7/28/11

வலதுசாரி- தேசியவெறிக்கு எதிரான போர்


22 ஜூலை, நோர்வேயின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக பிரகடனப் படுத்தப் படலாம். உலகச் செய்திகளில் அரிதாக இடம்பிடிக்கும் "அமைதிப்பூங்காவில்" குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் என்பது பதின்ம வயது நோர்வீஜிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர். படுகொலைக்கு காரணமான அண்டெர்ஸ் பிறேவிக் (Anders Breivik) என்ற வெள்ளையின நோர்வீஜிய வாலிபன் கைது செய்யப்பட்டான். அன்று நடந்த பயங்கரவாத செயலை விட, கொலைகாரனின் கொள்கையை விளக்கும் அறிக்கை உலகம் முழுவதும் சலசலப்பை தோற்றுவித்தது. மேற்குலகில் வளர்ந்து வரும் வலதுசாரித் தீவிரவாதிகளை கவனத்தில் எடுக்காததால் வந்த வினைப்பயன் இது. நோர்வீஜிய பயங்கரவாதியின் அறிக்கையில் இருந்து பின்வரும் உண்மைகள் தெரிய வந்துள்ளன. ஐரோப்பிய நாடுகளில் தேசியவாதிகள் தமது போரை ஆரம்பித்துள்ளனர். வெள்ளையரல்லாத குடிவரவாளர்கள், முஸ்லிம்கள், கம்யூனிஸ்டுகள், இடதுசாரிக் கொள்கை கொண்டோர், இவர்கள் எல்லோரும் எதிரிகளாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ளனர்.வெள்ளையின இனவெறி கொண்ட அண்டெர்ஸ் பிறேவிக் நினைத்திருந்தால், நோர்வேயில் வாழும் வெளிநாட்டவர்களை குறி வைத்து தாக்கி இருக்கலாம். ஆனால், அவன் தனது சொந்த இன மக்களைத் தான் கொன்று குவித்துள்ளான். இது குடிவரவாளர்களுக்கு வழங்கப் பட்ட எச்சரிக்கை. "உங்களை இந்த நாட்டிற்குள் தங்க அனுமதித்தவர்கள் எமது இனத்தை சேர்ந்தவர் ஆயினும் கொலை செய்யத் தயங்க மாட்டோம். ஆகவே உங்களது நிலைமையை சற்று யோசித்துப் பாருங்கள்." நினைக்கவே குலைநடுங்கும் எச்சரிக்கை, எதிர்கால ஐரோப்பாவில் வெளிநாட்டு குடிவரவாளர்கள் சந்திக்கவிருக்கும் மிகப்பெரிய சவால்.

உலகம் முழுவதும் சமாதானத்திற்கு நோபல் பரிசு கொடுத்த நாடு இன்று தலை குனிந்து நிற்கின்றது. எம்மவர் மத்தியில் மட்டுமல்ல, பொதுவாக உலகம் முழுவதும் நோர்வேக்கு நல்ல பெயர் உண்டு. "அமைதியை விரும்பும் மக்களைக் கொண்ட நாட்டின்" பிரஜைகள் மாறி வருகின்றனர். அவர்கள் ஓரிரவில் மாறவில்லை. மக்கட்தொகையால் சிறிய நாடான நோர்வேயில் (மொத்த சனத்தொகை ஐந்து மில்லியனும் இல்லை), வெளிநாட்டு குடிவரவாளர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருகின்றது. வெளிநாட்டவர் மீது துவேஷத்தை கக்கும் வலதுசாரிக் கட்சியான Frp (Fremskrittspartiet) யின் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றனர். என்பது உயிர்களைப் பலி கொண்ட கொலைகாரன் அண்டெர்ஸ் கூட அந்தக் கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளான். இன்று அந்தக் கட்சி படுகொலைகளை கண்டித்து, தனக்கு சம்பந்தம் இல்லாதது போலக் காட்டிக் கொள்கின்றது. இருப்பினும், உலகம் முழுவதும் பிரபலமான பயங்கரவாதியான அண்டெர்ஸ் பிறேவிக்கை ஆதர்ச நாயகனாகப் பார்க்கும் அடிமட்ட உறுப்பினர்கள் இல்லாமலில்லை. நெதர்லாந்தின் "இஸ்லாமிய விரோத" அரசியல்வாதி கெர்ட் வில்டர்ஸ் (Gert Wilders), அண்டெர்ஸ் இனால் போற்றப்பட்டுள்ளார். ஆனால் வில்டர்ஸ் "ஒரு மனநோயாளியின் செயல்" என்று இணையத்தில் மட்டும் (டிவிட்டரில்) பதில் சொல்கிறார். நோர்வீஜிய கொலைகாரன் மட்டுமா ஒரேயொரு வில்டர்ஸ் இரசிகன்? ஒஸ்லோ படுகொலைகளுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான், நெதர்லாந்தில் ஒரு ஆயுததாரி பொதுமக்களை சுட்டுக் கொன்றான். அவன் கூட வில்டர்சின் இஸ்லாமிய விரோத கருத்துகளால் கவரப்பட்ட "மனநோயாளி" தான். (கொலையாளியின் அரசியல் கருத்துகளை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. ஏனென்றால் "இடதுசாரி" முத்திரை குத்தி விடுவார்கள் என்ற அச்சம்!)

