8/29/08

லாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்

அது ஒரு "இரகசிய யுத்தம்." அமெரிக்க போர்விமானங்கள் தினசரி இடைவிடாது ஒன்பது வருடங்களாக லாவோசின் மீது குண்டுவீசின. லாவோசின் வரைபடத்தில் கூட குறிப்பிடப்படாத "லொங் சென்" நகர விமான நிலையம், அமெரிக்காவின் இரகசிய ஆயுத விநியோக மையமாகவும், குண்டு நிரப்பிய விமானங்கள் கிளம்பும் தளமாகவும் செயற்பட்டது. இந்த தகவல்கள் யாவும், அண்மைக்காலம் வரை அமெரிக்க அரசால் மிக இரகசியமாக பாதுகாக்கப்பட்டன.

இது நடந்தது அறுபதுகளின் இறுதியிலும், 1975 ம் ஆண்டு லாவோஸ் சுதந்திரமடையும் வரையிலும். ஆனால் அன்றைய அமெரிக்க அரசாங்கம், லாவோஸ் போர் குறித்து எதுவுமே கூறவில்லை. அதனால் சர்வதேச ஊடகங்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. வியட்நாம் போரின் நிழலில் நடந்த, லாவோஸ் போர் பற்றி சரித்திர ஆசிரியர்களும் அதிக அக்கறை கொள்ளவில்லை.
வியட்நாம், கம்போடியா போன்றே லாவோசிலும் கம்யூனிச கெரில்லாக்கள், அமெரிக்காவின் அதி நவீன இராணுவ பலத்தை எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றனர். அங்கே லாவோசிய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையினராகவும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, இன்று ஆட்சியில் உள்ள "லாவோ புரட்சிகர மக்கள் கட்சி"யின் ஆதரவு தளமாகவும் இருக்கின்றனர். அதே நேரம் இனரீதியான முரண்பாடுகளை கொண்ட, "ஹ்மொங்" என்ற மலை வாழ் பழங்குடியின மக்களை, அமெரிக்காவின் உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ., எதிர்புரட்சி சக்தியாக அணி திரட்டியது. அந்த மக்கள் செறிவாக வாழ்ந்த மலைப்பகுதி சமவெளி ஒன்றில், இயற்கை அரண்களாக மழைக்காடுகளை கொண்ட இடத்தில், சி.ஐ.ஏ. ஒரு இரகசிய விமான நிலையத்தை அமைத்தது. 1969 ம் ஆண்டு உலகின் அதிக விமானப் போக்குவரத்து நடைபெறும் இடமாக அது இருந்தது. ஆயுத விநியோகத்திற்காக சி.ஐ.ஏ. தனது பிரத்தியேக விமான நிறுவனமான "Air America" வை பயன்படுத்தியது. "லொங் சென்" என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமம், இவ்வாறு தான் நகரமாகியது.

லொங் சென் நகரில் வைத்து, ஹ்மொங் ஆயுதக்குழுக்களுக்கு அமெரிக்க தனியார் இராணுவ பயிற்சியாளர்கள், ஆயுதங்களையும் போர் பயிற்சியும் வழங்கினார். தரையில் கம்யூனிச போராளிகளை எதிர்த்து போரிட, ஹ்மொங் ஆயுதக்குழுக்களை அமெரிக்கா ஏவிவிட்ட அதேநேரம், தனது போர் விமானங்கள் மூலம் லாவோஸ் முழுவதும் வான் வழி தாக்குதல் நடத்தியது. சராசரி பத்து நிமிடத்திற்கு ஒரு தடவை, 24 மணி நேரம், நாள் தவறாமல், வருடக்கணக்காக விமானக் குண்டுவீச்சு இடைவிடாது நடந்தது. எல்லாமே மிகவும் இரகசியமாக! சுமார் இரண்டு மில்லியன் தொன் குண்டுகள், அதாவது 2 ம் உலக யுத்தத்தில் போட்டதை விட அதிகமான குண்டுகள், லாவோஸ் என்ற ஒரு நாட்டின் மீது போடப்பட்டது.

