12/26/10

கொசோவோ: பயங்கரவாதமே வெல்லும்!

சமீபத்தில் சர்வதேச செய்திகளில் அடிபட்ட விடயம் கொசோவோ பொதுத் தேர்தல் பற்றியது. செர்பியாவிடம் இருந்து பிரிந்த குட்டி நாடான கொசோவோவின் சுதந்திரத்தை குறிப்பிட்ட சில மேலைத்தேய நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன. கொசோவோ பிரிவினைக்கு நேட்டோ படைகளின் இராணுவ பலம் மட்டுமல்ல, கொசோவோ விடுதலைப் படையின் (Ushtia Çlirimtare ë Kosovës) ஆயுதப்போராட்டமும் ஒரு காரணம். (கொசோவோ மக்களுக்கு யார் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்கள் என்று அவர்களே முரண்பட்டுக் கொள்வது வேறு விடயம்.)
கூட்டாக இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதால், KLA தலைவர் ஹாசிம் தாச்சி பிரதமராக வர வேண்டும் என்று நேட்டோ தலைமை எதிர்பார்த்தது. ஆனால் விதி வேறு விதமாக தீர்மானித்தது. சுதந்திர கொசோவோவில் நடந்த பொதுத் தேர்தலில், ஆயுதம் ஏந்தாத மிதவாத கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால் தீவிரவாத KLA ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தவறிய போதிலும், உண்மையான அதிகாரம் அவர்கள் கைகளில் இருந்தது. முன்னால் KLA போராளிகள், புதிய கொசோவோ போலிஸ் படையினராக மாற்றப்பட்டனர். என்ன வித்தியாசம்? சீருடை மட்டும் தான் மாறியது. கொசோவோ விடுதலைப் படை, கொசோவோ ஜனநாயகக் கட்சியாகியது.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ஹாசிம் தாச்சியின் கட்சி வெற்றியீட்டியதால், அவர் பிரதமராக தெரிவானார். முன்னை நாள் ஆயுதக்குழுவின் தலைவர், இன்று ஜனநாயக பாராளுமன்றத் தலைவரானார். ஆனால் ஆயுதப்போராட்ட கால அக்கிரமங்களின் ஊழ்வினைப்பயன் இன்னும் விரட்டுகின்றது. ஹாசிம் தாச்சியை ஒட்டு மொத்த கொசோவோ மக்களின் காவிய நாயகனாக கொண்டாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் கமிஷன் கூட, அவரை குற்றவாளி என்கிறது. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் கமிஷன் வெளியிட்ட அறிக்கை, ஹாசிம் தாச்சியின் இருண்ட மறுபக்கத்தை காட்டுகின்றது. Parliamentary Assembly of the Council of Europe (PACE) அமைப்பின் சுவிஸ் பிரதிநிதி வெளியிட்ட உண்மைகள், புதிய பிரதமரின் முகத்தில் கரியைப் பூசியது. "90 களில் இயங்கிய Drenica என்ற மாபியா கிரிமினல் குழுவின் முக்கிய புள்ளி, இன்றைய பிரதமர் ஹாசிம் தாச்சி.
கொசோவோ அல்பேனிய கிரிமினல்களைக் கொண்ட Drenica வின் முக்கிய தொழில், மனிதர்களைக் கடத்துவது, கொலை செய்வது, அவர்களின் உடல் உறுப்புகளை எடுத்து விற்பது. அநேகமாக இந்த கிரிமினல்களால் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி செர்பிய பொதுமக்கள். இந்த செய்திகள் எல்லாம் பத்து வருடங்களுக்கு முன்னமே செர்பிய ஊடகங்களில் வெளிவந்திருந்தன. ஆனால் மனித உரிமைகளின் காவலர்களான அமெரிக்காவும், ஐரோப்பாவும் அவற்றை அலட்சியப் படுத்தின. அன்று சர்வாதிகாரி மிலோசொவிச்சை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த ஹாசிம் தாச்சி மேற்குலகில் ஹீரோவாக பார்க்கப்பட்டார்.
முன்னாள் யூகோஸ்லேவிய போர்க்குற்ற நீதிமன்ற நீதிபதி கார்லா டெல் பாண்டே ஒரு புத்தகம்("The Hunt") எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவிக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. கொசோவோவை சேர்ந்த அல்பேனிய மாபியா குழுவினர், செர்பியர்களை அயல்நாடான அல்பேனியாவுக்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கே அவர்களை கொன்று, உடல் உறுப்புகளை அறுவைச் சிகிச்சை செய்து வெட்டி எடுத்துள்ளனர். அல்பேனியாவின் திரானா விமான நிலையம் ஊடாக, உடல் உறுப்புகள் இஸ்ரேலுக்கும், மேற்குலக நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. அன்று அல்பேனியர்களின் குற்றங்களை விசாரிப்பதற்கு, மேற்குலக நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. செர்பியர்கள் என்ன குற்றம் இழைத்திருக்கிறார்கள் என்று விசாரிப்பது மட்டுமே, யூகோஸ்லேவிய போர்க்குற்ற நீதிமன்றத்தின் கடமையாக இருந்துள்ளது.

கொசோவோ யுத்தம் வெடித்த பொழுது, சேர்பியப் படைகள் போர்க்குற்றங்கள் புரிந்துள்ளதை யாரும் மறுக்கவில்லை. செர்பியப்படைகள் அல்பேனிய பொது மக்களை கொலை செய்து, வீடுகளை எரித்து, அவர்களை வெளியேற்றியது. இவை எல்லாம் சர்வதேச ஊடகங்களில் விலாவாரியாக பேசப்பட்டன. உலகத்தில் எல்லோரும் சேர்பியர்களின் கொடுமைகளை மட்டும் கேள்விப்பட்டனர். ஆனால் கொசோவோவை நேட்டோப் படைகள் ஆக்கிரமித்த பின்னர் என்ன நடந்தது? அதைப் பற்றி எந்த ஊடகமும் பேசவில்லை. ஹாசிம் தாச்சி தலைமையிலான KLA ஆயுதபாணிகள், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். செர்பியர்கள் மட்டுமல்ல, ஜிப்சி இன மக்களும், அடித்து விரட்டப்பட்டனர். அல்பெனியர்களைத் தவிர்ந்த வேறு எந்த இனத்தவருக்கும், "சுதந்திர கொசோவோவில்" இடம் இல்லை என்பதே KLA யின் கொள்கை.

ஹாசிம் தாச்சியின் KLA ஆரம்ப காலத்தில் ஒரு பயங்கரவாத குழுவாகவே செயற்பட்டு வந்தது. செர்பிய அரசு மட்டும் இதனை கூறவில்லை, அமெரிக்க அரசும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் KLA பெயரை சேர்த்திருந்தது. பயங்கரவாத இயக்கமாக கருதப்பட்ட KLA யின் ஆரம்ப கால தாக்குதல்கள் சில:
பொதுமக்கள் பயணம் செய்த பேரூந்து வண்டி மீது தாக்குதல். 40 பேர் பலி. செர்பிய பாடசாலை மீது தாக்குதல், 6 சிறுவர்கள் பலி. 1999 ல் Prizren நகரில் KLA தாக்குதலில் 300 செர்பியர்கள் படுகொலை செய்யப்படனர். அவர்களில் கிறிஸ்தவ பாதிரிகளும் அடக்கம். கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். கிறிஸ்தவ தேவாலயங்களில் இருந்த சுருவங்கள் நொறுக்கப்பட்டன. ஒரு சேர்பியப் பொதுமகனின் வெட்டப்பட்ட தலையுடன் KLA ஆயுதபாணிகள் நிற்கும் போட்டோ மேலே உள்ளது. இது மட்டுமல்ல, சொந்த அல்பேனிய இனத்தை சேர்ந்த இளம்பெண்களை கடத்திச் சென்று, இத்தாலி விபச்சார விடுதிகளில் விற்றுள்ளனர்.

இன்று ஹாசிம் தாச்சியை குற்றவாளியாக காட்டும் தகவல்கள், மேற்குலகின் ஒப்புதல் இன்றி கசியவில்லை. ஐரோப்பிய ஒன்றியம், கொசோவோவை சுதந்திர நாடாக அங்கீகரிக்குமாறு செர்பியாவை நிர்ப்பந்தித்து வருகின்றது. செர்பியர்களை திருப்திப் படுத்தவும், தாம் நடுநிலையானவர்கள் என்பதைக் காட்டவும், இப்போது இந்தக் தகவல்களை பகிரங்கப் படுத்தியிருக்கலாம்.
மேலதிக தகவல்களுக்கு:Serbian Prosecutor Investigating Reports of Organ Trafficking During War in Kosovo
The horrors of the yellow house in Burrel N Albania.

12/20/10

சட்டவிரோத யூத குடியேற்றங்களுக்கு நிதி வழங்கும் நிறுவனங்கள்

"அரேபியருக்கும், பிற இனத்தவர்களுக்கும், யூதர்கள் தமது வீடுகளையும், நிலங்களையும் விற்பதும், வாடகைக்கு விடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது." - 300 க்கும் மேற்பட்ட யூத மதகுருக்கள் அறிவித்துள்ள மத ஆணை. 7 டிசம்பர் அறிவிக்கப்பட்ட இந்த மத ஆணை, அரேபியர்களை மட்டும் பாதிக்கவில்லை. சில ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள், வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆகியோரும் வீடு வாடகைக்கு எடுக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

யூத மதகுருக்களின் இனவாத சட்டம் ஒருபுறமிருக்க, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன மேற்குக் கரையில் சட்டவிரோத யூத குடியேற்றங்கள் தொடர்கின்றன. இந்த யூத குடியேற்றங்கள், சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்று ஐ.நா. சபை கூட கண்டித்திருந்தது. சில நூறு குடியேற்றங்கள் இஸ்ரேலிய சட்டத்திற்கு மாறானவை. இருப்பினும் சட்டவிரோத யூத குடியேற்றங்களை இஸ்ரேலிய அரசு ஆதரிக்கின்றது. அவற்றிற்கு வரிச் சலுகைகளை வழங்கி வருகின்றது.
இதற்கிடையே "கிறிஸ்தவ- சியோனிஸ்டுகள்" என அழைக்கப்படும், அமெரிக்காவில் இயங்கும் தொண்டு நிறுவனங்கள் சட்டவிரோத யூத குடியேற்றங்களுக்கு நிதி திரட்டி அனுப்புகின்றன. அண்மையில் விக்கிலீக்ஸ் சட்டத்தை மீறியதாக காரணம் காட்டி, அதற்கான பணக் கொடைகளை மாஸ்டர் கார்ட், விசா, போன்ற கடன் அட்டை நிறுவனங்கள் நிறுத்தியிருந்தன. ஆனால் அதே நிறுவனங்கள், சர்வதேச சட்டங்களை மீறும் யூத குடியேற்ற நிதியை தடை செய்யவில்லை.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில், சட்டவிரோத யூத குடியேற்றங்களுக்கு நிதி வழங்கும் அமெரிக்க கிறிஸ்தவ- சியோனிஸ்ட் தொண்டு நிறுவனங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பிற்குறிப்பு : யூத குடியேற்றங்கள் நியாயமானது என்று வாதாடும் சியோனிஸ்டுகள், சிறிலங்காவில் சிங்களக் குடியேற்றங்களையும் ஆதரிப்பார்கள்.
1.The Shuva Israel group, an evangelical Christian group based in Texas, is accused by Israeli group Gush Shalom of channelling money to fund the illegal West Bank settlement of Revava.

2. The One Israel Fund, used as an example in the International Crisis Group report, boasts of being “the largest North American charity whose efforts are dedicated solely to the citizens and communities of Yesha”.

3.The website of another right-wing Christian group, the Christian Friends of Israeli Communities describes support for settlements like Argaman, which are illegal under international law.

4.Worst of all is the extremist SOS Israel group, which has incurred even the wrath of the Israeli Defence Force by rewarding Israeli soldiers who disobey orders to evict settlers from illegal outposts (i.e. inciting mutiny), and which has offered a bounty for Palestinians shot by IDF soldiers.

12/12/10

தமிழகத்தின் சிங்கள தொப்புள்கொடி உறவுகள்


(பகுதி : இரண்டு )
தமிழ், சிங்கள மொழிகளில் இனம் என்ற வார்த்தையே கிடையாது. பண்டைய சிங்களவர்களும், தமிழர்களும் மத, சாதிய வேறுபாடுகளை அறிந்திருந்தனர். ஆனால் வெவ்வேறு மொழி பேசுபவர்களை தனித்தனி இனங்களாக பார்க்கும் வழக்கம், ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர் தான் ஆரம்பமாகியது. ஆங்கில மொழிச் சொல்லான "Race ", ஆங்கிலம் கற்ற தமிழர்களால் "இனம்" என்று மொழிபெயர்க்கப்பட்டது. அது எவ்வளவு தூரம் சரியான மொழிபெயர்ப்பு என்று அவர்கள் கவலைப்படவில்லை. தமிழில் சாதி என்றும், சிங்களத்தில் ஜாதிய என்றும் இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இலங்கை மக்கள் பாகுபடுத்தப் பட்டனர். இன்று ஒவ்வொரு இலங்கைப் பிரஜையினதும் பிறப்புச் சான்றிதழிலும் அவ்வாறே குறிப்பிடப் படுகின்றது. முன்பு அந்த இடத்தில் சாதிப் பெயரை பதிந்து வந்தார்கள். காலப்போக்கில் அது அநாகரீகம் என்று கருதியதால், சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், முஸ்லிம் என்றெல்லாம் பதிகிறார்கள். அந்தச் சொற்களைக் கூட சாதிக்கு மாற்றீடாக தான் பயன்படுத்துகிறார்களே ஒழிய, இனம் என்ற அர்த்தத்தில் அல்ல.

இனம் என்ற பாகுபாடு, பிற்காலத்தில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்படும் இரத்தக்களரிக்கு இட்டுச் செல்லப் போகின்றது என்பதை அன்று பலர் உணரவில்லை. ஒரு வேளை கடவுளுக்கு நிகரான சக்தி படைத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் உணர்ந்திருப்பார்கள். சிங்கள இனவாதம், தமிழ் இனவாதம் இரண்டினதும் அடிப்படை, மக்களை இனங்களாக பிரித்துப் பார்ப்பதிலே தான் தங்கியுள்ளது. ரஷ்யாவில் வெற்றியடைந்த போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்கத்தால், உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றின. தொழிற்துறை அபிவிருத்தி காரணமாக பல்லினத் தொழிலாளர் வர்க்கம் கொழும்பை மையமாகக் கொண்டு தோன்றியிருந்தது. கம்யூனிச, சோஷலிசக் கட்சிகளின் தொழிற்சங்க நடவடிக்கைகள் அதிகரித்தன. தொழிலாளர் வர்க்கம் தனது உரிமைகளை, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளருடன் போராடிப் பெற்றுக் கொண்டிருந்தனர். இலங்கையில் வேறெந்த கட்சிகளையும் விட கம்யூனிஸ்ட், சோஷலிசக் கட்சிகள் பெரும்பான்மைப் பலத்துடன் காணப்பட்டன. ரஷ்யாவை பின்பற்றி இலங்கையிலும் புரட்சி வெடிக்குமோ என அஞ்சிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சிங்கள, தமிழ் மத்தியதர வர்க்கத்திற்கு இனவாதத்தை கற்றுக் கொடுத்தார்கள். அன்று பற்ற வைக்கப்பட்ட இனவாதத் தீ அறுபது ஆண்டுகளாக கொழுந்து விட்டு எரிகின்றது, என்பதை அறிந்து ஆங்கிலேயர்கள் அகமகிழ்ந்திருப்பார்கள்.

பிரிட்டிஷ் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் போய்க் கொண்டிருந்தது. அன்றைய மலேசியாவை விட வளர்ச்சி அடைந்த பொருளாதாரத்தைக் கொண்டிருந்ததால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தொழில் வாய்ப்பு தேடி வந்தார்கள். (இவர்களை மலையக பெருந்தோட்டத் தொழிலாளரிடம் இருந்து வேறு படுத்திப் பார்க்க வேண்டும்.) அவர்களில் பெரும்பான்மையானோர் தமிழ் நாட்டுத் தமிழர்கள் என்ற போதிலும், கணிசமான அளவு மலையாளிகளும், தெலுங்கர்களும் புலம்பெயர்ந்து வந்தார்கள். ஆரம்பத்தில் மலையாள, தெலுங்கு சமூகங்கள் தமிழை தாய் மொழியாக பேசி வந்தனர். இனப்பிரச்சினை கூர்மையடைந்த பின்னர், பலர் சிங்களத்தை தாய்மொழியாக்கிக் கொண்டுள்ளனர். ஒரு பகுதி கொழும்பு வாழ் இந்தியத் தமிழர்களும், தமிழை விட சிங்களத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். தமிழகத் தொப்புள்கொடி உறவுகள் சிங்களவர்களாக மாறியதை வரலாறு நெடுகிலும் காணலாம். மேலே குறிப்பிட்டது மிக அண்மைய உதாரணம் மட்டுமே.

சிங்களவர்கள் தாமே இலங்கையின் பூர்வீக மக்கள் என்றும், தமிழர்கள் வந்தேறு குடிகள் என்றும் நம்புகின்றனர். மறுபக்கத்தில் தமிழர்கள் தாமே இலங்கையின் பூர்வீக மக்கள் என்றும், சிங்களவர்கள் வந்தேறு குடிகள் என்றும் நம்புகின்றனர். இரண்டு பக்கமும் இருக்கும் இனவாதிகள் அத்தகைய பிரச்சாரங்களை இன்றும் முன்னெடுத்து வருகின்றனர். உண்மையில் பெரும்பான்மை சிங்களவர்களும், தமிழர்களும் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய சான்றுகள் உள்ளன. இன்றைக்கும் பூர்வீக மக்களாக இனங்காணப் படக் கூடியவர்கள் வேடுவர்கள் மட்டுமே. அவுஸ்திரேலிய அபோரிஜின் பழங்குடி போல, இன்றைக்கும் நாகரீகத்துக்கு முந்திய கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை விட இயக்கர், நாகர், ராட்சதர்கள் ஆகிய இனங்கள் பண்டைய இலங்கையில் வாழ்ந்துள்ளன. இன்றைக்கும் பல ஊர்ப் பெயர்கள் அதற்கு சான்று பகர்கின்றன. இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள், ஒன்றில் பழங்குடியினரை அழித்து விட்டார்கள், அல்லது அவர்களுடன் ஒன்று கலந்து விட்டார்கள். இன்றுள்ள சிங்கள, தமிழ் மொழிகள் பேசும் மக்கள், அத்தகைய கலப்பினத்தை சேர்ந்தவர்கள். மரபுரிமையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்த முடிவுகள் இவை. (
Genetic affinities of Sri Lankan populations.)
"அனுராதபுரத்திலே கலிங்கவாசர் குலம் விஜயனில் இருந்து ஐந்து தலைமுறைக்குள் அற்றுப் போக, கலிங்கரும் நாகரும் கலந்த மிசிர குலத்தரசர்களே அதன் பின் அரசாண்டு வந்தார்கள். தமிழரசரும் பலமுறைகளில் அனுராதபுரத்தை வெற்றி கொண்டு அரசாண்டு வந்தார்கள். அதனால் தமிழ்க் குடிகளும் இலங்கையில் குடியேறின. நாகரும், இயக்கரும், கலிங்கரும் கலந்தே சிங்களர் ஆயினார்கள். இலங்கை குடிச்சனங்களை சிங்களர் எனும் பெயரால் வழங்கத் தொடங்கியது தொட்டு நாகர், இயக்கர், கலிங்கர் எனும் நாமங்கள் வழக்கிழந்தன." (யாழ்ப்பாண சரித்திரம், சே.இராசநாயகம் )
இலங்கையை ஆண்ட சிங்கள அரசர்கள், இந்தியாவில் பாண்டிய நாட்டுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தனர். பாண்டியர்களுக்கும், சிங்கள அரசர்களுக்கும் இடையில் திருமண பந்தங்கள் கூட ஏற்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பாண்டிய மணப்பெண்கள், பரிவாரங்களுடன் அனுப்பப்பட்டதாக, இலங்கை வரலாற்றில் பலவிடங்களில் குறிப்பிடப் படுகின்றது. தமிழர்களான பாண்டியர்களின் வழித்தோன்றல்கள் சிங்களவர்களாக மாறி விட்டார்கள். சோழர்களின் படையெடுப்பை, சிங்கள-தமிழ் இன முரண்பாடுகளின் தோற்றமாக (சிங்கள) இனவாதிகள் காட்டுகின்றனர். எல்லாளன் - துட்ட கைமுனு போர் கூட அரசுரிமைப் போட்டியே தவிர, இன அடிப்படையிலான போர் அன்று.



