11/28/09

புதுக்குடியிருப்பு - இதுவரை வெளிவராத போர்க்களக் காட்சிகள்


புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளுடன் இறுதி யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்திற்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்ட ஆயுதங்களை புலிகள் வைத்திருந்ததனர். இலங்கை அரசு, அதுவரை கற்பனை செய்து பார்த்திராத ஆயுத தளபாடங்களை கண்டு அதிர்ச்சியுற்றது. புலிகளின் சொந்த தயாரிப்பான 120 மில்லிமீட்டர் "பசிலான்" ஆர்ட்டிலெறி, சீன தயாரிப்பான விமான எதிர்ப்பு பீரங்கி,அதிக சேதம் விளைவிக்க கூடிய தெர்மொபரிக் ஆயுதங்கள், என்பன கண்டெடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க ஆயுதங்கள். இவற்றுடன் மோர்ட்டார்கள், ஷெல்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், நீர்மூழ்கிக் கப்பல் என்பனவும் இலங்கை இராணுவத்தை வியப்பில் ஆழ்த்தின. "சுனாமி மீள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தொண்டு நிறுவனங்கள், மேற்படி நவீன ஆயுதங்களை கடத்தி வந்து உதவியிருக்கலாம்." இவ்வாறு கூறுகின்றது இலங்கை அரசு. எது எப்படியிருப்பினும், இறுதிப்போரில் புலிகள் அந்த ஆயுதங்களைப் பாவிக்காததேன்? என்ற கேள்விக்கு விடை தெரிந்தவர் யாரும் இல்லை. மே மாதம் போர் ஓய்ந்த பின்னர், அனுமதிக்கப்பட்ட"News X" என்ற இந்திய ஊடக நிறுவனம் இந்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. News X தொலைக்காட்சி கமெரா, இலங்கை அரச படைகளின் அகோரமான ஷெல் வீச்சுக்கு இலக்காகி சேதமுற்ற புதுக்குடியிருப்பு அரச மருத்துவமனையையும் பதிவு செய்ய தவறவில்லை.


Part 1


Part 2


Part 3

11/8/09

தென்னிலங்கையின் பாதாள உலகப் போர்


கொழும்பு நகர சாலை அன்றும் வழக்கம் போல வாகன நெரிசல்களுக்குள் சிக்கித் திணறிக் கொண்டிருந்தது. சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்த வாகனங்களுக்கு முன்னால் ஒரு வெள்ளை நிற 'வான்' பாதையை மறித்த படி நிற்கின்றது. வானில் இருந்து முகமூடியணிந்த நபர்கள் துப்பாக்கிகளுடன் குதிக்கின்றனர். பின்னால் நிற்கும் கார் சாரதியை பலவந்தமாக பிடித்திழுத்து வானுக்குள் திணிக்கின்றனர். "நீங்கெல்லாம் போங்க..." பிற வாகன ஓட்டுனர்களுக்கு உத்தரவிடுகின்றனர். கடத்தப்பட்ட நபருடன் வெள்ளை வான் அங்கிருந்து ஓடி மறைகின்றது. இவையெல்லாம் கண்ணிமைக்கும் பொழுதில் நடந்து முடிந்து விட்ட சம்பவங்கள். கடத்தப்பட்டவர் ஒரு பொலிஸ் அதிகாரியின் உறவினர் என்பதால், அந்த நபரின் அடையாளம் பின்னர் தெரிய வந்தது. வெள்ளை வானில் வந்தவர்கள் யார்?

வன்னியில் போர் ஓய்ந்து மாதக் கணக்கு கூட ஆகியிருக்கவில்லை. தென்னிலங்கையில் வேறொரு போர் ஆரம்பமாகியிருந்தது. "பாதாள உலகத்திற்கு" எதிரான போர் என்று ஊடகங்கள் பெயரிட்டிருந்தன. ஜூலை மாதம் மட்டும் கொழும்பு நகரின் பல பகுதிகளில் ஐந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. கொல்லப்பட்டவர்கள் யாரும் சாதாரணர்கள் அல்ல. எந்த சக்தியாலும் நெருங்க முடியாது எனக் கருதப்பட்ட கிரிமினல் பாதாள உலக குழுக்களின் தலைவர்கள். சட்டவிரோத சாராய விற்பனை, போதைவஸ்து கடத்தல், விபச்சார விடுதிகள் போன்ற சமூகவிரோத செயல்களால் செல்வம் சேர்த்துக் கொண்டிருந்த மாபியாக்களை நீண்ட காலமாக யாராலும் அசைக்க முடியவில்லை. சாதாரண மக்கள் நிலம் வாங்குவதற்கு கூட அந்த ஏரியா தாதாவுக்கு கப்பம் கட்ட வேண்டியிருந்தது. அவர்களை எதிர்க்க முடியாது. "கேட்பதைக் கொடுத்து விட்டு போங்கள்" என்ற அறிவுரை காவல்துறை தரப்பில் இருந்தும் வழங்கப்பட்டது.

"குடு லால்" என்ற பெயர் தசாப்தகாலமாக தென்னிலங்கையில் பிரபல்யம். சிங்கள மொழியில் குடு என்றால் போதைவஸ்து என்று அர்த்தம். போதைவஸ்து கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த குடுலாலுக்கு அரசியல் செல்வாக்கும் இருந்தது. இதனால் "வியாபாரம்" எந்தத் தடையுமின்றி கொடிகட்டிப் பறந்தது. கொழும்பு வாழ் மக்களுக்கு பரிச்சயமான வேறு பல தாதாக்களும் இருந்தனர். நிறுவனமயப்பட்ட கிரிமினல் குழுக்கள் "பாதாள உலக கோஷ்டி" என்று அழைக்கப்பட்டது. இத்தாலி மாபியாக்களைப் பற்றிய தகவல்கள் இலங்கையை வந்தடையாத காலம் அது. அதனால் ஊடகங்களும் அப்படியே அழைக்கவாரம்பித்தன.

எழுபதுகளின் இறுதியில் ஆட்சிக்கு வந்த யு.என்.பி. கட்சி தாராள பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இந்த நவ-லிபரலிச கொள்கையானது ஒரு புறம் சட்டபூர்வமாக கொள்ளையடிக்கும் பெரு முதலாளிகளுக்கும், மறுபுறம் சட்டவிரோதமாக கொள்ளையடிக்க மாபியாக் குழுக்களுக்கும் வழி திறந்து விட்டது. அன்றைய மேற்குலக சார்பு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, இலங்கை சந்தையை சர்வதேச முதலீட்டாளருக்கு திறந்து விடுவதையே குறிக்கோளாக கொண்டவர். பொருளாதார சீர்திருத்தத்தின் பக்கவிளைவான பாதாள உலகங்களின் வளர்ச்சி குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், பாதாள உலக கோஷ்டிகளின் உதவி யு.என்.பி. அரசுக்கு இன்றியமையாததாக இருந்தது. எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்களை மிரட்டுவது, பணியமறுத்தால் கொலை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களுக்கு பாதாள உலகக் கோஷ்டி தேவைப்பட்டது.

சைக்கிள் செயின்கள் சகிதம் ஏரியாக்களை கட்டுப்படுத்திய தாதாக்களுக்கு அஞ்சிய மக்கள் வாய் திறப்பதில்லை. ஒரு தடவை, கண்டி நகர் மத்தியில், பட்டப்பகலில் இனந்தெரியாத நபர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டது. அந்த சம்பவத்தை நேரே பார்த்த மக்கள் யாரும் சாட்சி சொல்ல முன்வரவில்லை. ஏனெனில் "இது பாதாள உலக கோஷ்டி விவகாரம்" என்று மக்கள் ஒதுங்கிக் கொண்டனர். பாதாள உலக கோஷ்டிகளுக்கு அரச மட்டத்தில் செல்வாக்கு இருந்ததால் யாரும் எதுவும் செய்ய முடியாத நிலை. இலங்கையில் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கும் இரு பெரும் கட்சிகளுக்கும் பாதாள உலக தொடர்புண்டு. பாதாள உலக கோஷ்டிகளோடு தொடர்பு வைத்திருந்த அரசியல் பிரமுகர்கள் சிலர் அரச உயர்பதவிகளை வகித்துள்ளனர். காலஞ்சென்ற ஜனாதிபதி பிரேமதாச, இன்றைய ராஜபக்ஷ அரசில் அமைச்சராக இருந்த மேர்வின் சில்வா வரை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இவர்களுக்கும், பாதாள உலகத்திற்கும் இடையிலான தொடர்பு ஊரறிந்த இரகசியம்.

இலங்கையின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றிய ஜே.ஆர். ஜெயவர்த்தன, தனது கட்சியில் தனக்குப் பின்னான வாரிசை அறிவிக்க சிரமப்பட்டார். மேலை நாட்டு கல்வி கற்ற மூத்த அரசியல்வாதிகளான காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி ஆகியோரால், பிரேமதாசாவுடன் வாரிசு உரிமைக்காக போட்டியிட்டனர். இரண்டாந்தரப் பாடசாலைக் கல்வியைக் கூட பூர்த்தி செய்யாத பிரேமதாசா, கட்சிக்குள் முதலாவது இடத்திற்கு வருவதற்கு பாதாள உலக தொடர்பு காரணம் என்றால் அது மிகையாகாது. பாதாள உலக அடியாட்படை வைத்துக்கொண்டு அரசியல் நடத்திய ஜே.ஆருக்கும் பிரேமதாச இன்றியமையாத சிஷ்யனாக தோன்றினார். பிரேமதாசா ஆட்சிக்கு வந்த பின்னர், லலித் அத்துலத்முதலி மர்மான முறையில் சுடப்பட்டு இறந்தார். அந்த அரசியல் படுகொலைக்கு பிரேமதாசாவே காரணம் என்று மக்கள் பேசிக் கொண்டனர். சில வருடங்களுக்கு பின்னர் மற்றொரு போட்டியாளரான காமினி திசாநாயக்க ஒரு தற்கொலைக் குண்டுதாரியினால் கொல்லப்பட்டார்.

பாதாள உலக கோஷ்டிகளை, அரசு எந்த அளவு திறனோடு கையாளலாம் என்பதை, பிரேமதாசா ஆட்சிக்காலம் நிரூபித்தது. அதுவரை ஒரு சில தென்னமெரிக்க நாடுகளில் மட்டுமே காணப்பட்ட, அரச அங்கீகாரம் பெற்ற கொலைப்படைகள் அமைக்கப்பட்டன. காவல்துறையை சேர்ந்த கொலைக்கு அஞ்சாத சிலரும், பாதாள உலக கிரிமினல்களையும் சேர்த்து துணைப்படை ஒன்று அமைக்கப்பட்டது. அதற்கு "பச்சைப் புலிகள்" என்று நாமம் சூட்டப்பட்டது. யு.என்.பி. கட்சியின் வர்ணம் பச்சை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய பச்சைப்புலிகளின் தலையாய கடமை, அரசின் எதிரிகளை தேடி அழிப்பது. அன்று ஜே.வி.பி. தலைமறைவு இயக்கமாக இயங்கிக் கொண்டிருந்தது. அரசுக்கெதிரான ஆயுதமேந்திய கிளர்ச்சியை நடத்திக் கொண்டிருந்தது. அரசாங்க அதிகாரிகள், ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்கள் பலருக்கு ஜே.வி.பி. "புரட்சியின் பெயரால்" மரண தண்டனை நிறைவேற்றிக் கொண்டிருந்த காலம் அது.

ஜே.வி.பி.யின் தாக்குதல்களால் அரச இயந்திரம் நிலைகுலைந்தது. கொலைப்பயமுறுத்தல் காரணமாக ஆளும்கட்சியில் இருந்து பலர் பதவியை இராஜினாமா செய்து கொண்டிருந்தனர். பல அரசியல் கொலைகளுக்கு ஜே.வி.பி. நேரடியாக உரிமை கோரவில்லை. "தேசபக்தர்கள்" என்ற பெயரில் உரிமை கோரும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. "பயங்கரவாதத்தை பயங்கரவாதத்தால் அழிப்பது" என்று கொள்கை வகுத்துக் கொண்ட பிரேமதாச அரசு, பச்சைப் புலிகள் என்ற இரகசிய கூலிப்படையை ஏவி விட்டது. ஜே.வி.பி. உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் எல்லோரும் பச்சைப் புலிகளின் கொலைவெறியாட்டத்திற்கு தப்பவில்லை. தலைமறைவு ஜே.வி.பி. உறுப்பினரான நண்பரோடு வீதியில் பேசிக் கொண்டிருந்த அப்பாவிகளும் கொலை செய்யப்பட்டனர். வீதிகளில் உரிமை கோரப்படாத சடலங்கள் டயர் போட்டு எரிக்கப்பட்டன. ஒரு சில அரசியல் கொலைகளுக்கு, ஜே.வி.பி. பாணியில் பச்சைப் புலிகளும் உரிமை கோரும் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர்.

மனித உரிமை நிறுவனங்களின் செயற்பாடுகள் அதிகம் அறியப்படாத காலம் அது. பச்சைப் புலிகளின் கொலைவெறிக்கு இலக்கான ரிச்சார்ட் டி சொயிசாவின் மரணத்துடன் அந்த நிலைமை மாறியது. ஜே.வி.பி. ஆதரவாளரான ரிச்சார்ட் டி சொய்சா மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த வழக்கறிஞர். சமூகத்தில் மேல் மட்டத்தில் இருந்ததால், ரிச்சார்ட்டின் தாயாருக்கு மனித உரிமை ஸ்தாபனங்களின் உதவியைப் பெற முடிந்தது. வெளிநாட்டு தலையீட்டால் நடத்தப்பட்ட விசாரணையில், அரசு, பச்சைப் புலிகள், பாதாள உலகம் இந்த மூன்றிற்கும் இடையிலான முக்கோண கூட்டு பற்றிய தகவல்கள் வெளியாகின. இருப்பினும் என்ன? ஆயிரக்கணக்கான மக்களின் கொலைகளுக்கு காரணமான யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. ஜே.வி.பி. கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின்னர், பாதாள உலக கோஷ்டிகள் “வழக்கமான தொழிலுக்கு" திரும்பி விட்டன.

அடுத்து வந்த ஈழப்போர் காலத்தில் அரசின் கவனம் முழுவதும் வட-கிழக்கு போர்க்களத்தில் குவிந்திருந்தது. பொதுத் தேர்தலில் யு.என்.பி.தோற்கடிக்கப்பட்டு சந்திரிகா தலைமையில் சுதந்திரக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. மேற்கத்திய நாடுகளுக்கு வளைந்து கொடுத்துக் கொண்டிருந்த சந்திரிகா ஜனாதிபதியாக வீற்றிருந்த காலத்திலும், தாராள பொருளாதார கொள்கை தொடர்ந்தது. அதனால் மாபியா கோஷ்டிகளினால் கட்டுப்படுத்தப்பட்ட பாதாள உலக பொருளாதாரமும் தொடர்ந்தது. வட-கிழக்கு மக்கள் அரச படைகளின் மூர்க்கத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்த நேரம், தென்னிலங்கை மக்கள் பாதாள உலக கோஷ்டிகளால் பந்தாடப்பட்டுக் கொண்டிருந்தனர். அரசைப் பொறுத்த வரை, மக்களின் மற்றெல்லாப் பிரச்சினைகளையும் விட தேசப் பாதுகாப்பு மேலானதாகப் பட்டது. இதனால் பாதாள உலகக் காட்டில் மழை பெய்து கொண்டிருந்தது.

மே மாதம் ஈழப்போருக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக அறிவித்த இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது, "தற்போது பாதாள உலகக் கோஷ்டியினருக்கு எதிராக போர்" நடப்பதாக தெரிவித்தார். தென்னிலங்கையில் நான்கு கொலைகள் நடந்ததாகவும். கொலைசெய்யப்பட்டவர்கள் பாதாள உலகக் கோஷ்டியை சேர்ந்தவர்கள் என்ற தகவலை மட்டும் தெரிவித்தார். இருப்பினும் அந்தக் கொலைகளை செய்தவர்கள் காவல்துறையை சேர்ந்த சிறப்புப் படையணி என்பதையும், ஜனாதிபதி அலுவலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதையும் குறிப்பிடாமல் மறைத்தார். சுருக்கமாக சொன்னால், யாரோ "இனந்தெரியாதவர்கள்" செய்த கொலைகளை ஜனாதிபதி வரவேற்கிறார். ஆனால் தனக்கு அந்தக் கொலைகளுடன் சம்பந்தம் இல்லையென்கிறார்.

தென்னிலங்கையில் பாதாள உலகக் கோஷ்டிகளுக்கு எதிரான போர் நடப்பது உண்மை தான். கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருந்த விசேட அதிரடிப்படையை சேர்ந்த பிரிவொன்று இதற்கென கொழும்பு வந்துள்ளது. இவர்களுடன் காவல்துறையின் பிரிவொன்றும் சேர்ந்து கொண்டு பாதாள உலகக் கோஷ்டியினரை குறி வைக்கின்றது. கிரிமினல் கோஷ்டித் தலைவர்களை கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளுகின்றனர். வெள்ளை வானில் வரும் இந்த விசேஷ படையணி, பாதாள உலகத்துடன் சம்பந்தமானவர்களை கடத்திச் செல்கின்றது. அத்தகைய சம்பவம் ஒன்றைத் தான், இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

ராஜபக்ச அரசு ஈழப்போர் முடிந்த கையோடு, பாதாள உலக கோஷ்டிகள் மீது போர் தொடங்கியத்திற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தலைநகரத்தில் புலிகளின் ஊடுருவல். யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் கொழும்பு நகரினுள் ஆயுதங்களை கடத்தி வந்து பதுக்கி வைக்கவும், தற்கொலைக் குண்டுதாரிகளை மறைத்து வைப்பதற்கும் பாதாள உலக கோஷ்டியினரின் உதவி நாடப்பட்டிருக்கலாம் என்பது அரச புலனாய்வுத்துறையின் குற்றச்சாட்டு. இதற்கென கோடிக்கணக்கான பணம் பாதாள உலகக் கோஷ்டியினர் ஊடாக கைமாறப்பட்டதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன. மேற்படி குற்றச்சாட்டின் கீழ் சில இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் கூட கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் புலிகளின் ஊடுருவலுக்கு வழிவகுத்த அரச மட்ட ஊழலின் பரம்பல் இன்னும் அதிகமாகமாக இருக்கலாம். தென்னிலங்கையில் அரசால் "தேசத் துரோகிகள்" என்று அழைக்கப்படும் சிங்கள நபர்கள் பலர் தினசரி கைது செய்யப்பட்டு வருகின்றனர். இத்தகைய செய்திகள் பல ஊடகங்களில் வருவதில்லை.