லாவோஸ் சுதந்திரம் அடைந்து, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னரும், இந்த இரகசிய யுத்தம் நீடித்தது. ஆனால் லாவோசிய இராணுவம், ஹ்மொங் ஆயுதக்குழுக்களை அடக்கி, லொங் சென் நகரையும் கைப்பற்றிய பின்னர், பெருமளவு ஹ்மொங் அகதிகள் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தனர். பிற்காலத்தில் அவர்களை ஆதரித்த அமெரிக்காவும் கைவிட்டு விட்டதால், தற்போது வெளி உலகம் தெரியாத சிறு சிறு ஆயுதக் குழுக்கள், காடுகளில் பரவிக் கிடக்கின்றனர். தற்போது உலகில் "கொம்யூனிச அபாயம்" அகன்று விட்டதாலும், லாவோஸ் அரசு வெளிநாட்டு முதலீடுகளுக்காக நட்பு பாராட்டுவதாலும், அமெரிக்காவிற்கு பழைய ஹ்மொங் நண்பர்களை தேவையில்லை என்று கழட்டி விட்டது. இதன் உச்ச கட்டமாக, கடந்த ஆண்டு அமெரிக்கா வந்த ஹ்மொங் ஆயுதக் குழுவொன்றின் தலைவர், பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
சில வருடங்களுக்கு முன்னர், ஜெர்மன் திரைப்படக் குழுவொன்று, இந்த மர்ம நகரம் பற்றியும், இரகசிய யுத்தம் பற்றியும் படம் தயாரிப்பதற்காக லாவோஸ் சென்று வந்தது. அரச படைகளினால் கைது செய்யப்படும் ஆபத்தையும் பொருட்படுத்தாது, எடுக்கப்பட்ட ‘The Most Secret Place on Earth’ என்ற திரைப்படம் இந்த வருட இறுதியில் ஐரோப்பிய நகரங்களில் காண்பிக்கப்பட இருக்கின்றது. அண்மையில் சி.ஐ.ஏ. தனது பழைய இரகசிய ஆவணங்கள் சிலவற்றை பகிரங்கப்படுத்தியது. அவற்றில் குறிப்பிடப்பட்ட பல தகவல்கள் பின்னணி ஆதாரங்களாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. படத்தை எடுத்த ஜெர்மன் இயக்குனர் மார்க் எபெர்லே, ஒரு காலத்தில் 50000 மக்கள் வாழ்ந்த லாவோசின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கிய லொங் சென் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது எவ்வாறு? என்பது ஆச்சரியத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
லாவோசில் நடந்தது அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ யுத்தமல்ல. அது ஒரு "தனியார் மயமாக்கப்பட்ட யுத்தம்". ஆயுத விநியோகத்திற்கு தனியார் விமானங்கள் வாடகைக்கு அமர்த்தப் பட்டன. சி.ஐ.ஏ.யினால் நிதி வழங்கப்பட்ட ஹ்மொங் கூலிப்படையினர், அந்த ஆயுதங்களைப் பெற்று போரிட்டனர். மர்ம நகரான லொங் சென்னின் கட்டுமானப்பணிகள் யாவும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க ஆதரவுத்தளமான ஹ்மொங் மக்களுக்கு சேவை செய்ய அரச சார்பற்ற உதவி நிறுவனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அப்படி ஒரு நிறுவனத்தில் வேலை செய்த நபர் தான் பின்னர் இந்த "இரகசிய யுத்தம்" பற்றிய தகவல்களை உலகிற்கு சொன்னார்.

லாவோஸ் உதாரணத்தை தற்போது அமெரிக்கா ஈராக்கில் பயன்படுத்தி வருகின்றது. அங்கேயும் "யுத்தம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது". யுத்தம் எப்போதும் பொதுமக்களுக்கு அழிவைத் தருகின்றது, ஆனால் அதே யுத்தம் பல வர்த்தக நிறுவனங்களுக்கு கோடி கோடியாக லாபத்தை தருகின்றது.

ஏழையின் கண்கள் என்ன விலை?

