3/12/10

பெண் புன்னகையின் பின்னே…..

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 5
பெண், எனது பெயர், இனம் மற்றும் இன்ன பிற, இத்யாதிகள் எல்லாமே இது தான். எனக்கு பல கோடி முகங்கள். பல கோடிப் பெயர்கள். எனக்கு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுகிறார்கள். இது மகிழ்ச்சியல்ல. வேதனையே. என் உரிமைகள் பிறப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் பிறகேன் எனக்கென்றோர் தினம். இயற்கையின் படைப்பில், விஞ்ஞான கண்டுபிடிப்பில் ஆண், பெண் எனப்பிறப்பது ஒன்றும் தனியொருவரின் சாதனையல்ல. பெண்ணாய் பிறப்பது வரமா, சாபமா என்ற விதண்டாவாதங்களை விலக்கிவிட்டு நானும் சாதாரண மனிதப் பிறவியாகவே பார்க்கப்படவேண்டும்.
பெண் என்றால் சிசுக்கொலை, உடன்கட்டையேறுதல், கற்பழிப்பு, துன்புறுத்தல், வன்முறை என்ற வடிவங்களில்தான் நான் நூற்றாண்டுகளாய் எத்தனையோ நாட்டில், எத்தனையோ ஊரில் துன்புறுத்தப்பட்டேன். இன்றும் துன்புறுத்தப்படுகிறேன். என் உடம்பை துன்புறுத்துபவர்கள் உள்ளத்தை சும்மா விடுவார்களா. அதையெல்லாம் பட்டியலிட்டு மாளாது. என் உள்ளச்சுமைகள் என்னை அழுத்தினாலும் இதழ்களில் புன்னகையை கடை விரிக்கத்தவறுவதில்லை. என் வலிகளை எனக்குள் புதைத்து நான் எப்போதுமே புன்னகைக்க வேண்டும். அப்படித்தான் எனக்கு எழுதப்படாத சமூக விதிகள், விழுமியங்கள் கற்றுக்கொடுத்திருக்கின்றன.
என் அறிவைப்பற்றியும் நான் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். என் கற்பூர மூளை சட்டென்று பற்றிக்கொண்டால் பெண் என்று ஓரங்கட்டப்படுவேன். அதையே காற்றில் கரைய விட்டால் எல்லா சமூக சம்பிரதாயங்களிலும் உள்வாங்கப்படுவேன். என்ன! எனக்குத்தான் வாயை, அறிவை மூடிவைக்க சிரமப்படவேண்டியுள்ளது. மனிதன் மிருகங்கள் போல் வேட்டையாடி திரிந்த காலங்களில் நான் ஆணுக்கு அடிமை சேவகம் செய்ததில்லை. என் உடற்கூறா அல்லது சமூக கலாச்சார ஏற்பாடுகள், அபத்தங்கள் இவற்றில் எது என் உரிமைகளை மட்டும் காலவெள்ளத்தில் மூழ்கடித்து என் சடலத்தை மட்டும் கரையேற்றியிருக்கிறது?
என் தடைகளையெல்லாம் தாண்டி நூற்றாண்டு காலமாய் மெல்ல, மெல்ல கோழிக்குஞ்சாய் என் ஓடுகளை உடைத்து வெளியேறி இப்போது நான் என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்று கொஞ்சம் சொல்கிறேன்.
ஆணின் உயிர்க்காற்று நான். அவனுக்காய் நான் மகளாய், தங்கையாய், அக்காவாய், தாயாய், தாரமாய், மற்றும் எல்லா “ய்” களாகவும் ஆண்டாண்டுகாலம் உடனிருக்கிறேன். வறுமைக்கோடு என் வாழ்வில் ஓவியங்களை வரையவில்லை என்றால் என் வாழ்விலும் பெரும்பாலும் சந்தோசங்கள் நிரம்பியிருக்கும். இவற்றையெல்லாம் விட அதிர்ச்சியானது “Female Circumcision”. அற்ப விடயத்திற்காய் என் பெண்ணுறுப்பை அறுத்துப்போடும் இழிசெயல். ஏனென்று நான் கேள்வி கேட்டால், இது என்னை, அதாவது பெண்ணை திருமணத்திற்கு தயார்ப்படுத்தலாமாம்.
இது எனக்கிழைக்கப்படும் அநியாயம் என உலக சுகாதார ஸ்தாபனமே கண்டித்தாலும், அவர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இன்றும் தொடர்கிறது. இது என் அறியா வயதில் உடலுக்கு இழைக்கப்படும் கொடுமை. இந்த கண்டங்களை தாண்டி நான் குமரியானதும் எனக்கு பிரச்சனை என் பருவமும் ஆண்களும்தான். என் அறிவை பருவம் விழுங்கும் ஆபத்து இருக்கிறது என்று அறியாவிட்டால் என் வாழ்வில் அத்தனையும் பாழாய்ப்போகும். அதை சிலர் அக்கறையோடு அறிவுரையாய் சொன்னால் அதை ஓர் ஏளனப் பார்வையில் என் வயது அலட்சியம் செய்யும்.
என் பருவமும் ஹோர்மோன்களும் காந்தமாய் ஆண் என்ற இரும்பை கவர்ந்து அவனோடு காதலாகி, கல்யாணமாகி, கடுப்பாகி அங்கேயும் நான் தான், பெண், அதிகம் காயப்படுகிறேன். ஆனாலும், விதிவிலக்காய் பெண் என்ற காந்தத்தை இரும்புகள் கவர்ந்திழுப்பதும் அதில் காந்தம் தன்னிலை மறப்பதும் பின்னர் கண்ணீர் வடிப்பதும் பெண்ணுக்கே உரிய பேதமைகள். நான் எழுதப்பட்ட சட்ட விதிகளால் பாதுகாக்கப்படுவதை விட எழுதப்படாத சமூகவிதிகளால் அதிகம் ஆளப்படுகிறேன், அவஸ்தைப்படுகிறேன். காதலாகட்டும், கல்யாணமாகட்டும் பெண் எப்போதுமே வீட்டுக்கு கட்டுப்படவேண்டும் என்பது ஓர் சமூகவிதி.
காதல், கல்யாணத்தில் நான் படும் காயங்கள், வடுக்கள் என் வீட்டுச் சுவர்களைத் தாண்ட அனுமதிப்பதில்லை. அதனால் என்னோடு என் உணர்வுகளுக்கு என் மனதிலேயே சிதை மூட்டிகொள்ளப் பழகிக்கொண்டேன். காலங்காலமாய் நான் திருமணத்திற்கே தயாற்படுத்தப்படுகிறேன். திருமணம் அபத்தமா? எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால், திருமணம் என் அடிப்படை உரிமைகளை கபளீகரம் செய்தால் அதை அபத்தம் என்று கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.
உலக இயங்குவிதிகள், சமூக ஒழுங்குகள் மாற நானும் கல்வியில், தொழிலில், விளையாட்டில் என்று ஒரு சில படிகளைத் தாண்டி முன்னேற முயன்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு தடையையும் தாண்டி எனக்காய் விதிக்கப்பட்டிருக்கும் மகள், மனைவி, தாய் என்ற கடமைகளோடு என் வீட்டின் பொருளாதார சுமையையும் கட்டியழுதுகொண்டு பொதிமாடாய் அல்லும் பகலும் அல்லாடுகிறேன். கல்விதான் பெண்களின் விடுதலைக்கு சிறந்தவழி. அந்த கல்வியில் கரை சேர்வதற்குள் காதல், கல்யாணம் என்று கதவை தட்டுகிறது. பெண்ணுக்கு சிறகுகள் கொடுக்கும் இந்த உணர்வுகள்தான் பின்னர் அதளபாதாளத்திலும் அவளை விழவைக்கின்றன.
விழுந்த பின் எழமுடியாமல் தவிக்கும்போது ஒன்று காலம் கடந்துவிட்டிருக்கும். அல்லது ஓர் ஆணின் அன்புக்காய், அரவணைப்புக்காய் மனம் தேவையற்ற விட்டுக்கொடுப்புகளுக்கு பழகிப்போய் இருக்கும். அந்த பலவீனம் ஆணுக்கு பலமாகிப்போகிறது. பெண்ணே! காதலியாய், மனைவியாய் காதலி, காதலிக்கப்படு அது உன் பிறப்புரிமை. அந்தக் காதலுக்காய் அன்புக்காய் எத்தனை விட்டுக்கொடுப்புகள்! பெண்ணுக்கு பூட்டப்பட்ட விலங்குகள் கண்ணுக்கு தெரிவதில்லை. அது தெரிவதில்லை என்பதாலேயே என் அடிமைத்தனத்தை அனுமதித்துக்கொண்டிருக்கிறேன்.