கிரிமினல்கள் சட்டத்திற்கு புறம்பான வகையில் சுட்டுக் கொல்லப்படுவதில், சாதாரண பொதுமக்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவில் நடக்கும் பொலிசின் "என்கவுண்டர் கொலைகளைப்" போல தோன்றினாலும், அந்தக் கொலைகளுக்கு பதில் கூற பொலிஸ் நிர்வாகம் கடமைப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் நிலைமை வேறு. வெள்ளை நிற வண்டியில் சிவில் உடையில் வரும், "இனந்தெரியாதவர்கள்" செய்யும் கொலைகளுக்கு யாரும் பொறுப்பு எடுப்பதில்லை. கொல்லப்படுபவர்கள் பாதாள உலகை சேர்ந்த கிரிமினல்கள் என்பதால், மக்களும், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் கவலைப்படுவதில்லை. எதிர்க்கட்சி பிரமுகர் மங்கள சமரவீரவை தவிர வேறெந்த அரசியல்வாதியும் "சட்டத்திற்கு புறம்பான கொலைகளை" கண்டிக்கவில்லை. தேசியவாத “ஐலன்ட்” பத்திரிகை கொலைகளை ஆதரித்தும், மேற்குலக சார்பு “சண்டே டைம்ஸ்” பத்திரிகை கண்டித்தும் எழுதி வருகின்றன.

பொதுவாக கிரிமினல்களுக்கு இன, மத அடையாளங்கள் தேவையாக இருப்பதில்லை. அரசின் சிறப்புப் படையணியால் சுட்டுக் கொல்லப்பட்டும் பாதாள உலக கோஷ்டிகளில் பெரும்பான்மை சிங்கள இனத்தை சேர்ந்தவர்களும், கணிசமான அளவு முஸ்லிம்களும் அங்கம் வகிக்கின்றனர். வியாபாரப் போட்டியின் நிமித்தம் அடிக்கடி கோஷ்டி மோதல்கள் இடம்பெற்றாலும், எந்தக் கோஷ்டியும் இன/மத அடிப்படையில் பிரிந்திருக்கவில்லை. அது போல இவர்களின் அரசியல் விசுவாசமும் நிரந்தரமானதல்ல. இருப்பினும் ராஜபக்ச அரசு, யு.என்.பி. சார்பான பாதாள உலக கிரிமினல்களையே வேட்டையாடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதனால் ஆளும் சுதந்திரக்கட்சிக்கு விசுவாசமான கோஷ்டிகள் தப்பிப்பிழைக்க வாய்ப்புண்டு. இதே நேரம் சட்டத்திற்கு புறம்பான கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் மனித உரிமை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆகஸ்ட் மாதம் கொழும்பு நகரில் இருந்து தெற்கே சில மைல் தூரத்தில், Angulana என்னுமிடத்தில், பொலிசுக்கு எதிரான மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் ஒன்று நடந்தது. மக்களின் கொந்தளிப்புக்கு காரணம் இரண்டு வாலிபர்களின் படுகொலை. காவல்துறையினரால் பிடித்துச் செல்லப்பட்ட இருவரும், பின்னர் உயிர் பிரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். பொலிசின் அட்டூழியத்தால் ஆத்திரமுற்ற அந்த ஊர் மக்கள், பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு அடித்துடைத்தனர். பிரதான ரயில்பாதையில் படுத்திருந்து மறியல் செய்தனர். காவல்துறையினால் கொலைகளை நியாயப்படுத்த முடியவில்லை. மக்கள் போராட்டத்திற்கு விட்டுக் கொடுத்த அரசு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கியது. "பொலிஸ் பிடித்துச் சென்று மரணமுற்ற அவ்விரண்டு இளைஞர்களும் பாதாள உலகை சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டோம், ஆனால் அவர்கள் அப்பாவிகள். நாங்கள் ஏழைகள் என்பதால் பொலிஸ் எங்களை கிரிமினல்களுடன் சம்பந்தப்படுத்தி துன்புறுத்துகிறது. நடந்த கொலைகள் பொலிஸ் அராஜகத்தின் உச்சம்." என ஊர் மக்கள் தொலைக்காட்சிக்கு முன்னால் தெரிவித்தனர். மேற்படி சம்பவத்தால் விழித்துக் கொண்ட ஊடகங்கள் பின்வரும் கேள்வியை எழுப்பின. காவல்துறையில் இருக்கும் கிரிமினல்களை யார் தண்டிப்பது? அரச ஸ்தாபனம் ஏகபோக பாதாள உலக உரிமை எடுப்பதை தடுப்பது யார்?



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
- "உன்னதம்" அக்டோபர் இதழில் பிரசுரமாகியது.

தனி இதழ் ரூ. 20 ஆண்டுச் சந்தா ரூ. 200உன்னதம் ஆலத்தூர் அஞ்சல் கவுந்தப்பாடி-638 455 ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு, இந்தியா
தொலைபேசி : 04256 - 243244 அலைபேசி : 9940786278 unnatham@gmail.com

8/23/09

ஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியா

இருபதாயிரம் மக்களுக்கும் மேற்பட்டோரைத் துடிதுடிக்கக் கொன்றொழித்து, ஈழப்போரை துயரமான முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது, சிங்கள இனவெறி அரசு. இந்த இன அழிப்புப் போரின் பங்குதாரர்களாக இலங்கை அரசுடன் இந்தியாவும் சீனாவும் கைகோர்த்திருந்தன. புவியியல் ரீதியாக இராணுவ, பொருளாதார முக்கியத்துவமுடையதாக இலங்கை இருப்பதால் அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதற்குப் போட்டியாக உருவெடுத்து வரும் சீனாவும் அங்கு தமது மேலாதிக்கத்தை நிறுவும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இந்திய அரசும் தன் பங்கிற்கு போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழப்பிரதேசத்தில் தன் மேலாதிக்கத்தைத் தக்க வைக்கும் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. போரின் பிடியில் சிக்கியிருந்த வடக்கு பகுதிகளின் மறுகட்டமைப்புக்கு ’வடக்கின் வசந்தம்’ எனக் கவர்ச்சியான பெயரைச் சூட்டி இருக்கும் இலங்கை இனவாத அரசு, தனக்கு உதவிகள் சீனாவிலிருந்து வந்தாலும் இந்தியாவிலிருந்து வந்தாலும் ஏற்றுக்கொண்டு அந்நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படும் நிலையில் உள்ளது.
விவசாய நிபுணரும், ‘பசுமைப் புரட்சி’ மூலம் இந்திய விவசாயிகளை ஓட்டாண்டி ஆக்கியவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் ஈழத்தமிழர் சிந்திய ரத்தம் உலரும் முன்னரே இலங்கைக்குப் பறந்து சென்று வன்னி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் பகுதிகளின் விவசாய மறுசீரமைப்புக்கான திட்டத்தை முன்மொழிந்து வந்திருக்கிறார்.
அரசு நிறுவியுள்ள அகதிகள் முகாம்களில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அடைபட்டுள்ளனர். இவர்களில் இளைஞர்களைத் தனியே பிரித்து வதைமுகாம்களுக்கு அனுப்பிவிட்டு, எஞ்சி இருக்கும் பெண்கள் அனைவருக்கும் பயிற்சி அளித்து வன்னி, மன்னார், முல்லைத்தீவு பகுதிகளில் இருக்கும் 3 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களை இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் தேவையான உணவு தானியங்களைப் பயிரிட்டு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை சுவாமிநாதன் தீட்டியிருக்கிறார். தற்போது முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள வன்னிப்பெருநிலப்பரப்பின் மக்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயம் செய்து பெற்ற பாரம்பரிய அறிவைக் கொண்டுள்ளவர்கள்தான். இவர்களால் அப்பகுதியில் 1 லட்சம் ஹெக்டேரில் நெல்லும், 2 லட்சம் ஹெக்டேரில் பாசிப்பயிறு, மிளகா, எள், தேங்கா, சேனைக்கிழங்கு போன்ற விளைபொருட்களும் போருக்கு முன்புவரை உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இம்முகாம்களிலிருக்கும் பெண்களுக்கு மண்புழு வளர்த்தல், இயற்கை எரு தயாரித்தல், ஊடுபயிராக நைட்ரஜன் சத்தைத் தக்கவைக்கும் அகத்தி பயிரிடல் போன்றவற்றை சுவாமிநாதனின் ஆராச்சி நிறுவனம் கற்றுத் தரப்போகிறதாம். அங்குள்ள மண்ணின் தன்மையை ஆவு செய்ய நடமாடும் மண்பரிசோதனைக் கூடங்களும், ஒவ்வொரு விவசாயிக்கும் மண்பரிசோதனை அடையாள அட்டையும் வழங்கப்பட்டு மண்ணின் தன்மைக்கேற்ற நீர்ப்பாய்ச்சலளவு வரையறுக்கப்படுமாம்.
இதன்படி,சுவாமிநாதனின் ஆராய்ச்சி நிறுவனம், விவசாய நிலங்களில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றியும் அங்குள்ள 2300 கண்மாய்களையும் 50 நடுத்தர மற்றும் 11 பெரும் குளங்களையும் சீரமைத்தும் இப்பெண்களைக் கொண்டு போய் வடக்குப் பிரதேசத்தில் குடியமர்த்தி, தாம் திட்டமிட்டுள்ள இந்தியாவிற்குத் தேவையான விளைபொருட்களைப் பயிர் செய்யும். விவசாயத்தை, வரும் விதைப்புக் காலமான அக்டோபரில் நடைமுறைப்படுத்தும். வன்னிப்பெருநிலப்பரப்பில் போருக்கு முந்தைய உணவு உற்பத்தி மட்டும் 8 லட்சம் டன்களாகும். இதைத் தவிர தலா 10 செண்டுகள் கொண்ட வீட்டுத் தோட்டங்கள் மூலமும், கணிசமான தோட்டப்பயிர் விளைச்சலும், கால்நடை விளைபொருட்களும் இத்திட்டத்தின் இலக்கில் வருவன.
மன்னார் மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலையும் சுவாமிநாதனின் நிறுவனம் விட்டுவைக்கவில்லை. மீன்பிடித் தொழிலை இந்திய நலனுக்கேற்ற வகையில் மாற்றியமைக்கும் வகையில் பயிற்சி தரும் மையம் ஒன்றையும் அது நிறுவ உள்ளது. இத்திட்டங்களுக்கெல்லாம் சுமார் ரூ. 500 கோடியை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இத்திட்டங்களைப் பற்றி “இந்து” நாளேட்டில் விளக்கமளித்திருக்கும் சுவாமிநாதன், “போர் இப்போது முடிந்திருக்கிறது. வடக்குப் பிரதேசத்தின் பொருளாதாரப் போராட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது” என்றும், “மக்கள் விரும்பியது சமாதானத்தையும், உணவையும்தான்” என்றும் சொல்லியுள்ளார். அதாவது ரேடார்களையும், எரிகுண்டுகளையும் வழங்கி இருபதாயிரம் பேரை அழித்து சமாதானத்தை(!) நிறுவிய இந்தியா, இப்போது அவர்களுக்கு உணவை ‘வடக்கின் வசந்தம்’ ஊடாக வழங்கப் போகிறது.
ஈழமக்களின் உணவு குறித்து சுவாமிநாதனுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?
இதனைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், விவசாயத்தில் இன்றைக்கு உலகளாவிய அளவில் ஏற்பட்டு வரும் உலகமயத் தாக்கத்தைக் காணவேண்டும். உற்பத்தித் தொழிலிலும் கணிப்பொறித் துறையிலும் தேசங்கடந்த உழைப்பை “அவுட் சோர்சிங்” மூலம் உறிஞ்சிவரும் ஏகாதிபத்தியம், இன்று விவசாயத்தையும் நாடுகடத்தும் திட்டத்தில் நுழைந்துள்ளது. அண்மையில் தென்கொரிய டேவூ நிறுவனம், மடகாஸ்கர் நாட்டின் பாதி விவசாய நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து தனது நாட்டின் உணவுத் தேவையை ஈடுகட்ட ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதேபோன்று சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் அரபு நாடுகளும் பிற மூன்றாம் உலக நாடுகளின் விவசாய நிலங்களை வாங்கிக் குவிக்கின்றன. இந்திய நிறுவனங்கள் மடகாஸ்கரில் நெல், கோதுமை மற்றும் பயறு வகைகளையும், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் எண்ணெ வித்து மற்றும் பயறுவகைகளையும் உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. சீனா தன் வருங்கால விவசாயத் தேவைகளை காங்கோ, சூடான், சோமாலியா, தென் அமெரிக்க நாடுகள், ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் அவுட்சோர்சிங் செய்ய உள்ளது.
சுவாமிநாதனே தனது “இந்து” கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல வியட்நாமும், கம்போடியாவும் விவசாயத்தில் காலனி நாடுகளாக்கப்பட்டுள்ளன. விவசாயத்தில் அவுட்சோர்சிங் தான் ‘வடக்கின் வசந்தம்’ எனும் பேரால் இலங்கையின் வடக்குப் பகுதியை இந்தியாவின் காலனியாக்கப் போகிறது. ஈழமக்களைக் கொன்றொழித்து, அவர்களின் விடுதலைப்போரைக் கருவறுத்த இந்தியா, அம்மக்களின் பொருளாதார சுதந்திரத்தைத் தன் காலடிக்குக் கொண்டுவரப் போகிறது.
ஈழத்தில் விவசாயத்தை ஏற்கெனவே போர் அழித்து விட்டது. போரில்லாத மற்ற நாடுகளிலோ உலகமயமானது விவசாயத்தை விவசாயிகளிடம் இருந்தே பறித்து விட்டது. இப்போது அவர்களிடமிருந்து நிலத்தைக் கைமாற்றி விட்டு அவற்றைப் பன்னாட்டு நிறுவனங்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைக்கும் பல நுணுக்கமான திட்டங்களுடன் பல ஆய்வு நிறுவனங்களும் செயலில் இறங்கி உள்ளன. இந்திய விவசாயிகளின் பாரம்பரிய நெல் ரகங்களை ராக்பெல்லர்/போர்டு பவுண்டேசனுக்குத் திருடிச் சென்று, இந்திய விவசாயிகளின் வாழ்வைச் சீரழித்த மக்கள்விரோதியான சுவாமிநாதன், இப்போது போரின் கொடுமைகளால் குறுக்கொடிந்து போக்கிடக்கும் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தையும் பறித்தெடுக்கும் சதியுடன் இந்திய-இலங்கை அரசுகளின் ஆசிபெற்று “ஒவ்வொரு பேரழிவும் வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது!” என்று அறிவித்தபடி ஈழத்தின் உள்ளே நுழைந்திருக்கிறார்.
ஈழத்தின் மீதான் இந்திய மேலாதிக்கத்தின் பகுதியான இதனைப் புரிந்துகொள்ளத் தவறும் இனவாதிகளோ, சுவாமிநாதன் பார்ப்பான் என்றும், சிலகோடிகளுக்காக தமிழ்ப்பெண்களை விவசாயத்தில் ஈடுபடுத்தி வதைக்கத் திட்டமிட்டுள்ளார் என்றும், ஆண்களை சித்திரவதை முகாம்களில் அடைத்துவைத்து பெண்களின் மானத்தோடு விளையாடும் பார்ப்பனிய சதி இது என்றும் சொல்லி சுவாமிநாதனை, பார்ப்பனர் என்பதால் மட்டும் எதிர்க்கின்றனர். இவர்கள் நினைப்பது போல எம்.எஸ்.சுவாமிநாதன் ஒரு தனிநபர் அல்ல. இந்தியத் தரகு முதலாளிகளின் நலன்களும் இந்திய அரசின் மேலாதிக்கமும் பின்னிப் பிணைந்திருப்பதுதான் இந்தக் கிழட்டுப்பார்ப்பன ஓநாயின் ஆய்வு நிறுவனம். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை இந்த நிறுவனத்துக்கு அரசு தாரைவார்த்திருப்பதும், சுவாமிநாதனை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக்கி இருப்பதும் தற்செயலானவை அல்ல.
இனவாதிகளாவது இதனைப் பார்ப்பனியம் எனக் குறுக்கிப் பார்க்கிறார்கள். ஆனால் ‘தமிழர் தலைவர்’ வீரமணியோ “விவசாயம் பாவகரமானது என்பதுதானே மனுநீதி! பரம்பரையாக ஏர்பிடிக்காத இனத்திலிருந்து விவசாய நிபுணர்கள் வருவது விளம்பர வெளிச்சத்தால் தொடரும் வித்தைகள்” என்றும், “பார்ப்பனர்கள் எந்த ஆட்சி வந்தாலும் நிரந்தரச் செல்வாக்குடன் இருக்கிறார்கள் பாருங்கள்” என்றும் அறிக்கை விட்டு சுவாமிநாதனை அறிமுகம் செய்கிறார். ஈழ விவசாயம் இந்தியாவுக்குத் திறந்துவிடப்படும்போது, அதில் பார்ப்பான் பலனடைகிறானே என்ற வயிற்றெரிச்சலைத் தவிர, இதில் வேறு எந்த வெங்காயமும் இல்லை. ஒருவேளை, நாளை ஈழத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கல்வி வியாபாரம் நடத்தலாம் எனும் வாப்பு வரும்சூழலில், ஈழத் தமிழர்களின் கல்வியை மேம்படுத்தக்கூட இந்த ‘தமிழர் தலைவர்’ மனக்கணக்கு போட்டிருக்கக் கூடும். அதனால்தான் சுவாமிநாதனைக் கூட ‘தமிழர் தலைவர்’ கடுமையாகச் சாடவில்லை.
செருப்புக்கேத்தபடி காலைவெட்ட முடியாது. அதைப்போலவே தாங்கள் வைத்திருக்கும் பார்ப்பன எதிர்ப்பு எனும் ஒரே வட்டத்துக்குள் சுவாமிநாதனின் ‘ஈழ விவசாயப் புரட்சியை’ அடைக்கப் பார்ப்பதன் மூலம் இந்தியாவின் ஆதிக்கத்துக்குத் துணைபோகின்றனர், தமிழினவாதிகள். ஒருவேளை ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தை நிறைவேற்றும் இடத்தில் சுவாமிநாதன் எனும் பார்ப்பானுக்குப் பதிலாக சூத்திரன் ஒருவன் இருந்திருந்தால் எனும் கேள்வியில் இவர்களின் சாயம் வெளுத்துவிடும்.