உலகில் தேசிய இராணுவங்கள் 19 ம் நூற்றாண்டின் பின்னரே தோன்றின. பண்டைய காலத்தில் கூலிப் படைகளையே மன்னர்கள் போரில் ஈடுபடுத்தினார்கள். இலங்கையும் அதற்கு விதி விலக்கல்ல. சிங்கள மன்னர்கள் தமக்கிடையிலான போரில் தமிழகக் கூலிப் படைகளை பயன்படுத்தினார்கள். அந்தக் காலத்தில் சிங்கள அரசர்கள் போருக்கு தேவையான வீரர்களை தமிழ் நாட்டில் சென்று திரட்டுவது சர்வ சாதாரணம். உண்மையில் தென்னிந்தியாவில் நிலவிய பாண்டிய- சோழ மன்னர்களுக்கு இடையிலான பகைமையின் தொடர்ச்சியே இலங்கை மீதான படை நடவடிக்கைகள். சில நேரம், சிங்கள அரசர்கள் தென்னிந்தியா வரை படையெடுத்து சென்றிருக்கிறார்கள். அப்போதெல்லாம் பாண்டியர்கள் அவர்களது கூட்டாளிகளாக இருந்துள்ளனர்.
"... பராக்கிரமவாகு இலங்காபுரித் தண்டநாதனுடன் ஒரு சிங்களப் படையை அனுப்பி பராக்கிரம பாண்டியனுக்கு உதவி புரிந்தான்." (யாழ்ப்பாணச் சரித்திரம்)
இலங்கையில் சோழர்களின் ஆட்சியை ஒரு ஏகாதிபத்தியக் காலமாகவே கருத வேண்டும். ஏனெனில் சோழரின் ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்த சிங்கள சிற்றரசர்கள் மட்டுமல்ல, தமிழ் சிற்றரசர்களும் அடக்கப்பட்டார்கள். "இலங்கை முழுவதும் சோழர் ஆட்சிக்குள் அமைந்தும், சமாதானம் எப்போதும் இருந்ததில்லை. சிங்கை நகர் அரசருஞ் சிங்கள அரசருங் கூடி சோழருடன் சமர் விளைவிக்க நேருங் காலங்களில், சோழ அரசர் படையுடன் வந்து கலகம் விளைவித்தாரை கொன்றும் வென்றுஞ் செல்வர்." (யாழ்ப்பாண சரித்திரம்) இங்கே சிங்கை நகர் என்பது நல்லூரை தலைநகராக கொண்ட (ஈழத்) தமிழரின் சிற்றரசு ஆகும். ராஜராஜ சோழன் ஈழத்தில் அடிமைகளாக பிடித்து வந்தவர்களைக் கொண்டு தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியதாக சோழர்களே எழுதி வைத்த குறிப்புகள் தெரிவிக்கின்றன.


1365 ல் தஞ்சை, மதுரையை சேர்ந்த, வெள்ளாளர் என்ற சாதியினரின் இலங்கை நோக்கிய புலம்பெயர்வு பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. தென்னிந்தியா அந்தக் காலத்தில் விஜய நகரத்தால் ஆளப்பட்டது. விஜயநகர சாம்ராஜ்யவாதிகள் தெலுங்கர்கள் என்பதால், தமிழ்நாட்டு நிர்வாகத்தில் தெலுங்கு பாளையக்காரர்களை நியமித்தார்கள். இதனால் அதிகாரம் இழந்த வெள்ளாளர்கள் இலங்கை சென்று குடியேற ஆரம்பித்தார்கள். அவர்கள் தமிழ்ப் பிரதேசங்களில் மட்டுமல்லாது, சிங்களப் பிரதேசங்களிலும் சென்று குடியேறினார்கள். சிங்களப் பிரதேசங்களில் குடியேறிய தமிழக வெள்ளாளர்கள், கொவிகம (அல்லது கொய்கம) என்ற சிங்கள சாதியினராக மாறி விட்டனர்.
".... இம் மாற்றங்களால் தம் பதவிகளை இழந்த தமிழ் வேளாண் தலைவர்கள், தங்கள் அடிமை, குடிமைகளுடன் பாண்டிய, சோழ, பல்லவ தேசங்களை நீங்கி, இலங்கைக்கு வந்தார்கள். ..... இப்போது சிங்கள வெள்ளாளராக மாறியிருக்கும் அவர்களை நீக்கி, யாழ்ப்பாணத்திலே வந்து குடியேறிய வெள்ளாளர்களைப் பற்றியே கயிலாய மாலை கூறும்: ....." (யாழ்ப்பாண சரித்திரம்)

சிங்களவர்கள், தமிழர்கள், இரண்டு சமூகங்களிலும் வெள்ளாளர்கள் 50 % அளவில் இருக்கலாம் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. பெரும்பான்மை சாதியாக இருப்பதால், அவர்களின் ஆதிக்கம் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. சிங்கள அரசர்கள் பௌத்த மதத்தை பின்பற்றினாலும், அவர்களது கலாச்சாரம் பிராமணிய வர்ணாச்சிரம மரபைக் கொண்டிருந்தது. அதனால் சத்திரிய வம்சத்தவர்களான சிங்கள அரசர்கள், வெள்ளாளர்களை சூத்திரர்கள் என்று ஒதுக்கி வைத்தார்கள். தென்னிலங்கையை ஆண்ட விஜயவாகு என்ற மன்னன், சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழியில், ஒவ்வொரு சாதிக்கும் புறம்பான தங்குமடங்களை ஏற்படுத்தி இருந்தான்.

சிங்களவர்கள் அனைவரும் விஜயனின் வம்சாவழியினர் என்பது போல சிங்கள இனவாதிகள் பரப்புரை செய்கின்றனர். அது பிற்காலத்தில் சிங்கள இனம் என்ற ஒன்றை உருவாக்கும் நோக்கோடு புனையப்பட்ட கதைகளில் ஒன்று. (விஜயனின் வருகைக்கும், அப்படி ஒருவர் வாழ்ந்ததற்கும் சரித்திர ஆதாரங்கள் இல்லை.) மகாவம்சம் கூட விஜயனும் அவனது தோழர்களினதும் கதையைத் தான் கூறுகின்றதே தவிர, அவர்கள் தான் சிங்களவர்களின் முன்னோர்கள் என்று கூறவில்லை. இருபதாம் நூற்றாண்டில் பாலஸ்தீனத்தில் குடியேறிய யூதர்கள் பைபிள் கதைகளை ஆதாரமாக காட்டி, இஸ்ரேலுக்கு உரிமை கொண்டாடினார்கள். சிங்கள தேசியவாதிகள், 19 ம் நூற்றாண்டிலிருந்து தான், விஜயனை தேசிய நாயகனாக்கினார்கள். யூதர்களுக்கு ஆப்பிரகாம் போல, சிங்களவர்களுக்கு விஜயன். சிங்களத் தேசியவாதிகள் விற்கும் வரலாற்றுப் புளுகுகளை, தமிழ் தேசியவாதிகளும் வாங்கி விற்றுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் "சிங்களவர்களின் வரலாறு" என்று பொதுமைப் படுத்தக் கூடிய வரலாறு கிடையாது. சிங்களவர்களின் மத்தியில் இன்றைக்கும் காணப்படும் ஒவ்வொரு சாதியும், தனக்கென தனியான வரலாற்றைக் கொண்டுள்ளன. சிங்கள சாதிகள் எல்லாமே தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்டுள்ளன. அதனை நிரூபிக்கும் செவி வழிக் கதைகள் அந்தந்த சமூகத்தினர் மத்தியில் நிலவி வருகின்றன.
(தொடரும்)
இந்த தொடரின் முதலாவது பகுதியை வாசிக்க:
இலங்கை அரசியலில் "வெள்ளாள-கொவிகம" ஆதிக்கம்

12/8/10

இலங்கை அரசியலில் "வெள்ளாள-கொவிகம" ஆதிக்கம்


தமிழர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள சாதி பிரச்சினை பற்றி பேச வாய் திறந்தால், ஒரே கேள்வியில் எங்களை மடக்குவார்கள். "சிங்களவன் சாதி பார்த்தா அடிக்கிறான்?" உண்மை தான். அவன் தான் "மோட்டுச் சிங்களவன்" ஆயிற்றே?(தமிழின வாதிகள் அப்படித் தான் அழைப்பார்கள்) தமிழர்கள் சாதி வாரியாக பிரிந்திருக்கிறார்கள் என்று மோட்டுச் சிங்களவனுக்கு தெரியுமா? தமிழ் இனவாதிகள் சிங்களவர்கள் அனைவரும் சாதி வேறுபாடற்ற ஒரே இனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரித் தான் சிங்கள இனவாதிகளும் தமிழர்களைப் பற்றி நினைக்கிறார்கள். இனக் கலவரங்களை தூண்டி விட்ட சக்திகள், தமிழர்கள் சிங்களவர்களை விட தாழ்ந்த சாதி என்ற கருத்தை விதைத்தன. தமிழர் தீண்டத் தகாத சாதி என்ற கருத்துப் பட, "பறத் தெமலோ" என்று கோஷமிட்டு கொண்டு தான் அடித்தார்கள், கொன்றார்கள். சிங்கள இனவெறியால் பாதிக்கப்பட்ட "பறத் தமிழர்கள்" அகதி முகாமிலும் தமக்குள்ளே சாதி பார்த்து ஒதுங்கிக் கொண்டார்கள்.

தமிழ் தேசியம் தோன்றுவதற்கு முந்திய காலங்களில், தமிழர்கள் சாதிப் பிரச்சினைகளை மறைக்கும் வலுவற்று இருந்தனர். அதற்கு மாறாக சிங்கள தேசியம், தனக்குள்ளே இருந்த சாதிப் பாகுபாட்டை வெளித் தெரியா வண்ணம் பூசி மெழுகியது. (பௌத்த மதம் சாதியத்தை எதிர்ப்பது முக்கிய காரணம்.) இருந்தாலும் சிங்களவர்களிடையே அவ்வப்போது எழும் சாதிப் பிரச்சினைகள் குறித்து, தமிழ் ஊடகங்கள் மௌனம் சாதித்து வந்தன. இன்றைக்கும் அது தான் நிலைமை. உண்மையில் இனப்பிரச்சினை கூட, இலங்கையின் ஆதிக்க சாதிக்குள் (வெள்ளாளர்+கொவிகம) எழுந்த முரண்பாடுகளின் வெளிப்பாடு ஆகும். சிங்கள- தமிழ் இன முரண்பாடுகள் வெடிக்க முன்னர், சாதிய சிந்தனையே மேலோங்கி இருந்தது. அவர்களுக்கு இடையே திருமண பந்தங்கள் கூட ஏற்பட்டிருந்தன.

தமிழர்கள் மத்தியில் ஆதிக்க சாதியாக இருக்கும் வெள்ளாளர்கள் அரசியல்-பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கி வந்துள்ளனர். அதே போல, சிங்களவர்கள் மத்தியில் ஆதிக்க சாதியான கொவிகம இன்று வரை இலங்கையின் அரசியல்- பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றனர். சிங்கள மொழியில் "கம" என்றால் ஊர், அல்லது வயல் என்று அர்த்தப் படும். தமிழில் கூட கமம் என்ற சொல் வழக்கில் உள்ளது. வெள்ளாள- கொவிகம ஆதிக்கம் இலங்கையின் சரித்திரத்தை தனக்கேற்றவாறு எழுதி வந்துள்ளது. இந்து பார்ப்பனீய பாரம்பரியத்தில் சூத்திரர்களாக கருதப்படும் விவசாய சமூகம், இலங்கையில் உயர் சாதியினராக தலையெடுத்தது. "கௌதம புத்தரின் தந்தை ஒரு கமக்காரன்" என்பது பௌத்த- சிங்கள புளுகுகளில் ஒன்று. இலங்கையை ஆண்ட தலை சிறந்த மன்னராக கருதப்படும் பராக்கிரமபாகு ஒரு "வெள்ளாளர்" என்கிறது சிங்கள-கொவிகம கற்பிதம். (மகாவம்சம், பராக்கிரமபாகு சத்திரிய வம்சத்தை சேர்ந்தவர் என்று கூறுகின்றது.) இன்றும் கூட அரசியல் தலைவர்கள் தாம் "வெள்ளாளரின் (கமக்காரர்களின்) மேம்பாட்டுக்கு ஆதரவானவர்களாக" காட்டிக் கொள்கின்றனர். அண்மைய உதாரணம், தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏர் பூட்டி உழுத காட்சி. தமிழர்கள் மத்தியிலும் அது போன்ற பிரச்சாரங்கள் சர்வசாதாரணம். "கந்தன் நல்ல கமக்காரன்" போன்ற சாதிய முன்னேற்ற பாடங்கள், ஆரம்ப பாடசாலை தமிழ் பாடப் புத்தகத்தில் போதிக்கப் படுகின்றன.

வெள்ளாள- கொவிகம சாதியினர், தமிழ், சிங்கள சமூகங்கள் மத்தியில் ஒன்றுக்கொன்று தொடர்பற்று காணப் படுகின்றனர். ஆரம்பத்தில் மதம், மொழி போன்ற கூறுகளும், பிற்காலத்தில் இனப் பிரச்சினையும் அந்தப் பிரிவினையை ஏற்படுத்தியது. இருப்பினும் இரு துருவங்களான ஆதிக்க சாதியினர், தத்தமது சமூகங்களில் தலித் சாதியினரின் எழுச்சியை அடக்குவதில் ஒரே மாதிரி செயற்பட்டுள்ளனர். நம் கண் முன்னாலே நடந்துள்ள சமீபத்திய உதாரணங்கள்: இளைஞர்களின் ஆயுதப் போராட்டம். வடக்கில் EPRLF என்ற இயக்கத்தில் அதிகளவு தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த தமிழ் வாலிபர்கள் இணைந்திருந்தனர். அதனால் அந்த இயக்கத்தினை "ஈழப் பள்ளர் புரட்சிகர முன்னணி" என்று உயர் சாதியினர் பரிகசித்தனர். ஆதிக்க சாதியினரின் "நல்ல காலம்", அது போன்ற இயக்கங்கள் காலப்போக்கில் நிலைத்து நிற்கவில்லை. தெற்கில் ஜே.வி.பி. யில் சிங்கள தலித் சாதியினர் அதிகளவில் சேர்ந்திருந்தனர். அரசு ஜே.வி.பி. கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி அடக்குவதற்கு சாதிய பாகுபாடும் ஒரு காரணம். 1988 - 1991 க்கு இடைப்பட்ட குறுகிய காலத்தில் குறைந்தது அறுபதாயிரம் சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த இளைஞர்கள். அதனால் தான் அவர்களை கொன்று குவிப்பதில் அரசுக்கு எந்த விட சங்கடமும் இருக்கவில்லை.

வெள்ளாள- கொவிகம சாதியினரின் ஆதிக்கம், காலனிய காலத்தில் தோன்றியது. காலனிய எஜமான்களின் தயவால் வளம் பெற்றது. அதனால், இன்றும் கூட தமிழ், சிங்கள ஆளும் வர்க்கங்கள் குறிப்பாக பிரிட்டிஷ் காலனிய எஜமானுக்கு விசுவாசமாக உள்ளனர். காலனியாதிக்க ஐரோப்பியர்கள் இவர்களை எவ்வளவு தான் அலட்சியப் படுத்தினாலும், இன்று வரை இராஜ தந்திர உறவுகளை பேணிப் பாதுகாக்க விரும்புகின்றனர். தமிழர்களாக இருந்தாலும், சிங்களவர்களாக இருந்தாலும் காலனிய விசுவாசம் மட்டும் மாறாமல் அப்படியே உள்ளது. சீனாவும், இந்தியாவும் தமிழினப் படுகொலைக்கு ஆதரவளித்தார்கள் என்று திட்டித் தீர்க்கும் தமிழர்கள், மேற்குலக நாடுகளின் பங்களிப்பு குறித்து பேச மாட்டார்கள். மேற்குலக நாடுகள் புலிகளை வளர்க்கின்றன என்று கூப்பாடு போடும் சிங்களவர்கள், அந்த நாடுகளுடனான உறவுகளை துண்டிக்க மாட்டார்கள். ஏகாதிபத்தியம் எங்கேயும், எப்போதும் ஒரே மாதிரி நடந்து கொள்ளவில்லை. அடிமைகளை சங்கிலியால் பிணைத்து உழைப்பை சுரண்டுவது ஒரு வகை. அடிமை உணர்வை மூளைக்குள் செலுத்தி உழைப்பை சுரண்டுவது இன்னொரு வகை. இலங்கையை ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் இரண்டாவது வகையை சிறந்தது எனக் கண்டார்கள்.

"கள்ளர், மறவர், அகம்படியார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்." என்றொரு ஈழத் தமிழ்ப் பழமொழி உண்டு. காலனிய ஆட்சிக் காலத்தில் வெள்ளாளர் என்பது ஒரு வர்க்கமாகவே இருந்தது. அவர்கள் பின்னர் சாதியாக பரிணாம வளர்ச்சி அடைவதை காலனிய ஆட்சியாளர்கள் எதிர்க்கவில்லை. மாறாக அது தமது காலனிய நிர்வாகத்திற்கு அனுகூலமாக இருக்கும் எனக் கருதினார்கள். போர்த்துக்கேயர்கள் ஆண்ட காலத்தில் பணம் வாங்கிக் கொண்டு "டொன்" என்ற பட்டம் கொடுத்து வந்தார்கள். பணம் படைத்த தமிழர்களும், சிங்களவர்களும் அன்று டொன் பட்டம் பெறுவதை மதிப்பாக கருதினார்கள். அதனை உள்ளூர் பாமர மக்களுக்கு காட்டிப் பெருமைப் பட்டனர். ஒல்லாந்தர் காலத்தில் "வெள்" என்ற பட்டம் கொடுக்கும் வழக்கம் தோன்றியது. "வெள்" பட்டம் வாங்கியவர்கள் உயர்சாதி வெள்ளாளர்கள் ஆனார்கள். ஒல்லாந்தர்களுக்கு அது ஒரு மேலதிக வருமானம்.
"பறங்கிகள் 'டொன்' பட்டம் விற்றது போலவே, ஒல்லாந்தருஞ் சனங்களின் சாதி எதிர்ப்பை அறிந்து, பனங் கொடுத்தவர்களை 'வெள்' அல்லது 'மடப்பம்' என்று தோம்பிற் பதிந்தனர்." (யாழ்ப்பாணச் சரித்திரம், சே. இராசநாயகம்)

இருப்பினும் 19 ம் நூற்றாண்டு வரையில், வெள்ளாளர் என்ற சாதியை பற்றிய குறிப்புகள் இலங்கை சரித்திரத்தில் குறைவாகவே காணப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிர்வாகப் பொறுப்பேற்ற முதலியார்களும், வெள்ளாளர்களும் தம்மை ஸ்தாபனமயப் படுத்திக் கொண்டனர். தமிழ் பிரதேசங்களிலும், சிங்களப் பிரதேசங்களிலும் இது ஒரே நேரத்தில், ஒரே மாதிரியாக நடைபெற்றது. சிங்களப் பகுதிகளில் பௌத்த மத மறுமலர்ச்சி ஏற்பட்டதைப் போல, தமிழ்ப் பகுதிகளில் சைவ மத மறுமலர்ச்சி ஏற்பட்டது. சைவத்தையும் சாதியையும் வளர்த்தவர்களில் ஆறுமுக நாவலர் முக்கியமானவர். ஆறுமுக நாவலர் ஒரு பக்கத்தில் வெள்ளாள சாதியினர் கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலைகளில் கல்வி கற்பதை ஊக்குவித்தார். மறு பக்கத்தில் தனது சமூகத்தினர் மத்தியில் சைவ மத கோட்பாடுகளை போதித்தார். ஆறுமுக நாவலர் உயர் சாதியினரை மட்டுமே சைவர்களாக்க பாடுபட்டார். அதற்கு ஒரு உதாரணம் தருகிறேன்.

நாவலர் எழுதிய "சைவ வினா-விடை" என்ற நூலில், விபூதி பூசும் போது பின்பற்ற வேண்டிய விதிகளைக் கூறுகிறார். அதில் ஒன்று. "விபூதி பூசும் போது எதிரே கீழ் சாதியினர் வரக் கூடாது." பிராமணர்கள் வேதம் ஓதும் பொழுது சூத்திரர்கள் எதிரே வரக் கூடாது என்று எழுதி வைத்த மனுவுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? மனு சூத்திரர்களை பிராமண (இந்து) மதத்தை சேர்ந்தவர்களாக கருதவில்லை. அதே போல ஆறுமுக நாவலரும் தாழ்த்தப்பட்ட சாதியினரை சைவ சமயத்தை சேர்ந்தவர்களாக கருதவில்லை. பிரிட்டிஷ் இந்தியாவில் இந்து மதத்தை வளர்க்கும் பணியில் ஈடுபட்டவர்களுடன் ஆறுமுக நாவலர் நெருங்கிய தொடர்பை பேணினார். பார்ப்பனர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப் படி, வெள்ளாளர்களின் சாதிப் படி நிலையை உயர்த்துவதற்கு பாடுபட்டார். அதன் பயனாக சூத்திரர்களான வெள்ளாளர்கள் பூணூல் அணியும் சடங்கான தீட்சை பெறுதலை இலங்கையில் அறிமுகப் படுத்தினார்.


