7/31/08

கருகும் கனவுகள் !

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் செய்து கொண்ட தற்கொலைக் கணக்கைப் பார்ப்போம். 2003இல் 40, 2004இல் 70, 2005இல் 84, 2006இல் 109, 2007இல் 118, 2008 ஜூன்வரைக்கும் 79 பேரும் தற்கொலை செய்திருக்கிறார்கள் (THE TIMES OF INDIA, 28.7.08). இந்த ஆண்டு தற்கொலை செய்தவர்களில் 23 பேர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மீதிப்பேர் கேரளா மற்றும் ஏனைய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மொத்தத்தில் தமிழகம், கேரளாவைச் சேர்ந்தோரே கணிசமாக உள்ளனர். காரணம் வளைகுடா நாடுகளில் இவ்விரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். மேலும் இந்தப் புள்ளிவிவரம் ஒரு நாட்டிற்கு மட்டும்தான் என்பதால் ஏனைய வளைகுடா நாடுகளின் விவரங்களைச் சேர்த்தால் கணக்கு இன்னும் அதிகமாகும். வேலை செய்யும்போது விபத்தில் கொல்லப்படும் தொழிலாளர்களின் கணக்கு இதில் சேரவில்லை.
ஏழ்மையிலும், அவலத்திலும், வேலையின்மையிலும் இழுபட்டுச் செல்லும் வாழ்க்கையில் வானத்து நட்சத்திரமாக தூரத்தில் நமக்கொரு வாழ்க்கை உண்டெனும் நம்பிக்கையைத் துளிர்விடச் செய்வது வளைகுடா வேலை வாய்ப்புகள். தமிழகத்தின் படித்த நடுத்தர வர்க்கம் நகரத்து தகவல் தொழில் நுட்பத் துறையின் பசுமையைக் காணும் வாய்ப்பைப் பெற்றிருப்பதற்கு மாறாக படிக்காத வர்க்கத்திற்கும், உழைக்கும் மக்களுக்கும் உள்நாட்டில் நம்பிக்கையளிக்கும் வாய்ப்புகள் எல்லாம் பாலைவனமாய்க் காய்ந்து கிடக்கின்றன.
காட்டு வெள்ளத்தில் இழுபட்டுச் செல்லும் வாழ்க்கையில் கரையேறத் துரும்பில்லாத நிலையில் கிராமத்தில் ஓரிருவர் அரபு நாடுகளுக்கோ, மலேசியாவுக்கோ சென்றால் நம்பிக்கை துளிர் விடத் துவங்குகிறது. சென்றவர்கள் அடைந்த சிரமங்கள் மறைந்து, கொண்டு வரப்போகும் அதிருஷ்டங்கள் மனதை ஆக்கிரமிக்கின்றன. அதற்கு மேலும் காத்திருக்காமல் வெளிநாடு செல்லும் ஆசை, கனவுலகிலிருந்து இறங்கி நனவை சாத்தியமாக்க முனைகிறது. அந்த முயற்சியில் குடும்பமே தன்னை மறந்து எதிர்பார்ப்புடன் ஈடுபடுகிறது. விளையாத துண்டு நிலத்தை விற்பது, குண்டுமணித் தங்கத்தைச் சேகரித்து அடகுவைப்பது, இறுதியில் பெரும் தொகையைக் கந்து வட்டிக்கு வாங்குவது என முயற்சிகள் தீவிரமடைகின்றன.
பிறகு அந்த நாளும் வருகிறது. ஊர் கூடி வாழ்த்த குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்திருக்க விமானமேறி வெளிநாடு செல்கிறார்கள். இதில் திருட்டு விசாவில் செல்கிறவர்கள், சுற்றுலா விசாவில் போனவர்கள், கடவுச்சீட்டை அடமானம் கொடுத்து அல்லல் படுபவர்கள், இறுதியில் மலேசியச் சிறைகளில் சாட்டையடிபட்டு வாடுபவர்கள், அடுத்து எப்படியாவது இந்தியா திரும்பமாட்டோமா என்று தோல்வியுறுபவர்களின் கதையை விடுவோம். முறையான வழிகளில் சென்றவர்களாவது முழுநிறைவை அடைந்து தன் குடும்பத்தில் விளக்கேற்றுகிறார்களா?
அரபு நாடுகளின் சம்பள விகிதம் முன்பைக்காட்டிலும் கணிசமாக குறைந்திருக்கிறது. குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதற்கு ஏனைய தெற்காசிய நாடுகளின் பஞ்சைப்பராரிகள் தயாராக இருப்பதால் 80களின் பொற்கால வளைகுடாப் பணி இன்று இல்லை. இந்த உண்மை அங்கு சென்ற பிறகே தொழிலாளர்களுக்கு புரியவருகிறது. இருந்தாலும் கடந்த காலத்தின் எச்சம் மனதில் வேர் விட்டிருப்பதால் அரபு மயக்கம் குறைந்தபாடில்லை.
மற்ற தற்கொலைகளுக்கும் வளைகுடாவில் நடப்பதற்கும் பாரிய வேறுபாடு இருக்கிறது. அவல வாழ்வில் மகிழ்ச்சியையும், புதிய வாசல்களையும் ஒரு பண்புமாற்றம் போல திறக்கச்செய்யவேண்டிய இந்தக் கனவு மொட்டிலேயே கருகுவது ஏன்? கடன் ஏற்படுத்தும் நெருக்கடியும், குடும்பத்தின் எதிர்ப்பார்ப்பும்தான் காரணங்கள். வெளிநாடு செல்வதற்கு விசா எடுக்க, போக்குவரத்து, தரகர் கழிவு என்று சில இலட்சங்களைச் செலவு செய்யக் கை கொடுப்பது கந்து வட்டிக் கடன்தான். இந்தக் கடனை அடைக்குமளவு வெளிநாட்டின் வேலையும் சம்பளமும் அமைவதில்லை. கிடைக்கும் சம்பளத்தின் பாதியை தங்குமிடம், உணவு போன்றவற்றிற்காக நிறுவனங்கள் பிடித்துக்கொள்கின்றன. தனியாகத் தங்கினாலும் கால் வயிற்றுக் கஞ்சி மட்டும் குடித்துக் கொண்டு ஓட்டினாலும் செலவு குறைவாதாயில்லை. சில வருடங்கள் பல்லைக் கடித்துக்கொண்டு ஓடிவிட்டால் நிச்சயம் வழி பிறக்குமெனத் தொழிலாளிகள் காத்திருக்கின்றனர்.
இடையில் இந்தக் கஷ்டங்களை அறியாத குடும்பத்தினர் எதிர்பார்ப்புகளை தெரிவித்தவாறு நெருக்குகின்றனர். தங்கையின் திருமணம், தம்பியின் படிப்பு, சொந்த வீடு கட்டுவது, மனை வாங்கிப் போடுவது, எல்லாவற்றுக்கும் மேல் வெளிநாடு செல்ல வாங்கிய கடனை அடைக்கவேண்டிய நிர்ப்பந்தம் எல்லாம் சேர்ந்து கெடு விதிக்கின்றன. இந்த அழுத்தத்தில் தத்தளிக்கும் தொழிலாளிகள் எதிர்காலத்திலாவது நல்ல சம்பளம் கிடைக்கும் என்று அரபு நாடுகளிலேயே கடன் வாங்குகின்றனர். நிறுவனத்தில் கொத்தடிமைபோல வாழ்வேன் என்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டு முன்பணம் வாங்குகின்றனர். வங்கிகளில் கடன் கிடைக்கவில்லை என்றால் கடன் அட்டைகளை வாங்குகின்றனர். அதுவும் போதாது எனும்போது கந்து வட்டிக்கு கடனும் வாங்குகின்றனர். ஊர்ப்புறங்களில் குடிகொண்டிருக்கும் கந்து வட்டி கடல் கடந்தும் ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது.
எனினும் இந்த ராஜ்ஜியத்தில் அடிமைகளுக்கு கதிமோட்சம் இல்லை. எதிர்பார்த்த வாழ்வு இனி கிடைக்கப் போவதில்லை எனும் அவல யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் தொழிலாளிகள் அதற்கு விடைதேடும் முகமாக தமது உயிரைத் துறக்கும் துணிச்சலான முடிவை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். பொறுப்புணர்வோடும், வீட்டிற்கு ஏதாவது செய்யவேண்டுமென்ற பாசமும் நிறைந்திருக்கும் இந்தத் தொழிலாளிகள் எவ்வளவு மன உளைச்சலுடன் இந்த முடிவை எடுத்திருப்பார்கள்? கடல் கடந்து தீர்வு தேடிய கனவு இடையிலேயே கருகிப் போகிறது. மகன் வழி திறப்பான் என்று ஆவலுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் குடும்பம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. ஆயினும் இந்த சோக முடிவுகள் ஊருக்குள் கருக்கொண்டிருக்கும் வெளிநாட்டு மோகத்தைக் கலைத்து விடுவதில்லை.
அமெரிக்காவின் கணிப்பொறி நிறுவனங்களுக்காக இலட்சங்களில் சம்பளம் வாங்கச் செல்லும் மேட்டுக்குடியினருக்கு எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யும் அரசு வளைகுடாவின் தொழிலாளிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. விபத்திலோ, தற்கொலையிலோ இறந்துபோகும் தொழிலாளிகளின் பிணங்கள் தாய்நாடு வருவதற்கே சில வாரங்கள் ஆகிவிடுகின்றது. இதற்கான நிவாரணத் தொகையை நிறுவனங்களிலிருந்து வாங்குவதற்குக்கூட வளைகுடாவிலிருக்கும் இந்தியத் தூதரகங்கள் உதவுதில்லை. வாழ்ந்த போதும், வாழ்வு முடிந்த போதும் மதிப்போ, மரியாதையோ ஏழைகளுக்கு இல்லை. மொத்தத்தில் வளைகுடா கனவுகளின் மறுபக்கம் இதுதான்.
சலிக்காமல் கனவுகளை ஏற்றுமதி செய்யும் தமிழகத்தில் வாழ்க்கை எப்படி இருக்கிறது? விதவைகள் வாழ்வுரிமை இயக்கம் எனும் அமைப்பு துவங்கியுள்ள கலங்கரை என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ள ஒரு ஐ.நா சபையின் ஆய்வுப்படி இந்தியாவில் 15 முதல் 59 வயதுவரை உள்ள பெண்களில் ஆயிரத்தில் 53பேர் விதவைகளாம் (குமுதம் ரிப்போர்ட்டர், 17.7.08). தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் இந்த விகிதம் நூற்றுக்கு ஏழுபேராம். அதன்படி ஆயிரத்திற்கு எழுபது பேர். நாட்டிலேயே விதவைகளின் விகிதம் தமிழ்நாட்டில்தான் அதிகமாம். இந்த அதிக விதவை விகிதத்திற்கு என்ன காரணம்?
தமிழ்நாடு குடிகாரர்களின் தேசமாக மாறிவருவதுதான் இந்த நிலைக்கு காரணம். டாஸ்மாக் விற்பனையின் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 9000 கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்றால் குடிப்பவர்களின் எண்ணிக்கையையும், குடியின் அளவையும் ஊகித்தறியலாம். நகரமயமாக்கம் உருவாக்கியிருக்கும் புதிய உடழைப்பு வேலைகள் காரணமாக உதிரிப் பாட்டாளிகள் அன்றாடம் பெறும் கூலியில் கணிசமான அளவை சாராயக்கடையில் அள்ளிக் கொடுக்கின்றனர். மிதமாக ஆரம்பிக்கும் குடிப்பண்பு பின்பு மிதமிஞ்சியதாக மாறி குடிக்கு அடிமையாக மாற்றிவிடுகிறது.
எனவே இந்தப்பிரிவினர் 40, 50 வயதுகளில் கல்லீரல் கெட்டு மரணத்தைத் தழுவுகின்றனர். இம்மக்கள் பார்க்கும் கடின உழைப்பு வேலைகள் உடல் சோர்வை மறக்கக் குடித்தே ஆகவேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருப்பதும் உண்மைதான். குடிக்கும் நடுத்தரவர்க்கம் போதிய உணவை எடுத்துக்கொள்வதாலும், அவர்களுக்கு கடின உழைப்பு வேலைகள் இல்லை என்பதோடு குடியும் அளவுக்குட்பட்டு இருப்பதாலும் இளவயது மரணம் இவர்களிடத்தில் பொதுவில் இல்லை. ஆனால் உழைக்கும் வர்க்கமோ சத்தான உணவைச் சாப்பிட வாய்ப்பில்லாமலும், இருக்கும் காசை குடியில் கொட்டுவதாலும் மரணம் வாசலைத் தட்டுகிறது. ஆக திருமணம் ஆன பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகிறார்கள்.
விதவைகள் மற்றவர்களைப் போல வாழ்வதும், மறுவாழ்வு பெறுவதும் இயல்பாக முடியுமென்ற நிலை இன்னும் வரவில்லை. விதவைகளைப் புறக்கணிக்கும் பிற்போக்குச் சமூகமாகவே தமிழகம் நீடிக்கிறது. புத்தாடை அணிந்தாலே மினுக்கிகிட்டுத் திரிகிறாள் என்று பேசுவதும், மங்கல நிகழ்ச்சிகளில் ஒதுக்குவதும் இன்றும் சமூகத்தில் சாதாரணம்தான். அவ்வளவு ஏன் மேற்கண்ட விதவைகள் சங்கம், கூட்டம் நடத்துவதற்குக்கூட பல திருமண மண்டப உரிமையாளர்கள் புனிதத்தைக் காரணம் காட்டி அனுமதி மறுத்துவிட்டனராம்.
பெண்கள் கைம்பெண்களாவதும், வளைகுடா தொழிலாளர்கள் தற்கொலை செய்வதும் நாளிதழ்களின் செய்தியலைகளில் ஒதுங்கிவிட்ட இருபிரிவினரின் வாழ்க்கை மட்டுமல்ல. அதன் சங்கிலித் தொடர் வாழ்க்கையில் அல்லல் படும் மக்கள் ஏராளம் இருக்கின்றனர். தோல்வியும், விரக்தியும், சலிப்பும், சோர்வும் இன்னபிற சோகங்களையும் ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு பழக்கப்படுத்தப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் “இந்தியா முன்னேறுகிறது, வல்லரசாகிறது” என்று சொல்வது சிரமம் இல்லையே?