4/26/09

நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !


ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 4

முதன் முதல் ஐரோப்பிய வெள்ளையரைக் கண்ட ஆப்பிரிக்க கறுப்பர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? “நீலக் கண்களைக் கொண்ட, வெண்ணிற மேனியரைப் பார்த்த ஆப்பிரிக்கர்கள் கடவுள்கள் வந்து விட்டதாக நினைத்தார்கள்.” என்று ஐரோப்பிய மையவாத வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். அதை அப்படியே நாமும் நம்பி வந்திருக்கிறோம். ஆனால் கடவுள் என்ற கற்பிதமே, அந்தந்த பிரதேச மக்களின் பிம்பமாக இருப்பது யதார்த்தம். வெள்ளையரின் கடவுள் வெள்ளையாக இருந்தார். அதே போல கறுப்பர்களின் கடவுளும் கறுப்பாக இருந்ததை, இப்போதும் காணப்படும் ஆப்பிரிக்க மத சிற்பங்கள் நிரூபிக்கின்றன. ஆகவே “கடவுளைக் கண்ட வரலாறு” ஒரு ஐரோப்பிய மையவாத கட்டுக்கதை.

முதன்முதல் கறுப்பின ஆப்பிரிக்க மக்களை கண்ட ஐரோப்பியர்கள், அவர்களை மனிதக் குரங்குகளாக கருதினார்கள். அதே நேரம் ஆப்பிரிக்கர்கள், வெள்ளையின ஐரோப்பியரை பன்றி வகையை சேர்ந்த விசித்திர மிருகமாக கருதினர். ஐரோப்பியர்கள், பன்றியின் தோல் நிறத்தை ஒத்த, செந்நிற மேனியைக் கொண்டிருந்தது மட்டுமல்ல, அவர்கள் உடலில் இருந்து வந்த நாற்றமும் அப்படி நினைக்க வைத்தது. “வெள்ளையர்கள் புதைகுழிகளில் இருந்து எழுந்து வந்த ஆவிகள்” என்ற அறியாமை, வெள்ளைக்காரரை கண்டவுடன் கறுப்பின மக்களை பீதியடைந்து ஓட வைத்தது.

நைஜீரியாவில் கால் பதித்த ஐரோப்பியர்கள், வர்த்தக நிலையங்களை ஸ்தாபித்து, அடிமைகளை வேட்டையாடத் தொடங்கிய காலம், இன்னொரு வதந்தி பரவியது. ஒரு பக்கம் அடிமைகளைப் பிடித்து ஏற்றுமதி செய்து கொண்டே, மறு பக்கம் துணி விற்று வியாபாரம் நடத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் விற்ற துணியின் நிறம் சிவப்பாக இருந்தது. வெள்ளையர்கள் அடிமைகளை கொன்று இரத்தம் எடுத்து துணிகளுக்கு சாயமிடுவதாக கறுப்பர்கள் நம்பினார்கள். பெருந்தொகை அடிமைகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்த விடயம், அன்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. இந்த விபரங்களை 1857 ல் நைஜீரியாவிற்கு கிறிஸ்தவ மதம் பரப்பச் சென்ற ஜோன் டெயிலர் என்ற பாதிரியார் எழுதி வைத்துள்ளார்.

ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் 19 ம் நூற்றாண்டில் தான் ஆப்பிரிக்க கண்டத்தை காலனிப்படுத்த தொடங்கியதை முன்னர் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அதன் அர்த்தம், அது வரை ஐரோப்பியர்கள் எவரும் அந்தக் கண்டத்தில் கால் பதித்திருக்கவில்லை என்பதல்ல. ஐரோப்பிய வர்த்தகர்கள், மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையோரமாக சிறு நிலத்தை கையகப்படுத்தி, அங்கே கோட்டை கட்டி தமது தேசங்கடந்த வர்த்தக கழகத்தை நடத்தி வந்தனர். இதனால் இன்றும் பல ஆப்பிரிக்க நாடுகளின் தலைநகரங்கள் கடற்கரையோரமாக அமைந்துள்ளதைக் காணலாம். ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள், உள்ளூர் கறுப்பர்கள் சிலரை தமது முகவர்களாக அமர்த்திக் கொண்டனர். அவர்களது வேலை, நாட்டின் உட்பகுதிக் கிராமங்களை சுற்றிவளைத்து, திடகாத்திரமான உழைக்கும் வயதில் உள்ள (ஆகவே சிறுவர்களும், வயோதிபர்களும் தேவையில்லை) ஆண்களையும், பெண்களையும் அடிமைகளாக பிடித்து வந்து விற்பது. நைஜீரியாவிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் இவ்வாறு அடிமைகளாக அமெரிக்கா அனுப்பப்பட்டு விட்டதால், ஒரு காலத்தில் அந்நாட்டின் மத்திய பகுதியில் இளமையான உழைப்பாளிகளைக் காண்பது அரிதாக இருந்தது. ஆப்பிரிக்க நாடுகள் அபிவிருத்தியில் பின்தங்கியமைக்கு இதுவும் ஒரு காரணம்.

நைஜீரியாவில் ஐரோப்பியர்கள் மட்டும் வந்து அடிமைகளை வாங்கிச் செல்லவில்லை. அரேபியருக்கு தேவைப்பட்ட அடிமைகளை அன்று வடக்கு நைஜீரியாவில் இருந்த “கானெம்” இராச்சியம் பிடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தது. (ஒரு முஸ்லீமை அடிமையாக வைத்திருக்க முடியாது என்ற விதிமுறை பின்பற்றப்பட்டது). துனிசியாவில் இருந்த சந்தையில் நைஜீரிய அடிமைகள் விற்கப்பட்டனர். அல்ஜீரியாவை பிரான்ஸ் கைப்பற்றிய பின்னர், கானெம் தேசத்திற்கு பெருமளவு வருமானம் ஈட்டித்தந்த அடிமை வர்த்தகம் நெருக்கடிக்கு உள்ளானது. அடிமை வியாபாரம் மட்டுமல்ல, சாயப்பட்டறை, தோல் பதனிடும் தொழிலகங்கள் போன்ற தொழிற்துறை வளர்ச்சியினால், அன்று வடக்கு நைஜீரியாவில் பல நகரங்கள் தோன்றி இருந்தன. இந்த நகரங்களை ஒரு (கறுப்பின) சுல்த்தான் தலைமையிலான அதிகார மையம் நிர்வகித்து வந்தது. “கானெம்” முழுக்க முழுக்க ஒரு கறுப்பின அரசாட்சியாக இருந்தது. 13 ம் நூற்றாண்டில் இன்றைய லிபியாவின் பகுதிகளை உள்ளடக்கிய, மாபெரும் சாம்ராஜ்யமாக திகழ்ந்தது. இஸ்லாமிய அரேபியருடன் ஏற்பட்ட வர்த்தக தொடர்புகளால், புலானி மற்றும் ஹவுசா இன மக்கள் இஸ்லாமிய மதத்தை தழுவிய பின்பு, அந்த இராச்சியத்தை உருவாக்கி இருந்தனர். அன்றும் இன்றும் அந்தப் பிராந்தியத்தில் ஹவுசா மொழியே பொது மொழியாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிலும் இஸ்லாமிய மதராசாக்கள் சுதந்திரமாக இயங்கி வந்தன. இதனால் பெரும்பாலான நைஜீரிய முஸ்லீம்கள் ஆங்கில மொழிப் புலமை பெற்றிருக்கவில்லை. இது பின்னர் கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகளில், ஆங்கிலத்தில் கல்வி கற்ற தெற்கத்திய இனங்களுடன் முரண்பாடுகளை தோற்றுவித்தது.

ஐரோப்பியர் வருவதற்கு முன்னர், ஆப்பிரிக்கர்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவமோ, அல்லது துப்பாக்கிகளோ இருக்கவில்லை என்று ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் இன்னொரு கட்டுக்கதையை பரப்பி வந்துள்ளனர். 1823 ல் டிக்சன் டென்ஹம் என்ற பிரயாணி, கானேம் இராச்சியத்திற்கு சென்று வந்த முதலாவது ஐரோப்பியராவார். தன்னை வரவேற்க வந்திருந்த ஆயிரக்கணக்கான ஆயுதந்தரித்த, சீருடையணிந்த, குதிரைவீரர்களை கண்டு திகைப்படைந்ததாக குறிப்பெழுதி வைத்துள்ளார். ஐந்நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த கானோ நகரத்திற்கு செல்பவர்கள், இப்போதும் குதிரைப்படையினரின் அணிவகுப்பை பார்வையிடலாம். கானெம் இராச்சிய இராணுவவீரர்கள் தாங்கியிருந்த துப்பாக்கிகள் அரேபியரின் தொடர்பால் கிடைக்கப்பெற்றவை. ஐரோப்பியர்கள் துப்பாக்கிகள், பீரங்கிகள் பற்றி அறிந்தே இருக்காத காலத்தில், அரேபியர்கள் அவற்றை போரில் திறமையாக பயன்படுத்தி உள்ளனர். 1500 வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய கண்டத்தில் இருந்த, மிகப்பெரிய கிறிஸ்தவ நகரமான கொன்ஸ்டாண்டிநொபெல் (இஸ்தான்புல்) வீழ்ச்சிக்கு (அன்றைய) நவீன கண்டுபிடிப்பான சுடுகருவிகள் காரணமாக இருந்தன.

பிரிட்டிஷாரின் நைஜீரியாவிலும், சுதந்திரத்திற்குப் பின்னரும், இராணுவத்தில் முஸ்லீம் அதிகாரிகள் அதிகமாக காணப்பட்டமைக்கு, கானெம் இராச்சிய பாரம்பரியமே காரணம். பிரிட்டிஷாரின் காலனிய ஆட்சிக்காலம் தொடங்கிய போது, வடக்கே இருந்த இஸ்லாமிய தேசத்தை, தெற்கில் பல்வேறு இனங்களின் ஆளுமைக்குட்பட்ட பிரதேசங்களுடன் இணைத்து, நைஜீரியா என்ற புதிய நாட்டை உருவாக்கினார்கள். பிரிட்டிஷ் நைஜீரியாவினுள் 250 மொழிகளைப் பேசும் இனங்கள் அடங்கின. இன்று மொத்த சனத்தொகையில் 50 வீதமாக உள்ள நைஜீரிய முஸ்லீம்கள் மத்தியிலும் இன இனவேறுபாடு இருந்த போதிலும், இஸ்லாம் என்ற மதம் அவர்களை ஒன்றிணைக்கும் சக்தியாக உள்ளது. அதற்கு மாறாக தெற்கில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளால் அடிக்கடி வன்முறை வெடிக்கின்றது. ஒவ்வொரு இனமும் தனது இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே சிறந்தவர்கள் என்றும், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று கருதும் போக்கு உள்ளது. (மத முரண்பாடுகளைப் பற்றி பின்னர் பார்க்கலாம்) சுதந்திரத்திற்கு பின்னர் நைஜீரியாவின் அரசியல் அதிகாரம் இன/மத முரண்பாடுகளால் தீர்மானிக்கப்படுகின்றது.

ஜனநாயகத் தேர்தல்கள் நடைபெறும் காலங்களில், அரசியல் கட்சி தலைவர்கள் தமது இன வாக்குகளை பெறுவதிலேயே அதிக அக்கறை காட்டுவார்கள். அதனால் அரசியல்வாதிகளின் நலன்களுக்காக இனங்களுக்கிடையில் வன்முறைகள் தூண்டிவிடப்படும். அந்த உணர்ச்சி அலையை வைத்து அவர்கள் வாக்குகளை அறுவடை செய்வர். பணத்தை வாரியிறைத்து வாக்காளருக்கு லஞ்சம் கொடுத்து வாக்கு வேட்டையாடுவதும், எதிர்க்கட்சிக்கு ஆதரவானவர்களை அடியாட்படையை ஏவி மிரட்டுவதும், குறிப்பிட்ட அரசியல்வாதியின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தும். வாக்குச் சாவடியில் நின்று கொண்டு வாக்களிக்க வரும் மக்கள் எந்த வேட்பாளருக்கு போட வேண்டுமென்று அடாவடித்தனம் பண்ணுவது அங்கே சாதாரண நிகழ்வு. பணபலம், ஆட்பலம் இல்லாத வேட்பாளர் தேர்தலில் நிற்க முடியாது. பாராளுமன்றத்திற்கோ, அல்லது மாநில சட்டசபைகளுக்கோ தெரிவாகும் இந்த வேட்பாளர்கள் பதவிக்கு வந்தால் செய்யும் ஒரேயொரு வேலை, பொது மக்கள் சொத்தை கொள்ளையடிப்பது மட்டுமே. இதனால் நாட்டில் ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று அறிவித்து விட்டு, அடிக்கடி இராணுவ அதிகாரிகள் சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை பறிப்பார்கள். அப்போது கூட ஊழல் ஒழியாது என்பது மட்டுமல்ல, பகைமை கொண்ட இனத்தை சேர்ந்த வேறொரு அதிகாரி, அந்த இராணுவ சர்வாதிகாரியை ஒழித்து விட்டு ஆட்சியை கைப்பற்றுவார்.

தெற்கே யொரூபா இனமும், இக்போ இனமும் பெரும்பான்மையாக உள்ளன. நைஜீரியா சுதந்திரம் பெற்று சிலவருடங்களில், இக்போ இனத்தின் ஆளுமைக்குட்பட்ட பிரதேசத்தில் எண்ணை கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்கள் தமது பகுதியை “பயாபிரா” என்ற தனி நாடாக அறிவித்தனர். உடனடியாகவே நைஜீரிய இராணுவம் பயாபிரா சுதந்திர பிரகடனத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. பிரிட்டனும், சோவியத் யூனியனும் நைஜீரிய இராணுவத்திற்கு பக்கபலமாக நின்ற போதிலும், பயாபிரா போராளிகள் ஓரிரு வருடங்கள் தாக்குப் பிடித்தனர். முற்றுகைக்குள்ளான பயாபிரா மக்களை பணிய வைக்கும் நோக்கில் நைஜீரியா அரசு, திடீரென தேசிய நாணயத்தின் நோட்டுகளை மாற்றியது. இதனால் ஏற்கனவே பொருளாதாரத்தடை இருந்த காரணத்தால், மக்கள் உணவின்றி பட்டினி கிடந்தது சாகும் அவலம் நேர்ந்தது. சுமார் அரை மில்லியன் மக்களாவது பட்டினியால் செத்தனர். அப்போது தான் முதன்முதலாக அமெரிக்க விளம்பர நிறுவனமொன்று, எலும்பும் தோலுமாக ஒட்டிய வயிறோடு இருக்கும் ஆப்பிரிக்க மக்களின் காட்சிகளை படம் பிடித்து உலக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பியது.

2000 ம் ஆண்டு, வட நைஜீரிய முஸ்லீம் மாநிலமொன்று ஷரியா சட்டம் கொண்டு வந்த போது, நைஜீரியா மீண்டும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்றது. ஷரியா சட்டத்திற்கு மேற்கத்திய நாடுகள் காட்டிய எதிர்ப்பை நைஜீரிய முஸ்லீம்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் பெரும்பான்மை மக்கள் ஆதரவுடன் தான் ஷரியா சட்டம் நடைமுறைக்கு வந்தது. இஸ்லாமிய மத நிறுவனங்களின் தூண்டுதல் இருந்த போதிலும், பெரும்பாலும் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவே இஸ்லாமிய மத சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது நைஜீரியாவில் தெற்கே குற்றச் செயல்கள் மலிந்த லாகோஸ் நகரிற்கு எதிர்மாறாக, வடக்கே ஓரளவு பாதுகாப்பான சூழ்நிலை நிலவுகின்றது. மேலும் சுதந்திரத்திற்குப் பின்னர் மேற்கத்திய கலாச்சார சீர்கேடுகள் விரைவாகப் பரவி வந்தன. மக்களின் மேற்கத்தியமயமாகலைத் தடுத்து, காலனிய காலத்திற்கு முந்திய இஸ்லாமிய கடந்த காலப் பெருமையை மீட்டெடுப்பதுவுமே, ஷரியா சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள். மேற்கத்திய எதிர்ப்பிற்கு, நைஜீரிய முஸ்லீம்கள், ஒசாமா பின் லாடன் படம் பொறித்த டி-ஷேர்ட்களை அணிந்து எதிர்வினையாற்றினர். இப்போதும் அங்கே ஒசாமா ஒரு மாபெரும் வீரனாக கொண்டாடப்படுகின்றார்.