இவ்வாறு தான் சைவ மதம் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் அடையாளமாக மாறியது. நாவலர் "சைவத்தையும் தமிழையும் வளர்த்தார்" என்று பாட நூல்களில் எழுதப் பட்டுள்ளது. தென்னிலங்கையில் அநகாரிக தர்மபால எவ்வாறு பௌத்தத்தையும் சிங்கள மொழியையும் வளர்த்தாரோ, அதே பணியை தான் நாவலர் வட இலங்கையில் ஆற்றினார். பௌத்த சிங்கள ஞானத் தந்தையையும், சைவத் தமிழ் ஞானத் தந்தையையும் இலங்கை அரசு முத்திரை வெளியிட்டு கௌரவித்தது. வெள்ளாள-கொவிகம ஆதிக்கம் செலுத்திய இலங்கை அரசு, தனது நாயகர்களுக்கு மரியாதை செலுத்த மறக்கவில்லை. அதற்கு சாட்சியமாக "தமிழினத் தலைவரான" பிரபல சாதியவாதி சேர். பொன் இராமநாதனின் சிலை இன்றைக்கும் கொழும்பு நகரில் பழைய பாராளுமன்ற முன்றலில் காணப்படுகின்றது. சிங்கள-முஸ்லிம் கலவரத்தில், சிங்களவர்கள் பக்கம் வழக்காடிய இராமநாதனுக்கு சிங்களவர்கள் சிலை வைத்ததில் வியப்பில்லை. தமிழர்களும் அவரை தமது தலைவராக ஏற்றுக் கொள்வதற்கு என்ன காரணம்? தமிழகத்தின் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போல, இராமநாதனும் தனது சாதியின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஒருவர். ஒரு சாதித் தலைவர் காலப்போக்கில் தமிழ் தேசியத் தலைவராக்கப் பட்டார்.

வெள்ளாள- கொவிகம சாதியினர் காலனிய காலகட்டத்தில் உருவான போதிலும், அவர்கள் தமது வேர்களை பண்டைய மன்னராட்சியில் தேடினார்கள். சிங்களவர்கள் மத்தியிலும், தமிழர்கள் மத்தியிலும் ஆண்ட பரம்பரைக் கதைகள் ஒரே மாதிரித் தான் பேசப் படுகின்றன. பராக்கிரமபாகு போன்ற மன்னர்கள் எல்லாம் கொவிகம சாதியை சேர்ந்தவர்கள் என்று சிங்களவர்கள் வரலாற்றை திரித்தார்கள். சங்கிலியன் போன்ற மன்னர்கள் எல்லாம் வெள்ளாள சாதியை சேர்ந்தவர்கள் என்பது போல தமிழர்கள் வரலாற்றை திருத்தி எழுதினார்கள். பிரிட்டிஷ் காலனியான இலங்கையில் சமூகத்தின் உயர்நிலைக்கு வந்தவர்களுக்கு, நவீன கல்வி பெறும் வசதி கிட்டியது. அன்றிருந்த படித்த மத்தியதர வர்க்கம் வெள்ளாள-கொவிகம சாதியில் இருந்து தான் தோன்றியது. அந்த சமூகத்தை சேர்ந்த புத்திஜீவிகளுக்கு வரலாற்றை தமக்கேற்றவாறு மாற்றி எழுதுவதில் தடையேதும் இருக்கவில்லை. அன்று முதல் இன்று வரை, இலங்கை அரசியலில் அவர்களின் ஒரு பக்க சார்பான கருத்தியல், தேசியக் கோட்பாடாக கோலோச்சுகின்றது.

(தொடரும்)

12/2/10

ஈழத்தமிழர்=(இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்)-(முஸ்லிம்கள்)

முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டம் காரணமாக தமிழர்களுக்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாக, இலங்கைக்கு வெளியே கருத்து நிலவுகின்றது. சிக்கலான முப்பரிமாண இனப்பிரச்சினையை தீர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் இடையிலான முரண்பாடுகள். தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகள். சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களின் தாழ்வுச் சிக்கல்கள், போன்றன தனித்தனியே ஆராயப்பட வேண்டியவை. கடந்த காலத்தில் பிரச்சினையை தீர்க்க வந்த அந்நிய சக்திகள், இவற்றை கவனத்தில் எடுக்காததால் தோல்வியைத் தழுவியுள்ளன. அது இந்தியாவாக இருந்தாலும், நோர்வேயாக இருந்தாலும், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்தன.

பலர் நினைப்பது போல, இலங்கையின் இனப்பிரச்சினையின் தொடக்கம், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலானதல்ல. பிரிட்டிஷ் காலனிய இலங்கையில், 1915 ல், சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முதலாவது இனக்கலவரம் வெடித்தது. கண்டியில் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்திய வேளை, தெருவில் பௌத்த பிக்குகள் குழப்பம் விளைவித்தமையே கலவரத்தை பற்ற வைத்த பொறி. இருப்பினும் புதிதாக தோன்றிய சிங்கள வர்த்தக சமூகம், வர்த்தகத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை உடைப்பதற்காக திட்டமிட்டு வந்தனர். இனக்கலவரம் அவர்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் சிங்கள வர்த்தக சமூகம், அதே வழிமுறையை பின்பற்றி, தமிழர்களின் வர்த்தக, நிர்வாக ஆதிக்கத்தை இல்லாதொழித்தது.
இருப்பினும், அன்று ஈழத்தமிழ் தலைவர்கள் சிங்களவர்களின் பக்கம் சார்ந்து நின்றார்கள். காலனிய அரசு இனக்கலவரத்தில் ஈடுபட்ட சிங்களவர்களை பிடித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. அவர்களை விடுவிப்பதற்காக "தமிழினத் தலைவர்" சேர். பொன். இராமநாதன் லண்டன் வரை சென்று வழக்காடி வென்றார். அவரது வாதத் திறமையால் சிங்களக் கைதிகள் விடுதலையானார்கள். லண்டனில் இருந்து நாடு திரும்பிய இராமநாதனை, சிங்களவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றியை கொண்டாடினார்கள். எது எப்படி இருப்பினும், தொலைநோக்கற்ற இராமநாதன் போன்ற தமிழ் தலைவர்களின் செயல், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மனதில் மனக் கசப்பை தோற்றுவித்திருக்கும்.

அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசு, கலவரத்திற்கு மதப்பிரச்சினை காரணம் என்று கூறினாலும், வேறு பல சமூகக் காரணிகளும் கவனத்தில் எடுக்கத் தக்கவை. பௌத்த மத மறுமலர்ச்சி, சிங்களத் தேசியவாதம் போன்றன, பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக மாறலாம் என அஞ்சியது. அதனால் தான் கலவரத்தை காரணமாக வைத்து சிங்கள அரசியல் தலைவர்களை கூண்டில் அடைத்தது. "தமிழர்களின் தலைமை" எனக் கருதப்பட்ட, மேட்டுக் குடித் தமிழர்கள், அன்று தமது வர்க்க நலன்களை பற்றி மட்டுமே சிந்தித்தார்கள். தமிழ் தேசிய உணர்வெல்லாம் அவர்கள் மனதில் துளியேனும் இருக்கவில்லை. அன்றைய "தமிழர்கள்" மத்தியில் சாதிய உணர்வே அதிகமாக தலைதூக்கியிருந்தது. தலைநகர் கொழும்பில் உத்தியோகம், வீடு, சொத்து ஆகியனவற்றை கொண்டிருந்த மேட்டுக் குடித் தமிழரின் பூர்வீகம் யாழ்ப்பாணமாக இருந்தது. யாழ்ப்பாண சமூகம் ஒரு சாதிய சமூகம். ஈழப்போர் ஆரம்பமாகும் காலம் வரையில், அதாவது எண்பதுகளில் கூட, யாழ்ப்பாண அரசு நிர்வாகம் ஆதிக்க சாதியினரான வெள்ளாளரின் கைகளிலேயே இருந்தது. காவல்துறையில் கூட அவர்களின் ஆதிக்கம் தான்.

இந்தியா சுதந்திரமடைந்த பின்னர், தலித் சாதிகளையும் இந்துக்களாக ஏற்றுக் கொண்டு, இந்து மதத்தவரின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டியதைப் போல யாழ்ப்பாணத்திலும் நடந்தது. சிங்களப் பேரினவாதம் மென்மேலும் வளர்ந்து கொண்டு போனதால், அதற்கு எதிர்வினையாக தமிழ்த் தேசியவாதம் தோன்றியது. அந்தக் காலகட்டத்தில் கோயில்கள் அனைத்து சாதியினருக்கும் திறந்து விடப்பட்டன. தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை ஒழிக்கப் பட்டது. நீண்ட சாதியொழிப்பு போராட்டம் அந்த நிலைமையை தோற்றுவித்திருந்தது. இருப்பினும் மறுபக்கத்தில் தமிழ் (தேசிய) அரசியல் தலைமையும் அத்தகைய நெருக்கடிக்கு உள்ளாகியது. தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளை வழங்காமல் தமிழ் தேசியத்திற்கு ஆள் திரட்டியிருக்க முடியாது. இருந்தாலும், என்ன காரணத்தாலோ, முஸ்லிகளை மட்டும் தமிழர்களாக அங்கீகரிக்க மறுத்தார்கள்.

தமிழை தாய் மொழியாக கொண்ட மக்கள், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை பின்பற்றுகின்றனர். அன்றிலிருந்து இன்று வரை, இந்து, கிறிஸ்தவ மதத்தவர்கள் மட்டுமே தமிழர்கள் எனக் கருதுவதற்கு, "வெள்ளாள கருத்தியல்" மட்டுமே காரணமாக இருக்க முடியும். பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில், எதிர்பார்த்தது போல, கிறிஸ்தவர்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப் பட்டன. ஆரம்பத்தில் மதம் பரப்ப வந்த கிறிஸ்தவ மிஷனரிகள் பால் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஈர்க்கப் பட்டனர். பின்னர், அரசு உத்தியோகம், சலுகைகள் கிடைக்கும் என்ற காரணத்தால், உயர் சாதியினரும் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். அவர்கள் மதம் மாறினாலும், தமது சாதிய அடையாளத்தை விட்டுக் கொடுக்கவில்லை. சமுதாயத்தில் ஆதிக்கத்தை நிலை நிறுத்த அது உதவியது. இதனால், சைவ வெள்ளாளர்களுடனும் சாதி ரீதியான தொடர்புகளை பேண முடிந்தது. இந்தியாவில் பார்ப்பனீய கருத்தியல் போல, இலங்கையில் சைவ+கிறிஸ்தவ வேளாள கருத்தியல் அவ்வாறு தான் நிலைநாட்டப் பட்டது.

யாழ்ப்பாண இராச்சியம் இருந்த காலத்திலேயே, முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உண்டு. சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த மொரோக்கோ யாத்ரீகர் இபுன் பதூதா, தனது பயணக் குறிப்புகளில் அதை எழுதியுள்ளார். அவரின் குறிப்புகளில் இருந்து நமக்கு வேண்டிய சில தரவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அன்றைய (தமிழ்) மன்னர்கள் முஸ்லிம்களுக்கு சமூகத்தில் ஒரு இடம் ஒதுக்கவில்லை. எல்லாவித தொழில்வாய்ப்புகளும் மறுக்கப் பட்டு, வியாபாரத்தில் ஈடுபட அனுமதிக்கப் பட்டனர். இது மத்திய கால ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களின் நிலைமையுடன் ஒப்பிடத் தக்கது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
ஒன்று: சாதிய படிநிலைச் சமுதாயத்தில் முஸ்லிம்களுக்கு இடமிருக்கவில்லை.
இரண்டு: முஸ்லிம்களாக மாறியவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட இந்துக்கள்.
மூன்று: நிறுவனமயப் பட்ட இஸ்லாமிய மதத்தில் நிலவிய சகோதரத்துவம், இந்து மதத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு.
நான்கு: அன்று இந்து சமுத்திரத்தில் சர்வதேச வாணிபம் அரேபியரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால், வெளிநாட்டு வணிகத்திற்கு முஸ்லிம்களின் உதவி தேவைப்பட்டது.

முஸ்லிம்கள் எல்லோரும் வணிகத் துறையில் உள்ளவர்கள் என்பது, இப்போதும் தமிழர்கள் மத்தியில் நிலவும் முஸ்லிமகள் பற்றிய தப்பபிப்பிராயங்களில் ஒன்று, கிழக்கு மாகாண முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் விவசாயிகள். இலங்கை முழுவதும், படித்த மத்தியதர வர்க்க முஸ்லிம்கள் பல்வேறு துறைகளில் உத்தியோகம் பார்க்கின்றனர். இருப்பினும், "முஸ்லிம்கள் அனைவரும் வர்த்தகர்கள்." என்ற பொதுக் கருத்தானது, இன முரண்பாடுகளை கூர்மைப் படுத்த வல்லது. இதே போன்று ஐரோப்பியர்களும், "யூதர்கள் அனைவரும் வர்த்தகர்கள்." என்ற தப்பெண்ணத்தை கொண்டிருந்தனர்.

பொதுவாகவே வணிகத் துறையில் உள்ளவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பர். தென்னிலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்த முஸ்லிம்கள் தமிழோடு, சிங்களமும் சரளமாக பேசக் கூடியவர்கள். அது தமிழர்கள் மத்தியில் மேலும் ஒரு தப்பெண்ணத்தை வளர்த்தது. "முஸ்லிம்கள் தமிழ் மட்டுமல்ல, சிங்களமும் பேசுவார்கள். அதனால் அவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல." வெளியுலகம் தெரியாத அப்பாவி தமிழர்கள் அவற்றை உண்மை என்று நம்பினார்கள். வட-கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் மட்டுமல்ல, சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களும் இன்று வரை வீட்டில் தமிழ் பேசுகின்றனர். பாடசாலையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கின்றனர். அவர்களுக்கு சிங்களம் இரண்டாம் மொழி மட்டுமே. இருப்பினும் தென்னிலங்கையில் சில முஸ்லிம்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்பதை மறுப்பதற்கில்லை. சிங்கள மொழியில் படித்த தமிழர்களும் இருக்கின்றனர். அவர்கள் தமிழை விட சிங்களத்தை சரளமாக பேசுகின்றனர்.

ஆரம்பத்தில் கூறியது போல, இலங்கையின் முதலாவது இனக்கலவரம், சிங்கள-முஸ்லிம் இனப்பிரச்சினையின் விளைவாக ஏற்பட்டது. இருப்பினும், காலப்போக்கில் சிங்கள-தமிழ் இனப்பிரச்சினை கூர்மையடைந்த போது, சிங்கள அரசு முஸ்லிம்களை அரவணைத்துக் கொண்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், சிறிது காலம் சிறுபான்மை இனக் கட்சிகளின் ஒருங்கிணைந்த வேலைத் திட்டம் காணப்பட்டது. இருப்பினும், அனைத்து சிறுபான்மையினரின் அபிலாஷைகளை முன்னெடுக்க கூடிய கட்சியோ, அல்லது தலைவரோ தோன்றவில்லை. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் என்பன யாழ்-வேளாள மேலாதிக்க கருத்தியலில் இருந்து இறங்கி வரத் தயாராக இருக்கவில்லை. (யாழ்ப்பாணத்திலேயே அவை "வெள்ளாளக் கட்சிகளாக" கருதப்பட்டன.) யாழ் வெள்ளாள மேலாதிக்க உணர்வு, முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர் ஆகியோரை தரம் குறைந்தவர்களாக கருதியது.

"ஆண்ட பரம்பரை நாம்" என்ற மேட்டிமைத்தனமும், மற்றவர்களை தமிழ் தேசியத்திற்குள் கொண்டு வர தடையாக இருந்தது. தமிழரசுக் கட்சி என்ற பெயரே அதன் அடிப்படையில் தான் உருவானது. சிறுபான்மை இனங்களை ஒன்று சேர்க்கும் காரணி எதுவும் இல்லாததால், முஸ்லிம்களும், மலையகத் தமிழரும் தமது சமூக நலன் பேணும் அரசியலில் இறங்கினர். முஸ்லிம்கள், மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் யாவும், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆதரவு அளிப்பார்கள். அதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லிம்/மலையக தமிழ் சமூகத்தினரின் வாழ்க்கை மேம்படவில்லை. இருப்பினும் அரச நிழலில் அங்கேயும் ஒரு மேட்டுக் குடி வளர்ந்தது.

முஸ்லிம்களுக்கு என்று தனியான கட்சி தோன்ற முன்னமே, பல முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். தமிழ்க் கட்சிகள் எப்போதும் சிறிலங்கா அரச எதிர்ப்பு கொள்கையில் உறுதியாக நின்றவர்கள் அல்லர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களும் அரசுக்கு ஆதரவளித்து வந்தனர். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசு சார்பானவர்கள் என்ற பிரச்சாரம் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப் பட்டது. "முஸ்லிம்களை நம்ப முடியாது. அவர்கள் ஒரு நேரம் தமிழரோடு சேர்ந்து நிற்பார்கள். மற்ற நேரம் சிங்களவர்களுடன் சேர்ந்து நிற்பார்கள்." இது போன்ற கருத்துகள் பரப்பப் பட்டன. நாஜிகளின் காலம் வரையில் ஐரோப்பாவில் "யூதர்களை நம்ப முடியாது." போன்ற கருத்துகள் சாமானியர் மத்தியிலும் பிரபலமாக இருந்தது. தமிழ் அரசியல்வாதிகளும் "தொப்பி பிரட்டிகள்" போன்ற முஸ்லிம்களை இகழும் இனவாதச் சொற்களை சாதாரண மக்கள் மனதில் விதைத்தார்கள்.

முஸ்லிம்கள் மீதான யாழ்ப்பாணத் தமிழரின் வெறுப்புணர்வு கருத்தியல் ரீதியானது. ஆயினும் தமிழ் முதலாளிய வர்க்கமும் வர்த்தக போட்டி, பொறாமைகள் காரணமாக அதனை விரும்பியிருக்கலாம். கிழக்கு மாகாணத்திலோ, பிரச்சினை வேறு விதமானது. குறிப்பாக விவசாயிகளுக்கு இடையிலான காணிப் பிரச்சினை, நீர்ப் பாசன பிரச்சினை, தமிழ்-முஸ்லிம் மோதலுக்கு வழிவகுத்தது. முஸ்லிம் முதலாளிகளால் சுரண்டப்பட்ட அடிமட்ட தமிழர்களும், அதனை இனவாதக் கண்ணோட்டத்திலேயே புரிந்து கொண்டனர். மூவின மக்களும் தனித்தனி கிராமங்களில் வாழும் கிழக்கு மாகாணத்தில் கலவரம் வெடிக்க சிறு பொறி போதுமானதாக இருந்தது. முப்பதாண்டு கால ஈழப்போரை, அரசு படைகளுக்கும், ஆயுதந் தரித்த தமிழ்ப் போராளிகளுக்கும் இடையிலான மோதலாக மட்டுமே பார்க்க முடியாது. இனங்களுக்கிடையிலான குரோதம், மோதல்கள், படுகொலைகள், சொத்து அபகரிப்புகள், இனச் சுத்திகரிப்புகள் எல்லாமே அதனுள் அடங்குகின்றது. ஒவ்வொரு இனமும் தத்தமது நியாயத்தை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது.

11/22/10

ராஜஸ்தான் – மான்சாண்டோவின் வலையில் சிக்கிக்கொண்ட ஈ !