வேலைத்தளத்திலும் ஓடாய்த்தேய்ந்து பின்னர் பெண் தான் வீட்டு வேலையும் கட்டி அழவேண்டும் என்ற Stereo Type சிந்தனைகள் கால காலமாய் சமூகத்தில் புண்ணாய் புரையோடிப்போய்க் கிடக்கிறது. அதை நான் செய்யாவிட்டால் அது ஓர் குற்ற உணர்வாக எனக்குள் உருவெடுக்கும்படி என்னை என் வீடும், சமூகமும் என்னை பழக்கியிருக்கிறது. “ஏண்டி, உன் புருஷன் கசங்கின சட்டைய போட்டிட்டிருக்கானே, அதை அயர்ன் செய்து குடுக்க மாட்டியா” என்று யாராவது ஒருவர் என் பவித்திரமான பதிவிரதத்தை பழிசொல்லக்கூடாதல்லவா. ஏன் ஓர் ஆண் தன் அன்றாட, சொந்த வேலைகளை கவனிக்க ஓர் பெண்ணின் அடிமை சேவகம் தேவைப்படுகிறது?
இதைப்படிப்பவர்கள் யாராவது இல்லை நான் என் மனைவியை அடிமைச்சேவகம் செய்ய ஏவுவதில்லை, என் மனைவிக்கு நான் வீட்டு வேலைகளில் சின்ன, சின்ன உதவிகள் செய்து அவள் புன்னகையை ரசிக்கிறேன் என்று சொன்னால் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். பெண் என்ற உழைக்கும் இயந்திரத்தின் வேலைகளை இப்போதெல்லாம் ஓரளவுக்கு இலத்திரனியல் இயந்திரங்கள் பகிர்ந்துகொள்வதால் சிலர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள்.
வீட்டின் பொருளாதார சுமையை பகிர்ந்துகொள்ள வேலை என்ற பளுவை வேறு சுமந்துகொண்டிருப்பவர்களை அவர்களின் வலிகளை பேசாமல் இருக்க முடியாது. ஏறக்குறைய ஓர் நூறு அல்லது நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் நான் கணவனையும் குழந்தைகளையும்தான் கவனித்துக்கொண்டிருந்தேன். உலகப்போர்களுக்குப் பின்னால்தான் நான் வேலைதலங்களுக்கும் பணிகளுக்கும் பழக்கப்படுத்தப்பட்டேன் என்று அறிவாளிகள், ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். எறும்பாய் ஊர்ந்து என்னில் சிலபேர் இப்போது விண்வெளியை, நிலவைத்தொட்டிருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சந்தோசம்.
என் சிந்தனையை அலைக்கழிக்கும் விடயம் என்னவென்றால், இன்னும் மூன்றாம் உலக நாடுகளில் நிலவுக்குக் கீழே என் பெண் இனம் ஒருவேளை உணவுக்காய் கல்லும், மண்ணும், குப்பையும் சுமந்துகொண்டிருக்கிறதே! அந்த உழைக்கும் பெண்களின் தலைவிதியை யார் மாற்றுவார்கள்? ஓரிரு பெண்களை விண்வெளியைத் தொட வைத்துவிட்டு ஒரு கோடிப் பெண்களை அடிமாடாய் வேலைவாங்குவது எந்த விதத்தில் நியாயம்? Malls, Restaurants, House keeping (Cleaning), Factories etc. எங்கெல்லாம் இன்று அடிமாட்டு ஊதியத்திற்கு ஆள் வேண்டுமோ அங்கெல்லாம் என் பெண் இனம் குடும்பத்தை கட்டிக்காக்க குறைந்த பட்ச கூலிக்காய் மாரடித்துக்கொண்டிருக்கிறது. இதே வேலைகளை ஆண்கள் செய்தால் அவர்களுக்கு கூலி கொஞ்சம் அதிகமாக கொடுக்கப்படவேண்டும். அது ஆணின் உழைப்பல்லவா. கணணி, தொழில் நுட்பம் ஆகட்டும் இல்லை வீட்டு வேலையாகட்டும் ஆணின் உழைப்புக்கு எப்போதுமே மதிப்பும் ஊழியமும் மதிப்பாகவே கொடுக்கப்படவேண்டும் என்பது ஓர் பாரபட்சமான அணுகுமுறை.
ஊடகங்கள் என்னை எதற்கும் குறியீடாகவே பார்க்கும் அவலமும் கொஞ்சமல்ல. வியாபாரப் பொருளுக்கும், போதைக்கும் நான்தான் குறியீடு. தாய்மைக்கும் நான்தான் குறியீடு. Car, Motorcycle, Cell Phone, Underwear, Shaving sets & Cream என்று ஆண்கள் உபயோகிக்கும் பொருட்களுக்கும் நான்தான் தொலைக்காட்சியில், விளம்பரத்தில் அரையும், குறையுமாய் அழகு காட்ட வேண்டும். எனக்கு ஒரேயொரு விடயம் மட்டும் புரிவதில்லை. பெண் விளம்பரங்களில் அழகு காட்டாவிட்டால் யாருமே எந்தப்பொருளையுமே தொடமாட்டார்களா?
இதெல்லாம் வெறும் Cliche` என்று பலர் வாதாடினாலும் அல்லது ஒதுக்கினாலும் அதை மீண்டும், மீண்டும் செய்துகொண்டிருந்தால் நாங்கள் மீண்டும் அதைப் பேசவேண்டியுள்ளது. அது தவிர, ஓர் பேச்சு வழக்கில் உள்ளது போல், ஆணின் போதைக்கும் பெண்தான் ஊறுகாய். சாமானியனின் போதை, சாமியார்களின் போதை எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள பெண் தான். அவரவர் தகுதிக்கும், தராதரத்திற்கும் ஏற்றாற்போல் பெண் பலியாகிறாள் என்பதற்கு சமூகத்தின் எல்லா நிலைகளிலும், அளவுகளிலும் நிறைந்திருக்கும் அவலங்களே சாட்சி. அதை நான் அதிகம் பேசவேண்டியதில்லை. தாய்மை பற்றி நான் பேசவே வேண்டியதில்லை. அதற்கு எந்தப்பெண்ணும் சன்மானம் கேட்பதில்லை. அது இயற்கை அளித்த வரம். விவாதப்பொருளல்ல.
_______________________________________
இப்போது பொதுவாய் பெண்ணாய் பேசாமல் இந்த பதிவை எழுதியவர் என்கிற ரீதியில் பேசுகிறேன். சமூகத்தில் எல்லா தரங்களிலும் (Level) பெண் உடல், உள ரீதியாக துன்புறுத்தப்படுகிறாள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. நீண்ட நாட்களுக்கு முன் பெண்கள் பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரை படித்ததாய் ஞாபகம். அதில் குறிப்பிட்டிருந்தார்கள் சமூகத்தின் எல்லா தரங்களிலும் பெண்ணுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதாக. ஆனால், மத்திய, செல்வந்த வர்க்கங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வெளியே அதிகம் கசிவதில்லை என்று. ஆக, இவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், சமூகத்தில் நல்ல நிலைகளில் இருப்பவர்கள் கூட பெண்களின் உரிமைகளை மதிப்பதில்லை என்பதைத்தான் அந்த கட்டுரை எனக்கு உணர்த்தியது.
இதை இந்த ஆண்கள் எங்கிருந்து கற்றுக்கொள்கிறார்கள்? அல்லது எது அவர்களை பெண்ணை ஓர் இரண்டாந்தர குடியைப் போல் பார்க்க வைக்கிறது? என்னைக்கேட்டால் இந்த சமூகமும், அதன் பெண்ணுக்கான கற்பிதங்கள், ஊடங்கங்கள்தான் அவற்றை ஆண்கள் புத்தியில் திணிக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. இதற்கெல்லாம் நாங்களும் மெளனமாய் அங்கீகாரம் வழங்கிக்கொண்டிருக்கிறோம். இந்த மகளிர் தினத்திலாவது இந்த சமூக ஏற்பாடுகள், பெண்ணின் மன அழுத்தங்கள் பற்றி கொஞ்சம் பேசுவோம், சிந்திப்போம், செயற்படுவோம்.
- ரதி.