நைஜீரிய சனத்தொகையில் கிறிஸ்தவர்கள் 50 வீதம் (புராதன ஆப்பிரிக்க மதங்களைப் பின்பற்றும் சிறு தொகை தவிர) இருக்கலாம். கடந்த பத்தாண்டுகளாகவே கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்குமிடயிலான உறவு சீர்கெட்டு வருகின்றது. சில நேரம் அற்ப விடயம் கூட கலவரங்களை தூண்டி விடுகின்றது. கலவரத்தில் இருதரப்பிலுமே நூற்றுக்கணக்கானோர் மரணமடைகின்றனர். சொத்துகள் அழிக்கப்படுகின்றன. மேற்குலக நாட்டு ஊடகங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளே கலவரத்திற்கு காரணம் என்று, ஒரு தலைப்பட்சமாக செய்தி அறிவிக்கின்றனர். உதாரணத்திற்கு, உலக அழகிப் போட்டியை காரணமாக வைத்து முஸ்லீம்கள் கலவரத்தை தொடங்கியது உண்மை. ஆனால் கலவரத் தீயை பற்ற வைப்பதில் கிறிஸ்தவர்களும் சளைத்தவர்கள் அல்லர். இரண்டு மதங்களிலும் மத அடிப்படைவாதிகள் உள்ளனர். சவூதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகள் இஸ்லாமிய அடிப்படைவாத நிறுவனங்களை நிதி கொடுத்து பராமரிக்கின்றன. அதே நேரம் அமெரிக்க கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், நைஜீரிய புரட்டஸ்தாந்து அல்லது பெந்தேகொஸ்தே சபைகளுக்கு பணம் கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.

பிரிட்டிஷ் காலனிய காலத்தில், அதாவது 19 ம் நூற்றாண்டில், அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்டு விட்டதால், விடுவிக்கப்பட்ட அடிமைகள் சிலர் கிறிஸ்தவ பாதிரிகளாக பயிற்றுவிக்கப்பட்டனர். தென் நைஜீரியாவில் ஆப்பிரிக்க மதங்களை பின்பற்றிய மக்களை, கிறிஸ்தவர்களாக மாற்றும் பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதே நேரம் சில கறுப்பின பாதிரிகள், பிரிட்டிஷ் பொருட்களை நைஜீரியாவில் சந்தைப்படுத்தும் விற்பனைப் பிரதிநிதிகளாகவும் செயற்பட்டனர். கத்தோலிக்க, அங்க்லிக்கன் மதப்பிரிவுகள் இவ்வாறு முதலாளித்துவத்துடன் கைகோர்த்துக் கொண்டு தான் நைஜீரியாவில் காலூன்றின. இதனால் இன்றைக்கும் மத நம்பிக்கையுடன், கூடவே வியாபார மனோபாவமும் பெரும்பாலான நைஜீரியர்களின் இரத்தத்தோடு ஊறியிருப்பதைக் காணலாம். ஆப்பிரிக்காவின் திறமையான தொழிலதிபர்கள் பலர் நைஜீரியர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கத்தோலிக்க, அங்க்லிக்கன் திருச்சபைகள் விதிக்கும் கட்டுப்பாடுகள் சில நைஜீரிய மக்களை சங்கடத்திற்குள்ளாக்குகின்றது. உதாரணத்திற்கு, பலதார மணம் அந் நாட்டில் காலங்காலமாக இருந்து வரும் வழக்கங்களில் ஒன்று. அரசாங்கம் ஒரு முறை இதை தடுக்க சட்டம் கொண்டு வந்த போது, எதிர்பாராவிதமாக பெண்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. அனேகமாக சமூகத்தில் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண்கள், பணக்கார ஆண்களுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியாவதனால் குடும்ப பாரத்தை குறைக்க முடிகின்றது, என்பது அவர்களது வாதம். வறுமை காரணமாக மேற்கத்திய நாடுகளை நோக்கி பயணம் செய்யும் பெண்கள், மாபியாக் குழுக்களால் விபச்சார அடிமைகளாக்கப்படுகின்றனர். ஒருபுறம் செல்வத்தை குவித்து வைத்துள்ள சிறுபான்மை பணக்கார வர்க்கம், மறுபுறம் அன்றாட உணவுக்கே வழியில்லாத பெரும்பான்மை ஏழை மக்கள். இந்த சமூக ஏற்றத்தாழ்வு பல பிரச்சினைகளின் தோற்றுவாயாக உள்ளது. இருப்பினும் அங்கே “வர்க்கப் பிரிவினை” என்ற சொற்பதம் யாராலும் பாவிக்கப்படுவதில்லை. அதற்கு மதம் ஒரு காரணம்.

“இவ்வுலக வாழ்வில் கஷ்டப்படுபவர்கள், இறந்த பின் சொர்க்கத்தில் செல்வந்தர்களாகலாம்” என்று போதிக்கும் கத்தோலிக்க மதத்தை விட்டு பலர் விலகி வருகின்றனர். அதிருப்தியாளர்களை பல்வேறு பெந்தெகொஸ்தெ சபைகள் சேர்த்து வருகின்றன. அமெரிக்க மூலதனத்தில் இயங்கும் அந்த சபைகள், தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தாவது மக்களை கவர்கின்றன. ஆரம்பத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கு உதவுவதாக காட்டிக் கொள்ளும் சபைகள், உறுப்பினர்களை சேர்த்துக் கொண்ட பின்னர் வருமானத்தில் பத்து வீதம், அங்கத்துவ பணமாக செலுத்த வேண்டும் என வற்புறுத்துகின்றன. நைஜீரியாவில் பெந்தெகொஸ்தெ சபைகளின் பாதிரிகள் ஆடம்பர பங்களாவில் வசிப்பதும், சொகுசு காரில் பயணம் செய்வதும், பிள்ளைகளை அமெரிக்கா அனுப்பி படிக்க வைப்பதும் சர்வசாதாரணம்.

நைஜீரியா ஆப்பிரிக்காவின் எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று. பெற்றோலியத்தை இலகுவில் பிரித்தெடுக்கக் கூடிய அளவு, நைஜீரிய எண்ணை தரமானது. நெதர்லாந்து அரச குடும்பத்தின் முதலீட்டில் இயங்கும் ஷெல் நிறுவனம், பெருமளவு நைஜீரிய எண்ணையை அகழ்ந்து சர்வதேச சந்தையில் விற்று வருகின்றது. ஒரு பகுதி லாபம் ஆளும் வர்க்கத்தின் பாக்கெட்டுக்குள் போவதால், பொது மக்களுக்கு எந்தப் பலனும் கிடைப்பதில்லை. மொத்த உற்பத்தியில் பத்து சதவிகிதம் உள் நாட்டு பாவனைக்கு ஒதுக்கப்பட்டாலும், அங்கே பற்றாக்குறை நிலவுகின்றது. பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி நேருவதும், அடிக்கடி விலை உயர்வதும், நைஜீரியா உண்மையிலேயே எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடா? என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கும். நம்பினால் நம்புங்கள். உள்ளூர் பாவனைக்கு தேவையான பெரும் பகுதி பெட்ரோல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. மோசமான முகாமைத்துவத்தை கொண்ட எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள், அயல்நாடுகளுக்கு கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்றல், போன்ற காரணங்களால் இந்த தட்டுப்பாடு ஏற்படுகின்றது.

ஊழல் பெருச்சாளிகளால் ஆளப்படும் நாட்டில் சட்டம், ஒழுங்கை எதிர்பார்ப்பது முயல்கொம்பை தேடுவதற்கு ஒப்பானது. பொறுத்துப் பொறுத்து பார்த்த மக்கள் சட்டத்தை தமது கைகளில் எடுத்தனர். எண்ணை குழாய்களை துளையிட்டு, எண்ணை திருட தொடங்கினர். அல்லது குழாய்களை சேதமாக்கி விட்டு, கம்பெனி ஊழியர்கள் வரும் வரை காத்திருந்து அவர்களை பிடித்து சிறை வைத்தனர். சில நேரம் இது போன்ற அழிவு வேளைகளில் சிக்கி பொது மக்கள் மரணமடைவதும் உண்டு. ஆயினும் அவர்களுக்கு பகாசுர எண்ணைக் கம்பெனிகளை எதிர்த்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. எண்ணை வளம் அவர்களது வாழ்க்கையை வளம் படுத்த செலவிடப்பட வேண்டும், என்ற நியாயமான கோரிக்கையே அவர்களது போராட்டம். சில தன்னிச்சையான ஆயுதக் குழுக்கள், எண்ணை கம்பெனி ஊழியர்களைக் கடத்தி, தமது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வைத்தனர். கென் சரவீவ என்ற காந்தீய வழயில் போராடிய ஒருவர், நைஜீரிய பாதுகாப்பு படையினரால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச மன்னிப்புச் சபை நைஜீரிய பிரச்சினையை உலகறிய வைத்தது. இந்தக் கொலையில் ஷெல் நிறுவனமும் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியை, ஒரு பத்திரிகையாளர் பேட்டி கண்ட போது, “அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பவர்களை தனக்குப் பிடிக்காது.” என்று கூறினார். ஆமாம், நைஜீரிய சர்வாதிகாரிகளுடன் கூடிக் குலாவுவது, லஞ்சம் கொடுப்பது, எதிர்ப்பவர்களை ஆள் வைத்து கொலை செய்வது, வரி ஏய்ப்பு செய்து கொள்ளையடிப்பது… இவ்வாறான கிரிமினல் வேலைகளை ஷெல் செய்து வருவது, நைஜீரியாவில் அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஒரு பக்கம் எல்லா பாவ காரியங்களையும் செய்து கொண்டு, மறு பக்கம் தன்னை கொடை வள்ளலாக காட்டி புண்ணியம் தேடுகின்றது. பாடசாலைகள், வைத்தியசாலைகள், மற்றும் பல சமூக நல தொண்டு சேவைகளுக்கு ஷெல் “நன்கொடை” வழங்கி வருகின்றது. அதே நேரம் தனது இருப்பிற்கு ஆபத்து நேரா வண்ணம், முன்பு தன்னை எதிர்த்து போராடியவர்களை சேர்த்து, தனியார் பாதுகாப்புப்படை ஒன்றை உருவாக்கி உள்ளது.

உலக நாடுகளைப் பொறுத்த வரை, நைஜீரியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் ஒரு பொருட்டல்ல. நைஜீரியா ஆப்பிரிக்காவின் பெரிய நாடுகளில் ஒன்று மட்டுமல்ல, தொழிற்துறையில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுமாகும். அது மட்டுமல்ல பயபிரா போருக்குப் பின்னர், போரியல் அனுபவத்தை பெற்ற இராணுவமானது, நாட்டின் இன்றியமையாத நிறுவனமாக வளர்ந்துள்ளது. இராணுவத்தின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே அங்கே ஜனநாயகம் நிலைக்க முடியும். நைஜீரியா, எல்லாம் வல்ல அமெரிக்காண்டவரின் அங்கீகாரம் பெற்ற நாடு. அதனால் ஐக்கிய நாடுகள் சபை தலையீட்டில் எந்தவொரு ஆப்பிரிக்க நாட்டிற்காவது சமாதானப்படை அனுப்ப நேர்ந்தால், அதிலே நைஜீரியா முக்கிய பங்காற்றும். ஆனால் சமாதானம் என்ற பெயரில் நைஜீரியா பிராந்திய வல்லரசு மனப்பான்மையுடன் செயற்படுகின்றது. யுத்த பிரபுக்களுக்கு சார்பாக நடந்து கொள்கின்றது. வேலியே பயிரை மேய்வது போல, மனித உரிமை மீறல்களைப் புரிகின்றது. சியாரா லியோனில் வைர வியாபாரத்தில் கூட ஈடுபட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. இத்தனை குறைபாடுகளுக்கு மத்தியில், நைஜீரிய ஆட்சியாளர்கள் இன்னமும் வல்லரசு கனவு காண்கின்றனர். பல்வேறு இனங்களும், மதங்களும் தமக்குள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் அது ஒரு பகற்கனவாக மட்டுமே இருக்கும்.

– தொடரும் –

4/24/09

ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை


ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 3
ஐரோப்பியர்களின் நாகரீகம் எங்கே தோன்றியது என்று கேட்டால், கிரேக்கத்தை காட்டுவார்கள். கிறிஸ்துவுக்கு முன், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, முழு ஐரோப்பிய கண்டத்திலும் கிரேக்கர்கள் மட்டுமே வளர்ச்சியடைந்த நாகரீக சமுதாயத்தை பெற்றிருந்தனர். இருப்பினும் அன்றைய கிரேக்கர்கள், பிற ஐரோப்பியருடன் எந்த தொடர்பையும் வைத்திருக்க விரும்பவில்லை. ஆமாம், அப்போதும் நாகரீகமடையாத காட்டுமிராண்டி சமூகமாக, குகைகளுக்குள் குடியிருந்து, காட்டுப்பன்றிகளை வேட்டையாடிக் கொண்டிருந்த ஐரோப்பிய இனக்குழுக்களுடன் இராஜதந்திர உறவு வைத்துக்கொள்ள முடியுமா? அதே நேரம் கிரேக்கர்கள் தமது அயலில் இருந்த பிற நாகரீகமடைந்த சமூகங்களோடு நெருக்கமான உறவை கொண்டிருந்தனர். பண்டைய கிரேக்கர்கள் மதிப்புக் கொடுத்த நாகரீகமடைந்த சமூகங்களில் சில, ஆப்பிரிக்காவில் இருந்தன!

நான் கிரீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது, ஏதென்ஸ் நகர அருங்காட்சியகத்தில், ஆப்பிரிக்க கறுப்பினப் பெண்களைப் போல உருவத்தோற்றமுடைய சிற்பங்கள் சில இருந்ததை கண்டேன். எனக்கு அதை விட ஆச்சரியமளித்த விடயம், ஐரோப்பிய சரித்திர பாடநூல்கள் எதுவும் கிரேக்கம் ஆப்பிரிக்காவுடன் கொண்டிருந்த தொடர்பைப் பற்றி குறிப்பிட்டிருக்காதது. அது சரி, அனைத்து ஐரோப்பியர்களும் தமது "நாகரீகத்தின் தொட்டில்" என்று பெருமைப்படும் கிரேக்கத்தில், ஆப்பிரிக்க நாகரீகத்தின் செல்வாக்கு இருந்தது என்ற உண்மை, இலகுவில் ஜீரணிக்கக் கூடியதா?

அன்றைய உலகம் வேறுவிதமாக இருந்தது. பண்டைய நாகரிக கால மக்களுக்கு கருப்பு/வெள்ளை நிற வேறுபாடு கண்ணுக்கு புலப்படவில்லை. யாருமே தோல் நிறத்தை ஒரு விடயமாக கருதவில்லை. இதனால், அன்றைக்கு இருந்தது "வெள்ளையின நாகரீகமா", அல்லது "கறுப்பின நாகரீகமா" என்று வேறுபடுத்திப் பார்ப்பது அவ்வளவு இலகுவானதல்ல. எகிப்தில் இருந்த பரோவா மன்னர்கள் இராச்சியம், செந்நிற மேனியரைக் கொண்டிருந்தது, என இன்றைக்கும் சில சரித்திர/அகழ்வாராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதே காலட்டத்தில், தெற்கே குஷ் இராசதானியை (இன்று சூடான்) சேர்ந்த கருநிறமேனியரான நுபியர்கள், அவ்வப்போது எகிப்திய ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த உண்மைகள் தற்போது வெளிவருகின்றன. அன்றைக்கிருந்த எகிப்தை இந்தியாவிற்கு ஒப்பிடலாம். ஒரே குடும்பம், பல நிற மேனியரைக் கொண்ட உறுப்பினரைக் கொண்டிருப்பது சகஜமானது. இன்றும் கூட பண்டைய எகித்திய ஓவியங்களில், கருநிற மேனியரின் உருவங்கள் வரையப்பட்டிருப்பதை காணலாம்.

நுபியர்களின் குஷ் இராச்சியம், எகிப்தின் தங்கச் சுரங்கம் எனக் கூறினால் மிகையாகாது. நுபிய சுரங்கங்கள் வருடமொன்றிற்கு நாற்பதாயிரம் கிலோகிராம்(இன்றைய மதிப்பில்) தங்கத்தை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன. கறுப்பின நுபியர்கள், எகிப்திய மத, மொழி, கலாச்சார அடையாளங்களை பின்பற்றினர். சூடான் முதல் சிரிய எல்லை வரை நுபியர்கள் ஆட்சி செய்த காலம் ஒன்றுண்டு. எகிப்தியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கடவுட்கோட்பாடான அமோன் (கிறிஸ்தவர்கள் இதனை "அமென்" என்று இன்றும் நினைவுகூருகின்றனர்) என்ற சூரிய தேவன் வழிபாட்டையும் அறிந்து வைத்திருந்தனர். நான் எகிப்தில், லுக்ஸொர் நகரில் உள்ள கார்னாக் ஆலயத்திற்கு சென்றிருந்த போது, எகிப்தியரின் வழிபாட்டு முறை இந்துக் கோயில்களை ஓரளவு ஒத்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இந்துக் கோயில்களில் இருப்பதைப் போல மூலஸ்தானம், தூண்கள் மட்டுமல்ல, சாமி சிலைகளை குளிப்பாட்டும் தீர்த்தக்கேணி எல்லாம் அப்படியே இருந்தன. அந்தக் காலத்தில் மன்னர் அல்லது பிரபுக்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் போக அனுமதி இருந்தது. உழைக்கும் மக்கள் கோயிலுக்கு வெளியே நின்று தான், சாமி கும்பிட முடியும். உண்மையில் பண்டைய காலத்தில் நிலவிய வர்க்கப்பிரிவினை தான், பின்னர் இந்திய சமுதாயத்திலும் சாதிப்பிரிவினையாக தொடர்ந்திருக்க வேண்டும். இந்திய, ஆப்பிரிக்க சமூகங்களுக்கிடையிலான கலாச்சார ஒற்றுமை இதைப்போல நிறைய உள்ளன.