வறண்ட பூமியாக உள்ள ராஜஸ்தான் மாநிலம் விரைவில் நச்சுப் பாலைவனமாக மாறிப்போகும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மான்சாண்டோ நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து, தண்ணீரை வரைமுறையின்றி உறிஞ்சும் பாசனத்தைச் செயல்படுத்திப் பேரழிவை விதைக்கக் கிளம்பியுள்ளது, அம்மாநில அரசு .
பி.டி. பருத்தியின் மூலம் விவசாயிகளைத் தற்கொலைப் பாதைக்குத் தள்ளிய அமெரிக்கக் கொலைகார மான்சாண்டோ விதை நிறுவனத்துடன் ராஜஸ்தான் மாநில அரசு கடந்த ஜூலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. உலகின் ஏகபோக விதை நிறுவனமான மான்சாண்டோவுடன் கூட்டுச் சேர்ந்து, இரண்டாவது பசுமைப் புரட்சி என்ற பெயரில் வீரியரக சோளம், பருத்தி, மிளகு, தக்காளி, முட்டைக்கோசு, வெள்ளரி, காலிபிளவர், தர்ப்பூசணி முதலானவற்றுக்கான விதைச் சந்தையை விரிவுபடுத்த அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது. அரசின் விவசாயத்துறை, தோட்டக் கலைத் துறை, சுவாமி கேசவானந்த் விவசாயப் பல்கலைக்கழகம், மகாராணா பிரதாப் விவசாயத் தொழில்நுட்பக் கழகம், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பாக அம்மாநில அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இரகசியமாகப் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி விவரம் கேட்டதன் வாயிலாக இப்போது மெதுவாகக் கசிந்துள்ளது.
இந்த ஒப்பந்தப்படி, மான்சாண்டோ நிறுவனம் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேற்பார்வையிட்டு நடத்தும். இதன் தொடர்ச்சியாக வீரியரக விதைகளைக் கொண்டு விவசாயம் செய்து, அவற்றைப் பெருக்கிப் பரவலாக்கவும் செய்யும். உதாரணமாக பருத்தியை எடுத்துக் கொண்டால், பருத்தி பயிரிடுவது, உரமிடுவது, பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பது, அறுவடை இயந்திரத்தைப் பயன்படுத்துவது, விதைகளைச் சேகரிப்பது முதலான அனைத்தும் மான்சாண்டோவின் மேற்பார்வையில்தான் நடக்கும்.
மான்சாண்டோவின் வீரியரக விதைகள் கொடிய இரசாயனங்களால் பாடம் செய்யப்பட்டவை; பயன்படுத்துவதற்கே அபாயகரமானவை. அதிக மகசூல் தரும் வழக்கமான விதைகளை விட, மான்சாண்டோவின் வீரியரக விதைகள் ஒன்றரை மடங்கு அதிகமாகத் தண்ணீரை உறிஞ்சக்கூடியவை. மேலும், இந்த விதைகள் கூடுதலாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டையும் அதிகரிக்கக்கூடியவை. இதனால் மண்வளமும் நீர்வளமும் குறைந்து ராஜஸ்தான் மாநிலம் விரைவில் மனித இனம் வாழ முடியாத நச்சுப் பாலைவனமாகிப் போகும் என்று விவசாய ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த ஒப்பந்தப்படி, மாநில அரசின் விவசாய மற்றும் கால்நடை பல்கலைக்கழகங்கள் வாயிலாக விவசாய ஆராய்ச்சிகளை மட்டுமின்றி, மரபணு ஆராய்ச்சி செய்து கொள்ளவும் மான்சாண்டோ நிறுவனத்துக்குத் தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. இத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு மாநில அரசுதான் ஊதியம் கொடுக்கப் போகிறது. இத்தகைய அடிக்கட்டுமான வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு மான்சாண்டோ தனது லாபத்தைப் பெருக்கிக் கொள்ளப் போகிறது. மொத்தத்தில், ராஜஸ்தானின் விவசாய ஆராய்ச்சி முழுவதையுமே மான்சாண்டோ கட்டுப்படுத்துவதாகவும் விவசாயப் பல்கலைக்கழகங்கள் மான்சாண்டோவுக்கு அடிபணிந்து வேலை செய்வதாகவும் மாற்றப்பட்டுள்ளன.
பிரபல அறிவியலாளரான பி.எம்.பார்கவா உள்ளிட்டுப் பல்வேறு அறிவியலாளர்களும் சுற்றுச்சூழலாளர்களும் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நிறுவப்பட்டுள்ள இத்தகைய பல்கலைக்கழகங்களையும் ஆய்வுக்கூடங்களையும் இப்படியொரு ஏகாதிபத்திய நிறுவனத்துக்குச் சேவை செய்யுமாறு மாற்றுவது எந்த வகையில் நியாயமாகும் என்று கேட்கின்றனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களையும் விதைகளையும் சட்ட விரோதமான முறையில் அங்கீகரித்து, இந்திய அரசின் பல்வேறு துறைகள் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குச் சேவை செய்கின்றன என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றர்.
ராஜஸ்தான் மட்டுமின்றி குஜராத், கர்நாடகா, இமாச்சல பிரதேசம், ஒரிசா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்று சோளம், பருத்தி மற்றும் காய்கறிகளுக்கு வீரிய ரக விதைகளை மான்சாண்டோ அளிக்கப் போகிறது. 2012-13-க்குள் மரபீணி மாற்றப்பட்ட சோளம் மற்றும் பருத்தியைப் பயிரிடவும், களப்பரிசோதனைகள் செய்யவும், நாடு முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும், இந்திய அரசின் 450 விஞ்ஞானிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் விதைகளையும் விவசாயத்தையும் ஒட்டுமொத்தமாகக் கட்டுப்படுத்துவதாக மாண்சாண்டோ மாறிவிடும். இனி இந்தியா என்பதற்குப் பதிலாக, மாண்சாண்டோலாந்து என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்

11/21/10

அமெரிக்க மான்சாண்டோவுக்கு எதிராக ஆர்த்தெழுந்த ஹெய்தி மக்கள்

மத்திய அமெரிக்காவின் வறுமைமிக்க ஹெய்தி நாட்டில், கடந்த ஜனவரியில் தலைநகரில் ஏற்பட்ட நிலநடுக்கப் பேரழிவுக்குப் பின்னர் ஏறத்தாழ 8 லட்சம் மக்கள் கிராமப்புறங்களில் அகதிகளாகக் குவிந்தனர். அவர்களுக்கு உணவளிக்க விதைச் சோளத்தை எடுத்துப் பயன்படுத்தியதால், கிராம மக்களிடம் சோள விதை பற்றாக்குறை ஏற்பட்டது. அவலத்தில் சிக்கியுள்ள ஹெதி நாட்டுக்கு உதவுவது என்ற பெயரில், கொலைகார மான்சாண்டோ நிறுவனம் தனது விதைகளைக் கொண்டு இப்போது ஆதிக்கம் செய்யக் கிளம்பியுள்ளது.
கடந்த மே மாதத்தில் ஹெதி நாட்டுக்கு முதல் தவணையாக 60 டன் விதைகளைக் கொடுத்த மான்சாண்டோ நிறுவனம், இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் 400 டன் விதைகளைக் கொண்டுவந்து கொட்டப்போகிறது. அமெரிக்காவின் அனைத்துலக வளர்ச்சி முகமை (க்குஅஐஈ) மூலமாகத் தீவிர விவசாய சாகுபடி என்ற பெயரில் இவை வந்திறங்கப் போகின்றன. மான்சாண்டோவின் மரபணு மாற்றப்பட்ட சோள விதைகள் இவற்றில் கலந்துள்ளன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மான்சாண்டோ அளிக்கும் வீரியரக சோளம், தக்காளி விதைகள் கொடிய இரசாயனப் பொருட்களால் பாடம் செய்யப்பட்டவை. அவற்றைப் பயன்படுத்தும் விவசாயத் தொழிலாளர்கள் உரிய பாதுகாப்புக் கவசங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அரசே உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இத்தகைய அபாயங்களைப் பற்றி அறிவிக்காமலேயே மான்சாண்டோவின் விதைகள் ஹெதியில் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன.
விவசாயிகள் தமது அனுபவ அறிவால் பாரம்பரியமாகச் சேகரித்துப் பயிரிட்டு வந்த சோள விதைகளை ஒழித்து, அதனிடத்தில் தனது விதைகளைத் திணித்து ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதே அமெரிக்க மான்சாண்டோ நிறுவனத்தின் நோக்கம்.
இதை உணர்ந்துள்ள ஹெய்தி நாட்டின் விவசாயிகள், கடந்த ஜூன் 4-ஆம் தேதியன்று பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்களை அணிதிரட்டி மான்சாண்டோ நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தினர்.
மான்சாண்டோ விதைகளை எரித்து, “பாரம்பரிய சோள விதைகளைக் காப்போம்! மான்சாண்டோவை விரட்டுவோம்!” என்ற முழக்கங்ககளுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், அமெரிக்கக் கண்டம் எங்கும் மான்சாண்டோவின் கோரமுகத்தைத் திரைகிழித்துக் காட்டியுள்ளது.
________________________________

11/5/10

பிரேசில்: வர்க்கங்களின் கால்பந்து மைதானம்

"இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா" தொடர் - 3
(பிரேசில், பகுதி 1)
"நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள். ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்!" - Dom Hélder Pessoa Câmara (கத்தோலிக்க மேற்றிராணியார், பிரேசில்)

உலகம் முழுவதும் உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு பிடித்த நாடு பிரேசில். அதற்கப்பால் உலகின் மிகப் பெரிய நாடுகளில் (8.511.965 km) ஒன்றான பிரேசிலை அறிந்து வைத்திருப்பவர்கள் அரிது. மேற்குலகில் பிரேசில் கேளிக்கைகளின் சொர்க்கம். வர்ணமயமான கார்னிவல் அணிவகுப்புகள். பாலியல் பண்டமாக நோக்கப்படும் அழகிய பெண்கள். இவை தான் பலருக்கு நினைவுக்கு வரும். கொஞ்சம் "சமூக அக்கறை கொண்டவர்கள்" என்றால், தெருக்களில் வளரும் குழந்தைகள், நாற்றமடிக்கும் சேரிகளை பார்த்து, வறிய பிரேசில் மீது அனுதாபப் படுவார்கள். ஆனால் எண்ணெய் வளத்தை தவிர உலகின் அனைத்து செல்வங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. என்றோ லத்தீன் அமெரிக்காவின் வல்லரசாக வந்திருக்க வேண்டியது. மொழி, இன, மதப் பிரச்சினை என்று பிரிவினையை தூண்டும் காரணிகளும் கிடையாது. அப்படிப்பட்ட பிரேசில் ஏன் இன்றைக்கும் பின்தங்கிய வறிய நாடாக உள்ளது?

மொத்த சனத்தொகையில் இருபது வீதமான பணக்காரர்கள், தேசத்தில் மொத்த உற்பத்தியில் அறுபது வீதத்தை நுகர்கிறார்கள். சனத்தொகையில் நாற்பது வீதமாக உள்ள ஏழைகளின் நுகர்வு பத்து வீதம் மட்டுமே. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு மூல காரணம். சாவோ பாவுலோ, ரியோ டெ ஜனைரோ போன்ற உலகத் தரம் வாய்ந்த நகரங்கள், தென்னகத்து நியூ யார்க் போல காட்சி தரும். விண்ணை எட்டத் துடிக்கும் கட்டிடங்கள், கான்க்ரீட் காடுகளாக காணப்படும். பிராடா, ஷனேல், அடிடாஸ்... உலகில் சிறந்த பிராண்ட் பொருட்களை மட்டுமே விற்பனை செய்யும் ஆடம்பர அங்காடிகள். அவற்றை வாங்குவதற்கு மொய்க்கும் பணக்காரக் கும்பல். வீதி வழியாக கடைக்கு சென்றால், வாகன நெரிசலில் சிக்க நேரிடலாம், அல்லது கிரிமினல்களின் தொல்லை. இதனால் தமது பங்களாக்களில் இருந்து ஹெலிகாப்டரில் பறந்து வந்து "ஷாப்பிங்" செய்கிறார்கள்.

பிரேசில் மக்களில் பெரும்பான்மையானோர் நகரங்களில் வாழ்கின்றனர். நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான நகரங்களின் எண்ணிக்கையை வைத்து பிரேசிலின் வளர்ச்சியை கணக்கிட்டு விட முடியாது. பொருளீட்டுவதற்காக நாள் தோறும் லட்சக்கணக்கான நாட்டுப்புற ஏழைகள் பெரு நகரங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள். அதிர்ஷ்டத்தை தேடி ஓடி வரும் மக்களை அரவணைக்க நகரங்களில் யாரும் இல்லை. இருப்பிடம், வேலை எல்லாம் அவர்களாகவே தேடிக் கொள்ள வேண்டும். இதனால் நகரத்தின் ஒதுக்குப் புறமாக சேரிகள் பெருகி வருகின்றன. அந்த இடத்தில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒரு தகரக் கொட்டகை போட்டுக் கொள்வது. மின் கம்பங்களில் கம்பியைப் போட்டு மின்சாரத்தை திருடுவது. தண்ணீருக்காக குழாய்யடியில் சண்டை போடும் குடும்பங்கள். சுருக்கமாக, இவை "உலகத்தரம் வாய்ந்த சேரிகள்." புகழ் பெற்ற மும்பையின் தாராவி சேரி பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு அதிகம் விளக்கத் தேவை இல்லை. பிரேசிலில் இவற்றை "பவேலா" (Favela ) என்றழைப்பார்கள்.

பவேலா வாழ் மக்கள் நகரங்களில் பணக்கார வீடுகளில் வேலை செய்வார்கள். டாக்சி ஓட்டுனர்கள், நடைபாதை வியாபாரிகள், ஹோட்டல் பணியாட்கள் என்று உழைத்து முன்னுக்கு வந்த சிலர் சேரிகளிலேயே வசதியான சிறு வீடு கட்டிக் கொண்டு வாழ்கிறார்கள். இதைவிட பணம் சேர்க்க சட்டவிரோதமான தொழில்களில் ஈடுபடுவோருக்கும் அது தான் புகலிடம். பாலியல் தொழிலாளர்கள், போதைவஸ்து விற்பவர்கள், மற்றும் மாபியா குழுக்களுக்கு வேலை செய்பவர்கள் என்று பலர். கிரிமினல்களின் தொல்லை தாங்காமல் போலிஸ் அந்தப் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை. அந்த அளவுக்கு பவேலாவில் கிரிமினல்களின் ஆட்சி நடக்கிறது. ஒரு ஜீவன் வாழ்வதற்கு போராட வேண்டிய சூழலில், தாய்மார்களால் கைவிடப்பட்ட குழந்தைகள், தெருக்களில் அனாதைகளாக கிடக்கும். தெருவிலேயே வளரும் குழந்தைகள் பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன. விபச்சாரம், போதைப்பொருள், திருட்டு, கொலை என்று எல்லாவித குற்றச் செயல்களிலும் சிறுவர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களை மாபியக் குழுக்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. பிடிபட்டால் சிறுவர்கள் என்று சிறு தண்டனையுடன் தப்பி விடுவார்கள். இருப்பினும் நாள் தோறும் குறைந்தது பத்து சிறுவர்களாவது, போலிஸ் - மாபியா சண்டையில் மடிகின்றனர்.

லத்தீன் அமெரிக்க கண்டத்தில் தெளிவாகத் தெரியும் வர்க்க முரண்பாடுகளை பிரேசிலிலும் அவதானிக்கலாம். பணக்காரர்கள் தங்களது நலன்களை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். சுரண்டலில் சேகரித்த செல்வத்தை எப்படி செலவழிப்பது என்பது மாத்திரமே அவர்களது கவலை. ஏழைகளும் தமக்குத் தெரிந்த வழியில் பணத்தை சேர்க்க விளைகிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வு தொடரும் வரை கிரிமினல்களும் பெருகிக் கொண்டே இருப்பார்கள். "திருடுவது பாவம்" என்று ஏழைகளுக்கு மட்டுமே போதித்துக் கொண்டிருந்த தேவாலயங்களும் பிற்காலத்தில் இந்த யதார்த்தை புரிந்து கொண்டன. எழுபதுகளில் இராணுவ சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் முற்போக்கு பாதிரிகள் தோன்றினார்கள். அவர்களில் Dom Hélder Câmara பிரேசிலுக்கு வெளியிலும் பலரால் அறியப்பட்டார். "நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள். ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்!" என்ற அவரின் வாசகம் உலகப் புகழ் பெற்ற பொன்மொழியாகியது.

பிரேசிலில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் சில உள்நாட்டு தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும் உள்வாங்கியுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் இருந்து பிடித்து வரப்பட்ட கறுப்பின அடிமைகள், தங்களது மதத்தை பின்பற்ற தடை இருந்தது. இதனால் சில ஆப்பிரிக்க தெய்வங்கள் கத்தோலிக்க புனிதர்களாக வழிபடப்பட்டன. அதே போல பிரேசிலில் பேசப்படும் போர்த்துகீச மொழியும் பல ஆப்பிரிக்க, செவ்விந்திய பழங்குடி சொற்களையும் கொண்டுள்ளது. அனேகமாக கொய்யாப்பழம், போர்த்துக்கேயருடன் பிரேசிலில் இருந்து நமது நாட்டிற்கு வந்திருக்கலாம். பிரேசில் செவ்விந்திய பழங்குடியினர் அந்தக் கனியை "கொய்யாவா" (Goiaba ) என்று பெயரிட்டிருந்தனர். செவ்விந்திய பூர்வகுடிகளின் பிரதான உணவான "மண்டியோக்" போத்துக்கேயரால் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. சிங்களத்தில் அதனை திரிபடைந்த போர்த்துக்கேய பெயரால் "மைஞோக்கா" என்பார்கள். தமிழில் அதன் பெயர் மரவள்ளிக் கிழங்கு.

பிரேசிலின் மதமும், மொழியும், கலாச்சாரமும் செவ்விந்திய பழங்குடியின மற்றும் ஆப்பிரிக்க கூறுகளைக் கொண்டிருந்த போதிலும், தேசத்தின் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. இந்த இரு சிறுபான்மை இனங்களும் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றன. அவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்புகளும் குறைவு. இதனால் பெரும்பான்மையானோர் ஏழைகளாக வருந்துகின்றனர். சல்வடோர் என்ற வடக்கத்திய நகரத்தில் ஆப்பிரிக்க அடிமைகளின் வழித்தோன்றல்கள் அதிகமாக வாழ்கின்றனர். சல்வடோர் ஒரு காலத்தில் பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. பிரேசிலின் வட மேற்கை சேர்ந்த அமேசன் நதிப் பிராந்தியத்தில் செவ்விந்திய பழங்குடியினர் வாழ்கின்றனர். இன்றைய பிரேசிலின் வடக்குப் பகுதி மிகவும் பின்தங்கியுள்ளது. எல்லா வித உற்பத்தியும் நின்று போய், வறுமை தாண்டவமாடுகின்றது. இருப்பினும் அமேசன் ஆற்றுப்படுகைகளில் தங்கத் துகள்களை எடுத்து திடீர் பணக்காரனாகும் ஆசையில் இன்றும் பலர் வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர் போர்த்துக்கல்லில் இருந்து தங்கம் தேடி வந்தவர்கள் பிரேசிலில் நிரந்தரமாக குடியேறி விட்டனர். கடற்கரையோரம் தங்கம் கிடைக்காததால் உள்நாட்டிற்குள் புகுந்தார்கள். அங்கே தங்கத்தை விட வேறு பல வளங்களையும் கண்டு கொண்டார்கள். குறிப்பாக பலகை ஏற்றுமதிக்காக காடுகளில் இருந்த பிரேசில் மரங்கள் தறிக்கப்பட்டன. பிரேசில் என்ற பெயர் வரக் காரணமாக இருந்த பலகைகள் வெளிநாட்டில் தரமானதாக மதிக்கப்பட்டன. ரப்பர், கோப்பி, கரும்பு ஆகிய பயிர்களுக்கான பெருந்தோட்ட செய்கைக்காகவும் காடுகள் அளிக்கப்பட்டன. காடழிப்பு பிற்காலத்தில் மழை வீழ்ச்சிக் குறைபாட்டையும், அதன் நிமித்தம் பிரேசிலுக்கு பொருளாதார பின்னடைவையும் கொண்டு வந்தது. பிரேசில் இன்று வறுமையான நாடாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

"சரித்திரம் எமக்கு அவசியமில்லை", என்று சில நடுத்தர வர்க்க புத்திஜீவிகள் வாதிடுவார்கள். பிரேசிலில் கறுப்பினத்தவர்களும், செவ்விந்தியர்களும் வறுமையில் வாடுவதற்கு வரலாற்றில் நேர்ந்த ஒரு பாரிய இடப்பெயர்வு காரணமாக உள்ளது. போர்த்துக்கேய காலனியாதிக்கவாதிகள் செவ்விந்தியர்களை தங்கச் சுரங்கங்களில் அடிமைகளாக வேலை வாங்கினார்கள். அவர்களின் உழைப்பை சாகும் வரை பிழிந்து எடுத்தார்கள். பின்னர் ஆப்பிரிக்காவில் (அங்கோலா, கினியா) இருந்து லட்சக்கணக்கான கறுப்பின அடிமைகளை பிடித்து வந்தார்கள். அவர்களின் உழைப்பில் பெருந்தோட்டத் துறை செழித்தது. போர்த்துக்கேயர்கள் மட்டும் பெருந்தோட்ட முதலாளிகளாக இருக்கவில்லை. ஆங்கிலேயர்கள், யூதர்கள் என்று பல்லின முதலாளிகளின் வர்க்கமாக இருந்தது.