சமாதானத் தலைநகரமான ஒஸ்லோவில் என்பது பேரைக் கொன்று குவித்த அன்டெர்ஸ் பிறேவிக் ஒரு மனநோயாளியாக இருக்க சாத்தியமில்லை. இதனை பல மனநல மருத்துவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். 1500 பக்கம் கொண்ட அறிக்கையை தயாரித்த புத்திஜீவி எவ்வாறு மனநலம் குன்றியவராக இருக்க முடியும்? அன்டெர்ஸ் பிறேவிக் கொள்கை ரீதியாகவும், தாக்குதலுக்கான இலக்கை தேர்வு செய்வதிலும் பற்றுறுதியுடன் நடந்துள்ளான். அவனை மனநோயாளியாக சித்தரிப்பதன் மூலம், எதிர்கால அபாயத்தை மூடி மறைக்கப் பார்க்கின்றனர். பத்து வருடங்களுக்கு முன்னர், பின்லாடனை மனநோயாளியாக சித்தரித்திருந்தால், பொது மக்களும் "அல்கைதா பயங்கரவாதம்" குறித்து விழிப்புடன் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால், "அல்கைதா வகையறாக்கள் நம்மினத்தவர்கள் அல்ல. எங்கோ மத்திய ஆசியாவில் வாழும் காட்டுமிராண்டி சமூகத்தை சேர்ந்தவர்கள். நம்மவர்கள் நாகரீகத்தில் சிறந்தவர்கள். அதனால் தான் எம்மை வெறுக்கிறார்கள்...." இவ்வாறு தான் மேற்குலக அரசுகள் தமது மக்களுக்கு பிரச்சாரம் செய்து வந்தன. நாகரீகமடைந்த வெள்ளையினத்தவர்கள் மத்தியிலும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் இருக்கின்றது என்ற உண்மையை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்?

மேற்குலகம் எவ்வாறு உலகிலேயே நாகரீகமடைந்த சமூகமாக கருதப்படுகின்றது? நிச்சயமாக அவர்களது ஜனநாயகமோ, மனித உரிமைகளோ, அல்லது மனிதாபிமான கொள்கையோ காரணமல்ல. இனப்படுகொலை, பயங்கரவாதம், கொள்ளை, நில ஆக்கிரமிப்பு, இவை போன்ற மனித குலத்திற்கு விரோதமான செயல்களை செய்து தான் "நாகரீகமடைந்தார்கள்". நோர்வே உட்பட ஸ்கண்டிநேவிய நாடுகளும் 20 நூற்றாண்டில் தான் நிரந்தர அமைதியைக் கண்டன. அது வரையும் போரினால் அல்லல் பட்டுக் கொண்டிருந்த தேசங்கள் அவை. நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு பொதுவான கலாச்சாரம் உண்டு. பொதுவான மொழி உண்டு. (மூன்று மொழிகளும் சிறிதளவே வேறுபடுகின்றன.) சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தான், மத்திய கால நிலப்பிரபுத்துவ ஆட்சிமுறை நிலைநாட்டப்பட்டது. அந்தக் காலத்தில் நிலப்பிரபுத்துவ சமுதாயம் முற்போக்கானதாக கருதப்பட்டது. கிறிஸ்தவ மதத்தின் வருகையும், மன்னர்கள் புதிய மதத்தை தழுவியதும், ஸ்கண்டிநேவிய மக்களை நாகரீகமடைய வைத்தது. அதற்கு முன்னர், "வைகிங் கொள்ளையர்களாக" பிற ஐரோப்பிய நாடுகள் மீது படையெடுத்து நாசம் விளைவிப்பது, "காட்டுமிராண்டி சமூகத்தினரின்" தொழிலாக இருந்தது. ஸ்கண்டிநேவிய மக்களின் கிறிஸ்தவ மதத்தின் மீதான பற்றுறுதிக்கு காரணம், அவர்களின் கடந்த கால வரலாற்றில் தேட வேண்டும். இன்றும் கூட இந்நாடுகளின் தேசியக் கொடிகளில் சிலுவை பொறிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. முழு ஐரோப்பியக் கண்டத்திலும் பரவிய கிறிஸ்தவ மதம், மிகத் தாமதமாகத் தான் ஸ்கண்டிநேவிய நாடுகளை வந்தடைந்தது. எப்போதும் சமீப காலத்தில் மதம் மாறியவர்கள் தான், அதிகளவு மதப்பற்று உள்ளவர்களாக காட்டிக் கொள்வார்கள்.