பிற்காலத்தில் அந்நியரின் படையெடுப்புகள் காரணமாக, எகித்திய, நுபிய நாகரீகங்கள் அழிந்து போனாலும், அதற்குப் பிறகு தோன்றிய "சூடானிய நாகரீகம்", கிழக்கே செங்கடல் முதல் மேற்கே அட்லாண்டிக் சமுத்திரம் வரை பரவி இருந்தது. இந்த நாகரீகத்தின் சிறப்பம்சம் என்னவெனில், அப்போது நிலப்பிரபுத்துவ முறை நிலவவில்லை. மாறாக இன்று எமக்கெல்லாம் பரிச்சயமான அரச கரும ஊழியர்களைக் கொண்ட அதிகார வர்க்கம் இருந்தது. கடவுளுக்கு அடுத்த சர்வவல்லமை பெற்ற மன்னன், இந்த அரச ஊழியர்களை நியமிக்கவோ, பணிநீக்கம் செய்யவோ அல்லது பதவி உயர்வு கொடுக்கவோ முடியும். அதனால் குறிப்பிட்ட எந்த குடும்பமும் அதிகாரத்தை பரம்பரையாக பின்பற்ற முடியாது. நல்லது, மேற்குலகம் எதிர்பார்ப்பதைப் போல "பல கட்சி ஜனநாயகம்" (இது ஐரோப்பாவிலேயே 19 ம் நூற்றாண்டில் தான் வந்தது) அப்போது ஆப்பிரிக்காவில் இருக்கவில்லைத் தான். ஆனால் ஒரு கிராமத்தின் தலைவனைக் கூட மக்கள் தெரிவு செய்யும் நேரடி ஜனநாயகம் நிலவியது. இதைத்தான் கடாபி, அவ்வப்போது மேற்குலகிற்கு எடுத்துக் காட்டுவது வழக்கம். "ஆப்பிரிக்கர்களான நாங்கள் ஜனநாயக பாரம்பரியத்தில் வந்தவர்கள். எமக்கு புதிதாக பாடம் நடத்த தேவையில்லை."

கி.பி. ஏழாம் அல்லது பத்தாம் நூற்றாண்டளவில், எகிப்து வழியாக கிறிஸ்தவ மதம் எத்தியோப்பியா வரை பரவி இருந்தது. எத்தியோப்பியாவில் "அக்சும்" என்ற கிறிஸ்தவ சாம்ராஜ்யம் தோன்றியிருந்தது. செங்கடலை தாண்டி யேமனை ஆக்கிரமிக்குமளவு இராணுவ பலம் பெற்று விளங்கியது. (யேமன் நாட்டில் கூட ஆப்பிரிக்க செல்வாக்கு இருந்துள்ளது. பைபிளில் வரும் புத்திசாதுர்யம் மிக்க யேமன் அரசி ஷீபா, யேமனை சேர்ந்த கறுப்பின அழகி.) அக்சும் நாட்டில் சாப்பாட்டுத்தட்டுகள் கூட தங்கத்தில் அல்லது வெள்ளியில் செய்யப்பட்டிருந்தமை, அதன் செல்வச் செழிப்பிற்கு சாட்சி. எத்தியோப்பியாவில் யூத மதமும் பரவி இருந்தது. அதனால் சடங்குகள் சில கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் பொதுவாக இருக்கின்றன. உதாரணமாக, யூதர்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களும் சுன்னத்து செய்துகொள்ளும் வழக்கம், அந் நாட்டில் இப்போதும் நடைமுறையில் உண்டு. கி.பி. பத்தாம் நூற்றாண்டளவில் அரேபிய-முஸ்லீம் படையெடுப்புகளால், ஆப்பிரிக்காவின் வட பகுதி முழுவதும் இஸ்லாம் பரவிய காலத்தில் மட்டுமல்ல, பிற்காலத்தில் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளையும் எத்தியோப்பியா வெற்றிகரமாக எதிர்த்து நின்று, தனது இறையாண்மையை காப்பாற்றிக் கொண்டது. ஆமாம், பீரங்கிகளோடு படையெடுத்த ஐரோப்பியர்களை, புராதன கால ஆயுதங்களோடு எதிர்த்து போரிட்டு, ஆப்பிரிக்காவில் காலனிப் படுத்தப்படாத ஒரேயொரு நாடு என்ற பெருமையைப் பெற்றது எத்தியோப்பியா.

ஐரோப்பியர்கள் தமது நாகரீகத்தின் தொட்டில் கிரேக்கம் என்று கூறுவது போல, ஆப்பிரிக்கர்களுக்கு அவர்களது நாகரீகத்தின் தொட்டில், எத்தியோப்பியா. அதனால் தான் எத்தியோப்பியாவின் பண்டைய மூவர்ணக்கொடியை, "அகில ஆப்பிரிக்க ஒன்றியக்" கொடியாக, பல நாடுகளால் சுவீகரிக்கப்பட்டது. கிறிஸ்துவுக்கு பின் ஐரோப்பியக் கண்டத்தில், தனது ஆரம்பக்காலத்தில் இத்தாலியிலும், கிரேக்கத்திலும் கூட பரவுவதற்கு பெரும் சிரமம் எடுத்துக்கொண்டிருந்த காலங்களில்; எத்தியோப்பியா கிறிஸ்தவ நாடாக ஏற்கனவே மாறிவிட்டிருந்தது. அது மட்டுமல்ல, பிற ஐரோப்பிய பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக நடைபெற்ற போர்களில், எத்தியோப்பியாவை சேர்ந்த கருப்பு வீரர்கள் பங்குபற்றியுள்ளனர்.

அதே காலகட்டத்தில் தான் வட ஆப்பிரிக்காவில் இஸ்லாமிய மதம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. மொரோக்கொவை சேர்ந்த இஸ்லாமிய சக்கரவர்த்தி ஸ்பெயின், பிரான்ஸ் மீது படையெடுத்த போது, அந்தப் படையிலும் கறுப்பின வீரர்கள் கணிசமான அளவில் இருந்தனர். அந்தக் காலத்தில் உலகம் கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற இரு வேறு மதங்களைச் சேர்ந்த முகாம்களாக பிரிந்து நின்றது. ஒருவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது தான் முக்கியமாக பார்க்கப் பட்டதே தவிர, தோலின் நிறம் கருப்பா, சிவப்பா என்று யாரும் அக்கறைப்படவில்லை. அன்று "ஐரோப்பாவில் நிலவிய அடிமை முறை சமுதாயம் ஒழிந்து, நிலப்புரபுத்துவ சமுதாயம் உருவான வரலாற்றில் முற்போக்கான பாத்திரத்தை கிறிஸ்தவ மதம் ஏற்றிருந்ததை" கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுள்ளார். அந்த இடத்தில் இஸ்லாமையும் குறிப்பிடலாம். அன்று தனித்தனி இனக்குழுக்களாக (ரோமர்/கிரேக்கர் பார்வையில் காட்டுமிராண்டி சமூகமாக) இருந்த ஐரோப்பியரை (ஒரு உலக மதத்தின் கீழ்) நாகரீகப்படுத்தும் முக்கியமான வரலாற்றுப்பணியை ஆப்பிரிக்கர்கள் ஏற்றிருந்தனர்! அதாவது வரலாற்றாசிரியர்கள் கூறுவதற்கு மாறாக, ஆப்பிரிக்கர்கள் தான் இருண்ட ஐரோப்பாவை கண்டுபிடித்தார்கள்!!

ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர், ஆப்பிரிக்கர்கள் இராச்சியங்கள் இல்லாத இனக்குழுச் சமுதாயமாக வாழ்ந்து வந்ததாக மாபெரும் வரலாற்றுப் புரட்டு பாடசாலைகளில் போதிக்கப்படுகின்றது. உலகின் எந்தவொரு பகுதியும் ஒரே காலத்தில் வளர்ச்சியடைவதில்லை. ஏற்றத்தாழ்வான வளர்ச்சி எங்கேயும் இருந்து வரும். ஐரோப்பியர்கள் காலனிப்படுத்த தொடங்கிய, மேற்கு ஆப்பிரிக்காவின் கினிய கரைப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள், புராதன இனக்குழுச் சமுதாயமாக வாழ்ந்து வந்த உண்மையை மறுக்க முடியாது. ஆனால் அதேநேரம் தெற்கே இருந்த கொங்கோ சாம்ராஜ்யம் பற்றி, 16 ம் நூற்றாண்டில் ஒரு போத்துக்கேய மாலுமி குறிப்பெழுதி வைத்துள்ளார். "மக்கள் பட்டாலான ஆடைகளை உடுத்தியிருந்ததாகவும், இருபாலாரும் ஆபரணங்களை அணிந்திருந்ததாகவும்" அந்த குறிப்புகளில் காணக்கிடைக்கின்றது. வடக்கே இருந்த கானா சாம்ராஜ்யம் மிகப் பலத்தோடும், செல்வத்தோடும் இருந்ததாக அரேபிய சரித்திர ஆசிரியர்கள் எழுதிவைத்துள்ளனர். அந்தக்காலத்திலேயே கானா தங்கம் விளையும் நாடாக, அரேபியரால் அறியப்பட்டது. கானா சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியில், மாலியில் புதியதொரு சாம்ராஜ்யம் தோன்றியது. அதன் தலைநகரமான திம்புக்டு பிரதான வர்த்தக மையமாக புகழ் பெற்று விளங்கியது. 1324 ம் ஆண்டளவில், மாலி நாட்டு அரசன் மெக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொண்டு, எகிப்து வந்து சேர்ந்திருந்த போது, மூன்று வருடங்களுக்கு தங்கத்தின் விலை குறைந்திருந்ததாக எகிப்திய சரித்திர ஆசரியர் இபுன் கல்டூன் எழுதிவைத்துள்ளார். மாலி அரசனுடன் கூட வந்த 300 அடிமைகள், ஆளுக்கு ஒரு கிலோ அளவிலேனும் தங்கம் கொண்டு வந்ததைப் பார்த்து, அந் நாடு எவ்வளவு செல்வச் செழிப்பானது, என்று அரேபியர்கள் வியந்துள்ளனர்.

பண்டைய ஆப்பிரிக்கா செல்வத்தில் மட்டுமல்ல, கல்வியிலும் சிறந்து விளங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. மாலி நாட்டில், திம்புக்டு நகரில் இப்போதும் நிலைத்து நிற்கும், சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட, பல்கலைக்கழகமும், நூலகமும் அதற்கு சாட்சி. பிற்காலத்தில் மொரோக்கோவில் இருந்து படை எடுத்து வந்து ஆக்கிரமித்த மூர்கள், நூலகத்தை எரியூட்டி, அங்கேயிருந்த நூல்களை கொள்ளையடித்து சென்றனர். இப்போதும் அங்கே கொள்ளையடிக்கப்பட்ட நூல்கள் சில மொரோக்கோவில் உள்ளன. ஆப்பிரிக்கர்களின் கல்விச்செல்வங்கள், எகிப்தில், அலெக்சாண்டிரியா நகர நூலகத்திலும் வைக்கப்பட்டிருந்தன. கிறிஸ்துவுக்கு முன், உலகில் இருந்த மாபெரும் நூலகம் அது. அங்கிருந்த நூல்கள் பாபிருஸ் (இதிலிருந்து "பேப்பர்" வந்தது) தாவரத்தில் இருந்து தயாரித்த தாள்களில் எழுதப்பட்டிருந்தன. கிரேக்கத்திலிருந்து சோக்ரடீஸ் போன்ற தத்துவ அறிஞர்கள் கூட அந்த நூலகத்தை பயன்படுத்தி இருக்க சாத்தியமுண்டு. அத்தகைய பிரசித்தி வாய்ந்த நூலகத்தை, கிளியோபாட்ரா(பூர்வீகம்:கிரேக்கம்) காலத்தில் ஆட்சி செய்த ரோமர்கள் "தற்செயலாக" எரித்து விட்டனர். அங்கிருந்த கிடைத்தற்கரிய நூல்கள் யாவும் எரிந்து சாம்பராகின.

மனித குலத்தின் கண்டுபிடிப்புகளுக்கு, குறிப்பிட்ட ஒரு இனம் உரிமை கோருவது அயோக்கியத்தனமானது. ஆப்பிரிக்காவில் எகிப்தில் இருந்து கிரேக்கர்கள் கற்றுக்கொண்ட கணித, விஞ்ஞான கோட்பாடுகள் பல அன்றைய ஐரோப்பாவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நீண்டகாலத்திற்கு பிறகு, அரேபியரால் மேம்படுத்தப்பட்ட அதே கோட்பாடுகளை, ஐரோப்பியர்கள் தாமதமாக அறிந்து கொண்டனர். இவற்றையெல்லாம் ஐரோப்பியர்கள் தாமே கண்டுபிடித்தது போல, பாடசாலைகளில் கற்பிக்கின்றனர். அது உண்மையென்று நம்பும் ஆப்பிரிக்கர்களும் இருப்பது வேதனைக்குரியது. அங்கே மட்டுமல்ல, ஆசியாவிலும் இது தான் நடந்தது. உலகம் முழுவதும் திருடியதை, தனது சொத்தென்று உரிமை பாராட்டுவது, அதையே விற்பனைச் சரக்காக்குவது, இவற்றில் எல்லாம் ஐரோப்பியர்கள் வல்லவர்கள். அதில் மட்டுமல்ல, இனவாதம், நிறவாதம் என நாகரிக உலகம் வெறுக்கும் அரசியல் கொள்கைகளை கண்டுபிடித்து, அதை ஆப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து, ஒருவரோடு ஒருவர் மோத விட்டு வேடிக்கை பார்ப்பதிலும் அவர்கள் கெட்டிக்காரர்கள் தான். இரத்தம் சிந்தும், இன்றைய இன/மத பிரச்சினைகள் பல ஐரோப்பிய காலனியகாலத்தில் உருவானவை, என்பதை யாராலும் மறுக்க முடியாது.

-- (தொடரும்) --

4/19/09

காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம்



(ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 2)

ஆப்பிரிக்க கண்டத்தின் வரைபடத்தை ஒருமுறை பார்த்தீர்களானால், தேச எல்லைகள் பென்சிலால் கோடு கீறியது போல இருக்கும். உண்மையில் அப்படித்தான் ஐரோப்பிய வல்லரசுகள் ஆப்பிரிக்காவை தமக்குள் பங்கு பிரித்துக் கொண்டார்கள்! 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பாக் கண்டத்தில் தேசிய அரசுகள் உருவாக ஆரம்பித்திருந்தன. அப்போதெல்லாம் காலனிகள் வைத்துக் கொள்வது ஒரு கௌரவம். இங்கிலாந்து, பிரான்ஸ், போர்த்துக்கல், ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகள், ஆப்பிரிக்க வரைபடத்தை மேசை மீது வைத்து, தமக்கு தேவையான துண்டுகளை பென்சிலால் கீறி பெற்றுக் கொண்டார்கள். இந்த எல்லைக் கோடுகள் வகுக்கும் போது ஆப்பிரிக்க மக்களின் விருப்பம் புறக்கணிக்கப்பட்டது. அவர்களது தலைவிதியை, வடக்கே இருந்த ஐரோப்பிய கடவுளர் தீர்மானித்தார்கள். ஒரே மொழி பேசும் இனங்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு நாடுகளில் சிக்கிக் கொண்டார்கள்.

கண்டத்தின் மத்திய பகுதியில் இருந்த கொங்கோ பிரதேசத்திற்கு பலர் போட்டியிட்டார்கள். இறுதியில் சிறிய துண்டான கொங்கோ-பிராசவீல் பிரான்சிற்கும், பெரிய துண்டான கொங்கோ-கின்ஷாசா பெல்ஜியத்திற்கும் கிடைத்தது. பெல்ஜிய மன்னன் லெயோபோல்ட், கிட்டத்தட்ட ஐரோப்பிய கண்டத்திற்கு நிகரான கொங்கோவை தனது தனிப்பட்ட சொத்தாக்கிக் கொண்டார். ஒரு சர்வதேச நிறுவனத்தை தொடங்கி நிர்வகித்து வந்தார். இருப்பினும் ஒப்பந்தத்தின் படி பிற ஐரோப்பிய நாட்டு நிறுவனங்களையும் கொங்கோவில் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டி இருந்தது.

பெல்ஜிய நாட்டிலிருந்து சென்ற பெருந்தோட்ட பயிர்செய்கையாளர்கள், ரப்பர் தோட்டங்களை ஆரம்பித்து, அதில் கொங்கோ நாட்டு மக்களை அடிமை வேலை செய்யப்பணித்தனர். ஒவ்வொரு தொழிலாளியும் குறிப்பிட்ட அளவு ரப்பர் பால் எடுத்துக் கொடுக்க வேண்டும். அந்த அளவு குறைந்தால், சித்திரவதை செய்யப்பட்டனர், அல்லது அவர்களது குடும்பத்தினர் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டனர், அல்லது கைகள் வெட்டப்பட்டன. பெருந்தோட்ட நிறுவனங்களின் லாபவெறிக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பெல்ஜிய மன்னனின் என்பது ஆண்டு கால காலனிய ஆதிக்க காலத்தில், கொல்லப்பட்ட மக்களின் தொகை பத்து மில்லியன்! அதாவது பெல்ஜிய நாட்டின் இன்றைய மொத்த சனத்தொகை!! "ஸ்டாலின், மாவோ இத்தனை கோடிப்பேரை கொலை செய்தார்கள், அதனால் அவர்கள் மனிதர்களல்ல, பூதகணங்கள்" என்று, இன்று வரை ஓதிக் கொண்டிருப்பவர்கள், பெல்ஜிய பூதம் லெயோபோல்ட்டின் படுகொலைகளை பற்றி வாய் திறப்பதில்லை.

