புண்ணியத்தில் புரிந்து கொள்ள முடிந்தது. கிசுகிசுவில் மட்டுமே செய்தியாக அடிபடுவதற்குத் தகுதி கொண்ட இந்த புண்ணியவான்கள் ஈழத்திற்காக குரல் கொடுக்கிறார்கள் என்றால் எந்த மடையானவது நம்புவானா என்பதுதான் அந்த எடிட்டர் அப்படிக் காட்டியதற்குக் காரணம். இதை அவர் அறிந்தே செய்யாவிட்டாலும் உண்மை அதுதானே? ஒகேனக்கல் பிரச்சினையில் சிம்புவின் அருகில் நயன்தாரா அமர்ந்திருந்தார் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சேதியை எல்லா நிருபர்களும் தங்கள் பத்திரிகைகளில் பதிவு செய்ததை ஈண்டு நினைவு படுத்திக்கொள்வது ஈழத்திற்கு நல்லது.
ஆவேசமாகப் பேசிய ராதாரவி இலங்கைப் பிரச்சினைக்காக கிரியேட்டிவாக ஒரு யோசனையை முன்வைத்து அது அமல்படுத்தப்பட்டால் ஈழப் பிரச்சினை தீர்ந்து விடும் என்றார். அது ஈழத் தமிழர்களை இந்தியத் தமிழர்கள் என்று அழைத்தால் இந்திய அரசு கூடுதல் முக்கியத்துவத்துடன் அதைக் கவனிக்குமாம். இலங்கையில் இருக்கும் எல்லாத் தமிழர்களும் இந்தியாவிலிருந்து பஞ்சம் பிழைக்கச் சென்றவர்கள் என்பது ராதாரவியின் அன்டர்ஸ்டேன்டிங். இந்த முட்டாள் தனத்தை அடுத்துப் பேசிய விடுதலை சிறுத்தைகளின் திருமாவளவன் மலையகத்தில் இருப்பவர்கள்தான் இந்தியத் தமிழர்கள் மற்றவர்கள் அங்கேயே தோன்றிய மண்ணின் மைந்தர்கள் என்று நாசூக்காகப் புரிய வைத்தார்.
நடிகர் சங்கத்தின் செயலாளரின் அறிவே இந்த இலட்சணத்தில் இருக்கும் போது நாம் மும்தாஜ்ஜின் புரிதல் எப்படியிருக்கும் என்பதை எடிட்டிங் இல்லாமலே புரிந்து கொள்ள முடியுமே? போகட்டும், சினிமாக்காரர்களின் போராட்டத்தில் சிறுத்தைகளுக்கு என்ன வேலை என்ற கேள்வி நமக்கு எழுந்தது. எல்லாம் ஈழத்துக்காக வரும் எந்த ஆதரவையும் விட்டுவிடக் கூடாது என்ற நல்லெண்ணம்தான். இப்படி எல்லோரையும் முடிந்த அளவு பயன்படுத்துவது நல்லது என்று விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமல்ல விடுதலைப் புலிகளின் பிரபாகரனே நினைக்கக் கூடும். எதிரி, நண்பன் குறித்த பாகுபாட்டிற்கு இடமில்லாமல் போராட்டம் தேங்கியிருக்கும் போது இத்தகைய பயன்படுத்தும் சிந்தனை யாருக்கும் இயல்கபாகத் தோன்றத்தானே செய்யும்? இந்திய அரசு தங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்பதோ, சினிமாக்காரர்களின் ஆதரவு தங்களுக்கு தேவை என்று நினைப்பதோ வேறுவேறல்ல.
