7/25/08

எகிப்து: மத அடிப்படைவாதம் சோறு போடுமா?

பண்டைய எகிப்து, ரோமர்கள் காலத்தில், ஐரோப்பாவின் உணவுக்களஞ்சியம் என்று பேர் எடுத்தது. உலகப்பேரழகி கிளியோபேட்ரா ஆட்சிக்காலத்தில் ஒருமுறை பஞ்சம் ஏற்பட்ட போது, அரச தாணியக்கிடங்கை திறந்து பொதுமக்களுக்கு உணவளித்ததாக சரித்திரம் கூறுகின்றது. இன்று உலகமயமாகிய பொருளாதரத்தில் அங்கம் வகிக்கும் காலத்தில், உணவுப்பொருள் விலையேற்றம் காரணமாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய போதும், 26 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் ஹொஸ்னி முபாரக், தாணியக்கிடங்கை திறந்து விடவில்லை. அதற்கு பதிலாக போலிஸ் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடமாகவே எகிப்து கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. பருத்தி ஆலைதொழிளார்கள் வேலை நிறுத்தம், தற்போது அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம்....இப்படியே தொடர்ந்தால் போலீஸ்காரர்கள் வேலை நிறுத்தம் செய்யாதது தான் மிச்சம். பலதரப்பட்ட பொருளாதர நிலைகளில் வேலைநிறுத்தங்கள் நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தாலும், அது முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை அசைக்கப்போவதில்லை. அதற்கு காரணம், காவல்துறை , இந்த அரசை பாதுகாக்கவே அமைக்கப்பட்டுள்ளது. உயர் மட்ட அதிகாரிகளுக்கு கிடைக்கும் சலுகைகள், செல்வந்த வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தியுள்ளதென்றால், நடுத்தர அதிகாரிகள் லஞ்சப்பணம் பெற்று பிழைத்துக்கொள்கின்றனர்.

கடந்த வருடம் எகிப்திய பொருளாதாரம் ஏழு வீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. இருப்பினும் ஒரு நாளைக்கு இரண்டு டாலர்கள் மட்டுமே சம்பாதிக்கும் மொத்த சனத்தொகையில் நாற்பது வீத எகிப்தியர்களின் சம்பளம் மட்டும் உயரவில்லை. "Kefaya"(போதும்) என்ற பெயரில் ஒரு புதிய மதச்சார்பற்ற மக்கள் இயக்கம், பிற சமூக ஆர்வலர்களுடன் இணைந்து நாடளாவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. விலை வாசி உயர்வு, மாதக்கணக்காக வழங்கப்படாத சம்பளப்பணம், ஊழல், போலிஸ் அடக்குமுறை, அரச பயங்கரவாதம் இவற்றிற்கெதிராக பொது மக்கள் எதிர்ப்பைக்காட்ட வருமாறு அவர்களின் பிரசுரங்கள் அழைப்பு விடுத்தன. தலைநகர் கய்ரோவில் பலத்த போலிஸ் கெடுபிடி காரணமாக வேலை நிறுத்தம் வெற்றியளிக்கவில்லை. ஆனால் தலைநகரில் இருந்து 150 கி.மி. தூரத்தில் உள்ள, பருத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ள அல்-குப்ரா என்ற இடத்தில், தொழிலாளர் ஒற்றுமையாக வேலைநிறுத்தத்தில் குதித்ததுடன், அடக்க வந்த போலிஸ் படைகளை எதிர்த்து போராடிய போது, போலிஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டான். நூற்றுக்கனக்கனோர் கைது செய்யப்பட்டனர். பத்திரிகை நிருபர்கள் எவரும் சம்பவம் நடந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு அரசாங்கம், வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தொழிலாளர்களுக்கு போனஸ் என்ற பெயரில் லஞ்சம் கொடுப்பதாக அர்ரிவித்தது. பரந்துபட்ட தொழிலாளர் போராட்டம், அரசாங்கம் ஆட்டம் காணுவதன் அறிகுறி. ஆனால் அதேநேரம், அந்தப்போராட்டம் ஈவிரக்கமின்றி அடக்கப்படலாம். அப்படி நடக்கும் பட்சத்தில் , பல எகிப்தியர்கள் நாட்டை விட்டு தப்பியோடி, ஐரோப்பாவில் புகலிடம் கோரலாம். என்ன அதிசயம், எந்தவொரு ஐரோப்பிய ஊடகமும் இப்போது எகிப்தில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி கண்டு கொள்ளவில்லை. பின்னர் அகதிகள் வரும் போது, அங்கே என்ன பிரச்சினை என்று, ஒன்றும் தெரியாதது மாதிரி கேட்பார்கள்.

எகிப்தில் நிலவும் சர்வாதிகாரம் காரணமாக, அநேகமான மக்கள் மாற்று வழியை தேடுகிறார்கள். அதனாலே தான் இஸ்லாமிய அடிப்படை வாத கட்சியான "முஸ்லீம் சகோதரத்துவம்", தேர்தலில் போட்டியிடும் போது பெரும்பான்மையான மக்கள் அதற்கு வாக்கு போடுகின்றனர். 2005 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், அந்தக்கட்சி இருபது வீதமான வாக்குகளை பெற்றதை தொடர்ந்து, கடைசியாக நடந்த உள்ளூராட்சி தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் முஸ்லீம் சகோதரர்கள், தற்போது நாடளாவிய ரீதியாக வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை. தொழிலாளர் போராட்டம் மத அடிப்படை கொண்டதல்ல என்பதால், "புரட்சி ஆபத்தானது" என்று போதித்து வருகின்றனர். அவர்களக்கு உலகத்தில் மதத்தை விட்டால் வேறெதுவும் தெரியாது. இருப்பினும், அரச அடக்குமுறை அவர்கள் மீதும் ஏவி விடப்படுகின்றது. அந்தக்கட்சியின் நிதி வழங்குனறன, ஸ்விட்ஸர்லாந்தில் வசித்த எகிப்து வங்கியாளர், மேலும் இரண்டு வர்த்தகர்கள் சர்வதேச போலிஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டு, கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லீம் சகோதரத்துவ கட்சி வருங்காலத்தில் பலவீனப்படும் வாய்ப்புகள் உள்ளன.

முபாரக்கின் சர்வாதிகாரம் எகிப்திற்கு புதிதல்ல. அதற்கு, இராணுவ உதவிகளை வாரிவழங்கும் அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவும் புதிதல்ல. தொழிலாளரின் அன்றாட உணவிற்கே போதாத ஊதியம், ஏழ்மை நிலை, ஊழல் இவை எதுவுமே எகிப்திற்கு புதிதல்ல. ஆனால் இந்த சமூக குறைபாடுகளை எல்லாம், மக்கள் பொறுத்துக்கொள்வது, மதவாதிகளின் பிரச்சாரத்தினால் தான். இருபதாம் நூற்றாண்டு இஸ்லாமிய நாடுகளில், எகிப்து தான் மத அடிப்படைவாத கொள்கையை கண்டுபிடித்தது. குறிப்பாக "முஸ்லீம் சகோதரத்துவம்" கட்சி தான், நமது காலத்திய கொமெய்னி (ஈரான்), பின் லாடன் (சவூதி) வகையறாக்களின் சித்தாந்த பாசறை. அவர்களின் பார்வையில், மக்களின் அவலநிலமைக்கு காரணம், சாதாரண மக்களின் மத நம்பிக்கை குறைபாடு தான். எல்லோரும் மதத்தை சரியாக கடைப்பிடித்தால், எல்லா சமூக குறைபாடுகளும் விலகிவிடுமாம். ஒரு காலத்தில், மதச்சார்பற்ற லிபரல் கலாச்சாரத்தை பின்பற்றிய எகிப்திய மக்கள், இந்த பிரச்சாரத்தின் பின்னர், மதப்பற்றாளர்களாக மாறினர். மதவடிப்படைவாத சக்திகளின் வேகமான வளர்ச்சிக்கு அதுவே காரணம்.

தற்போது எகிப்தின் தொழிலாளர் போராட்டங்கள், மத அடிப்படைவாதம் சோறு போடாது என்று கண்ட அனுபவத்தின் விளைவு. முதலாளித்துவ பொருளாதாரத்தின் இருண்ட மறுபக்கமான சமுதாய சீர்கேடுகள் நிலைத்து நிற்பதற்கு மத நம்பிக்கை குறைவு காரணமல்ல. மக்கள் நலன்களை விட லாபத்தை மட்டுமே முதன்மையாக கருதும் முதலாளிகள், அவர்களுக்கு தேவையான வசதி செய்து கொடுக்கும் அரசாங்கம், அரசாங்கத்தை மக்களிடமிருந்து காப்பாற்ற உள்ள பாதுகாப்புபடைகள், ஊழல் ஆட்சிக்கு முண்டு கொடுக்கும் சர்வதேச ஆதரவு... இப்படி நீள்கிறது பட்டியல். இந்தக் காரணங்களை மக்களிடம் இருந்து மறைக்கும், உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் சக்திகளின் இரட்டை வேஷங்களை கண்ட மக்கள் தான் தெருவில் இறங்கி போராடுகின்றனர்.