7/30/08

துபாய், முதலாளிகளின் சொர்க்கபுரி

வளைகுடா கடற்கரையோரம், துபாய் நகரை பார்த்த படி நிற்கிறது "பெர்ஜ் அல் அரப்" என்று அழைக்கப் படும், பாய்மரக்கப்பல் வடிவில் கட்டப்பட்ட, ஏழு நட்சத்திர ஹோட்டல். ஆமாம், எதையும் பெரிதாகவே சிந்தித்து கட்டப்பட்ட, ஐந்து நட்சத்திரத்தை விட வசதிகள் நிறைந்த ஏழு நட்சத்திர விடுதி அது. அதன் மிகக்குறைந்த அறையின் ஒரு நாள் வாடகை 800 டாலர்கள். துபாய் காரருக்கு எல்லாத்தையும் வித்தியாசமாக செய்ய ஆசை. அதனால், ஹோட்டல் விளம்பரத்துக்காக அமெரிக்காவின் டென்னிஸ் நட்சத்திரம் அன்ரே அகசியை அழைத்து வந்து, உச்சியில் இருக்கும் ஹெலி இறங்கு தளத்தில் டென்னிஸ் விளையாட வைத்தார்கள். துபாய் நாட்டின் சின்னமாகி விட்ட பெர்ஜ் அல் அரப்கட்டியதுடன் நின்று விடாது, நவீன உலக அதிசயங்கள் அமைக்க வேண்டுமென்ற ஆசையில், கடலுக்குள் பனை மர வடிவில், உலகப் பட வடிவில், என்று செயற்கை தீவுகளை வேறு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த செயற்கை தீவுகளில், நவீன வசதிகளை கொண்ட குடியிருப்புக்களை கட்டி ரியல் எஸ்டேட் இல் விற்க இருக்கிறார்கள். துபாய் முதலாளிகளுக்கு எண்ணை விற்று வந்த கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்வதென்ற கவலை. அதனால் இப்படி பிரமாண்டமான கட்டுமானப் பணிகளை கற்பனை பண்ணி கட்டி கொண்டிருக்கிறார்கள். பணம் உள்ளவர்களின் வாழ்கை வசதிகளை உயர்த்துவதை மட்டுமே குறிக் கோளாக கொண்டு செயற்படும் அரசாங்கம், சாதாரண மக்களுக்காக போக்குவரத்து துறையை விருத்தி செய்யவில்லை. அதை விட கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும், நவீன லக அதிசயங்களை கட்டிய, கட்டிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் மாத வருமானம் 160 டாலர்களுக்கு மேல் போவதில்லை. மேலும் குறைவான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, கட்டிடங்கள் விழுந்து மடிந்தவர்கள் பலர். இந்திய, பாகிஸ்தானிய கூலி தொழிலாளர்களன அவர்களை பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.. அவர்களின் பெறுமதி சில நூறு டாலர்கள் மட்டுமே. இருபதாம் நூற்றாண்டு நவீன அடிமைகள் அவர்கள்.
2005 ஜனவரி மாதம், ஹஜ் பெருநாள் தொடங்க சில நாட்களே இருந்த காலம். மெக்கா போகும் யாத்திரீகர்கள் எனது விமானத்திலும் நிறைந்திருந்தனர். அவர்கள் ஏன் துபாய் வரவேண்டும்? பேச்சு கொடுத்ததில் சில உண்மைகள் வெளி வந்தன. கனடாவில் இருந்து புறப்பட்ட அந்த யாத்திரீகர்கள், ஒரு சவூதி அராபிய பிரயான முகவர் மூலம் ஒழுங்கு செய்யப் பட்டவர்கள். ஒவ்வொரு பயணியிடமும் நிறைய பணம் வாங்கி கொண்டு, குறைந்த செலவில் டிக்கெட் எடுத்து நாடு நாடக சுற்றி போகும் படி வைத்திருந்தார்கள். பாவம் இந்த அப்பாவி யாத்திரீகர்கள், தாமாகவே பிரயாணம் ஒழுங்கு பண்ண அவர்களுக்கு உரிமையில்லை. சவூதி பிரயான முகவர்களின் ஏகபோக உரிமை மதம் சம்பந்தமான புனித பயணத்தில் கோடி கட்டிப் பறக்கிறது. துபாய் விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது, பாஸ்போர்டை வைத்து பிரயாணிகளை பிரித்து விசா குத்திக் கொண்டிருந்தார்கள். ஐக்கிய அரபு ராச்சியங்கள், மற்றும் பணக்கார வளைகுடா நாடுகளின் பிரசைகளுக்கு முன்னுரிமை, அதற்கு அடுத்ததாக அமெரிக்க அல்லது பிற பணக்கார நாடுகள், கடைசியாக வறிய நாடுகளை சேர்ந்த அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். இந்த பாகுபாடு துபாய் அங்கம் வகிக்கும் ஐக்கிய அரபு எமிறேடின் நிர்வாக அரசியல். அங்கே நீதி கூட இந்த பின்னணியை வைத்து தான் வழங்கப் படுகின்றது.
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த போது, அப்போது ஜனவரி மாதம் என்பதால் வெயில் கடுமையில்லை. சற்றே குளிரான காலநிலை. ஊர் சுற்றிகளுக்கு ஏற்ற காலநிலை. அங்கே பொது போக்குவரத்து அரிது. அதனால் டாக்ஸி, அல்லது தனியார் வாகனம் மட்டுமே தஞ்சம். நான் போய் நின்ற இடம் பழைய துபாய் நகரம். பஜார் நகரம் என்றும் சொல்லலாம். நகை கடைகள், பல சரக்கு கடைகள், மலிவான தங்குவிடுதிகள், எங்கு பார்த்தாலும் இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள்.... இப்படி துபையின் அந்த பகுதி மட்டும் ஒரு சராசரி இந்திய நகரம் மாதிரி காட்சியத்தது. அங்கிருந்து ஒரு சில கி.மி. தூரம் போனால் தான் நவீன துபாய் நகரம் ஆரம்பிக்கிறது. அமாம், துபாய் நகரம் இன்னமும் புது புது குடியிருப்புகள் அமைக்கப் பட்டு பெருகிக் கொண்டே போகின்றது. பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய அல்லது (எமிரேட்) அரேபியர்கள் மட்டுமே வசிக்கும் நவீன வசதிகளை கொண்ட குடியிருப்புகள், அவற்றின் மத்தியில் பாடசாலைகள், பல்பொருள் அங்காடிகள், மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை கொண்ட நியூ யார்க் போன்ற நவீன நகரங்கள்அவை. நட்சத்திர ஹோட்டல்கள், உல்லாச பிரயாணிகள் இளைப்பாறும் கடற்கரை, இப்போது கட்டப் பட்டுகொண்டிருக்கும் உலக அதிசயங்கள் எல்லாமே அங்கே தான்.
இந்த நகரமயமாக்கப் பட்ட கட்டடக் காட்டுக்கு வெளியே, பாலைவனப் பகுதியில் அமைந்திருக்கிறது நவீன அடிமைகளின் முகாம்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தென் ஆசிய நாட்டு கூலி உழைப்பாளிகள், மிகக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். தொழில் ஒப்பந்தம் தொடங்கும் நாளன்றே அவர்களின் கடவுச்சீட்டு, சட்டத்திற்கு மாறாக, வாங்கி வைக்கப் படுகின்றது. குறைந்தளவு வசதிகளை கொண்ட முகாம்களில், ஒரு அறைக்குள் எட்டுபேர் என்று தங்க வைக்கப் படுகின்றனர். வேலை செய்யும் இடத்திற்கு தினம்தோறும் கம்பெனி பஸ், தொழிலாளரை ஏற்றி இறக்கும். ஒரு தொழிலாளிக்கு சம்பளம் உட்பட ஆகும் செலவு அதிக பட்சம் முன்னூறு டாலர்கள் மட்டுமே என்பதால், அவர்களின் உழைப்பை சுரண்டுவதன் மூலம், பல கம்பெனிகள் பெருமளவு லாபம் எடுக்கின்றன. மலிவான உழைப்பாளிகள் உருவாக்கும் உற்பத்தி பொருட்கள், அல்லது சேவைகள் ஆகியவற்றின் விலைகள் சர்வதேச தரத்திற்கு உயர்வாக இருப்பதால், இந்த கொள்ளை லாபம் சாத்தியமாகின்றது. உண்மையில் அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய முதலாளிகள், பொறாமைப்படும் அளவிற்கு துபாய் பொருளாதாரம் அடிமைகளால் கட்டப்பட்டு வருகின்றது. அங்கே தொழிலாளர் நல சட்டங்கள் எதுவும் கிடையாது. தொழிற்சங்கங்களுக்கு தடை. வேலை நிறுத்தம் சட்டவிரோதம். வர்த்தக நிறுவனங்கள் வருமான வரி கட்ட தேவையில்லை. மொத்தத்தில் அது ஒரு முதலாளிகளின் சொர்க்கம். மிக அரிதாக அண்மையில் நடந்த வேலை நிறுத்தம் ஒன்று, போலிஸ் தலையீட்டால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது கைது செய்யப் பட்ட பலர் நாடு கடத்தப் பட்டிருக்கலாம்.