இன்றைக்கும் சில படித்தவர்கள் கூட நினைப்பது போல கொங்கோ ஒரு பண்டைய வரலாற்றைக் கொண்டிராத தேசமல்ல. 15 ம் நூற்றாண்டிலேயே, இன்றைய அங்கோலாவின் பகுதிகளை சேர்த்துக் கொண்ட மாபெரும் கொங்கோ இராசதானி இருந்தது. அந்நிய படையெடுப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமளவு பலமிக்க இராச்சியமாக இருந்தது. மாகாணங்கள் பிரிக்கப்பட்டு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அங்கே ஒரு விவசாய சமூகம் இருந்தது. இரும்பு போன்ற சில கனிம தாது பொருட்களை பயன்படுத்தும் அறிவைப் பெற்றிருந்தனர். தான்சான்யா வழியாக அரேபியருடன் வர்த்தக தொடர்புகளைப் பேணி வந்தனர். 16 ம் நூற்றாண்டில் உலகைக் கண்டுபிடிக்க கிளம்பிய போர்த்துகீசிய கடலோடிகளால் தான், ஐரோப்பிய காலனிய காலகட்டம் ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் கொங்கோ இராசதானிக்கு தரங்குறைந்த துப்பாக்கிகளையும், பல்வேறு மதுவகைகளையும் கொண்டு சென்று விற்று, அடிமைகளை வாங்கிக் கொண்டு வந்தார்கள். இதற்கிடையே போர்த்துகீசியரின் வற்புறுத்தலுக்கு இணங்கி கொங்கோ மன்னன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, "ஜோவோ" (ஆங்கிலத்தில்: ஜோன்) என்ற நாமத்தை சூட்டிக் கொண்டான். தனது குடிமக்களையும் கிறிஸ்தவர்களாக மாற்றினான். முதல் முறையாக ஒரு கறுப்பின பிஷப் வத்திக்கானிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். நான் முன்பு கூறியது போல ஆப்பிரிக்காவில் அடிமைகளை பிடித்து விற்பது சாதாரண விடயமாக இருந்த போதும், காலனியாதிக்கவாதிகளுக்கு லட்சக்கணக்கில் தேவைப்பட்டதும், அதற்காக நடந்த மனிதத்தன்மையற்ற வேட்டையும், ஆப்பிரிக்கா அறியாத ஒன்று. ஐரோப்பிய முதலாளிகளின் அமெரிக்க பெருந்தோட்டத்தில் வேலை செய்ய பல்லாயிரக்கணக்கான அடிமைகள் தேவைப்பட்டனர். சந்தையில் அந்த சரக்கிற்கு கிராக்கி அதிகமாகியதும், போர்த்துக்கேயர்கள் கொங்கோவில் அடிமை வேட்டையை அதிகரித்தமை, கொங்கோ மன்னன் மனதில் சந்தேகத்தை கிளப்பியது. "ஒரு கிறிஸ்தவன் தனது சகோதர கிறிஸ்தவர்களை எப்படி அடிமையாக வைத்திருக்கலாம்?" என்று மன்னன் வெகுளித்தனமாக கேள்வி எழுப்பவும், இது தான் தருணம் என்று போர்த்துக்கேயர்கள் கொங்கோவில் பலாத்காரமாக மன்னர் ஆட்சியை அகற்றி, தமது காலனி ஆட்சியை நிறுவினார்கள்.

ஒரு காலத்தில் பிராந்திய பேரரசாக சிறப்புடன் இருந்த கொங்கோ இராசதானி, பிற்காலத்தில் "போர்த்துகீசிய அங்கோலா", "பெல்ஜிய கொங்கோ", "பிரெஞ்சு கொங்கோ" என்று பிரிக்கப்பட்டது. இந்த வரலாற்றை மறைத்து, "இருண்ட கண்டத்தை நாகரீகப்படுத்த ஐரோப்பிய வெள்ளையர்கள் வந்ததாக" இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் பெல்ஜியம் கொங்கோவை அபிவிருத்தி செய்யும் முயற்சியில் ஒரு போதும் இறங்கியதில்லை. பெரும்பாலான பெல்ஜிய காலனிய அதிகாரிகள் டச்சு மொழி (பெல்ஜியத்தில் பிளாம்ஸ் என்றழைப்பர்) பேசுபவர்களாக இருந்த போதிலும், கொங்கோ மக்களுடன் பிரெஞ்சு மொழியில்(பெல்ஜியத்தின் இரண்டாவது மொழி) பேசினர். டச்சு மொழியை தமது சமூகத்திற்குள் மட்டுமே பயன்படுத்தும் இரகசிய மொழியாக வைத்துக் கொண்டனர்.

பெல்ஜிய மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் யாவும், கனிம வளங்களை அகழும் சுரங்கங்கள் தோண்டியது மட்டுமே ஒரேயொரு "அபிவிருத்தி". தங்கம், வெள்ளி, வைரம், நிக்கல், குரோமியம் என்று நிலத்தில் இருந்து தோண்டியெடுத்த விலைமதிப்பற்ற பொருட்களை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன. கொங்கோ அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்ட செல்வந்த நாடு. உலகில் உள்ள வெப்ப/குளிர் காலநிலைக்கேற்ற, அத்தனை பயிர்களும் வளரக்கூடிய தரைகளைக் கொண்ட கொங்கோ, விவசாயத்தில் தன்னிறைவு கண்டால், 50 மில்லியன் சனத்தொகைக்கு உணவு கொடுப்பது பெரிய விடயமல்ல. அங்கே பெட்ரோல், எரிவாயு போன்ற எரிபொருட்கள் கூட கிடைக்கின்றன. காலனிய காலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்திய கொள்ளை, அனைத்து வளங்களையும் கொண்ட இன்று கொங்கோ வறுமையான நாடுகளில் ஒன்றாக இருப்பதற்கு காரணம். கொங்கோவின் பொருளாதாரம் முழுவதும் ஏற்றுமதி செய்வதற்காகவே காலனிய எஜமானர்களால் ஏற்படுத்தப்பட்டது. இதைவிட இன்றைய காலகட்டத்தில் வருடக்கணக்காக நிலவும் ஆராஜக சூழ்நிலையும், ஆட்சியாளர்களின் தவறானான நிர்வாகமும் பிற காரணங்கள்.

30 ஜூன் 1960 ம் ஆண்டு, கொங்கோவின் சுதந்திர தின விழாவிற்கு சமூகமளித்திருந்த பெல்ஜிய அரசர், லெயோபோல்ட்டின் மகன் போதுவ, தனது "புத்திக்கூர்மையான தந்தை கொங்கோ மக்களை நாகரீகப் படுத்தும் சீரிய பணிக்காக, பெல்ஜியத்தின் சிறந்த பிரசைகளை அனுப்பி வைத்ததாக" மேடையில் புளுகிக் கொண்டிருந்தார். மேடையில் வீடிருந்த வருங்கால பிரதமர் லுமும்பாவிற்கு, அந்த பொய்களை கேட்டுக் கொண்டிருந்த முடியவில்லை. அரசரிடமிருந்த 'மைக்'கை பிடுங்கி, பெல்ஜியம் செய்த அயோக்கியத்தனங்களை நார் நாராக கிழித்தார். "மாட்சிமை தங்கிய மன்னர் பெருந்தகைக்கு" மரியாதை எதுவும் கொடுக்கவில்லை, "சகோதர, சகோதரிகளே" என்று விளித்து தனது உரையை ஆரம்பித்து, "எம்மை கறுப்பர்கள் என்பதால் சக மனிதர்களாக மதிக்காத, அடிமைகளாக வேலை வாங்கிய பெல்ஜிய காலனியாதிக்கவாதிகளிடமிருந்து, நாம் இரத்தம் சிந்தி போராடி சுதந்திரம் பெற்றோம்." என்று பலத்த கரகோஷத்திற்கிடையில் ஆற்றிய உரை பெல்ஜிய மன்னரை சினக்க வைத்தது. லுமும்பாவை பழிவாங்க வேண்டுமென்று மனதிற்குள் கருவிக் கொண்டார்.

சுதந்திரமடைந்த பின்னரும், கொங்கோ இராணுவத்தின் இடைத்தர, மேல்நிலை அதிகாரிகள் யாவரும் பெல்ஜிய வெள்ளையர்களாக இருந்தனர். அவர்கள் புதிய அரசிற்கெதிராக கலகம் செய்தனர். இதற்கிடையே இயற்கை வளம் நிறைந்த கதங்கா மாகாணம், பெல்ஜிய தூண்டுதலால், தனிநாடாக பிரிவதாக அறிவித்தது. வெள்ளையின பெல்ஜிய படைகள் அதற்கு பாதுகாப்பு கொடுத்தனர். சுதந்திரமடைந்து ஐந்து நாட்களில் இந்த கலகம் ஆரம்பித்து விட்டது குறிப்பிடத்தக்கது. லுமும்பா அமெரிக்க தூதுவரை சந்தித்து, அமெரிக்க படைகளை அனுப்பி உதவுமாறு கோரினார். தூதுவர் மறுக்கவே லுமும்பா ரஷ்யர்களிடம் உதவி கேட்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. உடனே இது தான் சாட்டென்று, "லுமும்பா ஒரு கம்யூனிஸ்ட்" என்று அமெரிக்கா முத்திரை குத்தி விட்டது.

இறுதியில் ஐ.நா. மன்றத்தில் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஐ.நா. சமாதானப்படை வருவதற்கு ஒத்துக் கொண்டது. ஆனால் அதுவே லுமும்பாவின் மரணத்திற்கு இட்டுச் சென்ற தவறான முடிவாக இருந்தது. ஐ.நா.சமாதானப்படை இன்று மட்டுமல்ல, அன்றும் ஏகாதிபத்திய நலன்களுக்காக தான் செயற்பட்டது. சி.ஐ.ஏ. தூண்டுதலின் பேரில் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய இராணுவத் தளபதி மொபுட்டுவின் படையினர் ஸ்டான்லிவீல் (கிசன்கானி) என்ற நகரிற்கு போகும் வழியில் லுமும்பாவை கைது செய்தனர். நடந்த சம்பவத்தை கானவை சேர்ந்த ஐ.நா.சமாதானப்படையினர் கண்ட போதும், அவர்களைத் தலையிட வேண்டாம் என்று மேலிடத்து உத்தரவு வந்தது. மொபுட்டு லுமும்பாவை கைது செய்து கதங்கா பிரிவினைவாதிகளின் கைகளில் ஒப்படைத்தார். அங்கே வைத்து பெல்ஜிய அதிகாரிகளின் முன்னால் சித்திரவதை செய்யப்பட்டு, இறுதியில் நஞ்சு கொடுத்து கொலை செய்யப்பட்ட லுமும்பாவின் உடல், துண்டு துண்டாக வெட்டப்பட்டு திராவகத்திற்குள் கரைக்கப்பட்டது. அமெரிக்காவும், பெல்ஜியமும் சேர்ந்து தமது எதிரியை இப்படித்தான் தீர்த்துக் கட்டினார்கள். ஏகாதிபத்தியத்தின் கொடூர முகத்தை அம்பலப்படுத்திய லுமும்பாவின் மரணம் உலகெங்கும் அமெரிக்க எதிர்ப்பு அலையை தோற்றுவித்தது. ஆசிய-ஆப்பிரிக்க நாடுகள் ஐ.நா.மன்றத்தில் தமது கண்டனங்களை கொட்டினர். சோவியத் யூனியன் மொஸ்கோவில் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு லுமும்பாவின் பெயரிட்டது.

அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவரால், பெல்ஜிய மன்னன் போதுவாவினால் வெறுக்கப்பட்ட லுமும்பாவை, கொலை செய்வதற்கான காரணம் என்ன? கொங்கோவில் கொலைக்கான சதித்திட்டங்களை நிறைவேற்றிய சி.ஐ.ஏ. அதிகாரி டெவ்லின் "Congo - Fighting the Cold War in a Hot Zone" என்ற நூலில் வாக்குமூலம் கொடுக்கிறார். அதில் அவர், லுமும்பா கம்யூனிஸ்ட் இல்லை என்பது ஏற்கனவே தெரியும் என்றும், கம்யூனிசத்தை எதிர்த்து போரிடுவது என்பது ஒரு சாட்டு, என ஒப்புக் கொள்கிறார். அப்படியானால்? "அன்றைக்கு சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டிற்குள் கொங்கோ வந்திருக்குமேயானால், 'கோபால்ட்' சுரங்கங்களும் அவர்களது கைகளுக்கு போயிருக்கும். ஏவுகணை, பிற ஆயுதங்கள் தயாரிப்பதற்கு கோபால்ட் அத்தியாவசியமான பொருள். அது உலகில் சோவியத் யூனியனிலும், கொங்கோவிலும் மட்டுமே இருந்தது. ஆகவே அமெரிக்கா கொங்கோவை கைப்பற்றியிரா விட்டால், சர்வதேச ஆயுதப்போட்டியில் பின்தள்ளப் பட்டிருக்கும்."
உண்மை தான். ஆனால், ஆப்பிரிக்காவின் வளாங்களை அதற்கு முன்னரே உலக மேலாதிக்க நோக்கத்திற்காக ஏகாதிபத்தியம் பயன்படுத்த தொடங்கி விட்டது. கொங்கோவில் இருந்து எடுக்கப்பட்ட யுரேனியத்தைக் கொண்டு செய்த அணுகுண்டு தான் ஹிரோஷிமா, நாகசாகி மீது போடப்பட்டது. கொங்கோவின் வைரங்களை வைத்து தான் ஆங்கிலேய-அமெரிக்க கூட்டணி இரண்டாம் உலகப்போரில் வெற்றியீட்டின. இன்றும் கூட, கணணி, மொபைல் தொலைபேசி 'சிப்' பிற்கு பயன்படும் மூலப்பொருளான கொல்த்தான் கொங்கோவில் மட்டுமே அதிகமாக காணப்படுகின்றது.

இன்றைய ஆப்பிரிக்காவில் வளங்களை, பன்னாட்டு நிறுவனங்கள் கேள்வி கேட்க யாருமின்றி கொள்ளையடிக்கின்றன. ஆயுதமேந்தி இருப்பது, அரசபடையாக இருந்தாலும், ஆயுதக் குழுவாக இருந்தாலும், இந்த வளங்களை யார் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்பதிலே தான் போட்டியிடுகின்றன. "ஆப்பிரிக்கா இப்படியே இருந்தால் அங்கே புரட்சி ஏற்பட இன்னும் நூறு வருடங்களாகும்." என்று தனது டைரிக் குறிப்பில் எழுதிவைத்தார் சே குவேரா. அவர் கொங்கோவில் தங்கியிருந்து புரட்சியை ஏற்படுத்த முயன்று தோற்றுப்போய் திரும்பியவர். இப்போது ஒரு புதிய திருப்பம். இஸ்லாமிய மீட்பிற்காக போராடுவதாக சொல்லும் குழுக்கள் வளர்ந்து வருகின்றன. அதைக் காட்டி பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுவதாக சொல்கிறது அமெரிக்கா. உண்மையில் கிறிஸ்தவ ஐரோப்பியர்கள் "இருண்ட கண்டத்தை" கண்டு பிடிப்பதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னமே, இஸ்லாமிய அரேபியா அதனை கண்டுபிடித்திருந்தது.

"ஆப்பிரிக்க கண்டத்தில் கிறிஸ்தவ மதம் நுழையும் வரை, அங்கே காட்டுமிராண்டி கால இயற்கை வழிபாடு மட்டுமே பரவலாக இருந்ததாக," வெள்ளையர்கள் இன்னொரு கட்டுக்கதையை பரப்பி வந்திருக்கிறார்கள். ஐரோப்பாவில் இருந்து கத்தோலிக்க/ புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மதம் இறக்குமதி செய்யப்படுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, எத்தியோப்பியர்கள் ஆதி கால கிறிஸ்தவத்தை பின்பற்றி வருகின்றனர். இஸ்லாம் செனகல் முதல் தான்சானியா வரை பரவி இருந்தது. வளர்ச்சியடைந்த ஆப்பிரிக்க- இஸ்லாமிய அரசுகள் தோன்றியிருந்தன. ஒரு காலத்தில் மாலி நாட்டில் இருந்த, திம்புக்டு இஸ்லாமிய இராச்சியத்தின் மன்னன், மெக்கா நோக்கி புனிதப்பயணம் சென்ற போது, எகிப்திய சந்தையில் தங்கத்தில் விலை வேகமாக சரியும் அளவிற்கு, செல்வம் படைத்திருந்ததாக வரலாற்றுக் கதை ஒன்றுண்டு.
---(தொடரும்)---

4/16/09

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1

"ஆப்பிரிக்கா" என்றவுடன், அபிவிருத்தியின்மை, தொற்று நோய், பட்டினிச்சாவு, ஏழ்மை இவற்றிற்கு ஒத்த கருத்துள்ள சொல்லாக பலரால் புரிந்து கொள்ளப்படுகின்றது. உண்மையில் அவ்வாறான கருத்துகள் வேண்டுமென்றே மேற்குலக ஊடகங்களால் பரப்படுகின்றன. "இருண்ட கண்டம்" என்று நிறவாதம் சூட்டிய பெயர், அன்றாட பேச்சு வழக்காகி விட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆப்பிரிக்கா பற்றிய தவறான கருத்துகளை, தமிழ் மக்கள் மத்தியிலும் பொதுக்கருத்துகளாக போதித்தது. இதனால் ஒரு ஐரோப்பியரின் பார்வையிலேயே, நாமும் ஆப்பிரிக்காவை பார்க்க கற்றுக்கொண்டுள்ளோம்.

உலகம் முழுவதும் தமது காலனிகளாக்கிக் கொண்டிருந்த ஐரோப்பிய வல்லரசுகள், ஆப்பிரிக்காவை மிக தாமதமாகத் தான், அதாவது 19 ம் நூற்றாண்டில் "கண்டுபிடித்தன". ஐரோப்பியருக்கு தான் ஆப்பிரிக்காவை கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. ஆப்பிரிக்க மக்கள் அதனை எப்போதோ கண்டுபிடித்து விட்டார்கள். அன்றைய ஐரோப்பியர்கள், அரபு மொழிபேசும் வட ஆப்பிரிக்க பகுதியை மட்டுமே தெரிந்து வைத்திருந்தனர். பைபிளை எழுதிய ஆண்டவருக்கே எகிப்திற்கு அப்பால் இருந்த பிரமாண்டமான நிலப்பரப்பு பற்றி தெரிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமானது!