நடிகர் ஷாம் பேசும்போது வெளிநாடுகளுக்கு செல்லும் போது தங்களை ஈழத்தமிழர்கள்தான் பார்த்துக் கொள்வார்கள் என்று குறிப்பிட்டார். இது உண்øமையெனும் பட்சத்தில் இதற்காக நாம் ஈழத்தமிழர்களை மன்னிக்கத் தயாராக இல்லை. ஏற்கனவே தமிழகத்தில் சினிமாவின் ஆட்சியில் எக்கச்சக்கமான பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு, பாசிசமும், கோமாளித்தனமும் கலந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகளை சகித்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு இதை விட ஈழத்தமிழ் மக்கள் இடையூறு செய்ய முடியாது. ஈழத்தமிழர்கள் சினிமாவுக்காக இறைக்கும் ஒவ்வொரு காசும், ஒவ்வொரு விநாடியும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆப்பு வைக்கப் பயன்படுகிறது என்பதை தயவு செய்து புரிந்து கொண்டு அவர்கள் சினிமா மோகத்தைக் கைவிடும் வேலையைப் பார்ப்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல ஈழத்துக்கும் நல்லது.
மலையாளத்திலும், தமிழிலும் ஒரு சேர வண்டியோட்டும் ஜெயராம் என்ற நடிகர் பேசும் போது தான் ஒரு இந்தியன் என்ற தகுதியில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டு ஜெய் ஹிந்த் என்று முடித்தார். ஏற்கனவே இந்தியத் தகுதி ஈழத்தின் இரத்தத்தை உறிஞ்சுவதற்காக ஆயுதங்களையும், பயிற்சியையும் இலங்கை ராணுவத்திற்கு கொடுத்திருக்கும் போது இந்தியன் என்ற உணர்வுள்ள இந்தியர்கள் ஈழத்திற்கு ஆதரவு தெரிவித்தால் அதை விட ஆபத்து என்ன இருக்கிறது?
கமலஹாசன் பேசும்போது தமிழன் என்ற குறுகிய உலகிலிருந்து இந்தப் பிரச்சினையைப் பார்க்கவில்லை என்றார். பிரச்சினை என்னவென்றால் கமல் அவர்கள் என்ன அடிப்படையில் இருந்து இதைப் பார்க்கிறார் என்பதல்ல, ஈழத் தமிழ் மக்கள் என்ன பிரச்சினையில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதுதான். என்னவிருந்தாலும் அவர் உலக நாயகனாயிற்றே. யுனிவர்சல் ஹீரோ உள்ளூர் உணர்வில் இருக்கமாட்டார் என்பதற்காக ஈழத்தமிழர்களை ஒடுக்கும் சிங்களப் பேரினவாத அரசு இனவெறியை விட்டுவிடப்போகிறதா என்ன? தன்மீது தமிழ்க் கறை படிந்து விடக்கூடாது என்பதற்காக கமல் அவ்வளவு ஜாக்கிரதையாகப் பேசுகிறாராம். இவர் அளவுக்கு ஞானமில்லாவிட்டாலும் சராசரித் தமிழன் இலங்கைப் பிரச்சினையை எந்த சிக்கலுமில்லாமல்தான் புரிந்து வைத்திருக்கிறான்.
சூப்பர் ஸ்டார் பேசும்போது கொஞ்சம் ஆன்மீகம் கலந்து அடித்தார். அதாவது ஒரு நாட்டில் பாமர மக்கள் குருதி சிந்தும்போது அந்த நாடு விளங்கவே விளங்காது என்று சாபம் கொடுத்தார் ரஜினி. இப்படி சாபம் கொடுத்தே ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்தை தீர்த்து விடலாம் என்றால் ஈராக் மக்களுக்கு இந்த எளிய ஞானம் ஏன் தெரியாமல் போனதென்று தெரியவில்லை. அடுத்து சிங்கள அரசை சினிமா பாணியில் -சாடிய ரஜினி, முப்பது ஆண்டுகளாக போரில் வெல்லமுடியவில்லை என்றால், சரியான ஒரு ஆம்பிளையாக இருந்தால் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டியதுதானே என்று ஏதோ ஒரு குழாயடிச் சண்டைக்கு பஞ்சாயத்து செய்வது போல பேசினார். இந்தக் குழாயடித் தத்துவத்தையே இலங்கைப் பிரச்சினைக்கான மாபெரும் தீர்வாக அடுத்தநாள் தினசரிகள் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டது நல்ல வேடிக்கை. ஒகேனக்கல் கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ பேசி பின்னர் பிரச்சினை ஆனதால் இங்கு ஜாக்கிரதையாக பேசினார் என்றாலும் எதிர்காலத்தில் ஷங்கர் படம் கொழும்புவில் ஷூட்டிங் செய்ய நேரிட்டு அதற்கு இலங்கை அரசின் அனுமதி வேண்டும் பட்சத்தில் இந்தப் பேச்சுக்கும் மன்னிப்பு கேட்பாரா என்பது தெரியவில்லை.