கூலி தொழிலாளர்கள் மட்டுமல்ல, விற்பனையாளர்கள், எழுதுவினைஞர்கள், மானேஜர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள் போன்ற சேவைத்துறையில் இருப்போரும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து குறைந்த கூலிக்கு கூட்டி வரப்படுகின்றனர். இவர்களின் சம்பளம் சாதாரண வெளிநாட்டு தொழிலாளி எடுப்பதை விட பல மடங்கு அதிகம் என்றாலும், ஒரு சாதரண எமிரேட் தொழிலாளி எடுக்கும் சம்பளத்தை விட குறைவு. சில நேரம் அலுவலக பணியில் இருக்கும் ஐரோப்பியரை விட குறைவு எனலாம். அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் மேல்நிலை மனேஜர்களாக பதவியில் உள்ளனர். அவர்களின் ஊதியம், அவர்களின் தாயகத்தில் கிடைக்கும் அதே அளவு, அல்லது சற்று கூட. இதனால் சில தகுதி குறைந்த அமெரிக்க அல்லது ஐரோப்பியர்கள் கூட துபாயில் செல்வந்த வாழ்கை வாழ்கின்றனர்.
பண்டைய ரோம் நகரத்தில், விவசாய கூலிகள் முதல் ஆசிரியர்கள் வரை பிற நாடுகளில் இருந்து வந்த அடிமைகளே வேலை செய்தனராம். ரோம் மக்கள் அரசு துறைகளிலும், இராணுவத்திலும் மட்டுமே பணி புரிந்தனராம். இதே போன்ற சமூக கட்டுமானம் எமிரேட் முழுக்க உள்ளது. நாட்டின் பிரசைகள் அரசாங்கத்திலும், பாதுகாப்பு படை களிலும் அதிக ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். மேலும் எல்லா வகையான வர்த்தக நிறுவனத்திலும் ஒரு எமிரேட் பிரசைக்கு அரைவாசி பங்கு இருக்க வேண்டும். இதனால் பல எமிரேட் பிரசைகள், சும்மா இருந்தே பணம் சம்பாதிக்கிறார்கள். மிகப் பெரும் முதலீட்டில் நடத்தப் படும் கம்பெனிகள் அமெரிக்கர்கள், அல்லது ஐரோப்பிய முதலளிகளுடயது. இடைதர மற்றும் சிறிய கம்பெனிகளை இந்தியர்கள் நடத்துகின்றனர். வெளிநாட்டினர் துபாயில் எந்த சொத்தும் வாங்க உரிமையில்லை. அவர்கள் வீடு வாங்க, வியாபார நோக்குடன் அனுமதித்தாலும், ஒரு சில கட்டுப்பாடுகளுடன், அவற்றை விற்கும் ரியல் எஸ்டேட் கம்பெனிகள் அல்லது எமிரேட் காரர்கள் லாபம் சம்பாதிக்கும் துறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எண்ணை இருப்பு குறைந்து வருவதால் இது போன்ற வர்த்தகத்தில் துபாய் நாட்டம் காட்டி வருகின்றது. ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்க கண்டங்களுக்கு நடுவில் அமைந்திருப்பதால், துபாயில் பல உலக வர்த்தக கழகங்கள் தமது விற்பனை சாலைகள், போன்றவற்றை திறந்து வைத்துள்ளன. மேலும் வரி சலுகை, சகல வசதிகளுடனான விமான நிலையம், துறைமுகம், குறைந்த கூலிக்கு பிடிக்க கூடிய தொழிலாளர்கள், ஆகிய விஷயங்கள் பல முதலாளிகள் துபாயை தெரிவு செய்ய காரணம்.
துபாய் இவ்வாறு முதலாளிகளின் சொர்க்கபுரி மட்டுமல்ல, உல்லாச பிரயாணிகளுக்கும் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. துபாய் அருங்ககாட்சியகம் குறிப்பிடத்தக்கது. எண்ணை கண்டுபிடிக்கும் வரை துபாய் நகரம் எப்படி காட்சியளித்தது? அதன் மக்கள் எப்படி வாழ்ந்தனர்? போன்றவற்றை அறிய விரும்பினால் அது ஏற்ற இடம். மேலும் துபாய் வணிகர்கள் ஒரு காலத்தில் முத்துகளை உலகம் முழுக்க விற்று வந்தனர். முத்து குளிக்கும் முறை, பற்றி ஒரு பகுதி விளக்குகிறது. இன்னொரு பகுதி பாலை வன சோலையில் பேரீச்சை, பிற விவசாயம் பற்றி விளக்குகின்றது. இவை எல்லாம் நேரே பார்ப்பது போல பொம்மைகளை வைத்து காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் பார்ப்பதை விட்டு, பாலைவன கிராமம் ஒன்றினை அங்கிருந்த வீடுகள், கிணறுகள், தோட்டங்கள், ஒட்டகங்கள்இவ்வாறு அப்படியே இருந்த மாதிரி பார்க்க விரும்பினால், "ஹட்டா ஹெரிடேஜ் வில்லேஜ்" சிறந்த இடம். ஹட்டா துபாய் நகரில் இருந்து 115 கி.மி. கிழக்கு பக்கமாக இன்னொரு எமிரேட் புஜைரா நோக்கி போகும் பாதையில்,ஹசார் மலைகளுக்கு நடுவில் அமைந்திள்ளது. மலைகளின் பின்னணியில் அந்தக் கிராமத்தின் அமைவிடம் அதன் அழகை மெருகூட்டுகின்றது. ஹட்டாவில் தான் எமிரேட்டின் மிகப்பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் பிற பாலைவன வளைகுடா நாடுகளை போலன்றி, எமிரேட்கிழக்கு பகுதியில் விவசாயம் நடக்கிறது. அதற்கு நீர்பாசன வசதி இந்த அணை மூலம் கிடைக்கிறது.
ஐக்கிய அரபு இராச்சியங்கள் ஏழு எமிரேட்களை சேர்த்து உருவானது. அந்த ஏழும் சில சுயநிர்ணய உரிமைகளுடன் ஒன்றிணைந்து ஒரே தேசமாக இயங்குகின்றன. ஒவ்வொரு எமிரேட்டுக்கும் ஒரு ஷேக் அரசியல்/நிர்வாக தலைவராக உள்ளார். ஷேக் என்பது மன்னரை குறிப்பதல்ல. பண்டைய இஸ்லாமிய அரசியல் அமைப்பின் படி ஒவ்வொரு பிரதேசத்திற்கும், ஷேக் என்ற ஒருவர் நிர்வாகத் தலைவராக தெரிவு செய்யப் பட்டு, அரசியல் நிர்வாக அதிகாரம் வழங்கப் பட்டது. ஐரோப்பியரின் வருகைக்கு பிறகு, அதுவும் எண்ணை வளம் கண்டுபிடிக்கப் பட்ட பிறகு தான் இந்த ஷேக்குகள் எல்லாம் கோடீஸ்வரர்களாக, குறுநில மன்னர்கள் போல மாறினார்கள். அபுதாபி, அதிக வருவாய் கொண்டதால், அது தலைநகரம் ஆகி விட்டது. அபுதாபி ஷேக், காலம் சென்ற சையிது, தேசத் தந்தை போலே ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளார். அவரது ஆளுயர உருவப் படங்கள் எமிரேட் எங்கும் காணலாம். அது மட்டுமல்ல, அவருக்கு சொந்தமான பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட ஆடம்பர மாளிகைகள், ஒவ்வொரு நகரிலும் உள்ளது. இராக்கில் சதாம் உருவப்படங்களை, மாளிகைகளை, கேலி செய்த சி.என்.என். போன்ற மேற்கத்தைய ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாதது வியப்புக்குரியது. அபுதாபி, துபாய் மட்டுமே எண்ணை வளம் காரணமாக, பணக்கார எமிரேட்களாக உள்ளன. அவை புஜைரா போன்ற எண்ணை இல்லாத "வறிய" எமிரேட்டுகளுக்கு நிதி உதவி செய்து முன்னேற்றி வருகின்றன. சட்டங்கள் கூட ஒவ்வொரு எமிரேட்டுக்கும் மாறுபடும். துபாய் மேலைத்தேய நாடுகளை போல தாராளவாத கொள்கையை கடைபிடிகின்றது. அங்கே இரவு களியாட்ட விடுதிகள், மதுபான சாலைகள், ஏன் விபசாரத்துக்கு கூட சுதந்திரம் வழங்கப் பட்டுள்ளது. துபாய் அருகிலேயே இருக்கும் ஷார்ஜா என்ற இன்னொரு எமிரேட் இதற்கு மாறாக, மத ஒழுக்க கட்டுபாடுகளை கடுமையாக கடைப் பிடிக்கின்றது. அங்கே மதுபானம் போன்றனவற்றிகு முற்றாக தடை. அபுதாபி ஓரளவு சுதந்திரமும், ஓரளவு கட்டுபாடுகளையும் கொண்டுள்ளது. இதனால் உல்லாச பிரயாணிகளையும், வர்த்தக நோக்கோடு வருபவர்களையும் துபாய் மட்டுமே கவர்வது வியப்புக்குரியதல்ல.