கண்கள். முட்டை பொரிந்து தாயின் அரவணைப்பில் பயந்து திறக்கும் குஞ்சுகளின் மெல்லிய கண்கள். உலகின் முடிவில்லா வண்ணக் காட்சிகளை குழம்பிய வியப்புடன் கண்டு வளரும் சிறிய கண்கள். தெரிந்த முகத்தை அடையாளம் கண்டு பழகிக்கொள்ளும் குழந்தைகளின் அழகிய கண்கள். உணர்ச்சிகளின் மாறுபாட்டிக்கேற்ப நிலை கொள்ளும் மனிதர்களின் பொருள் பொதிந்த கண்கள். மனதின் ஓட்டத்தை இனம் காட்டி மௌன மொழி பேசும் வித்தகக் கண்கள். நவீன வாழ்க்கை நுகரப்படுவதற்கு அச்சாணியாக இருக்கும் இமை மூடாத கண்கள்.
கண்களுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது இவ்வுலகம். கண்கள் உறைந்து போய் கருத்தைக் கருத்தரிப்பதற்காக நகரில் பிரம்மாண்டமாய் வளரந்து நிற்கும் விளம்பரப் பலகைகள். விழி வழித் தூண்டி உமிழ் நீர் சுரப்பதற்கு வண்ணச் சிதறலாய் இறைந்து கிடக்கும் விதவிதமான உணவு வகைகள். எதிர் பால் விழிகளை மறித்து ஆளுமையை அறிவிப்பதற்கு சரம் சரமாகத் தொங்கும் உடை வகைகள். கண்களின் நீர் வேண்டி விளம்பரங்களுக்கிடையில் கதை சொல்லும் தொலைக்காட்சியின் நிழல் வாழ்க்கை சீரியல்கள். விழிகளின் பிரமிப்பிற்காகப் பெரிய திரையில் அணிவகுக்கும் திரைப்படங்கள். கண்களின் பரபரப்பிற்காகச் செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஊடகங்களின் செய்திக் கதைகள். காதலின் துவக்கமோ, கவிதையின் இயக்கமோ, கண்களின்றி இல்லை. விழிகளுக்காகவே இவ்வுலகம். விழிகளின்றி இல்லை இவ்வுலகம்.
ஆயினும் ஏழைகளின் கண்களுக்கு இந்த படிமங்கள் எதுவுமில்லை. கழுத்தை நெறிக்கும் வாழ்வை நகர்த்திச் செல்வதற்கு ஒரு உழைப்புக் கருவியாய் மட்டும் கண்கள். எழில்மிகு உலகத்தை இந்தக் கண்கள் அனுபவிப்பதற்கு எப்போதும் வழியில்லை. ஏழ்மையுடன் முதுமையும் சேரும்போது மங்கிப்போகும் கண்கள் மிச்சமிருக்கும் வாழ்வைக் கடனே என்று கழிக்கின்றன. அந்த மங்கிய கண்களையும் இரக்கமின்றி பறித்திருக்கிறார்கள் சில சதிகாரர்கள்.
திருச்சியிலும், பெரம்பலூரிலும் இருக்கும் ஜோசப் கண் மருத்துவமனை ஒரு பிரபலமான தனியார் நிறுவனமாகும். இந்நிறுவனம் மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கத்துடன் இணைந்து, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகிலுள்ள கடுவனூரில் 28.7.08 அன்று இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தியது. இந்த இலவச முகாம்கள் மக்களைக் கொள்ளையடிக்கத் தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் மனிதாபிமான முகமூடிகள். இந்த முகமூடியிலும் கூட அவர்களுக்கு அபரிதமான பணம் கிடைக்கிறது. கடந்த ஆண்டு அரசின் பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம், இலவச முகாம்கள் நடத்துவதற்காக இம்மருத்துவமனைக்கு ஒன்றரைக் கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறது. இது போக ஜோசப் நிர்வாகம் இலவச முகாம்களைப் படம் பிடித்து வெளிநாட்டு மிஷினரிகளுக்கு அனுப்பி நன்கொடைகளையும் அளவில்லாமல் திரட்டி வந்தது.
வர்த்தக நோக்கம் மறைந்திருக்கும் இந்த இலவசத்திற்கு இலக்கு வைத்த நிர்வாகம் அவ்வட்டாரத்தில் உள்ள மக்களைக் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு ஆள் பிடிப்பது போல பிடித்திருக்கிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் குறிப்பிட்ட இலக்கை அடைந்தே ஆகவேண்டுமென அம்மருத்துவமனை காட்டிய தீவிரம் சந்தேகத்திற்குரியது. முகாமிற்கு வந்த 180 நபர்களில்- பெரும்பாலும் கூலி வேலை செய்யும் முதியவர்கள்- 45 பேர், கண்புரை அறுவை சிகிச்சைக்காக அவசர அவசரமாகத் தெரிவு செய்யப்பட்டனர். இந்த சிகிச்சைக்காக சில ஆயிரங்கள் செலவு தேவைப்படும் வசதி இல்லாத அம்முதியவர்கள் இந்த இலவசமில்லையென்றால் சதை வளர்ந்த கருவிழிகளுடன் மங்கிய பார்வையோடு மிச்சமிருக்கும் வாழ்வைக் கழித்திருப்பார்கள். ஒரு வேளை அப்படி விட்டிருந்தால்கூட இருக்கும் குறைந்த பட்சப் பார்வைத் திறனாவது மிஞ்சியிருக்கும்.
அந்த 45 ஏழைகளுக்கும் பெரம்பலூர் ஜோசப் மருத்துவமனையில் ஆடுமாடுகளுக்கு செய்வது போல அறுவை சிகிச்சை நடந்தது. இலவசம்தானே என்ற அலட்சியத்துடன் போதிய பாதுகாப்பின்றி, பயிற்சியற்ற மருத்துவர்களால், சோதித்த்தறியப்படாத மருந்துகளுடன் ஈவிரக்கமின்றி அந்த சிகிச்சை நடந்து முடிந்தது. ஊர் திரும்பிய மக்கள் சிகிச்சை நடந்த கண்களில் தாளமுடியாத வலியுடன் தெளிவில்லாத பார்வையுடன் அவதிப்பட்டனர். திரும்பிச் சென்று மருத்துவமனையில் கேட்டபோது மீண்டும் ஒரு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. அப்போதும் பிரச்சினை தீராததால் ஒரு சொட்டு மருந்தைக் கையில் கொடுத்து விட்டு இனி பார்வை கிடைக்காது என்று அலடசியமாக கைவிரித்து விட்டது ஜோசப் மருத்துவமனை. ஏன்ன ஏது என்று அறியாமல் அதிர்ச்சியடைந்த மக்கள் உடனே சாலை மறியல் செய்தபோது விசயம் வெளியே தெரியவந்தது.
இன்று பல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அம்மக்களின் பெரும்பான்மையினருக்கு அறுவை சிகிச்சை நடந்த கண்களில் பார்வை முழுவதுமாகப் போய்விட்டது. அதற்காக ஆளுக்கொரு இலட்சம் கொடுத்து சமாதனம் செய்ய முயல்கிறது அரசாங்கம். எத்தனை இலட்சம் கொடுத்தாலும் இழந்த பார்வை கிடைக்காதே என்று கதறுகிறார்கள் அந்த ஏழைகள். இனி ஓட்டை விழுந்த ஒற்றைக் கண்ணுடன் எப்படி வாழமுடியும் என்று நிர்க்கதியாக அழுகிறார்கள் அம்மக்கள். முதுமையோடு குருடும் இணைந்த பயங்கரத்தை அவர்களால் சகிக்க முடியவில்லை.
ஒரு தனியார் மருத்துவமனை நடத்திய இந்த பயங்கரவாதத்தை மருந்துகளின் குறைபாடு, பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம், மருத்துவமனையைச் சோதனையிட்டோம் என்று மேலோட்டமாக விசாரணை நடத்துகிறது அரசு. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், தலைமை நிருவாகிகள் அனைவரும் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கவேண்டும். இவர்களை வெளியே சுதந்திரமாக விட்டுவைத்தால் ஆதாரங்களை அழித்து விசாரணையையே திசை திருப்புவார்கள். ஜோசப் மருத்துவமனை சீல் செய்யப்பட்டு மூடப்பட்டிருக்கவேண்டும். மருத்துவமனையின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து ஏழைகளுக்கு நிவாரணம் அளித்திருக்கவேண்டும். ஆயினும் இவை எதுவும் நடைபெறவில்லை. காரணம் பார்வை இழந்தவர்கள் அதை இலவசமாக இழந்திருக்கிறார்கள். அதுவும் ஏன் என்று கேள்வி கேட்பதற்கு நாதியற்ற ஏழைகளாய் இருந்திருக்கிறார்கள்.
தனியார் மயத்தின் கோரமுகம் இப்படித்தான் இருக்க முடியும். ஒரு தனியார் மருத்துவமனை செய்த அநீதிக்கு அரசு நட்ட ஈடு கொடுக்கிறது. அந்த அநீதிக்கு எந்த பொறுப்பும் ஏற்காத அந்த மருத்துவமனை இன்றும் தடையில்லாமல் செயல்படுகிறது. அவர்களைத் தண்டிக்கவேண்டிய அரசாங்கம் தொழில் நடத்த பாதுகாப்பு கொடுக்கிறது. மருத்துவமனைகளின் முதலாளிகளைக் குற்றம் சாட்டாத அரசு மருந்துகளை காரணமாக்க முயல்கிறது. மருந்துகள்தான் காரணமென்றால் கட்டணம் வாங்கிக்கொண்டு செய்யப்படும் சிகிச்சைகளுக்கு இந்த பார்வைப் பறிப்பு நடக்கவில்லையே? அப்படியே மருந்துகள்தான் காரணமென்றாலும் மருந்து முதலாளிகளை இந்த அரசு தண்டிக்கவா போகிறது? மாறாக உயிர் காக்கும் மருந்து விலையை பல மடங்கு ஏற்றி கொள்ளையடிக்கவே உதவுகிறது.
திருவள்ளூரில் சரியாகப் பராமரிக்கப் படாத சொட்டு மருந்தினால் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர். டெல்லி ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் சோதனை என்ற பெயரில் 46 குழந்தைகள் இறந்திருக்கின்றன. பணமிருப்பவனுக்குத்தான் மருத்துவம் என்றாகிவிட்ட நிலையில் வேறுவழியின்றி அரசு மருத்துவமனைகளையும், இலவச முகாம்களையும் நாடும் மக்கள்தான் அரசின் நோய்களுக்கு பலிகடாவாக ஆக்கப்படுகின்றனர். உலகமயத்தின் கொள்கையில் ஏழைகளின் உயிர்கள் மலிவாக விலைபேசப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தின் அந்த ஏழைகள் பார்வையிழந்து வாழப்போகிறார்கள். படித்தவர்கள் படிக்காதவர்களின் கண்களைப் பிடுங்கியிருக்கும் இந்தச் சம்பவத்தை ரம்பாவின் தற்கொலைக் கிசுகிசு குறித்து கவலைப்படும் நாட்டில் எத்தனைபேர் கவனிக்கப் போகிறார்கள்?
எது எப்படியோ நாம் பார்த்து நுகரத்தான் இந்த உலகில் அழகானவை ஏராளமிருக்கிறதே!
ஆனால், “கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம் அ்தின்றேல் /புண்ணென்று உணரப் படும்.” என்கிறது குறள்.