7/23/08

இமய மலையில் செங்கொடி ஏற்றிய மாவோயிஸ்டுகள்

நேபாளம் குடியரசாகி. மன்னர் கியேன்த்ரா, கத்மண்டு அரண்மனையை விட்டு செல்ல மூட்டை முடிச்சுகளை கட்டிகொண்டிருக்கிறார். கடந்த ஏப்ரல் பத்தாம் திகதி நடந்த அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல், நேபாளத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றி விட்டது. தெற்கு ஆசிய வரலாற்றில் ஒரு திருப்பு முனை, அந்த தேர்தல். 1996 ம் ஆண்டில் இருந்து, வெற்றிகரமான ஆயுதமேந்திய மக்கள் புரட்சியை நடத்தி, நேபாளத்தின் 80 % நிலப்பரப்பை, தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த மாவோயிஸ்டுகள், தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெரும் அளவிற்கு மக்கள் செல்வாக்கு இருப்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ஆளும்வர்க்கம், இந்தியா, அமெரிக்கா,பிரிட்டன் ஆகியன அதிர்ச்சியில் உறைந்து போயின. தேர்தல் கண்காணிக்க போன முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், அமெரிக்கா அரசாங்கம் மாவோயிஸ்டுகளுடன் பேச வேண்டிய தருணம் இது என்றார். (மாவோயிஸ்ட் கட்சி அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் உள்ளது) தேர்தல் முடிவுகளை அறிவிக்க தொடங்கிய பி.பி.சி. செய்தியாளர், நேபாள காங்கிரஸ் கட்சி முதல் இடத்திலும், மாவோயிஸ்டுகள் மூன்றாம் இடத்திலும் வருவார்கள், என்று தனது எதிர்பார்ப்பை செய்தியாக கூறினார். ஆனால் அடுத்த நாளே, மாவோயிஸ்டுகள் மற்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளி விட்டு, பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் நிற்கின்றனர் என்ற உண்மையை சொல்ல வேண்டியேற்பட்டது. அவ்வளவு தான், பி.பி.சி. அதற்கு பிறகு நேபாள பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. (வாழ்க நடுநிலமை)
தொன்னூருகளின் மத்தியில் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, மக்களின் பிரச்சினைகளை மறந்து, முடியாட்சிக்கு முண்டு கொடுக்கும் சாதாரண அரசியல் கட்சியாக இருப்பதாக குறை சொல்லி, "பிரச்சந்தா தலைமையில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைத்த நாளில் இருந்து தலைமறைவாக இயங்க வேண்டியேற்பட்டது. இமய மலைக் கிராமங்களை தமது தளமாக கொண்டு மக்கள் யுத்தம் ஆரம்பித்தனர். நேபாளம் உலகிலேயே வறுமையான நாடுகளில் ஒன்று. குறிப்பாக நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள், ஒன்றில் பின்தங்கிய இனங்களை சேர்ந்த, அல்லது தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த வறிய மக்கள், மாவோயிஸ்டுகளின் அரசியல் கோரிக்கைகள்,தமது நலன்களுக்கானவை என்று கண்டு கொண்டதால், பெருமளவு இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர். அவர்களில் கணிசமான அளவு பெண் போராளிகளும் இருந்தனர்.
கம்யூனிசம் இறந்து சமாதிக்குள் உறங்குகிறது, அது இந்தக்கால கட்டத்திற்கு ஒவ்வாது, என்று உலகம் முழுவதும் பிரச்சாரம் நடந்து, எல்லோரும் அதை நம்பிய நேரத்தில், மாவோ வழியில் ஒரு இயக்கம், நேபாளத்தில் மக்களை திரட்டி, வெற்றியும் பெற்றது. அதன் வெற்றியை ஆராய்ந்த மேற்குலக அரசியல் அறிஞர்கள் , இன்றும் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதை ஒப்புக்கொண்டனர். தெற்காசிய நாடுகளுக்கே உரிய "சிறப்பம்சமான" சாதிய பாகுபாடு, பெண் அடக்குமுறை ; இவற்றுடன் ஈவிரக்கமின்றி உழைப்பு சுரண்டப்படுவதால் வறுமையில் வாடும் மக்கள், கடன் சுமையால் கஷ்டப்படும் நிலமற்ற விவசாயிகள், போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு, ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயுதமேந்துவது தான், என்று மாவோயிஸ்டுகள் கூறிய போது, யாரும் மறுக்கவில்லை. மேலும் அதன் பலாபலன்கள் உடனுக்கு உடனே தெரிய ஆரம்பித்தன. முடிக்குரிய நேபாள் இராணுவம், போலிசுடன் போராடி கைப்பற்றிய பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த மாவோவாதிகள், "உழுபவனுக்கே நிலம்" என்ற கோஷத்தின் கீழ், அங்கிருந்த நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கினார். அவர்களின் அவல வாழ்வுக்கு காரணமான, கடன்பத்திரங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. சாதி அடக்குமுறை தடுத்து நிறுத்தப்பட்டு, சாதிக்கலப்பு திருமணங்கள் ஊக்குவிக்கப்பட்டன. குறிப்பாக மக்கள் விடுதலை இராணுவத்தில் இருந்த போராளிகள் இவ்வாறு கலப்பு திருமணம் செய்து கொண்டனர். பெண்கள் ஆண்களுக்கு நிகரான சம அந்தஸ்து பெற்றனர். சீதனம் கொடுப்பது/வாங்குவது குற்றமாக்கப்பட்டது. இவற்றை விட தொழிற்சங்க நடவடிக்கை மூலம், நகரங்களில் கூட தொழிலாளரின் சம்பளம் இரண்டு மடங்காக உயர்ந்தது. நேபாள சரித்திரத்தில் முதன் முறையாக, ஆதிக்க சாதியினர், அநியாய வட்டிக்கு கடன்கொடுப்போர், பெரும் முதலாளிகள் ஆகியோர், ஒடுக்கப்பட்ட மக்களின் உத்தரவுகளுக்கு கீழ்படிந்தனர். இந்த மாற்றங்கள் யாவும் மாவோயிஸ்டுகளின் போராட்டம் இல்லையேல் சாத்தியமாகியிருக்காது.
நேபாள இராணுவம் மாவோயிஸ்டுகளுடன் நீண்ட காலம் போரிட்டு வெல்ல முடியாத போது, அதற்கு பாராளுமன்றத்தை குற்றம் சாட்டிய மன்னர், அதிகாரம் முழுவதையும் தன் கையில் எடுத்தார். அது ஒரு முட்டாள்தனமான முடிவாக அமைந்து, "பூமராங்" போன்று மன்னரையே திருப்பி தாக்கியது. மன்னரின் சர்வாதிகாரத்திற்கு எதிராக போது மக்கள், கிளர்ந்தெழுந்தனர். இந்தியாவும் அதனை விரும்பாததால், அழுத்தங்களுக்கு கட்டுபட்ட மன்னர் ஒதுங்கிக்கொண்டார். ஜனநாயகம் மீண்ட போது, பாரளுமன்ற கட்சிகள், மாவோயிஸ்டுகளுடன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது கண்ட உடன்பாட்டின் படி, முடியாட்சி ஒழிக்கப்பட்டு, குடியரசு பிரகடனம் செய்வதென்றும், புதிய அரசியல் நிர்ணய சபை அமைத்து, புதிய சட்டங்கள் எழுதுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன் படி இதுவரை இருந்த பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் மிக விரைவில் நேபாளத்தின் சட்டங்களை மாற்றியமைப்பார்கள். நிச்சயமாக இதனால் மாவோயிஸ்டுகளின் பிரேரணைகள் நடைமுறைக்கு வரும்.
புதிய அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, நேபாளம் ஒரு குடியரசாக மாறும். அதற்கு பதிலாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி உருவாகும். நேபாளம் பல்வேறு மொழிகள் பேசும், பல்லின மக்கள் வாழும் நாடாக இருந்தாலும், அது ஒற்றையாட்சி அலகை கொண்டிருந்தது. புதிய அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, நேபாளம் ஒரு சமஷ்டிக் குடியரசாகும். அதிலே ஒவ்வொரு மொழி பேசும் இனங்களுக்கும், தனித்தனியாக பதினொரு மாநிலங்கள் உருவாக்கப்படும். அதிலேயும் சிறுபான்மையாக இருக்கும் இனங்களுக்கு தனியான நான்கு நிர்வாக அலகுகள் கிடைக்கும். நேபாளத்தில் வட இந்திய இனங்களே(அதிலும் பிராமண, சத்திரியர்கள் ) ஆதிக்கம் செலுத்தி வந்தன. பூர்வகுடிகளான திபெதோ-இந்திய இனக்குழுக்கள் அதிகாரமற்று இருந்தனர். அவர்கள் தங்களை ஆளும் மாநில அரசு கிடைத்தால் நன்மையடைவர். மேலும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் மேம்பாட்டிற்கு அரச சலுகைகள் கிடைக்கும். தற்போது தெரிவு செய்ய பட்ட மாவோயிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்களில், கணிசமான அளவு தலித் மக்களும், பெண்களும் இருப்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். பிற கட்சிகளில் இவர்களின் பங்கு மிகக்குறைவு. ஊனமுற்றவர்களுக்கும், வயோதிபர்களுக்கும், வேலையற்றவர்களுக்கும் உதவிதொகை வழங்கப்படும். (இந்த திட்டம் ஐரோப்பாவின் நலன்புரி அரசை ஒத்தது) மக்கள் விடுதலைப் படை போராளிகளின் குடும்பத்தினருக்கு விசேஷ சலுகைகள். மேலும் மாவோயிஸ்டுகள் தமது இராணுவப்பிரிவை(மக்கள் விடுதலை படை), முடிக்குரிய நேபளிய இராணுவத்துடன் இணைக்குமாறு கோரி வருகின்றனர். அதனை இராணுவ உயர் அதிகாரிகள் எதிர்க்கின்றனர். பொருளாதாரம்: தனியார் நிறுவனங்கள் , மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியன சமாந்தரமாக இயங்கும். அதே நேரம் நிலசீர்திருத்தம் நடைமுறை படுத்தப் படும். கூட்டுறவு பண்ணைகள் உருவாக்கப்படும். வெளிவிவகாரம்: நவீன தொழில்நுட்ப அறிவு, மற்றும் பாரிய கட்டுமானப்பணிகள் போன்றவற்றை அன்னிய நிறுவனங்களின் உதவியுடனேயே நடைமுறைப்படுத்த முடியும். இதன் நிமித்தம் சர்வதேச நாடுகளுடன் சுமுகமான உறவு பேணப்படும்.
மாவோயிஸ்டுகளின் "புதிய ஜனநாயக புரட்சி" சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுவரை ஆண்ட கட்சிகள் வாய்ச்சொல் வீரர்கள் என்பதை நன்றாக அறிந்து கொண்ட மக்கள், மாவோயிஸ்டுகள் மாற்றத்தை கொண்டு வருவர், என நம்புகின்றனர். மக்களின் வாக்குகளை உத்தரவாக கருதி, நேபாளத்தை முன்னேற்ற பாதையில் இட்டு சென்று, அதனை இமாலய சொர்க்கமாக்குவது, மாவோயிஸ்டுகளின் கைகளில் உள்ளது. நேபாளின் மன்னர், இராணுவம், ஆண்ட வர்க்கம், முதலாளிகள், மற்றும் அமெரிக்கா ஆகியன; இந்த முன்னேற்றத்தை தடுக்க நினைக்கலாம். எதிர்பாராத சதிப்புரட்சி ஏற்படலாம். அந்த நேரத்தில், என்ன செய்ய வேண்டுமோ, அதனை மாவோயிஸ்டுகள் செய்வார்கள்

திபெத் : மதம், விளையாட்டு, அரசியல்

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்க ஒரு சில மாதங்களே இருந்த நேரம், திபெத் மாநிலம் சீனாவினால் இணைக்க பட்ட பிறகு ஏற்பட்ட எழுச்சியின் 49 ம் ஆண்டு நிறைவுதினம், மீண்டும் கலகங்களையும், திபெத் சுதந்திர கோரிக்கையையும் கிளப்பி விட்டது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை சீன பாதுகாப்பு படைகள் கலைத்தத்தில் முப்பது அல்லது நாற்பது பேர் இறந்ததாகவும், அதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில், சீன வர்த்தக நிலையங்கள் திபெதியர்களால் தாக்கப் பட்டு, சில சீனர்களும் கொல்லப் பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய ஊடகங்களுக்கு இவை போதாதா? தொடர்ந்து சில நாட்கள், திபெத் தலைப்பு செய்தியாகியது. மனித உரிமை நிறுவனங்கள், சீன அரசிற்கு சர்வதேச நெருக்கடி கொடுக்குமாறு கூற, அரசியல் தலைவர்கள் ஒலிம்பிக் போட்டிகளை பகிஷ்கரிக்க யோசிப்பதாக தெரிவித்துள்ளனர். அப்படி நடக்குமா என்று இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

முன்பு என்பதுகளில் சோவியத் யூனியனில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்த போது, அமெரிக்கா உட்பட மேற்கு ஐரோப்பிய நாடுகள் விளையாட்டுகளை பகிஷ்கரித்தன. சோவியத் இராணுவம் ஆப்கானிஸ்தானில் இருப்பதை அதற்கு காரணமாக கூறின. தற்போது அதே நாடுகளின் இராணுவங்கள், அதே ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ளன! அதே சமயம், அமெரிக்காவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள நடந்த போது, யாரும் பகிஷ்கரிக்கவில்லை. இரண்டாயிரமாம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஒலிம்பிக் போட்டி இடம்பெற்ற போது, அங்கு பூர்வீக குடிகளான "அபோரிஜினர்கள்" சம உரிமை கேட்டு கலகம் செய்தனர். அப்போது இந்த மனித உரிமைவாதிகளோ, மேற்கத்திய அரசியல்வாதிகளோ ஆஸ்திரேலியாவிற்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை. ஊடகங்களும் அதைப்பற்றி ஒரு நாள் செய்தியுடன் முடித்துகொன்டன.

ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள தொடர்பு. பொது அபிப்பிராயத்தை உருவாக்குவதில் ஊடகங்களின் பங்கு. மனித உரிமை மீறல்கள் பிரச்சினையை தமது எதிரிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தும் மேலைத்தேய அரசியல்வாதிகளின் சாமர்த்தியம். இது போன்ற விடயங்களை பொது மக்கள் கவனிக்க தவறுகின்றனர். திபெதியரின் சுயநிர்ணய உரிமைகளை குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களின் உரிமைகளுக்கான போராட்டம் நியாயமானது. சீன அரசின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது. இதைப்பற்றி இரண்டு கருத்துகளுக்கு இடமில்லை. அதே நேரம், இந்த விடயத்தை ஒரு சிலர் தமது குறுகிய அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தி கொள்வதை அனுமதிக்க முடியாது. ஒரு பக்கம் சீன அரசாங்கமும், மறுபக்கம் இந்தியாவில் இயங்கும் தலாய் லாமா தலைமையிலான புகலிட திபெத் அரசாங்கமும், செய்திகளை திரிபுபடுத்தி அல்லது மிகைப்படுத்தி வெளியிடுவதிலும், வதந்திகளை கிளப்பி விடுவதிலும் மும்முரமாக இருக்கையில்; மேற்கத்தைய ஊடகங்கள், திபெத் சார்பு நிலை எடுத்தன. இருப்பினும் திபெத்தில் உள்ள சீனர்களின் வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் தாக்கி எரிக்கப் பட்டத்தை, ஊடகங்கள் எதுவும் மறைக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு சார்பான கோணத்தில் இருந்தே இதை பார்த்தனர். சீன ஊடகங்கள், திபெதியரை வன்முறையாளர்களாக சித்தரிக்கவும், உண்மையில் சீன இனத்தவர்களே பாதிக்கப்படுகின்றனர், என்பதைக் காட்டத்தான் அவற்றை வெளியிட்டன. மேற்கத்திய ஊடகங்களோ, இது திபெத்திய மக்களின் அடக்குமுறையாளருக்கு எதிரான தன்னெழுச்சி, ஆகவே நியாயமானது என்ர கருத்துப்பட செய்தி வெளியிட்டன. இதிலே ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். இன்னொரு உதாரணமாக இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையை எடுத்து கொள்வோம் . திபெத் சீனாவின் இறைமைக்கு உட்பட்ட மாநிலம் என்று, அனைத்து சர்வதேச நாடுகளும் அங்கீகரித்துள்ளன. அதே நேரம் பாலஸ்தீனம் தனியான நாடாக இருக்க தகுதியுள்ளதாக ஐ.நா. அமைப்பு முதல், அமெரிக்கா உட்பட சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. அப்படியிருக்கையில், பாலஸ்தீனியர்கள், யூத வர்த்தக நிலையங்களை, வாகனங்களை தாக்கி எரியூட்டினால், அதை இந்த ஊடகங்கள் எப்படி விவரிக்கும்? பாலஸ்தீனியர்கள் வெறிபிடித்த வன்முறையாளர்கள் என்பதை மக்கள் மனதில் பதிய வைக்கும் நோக்கோடு அந்தக் காட்சிகளை காட்டுவார்கள். இங்கே தான் "நடுநிலை" ஊடகங்களின் பக்கச்சார்பு தன்மை தெளிவாகின்றது.

திபெத் பிரச்சினையை வரலாற்று ரீதியாகவும் பார்க்க வேண்டும். சீன படையெடுப்பு வரும் வரை இருந்த, "சுதந்திர திபெத்" அன்றைய காலகட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த, மக்களை அடிமைத்தளையில் வைத்திருந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தை கொண்டது. "லாமாக்கள்" என்றழைக்கப்படும் பௌத்த மதகுருக்கள், அரசியல் நிர்வாகம் செய்யும் பிரபு குலமாக இருந்தனர். மதமும், அரசியலும் ஒரே ஸ்தாபனமாக இருந்த அன்றைய காலம், லாமாக்கள் அதிகாரம் படைத்த செல்வந்தர்களாகவும், பிற மக்கள் அவர்களுக்கு சேவகம் செய்யும், அல்லது விவசாய உற்பத்திகளில் ஈடுபடும் வறியவர்களாகவும் இருந்தனர். கடன்களை திருப்பி கொடுக்க முடியாதவர்கள், அடிமைகளாக சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டனர். இந்தக் குறிப்புகள் அப்போது திபெதிற்கு பயணம் செய்த சில ஐரோப்பியரின் எழுத்துகளிலும் பார்க்கலாம். இவர்களில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு நபரும் இருந்தார். அவரின் கதையை ஹோலிவூட் "திபெத்தில் எழு வருடங்கள்" என்ற பெயரில் படமாக தயாரித்தது. ஹிட்லரால் அனுப்பப்பட்ட அந்த ஜெர்மன்காரர், நாசிசத்தின் அச்சாணியான நிறவாத சித்தாந்தத்தின் தோற்றுவாய் திபெத் ஆக இருக்கலாம், என்ற கருத்தை கொண்டிருந்தார்.

ஐம்பதுகளில் சீனாவில் ஏற்பட்ட மாவோ தலைமையிலான கம்யூனிச புரட்சி, திபெத்தின் சுதந்திரத்திற்கு, அல்லது நிலப்பிரபுத்துவ சமுதாயத்திற்கு முடிவு கட்டியது. கம்யூனிஸ்டுகள் தமது சித்தாந்தத்தின் படி, நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு அழிக்கப்பட வேண்டும் என நம்பினர். சீன பொதுமக்களோ, மிகவும் பின்தங்கிய காட்டுமிராண்டி கால திபெத்தை நாகரீகப்படுத்தும் பொறுப்பு தமக்குள்ளதாக கருதினர். இதனை பதினெட்டாம் நூற்றாண்டு அமெரிக்க காலனிய வாதிகள், கலிபோர்னியா போன்ற மேற்கு மாநிலங்களின் மீது படையெடுத்த காரணங்களோடு ஒப்பிடலாம். அப்போது மேற்கு அமெரிக்க பகுதிகள், "மேற்கு காடுகள்" என வர்ணிக்கப்பட்டன. அங்கிருந்த செவிந்திய சமூகத்தை காட்டுமிராண்டி கால மனிதர்களாக பார்த்து, அவர்களை நாகரீகப் படுத்தும் பொறுப்பு தமக்குள்ளதாக ஆங்கிலேய காலனியவாதிகள் கருதினர். மேலும் மெக்சிகோவின் பகுதியாக இருந்த, ஸ்பானிய மொழி பேசும் மக்கள் வாழ்ந்த, கலிபோர்னிய மாநிலம், யுத்தம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கே ஆங்கிலம் பேசும் மக்கள் குடியேற்றப்பட்டனர். தற்போது அங்குள்ள ஸ்பானிய மொழி பேசும் மக்கள், கலிபோர்னியாவை சுதந்திர நாடாக்க கோரி, ஆர்ப்பாட்டம் செய்தால், அதற்கு அமெரிக்க அரசு எப்படி பதிலளிக்கும்? பல தசாப்தங்களாக சுதந்திரமடையும் நோக்கோடு போராட்டங்கள் நடத்தும் "புவேர்டோரிகோ" என்ற சிறு தீவை கூட விட்டுக்கொடுக்க மறுக்கும் அமெரிக்க அரசு, கலிபோர்னியவை தனி நாடாக்க முன்வருமா? அப்படி இருக்கையில் சீன-திபெத் பிரச்சினையில் மட்டும், ஏன் எல்லோரும், வேறொரு கருத்தை கொண்டுள்ளனர்?

சீனாவில் பெரும்பான்மையாக உள்ள "ஹான்" என்ற சீன இனத்தவர்கள், சீனா முழுக்க வசிக்கின்றனர். மன்னர் காலத்தில் நடந்த இந்த குடியேற்றங்கள், தற்போதும் தொடர்கின்றது. வியாபாரம் செய்யும் நோக்கோடும், தொழில் தேடியும் ஹான் சீனர்கள் திபெத் வந்து குடியேறுகின்றனர். இது பல திபெத்தியருக்கு எரிச்சலூட்டும் விடயம் தான். உண்மையில் சீன படையெடுப்புக்கு பின்னர் தான், திபெத் பொருளாதார வளர்ச்சி கண்டது. பல நவீன நகரங்கள் உருவாகின. ஒரு காலத்தில், மதகுருக்கள் மட்டுமே எழுத, வாசிக்க கற்றிருந்தனர். தற்போது பொது பாடசாலைகள் கட்டப்பட்டு, அனைத்து திபெத்தியருக்கும் கல்வியூட்டப்படுகின்றது. லாமக்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மக்கள் நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், தற்போது பலர் கல்வியறிவு பெற்றோ, அல்லது வியாபாரம் செய்தோ தமது வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றியுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றிக்கடன் பட்டுள்ள, பெரும்பான்மையான திபெத்தியர்கள், தலாய் லாமாவின் பின்னால் நிற்கவில்லை. உண்மையில் அதிகாரம் இழந்த லாமாக்களும், சில திபெத்திய தேசியவாதிகளும் தான், திபெத் சுதந்திர நாடாக வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களுக்கு அமெரிக்க சி.ஐ.எ. மறைமுக உதவி வழங்கி வருகின்றது. பனிப்போர் காலத்தில் இருந்து இந்த உறவு இருந்து வருவது இரகசியமல்ல. பௌத்த மதகுருக்களும், காவி உடை தரித்த அஹிம்சாவாதிகள் இல்லை. முந்தின எழுச்சியின் போது கூட மடாலயங்களில் ஆயுதங்கள் வைத்திருந்தனர். முன்பு தனி நாடாக இருந்த போது நன்கு பயிற்சி பெற்ற இராணுவ மதகுருக்கள் இருந்தனர். தற்போது இந்தியாவில் இருக்கும் தலாய் லாமா, ஒரு பக்கம் வன்முறையற்ற போராட்டம் பற்றி கதைத்தாலும், மறுபக்கத்தில் வன்முறையில் நம்பிக்கை கொண்ட திபெத்தியரும் உள்ளனர்.

திபெத் சுதந்திரப் போராட்டத்துக்கான சர்வதேச ஆதரவு, ஒரு கட்டத்திற்கு அப்பால் போகாது. ஒரு காலத்தில், சீனா தனது எதிரி நாடு என்ற காரணத்தால், திபெதியர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியா, தற்போது மாறிவரும் உலகில், சீனாவுடனான வர்த்தக உறவுகளுக்காக, திபெத்திய போராட்டத்தை நசுக்கி வருகின்றது. அமெரிக்கா உட்பட, ஐரோப்பிய நாடுகளும் தமது வர்த்தக நலன்கள் பாதிக்கப்படுவதை விரும்பப் போவதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம், மனித உரிமை மீறல்களை பகிரங்கப்படுத்தி, சீனாவின் பெயரை கெடுத்து, மறைமுக அழுத்தங்கள் மூலம் சீனாவை தமது நிபந்தனைகளுக்கு பணிய வைத்து, மேலும் பல வியாபார ரீதியிலான சலுகைகளை பெற்றுக் கொள்வது தான்.
இது தொடர்பான வேறு பதிவுகள் :
தலாய் லாமா! பொய் சொல்ல லாமா?