7/29/08

கியூபா, கம்யூனிசம் நிரந்தரம்


பிடல் காஸ்ட்ரோ கடும்சுகவீனமுற்று அரசியலை கை விட்டு விட்டு ஆஸ்பத்திரியில் தஞ்சமடைந்திருந்த நேரம். கியூபாவின் நீண்ட கால ஆட்சித்தலைவர் மரணப்படுக்கையில் விழுந்து விட்டார். காஸ்ட்ரோவிற்கு பின் கியூபா , ஜன நாயகத்திற்கும், சுதந்திரத்திற்கும் கதவுகளை திறந்து விடும், என்று மேற்கத்திய ஊடகங்கள் ஆருடம் சொல்லிக் கொண்டிருந்த நேரம். இப்படி ஒரு திருப்புமுனையை வெளிஉலகம் எதிர்பார்த்திருந்த நேரம் தான், எனது கியூபா பயணம் அமைந்தது. ஏற்கனவே பல்வேறு அரசியல் சார்புடையவர்களின் பரிச்சயம் இருந்தாலும் , தினந்தோறும் வந்து குவியும்
ஆயிரக்கணக்கான உல்லாச பிரயாணிகளில் ஒருவனாக நானும் போயிருந்ததால் இந்த கியூபா பயணக்கட்டுரை ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையிலேயே விரிகின்றது.

"வரதேரோ" தலைநகர் ஹபனவில் இருந்து 100 கி.மி. கிழக்கே உள்ள குடாநாடு. அங்கே அழகான நீண்ட கடற்கரை ஓரமாக கட்டப்பட்டுள்ள நட்சத்திர ஹோடேல்களில் தான், குறிப்பாக மேற்கைரோபிய மற்றும் கனடாவில் இருந்து வரும் உல்லாசபிரயாணிகள் தங்கவைக்கப்படுகின்றனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர், அன்னிய செலவாணியை ஈட்டும் நோக்குடன் ஆரம்பிக்கபட்ட உல்லாச பிரயாண துறை வருடம்தோறும் ஈட்டும் நிகர லாபம் அதிகரித்து கொ
ண்டே போகின்றது.

மேலைத்தேய முகவர்களால் அனுப்பப்படும் வாடகை விமானங்களே பெரும்பாலும் வரதேரோ விமானநிலையத்தில் வந்திறங்குகின்றன. விசா விதிகள் தளர்த்தப்பட்ட போதிலும், பயணிகள் அனைவரும் டிஜிட்டல் படம் எடுத்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வெளியே "கியூபா டூர்" (Cubatour) என்ற அரசாங்க நிறுவன பேருந்து வண்டிகள் ஹோடேல்களுக்கு அழைத்து செல்ல காத்து நின்றன. விமானநிலையத்தில் இருந்து ஹோட்டல் வரையிலான அரை மணி நேர பயணத்தில், வழியில் எந்தவொரு விளம்பர தட்டியையும் காணமுடியவில்லை. அதற்கு மாறாக, "புரட்சியை தொடர்வோம்" போன்ற வாசகங்களே கண்ணில் பட்டன.

வரதேரோ நகரிற்கு அருகில் வாழும் கியூபா மக்கள் பெரும்பாலும் உல்லாசபிரயான துறையில் தொழில் புரிகின்றனர். இவர்கள் பிற தொழிலாளரை விட அதிக சம்பளம் எடுத்து சற்று வசதியாக வாழ்கின்றனர். இருப்பினும் அவர்களது சம்பளம் அரசால் மட்டுப்படுத்த பட்டிருப்பதால்; டிப்ஸ் பணம், சில்லறை வியாபாரம், அல்லது விபச்சாரம்(தடை செய்யபட்டுள்ளது) ஆகியவற்றில் ஈடுபடுவோர் மட்டும் அதிக வருமானம் ஈட்டுகின்றனர். உல்லாசப் பிரயாணிகளின் வருகையின் பின்னர், ஓரளவு வசதிபடைத்த வர்க்கம் உருவாகியுள்ளது. பிற முதலாளித்துவ நாடுகளின் வர்க்கநிலையோடு ஒப்பிடமுடியவிட்டாலும், இருவேறு
சமுக படிநிலை இருப்பது புலனாகும்.

Cuba வருபவர்கள் எல்லோரும் "பெசொவிற்கு மாற்றீடன நாணயம்" (Pesos Convertibles) என்றளைக்கபடும் நாணயத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இது கியூபாவின் தேசிய நாணயமான பெசோ அல்ல! பெறுமதி குறைந்த அதை கியூபா பிரசைகள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். (25 peso = 1 peso convertible). இந்த மாற்று peso அமெரிக்க டாலரின் பெறுமதிக்கு இணையானது. அதாவது சர்வதேச வர்த்தகத்திற்கு தேவைப்படும் அமெரிக்க டாலர்களை பயன்படுத்து
வதற்கு பதிலாக, இந்த peso நாணயதாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. ஏனெனில் நாம் ஒரு அமெரிக்கா டாலரை வங்கி அன்னிய நாட்டில் வைத்திருக்கும் பட்சத்தில், அமெரிக்கா மத்திய வங்கி இன்னொரு டாலரை அச்சடித்து புழக்கத்தில் விடுகின்றது. பொருளாதாரத்தில் நாணயத்தின் பெறுமதி மட்டுமே முக்கியம் என்பதால், கியூபா மக்கள் இந்த peso convertible ஐ "கியூபா டாலர்" என்று அழைகின்றனர்.

கியூபாவில் சாதாரண தொழிலாளர்கள் சுமார் 200 peso சம்பளம் பெறுகின்றனர். அதாவது 8 அமெரிக்கா டாலர்கள். உல்லாசபிரயான துறையில் வேலை செய்வோர் 350 peso சம்பளம் பெறுகின்றனர். அனைத்து தொழிலாளரும் அரசாங்க ஊழியர்கள் என்பதால் அதிகம் சம்பாதிக்க வாய்ப்பு இல்லை. Joint Venture எனப்படும், வெளிநாட்டு நிறுவனங்களுடன், பங்கு போட்டு நிர்வகிக்கப்படும் ஹோடேல்களில் மாத்திரம் 450 peso சம்பளம் வழங்கப்படுகிறது.