ஒரு சாதாரண வெள்ளையின ஐரோப்பியருக்கு கூட பிரேசில் சென்று செல்வந்தனாகும் யோகம் அடித்தது. அடிமையை வைத்து வேலை வாங்குவது என்பது மாடு வாங்கி உழுவதைப் போன்றது. அடிமையை வாங்குவதற்கு சிறிதளவு பணமும், பராமரிக்கும் செலவையும் பொறுப்பெடுத்தால் போதும். யாரும் பெருந்தோட்ட முதலாளியாகி விடலாம். நிலம் கூட வாங்கத் தேவை இல்லை. பூர்வகுடிகளை விரட்டி விட்டு அபகரித்த நிலம் தாராளமாக கிடைக்கும். இவ்வாறு குறைந்த முதல் போட்டு நிறைந்த லாபம் சம்பாதிக்கும் துறையால் பலர் கோடீஸ்வரர் ஆனார்கள். ஒரு கரும்புத் தோட்டம் போட்டாலே போதும். பணம் மழையாகப் பொழியும். ஐரோப்பிய சந்தையில் கரும்புச் சீனி அதிக விலையில் விற்கப்பட்ட ஆடம்பரப் பொருளாக இருந்தது. கடைகளில் ஒரு கிராம் சீனி மருந்து மாதிரி விற்பனையானது.

போர்த்துக்கல் அன்று பிரேசிலை தனது குடியேற்றக் காலனியாக அறிவித்து இருந்தது. குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவிப்பவர்களையும், பொது மன்னிப்பு அளித்து குடியேற அனுப்பி வைத்தார்கள். காலனிகளில் கிரிமினல் குடியேறிகளின் சேவை, காலனியாதிக்கவாதிகளுக்கு வெகுவாக தேவைப்பட்டது. முதலாவதாக, செவ்விந்திய பூர்வகுடிகளை அழித்தொழிக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டார்கள். இரண்டாவதாக, பெருந்தோட்டங்களில் இருந்து தப்பியோடிய அடிமைகளை பிடித்து வரும் பணி ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய அடிமையின் தலையைக் கொய்து வந்தால் சன்மானம் வழங்கப்பட்டது. இந்த பெருந்தோட்டக் காவலர்கள் எல்லாம் முன்னாள் கிரிமினல்கள் அல்லவா? அதனால் அடிமைகளை ஈவிரக்கம் பாராமல் அடக்கினார்கள். Bandeirantes என அழைக்கப்பட்ட இந்தப் போர்த்துக்கேய கிரிமினல்களை நாயகர்களாக சித்தரிக்கும் கதைகளும் அந்தக் காலத்தில் உலாவின. சாவோ பவுலோ நகரில் கொடிய Bandeirantes கிரிமினல்களுக்கு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டுள்ளது.

9/19/10

தமிழக அகதி முகாமில் தத்தளிக்கும் ஈழத்து வாழ்க்கை!

ஈழத்தின் நினைவுகள் – பாகம் 11
--------------------------------------------
ஈழத்திலிருந்து உயிர் தப்பி, சிதறடிக்கப்பட்ட கனவுகளோடு அந்நிய தேசத்தில் அகதி நான். என் வாழ்வின் அடுத்த நிகழ்ச்சி நிரல் என்ன என்பதை இனி யாரால் அல்லது எந்த சட்டதிட்டங்களால் தீர்மானிக்கப்படும், தெரியவில்லை. என் சொந்த எதிர்காலத்தை கூட நிர்ணயிக்க முடியாத பரிதவிப்போடும், என் மீது வலிந்து திணிக்கப்பட்ட அகதிநிலை பற்றி பல விடை தெரியாக் கேள்விகளுடனும் மனம் பாறையாய் இறுகிக்கிடந்தது. நான் அகதி என்ற யதார்த்தத்தை என்னையுமறியாமல் எனக்குள் மறுதலித்துக்கொண்டே இருந்தேன். மனித மனம் ஓர் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதன் முதற்படிநிலை அதை “மறுதலித்தல்” என்பதுதான் என்ற அறிவு எனக்கு அன்று இருக்கவில்லை.
அந்த உணர்வலைகள் எனக்குள் சற்றே அடங்கியிருந்த வேளையில் என்னை சுற்றிக் கவனித்தேன். அங்கிருந்த ஆயிரக்கணக்கானோரும் ஏதேதோ பேசினார்கள், பெருமூச்சு விட்டார்கள், சாபம் போட்டார்கள், அழுகைக்கும் பேச்சுக்குமிடையே வார்த்தைகளுக்கு தவித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் புதிதாக வந்தவர்களிடம் எந்த ஊரிலிருந்து வருகிறார்கள் என்று தெரிந்து ஈழத்தில் மற்றவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்று விசாரித்தார்கள். யார், யாரோ பெயர்களை எல்லாம் சொல்லி அவர்கள் நலமா என்று ஆவலுடன் பதில் தெரியாத கேள்விகளை கேட்டு பதிலுக்காய் எங்கள் வாயை பார்த்துக்கொண்டிருந்தார்கள். “இந்த பொம்மரும், ஆமியும் இல்லையெண்டால் ஊரிலேயே இருந்திருக்கலாம்” என்று எதார்த்தமாய் அங்கலாய்த்தார்கள். எங்களைப்போல் புதியவர்களின் வருகையால் பாதிக்கப்படாதவர்களும் இருந்தார்கள். இவர்கள் தான் யதார்த்தவாதிகள் என்று நினைத்துக்கொண்டேன்.
யார் எப்படி இருந்தாலும் ஈழம், அகதி என்ற பொதுவான ஒற்றுமையைத்தவிர வேறெந்த வேறுபாடும் அங்கே இருந்தது போல் எனக்கு தெரியவில்லை. எனது உணர்வுகளை கடந்து யதார்த்தம் என் அறிவை சுடத்தொடங்கிய போதுதான் அகதி முகாமின் அடிப்படை வசதிகள், வேலை வாய்ப்பு(??), கல்வி, எல்லாவற்றுக்கும் மேல் சுதந்திரமான நடமாட்டம் இவை பற்றியெல்லாம் சிறிது, சிறிதாக மனம் கிரகிக்கத் தொடங்கியது.
இவர்களில் இனி நானும் ஓர் அங்கம். இந்த வலிகளை இனி ஜீரணிக்க என்னை நான் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். ஓர் ஓலைக்குடில், அதில் நான்கைந்து சமையல் பாத்திரம், ஓர் அடுப்பு இதையெலாம் உங்கள் வரிப்பணத்தில் தமிழக அரசு கொடுத்தது. இன்ன பிற வசதிகள் என்றால் நான்கு தண்ணீர் குழாய்கள் மட்டுமே. உங்கள் மண்ணில் ஒண்டிக்கொள்ள இடம் கொடுத்து, இரண்டு வேளை சாப்பாடும் கொடுத்ததிற்கு என் போன்ற ஈழத்தமிழர்கள் சார்பில் உங்கள் எல்லோருக்கும் நன்றி.
முகாம் என்ற பெயரில் ஒற்றை மரம் கூட இல்லாத பொட்டல் வெளியில் போடப்பட்ட குடிசைகளுக்கு நடுவே நிழலுக்காய் மனம் தவித்த போது என் வீட்டு மாமரமும், தென்னையும் என் உயிருக்குள் நிழற்குடை விரித்தன. அகதி முகாமில் அதிகாலை இரண்டு மணிக்கும் மூன்று மணிக்கும் இடையே குளிரக்குளிர குளித்த போதெல்லாம் ஈழத்தில் என் வீட்டு கிணற்றடியும் நான் குளிப்பதற்காய் கட்டப்பட்ட மறைப்பும் என் நினைவுகளில் வந்து, வந்து போயின. கண்கள் பனித்தன. அதிகாலை மூன்று மணிக்கு இருள் கவிழ்ந்திருந்தாலும் என் அந்தரங்கம் இப்படி பொது வெளியில் கடை விரிக்கப்பட்டு விட்டதோ என்ற ஓர் உணர்வு என் மெய் தாள வைத்தது. இது தவிர, அதிகாலையில் சூரியன் சந்திரனை எதிர்த்திசையில் விரட்டுமுன், அந்த இருள் பிரியாத பொழுதிலேயே முகாமிலிருந்து நீண்ட தொலைவிலிருந்த சவுக்குத்தோப்பில் காலைக்கடன் முடித்தாக வேண்டும். இதுவே ஓர் அகதி முகாம் பெண் அகதியின் அன்றாட நிகழ்ச்சி நிரல்.
இதையெல்லாம் படிப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று கூடத் தோன்றலாம். அப்படி ஒரு வாழ்கையை வாழ்ந்து பார்த்தால் தான் அதிலுள்ள கஷ்டமும், வலியும் புரியும். இந்த அன்றாட நிகழ்வுகளின் ஒவ்வோர் அங்கத்திலும் என் மண்ணும், வீடும், மனிதர்களும் என் நினைவுகளை நிலை கொள்ள விடாமல் அலைக்கழித்தன. மறுபடியும் என் ஊருக்கே திரும்பி ஓடவேண்டும் போல் துக்கம் தொண்டையை அடைக்கும். அந்த உணர்வுகளிலிருந்து தப்பிக்கொள்ள எனக்கு மட்டுமா இந்த விதி, இது இங்குள்ள எல்லோருக்கும்தானே என்று என்னை நானே சமாதப்படுத்த முயன்று தோற்றும் போனேன். எனக்கு பைத்தியம் பிடிப்பததை தவிர்க்க என்னை சுற்றி நடப்பதை வேடிக்கை பார்ப்பதும் என் வழமைகளில் ஒன்றாய்ப்போனது. அந்த அகதி முகாமில் வெயில், மழை, காவற்துறை, அதிகாரிகள், அகதி மனிதர்கள் இவற்றை தவிர வேறேதும் என் கண்ணில் படவில்லை. ஓர் அசுவாரசியத்தோடு இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்தேன். இதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்?
என்னால் ஏற்கவும் முடியாமல், மறுப்பதற்கு மாற்று வழியும் இல்லாமல் அந்த அகதி முகாம் வாழ்க்கைக்கும், வழமைக்கும் என்னை பழக்கப்படுத்திக்கொள்ள ஆரம்பத்தில் நிறையவே சிரமப்பட்டேன். அகதி முகாமில் எல்லோரும் பெயரளவில் உண்டு, உறங்கி, இவையிரண்டிற்கும் இடையே எந்தவொரு வேலைவெட்டியும் அல்லது வெட்டி வேலையும் இல்லாமல் இருப்பதை முரண் நகையாய் பேசித் தீர்த்தார்கள். அப்படி அவர்கள் பேசி தீர்த்த வார்த்தைகளில் ஒளிந்திருந்த வலிகள் என் மனதை ஆழமாய் கீறிவிட்டுச் சென்றன. நான் முகாமிலிருந்த காலங்களில் யாருமே ஏதாதவது வேலை கிடைத்ததாக சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை, பார்த்ததில்லை.
சமீப காலங்களில் கூட இங்குள்ள தமிழ் தொலைக்காட்சியில் தமிழகத்தில் ஒளிபரப்பான ஈழத்தமிழர்களின் அகதி முகாம் வாழ்வு பற்றிய Talk Show பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களின் பற்றாக்குறை வாழ்வு, மூட்டை தூக்கிப்பிழைப்பதைத் தவிர வேறு வழியில்லாத அவலம், உயர் கல்விக்கு வாய்ப்போ, வசதியோ இல்லாமை, ஓர் முகாமிலுள்ள அகதி TVS 50 வாங்குவதில் கூட உள்ள சிக்கல்கள் பற்றியெல்லாம் கண்ணீருக்கும், சிரிப்புக்கும் நடுவே சொல்லித் தீர்த்தார்கள். எங்களுக்குத்தான் எங்கள் உறவுகள் படும் அவஸ்தைகள் வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போலிருந்தது. ஈழத்தமிழா இது தான் உன் விதியா என்று நெஞ்சு கனத்தது. இலங்கை வான்படை, தரைப்படை, கடற்படை என்று எந்த படை உயிர் குடிக்கும் என்று தெரியாத நிலையிலும் ஈழத்தில் நாங்கள் எதையோ செய்து சுயதேவைகளை பூர்த்தி செய்து கொண்டோம்.
அகதியான அவலம் மானம் “மானியமாய்” எங்களைப் பார்த்து பல்லை இளித்தது. கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கியது ராவணனின் நெஞ்சம் மட்டுமல்ல, எங்களினதும்தான். வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடான இந்தியாவின் வறுமைக் கோட்டைத் தாண்டத் துடிக்கும் மக்கள், அதை அழிக்கமுடியாத அரசியல், பொருளாதார கொள்கை வகுப்புகள் இதையெல்லாம் நினைத்துப்பார்க்கும் போது இந்த மானியம் போதுமா அல்லது பற்றாக்குறையா என்று கணக்குப்பார்க்க, குறை கூற மனம் ஒப்பவில்லை. இது தான் எங்கள் விதியோ? இதுவே நிரந்தரமாகிவிடுமோ என்றபயமும், தன்மானமும் தான் உயிரை பாடாய்ப் படுத்தியது. சொந்த மண்ணில் எல்லோருக்குமே ஏதோவொரு தொழில், போதுமோ, போதாதோ ஏதோ வருமானம் என்று எல்லாத்தையுமே போர் தின்றது போக இப்போது மீதியுள்ளது உயிர் மட்டுமே. அந்த உயிரும் கூட இந்த அகதி முகாம் வாழ்வில் கசந்து முகாமிற்கும் ஈழத்திற்குமிடையே அல்லாடிக்கொண்டிருந்தது.
குண்டுகள் உயிர் குடிக்கவில்லை. ஒருவேளை உணவேனும் உயிர்ப்பயமின்றி உண்ண முடிகிறது. சரி, அடுத்தது என்ன என்று யோசித்தபோது குறுக்கும், மறுக்குமாக “ஆமி, பெடியள்” விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள்தான் கண்ணில் பட்டார்கள். தலைமுறைக்கும் இவர்கள் இதைத்தான் விளையாடப் போகிறார்களா? அவர்களின் எதிர்காலம் அகதி முகாமுக்குள்ளேயே முடக்கப்படப் போகிறதா? என் அடுத்த தலைமுறைக்கு நான் எதை விட்டுச் செல்லப்போகிறேன்? அகதி அந்தஸ்தையும், அவலச் சொத்தையுமா? அல்லது, இந்த உலகம் பழிக்கும் படி, படிக்காத முட்டாள் கூட்டம் என்ற அவப்பெயரா? அகதி வாழ்வின் எச்சங்கள் இவைகள் தானென்றால் எங்களுக்கு ஓர் சேரியும், இருண்ட எதிர்காலமும்தான் விதியாகிப் போகும்.
ஆகவே, ஈழத்தமிழன் எதை இழந்தாலும் கல்வியை இழக்கக்கூடாது. முகாமில் எங்கள் அடிப்படை தேவை ஏதோ வகையில் திருப்தி இல்லாமலே தீர்ந்தாலும், அடுத்து கல்விக்கும் இந்த அகதிமனம் ஆசைப்பட்டது. அது பற்றி விசாரித்த போதுதான் சொன்னார்கள். அந்த ஊரிலிருந்து நிறைய தூரத்தில் ஓர் சிறிய பாடசாலை மட்டுமே இருக்கிறதாம் என்று. பள்ளிக்கூடம் இருக்கிறது. அறிவும், திறமையும் எங்கள் குழந்தைகளிடமும் இருக்கிறது. ஆனால், நிர்வாகம் எதிர்பார்க்கும் இத்யாதிகள் ஈழத்தமிழர்களிடம் இருக்கிறதா, தெரியவில்லை. ஆனால், ஒரு சில மாணவர்கள் பள்ளிக்கூடம் சென்று வருவதை பார்த்த பின்தான் தெரிந்து கொண்டேன், அகதி அட்டையை காட்டினால் அனுமதி கிடைத்தது என்று சொன்னார்கள். பிறகேன் எல்லாக்குழந்தைகளும் பாடசாலை செல்லவில்லை? நூறு குழந்தைகள் படிக்குமிடத்தில் எப்படி ஆயிரம் குழந்தைகள் படிக்க முடியும். உங்கள் கல்வியை பங்கு கேட்க நாங்கள்!
இப்போது புரிந்தது ஏன் முகாமிலுள்ள எல்லாக்குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகவில்லை என்று. பிச்சை புகினும் கற்கை நன்றே. யார் சொன்னது? ஞாபகமில்லை. ஆனால், அந்த சொற்கள் மட்டும் பசுமரத்தில் ஆணியாய் மனதில் பதிந்து போனது. அடிமை சகதியிலிருந்து விடுபட எங்களுக்கு கல்வியும் முக்கியம். எங்கள் வலிகளிலிருந்து அதை புரிந்து கொண்டு எல்லா ஈழத்தமிழர்களும் படிக்க வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கிறது. இப்போதெல்லாம் அகதி முகாமிலிருந்து கொண்டே படித்து ஒரு சிலர் மட்டுமே அப்படி தமிழ்நாட்டில் முன்னேறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டில் அகதி முகாமில் எல்லாக்குழந்தைகளுக்கும் கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறதா தெரியவில்லை. ஆம் கிடைக்கிறது என்று நீங்கள் யாராவது சொன்னால் சந்தோசப்படுவேன். உலகில் எந்த குழந்தைக்கும் கல்வி கனவாய் போகாமல் அது மெய்ப்பட வேண்டும். கல்விக்காகவே அன்று நாங்கள் முகாமிலிருந்து வெளியேற வேண்டுமென்று நினைத்தோம்.
சிங்கள ராணுவம் இல்லாத இடமெல்லாம் எங்களுக்கு சொர்க்கபுரிதான். அது அகதி முகாமே ஆனாலும். முட்கம்பி இல்லாத முகாம், காலில் பூட்டப்படாத விலங்குகளோடு சுதந்திர அடிமைகளாய் வலம் வந்தோம். போர் பூமியைத்தாண்டி, அகதி முகாமிற்கு வெளியே இன்னோர் இயல்பான உலகம் இயங்குவதை பார்க்க, அதில் நாங்களும் ஓர் அங்கமாக கலந்து போக ஆசைதான். ஆனால், சங்கடங்களும் எங்களுக்கு அங்கே தான் ஆரம்பித்தன.
முதலில், முகாமை விட்டு யாருமே வெளியே போக முடியாது என்றார்கள். பிறகு, சிலர் வெளியே சென்று வந்ததைப் பார்த்து, விசாரித்தோம். வெளியே சென்று வருவதன் நடைமுறைகளை சொன்னார்கள். யாராவது முகாமிற்கு வெளியே வேலையாக செல்வதானாலும் பொறுப்பிற்கு இரண்டு பேரை முகாமில் விட்டுச் செல்ல வேண்டும். மறுபடியும் திரும்பி முகாமிற்கு வருவோம் என்று கையெழுத்து போட்டு கொடுத்து விட்டுத்தான் செல்லமுடியும். யாரும் எங்களை அடிபணிய வைத்து அழைத்து வரவில்லை. சங்கிலிகளால் எங்கள் கை, கால்கள் பிணைக்கப்படவில்லை. ஆனாலும், முகாமிற்குள் முடக்கப்பட்ட போது அடிமை போல் உணர்ந்தேன். அதை தவிர்க்க முடியவில்லை.
இப்போது நான் அகதியா அல்லது அடிமையா? எனக்குள் குழம்பிக்கொண்டிருந்தேன். இந்த குழப்பத்துடனேயே முகாமில் என் நாட்கள் கழிந்தன. ஒரு நாள் அடித்துப் பெய்த மழையில் அங்கிருந்த குடிசைகள், பாத்திரங்களோடு நாங்களும் இரவிரவாய் தூங்காமல், உட்காரவும் இடம் இல்லாமல் கால்கள் கடுக்க மழை வெள்ளத்தில் மிதந்தோம். வெள்ளம் வடிகிற மாதிரி தெரியவில்லை. அதற்கு பிறகு வருவது வரட்டும் என்று முகாமை விட்டு அன்றோடு வெளியேறினோம்.
முகாமிலிருந்து வெளியேறி உறவினர் ஒருவரின் உதவியுடன் வெளியே வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். வீடு கட்டி முடித்த கையோடு, புத்தம் புது வீட்டில் வாடைகைக்கு அமர்த்தப்பட்டோம். முகாமில் ஒரு விதமான கஷ்டம் என்றால் வெளியில் அது வேறோர் விதமாக இருந்தது. இதை சொல்வதா வேண்டாமா என்று பலமுறை யோசித்து விட்டு தயக்கத்தோடுதான் சொல்கிறேன்.
நாங்கள் இருந்த தெருவில் இருந்தது எல்லாமே பிராமண சமூகத்தினரின் வீடுகள்தான். நாங்களிருந்த வீட்டின் உரிமையாளரும் பிராமணரல்லாத ஒருவர். அந்த தெருவில் எங்கள் வீட்டிற்கு அருகில் ஓய்வுபெற்ற ஒரு பிராமணர் இருந்தார். அவருடைய வாழ்நாள் குறிக்கோள் அந்த தெருவை ஓர் “அக்ரஹாரம்” ஆக்குவதுதான் என்று அவரே சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் இருந்ததோ பிராமணரல்லாத ஒருவரின் வீடு. அவருடைய ஆசைக்கு குறுக்கே அந்த வீடும், நாங்களும் இருந்தது அவருக்கு பொறுக்கவில்லை என்பது அவரின் பேச்சில் வெளிப்படையாகவே தெரிந்தது. அந்த வன்மைத்தை எல்லாம், “கள்ளத்தோணிகள், நீங்கள்ளாம் பெரியாரின் ஆட்களடி, உங்கள இங்கிருந்து தொரத்தணும்” இப்படியெல்லாம் தான் கொட்டித்தீர்த்தார். அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.
எங்களைப்பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் காவல் துறையிடம் பற்றவைத்தார். இவரின் உளவியல் சித்திரவதை தாங்க முடியாமல் ஒருநாள் வீட்டை காலி செய்கிறோம் என்று வீட்டின் உரிமையாளரிடம் சொன்னோம். அவர் ஏன் என்று காரணங்களை கேட்டு விட்டு, “நீங்கள் வீட்டை காலி செய்யவேண்டியதில்லை. மிகுதியை தான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார். அவர் யாரிடம் என்ன பேசினாரோ தெரியவில்லை. கொஞ்ச நாள் பிரச்சனையில்லாமல் இருந்தோம். நான் தமிழ்நாட்டில் என்றென்றும் நன்றி சொல்லவேண்டிய மனிதர்களில் ஒருவர். இன்னொருவர் எங்களை தன் சொந்த சகோதரிகளைப்போல் பாசம் காட்டிய ஓர் ஆட்டோக்காரர். எப்பொழுதாவது சினிமாவுக்கும் எங்களை இவர்தான் கூட்டிக்கொண்டு போவார். சினிமா ஆரம்பிக்கவும் தூங்குகிறவரை, அது முடிந்ததும் பத்திரமாய் தட்டியெழுப்பி கூட்டி வருவோம்.
அடுத்து, நாங்கள் இருந்த தெருவிலிருந்த மற்றைய பிராமணர்கள். “நீங்கள்ளாம் சிலோன் அகதிகளா…” என்று தொடங்கிய நட்பு. எங்களிடம் பாரபட்சம் பார்க்காமல் நட்பு கொண்டவர்கள். என் கசப்பான அகதி வாழ்க்கைக்கு சின்ன, சின்ன சுவாரசியங்களை சேர்த்த மனிதர்கள்.
தமிழ்நாட்டில் வெளியே தங்கியிருப்பதால் காவல் துறையிடம் பதிந்துகொள்ள வேண்டும் என்று வேறு சொன்னார்கள். அந்த நடைமுறையை செவ்வனே செய்துமுடிக்கு முன், பேசாமல் ஊருக்கே திரும்பி போய் குண்டடிபட்டு அல்லது சிங்கள ராணுவத்திடம் சித்திரவதைப்பட்டு செத்துப்போகலாம் என அழுகைதான் வந்தது. அப்படி எங்களை நாய் படாத பாடாய் படுத்திவிட்டார்கள். இவ்வளவு அக்கப்போருக்கு நடுவிலும் என்னால் என்னையே சமாதானப்படுத்திக்கொள்ள மனமும், வாழ்வும் ஒட்டவில்லை. ஈழத்திற்கு ஓடிப்போக வேண்டும்போலிருந்தது. வீட்டில் அழுது புரண்டு ஒப்புதல் வாங்கி மறுபடியும் நான் இலங்கை போனேன்.
இந்த பதிவை முடிக்குமுன், இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு மேலாக ஈழத்தமிழ் அகதிகள் தஞ்சம் கோரியிருக்கிறார்கள். அண்மையில் கூட சிலபேர் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். புலத்திலிருந்து பணம் வருபவர்கள் ஓரளவுக்கு வசதியாய் இருக்கிறார்கள். முகாமிலிருப்பவர்களின் வாழ்வுதான் இன்னும் சவால்களுடனேயே நகர்கிறது. அண்மையில் கூட இவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவது பற்றிய அரசியல் அறிக்கைகள், தொலைக்காட்சி வழங்கப்பட்டது என்று செய்திகள் மூலம் அறிந்து கொண்டேன்.
இதையெல்லாம் ஏற்பதும், மறுப்பதும் அவர்களின் தனிப்பட்ட முடிவு. யார் அகதியானாலும் அவர்கள் அரவணைக்கப்பட வேண்டியவர்களே. அதில் எங்களுக்கு நிச்சயமாய் வருத்தமில்லை. ஆனால், என் நெஞ்சை அறுக்கும் விடயம் இந்தியாவில் திபெத்திய அகதிகளுக்கு கிடைக்கும் அடிப்படை வசதி, உயர்கல்வி, வாழ்வாதாரத்திற்கேற்ப வருமானம் தரும் வேலை வாய்ப்புகள் எல்லாமே ஈழத்தமிழ் அகதிகளுக்கு சாத்தியமற்றுப் போகிறதே, ஏன்? தமிழ்நாட்டையும் தாண்டி படகுகளில் கடல் மேல் தங்கள் உயிரை பணயம் வைத்து அவுஸ்திரேலியா தங்களை அரவணைக்கவில்லை என்று தெரிந்தும் அங்கே போய் உயிர் தத்தளிக்கிறார்களே ஏன்? புரியவில்லை. யோசித்தால் வலி தான் மிஞ்சுகிறது.
- ரதி