உலக ( உணவுக் கலவர) வங்கி

"தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்." - என்று பாடினான் பாரதி. "பல கோடி மக்களுக்கு உணவில்லை எனில் தனி மனிதர்களை அழிப்பதில் தவறில்லை." - என்று பொருளாதார பாடம் சொல்லிக் கொடுக்கிறது உலக வங்கி. அந்த வங்கியின் அண்மைய அறிக்கை ஒன்று, எதிர்வரும் காலங்களில் உலகில் முப்பத்திமூன்று நாடுகளில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையேற்றத்தை எதிர்த்து, போது மக்கள் கலவரங்களில் ஈடுபடக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எகிப்து, ஹைத்தி, கமரூன் ஆகிய நாடுகளில் மக்கள் வீதிக்கு வந்து கலவரங்களில் ஈடுபட்டுள்ளனர். கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கலவரத்தை அடக்க பொலிசார் சுட்டதில் ஹைத்தியில் ஐந்து பெரும், கமரூனில் நாற்பது பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியா, பாகிஸ்தான், மொரோக்கோ, செனகல், மொசாம்பிக், மொரிடனியா ஆகிய நாடுகளிலும் உணவுப்பொருள் விலையேற்றத்தை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பிலிப்பைன்சில் அரிசிக்கடைகளுக்கு பலத்த இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யாராவது ஒரு பிடி அரிசி திருடினால், கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக அரிசி, கோதுமை, சோளம் போன்ற தானியங்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதற்கு நான்கு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று: பங்களாதேஷ் போன்ற நாடுகளில் ஏற்பட்ட இயற்கை அழிவுகள். இரண்டு : சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் பெருகிவரும் மத்தியதர வர்க்கத்தினரின் வாங்குதிறன் அதிகரித்து, முன்பை விட அதிகம் இறைச்சி தமது அன்றாட உணவில் சேர்க்கின்றனர். இறைச்சி உண்பவர்கள், அதோடு சேர்த்து பல மடங்கு தானியங்களையும் நுகர்கின்றனர். மூன்று : பணக்கார நாடுகள் தமது எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய, வழக்கமான நிலத்தடி பெற்றோலிய நுகர்வை குறைத்து, சுற்று சூழல் காப்பது என்ற பெயரில், உயிரியல் எரிபொருளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளில், பெருந்தோட்டங்களில் விளைவித்து எரிபொருளாக பணக்கார நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அதே சோளம், அந்நாட்டு மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருள். ஐரோப்பாவும், அமெரிக்காவும் தமது நாட்டின் 20 வீதமான வாகனங்கள் வரும் பத்தாண்டுகளில் உயிரியல் எரிபொருளை பாவிக்க வேண்டும், என்று திட்டம் போட்டு நடைமுறைபடுத்துகின்றன. இதனால் சோளத்தின் விலை உலகசந்தையில் உயர்ந்து, வறிய மக்களால் விலை கொடுத்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நான்கு : பங்குச்சந்தை சூதாடிகள், தானிய வியாபாரத்தில் அதிகளவு லாபம் வரும் என்று நம்பி, தானிய விலையை செயற்கையாக அதிகரிக்க வைக்கின்றனர். காரணம் எதுவாக இருந்தாலும், தானியங்களின் விலை உயர்வு ஏழை மக்களையே அதிகளவு பாதிக்கின்றது.

இந்த பொருளாதார தாக்கம் முரண்நகையாக ஏழை நாடுகளில் தானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளையே பாதிக்கின்றது. உலகமயமாகிய பொருளாதாரம் காரணமாக, ஏழை நாட்டு விவசாயிகள் உற்பத்தி செய்த அரிசியை விட, தாய்லாந்திலும், சீனாவிலும் இருந்து இறக்குமதியாகும் அரிசி மிக மலிவாக உள்ளது. இதனால் உள்ளூர் விவசாயம் நலிவடைந்து, விவசாயிகள் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி தள்ளப்பட்டனர். கிராமங்களில் விவசாயிகளாக இருந்த போது, உணவுக்கு தட்டுப்பாடு இருக்கவில்லை. ஆனால் நகர்புற சேரிகளில், கூலி உழைப்பாளிகளாக வாழும் போது, கிடைக்கும் கூலியில் அரைவாசிக்கு மேல் உணவுத்தேவைக்கு செலவிட வேண்டிய நிலை. ஒரு காலத்தில், மலிவான அரிசி விற்றுக்கொண்டிருந்த தேசங்கடந்த வர்த்தக நிலையங்கள், தற்போது அதே அரிசியின் விலையை இரு மடங்காக அதிகரித்த போது, அதனை விலை கொடுத்து வாங்க சக்தியற்றவர்கள் ஏழை மக்கள் தான். அதனால் தான் ஹைத்தியிலும், எகிப்திலும் அவர்கள் கலவரங்களில் ஈடுபட்டனர்.

உணவுக் கலவரங்கள் பரவவிடாது தடுக்கும் பொருட்டு, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஹைத்தி, எகிப்து ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள், உள்ளூர் தனிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்போவதாக அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பை கேட்டது தான் தாமதம், உலக வங்கி அலறி அடித்துக் கொண்டு; "இது தேசிய பொருளாதாரத்தை பாதிக்கும், அரச வரவுசெலவுத்திட்டத்தில் செலவினத்தை அதிகரிக்கும், இது தற்காலிக தீர்வு மட்டுமே, மானியத்திற்கு பழக்கப்பட்ட மக்கள் பொருளாதார விருத்திக்கு உதவ மாட்டார்கள்..." இவ்வாறு பொருளாதார வல்லுனர்கள், அறிவுரைகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றனர். இதே உலக வங்கி, மக்கள் பட்டினியால் சாவதை பற்றியோ, சாமானியர்களின் செலவினம் அதிகரிப்பது பற்றியோ கவலைப்படவில்லை. உலகவங்கியின் கவலை எல்லாம், உலகம் முழுக்க தானியம் விற்கும் தேசங்கடந்த நிறுவனங்களின் லாபம் குறைந்து விடும் என்பது மட்டுமே.

அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகள் முன்பு வெளிநாடுகளில் இருந்து தானியம் இறக்குமதி செய்வதை தடைசெய்து, தமது விவசாயிகளுக்கு மானியங்கள் கொடுத்து உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தனர். அன்று அப்படி செய்த அதே நாடுகள் தான், இன்று தமது மிதமிஞ்சிய தானியங்களை உலகசந்தையில் விற்கின்றனர். அதனையே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் செய்ய விரும்பினால், உலக வங்கி ஓடி வந்து பொருளாதார வகுப்பு எடுக்கும். மூன்றாம் உலக நாடுகளில், சீனா மட்டுமே பணக்கார நாடுகளுக்கு நிகராக தானிய ஏற்றுமதி செய்கின்றது. அதுவும் முன்பு அங்கு இடம்பெற்ற கம்யூனிச புரட்சியின் பின்னர், எல்லைகளை மூடி, ஏற்றுமதியை தடைசெய்து, உள்ளூர் உற்பத்தியை பெருக்கியதாலே தான் இன்று இந்த நிலை.

உள்நாட்டு உற்பத்தியை கூட்ட, சந்தையை பாதுகாக்க நினைக்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார சீர்திருத்தம், காலம் பிந்தி வந்த மிகச்சிறிய சீர்திருத்தம் என்று அந்நாட்டு மக்கள் குறைப்படுகின்றனர். அதேநேரம் சந்தையை திறந்துவிடு, கட்டுபாடுகள் போடாதே, என்று உலகவங்கி கொடுக்கும் அழுத்தம் காரணமாக அந்த சீர்திருத்தம் கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் தானியங்களின் விலையும் குறையப்போவதில்லை. இதைப்பற்றி பணக்கார நாடுகளில் உயிரியல் எரிபொருள் நிரப்பிய கார் ஓடும் மக்களுக்கு, உலக வங்கியின் பொருளாதார ஆலோசகர்களுக்கு, வறிய நாடுகளில் உள்ள வசதிபடைதோருக்கும் என்ன கவலை? அவர்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் தாராளமாக சந்தையில் கிடைக்கின்றன. அதை வாங்க கூடிய பலமும் இருக்கிறது. அவ்வப்போது உணவுக்கலவரங்கள் வெடிக்கும் போது, ஊடகங்கள் அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் உலகின் மறுகோடியில் இருக்கும் மக்களுக்கு செய்தி போய்ச்சேர்வதில்லை.

7/22/08

வட கொரியாவில் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள்

ஒரு பெரும் நகரத்தையே இரண்டாக பிரித்த பெர்லின் மதில் கட்டப் பட்டுக் கொண்டிருந்த நேரம், கம்யூனிச கிழக்கு பெர்லின் எல்லையில் காவல் கடமையில் இருந்த ஒரு போர் வீரன், தன் துப்பாக்கியை கீழே போட்டு விட்டு, "சுதந்திர" மேற்கு பெர்லின் நோக்கி ஓடும் காட்சியை எடுத்த புகைப்படம் உலகப்புகழ் பெற்றது (அல்லது பெற வைக்கப் பட்டது). அந்தப் படம் தற்போதும், அமெரிக்க, மேற்கு-ஐரோப்பிய நாடுகளின் சரித்திர நூல்களில் பதிப்பிக்கப்பட்டு, "கம்யூனிச சர்வாதிகாரத்தில்" இருந்து "சுதந்திர மேற்கு" நோக்கி இடம்பெயர்ந்த "வீர மக்கள்" பற்றிய கதைகள், பாடசாலை பிள்ளைகளுக்கு போதிக்கப் படுகின்றது. அதேபோல் கம்யூனிச நாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்கள் பற்றி யாருக்கும் தெரியக் கூடாது என்று கவனமாக இருக்கின்றனர். கொரிய போர் முடிந்து, கொரிய மக்கள் ஜனநாயக குடியரசு (வட கொரியா) உருவான போது, லட்சக்கணக்கான கொரியர்கள் ஜப்பானில் இருந்து போய் குடியேறினர். அதே போலே இரண்டு கொரியக்களை பிரிக்கும் எல்லையில் காவல் கடமையில் இருந்த சில அமெரிக்கா இராணுவ வீரர்களும், வட கொரியா நோக்கி ஓடிப்போய், ராஜபோக வாழ்க்கை வாழ்கின்றனர். அப்படி அங்கே குடியேறிய ஒரு முன்னாள் அமெரிக்கா வீரர் பற்றிய விவரண சித்திரம் அண்மையில் நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இவர்களைப் பற்றி அமெரிக்கா அரசாங்கம் இதுவரை இரகசியமாக வைத்திருந்தது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர், ஒரு வயதான அமெரிக்கர், தனது ஜப்பானிய மனைவியுடன் இணையும் நோக்கில் வெளியே வந்து, கைது செய்யப்பட்ட சம்பவம் ஊடகங்களில் சர்வதேச செய்தியாகிய பின்னர் தன் இந்த தகவல்கள் உண்மை என்பது உலகிற்கு தெரிந்தது.

பிரிட்டிஷ் இளைஞர்கள் இருவரால் இந்த விவரணப்படம், crossing the line என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. ட்றேச்நோக் என்ற அமெரிக்க வீரர், தெற்கு-வட கொரியாவை பிரிக்கும் எல்லைக்கோட்டில் கடமையாற்ற பணிக்கப்பட்டவர். தனக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு அஞ்சி, கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட எல்லையை கடந்து, வட கொரிய சென்று தஞ்சம் கோரும் காட்சியுடன் படம் ஆரம்பமாகின்றது. ஆரம்பத்தில் அவர் ஒரு அமெரிக்கன் என்பதால் கொலை செய்ய எண்ணும் வட கொரியர்கள், பின்னர் மனம் மாறி, தலைநகர் பியங்கியங் அனுப்பி வைக்கின்றனர். அங்கே நடந்த விசாரணையில், அவரை சாதாரண போர்வீரராக கண்ட கொரியர்கள், பின்னர் அவரை பிற அமெரிக்க வீரர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க படுகின்றார். இதைபோல நான்கு அமெரிக்கர்கள், வட கொரியாவில் அறிமுகமாகின்றனர். அவர்கள் புதிய நாட்டில், பல கலாச்சார சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். கொரியர்கள் மட்டும் வாழும் அந்த நாட்டில், தாம் அமெரிக்கர்கள் என்பதால் வெறுக்கப்படுவதாக உணர்கின்றனர். அதற்கு முன்னர் நடந்து முடிந்த கொரிய போரில், அமெரிக்கா குண்டு வீசி, பல பொதுமக்களை கொன்றுள்ளதால், அனைத்து கொரியர்களும் தம்மை வெறுப்பதாக கலாச்சார அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். அந்த நாட்டிலிருந்து தப்பி போகும் பொருட்டு, சோவியத் தூதுவராலயத்தில் தஞ்சம் கோருகின்றனர். தாம் ஐரோப்பிய இனத்தவர் என்பதால், ரஷ்யர்கள் தம்மை பாதுகாப்பார்கள் என்ற எண்ணம் வேறு. அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, ரஷ்யர்கள் அவர்களை கொரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர். அகப்பட்ட நான்கு அமெரிக்கர்களும், கொரியர்கள் தம்மை சிறையில் அடைத்து சித்திரவதை செய்யபோவதாக அஞ்சுகின்றனர். அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, கொரியர்கள் அவர்களை அரசியல் பாடசாலைக்கு அனுப்பி, கொரிய சரித்திரம், கலாச்சாரம், சித்தாந்தம் பற்றி போதிக்கின்றனர். அன்றிலிருந்து அந்த நான்கு அமெரிக்கர்களும் வட கொரியாவில் தங்கிவிட தீர்மானிக்கின்றனர்.