இந்த நிறுவனங்கள் யாவும் 1990க்கு பிறகு வந்தவை. சோவியத் உதவி கிடைப்பது நின்று விட்ட காலத்தில், வர்த்தக கூட்டாளிகள் இன்றி தனிமைப் பட்ட கியூபா பொருளாதாரம் வீழ்ந்து கொண்டிருந்த காலம் அது. கம்யுனிசத்தை கைவிட விரும்பாமல், அதேநேரம் முதலாளித்துவத்தை தழுவ விரும்பாமல், இறுதியில் Joint Venture திட்டத்திற்கு சம்மதித்தது. அமெரிக்கா தவிர்ந்த, கனடிய மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் உல்லாசபிரயான துறையில் முதலீடு செய்ய முன்வந்தன. கடற்கரையோரமாக கட்டப்பட்ட ஹோடேல்களில், கியூபா அரசாங்கம் 51% பங்குகளையும், அன்னிய நிறுவனங்கள் 49% முதலீடு செய்தன. கிடைக்கும் லாபத்தை இந்த வீதப்படியே பிரித்து கொண்டன. இந்த ஒப்பந்தம் குறிப்பிட்ட வருடங்களே செல்லும். இதனால் தற்போது 10 வருடங்களுக்கு பின்பு பல ஹோட்டல்கள் கியூபா அரசாங்கத்தின் சொந்தமாகி வருகின்றன.

அன்னிய நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் 450 peso வுக்கு மேலே போகக்கூடாது. அப்படி போனால் மிகுதி தொகையை கியூபா அரசாங்கம் பிடித்துகொள்ளும். அப்படி எடுக்கும் பணம் பிற சேவைத் துறைகளில் பயன்படுத்த படுவதாக அரசாங்கம் கூறுகின்றது. இருப்பினும் நாட்டில் பிறரை விட அதிகமாக சம்பாதிக்கும் வசதிபடைத்த வர்க்கத்தை உருவாக விடாமல் இது தடுக்கின்றது. இதனால் சமத்துவம் ஓரளவுக்கேனும் பேணப்படுகின்றது. இருப்பினும் உயர்ந்து வரும் வாழ்கை செலவை ஈடுகட்ட போதுமானதாக சம்பளம் இல்லை.

உல்லாசப் பிரயாணிகள் தமது செலவுகளுக்கு உயர்ந்த விலைகளை (திறந்த பொருளாதாரம் இல்லாததால், அரசாங்கம் விரும்பியபடி விலை நிர்ணயிக்கின்றது) கொடுக்க வேண்டியிருப்பதால், கிடைக்கும் லாபத்தில் பெரும் பகுதி காஸ்ட்ரோ குடும்பத்திற்கு போவதாக முறையிடுகின்றனர். அங்கே மேலைத்தேய பாணி பல்பொருள் அங்காடிகள் உள்ளன. தேவையான எல்லாம் அங்கே கிடைகின்றன. உண்மையில் விலைகள் செயற்கையாக, அமெரிக்காவை விட அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

காஸ்ட்ரோவின் கியூபா அரசாங்கத்தை ஊழல் ஆட்சி என்று குறை கூறுபவர்கள், இன்னொரு பக்கத்தை பார்ப்பதில்லை. பொதுமக்களுக்கு அத்தியாவசியமான சேவை துறைகளான வைத்தியம், கல்வி, போக்குவரத்து ஆகியன பெருமளவு நிதியை வேண்டி நிற்கின்றன. மேலும் ஊழலை தடுக்கும் நோக்கில் பாராளுமன்ற, நகர சபை உறுப்பினர்கள், பிற அரச அதிகாரிகள், இராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கு, சாதாரண தொழிலாளரை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது. மேற்பட்ட துறைகளில் வேலை செய்வோர் உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. ஆனால் தேசத்திற்கு முக்கியமானவர்க
ள். இவற்றை விட ஐ.எம்.எப்., உலகவங்கி போன்ற எதுவும் கடன் வழங்குவதில்லை, என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டும். நீண்ட காலமாக இருந்த எண்ணெய் பற்றாக்குறை, தற்போது சாவேசின் வெனிசுவேலாவின் நட்பினால் ஈடுகட்டப்படுகின்றது.

நாம் நின்ற இடத்திலிருந்து பல சுற்றுலாக்கள் "கியூபா டூர்" றினால் ஒழுங்கு பண்ண படுகின்றது. இது ஒரு அரச நிறுவனம். அதிலே வேலை செய்பவர்கள் அனைவரும் அரச ஊழியர்கள். முதலில் மூன்று நகரங்களின் சுற்றுலா, என்றழைக்கப் படும் "சாண்டியாகோ ", "டிரினிடாட் ", "சாந்த கிளாரா" போன்ற நகரங்களை பார்க்க போனோம். சாண்டியாகோ, டிரினிடாட் என்பன காலனிய கால நகரங்கள். சாந்த கிளாரா மாபெரும் புரட்சியாளர் சே குவேராவினால் பிரபலமானது. கியூபாவின் கிழக்கு பகுதியில் இருந்து தனது ஆயுத போராட்டத்தை தொடங்கிய புரட்சிப் படை, மத்தியில் இருக்கும் சாந்த கிளாரா வந்து சேர்ந்த போது வெற்றி உறுதியானது. அங்கே தற்போது சே குவேரவிற்கு நினைவாலயம் கட்டப்பட்டுள்ளது.

அங்கே பொலிவியாவில் கொல்லப் பட்ட சேயினதும், அவரது தோழர்களினதும் எலும்புகள் பாதுகாக்கப் படுகின்றன. மேலும் சே யின் வரலாற்றை கூறும் புகைப் படங்கள், பாவித்த உபகரணங்கள் என்பன காட்சிப் படுத்தப் பட்டுள்ளன . அந்த இடத்தினுள் மட்டும் படம் எடுக்க அனுமதி இல்லை. வெளியில் சே யின் சிலை இருக்கும் மைதானத்தில் சில பேரணிகளும், காஸ்ட்ரோவின் உரையும் இடம் பெரும்.

கியூபா தலைநகர் ஹவானா போகாமல், சுற்றுலா பூர்த்தியடையாது . அது இன்னொரு காலனிய காட்சிகூடம். நகரின் மத்தியில் கியூபாவின் 19 ம் நூற்றாண்டு தேசிய போராட்ட வீரர், "ஹோசே மார்ட்டி" யின் உருவசிலையும் அதனோடு உயர்ந்த கோபுரமொன்றும் கட்டப்பட்டுள்ளது. அதற்கு முன்னால் பரந்து விரிந்த மைதானத்தில் தான் கியூபா தேசிய தினம் மற்றும் மே தினம் போன்ற நாட்களில் மாபெரும் பேரணிகள் இடம் பெறும். இந்த மைதானத்திற்கு எதிர் பக்கத்தில் உள்ள அமைச்சு கட்டிட சுவரில் மிகப் பெரிய சே யின் முகம் காணப் படுகின்றது.