நோர்வேயில் பயங்கரவாத கொலைகளை செய்த அன்டெர்ஸ் பிறேவிக் கூட ஒரு கிறிஸ்தவ மத அடிப்படைவாதி தான். அதனை அவனது அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளான். மத்திய காலத்தில் வத்திகானின் கத்தோலிக்க திருச்சபை தலைமையில் நடந்த சிலுவைப்போர் மீண்டும் வர வேண்டும் என்று விரும்புகின்றான். அதற்கான திட்டத்தை செயற்படுத்துவதற்காக, ஒரு இரகசிய குழுவை அமைத்துள்ளார்கள். அந்தக் குழுவின் நோர்வேக் கிளையின் செயலாகவே நடந்து முடிந்த பயங்கரவாத வன்முறை பார்க்கப்பட வேண்டும். ஐரோப்பாவில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவது அவர்களின் குறிக்கோளாக உள்ளது. "முஸ்லிம்கள்" என்பது வெள்ளையரல்லாத வெளிநாட்டு குடிவரவாளர்களையும் குறிக்கும். ஆசிய,ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தோர் கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பௌத்தர்களாக இருந்தாலும் அவர்கள் பார்வையில் முஸ்லிம்கள் தான். இறுதியில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் வெள்ளயினத்தவர்களை மட்டுமே கொண்ட ஐரோப்பாவை உருவாக்குவது தான் அவர்களது இலட்சியம். அவர்களது இலட்சியத்திற்கு தடையாகவிருப்பது, "கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்டுகள்", மற்றும் பல இடதுசாரி சிந்தனை கொண்டோர். அதனால் தான், நோர்வேயை ஆளும் சமூக ஜனநாயக கட்சியான தொழிற்கட்சியின் இளைஞர் முகாமிற்கு சென்றோர் படுகொலை செய்யப்படனர்.

இன்று எழுந்துள்ள வலதுசாரித் தீவிரவாதம், நவ-நாஜிகளிடம் இருந்து வேறுபடுகின்றது. மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள நவ- நாஜிகள் ஹிட்லர் காலத்து இனவெறிக் கொள்கைகளை இன்றும் பின்பற்றுகின்றனர். குறிப்பாக ஹிட்லரின் "யூத வெறுப்பு", "பாசிசக் கட்டுப்பாடுகள்", "தலைமை மீதான விசுவாசம்" போன்ற கொள்கைகளை மாற்றமேதுமின்றி பின்பற்றும் "பழமைவாத பாசிஸ்டுகள்". ஆனால் நமது காலத்தில் தோன்றியுள்ள நவீன பாஸிசம் ஜனநாயக முகமூடியை பயன்படுத்திக் கொள்கின்றது. அவர்கள் தமது இனவெறிக் கருத்துகளை, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நியாயப் படுத்துகின்றனர். "வெளிநாட்டுக் கிரிமினல்கள்", "மசூதி காட்டும் முஸ்லிம்கள்", இவ்வாறு ஜனரஞ்சகமான விடயங்களை வைத்து அரசியலை கொண்டு செல்கின்றனர். அதிர்ஷ்டவசமாக அமெரிக்காவின் அல்கைதா பயங்கரவாதத்திற்கு எதிரான போர், அவர்களுக்கு பெருமளவு உதவியுள்ளது. அமெரிக்காவை போன்றே, நவீன பாசிஸ்டுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், "இஸ்ரேல் ஐரோப்பா சார்பில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது." அதாவது "முஸ்லிம் படையெடுப்பை தடுக்கும் எல்லைப்புறக் காவல் அரண் போன்று" இஸ்ரேல் செயற்படுகின்றது. தமிழர்கள் மத்தியில் உள்ள "இஸ்ரேலிய ஆதரவாளர்களும்" தெரிந்தோ தெரியாமலோ, வெள்ளையின பேரினவாதிகளினால் மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளனர்.

தேசியவாதத்தின் தோற்றத்தை எடுத்துப் பார்த்தால், அது என்றென்றும் பேரினவாதமாகவே செயற்பட்டு வந்துள்ளமை புலனாகும். ஐரோப்பாவில் தேசியவாத வெறியூட்டப்பட்ட மக்களின் ஆதரவு, ஹிட்லரின் பேரழிவு விளைவித்த இரண்டாம் உலகப்போர் வரை இட்டுச் சென்றது. அதற்குப் பிந்திய காலங்களில், லிபரல்களும், "கலாச்சார மார்க்சியர்களும்" ஐரோப்பாவை சீரழித்து விட்டதாக நவீன பாசிஸ்டுகள் கவலைப் படுகின்றார்கள். அதனால் அவர்கள், வெள்ளயினத்தை சேர்ந்த "கலாச்சார மார்க்சியர்கள்" மீதும் போர்ப் பிரகடனம் செய்துள்ளனர். "வலதுசாரி- தேசியவாத சக்திகள்" ஐரோப்பிய சமூகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக வளர்ந்துள்ள. ஐரோப்பிய அரசுகள் இவர்களை இனங்கண்டு அடக்க வேண்டும். ஐரோப்பிய சமுதாயம் வர்க்க அடிப்படையில் இரண்டாகப் பிரிவதை எவராலும் தடுக்க முடியாது. பிற்போக்கான தேசியவாதக் கொள்கைகளால் வசீகரிக்கபப்டும் புலம்பெயர்ந்த மக்களுக்கும் இது சோதனைக் காலம். வெள்ளையின- தேசியவாதிகள் அவர்களை அழித்தொழிக்க கிளம்புவார்கள். அந்த நேரத்தில், புலம்பெயர்ந்த தமிழர்களும் இடதுசாரி சக்திகளுடன் வர்க்க அடிப்படையில் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.