தொடர்ந்து கொரியாவில் தமது துணைகளை தேடிக்கொண்டு, அங்கேயே தங்கி விடுகின்றனர். அவர்களுக்கு வீட்டு வசதிகளை செய்து கொடுப்பதுடன், வட கொரிய பிரசைகளாக ஏற்றுக்கொள்ளப் படுகின்றனர். இந்த விவரண சித்திரத்தின் நாயகன் ட்றேஸ்நோக் ஒரு ரோமானிய பெண்ணை மணம் செய்து, இரு ஆண் பிள்ளைகளுடன் அமைதியான குடும்ப வாழ்கை வாழ்கின்றார். அவரது மகன் தன்னை ஒரு கொரியனாக அடையாளப் படுத்துவதுடன், ஒரு இராஜ தந்திரியாக பணி புரிய ஆசைப்படுகின்றார்.

என்னோடுபேசிய ஒரு கொரிய பிரசை, அந்த நாட்டில் உள்ள அடக்குமுறை என்ன என்பதற்கு என்று கூறிய காரணம் பலருக்கு சிரிப்பை வரவழைக்கலாம். கிழமைக்கு நாற்பது மணித்தியாலம் வேலை நேரம் போக, ஒரு நாள் கட்டாயம் அரசியல் வகுப்பில் பங்குபற்ற வேண்டும், என்ற நடைமுறை உள்ளதாக தெரிவித்தார். சாதாரண தொழிலாளிகள் கூட, அரசியல், சமூகவியல், சரித்திரம் கற்பது ஒரு சிலருக்கு "அடக்குமுறை" போல தெரிகின்றது. சர்வதேச நாடுகளினால் திரிக்கப் பட்ட பொய்கள், தற்போது நம்பகத்தன்மையை இழந்து வருகின்றன.
அந்த நால்வரில் ஒரு அமெரிக்கர், கொரியர்களால் கடத்தப்பட்ட ஒரு ஜப்பானிய பெண்மணியை திருமணம் செய்ததால் திருப்புமுனை ஏற்படுகின்றது. கொரியா உளவாளிகளுக்கு ஜப்பானிய மொழி சொல்லிக்கொடுக்க, கடத்தப்பட்ட அந்தப் பெண்மணி, பின்னர் ஜப்பானிய அரசுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி திருப்பி அனுப்பப்படவே, அவரைத்தேடி செல்லும் இந்த அமெரிக்க கணவர், ஜப்பானிய பிரதமரின் வேண்டுகோளையும் மீறி, அமெரிக்காவினால் கைது செய்யப்பட்டார். அது பின்னர் உலக செய்தியானது. கைது செய்யப்பட்டவர், தனது விடுதலை கருதி வட கொரிய அரசாங்கம் பற்றி கூறிய பொய்கள், இந்த விவரண படத்தில் மறுக்கப்படுகின்றன. வட கொரியாவில் சர்வாதிகாரம் நிலவினால், அந்த அமெரிக்கர்கள் சோவியத் தூதுவராலயத்தில் தஞ்சம் கோரியிருக்க முடியாது, அதை விட அவர்களது தப்பி ஓடும் முயற்சிக்காக சிறையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக, அவர்களுக்கு அரசியல் பாடம் கற்பித்தவுடன் நில்லாது, திரைப்பட துறையில் வேலையும் பெற்றுக்கொடுத்தனர். விவரணப் படம் தயாரித்தவர்கள், இவை "பிரச்சாரப் படடங்களா" என்று கேட்டதற்கு, ட்றேஸ்நோக் சரியான பதிலடி கொடுக்கின்றார். கொரியாவில் அமெரிக்கா செய்த கொடூரங்கள், ஏற்கனவே ஆவணப்படுத்தப் பட்டுள்ள நிலையில், அதைப்பற்றி படம் தயாரித்தால், எப்படி அது "பிரச்சாரப் படம்" ஆகும்?அப்படிப் பார்த்தால் தற்போது வரும் ஹோலிவூட் படங்கள் பல, அமெரிக்க அரசின் கொள்கைகளை பிரதிபலிக்கும் பிரச்சார படங்களாக கருத இடமுண்டு.

தலைநகர் பியங்கியாங்கில் கூட தண்ணீர் தட்டுப்பாடு , மின்சார வெட்டு முதலிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் ட்றேஸ்நோக் குடும்பம், இன்று வரை வட கொரியா அரசாங்கத்திற்கு, மறைந்த தலைவர் கிம் உல் சுங்கிற்கு, தனித்துவமான ஜூகே கொள்கைக்கு விசுவாசமாக இருப்பதை காட்டுவதுடன் படம் முடிகின்றது. நாட்டில் நிலவிய கடுமையான பஞ்சத்தால், லட்சக்கணக்கான மக்கள் மடிந்த போதும், தமக்கு உணவு கிடைத்து வந்ததாக இந்த குடும்பத்தினர் நன்றியுடன் கூறுகின்றனர். அந்தப் படத்தில், குறிப்பிடக்கூடிய அம்சம் என்னவெனில், பல வட கொரியர்கள் இன்று ஆங்கில பாடம் கற்பது தான். அதற்கு அவர்கள் கூறும் காரணம், இன்றைய தொழில்நுட்பம் பற்றி கற்பதற்கு ஆங்கிலம் தேவையாகவிருக்கின்றது என்பது தானே தவிர, நம்மவரைப் போல ஆங்கில மோகம் கொண்டதால் அல்ல. கொரிய மக்கள் அமெரிக்காவின் வல்லரசு ஆதிக்கத்தை மட்டுமே வெறுக்கின்றனரே தவிர, அமெரிக்க மக்களையோ, அல்லது ஆங்கில மொழியையோ வெறுக்கவில்லை என்பது படத்தில் அழுத்திக் கூறப்பட்டுள்ளது.

இந்தப்படம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் பரப்பி வரும் பொய்களுக்கு, பலத்த அடி கொடுக்கின்றது. வட கொரியாவில் வாழும் மக்கள், ஒரு திறந்தவெளி சிறைச்சாலையில் வாழ்வதாக கூறி வந்த பொய்களை இந்தப் படம் உடைக்கின்றது. இதைபோலவே சில டச்சு திரைப்பட துறையினர் தயாரித்த, "வட கொரியாவில் ஒரு நாள்" என்ற படமும், வட கொரியர்கள் பிறரைப் போல சாதாரண வாழ்க்கை வாழும் மக்கள் தான் என்று நிரூபித்தது. அது தான் உண்மையும் கூட. வட கொரியர்களும், பிற நாட்டு மக்களைப் போல, தமது வேலை, குடும்பம், வருமானம் என்று வாழ்பவர்கள் தான். பொது மக்கள் தமது அடிப்படை தேவைகளைப் பற்றியே சிந்திக்கின்றனர். தாம் வாழ்வது ஒரு சோஷலிச நாடா? அல்லது முதலாளித்துவ நாடா?ஜனநாயக நாடா? என்று கவலைப் படுவதில்லை. இதையே தென் கொரியா வந்து தஞ்சம் கோரும், வட கொரியர்களும் கூறுகின்றனர். தென் கொரியாவில் நடக்கும் பிரச்சாரம், தமது நாட்டின் உண்மை நிலையை கூறுவதில்லை என்று இவர்கள் குறைப்படுகின்றனர். ஜெர்மனியை பின்பற்றி, கொரியாக்களை இணைக்க, பல முயற்சிகள் நடக்கின்றன. .

மேற்குலக ஊடகங்களின் பிரச்சாரம் முழுக்க, பிற தடைசெய்யப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பற்றியே இருக்கிறது. தமது அரசியல் எதிரிகளை சிறையில் போடும் விடயம், எந்த நாட்டில் இல்லை? அமெரிக்கா தமது அரசியல் எதிரிகளை "குவந்தனமோ" வில் வைத்து சித்திரவதை செய்ததை, மக்கள் அதற்கிடையில் மறந்து விட்டார்களா? வட கொரியாவிலும், அரச எதிரிகள் சிறையில் இருப்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், பெரும்பான்மை மக்கள் அந்த அரசாங்கத்தை ஆதரிப்பதாலேயே, மேற்குலகம் எதிர்பார்க்கும் "புரட்சி" எதுவும் அங்கே நடக்கவில்லை. இந்த விவரணப் படத்தை தயாரித்தவர்கள் கூட, அமெரிக்காவுடன் யுத்தம் வந்தால், வட கொரிய அணு ஆயுதம் பயன் படுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக உலக வல்லரசான அமெரிக்க கூட, வட கொரியா மீது கை வைக்க தயங்குவதற்கு, அணு ஆயுதம் தான் காரணம்.

7/21/08

சைப்பிரசில் ஓர் ஈழம்

ஒரு காலத்தில் இனப்பிரச்சினை முற்றி, ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்த போரின் பின்னர், இரண்டு தேசங்களான சைப்பிரஸ், இன்று மீண்டும் சேரத் துடிக்கின்றது. இரு வேறு மொழிகள்(கிரேக்கம்,துருக்கி), மதங்கள்(கிறிஸ்தவம்,இஸ்லாம்), ஆகியன ஒரு சிறிய தீவின் மக்களை எப்படி பிரித்ததன? தற்போது அவர்களை சேர்க்கும் காரணம் எது?
ஐரோப்பாக் கண்டத்தையும், ஆப்பிரிக்கா கண்டத்தையும் பிரிக்கும் மத்தியதரைகடலில் உள்ள குட்டித்தீவு சைப்பிரஸ். அதன் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக அன்னிய படையெடுப்புகளுக்கு அடிக்கடி ஆளானது. எகிப்து, சிரியா, பெர்சியா ஆகிய பண்டைய சாம்ராஜ்யங்கள் அதற்கு உரிமை கோரியுள்ளன. இருப்பினும் இன்றைய கிரீஸ் மட்டுமல்ல, துருக்கி, சைப்பிரஸ் என்பனவும் ஒரு காலத்தில் கிரேக்க இனங்களால் நிறைந்திருந்தன. மத்திய ஆசியாவில் இருந்து வந்த துருக்கி நாடோடிக் குழுக்களின் படையெடுப்புகள், அந்தப பிரதேச மொழியியல் வரைபடத்தை அடியோடு மாற்றியது. துருக்கிய பிரதேசத்தில் வாழ்ந்த (கிரேக்க) மக்கள் மெல்ல, மெல்ல துருக்கி மொழியை தமது தாய்மொழியாக்கிக் கொண்டனர்.