3/11/10

என் தோழி என்ன தவறு செய்தாள்? – சந்தனமுல்லை

சந்திராவை தெரியுமா உங்களுக்கு…சத்தமாக்கூட பேசமாட்டா. பேசறதே அவ்வளவு மெலிதான குரலா இருக்கும். ‘கோவம் வந்தா கூட உன் குரல் இப்படித்தான் இருக்குமா சந்திரா’- ன்னுக்கூட கேட்டிருக்கேன்…அதுக்கும் ஒரு சின்ன புன்னகைதான். எங்க பேட்ச்லே எல்லோரும் வேலைக்குப் போகணும்ன்ற லட்சியத்தோடவெல்லாம் படிக்கலை. படிச்சுட்டு முதல்லே கல்யாணம், அப்புறம் சூழ்நிலை அனுமதிச்சா வேலைன்ற மாதிரி சில பேரு இருந்தாங்க. அந்த சில பேருலே சந்திராவும் ஒருத்தி. அவங்களோட அந்த மாதிரி மனநிலைக்கு நிறைய காரணங்கள் இருந்தது. சந்திராவுக்கு அப்பாவோட ரிடையர்மெண்ட் காரணமா இருந்துச்சு. ரிடயர்டு ஆகிறதுக்குள்ளே பொண்ணோட கல்யாணத்தை முடிச்சுடணும்னு எல்லா மத்திய தர பெற்றோருக்கும் இருக்கும் நெருக்குதல்தான்.

கடைசி செமஸ்டர் நெருங்கும்போதே சிலருக்கு ‘சிங்கப்பூர் மாப்பிள்ளை, அமெரிக்க மாப்பிள்ளை’ன்னு ஃபிக்ஸ் ஆகி இருந்தது. எல்லோரும் எல்லோருடைய கல்யாணத்துக்கும் கண்டிப்பா போகணும்-ன்ற ப்ராமிஸோட பிரிஞ்சோம். அதே மாதிரி ஆரம்பத்துலே நடந்த மூணு நாலு கல்யாணத்துக்கு ஒண்ணா போனோம். கல்யாணம் ஆனவங்கள்ளாம், அதுக்கு அப்புறம் நடந்த கல்யாணங்களுக்கு வரலை. ஒண்ணு கண்டம் தாண்டி போயிருப்பாங்க இல்லேன்னா உடல்நிலை இடம் கொடுக்காது. இதுலே ஒரு ஆச்சர்யம், யாருக்கெல்லாம் முதல்லே கல்யாணம் நடக்கும்னு கணக்கு பண்ணி வைச்சிருந்தாங்களோ அதுலே சிலருக்கு மாப்பிள்ளை அமையாம இருந்துச்சு. சந்திராவும் மாப்பிள்ளை அமையாத லிஸ்ட்லே இருந்தா.

நானும் லதாவும் வேலை தேடி சென்னை வந்துட்டோம். எங்க ஆஃபிஸிலே ஏதாவது வேலை காலி ஆகற மாதிரி அல்லது புது வேலை வாய்ப்பு உருவாகற மாதிரி இருந்தா எல்லோருக்கும் ஃபோன் பண்ணி சொல்வோம். சந்திராவோட ஊர் உடுமலைபேட்டை. அவங்கப்பாவோட வேலைன்னாலே ஆழியார்ன்ற ஊரிலே இருந்தாங்க. நாங்க சந்திராவை கூப்பிடும்போதெல்லாம், ‘எங்க அம்மா அனுப்ப மாட்டேங்கறாங்கப்பா, யாராவது பார்க்கணும்னா உடனே ஊருக்கு வர முடியாது’ -ன்னு சொல்லி மறுத்துடுவா. கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சவால் விட்டிருந்த நானும் வீட்டுக்கு அடங்கி கல்யாணமாகி பெங்களூர் போயிருந்தேன்.

எங்கள் க்ரூப் மெயில்லே சந்திரா ஒரு மெயில் அனுப்பியிருந்தா. ‘நானும் பெங்களூரிலேதான் இருக்கேன், நீ எங்கே இருக்கே’ன்னு அவ தங்கியிருந்த முகவரி,மொபைல் நம்பர் எல்லாம் கொடுத்திருந்தா. ஏதோவொரு கம்ப்யூட்டர் பயிற்சி நிலையத்துலே டெஸ்டிங் கோர்ஸ் படிச்சுக்கிட்டிருக்கா. அவங்களே வேலைக்காக நேர்முகத்தேர்வு ஏற்பாடு செய்வாங்க. அதில் தேர்ச்சி அடைந்து வேலை பெறுவது நமது சாமர்த்தியம். ஒருநாள், வீட்டுக்கு வந்து கொஞ்சம் டாக்குமெண்ட்ஸ், நேர்முகத்தேர்வுக்கு தயார்படுத்திக்கற மாதிரி எல்லாம் பேசிட்டு போனா. அப்போ சந்திரா சொன்னது என்னன்னா, ஜாதகம் பொருந்தி வர்ற எல்லா மாப்பிள்ளைங்களும் பொண்ணு வேலைக்கு போகலைன்னு நிராகரிக்கறாங்க. ஒரு சிலர் நேரடியாகவே நிராகரிக்கறாங்க. அதனாலே அம்மாவே என்னை ஏதாவது வேலை தேட சொல்றாங்க. ஆனால், இவ்ளோ நாள் வேலை செய்யாமல் இரண்டு வருட இடைவெளிதான் ரொம்ப இடிக்குது.