8/27/08

இனங்களின் சமாதானமும் ரஷ்யாவின் வெகுமானமும்

"கொகேசியர்கள்", அமெரிக்கா, கனடாவில் வாழும் ஐரோப்பிய-வெள்ளை இனத்தவர்களை குறிக்க அந்தச் சொல்லை பயன்படுத்துகின்றனர். ரஷ்யாவுக்கும், ஈரானுக்கும் இடையில், மேற்கே கருங்கடலையும், கிழக்கே கஸ்பியன் கடலையும் கொன்ட பிரதேசமே "கொகேசியா" என்ற பொதுப்பெயரில் அழைக்கப் படுகின்றது. சரித்திர காலகட்டத்துக்கு முந்திய, ஐரோப்பா நோக்கிய ஆரியர்களின் குடிப்பரம்பல், கொகேசியாவில் இருந்தே ஆரம்பமாகியதாக நம்பப்படுகின்றது. ஆரியர்களின் பூர்வீக பூமி, இன்று பல்வேறு மொழிகளை பேசும் இனங்களாக பிரிந்து, ஒருவருக்கொருவர் சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர்.

இன்று அமெரிக்கா-ரஷ்யா பனிப்போருக்குள் சிக்கி, செய்திகளில் அடிபடும் ஜோர்ஜியாவும் ஒரு கொகேசிய நாடு தான். அதன் வடக்கத்தய மாகாணங்களான அப்காசியா, ஒசேத்தியா ஆகியனவற்றில் வாழும் மக்கள் ஜோர்ஜியாவுடன் இணைந்திருக்க விரும்பவில்லை. அப்காசிய, ஒசெத்திய மொழிகள் ஜோர்ஜிய மொழியில் இருந்து வேறு பட்டவை. இதிலே ஒசெத்தியர்களின் மொழி ஈரானின் பார்சி மொழிக்குடும்பத்தை சேர்ந்தது. பண்டைய மன்னர் கால ஆட்சி அலகுகளில் இருந்து, தேசிய அரசுகளை நோக்கி கொகேசியா 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாற்றமடைந்தது. 19 ம் நூற்றாண்டில் விரிவடைந்து கொண்டு போன ரஷ்ய ஏகாதிபத்தியம், கொகேசிய நாடுகளையும் கைப்பற்றி, தனது சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்திருந்தது. பின்னர் 1917 ல் லெனின் தலைமையில் கம்யூனிச புரட்சி கண்ட போல்ஷெவிக் கட்சியினர், முன்னாள் ரஷ்ய சாம்ராஜ்யத்தை, "சோவியத் யூனியன்" என்ற அதிகார அலகின் கீழ் கொண்டு வந்தனர். முன்னரே தனித்துவ அரசியல் அதிகாரம் கொண்டிருந்த பெரிய நாடுகள் "சோவியத் சோஷலிச குடியரசு" அந்தஸ்து பெற்றன. ஜோர்ஜியாவும் அவற்றில் ஒன்று.