ஒரு காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகரான பாக்தாத் நகரையே முற்றாக அழித்த துருக்கிய நாடோடிகள், பின்னர் அங்கு வாழ்ந்த மக்களின் உயர்ந்த நாகரீகம் கண்டு வியந்து, தாமும் முஸ்லீம்களாக மாறினர். இதன் பின்னர் தான் துருக்கிய சுல்தான்கள் மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினர். அவ்வாறு சென்றவிடமெல்லாம் வெற்றி கண்ட ஒஸ்மான் அலியின், ஓட்டோமான் அரச பரம்பரையினர், இன்றைய கிரீஸ், சைப்பிரஸ் ஆகிய நாடுகளையும் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். சைப்பிரஸ் துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில்(250 வருடங்கள்) , துருக்கி பெருநிலப்பரப்பில் இருந்து, துருக்கி மொழி பேசும் மக்கள் சென்று குடியேறியதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் கணிசமான கிரேக்க மொழி பேசும் மக்களும், அரசாங்கத்திடம் சலுகைகள் பெறுவதற்காக, அல்லது தமது குடும்ப நலன் கருதி,அரச மதமான இஸ்லாமிற்கு மாறி, அரசகரும மொழியான துருக்கியை தமது தாய் மொழியாக ஏற்றுக்கொண்டு, துருக்கியராகவே மாறியிருக்க வாய்ப்புண்டு. அல்லது துருக்கியராகியிருக்கலாம். இந்த சரித்திர உண்மையை இன்றைய கிரேக்கசைப்பிரஸ் வலதுசாரிகள் நம்ப மறுப்பார்கள். ஆனால் ஒரு சில கல்விமான்கள் சொல்வதைப்போல, மரபணு சோதனை செய்து பார்த்தால், சிப்ரியோட்(சைப்பிரஸ் மக்களை பிரிட்டிஷ் நிர்வாகம் "கிரேக்க சிப்ரியோட்", "துருக்கி சிப்ரியோட்" என பெயரிட்டழைத்தது.) என்று அழைக்கப்படும், கிரேக்கர்களுக்கும், துருக்கியருக்குமிடையில் ஒற்றுமை இருப்பதை நிரூபிக்கலாம். வெறும் மொழி அடிப்படையில் மட்டுமே, சைப்பிரஸ்-துருக்கியர் தம்மை துருக்கி-துருக்கியருடனும், அதே போல சைப்பிரஸ்-கிரேக்கர்கள் தம்மை கிரீஸ்-கிரேக்கர்களுடனும் இனம்காண்கின்றனர். இத்தகைய இனவாத சிந்தனை இன்றுவரை சைப்பிரசை பிரிக்கும் முக்கிய காரணியாகும்.

19 ம் நூற்றாண்டில் உலகிலேயே சிறந்த கடற்படையை வைத்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியம், மத்திய தரைக் கடலிலும் ஆதிக்கம் செலுத்த வந்தது. ஸ்பெயினின் தென் முனையில் உள்ள ஜிப்ரால்டர், இத்தாலிக்கு கீழே உள்ள மால்ட்டா, ஆகியனவற்றை கைப்பற்றி தனது காலனியாக்கியத்துடன் நில்லாது, சைப்பிரசை அபகரிக்கும் நோக்கில் ஓட்டோமான் அரசுடன் பேரம் பேசியது. அந்தக்காலத்தில் நலிவடைந்து "ஐரோப்பாவின் நோயாளி" என்றழைக்கப்பட்ட ஓட்டோமான் சாம்ராஜ்யம், சைப்பிரசை பிரிட்டனுக்கு விற்றுவிட்டது. 1878 ல் நிர்வாக பொறுப்பை மட்டுமே ஏற்பதாக கூறிய பிரித்தானியா, முதலாம் உலகப்போரில் துருக்கி தோல்வி அடைந்த தருணத்தை பயன்படுத்தி, சைப்பிரஸ் தனது காலனி என்று அறிவித்தது. இருந்தாலும் துருக்கியர்களை தனது நண்பர்களாக பார்த்த பிரிட்டன், சைப்பிரசிலும் தனது காலனிய நிர்வாகத்தில் துருக்கி மொழி பேசுவோருக்கு பதவிகளை வழங்கியது. இதனால் அனைத்து கீழ்மட்ட நிர்வாகிகளும், அரச எழுதுவினைஞர்களும், மட்டுமல்ல காவல்துறையை சேர்ந்தோரும் துருக்கியராகவே இருந்தனர். மொத்த சனத்தொகையில் 18 வீதமேயான, துருக்கியருக்கு ஆங்கிலேயர் வழங்கிய சலுகைகள், அதே இனங்களை பிரித்தாளும் சூழ்ச்சி தான்.

நவீன கால வரலாற்றில் கிறிஸ்தவ மதம் அரசியலில் ஈடுபடவில்லை என்று, மேற்கு-ஐரோப்பிய உதாரணத்தை மட்டுமே எல்லோரும் கவனிக்கின்றனர். கிரீசிலும், சைப்பிரசிலும் அரசியலே கிறிஸ்தவ மடாலயங்களில் இருந்து தான் பிறந்தது. தனித்துவமான கிரேக்க கிறிஸ்தவ நிறுவனம், சைப்பிரசிற்கு என சுயாதீனமான தலைமை மதகுருவை கொண்டிருந்தது. அவ்வப்போது நடந்த ஓட்டோமான் அரசுக்கெதிரான, அல்லது இஸ்லாமிய ஆதிக்கத்தை எதிர்க்கும் கிளர்ச்சிகளுக்கு மதகுருக்களே தலைமை தாங்கினர். சைப்பிரஸ் பிரிட்டிஷ் காலனியாகிய போது, கிறிஸ்தவ சபைகள் அதை வரவேற்கவே செய்தன. ஆயினும் கிரீசுடன் ஒரு பகுதியாக இணையும் அபிலாசை, பிரிட்டிஷ் நிர்வாகத்துடன் முரண்பாடுகளை தோற்றுவித்தது. முதலாம் உலகயுத்த முடிவில், துருக்கியிடம் இருந்து கிரீஸ் பரிபூரண சுதந்திரம் பெற்றிருந்தது. பல தீவுகள் புதிய கிரீஸ் தேசிய அரசின் வசமான போது, சைப்பிரசில் உள்ள கிரேக்க மொழி பேசும் மக்கள் கிரீசுடன் இணைய விருப்பம் தெரிவித்ததில் வியப்பில்லை. ஆனால் பிரிட்டன் அந்த விருப்பத்திற்கு தடையாக இருந்தது. இதனால் பிரிட்டிஷாருக்கு எதிரான கலகங்கள் வெடித்த போது, இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது. கிறிஸ்தவ மதகுருக்கள் நாடுகடத்தப்பட்டனர். இருப்பினும் கிரீஸ் தான் தமது தாய் நாடு என்று கருதும் கிரேக்க-சிப்ரியோட்கள் "எநோசிஸ்" என்றழைக்கப்படும் இணைப்பிற்கான கொள்கையை கைவிடவில்லை. "எயோகஸ்"(EOKAS) என்ற கிரேக்க தேசியவாத இயக்கம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டது. சந்தேகத்திற்கிடமில்லாமல் துருக்கி-சிப்ரியோத்கள் கிரீசுடன் இணைவதை எதிர்த்தனர். ஓட்டோமான் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ஒரு காலத்தில் பிரிட்டன் வெளியேறும் பட்சத்தில், சைப்பிரஸ் துருக்கிக்கு திருப்பி வழங்கப்பட வேண்டும் என்று எழுதியிருப்பதாக வாதிட்டனர். சைப்பிரஸ் தனியான சுதந்திர நாடாக வர வேண்டும் என்று எதிர்பார்த்த பிரித்தானியா, துருக்கியர் பக்கம் சாய்ந்தது. எயோகஸ் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கோடு, துருக்கி துணை இராணுவக்குழுவை உருவாக்கியது. ஆரம்பத்தில் எயோகஸ் ஆங்கிலேய அதிகாரிகளையும், கிரேக்க பொலிஸாரையும் குறி வைத்து தாக்கிக் கொண்டிருந்தது. இதனால் கிரேக்கர்கள் அரச தொழில்களை கைவிட்டு ஓட, துருக்கி துணைப்படை தாக்குதல் இலக்கானது. இதனால் ஏற்பட்ட இரு இனங்களுக்கிடையிலான பதற்றம் ஒருபக்கம், கிரேக்க பேரினவாத கனவு மறுப்பக்கம், எல்லாம் சேர்ந்து துருக்கியரை பிரிவினை நோக்கி தள்ளியது. முரண்பாடுகள் கூர்மையடையும் வேளை, மிதவாத கிரேக்கர்கள் 1960 ல் சைப்பிரசை தனியான குடியரசாக்க ஒப்புக்கொண்டனர். மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட கிறிஸ்தவ தலைமை மதகுரு மகாரியோஸ் பிரதமராக வந்தார்.

சுதந்திரம் வழங்கப்பட்ட போதும், பிரிட்டன் தனது இரண்டு படைத்தளங்களை தொடர்ந்து வைத்திருக்க அனுமதி வாங்கியது. இன்றும் கூட பிரிட்டனுக்கு "சொந்தமான" அந்த நிலங்களில், பிரிட்டிஷ் இராணுவம் முகாமிட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பின்னரான சைப்பிரசில் இனப்பிரச்சினை பற்றி கிரேக்க-துருக்கி பிரதிநிதிகளுக்கிடையில் பலதடவைகள் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. தற்போது ஆட்சியதிகாரத்தை தம் கையில் வைத்துக்கொண்ட கிரேக்க சிப்ரியோட்கள், 78 % பெரும்பான்மையை கொண்டிருந்ததால், சிறுபான்மை துருக்கி சிப்ரியோட்கள் வைத்த அதிகாரப்பரவலாக்கல் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தினர். துருக்கியர் தமக்கென தனியான தன்னாட்சிப்பிரதேசத்தை கோரினர். கிரேக்க அரசியல் தலைவர்களோ அதைப்பற்றி நினைத்துப்பார்க்கவும் விரும்பவில்லை. தொடர்ந்து பலவருடங்கள் இப்படியே, பேச்சுவார்த்தைகள், சில அதிகார அலகுகளுக்கான இணக்கப்பாடுகள், நடைமுறைக்கு வராத ஒப்பந்தங்கள், என்று காலம் கழிந்ததே தவிர இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