ஆசியாவிற்கும், ஐரோப்பாவிற்கும் இடையிலான சர்வதேச வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்திய அரேபியர்களுடன் போர் மூண்ட பிறகு தான், மாற்றுக் கடல்வழி பாதை தேடிய ஐரோப்பிய(போர்த்துகீசிய) மாலுமிகள் ஆப்பிரிக்காவை தற்செயலாக கண்டுபிடித்தார்கள். மேற்கு ஆப்பிரிக்க கரை நாடுகளான, செனெகல், கானா போன்ற நாடுகளில் இருந்து அடிமைகளாக்கப்பட்ட மக்களை, புதிதாக கண்டு பிடித்த அமெரிக்க கண்டத்திற்கு ஏற்றுமதி செய்யும் வாணிபம் ஆரம்பமாகியது. ஆரம்பத்தில் ஸ்பானிய, போர்த்துகீசிய அடிமை வியாபாரிகளின் ஏகபோகமாக இருந்த வர்த்தகத்தில், விரைவில் ஒல்லாந்து, ஆங்கிலேய வியாபாரிகளும் ஈடுபட்டனர்.

ஐரோப்பியருக்கு முன்னர் அரேபியர்கள் அடிமை வாணிபத்தில் ஈடுபட்டிருந்த வரலாறு உண்மை தான். ஆனால் அப்போது எல்லாம் பஞ்சம் அல்லது ஏழ்மை காரணமாக விற்கப்படும் அடிமைகளை, வீட்டு வேலைகளுக்காக வைத்துக் கொள்ளும் வழக்கமே நிலவியது. இனமுரண்பாடுகள் இருந்த ஆப்பிரிக்காவில், அடிமைகளை சக ஆப்பிரிக்கர்களே பிடித்துக் கொடுத்தனர். அதனால் அவர்களும் லாபமீட்டினர். இதனை ஐரோப்பியர்கள் வர்த்தக நலன்களுக்காக பயன்படுத்திக் கொண்டனர். இனக்குழுச் சமுதாயங்கள் பரவலாக காணப்பட்ட ஆப்பிரிக்க கண்டத்தில், ஒரு இனம் அயலில் உள்ள பிற இனங்கள் மீது போர் தொடுப்பதும், வென்றவர்கள் தோற்ற இனத்தை சேர்ந்தவர்களை அடிமைகளாக்குவதும் வழமையாக நடந்து வந்தது. போர் தொடுக்கும் இனத்திற்கு ஐரோப்பியர்கள் ஆயுதங்கள் வழங்கி, அடிமை வேட்டையை இலகுவாக்கினர். இவ்வாறு அன்று அடிமைகளை பிடித்து விற்ற பல இனங்கள், இன்றும் ஆப்பிரிக்க நாடுகளின் ஆளும் வர்க்கங்களாக உள்ளன. உதாரணத்திற்கு கானாவை சேர்ந்த "அஷாந்தி" அரச பரம்பரை. இவர்கள் தமது முன்னூறு ஆண்டு கால "பாரம்பரியத்தை" பேணுவதற்காக, இன்றுவரை ஒல்லாந்து அரச குடும்பத்துடன் நட்புறவை பேணி வருகின்றனர்.

அந்தக் காலத்தில் அட்லாண்டிக் சமுத்திரத்தில் கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருந்த கப்பல்கள், பல மடங்கு லாபம் சம்பாத்தித்தன. ஐரோப்பாவில் இருந்து ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், அவற்றை ஆப்பிரிக்கர்களுக்கு விற்பனை செய்து, அடிமைகளை வாங்கிக் கொள்ளும். அமெரிக்க கண்டத்தில் உள்ள பெருந்தோட்டங்களுக்கு அடிமைகளை விற்பனை செய்து விட்டு, அங்கிருந்து தங்கம், வெள்ளி போன்றவற்றை ஏற்றிக் கொண்டு வந்து ஐரோப்பாவில் விற்பனை செய்வார்கள். இதிலே ஆங்கிலேயர்கள் மிக மலினமான உத்திகளை கையாண்டனர். நடுக்கடலில் வைத்து பிறநாட்டு வணிகக் கப்பலை கொள்ளையடித்தனர். இவ்வாறு கொள்ளையடித்த தங்கத்தை மூலதனமாகக் கொண்டு இங்கிலாந்தின் தொழிலகங்கள் பல தோன்றின.

ஆப்பிரிக்க அடிமைகளின் உழைப்பை சுரண்டி அமெரிக்கா பணக்கார நாடானது. அடிமை வியாபாரத்தினால் மேற்கு ஐரோப்பியர்கள் செல்வந்தர்களானார்கள் என்று சுருக்கமாக கூறலாம். இருப்பினும் தாம் சேர்த்த செல்வத்தில் ஒரு பகுதியை எனினும் நஷ்டஈடாக ஆப்பிரிக்க வளர்முக நாடுகளுக்கு கொடுக்க இதுவரை யாரும் முன்வரவில்லை. அதற்கு மாறாக, அபிவிருத்திக்காக என்று சொல்லி, வட்டிக்கு கடன் கொடுத்து மேலும் மேலும் செல்வம் சேர்த்து வருகின்றனர். இதனால் மேற்குலகம் செய்வதையெல்லாம், மறுகாலனியாதிக்க சதிகளாக இன்று ஆப்பிரிக்க மக்கள் சந்தேகிக்கின்றனர்.

ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் நடந்த யூத இனப்படுகொலைக்கு நஷ்டஈடாக, வருடந்தோறும் ஒரு தொகைப் பணத்தை ஜெர்மனி இஸ்ரேலுக்கு கொடுத்து வருகின்றது. இஸ்ரேல் பணக்கார நாடாக இருப்பதற்கு இந்த நஷ்டஈடு ஒரு காரணம். அதைப்பார்த்து, முன்னாள் காலனியாதிக்க நாடுகள் நஷ்டஈடு வழங்கவேண்டுமென்று ஆப்பிரிக்க நாடுகள் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலத்தில், அண்மையில் இத்தாலி மட்டுமே லிபியாவிற்கு காலனிய கால நஷ்டஈடு வழங்க முன்வந்துள்ளது. லிபிய தலைவர் கடாபியின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்பட்டாலும், ஆப்பிரிக்க அகதிகளை வரவிடாமல் தடுப்பதில் இத்தாலிக்கு உள்ள கரிசனை இங்கே கவனிக்கத்தக்கது.

ஆப்பிரிக்க கண்டத்தை பட்டினிச்சாவு நிறைந்த வறண்ட பூமியாக ஒருபக்கம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் ஐரோப்பா தனது உணவுத் தேவைகளுக்காக ஆப்பிரிக்காவில் தங்கி இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மீன்பிடி வள்ளங்கள், மேற்கு ஆப்பிரிக்க கடல்களில் கேட்பாரற்று மீன்களை அள்ளிச் செல்கின்றன. தினசரி மரக்கறிகளையும், பழங்களையும் ஆப்பிரிக்கா ஏற்றுமதி செய்வதை நிறுத்தினால், ஐரோப்பியர்கள் உருளைக்கிழங்கையும், ஆப்பிளையும் தான் சாப்பிட வேண்டி இருக்கும். ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் முரண்பாடுகளின் பூமி தான். பாலைவன வளைகுடா நாடுகள், சூடானில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு, தமது மக்களுக்கு உணவிட்டு வருகின்றனர். அதேநேரம் சூடான் டார்பூர் பிராந்திய மக்கள், அன்றாட உணவுக்காக தொண்டு நிறுவனங்களிடம் கையேந்துகின்றனர்.

நைஜீரியாவும், அங்கோலாவும் பிரதான எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகள். ஆனால் அந்நாடுகளில் பெரும்பான்மை மக்கள் ஏழைகளாக அல்லலுறுகின்றனர். உலகில் விலை உயர்ந்த விற்பனைப் பண்டங்களில் ஒன்றான எண்ணை விற்று வரும் லாபம், அதிகாரத்தில் உள்ள குறிப்பிட்ட சமூகத்தின் கைகளில் போய்ச் சேருகின்றது. ஆப்பிரிக்க நாடுகளில் எல்லாம் இந்த ஏற்றத்தாழ்வை காணலாம். "அதிகாரத்திற்கு வந்தால், எமது நாட்டு வளங்களை அந்நியநாடுகளுக்கு விற்று பணக்காரனாகலாம்." என்ற எளிய தத்துவமே பல ஆயுதக்குழுக்கள் உருவாக காரணமாக உள்ளன. போர்வீரனாக ஆயுதம் ஏந்த வருபவர்கள் கூட அதிக ஊதியம் எதிர்பார்ப்பதால் தான், யுத்தபிரபுக்கள் குழந்தைப் போராளிகளை சேர்க்கின்றனர்.

சூடானில் குழந்தைப்போராளிகளை சேர்த்து வைத்திருக்கும் SPLA இயக்கத்திற்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதை, எனது நண்பர்களான முன்னாள் SPLA உறுப்பினர்கள் சிலர் ஒப்புக் கொண்டனர். அதே நேரம் அப்படி உதவி பெறுவதில் என்ன தவறு? என்றும் கேட்டனர். சில வருடங்களுக்கு முன்னர் எண்ணை கண்டுபிடிக்கப்பட்ட சாட் நாட்டை சேர்ந்த, தற்போது புகலிடத்தில் வாழும், எனது நண்பரொருவர், அரசுக்கெதிரான ஆயுதக்கிளர்ச்சி திட்டத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். ஒரு அமெரிக்க பக்தரான அந்த நண்பர், எதிர்பார்த்த கிளர்ச்சி வெற்றி பெற்றிருந்தால், எண்ணைக் கிணறுகளை அமெரிக்க கம்பெனிகளுக்கு தாரை வார்த்திருப்பார் என்பதை நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

மேற்குலகில் பிரச்சாரம் செய்யப்படுவதைப் போல, ஆப்பிரிக்காவின் பிரச்சினைகளை அங்கே காளான்கள் போல முளைத்துள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தீர்த்துவிடப் போவதில்லை. அல்லது மத நம்பிக்கையாளர்கள் நினைப்பது போல, இன்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் கிறிஸ்தவ மதம், மக்களை வறுமையில் இருந்து விடுதலை செய்யப்போவதில்லை. உலகில் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகள் எவை என்று பட்டியலிட்ட போது, ஏழைகளாக இருந்தாலும் மத நம்பிக்கை என்ற மாயைக்குள் வாழும் கானா, நைஜீரிய மக்கள் முன்னணியில் நின்றனர். ஆப்பிரிக்காவை வளம்படுத்த மக்களுக்கு தொழில்நுட்ப அறிவு தேவை. அதைக் கொடுக்க மேற்குலகம் மறுத்து வருகின்றது. இப்போதும் காலனிய காலத்தில் நடந்தது போல, மலிவு விலையில் மூலப்பொருட்களை வாங்கிக் கொண்டு, அதிக விலையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்கின்றன.

"நமது நாடு இயற்கை வளம் நிறைந்தது. அது தான் எமது சாபக்கேடு." என்று பல ஆப்பிரிக்கர்கள் குமுறுகின்றனர். வளங்களை சூறையாட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் போட்டியிடுகின்றன. ஆப்பிரிக்க தலைவர்கள் உள்ளூர் தரகு முதலாளிகளாக செயற்படுகின்றனர். ஆப்பிரிக்க கண்டத்தில் நடக்கும் இனவெறிப் போர்கள் (உ+ம்: ருவாண்டா), மதவெறிப் போர்கள் (உ+ம்: சூடான்), சித்தாந்தப் போர்கள் (உ+ம்: அங்கோலா); இவை எல்லாமே வளங்களை யார் கைப்பற்றுவது என்ற போட்டிக்கு மேல் போடப்பட்டிருக்கும் மாயத்திரைகள். இந்தப் போர்களினால் பாதிக்கப்படுவது, வழமை போல அப்பாவி மக்கள் தான். ஓரளவு வசதி உள்ளவர்கள், இன்னல்களில் இருந்து தப்புவதற்காக ஐரோப்பா செல்ல நினைத்தால், அங்கே ஐரோப்பிய ஒன்றியம் என்ற கடுமையாக பாதுகாக்கப்பட்ட கோட்டை மதில்கள் தடுக்கின்றன.

ஆப்பிரிக்காவின் பிரச்சினையை பிராந்திய ஒருமைப்பாட்டால் தீர்க்கலாம், அல்லது அந்த பாதையில் எடுத்து வைக்கப்படும் முதல் அடி என்று, பல சமூக ஆர்வலர்கள் நம்புகின்றனர். பலர் ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பை ஒத்த ஆப்பிரிக்க ஒன்றியத்தை, தமது நீண்ட கால கனவாக காண்கின்றனர். இது குறித்த மகாநாடுகள் நடைபெறும் போதெல்லாம், "மேற்குலகில் கையேந்தும் பிச்சைக்கார நாடுகள் ஒன்று கூடி எதை சாதிக்கப் போகிறார்கள்?" என்று சில மேலை நாட்டு ஊடகவியலாளர்கள் ஏளனமாக குறிப்பிடுகின்றனர். ஐக்கிய ஆப்பிரிக்க கூட்டமைப்பிற்கு பாடுபடும் கடாபி இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது: "பல ஆப்பிரிக்க நாடுகளும், இனங்களும் பரமவைரிகளாக தமக்குள் மோதிக் கொள்கின்றனர் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. நூறாண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பிய கண்டமும் இதே நிலைமையில் தான் இருந்தது. ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் அதிகரிக்கும் போது, மேற்குலகில் கையேந்த வேண்டிய தேவை இருக்காது."

ஆப்பிரிக்க ஒற்றுமை நடைமுறைச் சாத்தியமா? தனக்கு காலனிய மனோபாவம் இருப்பதாக பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் பிரான்ஸ் முதல், முன்பு பனிப்போர் இப்போது சுதந்திர வர்த்தகம் என்ற சாட்டுகளை கூறி தலையீடு செய்யும் அமெரிக்கா வரை, தொலை தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் அரசியலை இன்னும் கைவிடவில்லை. ஆப்பிரிக்க நாடுகளில் ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் எதோ ஒரு வல்லரசின் கைப்பொம்மையாக இருப்பதை பார்க்கலாம். உலகம் முழுவதும் ஜனநாயகத்தை போதிக்கும் மேற்குலகம், ஆப்பிரிக்க நாடுகளில் சர்வாதிகாரிகளை ஆதரித்து வருகின்றது. மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் கூட பதவியில் இருந்து பலாத்காரமாக அகற்றப்பட்டனர். அந்த இடத்தில் கொடுங்கோல் சர்வாதிகாரிகளை நியமித்தனர்.

காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுகளில், ஜனநாயகத்தை கொன்று சர்வாதிகாரத்தை அரியணை ஏற்றிய மேற்குலக சதிகள், இயற்கை வளம் நிறைந்த கொங்கோவில் இருந்து ஆரம்பமாகியது. 1960 ல் பெல்ஜியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற கொங்கோவின் மக்கள் மனங்கவர்ந்த தேசியவாதத் தலைவர் லுமும்பாவை நஞ்சு கொடுத்து கொலை செய்யுமாறு, அமெரிக்காவில் இருந்து உத்தரவு வந்தது. அந்த கொலை பாதகச் செயலை செய்யச் சொன்னது யார்? அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவர்!

---- (தொடரும்) ----

1/20/09

இஸ்ரேலை காக்கும் பைபிள் கனவுகள்


"இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவு குறித்து வியக்கும் நீங்கள், அதற்குக் காரணம் அமெரிக்காவில் இருக்கும் யூத நலன் காக்கும் சங்கங்கள் என்று நினைக்கிறீர்கள். உண்மையில் எமக்கு ஆதரவாக இருப்பது கிறிஸ்தவ நலன்காக்கும் சங்கள்கள்தான்." - அமெரிக்காவில் பத்திரிகை நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாகு.

மேற்படி கூற்றில் உண்மையில்லாமல் இல்லை. அமெரிக்காவில் இயங்கி வரும் பல்வேறு புரட்டஸ்தாந்து , பெந்தகொஸ்தே பிரிவுகளைச் சேர்ந்த மதவாத அமைப்புகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதும் நிதி திரட்டுவதும் இரகசியமல்ல. இந்தச் செய்திகள் மறுபக்கத்தில் அமெரிக்காவில் கிறிஸ்தவ மத அடிப்படைவாத அமைப்புகள் தற்போது அரசியலிலும் ஈடுபட்டுவருவதை மெய்ப்பிக்கின்றன.

சர்வதேச அரங்கில் மீண்டும் சூடுபிடித்துள்ள இஸ்ரேலிய-பாலஸ்தீன பிரச்சினையில் இந்த கிறிஸ்தவ அமைப்புகள் வெளிப்படையாகவே இஸ்ரேலின் பக்கம் நிற்கின்றன. அதிலும் அவர்கள் தீவிரமான அரசியல் நிலையெடுத்துள்ளனர். தற்போது அமெரிக்க அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட சமாதான வரைபடத்திற்கு உலக நாடுகள் மத்தியில் ஆதரவு எழுந்த போதும் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் மத்தியில் எதிர்ப்புக் கிளர்ந்துள்ளது. இஸ்லாமியர் மனதைப்புண்படுத்தும்படி பேசி சர்ச்சையை உருவாக்கிய பாதிரியார் பேட் றொபேர்ட்சன் போன்றவர்கள் தாம் இந்தச் சமாதானத் திட்டத்தை எதிர்ப்பதாக பகிரங்கமாகக் கூறிவருவதுடன், சமாதானத்திற்கெதிராக கையெழுத்துகள் வாங்கி அமெரிக்க அரசிற்கு அனுப்பி வருகின்றனர். மொத்த அமெரிக்க வாக்காளர்களில் காற்பகுதியினர் இந்தக் கிறிஸ்தவ அமைப்புகள் சொல்வதைக் கேட்பவர்களாகவே உள்ளனர். பாலஸ்தீன எழுச்சிப்போராட்மான 'இன்டிஃபதா' வின் போது கிறிஸ்தவ மதகுழுக்கள் இஸ்ரேலுக்கான தமது ஆதரவைப் பெருக்கிக் கொண்டுள்ளனர்.