இதைச் சொல்லும்போதும் சந்திராக்கிட்டே கோவத்தையோ இல்லே எரிச்சலையோ பார்க்கலை. அதே சமயம், நம்பிக்கை இல்லாமலும் இல்லை. இதை எல்லாம் அனுபவிக்கறதுதான் நம்ம வாழ்க்கைன்னு அவ அமைதியா ஏத்துக்கிட்ட மாதிரிதான் இருந்தது. நானா இருந்தா, அம்மாக்கிட்டே எரிஞ்சு விழுந்திருப்பேன். என் கல்யாணத்துக்கு வச்சிருக்கற காசை தாங்க, ஏதாவது பேங்க்லே போட்டுட்டு வட்டியை வச்சு ஜாலியா இருப்பேன்னு சண்டை போட்டிருப்பேன். சந்திராவுக்கு விதவிதமா ட்ரெஸ் செஞ்சுக்கறதுலே ஆர்வம், என்னை மாதிரியே. நாங்க ரெண்டு பேரும் அம்மா புடவையை ஹாஸ்டலுக்கு எடுத்துட்டு வந்து நாங்களே டிசைன் செஞ்சு தைக்க கொடுப்போம். பெங்களூர்லேயும் சந்திரா நல்ல டைலரை கண்டுபிடிச்சிருந்தா. வாரா வாரம் எங்கேயாவது போய் துணி வாங்கிட்டு வர்றதுதான் அவளுடைய பொழுதுபோக்கா இருந்துச்சு. அவளுக்கு ரொம்ப ஈடுபாடுன்னா – அந்த ட்ரெஸ் டிசைனிங்தான்.

அந்த கோர்ஸ் முடியறப்போவே சந்திராவுக்கு கோயமுத்தூர்லேயே வேலையும் கிடைச்சது. ஊருக்குப் போன ஆறுமாசத்துலே அவளுக்கு நிச்சயமும் ஆயிடுச்சு. மாப்பிள்ளையும் உடுமலைப்பேட்டைதான். ஆனா, அவர் வேலை செய்றது சென்னையிலே தாம்பரத்துலே ஆஃபிஸ். குடியிருக்கிறது பெருங்களத்தூர். அதனாலே இப்போ சந்திரா சென்னையிலே வேலை தேட ஆரம்பிச்சா. ஆனா, எதுவும் அமையலை. இப்போ வேலை செய்யிற இடத்துலே, வீட்டுலே இருந்துக்கூட வேலை செய்யலாம்னு வசதி இருந்தது போல. அதனாலே கல்யாணமாகி பெருங்களத்தூர் வந்தப்பறம் சந்திரா வீட்டுலே இருந்து வேலை தொடர்ந்துக்கிட்டு இருந்தா. அப்புறம், எப்போவாவது ஒரு வாரம் மட்டும் கோயமுத்தூர் போய் ஆஃபிஸிலே வேலை செய்யணும். அந்த சமயங்கள்லே மட்டும் அம்மா வீட்டுக்கு போய்ட்டு அங்கிருந்து ஆஃபிஸ் போய்ட்டு வர ஏற்பாடு.

கல்யாணத்துக்கு போக முடியாததாலே, சென்னையிலே இருக்கற நண்பர்கள் எல்லோரும் ஒரு நாள் சந்திராவை நேரிலே போய் பார்த்துட்டு வரலாம்னு பேசிக்கிட்டோம். ‘நீ எந்த வாரம் இருப்பேன்னு சொல்லு சந்திரா, நாங்க வந்து பாக்கறோம்’- னு சொல்லியிருந்தோம். ஒரு ஆறு மாசம் போயிருக்கும். நடுவிலே பேசிக்கிட்டு இருந்தப்போ தெரிஞ்சது, சந்திரா கருவுற்றிருப்பது. இப்போ போலாம், அப்போ போலாம்னு கடைசிலே ஒரு சில வாரங்கள் கழிந்தன. கடைசியா ஒருநாள் போன் பண்ணினா மொபைல் ரீச் ஆகவே இல்லை. ஒரு சில வாரங்கள் கழிச்சு, விஷயம் தெரிஞ்சது, சந்திரா ஒரேயடியா உடுமலைக்கே போயிட்டான்னு .

சந்திரா சொன்னதெல்லாம் இதுதான் – டைவோர்ஸுக்கு அப்ளை பண்ணியிருக்கா. அவ ஹஸ்பண்ட் ஒரு சந்தேகப்பேர்வழி, அவ சம்பாரிக்கிறதை அவங்க அம்மா வீட்டுக்கு கொடுக்கறதா சண்டை போட்டிருக்கான். ஏடிஎம் கார்டு, அதோட கடவு எண் எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு அவளுடைய அத்தியாவசிய தேவைக்குக் கூட அவன் கிட்டேதான் கேக்க வேண்டிய நிலை. வீட்டு வேலைக்கு உதவியா யாரையும் வேலைக்கு வைச்சுக்கக் கூடாது. அவ ப்ரெக்னெண்டா இருந்தாலும் மெட்ரோ வாட்டர் எல்லாம் சந்திராவே போய்தான் தெருமுனையிலிருந்து எடுத்துக்கிட்டு வரணும். யாருக்கிட்டேயும் மொபைல்லே பேசக்கூடாது. வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. ஒரு கட்டத்தில் இதையெல்லா தாங்க முடியாமல் சந்திரா திணறி போயிருக்கிறாள். மீறி கேட்டதற்கு சண்டை வந்திருக்கிறது. சண்டை வலுத்து, ‘என் வீட்டை விட்டு போ’ -ன்னு ராத்திரி 12 மணிக்கு வெளியே தள்ளி கதவை சாத்தியிருக்கிறான்.

கையில் மொபைலோ,காசோ எதுவும் இல்லாத நிலையில், சந்திரா அவளோட குடும்ப நண்பருக்கு ஃபோன் பண்ணியிருக்கா. அவர், கிண்டியிலிருக்கும் அவரது வீட்டுக்கு கூப்பிட்டுட்டு போயிருக்கார். உடனே ஊருக்குப் போகணும்னு சந்திரா அப்போவே பஸ் ஏத்திவிட சொல்லியிருக்கா. மறுநாள் மதியம் வீட்டுக்கு வந்து சேர்ந்த சந்திராவுக்கு இந்த உளைச்சல், அலைச்சல் காரணமா கருக்கலைந்து ஒரு வாரம் நர்சிங் ஹோம்லே இருந்துருக்கா. அவன்கிட்டே, சந்திராவோட அப்பா பேசினதுக்கு மரியாதை இல்லாமே சந்திராவைப் பத்தி தப்பா பேசியிருக்கான். அவங்க சீர்வரிசையா கொடுத்த எந்த பொருளையும் திருப்பி தர முடியாது, கோர்ட் கேஸுன்னு போனா எனக்கு சாதகமாத்தான் வரும், உனக்குத்தான் வீண் செலவு, எந்த நகையும் கொடுக்க முடியாது, என்ன பண்ணனுமோ பண்ணிக்கோன்னும் சொல்லியிருக்கான்.