1974 ல் அதற்கொரு முடிவு வந்தது. கிரேக்க-சிப்ரியோட் இனவாத இராணுவ அதிகாரிகள் திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியதை காரணமாக காட்டி, துருக்கி சைப்ரஸ் மீது படையெடுத்தது. நடந்த போரில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இரண்டு பக்கமும் இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டன. கிரேக்க சிப்ரியோட்கள் வடக்கிலிருந்தும் (துருக்கி பெரும்பான்மை மாகாணங்கள்), துருக்கி சிப்ரியோட்கள் தெற்கிலிருந்தும் (கிரேக்க பெரும்பான்மை மாகாணங்கள்) விரட்டப்பட்டனர். விரைவில் போர்நிறுத்தம் ஏற்பட்டு நாடு இரண்டாகப்பிரிக்கப்பட்டது. ஐ.நா. தலையீட்டால் "பச்சைக்கோடு எல்லை" வகுக்கப்பட்டு, எல்லைகளில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன. தீவின் மத்தியில் அமைந்திருக்கும் தலைநகரம் நிக்கோசியா கூட இரண்டாகப்பிரிக்கப்படது. வடக்கு சைப்பிரஸ் துருக்கியின் இராணுவ மேலாதிக்கத்தின் கீழ் வந்த போதும், இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீடித்தன. சைப்பிரஸ் ஒரு சமஷ்டிகுடியரசு ஆகும் வரை தான் வெளியேறப்போவதில்லை என்று துருக்கி அடம்பிடித்தது. அதேநேரம் துருக்கி நாட்டிலிருந்து இலட்சக்கணக்கான துருக்கி இனத்தவரை வடக்கு சைப்பிரசில் கொண்டு வந்து குடியேற்றப்பட்டனர். இது சைப்பிரசின் சனத்தொகையில், இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கிலேயே நடைபெறுகின்றது என்பதில் சந்தேகமில்லை. தற்போது நடக்கும் பேச்சுவார்த்தைகளில் கூட, பிரச்சினை தீர்ந்தால் குறைந்தது 50000 குடியேறிகளை மட்டுமே ஏற்றுக்கொள்வதாக, கிரேக்க-சிப்ரியோட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1983 ல் ஒருதலைப்பட்சமாக "வடக்கு சைப்பிரஸ் குடியரசு" பிரகடனம் செய்யப்பட்டாலும், அந்த புதிய தேசத்தை துருக்கியை தவிர, உலகில் வேறு எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. ஐரோப்பிய யூனியன் ஒன்றிணைந்த சைப்பிரசை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றது. கிரேக்க-சைப்பிரஸ் பகுதி ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவ நாடாகிய பிறகு, துருக்கி-சைப்பிரஸ் மக்களுக்கு துருக்கிய இராணுவம் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதாரத்தடை அந்தப்பகுதியை வெகுவாகப் பாதித்துள்ளது. இதனால் ஒப்பீட்டளவில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் விரக்தியுற்ற இளம்தலைமுறை, மீண்டும் சைப்பிரஸ் ஒரே நாடாக வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆயினும் இரண்டு பக்கமும் இருந்த வலதுசாரி கடும்போக்காளர்கலால் அண்மைக்காலம் வரை ஒற்றுமைக்கான முயற்சி எதுவும் கைகூடி வரவில்லை. கிரேக்க பகுதியில் கடந்த வருடம் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி ஜனாதிபதி பதவிக்கு வந்த பிறகு தான் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த மே தினத்தன்று, நீண்ட காலத்திற்கு பிறகு, கிரேக்க-துருக்கி தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொண்டாடியுள்ளனர். இன்றைய நிலைமை இது.

துருக்கி-சிப்ரியோட் அரசியல்தலைவர்கள் சுயநிர்ணய உரிமை, அல்லது அதிக அதிகாரம் கூடிய சமஷ்டி ஆட்சிக்கு குறையாத தீர்வை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். துருக்கி அரசாங்கம், வேண்டுமென்றே பொருளாதார தடை போட்டு, தம்மோடு சேர்க்கப் பார்ப்பதாக கிரேக்க-சிப்ரியோட் பக்கம் குற்றம்சாட்டுகின்றது. அதே நேரம் துருக்கி எதிரிநாடாக இருப்பதால் (கிரேக்க)சைப்பிரஸ் சில பொருளாதார( கப்பல்,விமான போக்குவரத்து) பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளது கிரேக்க-சிப்ரியோட் அரசியல்தலைவர்கள் சமஷ்டிக்கு மறுத்து, ஒற்றையாட்சியே நீடிக்க வேண்டும் எனக்கூறுகின்றனர். அதே நேரம் பெருமளவு துருக்கி சிப்ரியோட் மக்கள் பொருளாதார நலன் கருதி இணைப்பிற்கு ஆதரவாகவும், கிரேக்க-சிப்ரியோட் மக்கள் பேரினவாத எண்ணத்தால், சமஷ்டிக்கு எதிராகவும் உள்ளனர். துருக்கி தான் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு சைப்பிரஸ் பிரச்சினையை துருப்பு சீட்டாக பயன்படுத்துகின்றது.

ஐரோப்பிய யூனியனோ, ஐரோப்பா என்ற எதிர்கால ஏகாதிபத்தியக்கனவுகளுடன் இந்தப்பிரச்சினையை பார்க்கின்றது. ஐரோப்பிய யூனியனின் நெருக்குவாரங்களால், சைப்பிரஸ் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரலாம். எதிர்பாராதவிதமாக இயற்கை ஒன்றிணைவுக்கு துணை செய்கின்றது. உல்லாசப்பிரயான, ரியல் எஸ்டேட் தொழிற்துறைகள், அதிக வருமானத்தை ஈட்டித்தரும் அதேநேரம், பாவனையாளர் அதிகரித்து, வரட்சியும் சேர்ந்து கொள்ள, தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் கிரீசில் இருந்து கப்பல்களில் தண்ணீர் இறக்குமதி செய்யவேண்டிய நிலைமை. இதற்கு அதிக செலவாகின்றது. அதேநேரம் 83 கி.மி. தூரத்தில் இருக்கும் துருக்கியில் இருந்து, குழாய் மூலம் தண்ணீர் வாங்குவது செலவு குறைந்த வழி. ஏற்கனவே துருக்கி, குழாய் மூலம் இஸ்ரேலுக்கு தண்ணீர் விற்கும் ஒப்பந்தம் செய்துள்ளது. சைப்பிரஸ் துருக்கியிடம் போக தடுப்பது அரசியல் மட்டும் தான். பொதுநலன் கருதி, பழைய பகையை மறந்து செய்யற்படும் காலம் நெருங்கி வருகின்றது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, அரசியல் அல்லது இன முரண்பாடுகளால், பிரிந்துள்ள இரண்டு சைப்பிரஸ்களும், பொருளாதார காரணங்களால் ஒன்று சேர்கின்றன. ரு காலத்தில், பிரிட்டிஷ் காலனியாதிக்கநிர்வாகம், தனக்கெதிரான விடுதலைபோரட்டத்தை, இனங்களுக்கு இடையேயான போராக மாற்றிவிட்டது. இனவாதிகள் அதனை தமது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தினர். இறுதியில் பொருளாதார நலன்கள் எல்லாவற்றையும் மேவி நிற்பது வெள்ளிடைமலை.

(படம் 2 : நிகோசியா ஐ.நா. எல்லைக்கோடு )

வலி
-------------------------

பிரிவின் வலி
பிரிந்தால்தான் புரியும்
இழப்பின் வலி
இழந்தால்தான் தெரியும்
எங்கள் வலி
அகதியாய் வாழ்ந்தால்
உங்களுக்குப் புரியும்
மு. கோமதி    பாப்பாந்தாங்கள்
அகதி அகதி என்று
அழைக்கும்போது
கூட்டுக்குள் நத்தையாய்
எங்கள் மனம்
குறுகிப் போகிறது
நாங்கள் மனிதர்கள்
உங்களைப்போல்
எங்களுக்கும் வலிக்கும்.

7/20/08

குர்திஸ்தான், துருக்கியின் துயரம்

துருக்கியின் மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த நகரமான இஸ்தான்புல், பொஸ்போருஸ் கடலால் இரண்டாக பிரிக்கப் படுகின்றது. மேற்கு பகுதி, ஐரோப்பிய நிலமாகவும், கிழக்கு பகுதி ஆசிய நிலமாகவும், புவியியல் ரீதியாக அல்ல, அரசியல் ரீதியாக கருதப்படுகின்றது. இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பிரமாண்டமான பாலம், மனிதனால் கட்டப்பட்ட அதிசயங்களில் ஒன்று. இது இன்னொரு பக்கம், துருக்கியின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது எனலாம். மேலைத்தேய கலாச்சாரமும், கிழகத்தய கலாச்சாரமும், லிபரல் சித்தாந்தமும், இஸ்லாமிய மதமும், என்று நாடு முழுக்க இரு வேறு பட்ட உலகங்களை காணலாம். அரசாங்கம் என்னதான் துருக்கியை ஒரே மொழி பேசும், ஓரின மக்கள் வாழும் நாடாக காட்ட விரும்பினாலும், சிறுபான்மை மொழி பேசும் இனங்கள் அடக்கப்பட்ட நீண்ட வரலாறு அதற்குண்டு. அதன் எதிர்வினையாக, இரண்டாவது சிறுபான்மை இனமான குர்து மொழி பேசும் மக்களின் தாயகத்திற்கான ஆயுதப் போராட்டம் இன்று சர்வதேச பிரச்சினையாக மாறி பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அந்த மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்குவதற்காக ஏவி விடப்பட்ட துருக்கி இராணுவம் பல மனித உரிமை மீறல்களை புரிந்து, பலரை காணாமல் போக வைத்து இருந்த காலகட்டத்தில், "காணாமல் போவதகெதிரான சர்வதேச கமிட்டி " என்ற மனித உரிமைகள் நிறுவனம் ஒழுங்கு படுத்திய மகாநாட்டில் கலந்து கொண்ட போது, நான் பார்த்த விடயங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
முதலாம் உலக யுத்தத்தில் தோல்வியை தழுவிய, அன்றைய ஒட்டோமான் சாம்ராஜ்யத்தை ஆண்ட சக்கரவர்த்தி பதவியில் இருந்து நீக்கபட்டு , அரசியல் உள்நோக்கம் கொண்ட கமல் அட்டடுர்க் என்ற இராணுவ அதிகாரி துருக்கியின் ஆட்சியை கைப்பற்றிய பிறகு அது நவீனமடைய தொடங்கியது. மேற்கு ஐரோப்பிய பாணியில் கல்வி, ஒரு கலாச்சார புரட்சியை உருவாக்கியது. பழமைவாதத்தை ஆதரித்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மதச்சார்பற்ற கொள்கை வலியுறுத்தப் பட்டது. இவ்வாறு அட்டடுர்க் அரசாங்கம் ஒருபக்கம் முற்போக்கனதாக இருந்தாலும், மறு பக்கம் பாசிச மயமாகி சிறுபான்மை இனங்களை அடக்கி, துருக்கி மொழி திணிப்பு இடம்பெற்றது. ஆர்மேனிய மொழி பேசும் மக்கள் இந்த பேரினவாதத்திற்கு அதிக விலை கொடுத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள்படுகொலை செய்யப் பட்டு, மிகுதிபேர் தமது குடியுருப்புகளை விட்டு விரட்டப்பட்டனர்.
அந்த இனப்படுகொலைக்கு பிறகு எஞ்சியிருந்தோறும், பிற இனத்தவர்களும், துருக்கி மொழி மட்டுமே பேச வேண்டுமென கட்டாய படுத்தப் பட்டனர். அவ்வாறே தென் கிழக்கு மலைபிரதேசங்களில் வாழும் குர்து மொழி பேசும் மக்களின் இன அடையாளமும் புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் "மலைநாட்டு துருக்கியர்" என்று அழைக்கப்பட்டனர். இஸ்லாம் என்ற மதம் மட்டுமே இவ்விரு இன மக்களுக்கும் பொதுவானது. மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய துருக்கி மொழி பேசுவோரும், இந்தோ-ஈரானிய மொழி பேசும் பூர்வ குடிகளான குர்த்தியரும், கலாச்சார ரீதியாக வேறுபட்டவர்கள். இத்தகைய கலாச்சார பாரம்பரியம் கொண்ட மக்கள், தமக்கென பாடசாலை இன்றி துருக்கி மொழியில் கல்வி கற்க வேண்டிய நிலை. எந்த பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு குர்து மொழிப் பெயர் இட்டால் சிறை செல்ல வேண்டும். குர்து மொழியை வீதியில் பேசுவது கூட தடை செய்ய பட்டது. அந்த இன மக்களுக்கே உரிய "நெவ்ரோஸ்" எனப்படும் புத்தாண்டு கொண்டாடுவது கூட அண்மைக்காலமாக தடை செய்யப் பட்டிருந்தது.
துருக்கி-குர்து கலப்பின பெற்றோருக்கு பிறந்த அப்துல்லா ஒச்சலான், குர்திய தொழிலாளர் கட்சி (pkk) என்ற ஆயுதபோராட்ட வழியில் நம்பிக்கை கொண்ட அமைப்பை நிறுவிய பிறகு, அந்த பிராந்தியத்தில் வன்முறை கலாச்சாரம் பரவியது. துருக்கியின் போலிஸ், இராணுவத்தை குறிவைத்து கெரில்லாக்கள் தக்க தொடங்க, பதிலடியாக இராணுவம் அப்பாவி பொதுமக்களை கொன்று, அவர்களின் குடியிருப்புக்களை அழித்து, பெண்களை பாலியல் துன்புருதலுக்குள்ளாக்கி , சொத்துகளை நாசமாக்கி, அடக்குமுறையை ஏவி விட்டது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராளிகளை மாற, தனது போராட்டம் முன்னேறி, அது ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று ஒச்சலான் கணக்கு போட, தள நிலைமை எதிர்பாராத அளவு மோசமடைந்தது.