கியூபா மக்கள் காஸ்ட்ரோவை பற்றி சில வேளை குறை சொன்னாலும் சே பற்றி நல்லதாக தான் சொல்வார்கள். மேலும் அர்ஜென்டினாவில் பிறந்து தமது நாடு விடுதலைக்காக போராடிய சே பற்றி உயரிய மதிப்பு வைத்திருக்கிறார்கள். இதனால் கியூபாவில் காணும் இடமெல்லாம் சே யின் உருவப் படங்கள் காட்சி தருகின்றன. பாடசாலைகளில் மாணவர்கள் சே போல வாழ்வோம் என்று உறுதிமொழி எடுக்கிறார்கள். கியூபா விற்கு ஆரம்ப காலத்தில் அதிகம் வந்த உல்லாச பிரயாணிகள் இடதுசாரிகள். இதனாலும் சே படம் பொறித்த டி- சேர்ட்கள் , கை பைகள், பிற நினைவு சின்னங்கள் என்று வியாபாரம் களை கட்டுகிறது. இதை தவிர "ஹவான கிளப்" என்ற ரம் உலகப் புகழ் பெற்றது. அரச நிறுவனமான அது மில்லியன் கணக்கில் அன்னிய செலாவணியை ஈட்டி தருகின்றது. அது போல பெருமளவு லாபம் பெற்று தரும் கியூபா சுருட்டுகள் உற்பத்தி இப்போதும் முன்னணியில் இருக்கிறது. உலகில் சிறந்த சுருட்டுகள் என்று பெயர் பெற்ற அவை, முன்னால் அமெரிக்கா ஜனாதிபதி கென்னடியினதும் மனம் கவர்ந்திருந்தது. இதனால் தானே கியூபா மீது பொருளாதார தடை போட்டு விட்டு, தானே பழக்கத்தை விட முடியாமல் கஷ்டப் பட்டாரம். வீதியில் உல்லாச பிரயாணிகளிடம் சட்ட விரோதமாக சிலர் சுருட்டுகளை விற்கிறார்கள். இவற்றின் தரம் கேள்விக்குரியது.
பொது மக்கள் சில வியாபார முயற்சிகளை செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. உல்லாச பிரயாணிகளுக்காக நினைவு பொருட்களை விற்கும் கடைகள், சிற்றுண்டி விடுதிகள், டாக்சி ஓடுதல், மற்றும் வீட்டு அறையை வாடகைக்கு விடுதல் போன்றவற்றை செய்யலாம். அனால் இவற்றில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வேலை செய்யலாம். இத்தகைய முயற்சிகளால் கிடைக்கும் வருமானம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தொழில் புரியும் உறவினர்கள் அனுப்பும் பணம் என்பனவற்றால், சில கியூபா மக்களின் வாழ்கை தரம் உயர்ந்துள்ளது.
கியூபா பொருளாதாரம் எப்போதும் ஒரேமாதிரி இருந்ததில்லை. முன்பு சோவியத் யூனியனின் உதவி கிடைத்து வந்த காலத்தில் மக்கள் வசதியாக வாழ்ந்து வந்தனர். அது ஒரு பொற்காலம் என்று கூறலாம். பின்னர் கம்யூனிச நாடுகள் இல்லாமல் போய் எந்த வித வர்த்தக தொடர்பும் இல்லாத காலத்தில், பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்தது. வறுமையில் இருந்து தப்ப மக்கள் தோணிகளில் கடல் கடந்து அமெரிக்கா போய் கொண்டிருந்தனர். உல்லாச பிரயாணிகளின் வருகை, ரம், சுருட்டு போன்றவற்றை சர்வதேச சந்தையில் விற்க கூடியதாகவிருந்தது, மேலும் புதிதாக கிடைத்த சில நாடுகளின் வர்த்தக உறவுகள் போன்றவற்றால்; பொருளாதாரம் ஸ்திரப் படுத்த பட்டு, தற்போது வளர்ந்து வருகின்றது.
இருப்பினும் அமெரிக்கா இன்னமும் பொருளாதார தடையை கடை பிடிப்பதும், அதை மீறும் நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய முடியாது என்ற சட்டத்தையும் மீறி பல நாடுகள் உறவை ஏற்படுத்தி வருகின்றன. நாட்டினுள் நிலவும் தட்டுபாடுகளுக்கு கியூபா அரசாங்கம் எப்போதும் இந்த பொருளாதர தடையையே குற்றம் கூறி வருகின்றது. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கியூபா மக்களுக்கு வழங்கப்படும் இலவச கல்வி, இலவச மருத்துவம் என்பன் இன்றும் தொடர்கின்றன.
மூன்றம் உலக நாடான கியூபா வில் குழந்தை இறப்பு விகிதம் குறைவு என்பதும், இது மேற்கத்தைய நாடுகளுக்கு இணையானது என்பதும் குறிப்பிடத்தக்கது. வீட்டு வாடகை கூட மிக குறைவே. மக்களின் போக்குவரதிற்கென அதிக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ் வண்டிகள், சைகிள் உற்பத்தி என்பனவற்றை அரசாங்கம் ஊக்குவிக்கின்றது. மேலும் கார் வைத்திருப்போர் போகும் வழியில் பிறரையும் ஏற்றி செல்லுமாறு வற்புறுத்த படுகின்றனர்.
நாட்டை தற்போதும் கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டு வருகின்றது. ஊராட்சி மட்டத்தில், "புரட்சியை பாதுகாக்கும் கமிட்டி " என்னும் அமைப்பு பல்வேறு அரசியல் பொருளாதார முடிவுகளை எடுக்கின்றது. இதில் வீட்டுக்கு ஒருவராவது வருகை தருவதும் கருத்து கூறுவதும் கட்டாயமாக்க பட்டுள்ளது. ஊராட்சி மற்றும் பிராந்திய சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவோர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டிய கட்டாயமில்லை.
கம்யூனிஸ்ட் கட்சியை விட, பிற கட்சிகள் இயங்குவது தடை செய்ய பட்டுள்ளது. பொது மக்கள் அது குறித்து அதிகம் அலட்டி கொள்வதாக தெரியவில்லை. (வெளிநாட்டினர் மட்டுமே கவலைபடுகின்றனர்) அவர்களை பொறுத்த வரை இருக்கும் அரசாங்கம் தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தால் போதுமானது. கியூபா மக்களும், பிறரை போல உணவு, உடை, உறையுள் இவை குறித்து மட்டுமே அதிகம் கவலைபடுகின்றனர். அவர்களும் உலகில் பிற நாடுகளில் நடப்பதை அவதானிக்கின்றனர். வீடுக்கு வீடு வாசல் படி போல பிற நாடுகளில் இருக்கும் பிரச்சினைகளுடன் ஒப்பிடும் போது தமது நாடு பரவாயில்லை என்று பெரு மூச்சு விடுகின்றனர். மக்களின் இத்தகைய மன ஓட்டத்தை புரிந்து கொள்ளததாலேயே அமெரிக்கா போன்ற நாடுகள், கியூபா மக்கள் "ஜனநாயக விடுதலை" க்காக காத்திருப்பதாக மாயையை தோற்றுவித்து வருகின்றனர்.
காஸ்ட்ரோ மரணமடைந்தால், அமெரிக்கா படை எடுக்கலாம் என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் உள்ளது. அப்படி நடந்தால் கியூபா இராணுவமும் எதிர்த்து சண்டை பிடிக்கும், பெரும் போர் மூளும் என்று எம்மோடு கதைத்த மக்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். "நீங்கள் எமது நாட்டிற்கு வந்தால், நாங்கள் உமது நாட்டிற்கு வருவோம்." என்று கியூபா அரசாங்கம் முன்பிருந்தே அமெரிக்காவிற்கு எதிராக பேசி வருகின்றது.
அமெரிக்காவிற்கு அருகில் ஒரு சின்னஞ்சிறு நாடாக இருந்து கொண்டு, ஒரு சர்வதேச வல்லரசை எதிர்த்து பேசும் துணிவு உலகில் வேறு பல பெரிய நாடுகளுக்கே கூட இல்லை. ஹவானா நகர தெருக்களில் இப்போதும் அமெரிக்கா ஜனாதிபதி புஷ் ஐ டிரகுலவாக ( போர் வெறியனாக ) சித்தரிக்கும் விளம்பரதட்டிகள் வைக்க பட்டுள்ளன. அமெரிக்கா கியூபா மீது இராணுவ நடவடிக்கை எடுக்கததற்கு பல காரணங்கள் கூறபடுகின்றன. குருஷேவின் அணு ஆயுத சர்ச்சை ஏற்படுத்திய பாதுகாப்பு ஒப்பந்தம் தொடக்கம், ஈராக் போர் வரை எத்தகைய காரணம் இருந்தாலும், கியூபா உலகில் தனது தனித்துவத்தை தொடர்ந்து பேணி வருகின்றது.

7/28/08

இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது

"பாசிசத்தை தோற்கடித்தோம், கொம்யுனிஸத்தை தோற்கடித்தோம், தற்போது இஸ்லாமிய சித்தாந்தம் ஆதிக்கம் செலுத்த வருகின்றது." இவ்வாறு முடிகிறது ஒல்லாந்து தீவிர வலதுசாரி பாரளுமன்ற உறுப்பினர் வில்டர்ஸ் தயாரித்த "பித்னா" என்ற இஸ்லாமிய எதிர்ப்பு விவரணப் படம். படத்தின் இறுதிக்காட்சியில் குர் ஆன் புத்தகத்தின் பக்கத்தை ஒரு கை கிழிக்க போவதாக காட்சி வரும். கமரா இருட்டை நோக்கி நகர, பின்னணியில் கடதாசி கிழிக்கும் சத்தம் கேட்கும். பின்னர் "அப்படி கிழிக்கப்பட்டது ஒரு டெலிபோன் புத்தகம், குர் ஆனின் பக்கங்களை கிழிக்கும் பொறுப்பை முஸ்லிம்களிடமே விட்டு விடுகிறேன்." என்று ஒரு குரல் சொல்லும். இது வில்டர்ஸ் முன்பே கூறிய, குர் ஆனின் அரைவாசி பக்கங்கள், மனிதநேயத்திற்கு விரோதமான கருத்துகளை கொண்டிருப்பதால், கிழித்தெறிய வேண்டும், அந்த நூலையே தடை செய்ய வேண்டும், என்ற சர்ச்சையை நினைவு படுத்துகிறது. (ம்ம்ம்.... படத்திலேயே குர் ஆனை கிழிக்க வில்டர்சுக்கு தைரியமில்லை. )

நீண்ட காலமாக இஸ்லாமிய எதிர்ப்பு படம் தயாராகிறது, என்று நெதர்லாந்தில் மட்டுமல்ல, சர்வதேச மட்டத்திலும், ஆர்வமாய் எதிர்பார்க்கப் பட்ட பித்னா, இண்டர்நெட்டில் வெளி வந்த அடுத்த நாளே, "அட, இவ்வளவு தானா?" என்று கேட்க வைத்து விட்டது. "இதெல்லாம் நமக்கு ஏற்கனவே பரிச்சயமான தொலைக்காட்சி ஒளிப்படங்கள், புதிதாக ஒன்றும் இல்லை, என்று முஸ்லிம்கள் கூறி விட்டனர். படம் வெளியானவுடன், உலகமெங்கிலும் இஸ்லாமிய நாடுகளில் கலவரங்கள் உண்டாகும், (வில்டர்சின் கூற்றில்) "காட்டுமிராண்டி முஸ்லிம்கள்" நெதர்லாந்து தூதுவராலயங்களை உடைத்து நொறுக்கி, கொளுத்துவார்கள். அதன் எதிரொலியாக, ஆத்திரமடையும் வெள்ளையின நெதர்லாந்து மக்கள் தந்து கட்சிக்கு வாக்குகளை அள்ளி வழங்குவார்கள். தான் அடுத்த பிரதமர் ஆகி விடலாம், என்றெல்லாம் வில்டர்ஸ் கனவு கண்டிருக்கலாம். ஐயோ பாவம், எதுவுமே நடக்கவில்லை. யாருடனும் நேரடி விவாதத்திற்கு போகாத வில்டர்ஸ், பாராளுமன்றத்தில் பல்வேறு கண்டனக் கணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. அவரின் பின்விளைவுகளை எண்ணிப்பார்க்காத வேலைகள், சமூகத்தை பிளவு படுத்துவன , யதார்த்தங்களை எதிர்நோக்க துணிச்சலற்றவர், பக்க சார்பானவர், என்றெல்லாம் சக பாரளுமன்ற உறுப்பினர்கள் பொரிந்து தள்ளினர். அதற்கு பதிலளித்த வில்டர்ஸ், தான் மட்டுமே துணிச்சலுடன் "இஸ்லாமிய அபாயத்தை" எதிர் கொள்வதாக தெரிவித்தார்.