இது எல்லாம் நடந்தது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி. இப்போ சந்திரா கோயமுத்தூர்லே வேலை செய்றா. அம்மா-அப்பா கூட உடுமலையிலே இருக்கா. அம்மா கவலையிலே உடம்பு அடிக்கடி சரியில்லாமே போகுதுன்னு கவலைப்பட்டா. கேட்டுக்கிட்டிருந்த எனக்கு ஒரு சுனாமி வந்து போன மாதிரி இருந்தது. அப்புறம் சொன்னாள், ‘நல்ல வேளை நீங்கெல்லாம் வராதது, வந்திருந்தா அதுக்கும் என்னை டார்ச்சர் பண்ணியிருப்பான், ஏன் வந்தாங்க எதுக்கு வந்தாங்கன்னு’. ஆனா, அதே ஊரிலே இருந்தும் சந்திராக்கு தேவைப்பட்டப்போ உதவ முடியலையேன்னு கஷ்டமா இருந்தாலும், எல்லார்மேலேயும் எனக்கு கோவமா வந்தது.

சந்திரா சொல்லும் வரை ‘யாரு இப்போல்லாம் வரதட்சிணை வாங்கறாங்க’ ன்னுதான் மேம்போக்கா நினைச்சுக்கிட்டிருந்தேன். போடறதை போடுங்கன்னு சொன்னாலும் வேலைக்கு போனா வர்ற காசும் (மறைமுகமான ) வரதட்சிணையாதானே கணக்காகுது.பொண்ணு வேலைக்குப் போகணுமா இல்லையான்னு மாப்பிள்ளைகள்தான் முடிவு செய்கிறார்கள், சந்திராவின் அனுபவப்படி. வரதட்சிணை வாங்கினா வர்ற காசை விட சம்பளமா நிறைய காசு வருதேன்னு கணக்கு பண்றதை நினைச்சு எரிச்சலா வந்தது. என்னதான் பொண்ணுங்க படிச்சு வேலைக்குப் போனாலும் சம்பாரிக்கிற காசை கணவன் கையிலே கொடுத்துட்டு வீட்டு வேலை செஞ்சுக்கிட்டு இருக்க வேண்டிய நிலைமை இருக்கத்தான் செய்யுது.

இன்றைய இளைஞர்களுக்கு திருமணத்தின் மூலமாக கிடைப்பது கூடுதலான ஒரு ஏடிஎம் கார்டு – அதை முன்வைத்தே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.

சந்திராவின் கணவனது அருவருப்பான நடத்தையைப் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது….அதைப்பற்றிய கேள்விகளையும் பதில்களையும் உங்களிடமே விட்டு விடுகிறேன்.

என்னதான் பொண்ணை படிக்க வைச்சாலும், வேலைக்குப் போய் சுயமா இருக்கறதை விட கல்யாணம்தான் முக்கியம்னு நம் சமூகத்து பெற்றோர்கள் நினைப்பது ஏன்?

பொண்ணை ஏன் தன்னோட கடமையா, குடும்பத்து மானமா, கௌரவமா இன்னொரு வீட்டுக்கு போக வேண்டியவளா, சுமையா, செலவா நினைக்கறாங்க? (என்னோட ஃப்ரெண்ட் லஷ்மி சொன்னது இது, கசின்ஸ் எல்லாம் சேர்ந்தால் லஷ்மிதேவி ஈக்வல் டூ செலவுன்னு சொல்லுவாங்க-ன்னு)

பெண்கள் வேலைக்கு போறாங்க, வெளியுலகத்தை பார்க்கறாங்க என்றதையெல்லாம் தாண்டி உண்மையான் பொருளாதார விடுதலை கிடைச்சிருக்கான்னா சந்தேகம்தான். வீட்டில் நிலைமை அப்படியேதான் இருக்கு. ஐடியில் வேலைப் பார்க்கும் பெண்களைத்தான் மணமகன் சமூகம் எதிர்பாக்குது. ‘உன்னோட சம்பளத்தை என் கையிலே வர வைக்கறேனா இல்லையா பார்’-ன்னு மருமகள்கிட்டே சண்டை போட்டு மகனைப் பிரிச்சு வைச்ச மாமியாரை எனக்கு தெரியும். உண்மையில் பொருளாதார சுமைகளை சுமப்பதில் இருவருக்கும் சம உரிமை கிடைத்திருக்கிறதுன்னு வேணும்னா சொல்லிக்கலாம். மத்தபடி, பெண்கள் நிலை வீட்டில் இன்னும் மாறலை.

இது சந்திராவின் வாழ்க்கை மட்டுமல்ல. தேவிகாக்கள், அனுக்களின் கதையும் இதுதான். அவர்களின் வாழ்க்கை உணர்த்துவதெல்லாம் ‘இந்த பொருளாதார சந்தையில் பெண்ணும் ஒரு சரக்கு. அவளும் ஒரு நுகர்பொருள்’ என்ற எண்ணத்தைத்தான்.

இதற்காக குடும்பம் என்ற ஒன்றே தேவையில்லை என்றெல்லாம் சொல்ல வரவில்லை. எந்த சராசரி மனிதருக்கும், பெண்ணுக்கும் சரி – ஆணுக்கும் சரி குடும்பம் இல்லாத வாழ்க்கை என்பது நடைமுறையில் சிக்கலானது. ஆணுக்கு குடும்பத்துக்குள் இருக்கும் அதே உரிமைகள் பெண்ணுக்கும் இருக்கட்டுமே. பெண்ணும் அதே சுதந்திர காற்றை சுவாசிக்கட்டுமே.

சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவைப் பாத்த்தேன். ஆணும் பெண்ணுக்கு சமையல் வேலைகளில் உதவ வேண்டுமென்பதாக. அதில் காணக்கிடைக்கும் சில பின்னூட்டங்கள் கொஞ்சம் சமையலறையிலிருந்து வெளியில் வந்திருக்கும் பெண்ணை திரும்ப சமையலறைக்கு எடுத்துச் செல்வதாக இருந்தன. ‘ஆண் சமையலில் உதவலாம், தப்பில்லை, எப்போதெனில் மனைவிக்கு உடல்நலம் சரியில்லா வேளைகளில் உதவலாம், மற்ற நேரங்களில் மனைவியே சமையலுக்கு பொறுப்பு, என்ற ரீதியில்! இது வெளியிலே ஜான்நாயகம்..ஆனால் உள்ளுக்குள்ளே சர்வாதிகாரம். ‘கொஞ்சம் உதவுவோம்’ என்ற சொல்லுவதில் வெளிக்காட்டிக்கொள்ளப்படும் ‘பெருந்தன்மை’!!

அதுக்காக ஆண்கள் சமையல் வேலைகளில் உதவுவதே இல்லையா என்று சண்டைக்கு வராதீர்கள்.

‘இது என் ஹஸ்பெண்ட் செஞ்ச சாம்பார் சாதம்’னு நண்பர்களுடன் ஒன்றாக லஞ்ச் சாப்பிடும்போது சொல்கிறேனென்று வைத்துக்கொள்ளுங்கள். ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? அடிபபாவி என்றோ அல்லது கிண்டல் தொனியோதான் பதிலாக கிடைக்கும். ஏதோ செய்யக்கூடத மகாபாவத்தை நாம் செய்ய வைத்துவிட்டது போல. கொஞ்சம் நஞ்சம் வரும் ஆண்களையும் இப்படிக் கிண்டல் செய்து ஓட்டிவிட்டால்…..ம்ம்…சில சமயங்களில் ஆண்களின் ரெப்-ஆக பெண்களே இருக்கிறார்கள்.