9/7/10

காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ? - 1

வெனிசுவேலாவின் அதிபர். ஹியூகோ சாவேசை நோக்கி நடைபெற்ற சதிபுரட்சியில் எப்படி ஊடகங்கள் எல்லாம் மக்களை நோக்கி கலவரக்காரர்கள் சுடுவதைப் போல திரும்ப திரும்பக் கூறி மனித உரிமை படுகொலைகள் நிகழ்ந்து விட்டதாக உண்மைக்கு புறம்பாக சித்தரித்தன‌வோ. அதே போல காசுமீரிகள் கல்லெறிவதை மட்டும் திரும்ப, திரும்ப காட்டி கல்லெறிவதை ஏதோ பயங்கரவாதத்தின் இன்னொரு வடிவம் போல சித்தரிக்க முயல்கின்றன‌‌ செய்தி ஊடகங்கள். இதன் ஒரு பகுதியாக தான் “நல்ல வேளை என் மீது செருப்பைத் தான் எறிந்தார், கல்லை அல்ல என்ற காசுமீரின் முதல்வர் பரூக் அப்துல்லாவின்” பேச்சைக் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் உண்மை அவ்வாறு இல்லை. இந்த பொய்யை மட்டுமே கூறும் ஊடகங்களுக்கு நடுவே க‌ட‌ந்த‌ வார‌ம் தெக‌ல்கா வார‌இத‌ழில் வெளிவ‌ந்ததுள்ளது இந்த‌ க‌ட்டுரை. காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ? என்ற கேள்விக்கு விடை தான் இந்த கட்டுரை. கட்டுரையாளர் சாகித் இரஃபிக் ஒரு காசுமீரி, இவர் தில்லியில் வாழ்ந்துவரும் ஒரு ஊடகவியலாளர்.
…………………………………………………………….

நான் எப்பொழுதும் ச‌ண்டையை விரும்பிய‌து கிடையாது. க‌ல்லூரி கால‌ங்க‌ளில் என் ந‌ண்ப‌ர்க‌ள் குழு என்னை எப்போதும் கோழை என்றே விம‌ர்ச‌ன‌ம் செய்வார்க‌ள். என்னால் ஒரு உட‌ல் வ‌லு இல்லாத‌வ‌னை கூட‌ அடிக்க‌ இயலாது என்றும் கூட சொல்வார்க‌ள். ஆனால் நான் கோழை அல்ல‌. என்னை பொருத்த‌வ‌ரை பெரும்பான்மையான‌ ச‌ண்டைக‌ள் ப‌ய‌னில்லாத‌வை. அகிம்சாவாதி என்ற வார்த்தை என‌க்கு பிடிக்காது என்றாலும் நான் ஒரு அகிம்சாவாதி தான். வ‌ன்முறையை விட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை, க‌ருத்து விவாத‌ங்கள் போன்ற ப‌‌ல‌ ந‌ல்ல‌ வ‌ழிக‌ள் உள்ள‌ன‌ என்ப‌தே என் க‌ருத்து.

ஆனால் இன்று நான் ஒரு ஊட‌க‌விய‌லாள‌னாக‌ எழுத்தை எதிர்ப்பின் ஒரு அடையாளமாக நான்‌ கொண்டிருக்காவிட்டால், என‌து ந‌ண்ப‌ர்க‌ளை போலே நானும் காசுமீர‌த்து ந‌க‌ர‌வீதிக‌ளில் க‌ல்லெறிந்து கொண்டிருப்பேன்.

ஆரம்ப காலங்களில் காசுமீரில் நான் கண்ட அடக்குமுறைகளும், ப‌டுகொலைகளும் என்னுள் எப்பொழுதும் ஒரு தெளிவின்மையை ம‌ட்டுமே ஏற்ப‌டுத்தி வ‌ந்த‌ன‌. ஆனால் க‌ட‌ந்த‌ இரு மாத‌ங்க‌ளாக‌ காசுமீரில் ந‌ட‌ப்ப‌வை எல்லாம் தெளிவான நீரோடையை போல‌‌ உள்ளது‌. உல‌க‌ம் காசுமீரில் ந‌ட‌ப்ப‌தை க‌ண்டும் காணாம‌ல் வாய் மூடி மௌனித்துள்ள‌து. இந்த‌ மௌன‌ம் அகிம்சாவாத‌த்தை தின‌மும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தின்றுகொண்டே வ‌ருகின்ற‌து. இந்த கள்ள மௌனமே எல்லா வ‌ன்முறைக‌ளும் ஆர‌ம்பிக்க‌ கார‌ண‌மாகும்.

வீட்டிலிருந்து வ‌ருகின்ற‌ எல்லா அலைபேசி அழைப்புக‌ளுமே இத‌ய‌த்தை பிள‌க்க‌க் கூடிய‌ செய்திகளாக‌ உள்ள‌ன‌. என்னுள் வ‌ன்முறை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் வ‌ள‌ர்வ‌தை உண‌ர்கின்றேன் நான். எங்க‌ள் வீட்டின் அருகிலுள்ள‌ காய்க‌றி க‌டைக்கார‌ர் அர‌ச ப‌டைக‌ளால் சுட்டுக் கொல்ல‌ப்ப‌ட்டார் என்று என் அம்மா என‌க்கு கூறிய‌ போது நான் தில்லியில் இருந்தேன். நான் காசுமீரிலிருந்து தில்லிக்கு வ‌ரும் முன்பு என் ப‌க்க‌த்து வீட்டிலிருந்து க‌டைசி ந‌ப‌ர் அவர் ஒருவர் ம‌ட்டும் தான். விடைபெறும் முன் இருவ‌ரும் புன்ன‌கையை ப‌ரிமாறிக் கொண்டோம். ஆனால் இப்பொழுது என் மனதை க‌டுங்கோப‌ம் சூழ்ந்துகொண்டுள்ள‌து. ம‌த்திய‌ ஆயுத‌ப் படையைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் மிக‌க்க‌டுமையான‌ கோப‌த்துடன் வீடுகளின் சாளரக் கண்ணாடிகளை உடைத்து, வீட்டினுள்ளே உள்ள‌ அனைவ‌ரையும் க‌டுமையாக‌ தாக்குகின்ற‌ன‌ர் என‌ என்னிட‌ம் கூறினான் என் த‌ம்பி.

தில்லியில் காசுமீரை மேற்பார்வையிடும் நிறுவ‌ன‌ம் ஒன்றில் வேலை செய்யும் என் ந‌ண்ப‌ன் க‌ட‌ந்த‌ வார‌ம் ஒரு நாள் மாலையில் என்னை அழைத்தான். அவ‌ன‌து ப‌ணிக‌ளுக்கு இடையிலும் அவ‌ன் காசுமீரில் அர‌ச‌ ப‌டையினால் அடித்தே கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஒன்ப‌து வ‌ய‌து சிறுவ‌ன் ச‌மீர் அக‌ம‌தின் உட‌லை அவனும் பார்த்திருப்பான் என‌ நினைக்கின்றேன்.அவ‌ன‌து உட‌லெங்கும் ல‌த்தி குச்சியின் வ‌ரிக‌ள் சாரை, சாரையாக‌ உள்ள‌ன‌. அவ‌ன் தின்று கொண்டிருந்த‌ மிட்டாயின் மீத‌ம் இன்னும் அவ‌ன‌து வாயில் அப்ப‌டியே உள்ள‌து. நான் அவ‌னை ச‌மாத‌ன‌ப்ப‌டுத்த முயல‌ இறுதியில், இருவரும் ஒருவரை ஒருவர் ச‌மாத‌ன‌ப்ப‌டுத்திக் கொண்டோம். அடுத்த‌ நாள் காலை அவ‌ன் தில்லியிலிருந்து காசுமீருக்கு செல்ல‌ப் போவ‌தாக‌ கூறினான். “இங்கு எல்லோரும் பொய்யை ம‌ட்டுமே கூறுகின்ற‌ன‌ர். மேலும் அவ‌ர்களின் பொய்யை அவ‌ர்க‌ள் உண்மையென்று ந‌ம்புகின்றார்க‌ள்” என்றான் அவ‌ன்.

இந்தியாவில் ஒரு “பொய்” எல்லோராலும் ப‌ர‌வ‌லாக‌ ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌து, அதாவ‌து அர‌ச‌ ப‌டைக‌ள் காசுமீர‌த்து ம‌க்க‌ளை பாதுகாக்கின்ற‌ன‌ர் என்ப‌தே அந்த‌ “பொய்”. ஆனால் காசுமீரிக‌ள் தாங்க‌ள் அர‌ச‌ப‌டைக‌ளால் பாதுகாக்க‌ப்ப‌டுவ‌தாக‌ ந‌ம்புவ‌தே இல்லை. இந்தியாவில் உள்ள‌வ‌ர்க‌ள் அர‌ச‌ப‌டையை “பாதுகாவ‌ல‌ர்கள்” என்றும், அவ‌ர்க‌ள் தான் தீவிர‌வாதிக‌ளிட‌ம் இருந்து காசுமீரிக‌ளை பாதுகாக்கின்ற‌ன‌ர் என்றும் எண்ணுகின்ற‌ன‌ர். ஆனால் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து தான் காசுமீரிக‌ளை பாதுகாக்க‌ வேண்டியுள்ள‌து என்ப‌தே உண்மை. காசுமீரிக‌ள் த‌ங்க‌ளை ஆக்கிமிர‌த்துள்ள‌ இந்த‌ ப‌டைக‌ள் த‌ங்க‌ள் நில‌த்தை விட்டு வெளியேற‌ வேண்டும் என்று கோருகின்ற‌ன‌ர். அர‌ச‌ப‌டைக‌ள் மீது அவ‌ர்க‌ள் கொண்டுள்ள‌ உண‌ர்வு ப‌யம், வெறுப்பு, பழிஉணர்ச்சி போன்ற‌வை ம‌ட்டுமே.

க‌ட‌ந்த‌ இர‌ண்டு மாத‌த்தில் ம‌ட்டும் காவ‌ல் துறை ம‌ற்றும் ம‌த்திய‌ பாதுகாப்பு ப‌டை சுட்ட‌தில் 55 ஆயுத‌ம் ஏந்தாத‌ பொதும‌க்க‌ள் காசுமீரில் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். இவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் சிறுவ‌ர்க‌ள். ஒன்று இவ‌ர்க‌ள் க‌ல்லெறிந்து கொண்டிருந்திருக்க‌லாம் அல்ல‌து அண்டை வீடுக‌ளில் விளையாடிக் கொண்டிருந்திருக்கும் போது சுடப்பட்டிருக்கலாம். காசுமீரில் ப‌த‌ட்ட‌நிலை ஆர‌ம்பிக்கும் கால‌க‌ட்ட‌ங்க‌ளில் நான் அங்கு இருந்தேன். ஒவ்வொரு இறுதி ஊர்வ‌ல‌த்திற்கும் சென்ற‌ நான் ம‌க்க‌ள் மிகக்கடுமையான‌ கோப‌த்துட‌ன் இருப்ப‌தை க‌ண்டேன். க‌ங்ப‌க் என்ற‌ ப‌குதியில் 17 வ‌ய‌து சிறுவ‌னின் இறுதி ஊர்வ‌ல‌த்தில் ஊர‌ட‌ங்கு உத்த‌ர‌வை மீறி ஆயிர‌க்க‌ண‌க்கானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். அவ‌ன‌து இரு ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌னை காவ‌ல்துறை அழைத்துச் சென்ற‌தாக‌வும், பின்னால் அவ‌ன் நீரில் மூழ்கி இற‌ந்துவிட்டான் என‌ காவ‌ல் துறையை கூறிய‌தாக‌வும் ஊட‌க‌ங்க‌ளுக்கு சொன்னார்க‌ள். ஆனால் இற‌ந்த‌ சிறுவ‌ன் ந‌ன்கு நீச்ச‌ல் தெரிந்த‌வ‌ன், ர‌ண‌ அறுவை சிகிச்சையில் த‌லையில் இரண்டு ப‌ல‌த்த‌ காய‌ங்க‌ள் இருப்ப‌து தெரிந்த‌து.

இத‌ற்கு ம‌று நாள் “NDTV” என்ற‌ செய்தி ஊட‌க‌த்தில் பேசிய‌ மாநில‌ முத‌ல்வ‌ர் ப‌ரூக் அப்துல்லா “அவ‌ன‌து ந‌ண்ப‌ன‌து உயிர் முக்கிய‌ம் என‌த் தெரிந்திருந்தால், இந்த‌ இருவ‌ரும் அவ‌னை நீரிலிருந்து காப்பாற்றியிருக்க‌ வேண்டிய‌து தானே” என‌ கேட்டார். இவ்வாறு கேட்ப‌த‌ற்கு ப‌ரூக் அப்துல்லாவால் ம‌ட்டும் தான் முடியும், அதிகார‌வ‌ர்க்க‌த்தின் பார்வை இவ்வாறு தான் இருக்கும். இவ‌ர்க‌ளை பொருத்த‌ வ‌ரையில் காசுமீரிக‌ள் “PDP” யின் ப‌ண‌த்திற்காக‌வும், பாகிசுதானின் உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ளுக்காக‌வும் உயிரை விடும் த‌ர‌க‌ர்க‌ள் தானே. இந்தியாவில் 40 ஆண்டு கால‌ம் வாழ்ந்த‌தால் ப‌ரூக் அப்துல்லாவிற்கு இந்த உலகப்பார்வை வ‌ந்துள்ள‌து. முஃப்திக‌ளோ இவ‌ர்க‌ளை விட‌ மோச‌ம், அவ‌ர்க‌ள் எப்பொழுது பிரிவினை கோருவார்க‌ள், எப்பொழுது இந்திய‌ தேசிய‌வாதிக‌ளாக‌ மாறுவார்க‌ள் என்ப‌து யாருக்குமே தெரியாத‌ ஒன்று. அவ‌ர்க‌ளின் தேவை எல்லாம் ஆட்சி அதிகார‌ம் ம‌ட்டும் தான். ம‌த்திய‌ அர‌சு ப‌ரூக் அப்துல்லாவை தூக்கியெறிந்து விட்டு மெக‌பூபாவை முத‌ல் ம‌ந்திரி ஆக்க‌வேண்டும் என்ப‌தே அவ‌ர்க‌ள் எண்ண‌ம்.