7/25/11

2083: கம்யூனிஸ்டுகள், முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவைப்போர்!

"எமக்குத் தெரிந்ததெல்லாம், Anders Breivik ஒரு தீவிர வலதுசாரி, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி."- Roger Andresen , ஒஸ்லோ பொலிஸ் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில்.

வலதுசாரித் தேசியவாதிகள், கம்யூனிச எதிர்ப்பாளர்கள், முஸ்லிம் விரோதிகள், கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், இது போன்ற கொள்கைகளைக் கொண்டவர்கள் எந்தளவு ஆபத்தானவர்கள் என்பதை ஒஸ்லோ படுகொலைகள் நிரூபிக்கின்றன. நோர்வேயின் முதலாவது பயங்கரவாத குண்டுவெடிப்பை நிகழ்த்தி விட்டு, 90 பேரை படுகொலை செய்து விட்டு, போலீசிடம் சரணடைந்த Anders Breivik என்ற கொலைகாரனின் அரசியல் பின்னணி அது தான். மேற்கத்திய நாடுகளில், இன்னமும் இத்தகைய கொள்கைகளைக் கொண்ட வெள்ளையின பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். மேற்குலக அரசுகள் இதுவரை காலமும், கம்யூனிஸ்டுகளையும், முஸ்லிம்களையும் தம் மக்களுக்கு எதிரிகளாகக் காட்டி வந்தன. ஆனால், மிகவும் கொடிய பயங்கரவாதிகள் வெள்ளையின சமூகத்தினுள் மறைந்திருப்பதை புறக்கணித்து வந்துள்ளன. சாதாரணமாக, விமான நிலையைப் பரிசோதனையின் போது, ஆசிய, ஆப்பிரிக்க தோற்றம் கொண்டவர்களை மணித்தியாலக் கணக்காக சோதிப்பார்கள். அதே நேரம், வெள்ளை தோலைக் கண்டால், எந்த வித சோதனையுமின்றி போக அனுமதிப்பார்கள்.

"வெள்ளையினத்தவர்கள் பயங்கரவாதியாகவோ, அல்லது குற்றவாளியாகவோ இருக்க வாய்ப்பில்லை," என்று கருதும் அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கை வெள்ளையின- பயங்கரவாதிகள் தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர். 1995 ம் ஆண்டு, அமெரிக்காவில் ஒக்லஹோமா நகரில் குண்டு வைத்தது ஒரு வலதுசாரி, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி என்பது தெரிந்த பிறகும், மேற்குலகம் இன்னும் விழிப்படையவில்லை. நோர்வேயில் கடந்த பத்தாண்டுகளாக, முஸ்லிம் குடியேற்றவாசிகளை உளவறிந்த அளவிற்கு, வெள்ளையினத் தேசியவெறியர்களை கண்காணிக்கவில்லை. அந்த மாபெரும் தவறுக்காக நோர்வே கொடுத்த விலை மிகப் பெரியது. இனிமேல் உலகம் முழுவதும், தீவிர வலதுசாரித் தேசியவாதிகளும், கம்யூனிச எதிர்ப்பாளர்களும், மக்கள் விரோதிகளாக கருதப்பட வேண்டிய காலம் வந்து விட்டது.

Anders Breivik என்ற கொலைகாரன், ஒஸ்லோ படுகொலைக்கு முன்னர், தனது கொள்கைகளை விளக்கும் பிரகடனம் ஒன்றை தயாரித்து பின்லாந்தின் வலதுசாரிக் கட்சியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளான். அதனை சுருக்கமாக வீடியோ பிரதியாக பதிவு செய்து Youtube பில் வெளியிட்டுள்ளான். (
Youtube உடனுக்குடனே அழித்து விடுவதால், கீழேயுள்ள வீடியோவை சேமித்து வைக்கவும்.) மார்க்சியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக புனிதப்போரை நடத்தக் கிளம்பியிருக்கும் இரகசிய அமைப்பொன்றின் விபரம் கொடுக்கப் பட்டுள்ளது. 2002 ல், லண்டனில் நிறுவப்பட்ட Knights Templar அமைப்பில், ஐரோப்பா முழுவதும் இருந்து 12 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். "பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்து விட்டது. இனிமேல் ஆயுதப்போராட்டமே ஒரே வழி. உலகம் என்னை இப்போது ஒரு பயங்கரவாதியாக கணிக்கலாம். ஆனால், சில காலத்தின் பின்னர், மக்கள் என்னை நியாயத்திற்காக போராடிய தியாகியாக மதிப்பார்கள்." - இவ்வாறு அந்தக் கொலைகாரனின் வாக்குமூலம் அமைந்துள்ளது. பன்முகக் கலாச்சாரம் என்ற பெயரில் நாட்டை சீரழிக்கும் ஐரோப்பிய அரசுகளை கவிழ்ப்பதும், அந்த இரகசிய அமைப்பின் நோக்கமாக இருந்துள்ளது. இஸ்ரேலுக்கு உதவுவதும், முஸ்லிம்களை ஐரோப்பாவை விட்டு விரட்டுவதும் அதன் குறிக்கோளாக உள்ளன. (நவீன கிறிஸ்தவ சிலுவைப் போராளிகள், வெள்ளயினத்தவர்களை மட்டுமே கிறிஸ்தவர்கள் என்று நம்புகிறார்கள். ஆசிய, ஆப்பிரிக்க நாட்டவர்களை, அவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பினும், "முஸ்லிம்கள்" என்று தான் குறிப்பிடுவார்கள்.)