இன்று இவ்வளவு பேசிக்கொண்டிருக்குபோது NDTV-யில் நடந்துக் கொண்டிருப்பது என்ன? ராகுல் மகாஜன் மூன்று பெண்களில் எந்த பெண்ணை தேர்ந்தெடுப்பார் என்றுதானே?

- சந்தனமுல்லை.

_______________________________________
சந்தனமுல்லை – ”எம் சி ஏ பட்டதாரி. பள்ளி படிப்பை இந்து மேனிலைப் பள்ளி,ஆம்பூரிலும், கல்லூரி படிப்பை அன்னை தெரசா மகளிர் பல்கலை., கொடைக்கானலிலும் முடித்தேன். தற்போது, ஒரு தனியார் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறேன். மகள் மற்றும் கணவருடன் சென்னையில் வசித்து வருகிறேன். எனது சிறுவயது நினைவுகளை பதிவு செய்ய தொடங்கிய வலைப்பூ, தற்போது மகளுடனான தருணங்களையும், சமூகத்தில் என்னை பாதித்த நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்கிறேன். ”

சந்தனமுல்லையின் வலைப்பூ: http://sandanamullai.blogspot.com

3/9/10

பெண் ஏன் இப்படியானாள்? – தமிழச்சி

இதோ வந்துவிட்டது. மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம் [International Women's Day]

வருடத்திற்கு ஒருமுறை ஏதேதோ தினங்களும், விழாக்களும் வருகின்றன. அதுபோலத்தானே இந்த மகளிர் தினமும் என்று பெண்களாலேயே நினைக்கப்படும் அளவிற்கு மேட்டுக்குடியினராலும், விளம்பர நிறுவனங்களாலும், அரசாங்கத்தாலும் நடத்தப்படும் ‘ஃபேஷன் ஷோ’ போல் ”பெண்களின் குரல்” [Women's veice] ஆக்கப்பட்டிருக்கிறது.

சாதாரண பெண்கள் ஒன்றுக்கூடி சாதனைப் பெண்களின் போராட்டங்களை ஒப்புவித்துவிட்டு பின்னர் அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களுக்கு பல் இளித்துவிட்டு மேடை அலங்காரிகளாக ஒவ்வொரு வருடமும் காட்சியளிக்கும் ‘ஷோ’க்களைக் கண்டு ஆற்றாமையே மிஞ்சுகிறது.

பெண்களுக்காக சர்வதேச அமைப்புகள் ஏற்படுத்தி அனைத்து நாட்டு பெண்ணியவாதிகளையும் ஒன்றிணைத்து பெண்ணுரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1857-இல் நியூயார்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி போராட்டங்களை முன்னெடுத்த அசாத்தியமும், அம்மாநாட்டில் பிரேரிக்கப்பட்ட புரட்சிகர தீர்மானங்களான சட்ட சீர்திருத்தங்கள் மூலம் சலுகைகள், திருமணமான பெண்களுக்கு சொத்துரிமை, தொழில், கல்வியில் அதிக வாய்ப்பு, வணிகத்துறையில் வாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்தும், வேலை வாய்ப்புகள், கருச்சிதைவு உரிமை, குழந்தைப் பராமரிப்பில் ஆணுக்குரிய சலுகை, விவாகரத்து உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டு பெண்கள் வென்றெடுத்த உரிமைகள்தான் இன்று பல நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டிருக்கின்றன.

சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியில் [14.06.1789] போராடிய பெண்கள், “ஆண்களுக்கு நிகராக பெண்களும் நடத்தப்பட வேண்டும்” என்றும், “வேலைக்கேற்ற ஊதியமும், எட்டு மணிநேர வேலையும், வாக்குரிமை பெண்களுக்கும் வேண்டும்” என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பிரான்ஸ் மன்னனுக்கு எதிராக போராடி வென்றெடுத்த வெற்றி ஐரோப்பிய பெண்களுக்கும் நம்மாலும் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்தைக் கொடுத்து அவர்களும், போராடி வென்ற பெண்ணிய உரிமைகளும்….

இன்றைய நம் தமிழச்சிகளுக்கு இல்லாமல் போய்விட்டதே ஏன்?

இன்றைய காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட போராட்டங்களுக்கான சூழல்கள் எதுவும் இல்லை என்று சமாதானம் சொல்லாதீர்கள்.

சென்ற மாதம் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘அஜ்மல்கான்’ என்பவர் தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்ததையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் பர்தா அணிவதும், முகத்தை மறைக்க ஹிஜாப் அணிவதும் மத சம்பிரதாயம் என்றும், பெண்களை அவர்களின் கணவன் மற்றும் உறவினர்கள் மட்டுமே பார்க்கவேண்டும் என்பது அய்தீகம் என்றும், ஆனால் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியாமலும், ஹிஜாப் அணியாமலும் உள்ள ஒளிப்படங்கள் வாக்காளர் பட்டியலில் அச்சிடப்பட்டுள்ளது என்றும் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள சட்டப் பிரிவு 25-இன்படி மதப் பாதுகாப்புப் பிரிவுக்கு எதிரானது என்று வழக்கு.

வாக்காளர் உண்மையானவரா, போலியா என்று அறிந்து கொள்ளத்தான் புகைப்படங்கள். அதிலும் முகத்தையும், கண்களையும் மறைத்துள்ள படத்தை வெளியிட வேண்டும் என்றால் வாக்காளர் உண்மையானவரா என்று எப்படி அறிந்து கொள்வது?

இவ்வழக்கு தாக்கல் குறித்து தமிழ்நாட்டு மகளிர் சங்கங்கள் எந்த எதிர்வினையாவது செய்ததா? இல்லையே, ஏன்?

மதப் பிரச்சனைக்குள் நுழைய வேண்டுமா என்னும் யோசனை! இந்த சிந்தனை தடங்கள் பெண்ணியத்திற்கு ஆபத்தானது. உலகில் பெண்ணியத்திற்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் மதங்களின் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்ததால்தான் பெண்கள் போராளிகளாக முடிந்தது. உரிமைகளை வென்றெடுக்கவும் முடிந்தது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் [IDEOLOGY], வர்க்கம் [CLASS], உயிரியல் [BIOLOGY], சமூகவியல் [SOCIOLOGICAL], பொருளாதாரமும் கல்வியும் [ECONOMICS AND EDUCATION], சக்தி [FORCE], மானுடவியல் [ANTHOROPOLOGY], உளவியல் [PHYCHOLOGY] என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக ‘கேட் மில்லட்’ பெண்ணிலை குறித்து குறிப்பிட்டிருக்கிறார். அதனுடன் மார்க்சியப் பெண்ணியம், தேசியப் பெண்ணியம், மேலைப் பெண்ணியம், இஸ்லாமியப் பெண்ணியம், தலித் பெண்ணியம் என பன்முகத் தன்மையில் நம் சமுகத்தில் பெண்ணிய நோக்கு விரிகிறது.

தமிழ்நாட்டு பெண்ணியவாதிகள் இதுவரை எந்த கோணத்தில் பெண்ணியத்திற்காக போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்?