சுமார் 150 மொழிகள் பேசும் மக்களை கொன்ட சோவியத் யூனியனை 15 குடியரசுகளாக பிரித்து விட்டால் மட்டும் இனப்பிரச்சினை தீர்ந்து விடப்போவதில்லை. இதனால் தமக்கென தனித்துவமான நிலப்பரப்பையும், மொழியையும் கொன்ட பிற சிறுபான்மை இனங்களின் நலன் கருதி, பல சுயாட்சிப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. இனத்தால் ஜோர்ஜியரான ஸ்டாலின், சோவியத் அதிபரான பின்பு தான், இனங்களுகிடையே ஆன அதிகாரப்பரவலாக்கல் பூர்த்தியடைந்தன. அதன் அர்த்தம், ஸ்டாலின் காலத்தில் இனப்பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டது என்பதல்ல. ஆனால் இன்று நாம் காணும் தேச, பிரதேச எல்லைகள் யாவும் ஸ்டாலினால் வரையப்பட்டவை. குறிப்பிட்ட தேசம் அல்லது மாநிலம், குறிப்பிட்ட மொழி பேசும் மக்களை மட்டுமே கொண்டது போல தோற்றம் காட்டுகின்றது. ஆனால் அயல் நாடொன்றின் வேற்று மொழி மாகாணம், வேண்டுமென்றே ஒவ்வொரு குடியரசுக்குள்ளும் சேர்க்கப்பட்டது. அந்தந்த குடியரசுகளில் குறிப்பிட்ட இனத்தின் ஆதிக்கம் பெருகி, பிராந்திய பேரினவாத சக்திகள் தலை தூக்குவதை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு, அவ்வாறு செய்யப்பட்டது.

அப்காசியாவும், தென் ஒசெத்தியாவும் சுயாட்சி ஆட்சியலகை கொண்ட, ஆனால் "ஜோர்ஜிய சோவியத் குடியரசின்" பகுதிகளாக ஸ்டாலினால் இணைக்கப்பட்டது. இதைத்தான் இன்று ஜோர்ஜிய அரசாங்கமும், அமெரிக்கா உட்பட்ட சர்வதேசமும் "ஜோர்ஜியாவின் நிலப்பரப்பின் மீதான இறைமை" என்று கூறுகின்றனர். இதையே தான் அன்று கொசோவோ மீதான உரிமையை, செர்பியா வலியுறுத்தியது. அமெரிக்கா எல்லாவற்றிற்கும் இரண்டு வகை அளவீடு வைத்திருப்பது, ஏற்கனவே தெரிந்த விடயம் தான். மேற்குலக ஊடகங்கள் தற்போதைய ஜோர்ஜிய பிரச்சினை, புத்தின் தலைமையிலான இன்னாள் ரஷ்ய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டதாக மக்கள் மத்தியில் பரப்புரை செய்கின்றன. உண்மை மிகவும் சிக்கலானது.

"சோவியத் யூனியனின் வீழ்ச்சியானது, 21 ம் நூற்றாண்டின் துயரங்களுக்கு வழிசமைத்துள்ளது." என்று முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி புத்தின் சொன்ன போது, அவர் சோவியத் யூனியனை மீளகட்டமைக்க விரும்புவதாக மேற்குலகம் பரிகசித்தது. ஆனால் தீர்க்கப்படாத இனப்பிரச்சினைகள், புதிய யுத்தங்களை உருவாக்குகின்றன, என்பதையே அன்று புத்தின் எதிர்வு கூறியிருந்தார். சோவியத் யூனியன் ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஜோர்ஜியா ஒரு வருடத்துக்கேனும் சுதந்திரமான குடியரசாக இருந்தது. அப்போது உருவாகிய ஜோர்ஜிய தேசியவாதம், பேரினவாதமாகி அயலில் இருந்த அப்காசிய, ஒசெத்திய சிறுபான்மை இனங்களை படுகொலை செய்து, அவர்களின் நிலங்களை பலாத்காரமாக இணைத்தது. அப்போது நடந்த இனப்படுகொலையில் ஒசெத்திய சனத்தொகையின் எட்டில் ஒரு பங்கு அழிந்தது. இதனால் போல்ஷேவிக்குகளுடன் கூட்டுச் சேர்ந்த ஒசெத்தியர்கள், ஜோர்ஜியரை அடக்கி சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

ஆரம்பத்தில் அப்காசியா தனி சோவியத் குடியரசாக இருந்தது. பின்னர் அது ஜோர்ஜியாவுடன் இணைக்கப்பட்டது. தற்போது அங்கீகரிக்கப்படாத தனிநாடாக பிரிந்துள்ள அப்காசியா, தன் சொந்தக்காலில் நிற்கும் வல்லமையை பெற்றுள்ளது. அதற்கு மாறாக பூகோளரீதியாக பல பிரதிகூலங்களை கொண்ட ஒசேத்தியா, ஒன்றில் ஜோர்ஜியாவில் அல்லது ரஷ்யாவில் தங்கியிருக்க வேண்டிய நிலை. மேலும் தமது தாயகம் இரண்டாக பிளவுற்றிருப்பதாக (வடக்கு பகுதி ரஷ்யாவுடனும், தெற்கு பகுதி ஜோர்ஜியாவுடனும்) ஒசெத்தியர்கள் குறைப்படுகின்றனர். இருப்பினும் வரலாறு நெடுகிலும் ஜோர்ஜிய பேரினவாத தாக்குதல்களுக்கு முகம் கொடுத்த ஒசெத்தியர்கள், ரஷ்யாவுடன் சேர்ந்து இருப்பதையே விரும்புகின்றனர்.