இலங்கையில் நடக்கும் பிரச்சினைக்கெல்லாம் நாம் ஏன் உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என்று தானும், அஜித்தும் பேசியதாக சில பத்திரிகைகளில் வந்த வதந்தி தன்னைச் சங்கடப்படுத்தியதாக பேசிய அர்ஜூன் 23 ஆண்டுகளாக தமிழ் உப்பைச் சாப்பிட்டுக் கொண்டிப்பவன் எப்படி அப்படி பேசுவேன் என்று புலம்பினார். அஜித் பேசும் போது இவையெதுவும் வதந்தி இல்லை என்பதுபோல சினிமா இன்டஸ்ட்ரியை, சினிமா இன்டஸ்ட்ரியாக இருக்க விடுங்கள் என்று ஒரு வாக்கியத்தில் முடித்துக் கொண்டார். இதன் பொருள் சினிமா உலகிற்கு எதற்கு அரசியல் எல்லாம் என்பதுதான். இந்த அளவுக்கு வெளிப்படையாக இருப்பதால் அஜித்தைப் பற்றி நாம் விமரிசிக்க ஏதுமில்லை.
ஜெயம் ரவி பேசும்போது ஏதோ சினிமா உலகால்தான் ஈழத்து தமிழர்கள் தங்கள் பிரச்சினைகளை மறந்து சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள் என்றார். இதை புலம்பெயர்ந்த ஈழத்து தமிழர்கள்கூட ஒத்துக்கொள்வார்கள் என்றுதான் நினைக்கிறோம். அதே சமயம் அமெரிக்க இராணுவத்துக்கு எதிராக போராடும் ஈராக்கின் மக்கள் பொழுது போக்கிற்காக ஹாலிவுட் படங்களைப் பார்த்து மகிழ்வதில்லை என்ற உண்øமையையும், வன்னிக் காடுகளில் அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கும் இது பொருந்தும் என்பதையும் புலம் பெயர்ந்தவர்கள் பரிசீலிக்கவேண்டும்.
ராமேஸ்வரத்தில் உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றியதற்காக அமீரும், சீமானும் கைது செய்யப்பட்டதை சிலர் குறிப்பிட்டாலும் பலர் குறிப்பிடவில்லை என்பதோடு என்ன பேசவேண்டும் என்பதில் உஷாராக இருந்தனர். மேலும் இந்திய- இலங்கை நாடுகளின் இறையாண்மைக்கெதிராகவோ, மத்திய மாநில அரசுகளுக்கெதிராகவோ எதுவும் பேசக்கூடாது, ஏன் அதிபர் ராஜபக்க்ஷேவைப் பற்றிக் கூட பேசக்கூடாது என்று நடிகர் சங்கம் தடையுத்தரவு போட்டிருந்ததை மன்சூர் அலிகான் போட்டுடைத்தார். இவற்றைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது என்றால் ஈழத்தின் போராட்டத்தில் என்ன எஞ்சியிருக்கும்? பல நடிகைகள் சன்னின் செய்தியாளர்களிடம் தனியாக பேசும் போது ஏதோ இலங்கையில் உள்ள மக்கள் உணவு, உடை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்காகவும் அதற்காக உதவி செய்யும் பொருட்டே இந்தப் போராட்டம் நடக்கிறது என்றார்கள். அதாவது ஈழத்தின் தமிழ்மக்கள் பூகம்பம், சுனாமியால் பாதிக்கப்பட்டு தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக ஏதோ பிச்சை போல யாசகம் கேட்கிறார்கள் என்ற புரிதலில்தான் பல நடிகர்கள் பேசினார்கள். இதை விட ஈழப் போராட்டத்தை கொச்சைப் படுத்த முடியுமா என்ன?