தமிழ்சூழலின் பெண்ணியம் குறித்து பேசுவதென்றால் ஓர் ஆஸ்திகவாதிகளால் நிச்சயம் முடியாது.

“இன்று பெண்ணுரிமையைப் பற்றி பேசும் நாம் எந்த நிலையில் இருந்து கொண்டு பேசுகிறோம்? இதைப் பற்றிப் பேச நமக்கு யோக்கியதையோ, உரிமையோ உண்டா? நாம் ஆஸ்திகர்களா? நாஸ்திகர்களா? இது விஷயத்தில் நம்முடைய ஆராய்ச்சியோ, முடிவோ நமக்கு ஆதாரமா? அல்லது இது விஷயத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் முடிவே நமக்கு ஆதாரமா? என்பவனற்றை முதலில் நாம் யோசித்துப் பார்த்த பிறகே விஷயத்தைப் பற்றி பேசவேண்டும். ஏனென்றால் பெண்கள் விஷயத்தில் இன்று உலகில் உள்ள மதங்கள் எல்லாம் ஏற்கனவே ஒரு முடிவுகட்டி விட்டது. அம்முடிவுகள் வேதமுடிவு, கடவுள் வேதத்தின் மூலமாய்ச் சொன்ன முடிவு என்று சொல்லப்படுகிறது.

கிறிஸ்தவர்களுடைய வேதத்திலும், முகமதியர்களுடைய வேதத்திலும், இந்துக்கள் வேதத்திலும் பெண்களுக்குச் சம உரிமை இல்லை. சில உரிமைகள் இருந்தாலும் அவை வரையறுக்கப்பட்டு அதற்கு மேல் ஒன்றும் செய்யக் கூடாது என்ற தீர்ப்பில் இருக்கிறோம். ஆகவே இப்போது நமது ஆராய்ச்சியின் பயனாய் ஒரு முடிவு வருவோமானால் அம்முடிவு நமது மத வேத கட்டளையை மீறி நாஸ்திகமாவதா? அல்லது ஆஸ்திகத்துக்கு பயந்து நமது முடிவுகளைக் கைவிட்டு விடுவதா? என்பதை முதல் தீர்மானித்துக் கொண்டு பிறகு இந்த வேலையில் இறங்க வேண்டும். இல்லாவிட்டால் நமது வேலைகள் எல்லாம் வீண் வேலையாகப் போய் விடாதா?” என்கிறார் பெரியார். [ஆதாரம்: பெரியார் களஞ்சியம். தொகுதி: 5, பக்கம்: 211]

எத்தனை பெண்கள் ‘நாத்திகம்’ பேசத் தயாராக இருக்கிறார்கள்?

இந்தியாவில் பெண்களில் 70 சதவீதம் குடும்ப வன்முறைக்கு [Domestic Violence] உள்ளாக்கப்படுகின்றனர் என்று 2005-இல் எடுக்கப்பட்ட கணக்கு குறிப்பிடுகிறது. அதில் பெரும்பான்மை மதச்சார்பான வரதட்சணை பிரச்சனையும் முக்கியமானது.

குடும்ப வன்முறையில் [Domestic Violence] இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் ஐரோப்பாவில் எப்பொழுதோ வந்துவிட்டது. இந்தியாவில் 2005-இல் தான் சட்டங்கள் உருவாக்கப்பட்டன என்றால் பெண்ணுரிமையில் எந்தளவு பின்தங்கிய நிலையில் இந்தியா இருந்திருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். இருந்தும் பெண்கள் இச்சட்டங்கள் துணையை நாடுவதும் மிகக் குறைவு.

“உற்பத்தி சக்தி உள்ளவர்கள் ஏற்படுத்தும் உறவே சமுதாய நிர்வாகம்” என்கிறார் கார்ல் மார்க்ஸ்.

பொருளாதார ரீதியாக கணவனைச் சார்ந்திருக்கும் பெண்கள் குடும்ப வன்முறைகளுக்கு அனுசரித்தே செல்கிறார்கள். கார்ல் மார்க்ஸ் கூறியது போல உற்பத்தி சக்தி உள்ள ஆண் பொருளாதாரத்தை ஈட்டுகிறான். வீட்டில் இருக்கும் பெண்ணின் உற்பத்தி சக்தி என்பது குடும்ப பொறுப்புக்கள் என்னும் பேரால் எந்த பலனும் அவளுக்கின்றி வீணடிக்கப்படுகிறாள். அதில் சோர்வு தட்டிவிடக்கூடாது என்பதற்காக ‘பெண்ணின் சகிப்புத் தன்மை என்பது குடும்பத்திற்கு நல்லது என்ற போதனையே அவளுக்கு படிப்பித்திருக்கிறது’ சமூகம்.

துணிந்து கணவன் மீது போலிசில் புகார் செய்யும் பெண்களை மிக மோசமானவர்களாகவே இந்த சமூகம் அடையாளப்படுத்துகிறது.

இப்படி பல சமூக அழுத்தங்களுடன் பெண் என்ன செய்கிறாள்? தன் பிரச்சனையை எப்படி எதிர்நோக்குகிறாள்?

பொருளாதார விடுதலைதான் பெண் விடுதலையின் முதல் படி.

அப்படிப் பார்த்தால் முன்னெப்போதைக் காட்டிலும் பெண்கள் படிப்பதும், வேலைக்குப் போவதும் அதிகரித்திருக்கிறது.

காலை 7 மணிக்கெல்லாம் தூக்கம் கலையாத தந்தைமார்களின் தோளைப்பற்றியபடி வந்து இறங்கி, பொறியியல் கல்லூரிப் பேருந்துகளில் அவசரம் அவசரமாக ஏறி, அமர்ந்த மறுகணமே படிக்கத் தொடங்கும் மாணவிகள்; சிறுவர் உழைப்பு தடை செய்யப்பட்டுவிட்டதால், அந்த இடத்தை நிரப்புவதற்காக ஓட்டல்களில் மேசை துடைத்துக் கொண்டிருக்கும் பெண் சிப்பந்திகள்; தினம் 5, 6 வீடுகளில் வேலை செய்யத் தோதாக சைக்கிளில் விரையும் வீட்டு வேலை செய்யும் பெண்கள்; டிபார்ட்மென்டல் ஸ்டோர் காமெராக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தமக்குள் குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் விற்பனைப் பெண்கள்; மாலை நேரத்தில் ஆயத்த ஆடை நிறுவனங்களிலிருந்து களைத்துக் கசங்கி வெளியேறும் இளம் பெண்கள் – இவர்களெல்லாம் கடந்த பத்து ஆண்டுகளில் உழைப்புச் சந்தையில் புதிதாக நுழைந்திருப்பவர்கள்.

இந்தப் பொருளாதார சுதந்திரம் ஒரு பெண் என்ற முறையில் கூடுதல் சுதந்திரத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளதா? அல்லது பெண்ணடிமைத்தனம் புதிய வடிவங்களில் இவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை கவனித்தீர்களானால் பெண்களின் சுமைகள் இன்னும் அதிகரித்திருக்கிறதே தவீர ஒரளவுக்கு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறது என்றாலும் அச்சுதந்திரத்தை பெண் எப்படி உபயோகப்படுத்துகிறாள் என்பதையும் கவனித்தாக வேண்டும்.