பித்னா படத்தில், நெதர்லாந்தில் வருடந்தோறும் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். "ஒருகாலத்தில் முஸ்லிம்கள் நாட்டில் பெரும்பான்மையாக வரப்போகிறார்கள், வெள்ளையின ஒல்லாந்து காரர்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையாக போகின்றனர்." என்ற இனவாத கற்பனை, ஏற்கனவே பல தீவிர வலதுசாரிக் குழுக்கள் முன்னெடுக்கும் பிரச்சாரம். அவர்கள், "முஸ்லிம்களையும் (அதற்குள்ளே வெள்ளையின கிறிஸ்தவர்கள் அடங்க மாட்டார்கள்), கறுப்பர்களையும் (அதற்குள்ளே கறுப்பின கிறிஸ்தவர்களும் அடங்குவர்) நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும், என்று பிரச்சாரம் செய்கின்றனர். வில்டர்சின் பிரச்சாரம், வெறுமனே முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. அது அனைத்து மூன்றாம் உலகை சேர்ந்த குடியேறிகளுக்கும் எதிரானது. அப்படி இல்லாவிட்டால் ஏன் வில்டர்ஸ் அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தில், "சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம்." என்ற முதலாவது வாக்கியத்தை மாற்ற வேண்டும் என்று கூறி சர்ச்சை கிளப்ப வேண்டும்?

பாசிசம், கம்யூனிசம், இஸ்லாம் எல்லாம் "தீய சித்தாந்தங்கள்" என்று கூறும் வில்டர்ஸ், தனது சித்தாந்தமான லிபரலிசம் பற்றி எதுவும் கூறாதது ஏன்? இல்லை...அவரது கூற்றுப்படியே, அது "சுதந்திரம்" என்று வைத்து கொள்வோம். தனது பித்னா படத்தை தடை செய்தால் அது கருத்து சுதந்திரத்தை மீறும் செயல் என்று கூறும் வில்டர்ஸ், எவ்வாறு குர் ஆன் தடை செய்யப் பட வேண்டும் என்று கோரலாம்? அது கருத்து சுதந்திரத்தை மீறும் செயலாகாதா? கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு இயங்கலாம் , ஆனால் இஸ்லாமிய பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும் என சொல்வது தான் சுதந்திரமா? நாட்டில் மொத்த சனத்தொகையில் ஒரு வீதமேயான முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வரப்போகிறார்கள் என்று சிறு பிள்ளைக்கு சொல்வதைப் போல பூச்சாண்டி காட்டுகிறார். இஸ்லாமிய முறைப்படி உடை அணிந்தவர்களை சுட்டிக் காட்டும் அதேநேரம், நவ நாகரீக உடையணியும் பெரும்பான்மை முஸ்லிம்களை ஏன் மறைக்க வேண்டும்? தீவிரவாத முஸ்லிம்களுக்கு எதிராக, மிதவாத முஸ்லிம்களுடன் கூட்டுச் சேர்வதை விட்டு விட்டு, அனைத்து முஸ்லிம்களையும் எதிரிகளாக காட்டுவதால், சமூகம் இரண்டாக பிளவு படாதா? இந்தக் கேள்விகளுக்கு வில்டர்ஸ் போன்றவர்களிடம் பதில் இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் குறுகிய அரசியல் லாபங்கள்.

இவர்கள் தான் அப்படியென்றால், சில முன்னால் முஸ்லீம் புத்திஜீவிகளின் தற்புகழ்ச்சி தேடி அடிக்கும் ஸ்டன்ட்கள் வேறு எங்கள் நிம்மதியை கெடுக்கின்றன. இஸ்லாமிய நாடுகளில் பிறந்து வளர்ந்து, பின்னர் மேற்கு ஐரோப்பா வந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, இஸ்லாமிய மதத்தில் உள்ள குறைகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு மதத்தை சீர்திருத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதனை தமது சொந்த நாட்டில் இருந்து, அம் மக்களுக்கு சொல்ல வேண்டும். அதை விட்டு, மேற்கு ஐரோப்பாவில் இருந்து கொண்டு இவர்கள் இஸ்லாமை விமர்சித்து கூறும் கருத்துகளை, இங்குள்ள ஊடகங்கள் மட்டுமே பெரிதாக தூக்கிப் பிடிக்கின்றன. அதனை தமது இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துகின்றன. இந்த "முன்னால் முஸ்லீம்" புத்திஜீவிகளும், தமக்கு ஊடக பிரபல்யம் கிடைப்பதற்காக, இருந்திருந்து எதாவது அதிரடிக் கருத்துகள் கூறிக் கொண்டிருப்பார்கள். சோமாலியாவை சேர்ந்த ஹிர்சி அலி(பாரளுமன்ற உறுப்பினர்), ஈரானை சேர்ந்த எலியான் (சட்ட விரிவுரையாளர்) ஆகியோர் குறிப்பிடத்தக்க பிரபலத்தை தேடிக்கொண்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது ஈரானை சேர்ந்த எஹ்சன் ஜாமி புதிய வரவு. இவர் தற்போது மத நம்பிக்கையற்ற பிற நண்பர்களை சேர்த்து "மாஜி முஸ்லிம்கள் சங்கம்" ஒன்றை அமைத்து, இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் நடத்தி வருகிறார். ஜாமி தற்போது ஒரு அதிரடித் தகவலை கொடுத்து, எம்மை மீண்டும் ஒரு த்ரில் அனுபவத்திற்கு உட்படுத்த பார்க்கின்றார். முஸ்லிம்களின் இறைத்தூதர் முகமது பற்றி ஒரு முழு நீள கார்டூன் படம் தயாரித்திருக்கிறாராம். அதில் முகமது தனது ஒன்பது வயது மனைவியான ஆயிஷாவை, ஒரு மசூதிக்குள் கூட்டிச் சென்று கன்னி கழிப்பதாக, ஒரு காட்சி வருகின்றதாம். இறைதூதரின் உருவப்படத்தை வரைவதே கலவரத்தை உண்டாக்கும் என்ற நிலைமையில், மேற்படி காட்சி பற்றி கூற வேண்டியதில்லை. இந்த தகவலை தொடர்ந்து, ஜாமிக்கு ஈரானில் இருந்து உயிர் அச்சுறுத்தல் வந்த போதும், அது தனது கருத்து சுதந்திரம் கூறும் உரிமையை அச்சுருத்தாது என்றெல்லாம் கூறி வந்தார். தற்போது நெதர்லாந்து நீதி அமைச்சரின் கடுமையான எச்சரிக்கைக்கு பிறகு, அந்த கார்டூன் படத்தை வெளியிடும் திட்டம் கை விடப்பட்டுள்ளது. தற்போது பலர் பெருமூச்சு விட்டாலும், மீண்டும் எப்போது பூகம்பங்கள் வெடிக்கும் என்று கூற முடியாது.

நீங்கள் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் இருந்து வருகிறீர்களா? நீங்கள் பிறப்பால் முஸ்லிமா? இந்தத் தகுதிகளுடன், இஸ்லாமிய மதத்தை விமர்சித்து எதாவது எழுதினால், கூறினால், மேற்குலக ஊடகங்கள் உங்களை கண்டு கொள்ளும். தினசரி உங்களை பற்றிய தலைப்பு செய்திகள், பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் வரும். ஒரு சில நாட்களில் உலகப்புகழ் பெறலாம். உங்களைப் பற்றிய நூல்கள் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டித்தரும். இந்த பிரபல்யம் இஸ்லாமை தவிர வேறு மதங்களை விமர்சிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. ஊடகங்களுக்கு அவர்கள் மீது நாட்டமில்லை.

நெதர்லாந்தில் நியோ-லிபரிலிச சீர்திருத்தங்கள் காரணமாக எத்தனையோ பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. பொது மக்கள் அனுபவித்து வந்த சலுகைகள் குறைக்க படுகின்றன. மானியங்கள் குறைக்கப் படுகின்றன. வேலை வாய்ப்புகள் குறைகின்றன. வசிக்க வீடுகள் கிடைப்பது கஷ்டமாக இருக்கின்றது. விலைவாசி கூடிக் கொண்டே இருக்கின்றது. வாழ்க்கை செலவு அதிகரிக்கின்றது. இதனால் குடும்ப செலவுகளை சரிக்கட்ட கடன் வாங்கி, பின்னர் கடன் கட்ட முடியாமல் வீட்டை இழந்து தெருவுக்கு வரும் குடும்பங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இதன் விளைவு, நாட்டில் ஏழைகள் பெருகி வருகின்றனர். மறு பக்கத்தில் தஞ்சம் கோரும் அகதிகள் மனிதாபிமானமற்ற சட்டங்களால் அவல வாழ்வு வாழ நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். இது போன்ற பிரச்சினைகளை யாரும் படமாக தயாரிப்பதில்லை. அப்படியே எடுத்தாலும் ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை. ஒரு சில வருடங்களுக்கு முன்பு, அகதிகளின் உரிமைக்காக பாடுபட்ட ஒரு வெள்ளையின டச்சு சமூக ஆர்வலர், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அரசியல் படுகொலை என்று நிச்சயிக்கப் பட்ட இந்த சம்பவம், சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெறவில்லை. ஆனால் இஸ்லாமிய எதிர்ப்பு படம் எடுத்து கொலையுண்ட தேயோ வந்கோக் பற்றி ஊடகங்கள் உலகம் முழுக்க அறிவித்தன. நிலைமை இப்படியிருக்கையில், வில்டர்ஸ், ஜாமி, ஹிர்சி அலி போன்றவர்கள், இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொலை செய்யப் பட்டாலும் புகழ் பெறுவார்கள். அவர்களும் அதை தான் விரும்புகின்றனர். ஆகவே முதலில் ஊடகங்கள் இப்படியானவர்களின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அதுவே உலகை அழிவில் இருந்து மீட்பதற்கான முதல் படி.
முன்னைய பதிவு :

7/27/08

இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்


"இர்குன்", "ஹகானா" யூத பயங்கரவாத குழுக்களால் 1948 ல் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல் அண்மையில் 60 வது சுதந்திரதினத்தை கொண்டாடியது. 1946, ஜெருசலேம் நகரின் "கிங் டேவிட்" ஹோட்டேல் யூத பயங்கரவாத இயக்கமான இர்குனினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச ஊழியர்கள் உட்பட 90 பேர் மரணமடைந்தனர். அப்போது பாலஸ்தீனம் என்ற பெயரில் இருந்த பெருநிலம் பிரிட்டிஷ் பாதுகாப்பு பிரதேசமாகவிருந்தது. அரேபியர்கள் அதிகமாக வசித்த நாட்டில், புதிதாக யூத குடியேறிகள் ஆயிரக்கணக்கில் வந்திறங்குவதை, அன்றைய காலனியாதிக்க பிரிட்டன் விரும்பவில்லை. பல அகதிக்கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பாலஸ்தீனத்தில் மேற்குறிப்பிட்ட யூத தீவிரவாத இயக்கங்கள், பிரிட்டிஷ் இலக்குகள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டனர். அப்போது பிரிட்டன் அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது. இஸ்ரேல் விடுதலைப் போராட்டம் என்பது, ஒரு சில பயங்கரவாத இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் மட்டுமே என்பதும், பயங்கரவாதிகள் வெற்றிகரமாக இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கிக் காட்டினர் என்பதும் இன்று பலருக்கு ஆச்சரியமடைய வைக்கும் செய்தி தான். அதுமட்டுமா? முன்னாள் இர்குன் பயங்கரவாத தலைவர் தான் பின்னர் இஸ்ரேலின் முதல் பிரதமர் "மேனகிம் பெகின்" !