திரைப்படங்களில் சாகசம் செய்யும் இந்த ஹீரோக்கள் நிஜத்தில் எவ்வளவு கோழைகளாக இருந்தால் இப்படி ஒரு தடை உத்தரவு போட்டு அமல்படுத்தியிருப்பார்கள்? பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கே அவ்வளவு அச்சம் இருந்தால் இவர்கள் அல்லல் படும் அந்த மக்களுக்காக என்ன கிழிக்க முடியும்? இல்லை அப்படிக் கிழித்துத்தான் ஆகவேண்டும் என்று யார் அழுதார்கள்? திரைப்படத்தில் மட்டுமல்ல நாங்கள் நிஜத்திலும் ஹீரோக்கள்தான், தேவைப்பட்டால் எங்கள் உயிரையும் கொடுக்கத் தயங்கமாட்டோம் என்று பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் கோமாளி கார்த்திக் பேசும்போது அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை.
தனது படங்களுக்கு பாலுணர்வைத் தூண்டும் ஆபாசத் தலைப்புக்களை வைத்து ரசிகர்களைத் தந்திரமாக இழுக்கும் எஸ. ஜே. சூர்யா பேசும்போது தான் ஒரு ஈழத்தமிழரின் குடும்பத்தை தத்து எடுத்து வளர்ப்பதாக முழங்கியவர் அதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்படி ஏற்பாடு செய்து கொடுத்தாலும் இவரது படத்தை அந்தக் குடும்பம் குடும்பத்தோடு பார்க்கமுடியாது என்பது ஒருபுறமிருக்க தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் ஈழத்து மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள், அங்கு சென்று ஒரு குடும்பத்தை எடுத்துக்கொள்ளவேண்டியதுதானே அதற்கு எதற்கு மத்திய அரசு? உண்மையில் இங்கு ஈழத்து மக்கள் அகதிகளாக வாழ்வது கூட இந்த படைப்பாளிக்கு தெரியவில்லை.
ஈழத்து மக்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென தந்தி கொடுத்தால் மட்டுமே தனது ரசிகர்களாக இருக்கமுடியுமென இளைய தளபதி விஜய் பேசும்போது கேட்டுக்கொண்டார். இதே தந்தியை கருணாநிதி கொடுக்கச் சொல்லியதும் அப்படி அனுப்பப்பட்ட தந்திகள் டெல்லியின் குப்பைக்கூடைக்குள் சென்றுவிட்டதும் இந்தப் பச்சைப்பிள்ளைக்கு தெரியாது போலும்! மற்றவர்களை விட வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்திருப்பவர் தான் படிக்கும் தினத்தந்தியில் சினிமா செய்திகளை மட்டும் படிப்பார் போலும். இல்லையேல் கருணாநிதி தன்னை முந்திக்கொண்டது குறித்து தெரிந்திருக்கும். தெரிந்திருந்தால் தந்திக்குப்பதில் ஃபேக்ஸ் அல்லது மின்னஞ்சல் அனுப்புமாறு கோரியிருக்கலாம். பெரும்பான்மையினரிடம் இந்த வசதிகள் இல்லையென்பது கூட இந்த நடிகர்களுக்கு எங்கே தெரியப்போகிறது?
நடிகர் சங்க மேடையில் அரசியல் பேசமுடியாது என்று சலித்துக்கொண்ட கேப்டன் விஜயகாந்த் தனியாக செய்தியாளர்களிடம் பேசும் போது மக்கள் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்காகவே தி.மு.க அரசு ராமேஸ்வரம் போராட்டம், மனிதச் சங்கிலி, ராஜினாமா மிரட்டல், நடிகர்களை வைத்து உண்ணாவிரதம் என்று நாடகம் ஆடுவதாக எகிறியவர், இலங்கைப் பிரச்சினைக்காக இவர்களிடம் தீர்வு இல்லை என்று ஏதோ அந்தத் தீர்வு இவரது சட்டைப் பையில் பத்திரமாக இருப்பதுபோல சீறினார். நடிகர்களின் உண்ணாவிரதம் ஒரு ஸ்டண்ட் என்று தெரிந்திருக்கும் போது இவர் மட்டும் என்ன வெங்காயத்துக்கு அங்கே வந்து வீரவசனம் பேசிவிட்டு செல்லவேண்டும்?