காசுமீரிக‌ளுக்கும், அப்துல்லாக்க‌ளுக்கும் இடையில் மிக‌ப்பெரிய‌ இடைவெளி உள்ள‌து. காசுமிரீக‌ளை நோக்கி எப்பொழுதும் துப்பாக்கிக‌ள் த‌யாராக‌ இருக்கும், அப்துல்லாக்க‌ளை நோக்கி அல்ல. தங்கள் உயிரை பற்றிய கவலையில்லாமல் ஏன் தடையையும் மீறி இறுதி ஊர்வலத்திலும், அரச படைகளை எதிர்த்தும் கல்லெறிந்து கொண்டிருக்கின்றனர் என அப்துல்லாக்க‌ளும், முப்திக்க‌ளும் புரிந்து கொள்ள‌ ம‌றுக்கின்ற‌ன‌ர். இருப‌து வ‌ருட‌ கால‌ங்க‌ளில் இங்கு கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ 70,000 ம‌க்க‌ளின் புதைகுழிக‌ளில் த‌ங்க‌ள் பொய்யையும் சேர்த்தே அவ‌ர்க‌ள் புதைத்து வ‌ந்துள்ள‌ன‌ர். ஒரு கால‌த்தில் தேசிய‌ காங்கிர‌சின் தீவிர‌மான‌ ஊழிய‌ராக‌ இருந்த‌ எங்க‌ள் உற‌வின‌ர் ஒருவ‌ர் பிற்கால‌த்தில் அதே க‌ட்சி காசுமீரிக‌ளுக்கு துரோக‌ம் செய்து விட்ட‌து என‌க் கூறினார் என்பத‌ன் பொருள் என‌க்கு இப்பொழுது தான் புரிகின்ற‌து. சேக் அப்துல்லா டோர்கா ம‌ன்ன‌ர்க‌ளின் இரும்புப் பிடியிலிருந்து காசுமீரை மீட்டு அதை விட‌ மோச‌மான‌ அட‌க்குமுறை அர‌சிட‌ம் ஒப்படைத்து விட்டார் என‌ அவ‌ர் தின‌மும் கூறுவார்.

சிறீந‌க‌ரின் க‌சூரி பாக் ப‌குதியில் வ‌ய‌தான த‌ந்தை ஒருவ‌ர் கொல்ல‌ப்ப‌ட்ட‌ த‌ன‌து ம‌க‌னின் உடலை பிடித்து கொண்டிருந்த படத்தை பார்த்தேன். ஆனால் ஆறுக்கும் மேற்ப‌ட்ட‌ காவ‌ல்துறையின‌ர் அவ‌ரை அவ‌ர‌து ம‌க‌னின் உட‌லை விட்டு பிரித்துச் செல்ல‌ முய‌ன்று கொண்டிருந்த‌ன‌ர். ஆனால் அவ‌ர் ம‌க‌னின் உட‌லை விட்டு பிரியாம‌ல் அருகிலேயே இருந்தார். அவ‌ர‌து ச‌ட்டை ம‌க‌னின் இர‌த்த‌தில் ந‌னைந்து போன‌து, அவ‌ர‌து வெள்ளை தாடி இர‌த்தத்தால் சிக‌ப்பு நிற‌மான‌து. அந்த‌ ப‌ட‌த்தை நான் பார்க்க‌ பார்க்க‌ என்னுள் ஏற்ப‌டும் வ‌லியின் ர‌ண‌ம் அதிக‌ரித்துக் கொண்டே சென்ற‌து. இற‌ந்த‌ த‌ன‌து ம‌க‌னின் உட‌லை க‌ட்டிய‌ணைத்து த‌ன‌து சோக‌த்தை ஒரு தந்தை வெளிப‌டுத்துவ‌தை த‌விர‌ அவ‌ரால் என்ன‌ செய்ய‌ முடியும் என்று என‌க்கு தெரிய‌வில்லை. ப‌ரூக் அப்துல்லாவால் அந்த‌ த‌ந்தையை அட‌க்குமுறையை மீறி அர‌ச‌ ப‌டைக்கு எதிராக‌ க‌ல்லெறிவ‌தை த‌டுக்க‌ குடியுமா? அந்த‌ வ‌ய‌தான‌ ம‌னித‌ரின் இட‌த்தில் ப‌ரூக் அப்துல்லா இருந்திருந்தால் எப்ப‌டி ந‌ட‌ந்திருப்பார், ஒரு த‌ந்தையைப் போல‌வா? ஒரு முத‌ல்வ‌ரை போல‌வா?. இந்நேர‌ம் இந்ந‌க‌ரமே துண்டாட‌ப்ப‌ட்டிருக்காதா? சிறீந‌க‌ர‌ம் ப‌ற்றி எரிந்திருக்காதா?

த‌ங்க‌ளின் நேச‌த்திற்குரிய‌ இற‌ந்த‌ உற‌வுக‌ளை க‌ல்லெறிவதன் மூலமாகவும், அரசு வாகனங்களை எரிப்பதன் மூலமாகவும் மிகச்சிறிய அளவில் மட்டுமே நினைவு கொள்கின்றார்க‌ள் அவ‌ர்க‌ளின் த‌ந்தைக‌ள், ச‌கோத‌ர‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ள், ந‌ண்ப‌ர்க‌ள். இது மட்டும் எப்ப‌டி த‌வறாகும்?

8/25/10

அமெரிக்காவின் புராதன பொதுவுடைமை சமுதாயம்


இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா - பகுதி 2

பிரபல ஹாலிவூட் இயக்குனர் மெல்கிப்சனின் “அபோகலிப்டோ”(Apocalipto) திரைப்படம், சில வருடங்களுக்கு முன்னர் உலகத் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. மத்திய அமெரிக்காவில் ஸ்பானியர்கள் வருவதற்கு முன்னர் நடந்த சம்பவங்களைக் காட்டுவதாக அந்தப் படம் அமைந்திருந்தது. பண்டைய அமெரிக்க நாகரீகம் குறித்த மக்களின் அறியாமையை மூலதனமாகக் கொண்டு, திரைப்படம் தயாரிக்கப் பட்டிருந்தது. “அழிவின் விளிம்பில் இருந்த மாயா சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் கொடூரமான மனம் கொண்டவர்கள். பிற இன மக்களின் கிராமங்களை சூறையாடி, அப்பாவிகளை அடிமைகளாக பிடித்துச் சென்று தமது தெய்வங்களுக்கு நரபலி கொடுத்தார்கள். திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் (ஸ்பானிய) கிறிஸ்தவர்கள் வந்திறங்குகின்றனர். அப்போதிருந்து மாயா காட்டுமிராண்டிகளின் சாம்ராஜ்யம் அஸ்தமித்தது.” இது தான் மெல்கிப்சன் என்ற கத்தோலிக்க மத அடிப்படைவாதி சொல்லும் சேதி.

இன்றைய குவாத்தமாலாவிலும், மெக்சிகோவிலும் வாழ்ந்த மாயாக்கள் உயர்ந்த நாகரீகத்தைக் கொண்டிருந்தனர். அவர்கள் மொழிக்கென எழுத்து வடிவம் இருந்தது. கற்றறிந்தோர் குழாமான மதகுருக்கள் பருவநிலை மாற்றங்களை துல்லியமாக கணித்து வைத்தனர். அந்தக் கணிப்புகள் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியது. நாம் இன்று பயன்படுத்தும் நாட்காட்டி தோன்றுவதற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே, மாயாக்கள் 365 நாட்களைக் கொண்ட வருடத்தை கணித்திருந்தனர். அது மட்டுமல்ல, கணிதத்தில் பூஜ்ஜியத்தின் பாவனையும் அறிந்து வைத்திருந்தனர். அத்தகைய அரிய பொக்கிஷங்கள் யாவும், பின்னர் வந்த கிறிஸ்தவ மதவெறியர்களால் அழிக்கப் பட்டன. அவர்களைப் பொறுத்தவரை, “பைபிளுக்கு அப்பால் உலகில் எந்த நாகரீகமும் இருக்கவில்லை. நாளைய தலைமுறை அதைப்பற்றி எல்லாம் அறிந்து வைத்திருக்கக் கூடாது.” அதைத் தான் மெல்கிப்சனின் அப்போகலிப்டோவும் எதிர்பார்க்கிறது.

உலகின் பிற சாம்ராஜ்யவாதிகளைப் போல, மாயா இனத்தவர்களும் அயலில் இருந்த பிரதேசங்களை ஆக்கிரமித்து அடக்கி ஆண்டதை மறுப்பதற்கில்லை. மாயாக்களின் கோயில்களில் நரபலி கொடுக்கப்பட்டதுமுண்டு. இருப்பினும் மெல்கிப்சன் சித்தரித்ததைப் போல நரபலி கொடுப்பது ஒரு "தேசிய விளையாட்டுப் போட்டியாக" இருக்கவில்லை. அதே நேரம் சினிமாவில் வருவதைப் போல, “ஆயிரக்கணக்கான உடல்களைப் புதைத்த புதைகுழி” இருந்ததற்கான ஆதாரம் இல்லை. காலனிய காலத்தில் இருந்து தொடரும் பூர்வீக மக்களின் இனவழிப்பை மறைப்பதற்கு மெல்கிப்சனின் அப்போகலிப்டோ என்ற அரசியல் பிரச்சாரப் படம் பாடுபடுகின்றது. வரலாற்றைத் திரிபுபடுத்தி, பொழுதுபோக்கு என்ற பெயரில் ஏகாதிபத்திய அரசியலைத் திணிக்கும் ஆபத்தான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அமெரிக்காவில் ஸ்பானிய வெள்ளையர்கள் காலடி வைத்த பொழுது, பூர்வீக மக்கள் அவர்களை கடவுளின் தூதர்களாக கருதியதாக சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்ட கிறிஸ்தவ மதத்தின் கோணத்தில் இருந்து இதைப் பார்ப்பது தவறு. இன்றைய மெக்சிகோவில் அமைந்திருந்த அஸ்டெக் அரசவையில் நடந்த சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்தே அது எழுதப்பட்டது. அஸ்டெக் ராஜ்யத்தின் தலைநகரம் டேனோச்டிட்லான் (Tenochtitlan ) அன்றைய உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாக இருந்தது. ஒரு லட்சம் மக்கட்தொகையைக் கொண்ட நகரத்தில் அரண்மனை ஜோதிடர்களின் ஜோசியம் அமைதியைக் குலைத்தது. "பெரிய மிருகத்தின் மீதேறி வரும் வெளிறிய நிறம் கொண்ட மனிதர்கள் அஸ்டெக் ராஜ்யத்தை அபகரிப்பார்கள்." அன்றைய அமெரிக்க கண்டத்தில் குதிரை இருக்கவில்லை. முதன்முதலாக குதிரை மீதேறி வந்த ஸ்பானிய வீரர்களை கண்ட மக்களும், மன்னனும், "கெட்சகோடல்" தெய்வத்தின் தூதுவர்களாகக் கருதினர். (பண்டைய மெக்சிக்கர்கள் பல தெய்வ வழிபாட்டைக் கொண்டவர்கள். அவர்கள் சில நேரம் ஸ்பானியர்களை எமதர்மனின் தூதுவர்களாக கருதியிருக்கலாம்.) விரைவிலேயே ஸ்பானியக் காலனியாதிக்கவாதிகளின் தங்கத்தின் மீதான பேராசை அவர்களின் சுயரூபத்தை தோலுரித்துக் காட்டியது.

தென் அமெரிக்கக் கண்டத்தின் அனைத்து பூர்வகுடிகளும் ஐரோப்பியரை கடவுளின் தூதுவர்களாக கருதி வணங்கி வழிவிடவில்லை. கண்டத்தின் தெற்குப் பகுதியில், (சிலி, ஆர்ஜெந்தீனா) ஐரோப்பியரால் நிரந்தரமான காலனியை அமைக்க முடியவில்லை. பூர்வீக மக்களின் தொடர்ச்சியான தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் காலனியாதிக்கவாதிகள் பின்வாங்கினார்கள். அந்தப் பகுதிகளை காலனிப் படுத்த இன்னும் பல நூறாண்டுகள் காத்திருக்க வேண்டியேற்பட்டது. போர்த்துக்கல் ஆக்கிரமித்த பிரேசிலில் வனாந்தரங்களும், விஷ ஜந்துக்களும் காலனியாதிக்கவாதிகளின் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தன. போர்த்துக்கல்லில் இருந்து கிரிமினல் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளித்து குடியேற ஊக்குவித்தார்கள். அப்படி இருந்தும் பலர் அங்கு செல்லத் தயங்கினார்கள்.

ஐரோப்பிய காலனியவாதிகளின் வருகையின் போது, தென் அமெரிக்காவில் மாபெரும் சாம்ராஜ்யம் இருந்தது. அடர்ந்த காடுகளையும், மலைத் தொடர்களையும், பாலைவனத்தையும் இயற்கை அரண்களாக கொண்டிருந்தது. இன்றைய எக்குவடோர் முதல் சிலி வரை 4000 கி.மீ. நீளமான ஒரே தேசம், "இன்கா ராஜ்ஜியம்" என அழைக்கப்பட்டது. வடக்கே இருந்த மாயாக்களைப் போல, இன்காக்கள் அயலில் இருந்த இனங்களை அடக்கி ஆளவில்லை. அவர்களின் ஆட்சி அதிகாரம் குடிமக்களின் அச்சத்தின் மீது கட்டப்பட்டிருக்கவில்லை. மாறாக சிறப்பான அரச நிர்வாகம் அனைவரையும் சமமான பிரஜைகளாக உள்வாங்கியது. இன்கா ராஜ்யத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதன் பொருளாதார திட்டங்கள் பொதுவுடைமை சமூக அமைப்பை ஒத்துள்ளது.

"தவாந்தின்சுஜூ" (நான்கு திசைகளின் நாடு) ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் பலம் வாய்ந்த சாம்ராஜ்யமாக திகழ்ந்தது. தென் அமெரிக்க கண்டத்தில், சுமார் ஒரு மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டிருந்த தேசத்தில், குறிஞ்சி, பாலை என நான்கு வகை நிலங்களைக் கொண்டிருந்ததால் அந்தப் பெயர். இன்கா மக்களின் உயரிய நாகரீகம் என போற்றப்படும் சாம்ராஜ்யம், பொதுவுடைமை சமூக- பொருளாதார அமைப்பை அடிப்படையாக கொண்டிருந்தது. இன்கா இனத்தவரின் சாம்ராஜ்யம், பிற இனத்தவர்கள் மீதான அடக்குமுறையின் மீது கட்டப்படவில்லை. மாறாக சிறப்பாக செயல்படும் அரசியல் அமைப்பு முறை, அனைத்து மக்களையும் ஒரே தேசமாக இணைத்தது. சில வரலாற்று ஆசிரியர்கள் அதனை உலகின் முதலாவது கம்யூனிச ராஜ்ஜியம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

தவாந்தின்சுஜூ மக்கள் அனைவரும், "ஐய்லு" எனப்படும் நிர்வாகப் பிரிவுக்குள் அடக்கப்பட்டனர். ஒவ்வொரு பிரஜையும், (முன்பு சோஷலிச நாடுகளில் இருந்ததைப் போல) கூட்டுடமையாக்கப்பட்ட "கம்யூன்" சமூகத்தின் அங்கத்தவர் ஆவார். சக்கரவர்த்தியும், அரச குடும்பத்தினரும், அமைச்சர்களும் (தலைமை) ஐய்லுவை சேர்ந்தவர்கள். மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்களும் தலைமை ஐய்ளுவுக்குள் அடங்குவர். (அதாவது நமது காலத்து செனட் சபை போல.) போரில் புதிதாக வெற்றி கொள்ளப்பட்ட வேற்றினத்தவரின் பிரதேசமாகவிருப்பினும், அந்த இனத்தை சேர்ந்த ஒரு ஆளுநர் தலைநகர ஐய்ளுவுக்கு தெரிவு செய்யப்படுவார்.

நிலம் முழுவதும் அரசுடமையாக இருந்தது. எந்தவொரு தனியாரும் நிலத்திற்கு உரிமை கோர முடியாது. ஒவ்வொரு கிராமத்திலும், விளை நிலங்கள் மூன்றாக பிரிக்கப் பட்டிருந்தன. ஒரு பகுதி அரச குடும்பத்திற்குரியது. இரண்டாவது பகுதி ஆலயத்திற்கு அல்லது மதகுருக்களுக்கு. மூன்றாவது பகுதி விவசாயம் செய்யும் குடும்பங்களுக்கானது. பிறப்பு, இறப்பு, புதிய குடும்பங்கள் உருவாதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வருடமும் நிலம் புதிதாக பிரிக்கப்பட்டது. எல்லா நிலங்களிலும் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்ய வேண்டும். முதலில் அரச நிலத்திலும், இரண்டாவதாக கோயில் நிலத்திலும், மூன்றாவதாக குடிமக்கள் நிலத்திலும் வேலை செய்ய வேண்டும்.

அரச நிலத்தில் பெறப்படும் விளைச்சலால், அரச குடும்பம் மட்டும் பலனடையவில்லை. களஞ்சியத்தில் சேமிக்கப்படும் தானியம், நோயாளிகள், வயோதிபர், போன்ற சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டது. மேலும் வெள்ளம், பஞ்சம் தோன்றும் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்க பயன்பட்டது. இன்கா மக்கள் தமது மொழிக்கு எழுத்து வடிவம் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் களஞ்சியப்படுத்தல், நிலப் பிரிப்பு போன்ற நிர்வாக நடைமுறைகளுக்கு சிக்கலான கணக்கெடுப்பு முறை ஒன்றை வைத்திருந்தனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்லும் அரச கணக்காளர் கயிறொன்றில் முடிச்சுகளைப் போட்டு கணக்கிட்டுக் கொள்வார்.

இன்கா நாகரீகத்தில் (வாகன) சில்லின் பாவனை பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. (ஒட்டகம் போன்ற) லாமா என்ற மிருகம் பொதி சுமந்து செல்ல பயன்பட்டது. இருப்பினும் கற்களைக் கொண்டு செப்பனிடப்பட்ட வீதிகள் சாம்ராஜ்யத்தின் எந்தப் பகுதியையும் தலைநகரோடு இணைத்தது. இன்கா ராஜாக்கள், தமக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இனங்களை தண்டிக்கத் தவறவில்லை. அவர்களை ஒட்டுமொத்தமாக வாழிடங்களில் இருந்து வெளியேற்றி எல்லைப்புறங்களில் குடியேற்றினார்கள். மேலும் புதிதாக வெல்லப்பட்ட பிரதேச மக்களின் தெய்வங்களை இன்கா மதத்திற்குள் உள்வாங்கினார்கள். இதனால் இந்து மதம் போன்ற புதிய மத அமைப்பு உருவாகி, ராஜ்ஜியத்தை இலகுவாக பரிபாலனம் செய்ய முடிந்தது. பிற்காலத்தில் செவ்விந்தியர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பொழுது, தமது பாரம்பரிய மத அனுஷ்டானங்களையும் தொடர்ந்து பேணி வந்தார்கள்.

ஸ்பானிய படையெடுப்பாளர்கள் இன்காக்களின் ராஜ்ஜியத்தை கைப்பற்றிய பின்னர், விவசாய நிலங்கள் கைவிடப்பட்டன. உருளைக்கிழங்கும், சோளமும் பயிரிடப்பட்ட நிலங்கள் புதர் மண்டிய காடுகளாகின. இன்கா மக்களின் பிரதான உணவாக இருந்த உருளைக்கிழங்கு, ஸ்பானிய காலனியாதிக்கவாதிகளால் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. பின்னர் அது உலகம் முழுவதும் பரவியது. புதிதாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தங்கம், வெள்ளி தோண்டுவது தான் ஸ்பானிய காலனிய எஜமானர்களின் ஒரேயொரு நோக்கமாக இருந்தது. இன்றைய பொலிவியாவில், பழைய இன்கா சாம்ராஜ்யத்திற்கு அருகில், "பொட்டோசி" என்ற நகரம் உருவானது. ஒரு காலத்தில் ஒரு லட்சம் பேர் வாழ்ந்த நகரம், அருகில் இருந்த வெள்ளிச் சுரங்கங்களுக்காகவே உருவானது. அங்கு அகழப்பட்ட வெள்ளிப்பாளங்கள் கப்பல் கப்பலாக ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டன.

தென் அமெரிக்காவில் ஸ்பானியர்கள் தங்கம், வெள்ளி அள்ளிச் செல்வதைப் பற்றி கேள்விபட்ட ஒல்லாந்தர்களும், ஆங்கிலேயர்களும் அவற்றை வழிப்பறி செய்தனர். ஒல்லாந்து, ஆங்கில கடற்கொள்ளையர்கள் ஸ்பானிய கப்பல்களை வழிப்பறி செய்து தமது தாயகத்திற்கு கொண்டு சென்றனர். 1628 ம் ஆண்டு, Piet Hein என்ற ஒல்லாந்து கடற் கொள்ளைக்காரன் அபகரித்த செல்வம் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. கியூப கடலோரம் வழிப்பறி செய்யப்பட்டு ஒல்லாந்து கொண்டுவரப்பட்ட கப்பலில், 177000 கிலோ வெள்ளி, 66 கிலோ தங்கம், 1000 முத்துக்கள் இருந்தன. கொள்ளையடிக்கப்பட்ட சரக்கின் மொத்த பெறுமதி எட்டு மில்லியன் யூரோக்கள்.