இஸ்ரேல் என்ற நாடு ஸ்தாபிக்கப்பட்டதும், மேலும் பல பயங்கரவாத தாக்குதல்கள், இம்முறை அரபு பொதுமக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டன. பல அரேபிய கிராமங்கள் இர்குன், மற்றும் ஸ்டேர்ன் கங் காடையர்களால் சுற்றிவளைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த வெறியாட்டம் பற்றிய செய்திகள் பிற அரபு கிராமங்களுக்கும் பரவவே, ஆயிரக்கணக்கான மக்கள், ஜோர்டானுக்கும், லெபனானுக்கும், எகிப்துக்கும் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். அப்படி இடம்பெயர்ந்த அரேபியரின் வீடுகள், நிலங்கள், ஐரோப்பாவில் இருந்து வந்த யூத குடியேறிகளுக்கு வழங்கப்பட்டன. இவ்வாறு இஸ்ரேல் என்ற தேசம், பாலஸ்தீனியர்களிடம் இருந்து திருடப்பட்ட நிலங்களின் மீது உருவானது. இதனால் தற்போதும் இஸ்ரேல் சுதந்திரதினம் கொண்டாடும் அதே காலத்தில், பாலஸ்தீனர்கள் "தேசிய பேரழிவு" என்று துக்கதினமாக அனுஷ்டிக்கின்றனர்.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரண்டு தேசங்களின் உருவாக்கத்திற்கு ஐ.நா. மன்றம் அனுமதி வழங்கிய போதும், அயல்நாட்டு அரேபியர்களின் படையெடுப்பை இஸ்ரேலிய படைகள் முறியடித்ததை சாட்டாக வைத்து, பாலஸ்தீன பிரதேசங்கள், இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. இன்று வரை தொடரும் இந்த ஆக்கிரமிப்பின் போது, மெல்ல மெல்ல அரபு நிலங்கள் அபகரிக்கப்படுவதும், அங்கே யூத குடியேற்றங்கள் உருவாவதும் 60 ஆண்டு கால தொடர்கதை. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட "அபார்ட் ஹைட்"(பிரித்து வைத்தல்) என்ற பாகுபாடு, இன்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நிலவுகின்றது. உதாரணமாக, இரண்டு அரபு கிராமங்களுக்கு இடையில் ஒரு யூத கிராமம் உருவாகும். அங்கே அனைத்து வசதிகளுடனும் நவீன குடியிருப்புகள் கட்டப்பட்டு, எங்கிருந்தோ வரும் யூத குடும்பங்களுக்கு வழங்கப்படும். அங்கேயே பாடசாலை, மருத்துவமனை போன்ற வசதிகளுடன், பிற இஸ்ரேலிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் என்பன, சர்வதேச சட்டங்களுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் பாதுகாப்புக்கு ஆயுதங்களையும் அரசாங்கமே கொடுக்கும். அதேநேரம் அரபு கிராமங்கள் கவனிப்பாரற்று பாழடைந்து செல்லும். பூர்வீக பாலஸ்தீன அரேபியர்கள், அயல் கிராம யூத விவசாயிகள் அடாத்தாக பறித்தெடுத்த நிலங்களில், அதாவது தமது சொந்த நிலங்களிலேயே கூலியாட்களாக வேலை செய்யும் பரிதாபம். குறைந்த ஊதியம் வழங்கி அவர்களின் உழைப்பை சுரண்டும், யூத கமக்காரர்கள் தமது உற்பத்திபொருட்களை ஏற்றுமதி செய்து அதீத லாபம் சம்பாதிக்கின்றனர். வேலையில்லா பிரச்சினை அதிகரித்தாலும், நகரங்களுக்கு வேலை தேடி செல்வதை, இஸ்ரேலிய படைகளின் வீதித்தடைகள் தடுக்கின்றன. மேலும் வரட்சி காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு, பாலஸ்தீன கிராமங்களை மட்டுமே வெகுவாக பாதிக்கின்றது.

மேற்குறிப்பிட்ட அவலநிலை தான் பல பாலஸ்தீன இளைஞர்களை தீவிரவாத இயக்கங்களை நோக்கி தள்ளும் காரணிகள். அவர்களை பொறுத்தவரை தினசரி அவமானப்பட்டு வாழ்வதை விட சாவது மேல் என்ற நிலைமையே, பல தற்கொலை போராளிகளையும் உருவாக்குகின்றது. மாறாக வெளியில் பிரச்சாரப்படுத்தப்படுவதை போல மூளைசலவை செய்யப்படுவதால் அல்ல. இந்த காரணிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாலேயே, இஸ்ரேல் கடந்த அறுபது வருட காலமாக முடிவுறாத யுத்தங்களுக்குள் தப்பிப்பிழைக்க வேண்டி உள்ளது.

மிக உன்னிப்பாக அவதானித்தால், ஐரோப்பிய காலனித்துவ ஆதிக்கம் இஸ்ரேல் என்ற வடிவில் 21 ம் நூற்றாண்டிலும் தொடர்வதை காணலாம். அதன் வரலாற்றை பார்த்தாலே புரியும். முதலாம் உலகயுத்த முடிவில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்த பாலஸ்தீனத்தில், மிகக் குறைந்த அளவு அரபு மொழி பேசும் யூதர்கள் வாழ்ந்து வந்தனர். அதே காலகட்டத்தில் ரஷ்யா, மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து கணிசமான அளவு யூத குடும்பங்கள் வந்து குடியேறி இருந்தன. அவர்கள் பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் இருந்து காணிகளை வாங்கி கூட்டுறவு முறையில் அமைந்த விவசாய கிராமங்களை உருவாக்கினர். அப்போது ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் கம்யூனிச சித்தாந்தம் செல்வாக்கு செலுத்தியதால், இந்த யூதர்களும் தமது மாதிரி கிராமங்களை கம்யூனிச அடிப்படையிலேயே உருவாக்கினர். அதாவது அங்கே கூட்டுறவு பண்ணைகளில் வேலை செய்த அனைவரும் சமமாக நடத்தப்பட்டனர். பண்ணை நிர்வாகிக்கும், தொழிலாளிக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட்டது. கிடைத்த லாபம் அனைவருக்கும் பங்கிட்டு கொடுக்கப்பட்டது. பெற்றோர்கள் வேலைக்கு போகும் நேரம், குழந்தைகள் போது காப்பகத்தில் பராமரிக்கப்பட்டனர். தற்போது இஸ்ரேலிய தேசிய நீரோட்டத்தில் கலந்த பிறகு, இந்த பண்ணைகள் யாவும் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு விட்டன. இத்தகைய பொதுவுடைமை மாதிரிக்கிராமங்களில் வாழ்ந்த யூதர்கள் இஸ்ரேல் என்ற தேசம், அபகரிக்கப்பட்ட மாற்றான் மண்ணில் உருவாக வேண்டும் என்று நினைக்கவில்லை. அதை நடைமுறைப்படுத்தியவர்கள் மேற்கு ஐரோப்பிய யூதர்கள்.

இரண்டாம் உலக யுத்தம் முடிந்து, ஹிட்லர் யூத மகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த கதைகள் உலகம் முழுவதும் அனுதாபத்தை தோற்றுவித்த நேரம், "சியோனிஸ்டுகள்" எனப்படும் யூத தேசியவாதிகள், மேற்குலக நாடுகளின் உதவியுடன் போரில் தப்பிய யூத அகதிகளை கப்பல்களில் ஏற்றிக்கொண்டு பாலஸ்தீனம் நோக்கி சென்றனர். அவர்கள் கண்ணில் இஸ்ரேல் தேசம் பற்றிய கனவு இருந்தது. ஆனால் அவர்கள் சென்ற இடம் யாருமே வாழாத வெறும் கட்டாந்தரையாக இருக்கவில்லை. அங்கே காலம்காலமாக வாழ்ந்து வந்த அரபு பாலஸ்தீன மக்களை அடித்து விரட்டியிருக்கா விட்டால், அவர்களின் நிலங்களைப் பறித்து யூதர்களை குடியிருத்தியிருக்காவிட்டால், அன்று இஸ்ரேல் என்ற தேசம் சாத்தியமாகியிருக்க மாட்டாது. ஏற்கனவே எமக்கு தெரிந்த உதாரணம் வரலாற்றில் உள்ளது. இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு கப்பல்களில் சென்ற ஆங்கிலேயர்கள், அங்கே பூர்வீக செவ்விந்தியரின் நிலங்களை பறித்து, அங்கே ஆங்கிலேய காலனிகளை உருவாக்கி, பின்னர் அவற்றை இணைத்து "அமெரிக்கா" என்ற தேசம் பிரகடனம் செய்தனர்