புராணக்காலந்தொட்டே பெண்ணை உடலால் மதிப்பிடும் ஆண் பார்வை மாறவில்லை. இன்று அது நவீனமாக்கப்பட்டிருக்கிறது பெண் இதை உணரவில்லை. அல்லது உணரவும் விரும்புவதில்லை. சமூகம் அங்கீகாரத்திற்காக சமூகத்தோடு அனுசரித்துச் செல்வதே பாதுகாப்பானதாக பெரும்பான்மையான பெண்கள் நினைக்கிறார்கள். இது அடிமைத்தனத்தின் வெளிப்பாடே.

மாற்றம் என்பது இயற்கையாய் எல்லாத் துறையிலும் நடந்து வந்தாலும் நமக்கு அவசியம் வேண்டியதான மாற்றங்கள் நமக்கு நலமாக்கிக் கொள்ளும் மாற்றங்கள் பற்றி சிந்திக்க வேண்டியதும், அப்படிப்பட்ட மாற்றத்தில் ஈடுபட வேண்டியதும் அறிவுடைமையாகும்.

படித்த பெண்களில் இருந்து சாதாரண பெண்கள் வரை அரசியல் சமூகம் குறித்த விவாதங்களை பேசவிரும்புவதில்லை. அரசியல் சமூக விமர்சனங்கள் என்பது ஆண்களுக்கு உரியதாக நினைக்கிறார்கள். தங்கள் கருத்துக்களை முன்வைக்கும் போதுகூட தமக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள். புரட்சிகரமான சிந்தனைகளை குறித்து விவாதிப்பதென்றால் தாங்கள் கேவலமாக விமர்சிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சுகிறார்கள்.

வேறு சில பெண்கள் தங்கள் சுதந்திரம் என்பது எவை என்பதற்கு தங்களுக்கு ஏற்ப எல்லை வகுத்திருக்கிறார்கள். ஜீன்ஸ் போடுவதும் இரவு கேளிகை விடுதிக்கு செல்வதும் ஆணைப்போல் புகைப்பிடிப்பதும் சுதந்திர பாலியல் உறவும் பல ஆண்களை நண்பர்களாக வைத்திருப்பதும் இரவு நெடுநேரம் வெளியில் சுற்றிவிட்டு வருவதும் பெண்கள் விடுதலைக்கு போதுமானதாக நினைத்துவிடுகிறார்கள்.

பெரியார் சொல்கிறார்:
“பெண்களால் வீட்டிற்கு, சமூதாயத்திற்குப் பலன் என்ன? என்று பாருங்கள். எங்கு கெட்டபேர் வந்துவிடுகிறதோ என்பதுதானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைப்பது. அது எதற்கு?ஆணின் நலத்துக்குப் பயன்படுவதற்கும், ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் ஒரு உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன? என்று சிந்தித்துப்பாருங்கள்.”

-என்று 1946-இல் பெண்கள் நிலை குறித்து கேள்வி எழுப்புகிறார். 64-வருடங்களுக்கு பிறகும் பெண்களிடம் இதே கேள்வியை கேட்கும் நிலையில்தான் பெண்கள் இருக்கிறார்கள். கல்வி அறிவு இருந்தும் முற்போக்கு சிந்தனைகள் இல்லாமல் தனித்து இயங்கும் தன்மையற்றும் இருக்கிறார்கள்.

பெண்கள் இதுவரையில எந்த வாய்ப்புகளையும் பெண்ணியத்தின் முன்னேற்றத்திற்காக சரியான முறையில் பயன்படுத்தியது கிடையாது.

பதிவுலகில் கூட சிலவிதிவிலக்குகள் தவிர பெரும்பாலும் குழந்தை வளர்ப்பு, சமையல், அல்லது ஆண்களை பிரச்சினையில்லாமல் ஆசீர்வதிக்க முயலும் கொஞ்சல்களுமாகவே பதிவுகள் செல்கின்றன. பேஸ் புக் டிவிட்டரில் கூட நான்கு வரி கொஞ்சல்களுக்கு நாற்பது ஐம்பது ஆண்களின் பின்னுட்டங்களும் பெண்களுக்கு திருப்தியைத் தருகிறது.

சமீபத்தில் பேஸ்புக்கில் அண்ணா யுனிவர்சிட்டியில் ஆசிரியராக பணிபுரியும் ஆங்கிலக் கவிதாயினி எழுதியிருந்தார்:

“நான் பச்சை குத்தியிருப்பதைக் கண்டு என் அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அதனால் இன்னும் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் காமுறும் இடங்களில்” என்று 3 வரி வார்த்தைகளுக்கு ஐம்பது பின்னுட்டங்கள் எப்படி வந்திருக்கும்?

சமூகக் கிளர்ச்சிகளில் ஈடுபாடில்லாத பெண்கள் வார்த்தைக் கிளர்ச்சிகளில் ஆணோடு கொள்ளும் தொடர்பால் எந்த மாற்றம் வந்துவிடக்கூடும்?

ஒரு பெண்பதிவர் காத்திரமான ஒரு நிலைப்பாட்டை சாதி, மதம், ஆணாதிக்கம் குறித்து எழுதினால் அதனை ஆண்கள் விரும்புவதில்லை. பெண் பதிவர்கள் அப்படி எழுதுவதற்கு சுதந்திரமான வெளியாக பதிவுலகம் மாறவில்லை. சில விதிவிலக்குகள் தவிர பெயர், படம், முகவரி போன்றவற்றை மறைக்க வேண்டிய நிலையே பதிவுலகில் உள்ளது.

ஆணாதிக்கத்தை, தனிப்பட்ட முறையில் பேசித் திருத்த முடியாது. ஏனென்றால் அது தனிப்பட்ட விவகாரம் அல்ல. கணவன், அண்ணன், தந்தை என்ற தனி மனிதர்களின் மூலம்தான் அது வெளிப்படுகிறது என்ற போதும் அது ஒரு சமூக ஒடுக்குமுறை. எனவே பொதுவெளியில்தான் அதன் அழுக்கைத் துவைத்து அலச வேண்டும்.

இதுதான் இன்றைய தமிழ்சமூகத்தில் பெண்கள் நிலை. பெண்கள் ஒடுக்குமுறையில் இருந்து மீளவேண்டுமானால் சமூகக் களப்போரில் நுழையாவிட்டாலும் இணையத்திலாவது பெண்களில் சகல இடங்களிலும் ஒடுக்க முற்படும் போக்கை விமர்சிக்கவும் தங்கள் செயல்பாடுகளை ஆராயவும் தொடங்க வேண்டும்.

மகளிர் தினத்தில் மட்டும் பெண்ணுரிமை பேசி வாழ்த்து பரிமாறிக் கொள்வதால் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதுடன் முடித்துக் கொள்கிறேன்.

- தமிழச்சி

•தோழர் தமிழச்சி பிரான்சு நாட்டில் வசிக்கிறார். இணையத்தில் பெரியாரின் படைப்புக்களை அறிமுகம் செய்து வருவதோடு காத்திரமான சமூகவிடயங்களையும் தொடர்ந்து எழுதிவருகிறார். மேலும் PERIYAR AWARENESS MOVEMENT – EUROPE , பிரான்சு நாட்டில் பதிவு செய்யப்பட்ட ((பதிவு எண்: 0772014997)) பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தின் அமைப்பாளராகவும் இருக்கிறார்.
•அவரது இணைய முகவரி: http://tamizachi.com/