துருக்கி இராணுவம் பெருமளவு குர்து மக்களை, அவர்களது கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி, ஆயிரம் மைல்களுக்கு அப்பால், துருக்கியின் மேற்கு பகுதியில் குடி அமர்த்தியது. நேட்டோ அமைப்பில் உறுபினராக இருந்ததால், அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து இராணுவ ஆலோசனைகள், ஆயுத தளபாடங்கள் ஆகியனவற்றை பெற்றுக் கொண்டது. இதனால் பி.கே.கே.யின் தாக்குதிறன் கணிசமாக குறைக்கப்பட்டு, போராளிகள் மலைகளில் மட்டும் முடங்கி கொள்ள நேர்ந்தது. அண்டை நாடான சிரியாவை, பி.கே.கே. நீண்ட காலமாக தனது பின்தளமாக பயன்படுத்தியது. இயக்கத்தின் தலைவர் ஒச்சலான் அங்கே தங்கியிருந்தது மட்டுமல்ல, பல பயிற்சி முகாம்களும் இருந்தன. பின்னர் துருக்கி அரசாங்கம் சிரியா மீதும் படையெடுப்போம் என்று மிரட்டியதால், அங்கிருந்து வெளியேறிய ஒச்சலனை கென்யாவில் வைத்து, துருக்கிய கொமாண்டோக்கள் சிறை பிடித்து கூட்டி வந்தனர். இந்த பின்னடைவு,பி.கே.கே. இயக்கத்தில் பெரும் பதிப்பை உண்டாக்கி, இரண்டாக உடைந்து பலவீனப்பட்டது. தற்போது பி.கே.கே.யின் முக்கிய முகாம்கள் துருக்கி எல்லையோரமாக இருக்கும் ஈராக்கின் மலைப் பகுதிகளில் உள்ளன. துருக்கி இராணுவம் அவ்வப்போது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு ஈராக்கினுள் நுழைந்து திரும்பி வரும். இது தான் இன்றுள்ள நிலைமை.


2006 ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இஸ்தான்புல் நகர மத்தியில் இருந்த "கலதசரை" விளையாட்டு மைதானத்திற்கு அருகில் குழுமிய, காணமல் போன இளைஞர்களின் அன்னையருடன், பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த சர்வதேச பிரதிநிதிகளும் இணைந்து கொண்ட ஊர்வலம், தானுண்டு தன் வீடுண்டு என்று வாழும் நகர மக்களையும் மட்டுமல்ல, பெருமளவு பொலிசரையும் கவர்ந்தது. தொடர்ந்து ஒரு உணவு விடுதியின் மண்டபத்தில் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டிற்கு , அனைத்து பத்திரிகைகளுக்கும் அழைப்பு விடுக்க பட்டிருந்தாலும், வந்ததென்னவோ ஒரு சில இடதுசாரி சார்பு பத்திரிகையாளர்கள் தான். இந்தப் போக்கு பின்னர் குர்திஸ்தான் நகரமான டியார்பகிரில் நடந்த மகாநாட்டிலும் காணப்பட்டது. பாதுகாப்பு படைகளால் பிடித்து செல்லப் பட்டு காணாமல் போனவர்கள், ஒன்றில் சிறுபான்மை குர்த்தியராக இருப்பார்கள், அல்லது இடதுசாரி கட்சி உறுப்பினராக இருப்பார்கள். இந்த காரணத்தால் துருக்கி அரசாங்கத்தை ஆதரிக்கும் பெரும்பான்மை பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர்.

துருக்கியின் தென் கிழக்கு மூலையில் இருக்கும் டியார்பகிர் நகரத்திற்கு சர்வதேச பிரதிநிதிகளுடன் வந்திறங்கிய போது வித்தியாசங்கள் தெரிய ஆரம்பித்தன. குர்திய தேசியவாத கட்சி ஆளும் நகரசபை, மகாநாட்டிற்கு என மண்டபத்தை ஒதுக்கி தந்தது. அயல் கிராமங்களில் இருந்தும் சாதாரண குர்து மக்கள் மகாநாட்டிற்கு கலந்து கொள்ள வந்திருந்தனர். நான்கு நாட்கள் நடந்த மகாநாட்டில் தமது கண்ணீர் கதைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். வீடிற்கு வந்து தமது பிள்ளைகளை கூட்டி சென்ற இராணுவத்தினர், சில நாட்களின் பின்னரும் விடுதலை செயாதலால், தேடிப்போகும் பெற்றோருக்கு தமக்கு தெரியாது என கை விரித்த சம்பவங்கள். அப்படி "காணாமல் போனவர்கள்" சில மாதங்களின் பின்னர் ஆள் அரவமற்ற பகுதிகளிலோ, அல்லது புதை குழிகளிலோ உயிரற்ற சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவங்கள், போன்றவற்றை, மனதை உருக்கும் விதத்தில் கூறிய போது, மகாநாட்டு மண்டபத்தில் பலர் அழுததை காணக்கூடியதகவிருந்தது. காணமல் போனோர் சங்கத்தை உருவாக்கியவர் ஒரு துருக்கி தாய். அவர் பேச எழுந்த போது, பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து விண்ணதிர முழக்கமிட்டனர். இதனை அங்கிருந்த சிவில் உடையில் இருந்த போலிஸ் அதிகாரிகள் எரிச்சலுடன் கவனித்தனர். அந்த பெண்மணியின் மகன் ஹசன் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர். நன்றாக படித்து நல்ல வேலைக்கு போகக்கூடிய மத்திய தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் பட்டம், பதவியை உதறி தள்ளி விட்டு, டியர்பகிர் நகரத்திற்கு வெளியே இருந்த, குர்திய சேரி மக்களுக்கு சேவை செய்து வந்தார். இவ்வாறு அடித்தட்டு மக்கள் மத்தியில் வேலை செய்வது கூட துருக்கி அரசாங்கத்தின் பார்வையில் குற்றமாக தெரிந்தது. திடீரென ஒரு நாள் காணமல் போன அந்த வாலிபனின் உடல் பின்னர் ஒரு மயானத்தில் கண்டெடுக்கப் பட்டது. இந்த சம்பவத்தால் ஹசனின் குடும்பம் துவண்டு விடவில்லை. வயதான தாயும், ஒரேயொரு சகோதரியும் காணாமல் போவதர்க் எதிரான சங்கத்தை ஆரம்பித்து நீதிக்காக போராடுகின்றனர். இன்று அந்த சங்கத்தின் கிளைகள் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளிலும், கொலம்பியா தென் அமெரிக்கா நாடுகளிளுமாக, சர்வதேச நிறுவனமாக மாறியுள்ளது.

மாநாட்டிற்கு வந்திருந்த சிவில் போலிஸ் தலையிட்டு குழப்பிய சம்பவம் ஒன்றும் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஒரு வயதான குர்திய பெண்ணும், ஒரு துருக்கி இளம் பெண்ணும் "வாழ்க குர்திஸ்தான்" என்று கோஷம் எழுப்பிய காரணத்திற்காக, போலிஸ் அலுவலகம் கூட்டிசென்று விசாரிக்கப் பட்டனர். துருக்கியில் இப்போதும் குர்து மக்களின் தாயகத்தை குறிக்கும் "குர்திஸ்தான்" என்ற சொல்லை பயன்படுத்த தடை உள்ளது. மேலும் போலிஸ் உளவாளி ஒருவர் மண்டபத்தின் பின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, மகாநாட்டில் நடப்பனவற்றை வீடியோ வில் பதிவு செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாநாடு கூட்டங்கள் ஓய்ந்த நேரம், இருபது வயதே மதிக்கத்தக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, புரட்சி பாடல்களை பாடி ஆடினர். இறுதி நாளன்று பலஸ்தீன இசைக் குழுவொன்றின் இன்னிசைகச்சேரி களை கட்டியது . தொடர்ந்து கலந்து கொண்ட சர்வதேச பிரதிநிதிகளுக்கு குர்திய சால்வை வழங்கி கௌரவித்து, "சர்வதேச கீதம்" பாடி மாநாடு இனிதே முடிந்தது. அடுத்த நாள் டியர்பகிர் நகரில் இருந்து சில நூறு கி.மி. தூரத்தில் இருக்கும் "ஹஸந்ஹெய்ப்" என்ற பண்டைய நாகரீகத்தின் சிதிலங்களை பார்வையிட சென்றோம். வழி நெடுக பச்சை புல்வெளிகள், மலைகள், பள்ளத்தாக்குகள் என்று அழகிய இயற்கை காட்சி. இடையிடையே இது ஒரு யுத்த பூமி என்பதை நினைப்பூட்டும் துருக்கி இராணுவ வாகன தொடரணிகள். குர்து மக்களின் கலாச்சார சொத்து என வர்ணிக்கப்படும் பண்டைய நாகரீகம், மலையுச்சியில் சிறு சிறு குகைகள் போன்று தோற்றம் தரும், இடிந்த வீடுகளை கொண்டுள்ளது. சிறுவர்களின் கற்பனை கதைகளில் வாசித்ததை நேரே பார்ப்பது போலிருந்தது. ஆயிரம் வருடங்களை கடந்தும் அழியாது நிலத்து நிற்கும் அந்த பண்டைய நாகரீக சின்னங்களை இனிமேல் பார்க்க முடியுமா என்பது கேள்விகுறி. ஏனெனில் அந்த இடத்தில் ஒரு பிரமாண்டமான அணைக்கட்டை கட்டி, அனைத்தையும் தண்ணீருக்குள் மூழ்கடிக்க துருக்கி அரசு திட்டம் போட்டுள்ளது.

குர்திய மக்களுக்கு மலைகள் மட்டுமே சொந்தம் என்று ஒரு மேலைத்தேச எழுத்தாளர் நூல் வெளியிட்டார். அவர்களில் பெரும்பான்மையானோர் ஏதுமற்ற ஏழைகள். அதனாலேயே போரினால் இரட்டிப்பு பாதிப்புக்குள்ளாகும் போது, ஆயுதமேந்தும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். பி.கே.கே. கொண்டு வந்த குர்து தேசியவாதம், பல பிரதேச வேறுபாடுகளை கொண்ட குர்து மக்களை ஓரணியில் சேர்த்து. ஐரோப்பிய நகரங்களில் பெற்றோருடன் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த சில வாலிபர்கள், இளம் பெண்கள் கூட, தமது சொகுசான வாழ்க்கையை உதறித்தள்ளி விட்டு, விடுதலை வேட்கையுடன் ஆயுதம் தரித்த போராளிகளாக, பனி படர்ந்த மலைகளில் துருக்கி இராணுவத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அழிவுகள், துயரங்கள், எல்லாமே இப்போதும் தொடர்கதையாக இருப்பினும் யுத்தம் ஒரு இனத்தின் இருப்பை நிச்சயப் படுத்தியிருக்கிறது.