"2083 , ஐரோப்பாவின் சுதந்திரப் பிரகடனம்" (2083: A European Declaration of Independence)என்று தலைப்பிடப் பட்டுள்ள அறிக்கை, இரகசிய இயக்கத்தின் திட்டங்களை விபரிக்கின்றது. மார்க்சியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக புனிதப்போரை அறிவித்துள்ள இந்த அமைப்பு, "கலாச்சார மார்க்சியம்" ஐரோப்பாவை இஸ்லாமிய மயப் படுத்தி வருவதாக அச்சுறுத்துகின்றது. மத்திய கால வத்திகானின் சிலுவைப்போரை மீண்டும் கொண்டு வர விரும்புகின்றது. சக ஐரோப்பிய குடிமக்களை, நவீன சிலுவைப்போரில் பங்குபற்ற வருமாறு அறைகூவல் விடுக்கின்றது. அறிக்கை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதியில், உலகில் "கம்யூனிஸ்டுகளால் விளைந்த தீமைகளை" எடுத்துக் காட்டுகின்றது. இரண்டாவது பகுதி, "ஐரோப்பியரை அழிக்கும் நோக்கில் வந்து கொண்டிருக்கும் முஸ்லிம் குடியேறிகளைப்" பற்றி எச்சரிக்கை செய்கின்றது. மூன்றாவது பகுதி, மீண்டும் ஒரு சிலுவைப்போரின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. பண்டைய கால சிலுவைப்போரின் வீர புருஷர்களை, ஆதர்ச நாயகர்களாக போற்றுகின்றது. இங்கே இணைக்கப் பட்டுள்ள வீடியோவைப் பார்க்கும் பொழுது, இந்த கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், எந்தளவு கம்யூனிஸ்டுகளையும், முஸ்லிம்களையும் வெறுக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

நோர்வேயை ஆளும் சமூக ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்ட தொழிற்கட்சியை, இன்று ஒரு இடதுசாரிக் கட்சியாக கருத முடியாது. ஆயினும், ஆசிய,ஆப்பிரிக்க குடியேற்றவாசிகள் அந்தக் கட்சிக்கே அதிகளவு வாக்களித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந்த இளைஞர் முகாமில் கூட, பன்னாட்டு இளைஞர்கள் கட்சி உறுப்பினர்களாக கலந்து கொண்டுள்ளனர். "வெளிநாட்டவர்களுக்கு சம உரிமை வழங்குவது, நாட்டை சீரழிக்க விரும்பும் இடதுசாரிகளின் சூழ்ச்சி..." என்று தான், வலதுசாரிக் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன. 90 பேரைக் கொன்ற வெள்ளையின பயங்கரவாதி அன்டெர்ஸ் ப்ரேவிக் கூட, வெளிநாட்டவரை வெறுக்கும் Frp கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளான். "வலதுசாரித் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டம் தான் எமது எதிர்காலம்..." என்று தெரிவித்தார் ஒரு நோர்வீஜிய மூதாட்டி. வலதுசாரிப் பாதையில் போய்க் கொண்டிருக்கும் முன்னாள் "இடதுசாரிக் கட்சிகள்" என்ன செய்யப் போகின்றன? மீண்டும் சமூக- ஜனநாயகப் பாதைக்கு திரும்பப் போகின்றனவா? அல்லது வெள்ளையினப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியப் போகின்றனவா? மேலைத்தேய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும், பிற வெளிநாட்டவர்களும் என்ன செய்யப் போகின்றனர்? இனிமேலும் பிற்போக்கு வலதுசாரிகளுக்கு பின்னால் அணிதிரள்வார்களா? அல்லது நவ-நாஜிசப் பயங்கரவாதத்தை எதிர்த்து ஐரோப்பிய வர்க்கப் போராட்டக் களத்தில் இறங்கப் போகிறார்களா? தீவிர வலதுசாரிகள் தங்கள் எதிரிகள் யார் என்று, பிரகடனப் படுத்தி விட்டார்கள். உங்கள் நண்பர்கள் யார் என்பதை, நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