ஸ்பானியர்களால் உணவுப்பயிர் உற்பத்தியான விளைநிலங்கள் அழிக்கப்பட்டன. இன்று தென் அமெரிக்காவின் வறுமைக்கு அதுவும் முக்கிய காரணம். ஸ்பானியர்களால் இன்காக்களின் அரச வம்சம் அழிக்கப்பட்டது. குடி மக்களை சுரங்கங்களில் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தினார்கள். இன்காக்களின் காலத்திலும் கட்டாய உழைப்பு நிலவியது. இருப்பினும் அதற்கு பிரதியுபகாரமாக இன்கா அரசு பாதுகாப்பையும், உணவையும் வழங்க கடமைப் பட்டிருந்தது. ஸ்பானியர்களிடம் அப்படிப்பட்ட கடமையுணர்வு இருக்கவில்லை. செலவின்றி பலனடைய நினைத்தார்கள். அன்றைக்கு செவ்வியந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை ஸ்பெயினில் இருந்து வந்த மதப்போதகரான Bartolome de La Casas எழுதி வைத்துள்ளார்.

"தங்கம், வெள்ளி சுரங்கங்கங்களில் இந்தியர்கள் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். பெண்களும் வயல்களில் வேலை செய்தனர். ஸ்பானிய எஜமானர்கள் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவு உணவு வழங்கினார்கள். உறங்கும் பொது கூட, சங்கிலியால் பிணைக்கப்பட்டு கட்டாந்தரையில் படுத்து உறங்கினார்கள். என்பது அல்லது நூறு றாத்தல் எடையுள்ள பொதிகளை சுமந்து கொண்டு 200 மைல் தூரத்தை நடந்து செல்ல வேண்டியிருந்தது. அதே நேரம் ஸ்பானியர்கள் பல்லக்கில் தூக்கி வரப் பட்டார்கள். செவ்விந்தியர்கள் அவர்களின் சக்திக்கு மீறிய அளவு வேலை செய்ய பணிக்கப்பட்டனர். கடும் உழைப்பு காரணமாக சோர்ந்து விழுந்தால் சவுக்கடி கிடைக்கும். களைப்பால் வேலை செய்ய மறுத்தால் சித்திரவதை செய்யப்பட்டனர். அசாதாரணமான உழைப்புச் சுரண்டல் காரணமாக நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மரணமடைந்தார்கள்.”
கரீபியன் கடல் தீவுகளில் இன்று ஒரு செவ்விந்தியரைக் கூட காண முடியாது. தீவுகளில் வாழ்ந்த அனைத்து பழங்குடி இனங்களும் ஐரோப்பியரால் பூரணமாக அழித்தொழிக்கப் பட்டனர். ஸ்பானிய காலனியாதிக்கவாதிகளின் தங்கம் தேடும் பேராசையால் இனவழிப்புக்கு ஆளானார்கள். தங்கச் சுரங்கங்களில் அடிமைகளாக உழைத்த பூர்வீக குடிகள், ஸ்பானிய எஜமானர்களின் இம்சை தாங்க முடியாது, தமது பிள்ளைகளை கொன்று விட்டு, தாமும் கூட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

உழைப்புச் சுரண்டலை சகிக்க முடியாது தற்கொலை செய்த பரிதாபத்துக்குரிய ஜீவன்களை ஸ்பானிய அதிகாரிகள் ஏளனத்துடன் பார்த்தனர். "வேலை செய்து பழக்கமற்ற சோம்பேறிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்..." என்று பரிகசித்தனர். நிச்சயமாக தென் அமெரிக்க பூர்வகுடிகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதற்கும் தாங்க முடியாத உழைப்புச் சுரண்டலே காரணம். கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால், தாம் சமமான மனிதர்களாக நடத்தப் படுவோம் என எதிர்பார்த்தார்கள். ஆனால் ஸ்பானிய எஜமானர்களைப் பொறுத்த வரை, “கிறிஸ்தவர்களோ இல்லையோ, செவ்விந்தியர்கள் அனைவருமே அடிமைகள் தான்.”

ஸ்பானியர்களின் கொடுமைகளுக்கு அஞ்சி எல்லா அமெரிக்க பூர்வீக குடிகளும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. மெக்சிகோவில் ஹிடால்கோ என்ற பாதிரியார் தலைமையிலும், பெரு நாட்டில் துபாக் அமாரு என்ற இன்கா அரச குடும்ப வாரிசு தலைமையிலும் விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றன. செவ்விந்தியர்களிடம் இருந்து அனைத்தையும் பறித்துக் கொண்ட ஸ்பானியர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வதும், மண்ணின் மைந்தர்கள் வறுமையில் வாடுவதும், காலனிய காலம் முதல் இன்று வரை நிதர்சனமான காட்சிகள். "எனதருமை மக்களே! ஸ்பானியர்கள் எம்மிடம் இருந்து அபகரித்த மண்ணையும், செல்வத்தையும் மீட்டெடுப்போம்." என்று அறைகூவல் விடுத்த துபாக் அமாருவின் பின்னால் ஆயிரமாயிரம் மக்கள் திரண்டனர். 1781 ல், துபாக் அமாருவின் விடுதலைப் படை தலைநகர் Cuzco வை முற்றுகையிடும் அளவுக்கு பெரிதாக இருந்தது. இறுதியில் சொந்த படையை சேர்ந்த தளபதி ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு, துபாக் அமாரு கைது செய்யப்பட்டான். காலனியாதிக்கவாதிகளுக்கு எதிரான பூர்வீக மக்களின் புரட்சி முறியடிக்கப்பட்டது.

சிறையில் இருந்த துபாக் அமாருவை பார்க்க வந்த ஸ்பானிய அதிகாரி, கிளர்ச்சியில் பங்கு கொண்டவர்களை காட்டிக் கொடுத்து விட்டு விடுதலையடையும் படி ஆசை காட்டினான். ஆனால் பணிய மறுத்த துபாக் அமாரு, "இங்கே இரண்டு பொறுப்பாளிகள் மட்டுமே உள்ளனர். ஒன்று, விடுதலைப் போராளியான நான். மற்றது, ஆக்கிரமிப்பாளனான நீ. இருவருமே மரணத்திற்கு தகுதியானவர்கள்." என்றான். தலைநகரின் மத்திய பகுதிக்கு கொண்டு வரப்பட்ட துபாக் அமாருவும், அவன் மனைவியும், பிள்ளைகளும், பலர் பார்த்திருக்கும் வண்ணம் சித்திரவதை செய்யப்பட்டார்கள். துபாக் அமாருவின் கைகளையும், கால்களையும் கையிற்றால் பிணைத்து, நான்கு குதிரைகளில் கட்டி, நான்கு திசைகளில் இழுத்தார்கள். அப்போதும் அவனது கை கால்கள் கிழியவில்லை. பின்னர் தலையையும், கை,கால்களையும் தனியாக வெட்டியெடுத்து, ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நகரத்திற்கு ஞாபகார்த்தமாக அனுப்பினார்கள். துபாக் அமாருவின் நான்காவது சந்ததி வரையில் அழிக்கப்படுவார்கள் என சூளுரைத்தார்கள்.

காலனியாதிக்கவாதிகளால் பூர்வகுடிகளின் விடுதலை வேட்கையை நான்காவது தலைமுறையிலும் அழிக்க முடியவில்லை. 22 ஏப்ரல் 1997 அன்று, "துபாக் அமாரு புரட்சி அமைப்பு", பெரு நாட்டின் தலைநகர் லீமாவில் உள்ள ஜப்பானிய தூதுவராலயத்தை கைப்பற்றியது. 126 நாட்கள், 72 சர்வதேச தலைவர்களையும், உயர்மட்ட அதிகாரிகளையும் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். தூதுவராலயத்தை சூழ்ந்த ஊடகங்களின் உதவியுடன், (அமெரிக்க) ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் எதிராக போர்ப்பிரகடனம் செய்தனர். இறுதியில் துபாக் அமாரு போராளிகள் அனைவரும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டு விட்டனர். இருப்பினும் துபாக் அமாருக்கள் அந்த மண்ணில் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டிருப்பார்கள் என்பதை, அந்த சம்பவம் உலகுக்கு எடுத்துக் காட்டியது.
(தொடரும்)

8/24/10

என்ன 'வலி' அழகே! - சந்தனமுல்லை



இந்த போஸ்டை யாருக்கு சமர்ப்பிக்கலாம்?
எல்லா பெண்களுக்கும்..அல்லது அனைத்து பியூட்டி பார்லர்களுக்கும்...ம்ம்..அல்லது அனைத்து ஆண்களுக்கும்....?!


சமீபத்தில் அலுவலகத்தின் ஆண்டுவிழாவிற்காக(!) ஒரு ராம்ப் வாக் இருந்தது. அதில் நானும் பங்கு பெற்றிருந்தேன். பயிற்சிகள் எல்லாம் முடிந்து நிகழ்ச்சி நடைபெறும் நாள் நெருங்கும்போது பங்கு பெற்ற அனைத்து பெண்களுக்கும் ஒரு டிப்ஸ் வழங்கப்பட்டது.


புருவத்தை ஒழுங்கு (த்ரெட்டிங்) செய்தல்,
கைகளில் தெரியும் பூனைமுடிகளை அகற்ற (வாக்ஸிங்) மற்றும்
முகப்பொலிவுக்கான ஃபேஷியல்


ஃபேஷியலை மட்டும் செய்துக்கொள்ளலாமென்று நினைத்து கடைசியில் எதுவுமே செய்துக்கொள்ளாமலே பங்கேற்றேன். அது வேறு விஷயம்.


என்னைப் பொறுத்தவரை பியூட்டி பார்லர் என்பது எனது முடியின் நீளத்தை குறைக்க மட்டுமே. தலைமுடி வெட்டிக்கொள்வது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. (அதற்குபின்னர் முற்றிலும் முற்றிலும் புதிய தோற்றம் கிடைப்பதால் அல்லது அப்படி நான் நம்புவதால் இருக்கலாம்.) மேலும், தலைமுடியைக் குறைப்பதால் உடலில் வலிகள் ஏதும் கிடையாது.


எனது ஒருசில நண்பர்களுக்கு, பியூட்டி பார்லர் என்பது அழகுபடுத்திக்கொள்ள - வலிகளை அனுபவித்து உடல்பாகங்களை அழகுபடுத்திக்கொள்வதற்கானது. சிலருக்கு, கால் மசாஜ் செய்து கால்விரல் நகங்களுக்கு நகப்பூச்சு (!) போடுவதற்கும். இன்னும் சிலருக்கு, தலைமுடிக்கு விதவிதமான வண்ணங்களை அடித்துக் கொள்வதும், ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வதற்கும் அல்லது பாடி மசாஜ் செய்துக்கொள்வதற்கும் அல்லது விலையுயர்ந்த பேஷியல்கள் - கோல்ட் ஃபேஷியலிலிருந்து அரோமா மற்றும் ஹெர்பல் இன்னபிற.


மேற்கண்ட எதையும் நான் முயற்சி செய்திராததால் அதைப்பற்றி எதுவும் என்னால் சொல்ல இயலாது.


ஆனால், பியூட்டி பார்லர் என்பது நம்மைப் பற்றி, நமது உடலை பற்றி - நல்லபடியாக உணர்வதற்கு உதவி செய்யும் இடம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன் - சிலவற்றை அறியும் வரை/உணரும் வரை.


கல்லூரி நண்பர்கள்தான் முதல்முதலில் எனது கால்கள் அழகானவை அல்ல என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. "அடர்த்தியாக முடி முளைத்த கால்கள் பெண்களுடையது அல்ல. பெண்களின் கால்கள் மொழுமொழு-வென்று முடியற்றவையாக இருத்தல் வேண்டும். அல்லாவிடில், அவை அசிங்கமானவை." பெண்களுக்கு முடி என்பது தலையில் மட்டுமே இருக்க வேண்டும்.


அடுத்த லீவுக்கு வீட்டுக்குச் சென்றபோது, கடைசாமான்கள் பட்டியலில் இடம்பெற்றது ஆனி ஃப்ரெஞ்ச். அரை மணிநேரம் அதை தடவிக் கொண்டு பாத்ரூமில் அடைந்து கிடந்தது மறக்க முடியாதது. அதைப் போலவே, முடி நீக்கிய கால்களை நானே தடவித் தடவிப் பார்த்ததும். எல்லாம் ஒரு வாரம்தான். அடுத்த பதினைந்தாவது நாளைக்குள் "என்ன முல்லை, ஆம்பளை கால் மாதிரி இருக்கு" கதைதான்!


"குளிக்கும்போது மஞ்சள் தேய்", "ப்யூமிக் ஸ்டோன் போடு" என்று நாமே கேட்காவிட்டாலும் 'ஆஸ்க் லைலா' மற்றும் 'ஆஸ்க் அகிலா'க்கள் விடவில்லை. இது எதுவுமே எனது அவசர கோலத்துக்கு உதவவில்லை. ஹாஸ்டலின் ஷானாஸ் ஹூசைன்களில் ஒருவர் "வேக்ஸிங் பண்ணாதான் க்ரோத் குறையும்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அதுவரை வுமன்ஸ் எராவில் அதைப்பற்றி
அறிந்திருந்ததோடு சரி, எப்படி இருக்குமென்று சுத்தமாக தெரியவில்லை.


"வீட்டுலேயே பண்ணலாம், சர்க்கரை, தேன் எல்லாம் போட்டு காய்ச்சணும், சூடா கால்லே அப்ளை பண்ணிட்டு வெள்ளைத் துணியை கால்லே ஒட்டிட்டு முடி வளர்ந்திருக்கிறதுக்கு எதிர்பக்கம் இழுக்கணும்" என்றபோது தண்டுவடம் சில்லிட்டது.


"ஏன் கால்லே முடி இருந்தா என்ன? என்னோட கால் எப்படி இருந்தா யாருக்கென்ன?" என்ற கேள்விகளுக்கு இடமுமில்லை. விடையுமில்லை. மிடிகளையும் கேப்ரிகளையும் தாண்டி நீளும் கால்களில் உரோமம் இருந்தால் அது வெட்கத்துக்குரியது. ஆண்களுக்கோ அது அழகு...கம்பீரம்!




எட்டாம் வகுப்பு படிக்கும்போது "காலேஜா" என்று என்னைப் பார்த்து கேட்கவைத்ததற்கு எனது உயர்ந்த கால்களும் ஒரு காரணம். பள்ளியின் பெருமைக்குரிய அதலெடிக்காக இருந்ததற்கு, முடி முளைத்த- ஆண்களுடையது போலிருக்கிறது என்று சொல்லப்பட்ட கால்களும் காரணம். மற்றவர்களிடமிருந்து உயரமானவளாக தனியாக என்னை தெரிய வைத்தது கருகரு முடி முளைத்த கால்களே!


"ஆச்சி என்னா ஹைட் டீச்சர்" என்பது வீட்டிற்கும் பெருமையாகவே இருந்தது - ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் எனது உயரத்தை பெரிம்மா கதவிற்கு அருகில் நிற்க வைத்து ஸ்கேலால் தலைக்கு மேல் அளந்து குறித்து முந்தைய வருடத்தைவிட அளவு பார்ப்பது - ஒரு சம்பிரதாயமாகவே இருந்தது - எனது கால்களில்லாமல் - முடி முளைத்த அக்கால்களில்லாமல் என்னால் என்னை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.


திருமணம் நிச்சயமானபோது அலுவலகத் தோழி என்னை அழைத்துச் சென்ற இடம் - லேக்மே பியுட்டி பார்லர்.


கால்களில் கோந்தைப் போன்ற பிசுபிசுப்பான ஒன்றை சூடாக கத்தியால் தடவும் போது அது ஒன்றும் நிச்சயமாக சுகமானதொன்றாக இல்லை. உடனே ஒரு பேப்பர் கைக்குட்டையை வைத்து எதிர்ப்புறமாக டக்கென்று இழுத்தபோது தேனீ கொட்டியது போல...அல்லது 100 ஊசி முனைகளை வைத்து குத்தியது போல...அல்லது 1000 வோல்ட் ஷாக் அடித்தது போல இருந்தது.


இவ்வளவு கஷ்டப்பட்டு இதை ஏன் செய்துக்கொள்ள வேண்டுமென்றே தோன்றியது.


ஒரு அரைநாள் முழுக்க அங்கேயே - அங்கிருந்த எல்லா உபகரணங்களும் என் மேல் பயன்படுத்தப்பட்டு
தங்களது உபத்திரவத்தை கொடுத்தன. வேக்ஸிங்கைப் போல.. பத்து மடங்கு...இல்லையில்லை... ஐம்பது மடங்கு வலியைத் தரக்கூடியது புருவங்களை ஒழுங்குப்படுத்துதல். வாழ்க்கையில் இரு முறைகள் அக்கொடுமையை அனுபவித்திருக்கிறேன்.


அதுவும், ஒருவர் வாயில் நூலை வைத்து கையில் இழுத்தபடி உங்கள் நெற்றி முடிகளை பிடுங்கும் வலியை சொல்லி புரிய வைக்கமுடியாது. வெளியே வந்தபோது "இனிமே ஜென்மத்துக்கும் இதையெல்லாம் பண்ணிக்க மாட்டேம்ப்பா" என்றுதான் தோன்றியது.


இவ்வளவு வலியை அனுபவித்து எதற்காக இவர்கள் செய்துக்கொள்ள வேண்டுமென்று புரியவில்லை.


அம்மாக்களின் தொல்லையாலா அல்லது அவர்களது கணவர்களா..பாய் ஃப்ரெண்ட்களா...யாரை மகிழ்ச்சிப்படுத்த இந்த வேதனையை அனுபவிக்க வேண்டும்? ("உன் கால்லே இருக்கற முடியை எடு" என்று என்னிடம் சொல்லியிருந்தால் "உன் கால்லே இருக்கிற முடியை எடுத்துட்டு என்கிட்டே சொல்லு" என்றே சொல்லியிருப்பேன்!)


ஃபேஷியல் - இதை நினைத்தால் மசாலா தடவி கிரில் செய்யப்பட்ட கோழி உயிருடனிருந்தால் அனுபவிக்கும் வலிதான்.


மூக்கிலிருக்கும் கருந்துளைகளை எடுக்கிறேனென்று பயங்கரமான கருவியுடன், இல்லாத பிளாக் ஹெட்சை எடுக்க ஒரு பெண் மூக்கை அழுத்தியதும் உடலின் அத்தனை செல்களும் அதிர்ந்து அடங்கியதுதான் நினைவுக்கு வருகிறது.


உண்மையில் இவை அனைத்தையும் மேற்கொண்டபோது ஒருவித அவமானமே மேலோங்கி இருந்தது. இயற்கையாக நானிருப்பதை விடவா இந்த கருவிகள் அழகைக் கூட்டப்போகின்றன...அவை அழகையல்ல..இம்சையையே கூட்டுகின்றன! அதற்கு மேல்....அழகுக்கலைப் பெண்களின் கமெண்ட்களும்...


உங்கள் முகத்தில் பூனை முடிகள் நிறைய இருக்கு மேடம்...
ஒரு தடவை ஃபேஸ் ப்ளீச் பண்ணா பளிச்சுன்னு இருப்பீங்க மேடம்...
உங்க ஐ ப்ரோ த்ரெட் பண்ணா அழகா இருக்கும் மேடம்....


கடந்த முறை முடி வெட்டிக்கொள்ள சென்றிருந்தபோது ஒரு பெண்ணின் வலி மிகுந்த குரலைக் கேட்க நேர்ந்தது. நெடுநேரத்திற்கு என்னவென்றே புரிந்துக்கொள்ள முடியவில்லை. வெளியே வந்தவரிடம் விசாரித்ததற்கு 'பிகினி கரெக்ஷன்' என்றார். இவ்ளோ கஷ்டப்பட்டு வலியை அனுபவித்து ஏன் அதைச் செய்துக் கொள்ள வேண்டுமென்றதற்கு அவர் சொன்ன பதில், "இதைச்
செய்துக் கொண்டால் எனது கணவர் மகிழ்ச்சியடைகிறார். அவரை சந்தோஷப்படுத்தவே இதை அனுபவிக்கிறேன்".


ஹூம்!


தனிப்பட்ட சுகாதாரத்திற்காக சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடிந்த என்னால், அடுத்தவர் பார்வைக்கு அழகாக இருக்க வேண்டுமென்று சிலவற்றை மேற்கொள்வதை புரிந்துக்கொள்ள முடிந்ததில்லை.


இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், பெண்ணாக பிறக்கும் ஆசையிருப்பின் உடலில் முடியேயில்லாமல் பிறக்க ஆசைப்படுங்கள்.


ஒருவேளை நீங்கள் பெண்ணாக இருந்தால், உடலில் முடிகளுடன் இருக்கும் நடுத்தர வர்க்க பெண்களின் வலிகளை வெளிச்சத்துக்கொண்டு வந்ததற்கு மகிழ்ச்சியடையுங்கள்! :-)


நன்றி - சந்தனமுல்லை