திருமண விருந்தில் ஒலிபெருக்கியின் மூலம் மொய் எழுதியவர்களின் பெயரையும், தொகையையும் அறிவிப்பது போல யார் யார் எவ்வளவு மொய் அழுதார்கள் என்பதை இந்த அரிய உண்ணாவிரதப் போராட்டத்தின் இடையில் அறிவித்தார்கள். கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஒரிரு இலட்சங்களில் தங்களது மனிதாபிமானத்தைக் காட்டினார்கள். மொத்த கணக்கும் 45 இலட்சத்தோடு முடிந்து போனது. ஒரு லோ பட்ஜட் படம்கூட ஐந்து கோடி ரூபாயைத் தயாரிப்புச் செலவாகக் கோரும் தமிழ் திரையுலகில், ஒரு குத்துப்பாட்டுக்கு மட்டும் ஒரு கோடியை அள்ளிவீசும் வள்ளல்கள் இருக்கும் தொழிலில் ஈழத்துக்காக ஒரு கோடியைக்கூட தேற்ற முடியவில்லை என்றால் இவர்களது யோக்கியதையைப் புரிந்து கொள்ளலாம். முக்கியமாக இந்தத் தருமப்பணத்துக்காகவா ஈழத்து மக்கள் அங்கே துயரத்தில் உழன்றுகொண்டிருக்கிறார்கள்? அவர்கள் கோருவது அரசியல் ரீதியான ஆதரவை, குறைந்த பட்சம் இலங்கை ராணுவத்திற்கு உதவும் இந்திய அரசு அதை நிறுத்த வேண்டும் என்பதைத்தான். அதைப் பற்றி பேசுவதற்கு அஞ்சும் வீரர்கள் வீசி இறைத்த பணத்தின் மூலம் தங்களது பங்களிப்பை மாபெரும் சாதனையாகக் காட்டிக்கொண்டார்கள்.
இதை நேரடியாக ஒளிபரப்பிய சன் தொலைக்காட்சி நடிகர்கள் அல்லாத சினிமா தொழிற்சங்கத்தினர் பேசும் போதும், அல்லது பிரபலமாகாத நடிகர்கள் பேசும் போதும் கொஞ்சும்கூட சுரணையின்றி விளம்பரங்களைப் போட்டு கல்லாக் கட்டியது. காலையில் காமரா முகப்பில் அமர்ந்திருந்த நடிகர்களுக்கு ஆளுக்கொரு தினகரன் பேப்பரை கொடுத்து புரட்டுவதைக் காண்பித்த சன், மாலையில் அவர்களது படத்தை வண்ணத்தில் போட்டு தமிழ் முரசில் பதிப்பித்து அதையும் கொடுத்து புரட்டுவதைக் காண்பித்தது. ஈழத்தின் தயவில் மலிவான இந்த விளம்பரத்தை மேற்கொள்வதற்கு அவர்கள் வெட்கம் ஏதும் கொள்ளவில்லை.
நடிகர் வினுச்சக்கரவர்த்தி பேசும் போது நடிகர்கள் ஐந்து ரூபாய் கொடுத்தால் அவனது ரசிகர்கள் ஐந்து கோடி கொடுப்பார்கள் என்றார். உண்மைதான். அப்படித்தான் தமிழ்நாட்டின் பண்பாட்டுத்தரம் இருக்கிறது. ஆனால் காட்சிக்கொரு வண்ண ஆடைகளை மாற்றியும், படத்துக்குப் படம் வித்தியாசமாய் குத்துப்பாட்டு ஆடியும், புழுதி பறக்கும் வகையில் சண்டைக்காட்சிகளில் தூள் பரப்பியும் சமூக சேவை செய்யும் இந்த ஜிகினாக்காரர்களை வைத்துத்தான் தமிழக மக்கள் ஈழத்திற்காக உதவவேண்டுமென்றால் அதற்குப் பதில் ஈழத்து தமிழர்கள் சிங்கள அரசிடம் அடிமையாகவே இருந்துவிட்டுப் போகலாம்!