நோர்வே குண்டு வெடிப்பும், வெள்ளையின பயங்கரவாதமும்


22 ஜூலை 2011, நோர்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் உலகை உலுக்கி விட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல், நகர மத்தியில் அமைந்துள்ள அரச கட்டிடங்களை இலக்கு வைத்து கார்க் குண்டு வெடித்துள்ளது. பிரதமர் அலுவலகமும், சில அமைச்சு அலுவலகங்களும், குண்டுவெடிப்பால் சேதமடைந்துள்ளன. கட்டிடங்கள் தகர்ந்துள்ள போதிலும், இரு வழிப்போக்கர்கள் மட்டுமே அகால மரணமடைந்துள்ளனர். அரச ஊழியர்களின் இழப்பு குறித்த தகவல்கள் தெரியவில்லை. பிரதமர் இரகசியமான இடத்தில் பத்திரமாக இருப்பதாக அறிக்கைகள் விடப்பட்டன. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், நோர்வேயில் இடம்பெற்ற முதலாவது குண்டுவெடிப்புச் சம்பவம் இதுவாகும். சமாதான விரும்பிகளின் நாடு என்ற விம்பத்தை தகர்த்த, குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் யார், என்ற ஊகங்கள் நாலாபக்கமும் இருந்து கிளம்பின. ஊடகங்கள் வழமை போல அல்கைதாவை குற்றம் சுமத்தின. "நோர்வே ஆப்கானிஸ்தான் போரில் ஈடுபட்டிருப்பதால் பழிவாங்கத் துடித்த அல்கைதா..." "ஈராக்கிய இஸ்லாமிய மதத் தீவிரவாதி முல்லா நாடுகடத்தப்படவிருந்ததால், நோர்வே அரசியல்வாதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார்..." "லிபியா மீதான நேட்டோ குண்டுவீச்சில் நோர்வே பங்கெடுப்பதால், எச்சரிக்கை விடுத்த கடாபியின் கைக்கூலிகள்..." இவ்வாறு அனைவரின் கவனமும் மத்திய கிழக்கு, அல்கைதா அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பக்கமே குவிந்திருந்தது. "உள்ளூர் பயங்கரவாதிகள்" என்று பல தசாப்தங்களாக நோர்வேயில் வாழும் பாகிஸ்தானிய சமூகமும் குற்றம் சாட்டப்பட்டது.

பி.பி.சி. உலகச் சேவையில் தோன்றிய, நிபுணர் என்று அழைத்துக் கொள்ளும் ஒருவர், "சந்தேகத்திற்கிடமின்றி இது அல்கைதாவின் செயல் தான்." என்று பிதற்றினார். உலகில் இதற்கு முன்னர் இடம்பெற்ற "அல்கைதா குண்டுவெடிப்புகள்" அதிகளவு பொதுமக்களின் இழப்புகளை ஏற்படுத்திய "மென்மையான இலக்குகள்" என்ற உண்மை அந்த நிபுணருக்கு தெரியவில்லை. ஓரிரு மணிநேரத்தின் பின்னர், நோர்வேயில் இருந்து இன்னொரு தகவல் வந்தது. குண்டுவெடிப்பை தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. ஆளும்கட்சியின் கூட்டம் ஒன்றில், சரமாரியாக சுட்டுத்தள்ளிய நபர், போலிஸ் உடையில் வந்த நோர்வீஜிய தோற்றம் கொண்ட வெள்ளையினத்தவர். பிபி.சி. அந்த செய்தியை அறிவித்ததும், மீண்டும் "பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்" என்ற பைத்தியம் உளற ஆரம்பித்து விட்டது. "அல்கைதா இப்போதெல்லாம் வெள்ளை இனத்தவர்களை சேர்த்து வருகின்றனர். பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக, அத்தகைய நபர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்."

ஆனால், அடுத்த நாள் பொழுது புலர்ந்த வேளை, உண்மை என்னவென்று உலகம் அறிந்து கொண்டது. கடந்த பத்து வருடங்களாக, சர்வதேச ஊடகங்கள் செய்து வரும் இனவாதப் பிரச்சாரம், இம்முறை ஆதாரங்களுடன் அம்பலமாகியது. ஆயினும் என்ன? தாக்குதல்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வேலை இல்லை என்று நிரூபிக்கப் பட்டவுடன், அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டன. 90 பேர்களின் மரணத்திற்கு காரணமான கொலைகாரன் ஒரு வெள்ளையின நோர்வேஜியன் என்பதால், அவன் ஒரு புத்தி பிறழ்ந்தவன் என்று கதையை முடித்து விட்டார்கள். ஒரு வேளை, தாக்குதலை நடத்தியது ஒரு முஸ்லிம் என்றால், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் அவசியம்" குறித்து ஒபாமா விரிவுரை ஆற்றியிருப்பார். வெளிநாட்டுக் குடியேறிகளை கட்டுப்படுத்துமாறு, வலதுசாரிகள் நோர்வே அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார்கள். தற்போது உள்நாட்டை சேர்ந்த தீவிர வலதுசாரி அரசியல் சக்திகள் தான் இந்த பயங்கரவாத செயலை புரிந்துள்ளமை நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கும், நேரமும் முன்கூட்டியே நன்கு திட்டமிடப் பட்டுள்ளன. அரச அலுவலகங்களில் பணிபுரிவோர், மற்றும் பிரதமரை கொலை செய்யும் நோக்கில் குண்டு வெடிக்கப் பட்டிருக்கலாம்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் என்பதால் மட்டுமல்ல, நோர்வேயில் தற்போது கோடை கால விடுமுறைக் காலம் என்பதாலும், தெருவில் சன நடமாட்டம் குறைவு.
ஆகையினால், தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் சாதாரண பொதுமக்களின் இழப்பை குறைக்க விரும்பியுள்ளனர். அல்கைதா பாணி தீவிரவாதிகள் என்றால், "மத நம்பிக்கையற்ற எல்லோரும் பரலோகம் போக வேண்டும்..." என்று விரும்பியிருப்பார்கள். பிற்காலத்தில் மக்கள் ஆதரவை இழக்க விரும்பாத உள்நாட்டு அரசியல் சக்தி ஒன்று தான் இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்கும். உள்நாட்டில் வளர்ந்து வரும் நவ-நாஜிச அல்லது தீவிர வலதுசாரிக் குழுக்கள் மீது தான் இயல்பான சந்தேகம் திரும்புகின்றது.