இவர்கள் இஸ்ரேலிய ஆதரவுப் பிரச்சாரத்துடன் நில்லாது செயலிலும் இறங்கியுள்ளனர். இஸ்ரேலில் (ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலப்பகுதிகளில்) சென்று குடியேறும் யூதர்களுக்கு கொடுப்பதற்கென 20 மில்லியன் டொலர்களை அமெரிக்க கிறிஸ்தவ மதகுழுவொன்று திரட்டியுள்ளது. இந்தப்பணம் குடியேற்றக்காரர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க, வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட என வழங்கப்படுகின்றது. இது இஸ்ரேலிய அரசு வழங்கும் உதவித்தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாகும். மேலும் இரண்டு பிரபலமான பெந்தகொஸ்தே, புரட்டஸ்தாந்து அமைப்புகள் இணைந்து 'குடியேற்றக்காரரைத் தத்தெடுக்கும் திட்டத்தை' அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தத் திட்டத்தின்படி 14 ஆயிரம் குடியேற்றக்காரருக்கு தலா 55 டொலர் வீதம் வழங்கப்பட இருக்கிறது.

அமெரிக்காவில் இயங்கிவரும் "இஸ்லாமியர் புனர்வாழ்வுக் கழகம்" போன்ற அமைப்புகள் திரட்டும் பணம் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆயுதம் வாங்கப் போய்ச் சேருவதாகக் கூறி இவ்வமைப்புகளுக்கு அமெரிக்க அரசினால் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அல்-கைதாவுடன் தொடர்பிருப்பதாகக் கூறி சில அமைப்புகள் தடைசெய்யப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது அரசாங்கத்திற்கு இன்றுவரை இயலவில்லை. பொஸ்னிய, செச்செனிய போர்களின்போது சில இஸ்லாமிய உதவிநிறுவனங்கள் போராளிகளுக்கும் உதவி செய்தமை குறித்த செய்திகள் வந்துள்ளன. ஆனால் பொஸ்னியாவிலும், செச்செனியாவிலும் என்ன நடந்தது என்பது பற்றி அமெரிக்க அரசிற்கு அக்றையில்லை. அதுபோல பாலஸ்தீனப் பிரதேசத்தில் தோளில் இயந்திரத் துப்பாக்கியுடன் திரியும் சட்டவிரோத யூதக் குடியேற்றக்காரர்களுக்கு கிறிஸ்தவ அமைப்புகள் வழங்கும் உதவி குறித்தும் அமெரிக்க அரசுக்கு அக்கறையில்லை.

யூதக் குடியேற்றங்களுக்கு அமெரிக்காவிலிருந்து எவ்வளவு பணம் வருகிறது என்பது தெரியாது. நூற்றுக்கணக்கான கிறிஸ்தவச் சபைகள் யூதக் குடியேற்றக்காரர்களுக்கான மருந்துகள், பாடசாலை உபகரணங்கள் , குண்டு துளைக்காத பேரூந்து வண்டிகள் என்பன வாங்குவதற்கெனக்கூறி நன்கொடையளிக்கின்றன. பல தமிழ் கிறிஸ்தவர்கள் அங்கம் வகிக்கும் பில்லி கிரஹமின் (அமெரிக்காவில் பெரிய கோடீஸ்வரன்) "Safe Harbour International" என்ற கிறிஸ்தவச் சபை தென்சூடான் கிளர்ச்சிக் குழுவான SPLA க்கு உதவி வழங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிறிஸ்தவச் சபைக்கும் இஸ்ரேலுக்குமான தொடர்புகள் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் இஸ்ரேல் சார்பு அரசியல் நிலைப்பாடு பகிரங்கமாகத் தெரிந்த விடயம்.

"கிறிஸ்தவ- சியோனிஸ்டுகள்" என அழைக்கப்படும் இந்த கிறிஸ்தவ மதவாதக்குழுக்கள் இஸ்ரேலை ஆதரிப்பதற்கான காரணம் என்ன ? "பைபிள் எனது சமாதான வரைபடம்" எனக்கூறுகின்றன சமாதானப் பேச்சுவார்தைகளை எதிர்க்கும் கிறிஸ்தவக் குழுக்கள். அவர்கள் பைபிளில் உள்ளதை அப்படியே நம்புகிறார்கள். பைபிளில் கூறியுள்ளபடி ஆண்டவரால் வாக்குறுதியளிக்கப்பட்ட புனித நிலத்திற்கு யூதர்கள் வந்து சேர்ந்து விட்டார்கள். இனிக் கர்த்தரின் வருகைக்காக அவர்களின் இருப்பை நிச்சயப்படுத்த வேண்டிய கடமை தமக்குள்ளதாகக் கருதுகின்றனர். "சமாரியாவில் மீண்டும் நீங்கள் திராட்சை மரங்களை நடுவீர்கள் (ஜெரேமியா) " என்ற கூற்று பைபிளில் வருகிறது என்பதற்காக, சமாரியா (இன்று மேற்குக் கரை என்றழைக்கப்படும் பாலஸ்தீனப் பகுதி) சென்ற கிறிஸ்தவர்கள் அங்கே யூதக்குடியேற்றங்களில் திராட்சைக் கன்றுகளை நட்டனர். இவ்வாறு பைபிள்தான் எமது வழிகாட்டி, சட்டநூல் எல்லாமே அதன்படிவாழ்வதுதான் சிறந்தது என்று நம்பும் இவர்களை "கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள்" என அழைப்பதே பொருத்தம்.

யூதக் குடியேற்றக்காரரும் பைபிளின்படி இந்த நிலம் தமக்கு உரித்தானதென நம்புகின்றனர். பைபிளின் பழைய ஏற்பாடு யூத மதத்தவருக்குரியது. இதனை அவர்கள் "தோரா" என அழைப்பர். 50 ஆண்டுகளுக்கு முன்பு இன்று இஸ்ரேல் என்று அழைக்கப்படும் நாடு, பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்டது. அப்போது அங்கே வாழ்ந்த யூதர்கள் மிகச் சிறுபான்மையினர். பிற்காலத்தில் ஐரோப்பாவில் இருந்து வந்த யூதர்களே இன்று இஸ்ரேலியப் பெரும்பான்மைச் சமூகமாக வாழ்கின்றனர். இவர்கள் வாழும் பெருமளவு நிலங்கள் அங்கே காலங்காலமாக வாழ்ந்து வந்த பாலஸ்தீன அரபுக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டவை. ஆனால் இந்த அத்துமீறலை பைபிளைக் கொண்டு நியாயப்படுத்துகின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமது மூதாதையர் விட்டுச் சென்ற இடத்திற்கு தாம் மீண்டும் வந்துவிட்டனராம். ஆகவே இஸ்ரேலின் சுதந்திரத்திற்கு முன்பு இடம்பெற்ற போர் பாலஸ்தீன மக்கள் மீதான பயங்கரவாத வன்முறை (அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசே இதனைக் கூறியது) சொத்துகள் சூறையாடல் எல்லாமே பைபிளின் அடிப்படையில் நியாயமானவை. இதனைத்தான் 1967 ன் பின்பு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலங்களில் குடியேறியுள்ள யூதர்கள் தொடர்கின்றனர். இஸ்ரேலின் மேற்குப் பகுதியில் வாழும் யூதர்களில் பலர் மதசார்பற்ற ஐரோப்பியக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள். இதற்கு மாறாக பாலஸ்தீனப் பகுதிகளில் வாழும் யூதர்கள் மத நம்பிக்கையாளர்கள். உடைஉடுப்பதில், உணவுப்பழக்கத்தில் மத ஆச்சாரங்களைப் பிசகாது பின்பற்றுபவர்கள்.

சமாதான ஒப்பந்தப்பிரகாரம் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை இஸ்ரேலிய அரசு வெளியேற்ற முயன்ற போது "இந்த நிலம் எமக்கு ஆண்டவரால் அளிக்கப்பட்டதனால், நாம் வெளியேறமாட்டோம்" என்று அடம் பிடித்தார்கள். குடியேற்றக்காரர்கள் அங்கே கடவுளை மட்டும் வணங்கிக் கொண்டு சும்மாவிருக்கவில்லை. யூதத் தீவிரவாதிகள் என்று அறியப்படுவோரில் பெரும்பான்மையானோர் இந்தக் குடியேற்றக்காரர்கள். வெளிப்படையாக இனவாதப் பிரச்சாரம் செய்யும் "காஹ்" என்ற அமைப்பு அமெரிக்க அரசினால் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. பலஸ்தீனப் பாடசாலைகளுக்குக் குண்டுவைத்தல், பாலஸ்தீன வயல்களை எரித்து நாசம் செய்தல் என்பன இந்த இயக்கத்தின் அறியப்பட்ட சில செயல்கள். இந்த இயக்க உறுப்பினர்களில் ஒருவன் பள்ளிவாசலுக்குள் தொழுதுகொண்டிருந்த பலஸ்தீனர்களைச் சுட்டுக்கொன்றான். பின்னர் அவன் ஒரு மனநோயாளி என அறிவித்தார்கள்.

யூதக் குடியேற்றக்காரரின் தீவிரவாத அமைப்புடனான தொடர்பு பகிரங்கமாகத் தெரிந்த பின்னும் ஒவ்வொரு குடியேற்றக்காரருக்கும் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுதபாணிக் குடியேற்றக்காரர்கள் அடிக்கடி விளையாட்டுக்காக அயலில் வாழும் பலஸ்தீனர்கள் மீது சுடும் சம்பவங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீனரின் குடியிருப்பு மீது கல்வீசுவது, தம்மைக் கடந்து போகும் பாலஸ்தீனர்களை இனவாத வார்த்தைகளைப் பிரயோகித்து இழிவுபடுத்துவது என்பன இவர்களுக்குச் சர்வசாதாரணமானவை. எந்தவொரு சர்வதேசச் செய்தி ஊடகமும் இந்தச் சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

இஸ்ரேலியர்கள் மீதான இன்னொரு குற்றச்சாட்டு பிராந்திய விஸ்தரிப்புப்பற்றியது. ஒருமுறை இஸ்ரேலின் தேசியக்கொடியைப் பாருங்கள். அதன் நடுவில் நட்சத்திரமும் மேலும் கீழுமாக இரண்டு நீலக்கோடுகளும் இருக்கும். நட்சத்திரம் முன்னொருகாலத்தில் இஸ்ரேலை ஆட்சி செய்த டேவிட் மன்னனின் அரச இலச்சினை. அப்படியானால் அந்த இரண்டு கோடுகள் ? இஸ்ரேலிய அரசு இதுபற்றித் தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை. ஹமாஸ், ஹிஸ்புள்ளா போன்ற அரபு-இஸ்லாமிய வாத விடுதலை இயக்கங்கள் விசித்திரமான விளக்கம் கொடுக்கின்றன.

அந்த இருகோடுகளில் ஒன்று ஈராக்கில் ஓடும் ஈயூப்பிரதீஸ் நதியையும் மற்றையது எகிப்திலோடும் நைல்நதியையும் குறிக்கும். ஆகவே இவற்றிற்கிடைப்பட்ட பிரதேசத்தை இஸ்ரேல் உரிமை கோருகிறது என்பது அவர்களது வாதம். பைபிளில் கூறப்பட்டுள்ள ஆபிரகாமிற்கு ஈயூப்பிரதீஸ், நைல்நதிகளுக்கடையிலான பிரதேசத்தை வழங்க ஆண்டவர் விரும்பியதாக வரும் ஒரு கூற்றைத் தவிர இதற்கு வேறு ஆதாரமில்லை. பைபிளில் கூறப்பட்டுள்ள பல இடங்கள் இன்றைய இஸ்ரேலில் மட்டுமல்லாது ஜோர்தான், எகிப்து, சிரியா, ஈராக் போன்ற நாடுகளிலும் உள்ளன. பைபிளை நம்புபவர்களுக்கு இவையெல்லாம் புனித ஸ்தலங்கள்தான்.

ஈராக் பிரச்சினையின் போது பைபிள் கதைகள் அரசியல் மயமாகின. ஈராக்கின் பழம்பெருமை வாய்ந்த புராதனப்பொருட்களின் கொள்ளைக்குப்பின்னால் இஸ்ரேலியர்கள் இருந்ததாக ஈராக்கியர்கள் தெரிவித்தனர். அதேபோல வட ஈராக்கின் குர்திய விடுதலை இயக்கங்கள் இஸ்ரேலியக் கைக்கூலிகள் என்றும் சில துருக்கியப் பத்திரிகைகள் எழுதின. எது எப்படியிருந்தபோதும் ஈராக்கில் சதாமின் வீழ்ச்சியினால் தனக்குச் சவாலாக இருந்த எதிரி இல்லாமல் போய்விட்டதாக இஸ்ரேல் மகிழ்ந்தது மட்டும் உண்மை.

ஈராக் அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் வந்தமை அரசியல் ரீதியில் இஸ்ரேலுக்கு நன்மையளிக்க வல்லது. "இஸ்ரேல் யாராலும் வெல்லமுடியாத நாடு" என்ற பைபிள் வாசகம் மெய்ப்பிக்கப்பட்டு விட்டதாக கிறிஸ்தவ சியோனிஸ்டுகள் தமது பிரச்சாரங்களில் கூறிவருகின்றனர். ஆனால் இவர்கள் எப்போதும் பைபிளில் தமக்குப் பிடித்த பகுதிகளை மட்டுமே வாசிக்கும் பழக்கமுடையவர்கள். பைபிள் ஒருபோதும் இஸ்ரேலியர்களின் செயல்களை முழுக்கமுழுக்கச் சரியென்று வாதாடவில்லை. இஸ்ரேலியர்களின் மனித உரிமை மீறல்களை கடவுள் கண்டித்துத் தண்டனை கொடுத்ததாக பலவிடங்களில் வருகிறது. சுவாரசியமாக, பாபிலோனிய (இன்று ஈராக்) மன்னனிடம் அடிபணியவைப்பேன் என்று கடவுள் கூறுவதாகவும் ஒரு வாசகம் உள்ளது. (ஜெரேமியா 27: 6-17).

யாரும் எந்த நாட்டிற்கெதிராகவும், மனித உரிமைகள் மீறல் பற்றிக் கண்டிக்கலாம். இஸ்ரேலைத் தவிர. யூத நலன் காக்கும் சங்கங்கள் இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்களை, கண்டனங்களை யூத எதிர்ப்புப் பிரச்சாரங்களாகத் திரிபுபடுத்துகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து பல ஐரோப்பியர்கள் பாலஸ்தீனப் பிரச்சினையில் இஸ்ரேலைக் கண்டிக்கத் தயங்குகின்றனர். ஏனெனில் கண்டிப்பவர்களை உடனடியாக நாஸிஸத்துடன் தொடர்புபடுத்திக் கதைக்கும் பழக்கம் யூதர்கள் மத்தியில் உள்ளது. பைபிளில் யூதர்களின் தீர்க்கதரிசி மோஸஸ் கூட இஸ்ரேலியர்கள் தமது நாட்டில் வாழும் அந்நியர்களை அடக்கக்கூடாது, சமமாக நடத்தவேண்டும் என்று கட்டளையிடுகிறார். "உன்னைப் போலவே அந்நியனையும் நேசி, நீங்கள் எகிப்தில் அந்நியர்களாக இருந்ததை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்" எனவும் பைபிள் கூற்றுண்டு. இவையெல்லாவற்றையும் இன்று பலஸ்தீனர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக அடக்கும் இஸ்ரேலியர்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

"சமாதானத் திட்டத்திற்கு ஆதரவளிக்காதீர்கள். கடவுளின் சாபத்திற்குள்ளாகாதீர்கள்" என்று அமெரிக்க மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றன கிறிஸ்தவ மத அடிப்படைவாத அமைப்புகள். அவர்களைப் பொறுத்தவரை இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலைச் செயல்கள் எல்லாம் கடவுளின் விருப்பப்படிதான் நடந்தன. இவ்வாறு கடவுளின் பெயரால் மனித உயிர்களை அழிப்பதை நியாயப்படுத்துபவர்கள் யூத-கிறிஸ்தவ மதங்களில் இருப்பதை உலகம் கண்டுகொள்வதில்லை. தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் கிறிஸ்தவர்களை பல யூதர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றனர். இருப்பினும் சில யூத மதத் தலைவர்கள் இந்த கிறிஸ்தவ-சியோனிஸ்டுகளின் உள்நோக்கங்களையிட்டு எச்சரிக்கையாக இருக்கும்படி கூறியுள்ளனர். ஏனெனில், கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் இஸ்லாமியரை மட்டுமல்ல யூதர்களையும் தமது எதிரிகளாக இனங்காண்கின்றனர். அவர்கள் ஊழிக்காலத்தின் இறுதியில் தோன்றப்போகும் யேசுக்கிறிஸ்துவுக்காகக் காத்திருக்கின்றனர். அந்த இறுதிப் போரில் யூதர்களும் அழிக்கப்பட்டு விடுவரென நம்புகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர், இஸ்ரேலுக்குள் தங்கியிருந்த அமெரிக்கக் கிறிஸ்தவத் தீவிரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். ஜெருசலேமில் இருக்கும் அல் அக்ஸா மசூதியைக் குண்டுவைத்துக் தகர்க்கத் திட்டமிட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. உலக முஸ்லீம்களுக்கு மெக்காவிற்கு அடுத்த புனித ஸ்தலமான அல் அக்ஸா தகர்க்கப்பட்டால் ஏற்படப்போகும் பயங்கர விளைவுகள் இஸ்ரேலுக்குப் பாதகமாக இருக்கும் என்பது இஸ்ரேலிய அரசுக்குத் தெரியும். கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் பைபிளில் குறிப்பிட்ட (உலக அழிவென்ற) ஊழிக்காலத்தைத் தாமே செயற்கையாக உருவாக்கத் துணிந்துவிட்டார்கள் போலும்.