அண்மைக்கால பிரச்சினை 1991 ம் ஆண்டிலிருந்தே ஆரம்பித்தது. அப்போது தான் சோவியத் யூனியன் உடைந்ததை பயன்படுத்தி சுதந்திர நாடாகிய ஜோர்ஜியா, அப்காசியா, ஒசேத்தியா ஆகியவற்றின் சுயாட்சி ஆட்சியதிகாரத்தை இரத்து செய்து, ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. அதன் எதிரொலியாக அப்காசியா, ஒசெத்திய விடுதலை இயக்கங்கள் தோன்றி, ஜோர்ஜிய படைகளுடன் சண்டையிட்டு, தமது பிரதேசங்களை மீட்டனர். அவர்களுக்கு ரஷ்யா ஆதரவளித்து வந்தது மட்டுமல்லாது, சமாதான பேச்சுவார்த்தைக்கு துணை புரிந்ததுடன், சமாதானத்தை நிலை நாட்டும் பொருட்டு, (ஐ.நா. ஆசீர்வாதத்துடன்) தனது படைகளை அனுப்பியது. ஆனால் அதற்கு முன்னரே, ஜோர்ஜிய இராணுவம், விடுதலைப்படைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோற்று ஓடிவிட்டதால்; அப்காசியா மற்றும் ஒசெத்தியாவில் வாழ்ந்து வந்த ஜோர்ஜிய மொழிபேசும் மக்கள் அடித்து விரட்டப்பட்டனர். இவர்கள் தற்போதும் அகதிகளாக ஜோர்ஜியாவின் பிற பகுதிகளில் 15 வருடங்களுக்கு மேலாக தங்கியுள்ளனர்.

பல வருடங்களாக கிடப்பில் இருந்த ஜோர்ஜிய பேரினவாதம் இன்றைய அதிபர் மிகையில் சாகாஷ்விலி பதவிக்கு வந்த பின்னர் மீள உயிர்த்தது. ஒரு சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த சாகாஷ்விலி, ஒரு தீவிர அமெரிக்க பக்தர். அமெரிக்காவில் கொலம்பிய பலகலைக்கழகத்தில் சட்டம் படித்தால் மட்டுமே அமெரிக்க விசுவாசியானாரா? அல்லது வேறு காரணம் உண்டா தெரியவில்லை. முன்னெப்போதும் இல்லாதவாறு, அமெரிக்காவின் ஆலோசனையும், நிதியும் ஜோர்ஜிய இராணுவத்தை நவீனப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அவ்வாறு அமெரிக்காவினால்(போதாக்குறைக்கு இஸ்ரேலினால்) பயிற்சி அளிக்கப்பட்ட தனது இராணுவம், ரஷ்ய வல்லரசையும் எதிர்த்து நிற்கும் வலிமை வாய்ந்தது, என்று சாகஷ்விலி நம்பியதன் விளைவு தான், ஒசேத்தியா மீதான "முட்டாள்தனமான" இராணுவ சாகசம். ஒசெத்திய போருக்கு, ரஷ்யாவின் மீது பழி போடும் அமெரிக்க அரசு, தான் ஜோர்ஜியாவிற்கு மறைமுக தூண்டுதல் அளித்ததை மறைத்து வருகின்றது. ஜோர்ஜிய படைகள் சண்டையிடாது பின்வாங்கி விட்டதால், தற்போது மேற்கத்தைய ஊடகங்களை வைத்து ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஜோர்ஜியாவிற்கு இராணுவ பதிலடி கொடுப்பதற்கு, ரஷ்யாவுக்கு பல காரணங்கள் உள்ளன:
1. அப்காசியா மற்றும் ஒசேத்தியா தனி ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கிய போதும், அவற்றை அங்கீகரிக்கவில்லை. காரணம், ரஷ்யாவினுள் இருக்கும் பிற மொழிச்சிறுபான்மையினர் இதனை முன்னுதாரணமாக்கி தனி நாடு கேட்கக் கூடாது என்ற முன் எச்சரிக்கை உணர்வு.
2. ஜோர்ஜிய படைகளுக்கு அஞ்சி ரஷ்யாவுக்குள் ஓடும் ஒசெத்திய அகதிகள் எதிர்காலத்தில் தலையிடியை கொடுக்கலாம்.
3. சர்வதேச மட்டத்தில் செர்பியாவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, கொசோவோவுக்கு சுதந்திரம் வழங்கிய தன்னிச்சையான செயல் ரஷ்யாவை ஆத்திரமடைய செய்துள்ளது. கொசோவோ சுதந்திர தனிநாடாக முடியுமானால், ஏன் மாற்ற நாடுகளால் முடியாது என்ற தார்மீக கேள்வி எழுவது இயற்கை.
4. தனக்கு அருகில் ஜோர்ஜியா என்ற குட்டி நாடு, அமெரிக்க மேலாதிக்கத்திற்கு இடம்கொடுப்பதுடன், நேட்டோவிலும் சேர விரும்புவது.
5. இதுவரை ரஷ்ய ஆதிக்கத்தில் இருந்த கஸ்பியன் கடல் பகுதி எண்ணை, எரிவாயு விநியோகம், வேறு வழியாக குழாய் போட்டு திசை திருப்பப்படுவது.