நோர்வேயில் நவ நாசிச கொள்கை கொண்ட குழுக்கள் தடை செய்யப் பட்டிருந்த போதிலும், "வெகுஜன அரசியல்" செய்யும் Fremskrittspartiet போன்ற கட்சிகள் வளர்ந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர், "நோர்வேயின் பிற நகரங்களும் ஒஸ்லோ போன்று மாறி வருகின்றன... வெளிநாட்டவர் தொல்லை அதிகரிக்கின்றது... கிரிமினல்கள், விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், அகதிகள் பெருகி வருகின்றனர்." என்று உள்ளூர் நாளிதழ் ஒன்றில் ஒப்பாரி வைத்தது. அவர்களைப் பொறுத்த வரையில், இந்த தீமைகளுக்கெல்லாம் ஆளும் தொழிலாளர் கட்சியின் (Arbeiderpartiet) தவறான கொள்கை காரணமாகும். குறிப்பாக "முஸ்லிம் குடியேற்றவாசிகள் பெருகி வருவதால், நோர்வேயில் குண்டு வெடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை..." என்று இனவாதக் கருத்துகளை பரப்பி வருகின்றது.

தற்போது நடந்துள்ள குண்டுவெடிப்புக்கு தீவிர வலதுசாரி கொள்கை கொண்டோரே காரணம் என்பதால், நோர்வே மக்கள் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு குறையலாம். ஆனால், நீண்ட கால நோக்கில், தீவிரவாத எண்ணம் கொண்டோருக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கலாம். எப்படியும் "வீர சாகசங்களைப் புரியும் செயல்வீரர்கள்" மீது மக்கள் மதிப்பு வைக்கலாமல்லவா? பொலிசாரினால் கைது செய்யப்பட்ட, தாக்குதலில் ஈடுபட்ட Anders Behring Brevik என்ற 32 வயது இளைஞனின் கொள்கையும் அதுவாக இருந்துள்ளது. அந்த நபரின் பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களில் காணப்பட்ட வாசகங்கள் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளன. "ஒரு மத நம்பிக்கையாளன், வெறும் நலன்களை மட்டுமே பேணும் ஒரு இலட்சம் படைவீரருக்கு சமமானவன்." என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரேயொரு வாசகம் மட்டுமே டிவிட்டரில் காணப்பட்டது. இதை விட, இணைய விவாதங்களில் கலந்து கொண்டு, கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கருத்துகளை உதிர்த்துள்ளார். நெதர்லாந்தின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல்வாதி கெர்ட் வில்டர்ஸ், மறைந்த பிரித்தானிய பிரதமர் சேர்ச்சில் ஆகியோரின் அபிமானியாக இருந்துள்ளார். முகநூலில் சிறந்த நூலுக்கான இவரது தெரிவாக ஆர்வேல் எழுதிய "1984" காணப்படுகின்றது. இவர் தன்னை ஒரு நோர்வீஜிய தேசியவாதியாக இனங்காட்டியுள்ளார். தற்காலத்தில் நடப்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போர் இல்லை. மாறாக, சர்வதேசியத்திற்கு எதிரான தேசியவாத சக்திகளின் போர்." என்று அந்த வெள்ளையின பயங்கரவாதி தத்துவ முத்துகளை உதிர்த்துள்ளார்.

ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பை அடுத்து, அங்கிருந்து 40 கி.மி. தூரத்தில் உள்ள "உத்தேயா" (Utøya) என்னும் தீவில் தான் அதிகளவு மரணங்கள் சம்பவித்துள்ளன. ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் இளைஞர் அணியின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வுகள் அந்தத் தீவில் நடந்து கொண்டிருந்தன. நாடு முழுவதிலும் இருந்து, இளம் வயது கட்சி உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். தொழிலாளர் கட்சி இன்று ஒரு வலதுசாரி சந்தர்ப்பவாதக் கட்சியாக மாறி விட்டாலும், வெளிநாட்டவர் மத்தியில் மத்திய-இடதுசாரிக் கட்சியாக பார்க்கப்பட்டது. இதனால் பல அந்நிய குடியேறிகளின் சமூகங்களை சேர்ந்த இளைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர். தொழிலாளர் கட்சியின் கோடைகால முகாம் நடைபெற்ற இடத்திற்கு, கொலைகாரன் பொலிஸ் உடையில் சென்றுள்ளான். "ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பந்தமாக, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க அனுப்பப் பட்டதாக..." கூறியுள்ளான். தொடர்ந்து, கண்மூடித் தனமாக சுட்டதில் 90 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் அந்த இடத்திற்கு விரைந்த பொலிஸ் படையினர், Anders Brevik என்ற கொலைகாரனை மடக்கிப் பிடித்துள்ளனர். இருப்பினும், ஒரேயொரு நபர், ஒரு தானியங்கி துப்பாக்கி மூலம், 90 பேரை சுட்டுக் கொன்றமை நம்புவதற்கு கடினமானது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இன்னொரு நபரும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், பிறிதொரு இடத்தில் கைது செய்ததாகவும் அறிவித்தார்கள். ஆரம்பத்தில், தாக்குதல்கள் "ஒரு மனநோயாளியின்" செயல் என்று தெரிவித்தார்கள். போலிசிடம் அகப்பட்ட பயங்கரவாதி ஒரு "வெள்ளையின, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி" என்பதால், ஊடகங்களும் அதிகம் ஆராயவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் வெறும் கருவிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. இவர்களுக்குப் பின்னால், ஒரு இயக்கம், அல்லது அரசியல் சக்தி இருக்கக் கூடும்.

தாக்குதல்கள் யாவும், ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியை குறி வைத்தே இடம்பெற்றுள்ளன. இதனால், இந்த சம்பவம் காரணமாக தொழிலாளர் கட்சிக்கு வருங்கால தேர்தல்களில் அனுதாப வாக்குகளை பெற்றுத் தரலாம். இருப்பினும், இளைஞர் அணியை சேர்ந்த 90 உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அந்தக் கட்சிக்கு பின்னடைவை தோற்றுவிக்கலாம். இன்றைய இளைஞர்கள், நாளைய தலைவர்கள். இதனால், தூர நோக்கில் தொழிலாளர் கட்சியை நோர்வேயில் இல்லாதொழிக்கும் நோக்கம் தெரிகின்றது. தொழிலாளர் கட்சியின் மீது யாருக்கு அவ்வளவு கோபம்? தொழிலாளர் கட்சி வலதுசாரி சந்தர்ப்பவாதப் பாதையில் சென்ற போதிலும், இளைஞர் அணியினர் மத்தியில் இடதுசாரிப் போக்கும் காணப்படுகின்றது. சமீப காலமாக,"பாலஸ்தீன சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும். இஸ்ரேலிய பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும்." என்பன போன்ற குரல்கள் கேட்கின்றன. மேலும், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்த தினத்தன்று, முன்னாள் நோர்வே பிரதமர் வருகை தருவதாக ஏற்பாடாகியிருந்தது. இன்றைய பிரதமர் அப்பட்டமான வலதுசாரி என்பதும், முன்னை நாள் பிரதமர் ஓரளவு இடதுசாரி பக்கம் சாய்பவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இதற்கு முன்னர் குறிப்பிட்ட தீவிர வலதுசாரியினர், நவநாஜிகள் மட்டுமல்லாது, வேறு சக்திகள் சம்பந்தப் பட்டுள்ளனவா? நோர்வே வட அட்லாண்டிக் இராணுவக் கூட்டில் (நேட்டோ) அங்கம் வகிக்கின்றது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, நோர்வே விமானங்கள் லிபியா மீது குண்டுகளை வீசி வந்துள்ளன. நேட்டோ இராணுவ நடவடிக்கையின் ஓரங்கமாக நோர்வே செயற்பட்டு வந்தாலும், இந்த வாரம் குண்டுவீச்சை நிறுத்திக் கொள்வதென்று தன்னிச்சையாக அறிவித்தது. அதாவது, வருகிற ஆகஸ்ட் முதலாம் தேதியில் இருந்து, நோர்வே விமானங்கள் போர் நடவடிக்கையில் ஈடுபட மாட்டா. இதனால், நோர்வே அரசுக்கும், பிற நேட்டோ உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் தாக்குதல் நடந்திருக்கலாம். நேட்டோ, அல்லது நோர்வே அரச மட்டத்தை சேர்ந்த ஏகாதிபத்திய ஆதரவாளர்கள், தாக்குதலில் சம்பந்தப் பட்டிருக்கலாம். நேட்டோ ஐரோப்பாவில் இரகசியமாக ஒரு பயங்கரவாத அமைப்பை (Gladio) உருவாக்கி வைத்துள்ளது. அந்த இரகசிய அமைப்பு இத்தாலி போன்ற நாடுகளில் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளது. இதுவரை குண்டுகளை வைத்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. அதே போல, ஒஸ்லோ குண்டுவெடிப்பை நடத்திய சூத்திரதாரிகள், அவர்களின் நோக்கங்கள் என்பன இனி ஒரு காலமும் வெளிவராமல் போகலாம்.


மேலதிக விபரங்களுக்கு:
Olso Attacks Suspect Is 'Conservative Christian'
Pågrepet 32-åring kalte seg selv nasjonalistisk
Anders Behring Breiviks kommentarer hos Document.no
Terrorsiktet kjøpte seks tonn kunstgjødsel
TERRORAKSJON I OSLO