பொருளாதார வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும், ஏகாதிபத்திய போட்டி தனியாக பார்க்கப்பட வேண்டிய விடயம். சோவியத் யூனியன் காலத்தில் விருத்தியடைந்த எண்ணை, எரிவாயு அகழ்வு வேலைகள், மத்திய ஆசியா மற்றும் அசர்பைஜான் ஆகிய நாடுகளில் தான் அதிகம் இடம்பெற்றன. அதாவது அங்கிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் எண்ணெயும், எரிவாயுவும் குழாய்கள் மூலமாக ரஷ்யா சென்று, பின்னர் அங்கிருந்து தான் அனைத்து சோவியத் பகுதிகளுக்கும், கிழக்கு ஐரோப்பாவுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. சோவியத் யூனியன் உடைந்த பிறகும், இந்த குழாய்கள் மீது ரஷ்யாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. புதிதாக சுதந்திரமடைந்த அசர்பைஜான் தானே எண்ணையை சர்வதேச சந்தையில் நேரடியாக விற்கும் நோக்கில், அமெரிக்காவுடன் சேர்ந்து பாக்கு(அசர்பைஜான்)-திபிலிசி(ஜோர்ஜியா)- செய்ஹன்(துருக்கி) குழாய் அமைத்து மேற்குலகிற்கு ஏற்றுமதி செய்ய விரும்பியது. ஜோர்ஜியாவில் எண்ணை இல்லாத போதும், அந்நாட்டினூடாக குழாய் அமைக்கும் நோக்குடன் அமெரிக்கா, ஜோர்ஜிய அரசியலில் தலையிட்டு செல்வாக்கு செலுத்தியது. இதே போன்ற காரணத்திற்காக தான், அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமித்தது.

மேற்குறிப்பிட்ட உண்மைகள் யாவும், மேற்குலகிற்கு தெரியாத விடயங்கள் அல்ல. ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியளித்த விடயம் என்னவெனில், அமெரிக்கா போன்றே "உலக போலீஸ்காரன்" வேலை செய்ய கிளம்பி விட்ட ரஷ்யாவின் நடத்தை. ஒரு பக்கம் இது அமெரிக்கா நடந்து கொண்ட முறையின் எதிர்வினை என்பதை அவசர அவசரமாக மறைக்க வேண்டிய தேவையுள்ளது. மறுபக்கம் சோவியத் யூனியனின் மறைவுக்கு பின்னர், உலகில் ஒற்றை வல்லரசாக ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவுக்கு போட்டியாக, ரஷ்யா என்ற புதிய(அல்லது மீள உயிர்த்த) வல்லரசின் தோற்றம். இதனால்வருங்கால உலகநடப்புகள் தாம் எதிர்பார்த்த பாதையில் போகப்போவதில்லை என்ற கவலை. எதிர்பாராத அதிர்ச்சி தந்த விளைவாக, மேற்கத்திய ஊடகங்களே பனிப்போர் பற்றி, வல்லரசு போட்டி பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளன.

8/24/08

காஸா: முற்றுகைக்குள் வாழ்தல்

இஸ்ரேலிய இராணுவ முற்றுகைக்குள் 1.5 மில்லியன் பாலஸ்தீனிய மக்கள். அவர்கள் வாழ்வது காஸா என்ற மாகாணம். இல்லை, அது ஒரு திறந்தவெளி சிறைச்சாலை. அம்மக்களின் அத்தியாவசிய தேவைகள்,சமையல் வாயு, மின்சாரம், தண்ணீர்,உணவு, மருந்து, எதுவுமே இஸ்ரேலிய படைகளை கடந்து போவதில்லை. இதனால் மருத்துவமனைகளில், குழந்தைகளின் இறப்புவீதம் அதிகரித்துள்ளது. இரண்டு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்து உயிர்வாழ்வதே ஒரு போராட்டம் தான்.

உத்தியோகபூர்வமாக இஸ்ரேலின் ஒரு பகுதியான காஸாவை சேர்ந்த மக்கள், பாலஸ்தீனியர்கள் என்ற காரணத்தால் மட்டுமல்ல, தமக்கு பிடித்த ஹமாஸ் கட்சியை, பொதுத்தேர்தலில் ஜனநாயகரீதியாக தெரிவு செய்ததே, அவர்கள் செய்த "மாபெரும் குற்றம்." ஜனநாயகக் காவலர்களாக வேடம் போடும் மேற்குலக நாட்டு அரசுகள், காஸா மக்களின் ஜனநாயக உரிமையை காப்பாற்ற களமிறங்கவில்லை. அதற்கு மாறாக, பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யயப்பட்ட ஹமாசுடன் ஒத்துழைக்க மறுத்தனர். ஒரு பக்கம் ஜனநாயகத்திற்காக போராடும் மேற்குலக கனவான்கள், மறு பக்கம் தமக்கு பிடிக்காத கட்சிகளை மக்கள் தெரிவு செய்தால், ஜனநாயக மறுப்பாளர்களாக மாறிவிடுகின்றனர். சிலி, கொங்கோ, அல்ஜீரியா, வெனிசுவேலா... இந்த வரிசையில் காஸா. இப்படி இவர்களது ஜனநாயக முகத்திரை அடிக்கடி கிழிந்து, சுயரூபம் தெரிகின்றது.

இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகளை விட்டு விடுவோம். மனித அவலத்தை தடுக்கும் வகையில் "வெற்று தீர்மானங்களை" யாவது எடுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கு, இரண்டு வருடமாக காஸா மக்கள், இராணுவ முற்றுகைக்குள் இன்னலுருவது மட்டும் கண்ணுக்குத் தெரியவில்லை. "சர்வதேச சமூகமும்" (யார் அது?) அக்கறைப்படுவதில்லை. "நடுநிலை தவறாத" மேற்குலக ஊடகங்களுக்கு, தற்போது "சீன முற்றுகைக்குள் வாடும் திபெத்தியர்கள்" நிலை பற்றி புலனாய்வு செய்வதால், நேரம் கிடைப்பதில்லை போலும்.

இத்தகைய பின்னணியில், சில அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்களின் கடும் முயற்சியினால், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் ஆகிய பல்வேறு தேசத்தவர்களை கொண்ட, குழுவொன்று, இரண்டு மீன்பிடி வள்ளங்களில், சைப்ரசில் இருந்து காஸா நோக்கி சென்றுள்ளனர். "Free Gaza" என்று அழைக்கப்படும் இந்த குழுவில், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டொனி ப்ளேரின் உறவுக்காரப் பெண்ணொருவரும், கிரீஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், சில (இஸ்ரேலிய) யூதர்களும் பங்கு பற்றுவது சிறப்பம்சமாகும்.

Free Gaza Movement, தமது பயணத்தை தொடங்குவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே, இஸ்ரேலில் இருந்து 375 கி.மி. தொலைவில் இருக்கும் சைப்ரஸ் தீவில் ஒரு பத்தரிகையாளர் மகாநாட்டை நடத்தி தமது மனிதாபிமான உதவி பற்றி தெளிவு படுத்தியிருந்தனர். மருந்து, மற்றும் பிற நிவாரணப் பொருட்களை ஏற்றிச்செல்லும் தமது பயணம், காஸா முற்றுகையை முறியடிக்கும் ஒரு அடையாள நடவடிக்கை என்றும் கூறினர்.

சைப்ரசின் லர்னகா துறைமுகத்தில் இருந்து கிளம்பிய, 42 நிராயுதபாணிகளான சமூக ஆர்வலர்களின் பயணத்தை தடுக்குமாறு, இஸ்ரேலிய அரசு சைப்ரஸ் அரசிடம் கேட்டும், அது கைகூடவில்லை. முன்பு ஒருமுறை, எழுபதுகளில் பாலஸ்தீன விடுதலை போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில், வெளிநாடுகளில் புகலிடத்தில் இருந்த பாலஸ்தீன அகதிகளின் குழுவொன்று, இது போன்றே சைப்ரசில் இருந்து கப்பலில் தமது தாயகம் திரும்ப திட்டமிட்டனர். அனால் இரவோடு இரவாக மொசாத் உளவாளிகள், சைப்ரசில் லிமசோல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (அகதிகளின்) கப்பலை குண்டு வைத்து தகர்த்தால், அந்தப் பயணம் நிறைவேறவில்லை. அது போன்றே தற்போதும் எதாவது அசம்பாவிதம் நடக்கலாம் என்ற அச்சம் இருந்தது.

Free Gaza குழுவினரின் வள்ளங்கள், புயல்காற்றையும், கடல் கொந்தளிப்பையும் மீறி, இஸ்ரேலிய கடல்பரப்பை அண்மித்த வேளை, இஸ்ரேலிய கடற்படை அவர்களது தொலை தொடர்புகளை அடிக்கடி இடையூறு செய்தது. முதலில் காசாவினுள் பிரவேசிக்க விடமாட்டோம் என்று அடம்பிடித்த இஸ்ரேலிய அரசு, பின்னர் அத்தகைய நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம் என்பதால், காஸா செல்ல அனுமதித்தது. காசாவில் தரையிறங்கிய சர்வதேச சமூக ஆர்வலர்களை, பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய மக்கள் கடற்கரையில் கூடி நின்று வரவேற்புக் கொடுத்தனர். காஸா என்ற திறந்தவெளி சிறைச்சாலையில், இரண்டு வருட முற்றுகைக்குள், இன்னல்களுக்குள் உயிர்வாழும் மக்கள், சர்வதேசத்தால் பாராமுகமாக விடப்படவில்லை, என்பதை காட்டுவதே தமது நோக்கம் என்று Free Gaza ஆர்வலர்கள் தெரிவித்தனர். இன்று (24-8-2008) காசாவில் அந்த ஆர்வலர்கள், பத்திரிகையாளர் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்த போதும், CNN, BBC போன்ற "நடுநிலை தவறாத" ஊடகங்கள் இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இதற்கிடையே, இரண்டு வருட பொருளாதார முற்றுகையாலும் காஸா பாராளுமன்ற தொகுதிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட ஹமாஸ் அரசை அசைக்க முடியவில்லை, என்பதை கண்டு கொண்ட இஸ்ரேலிய அரசு; தற்போது குறுக்குவழியில் குண்டுவெடிப்புகள், அரசியல் படுகொலைகள் மூலம் அதனை சாதிக்க விளைகின்றது. அதற்காக ஹமாசின் எதிராளிகளான பதா கட்சியின் உறப்பினர்கள் சிலர் இஸ்ரேலிய கூலிப்படையாக செயற்படுகின்றனர். பாலஸ்தீன பகுதிகளில் ஊழல் ஆட்சி காரணமாக தோல்வியுற்ற பதா கட்சி, எதிர்க்கட்சியான ஹமாஸை அகற்ற, இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. பதா உளவுப்பிரிவு அதிகாரி டஹ்லன் தலைமையிலான குழுவொன்றுக்கு, அமெரிக்காவும், எகிப்தும் இராணுவப்பயிற்சி வழங்குகின்றன. காஸா தெற்கு பகுதியை எல்லையாக கொண்ட (ஒரு அரபு நாடான) எகிப்து, தனது எல்லைகளையும் மூடியுள்ளது. சில கடத்தல்காரர்கள் நிலத்துக்கு கீழே சுரங்கம் தோண்டி அத்தியாவசிய பொருட்களை கடத்திவந்த போதும், எகிப்திய போலிஸ் அத்தகைய சுரங்கங்களை கண்டுபிடித்து மூடி வருகின்றது. சுரங்கம் எவ்வளவு தூரத்திற்கு போனாலும், இஸ்ரேலின் நவீன நுண்ணறி கருவிகள் கண்டுபிடிக்கின்றன.