7/2/11

காங்கோ சிறுகதை : கடன்

”அந்தப் பொடிசு முகம் சுளித்தது “”அய்யே, நல்லால்லே கருப்பி.”
“”ஏய் வாண்டு, இந்தச் சாத்துக்குடி எவ்வளவு இனிப்பு தெரியுமா?” ஒரு சுளையை எடுத்து நன்றாகச் சப்பிச் சாப்பிட்டுக் காட்டினாள் கார்மென். பொடிசு முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. கார்மெனை கருப்பி என்று தான் கூப்பிடுவான் அந்தப் பொடிசு வில்லியம்ஸ். கார்மென், ஆப்பிரிக்கப் பழங்குடிப் பெண். வேலைக்காரி. அவள் எசமானனும், எசமானியும் பிரெஞ்சுப் பணக்காரர்கள்.
“”நல்ல கண்ணுல்லே… நான் கண்ண மூடித் தொறக்குறதுக்குள்ள லபக்குனு முழங்கிடுவியாம்…” கார்மென் மறுபடி கெஞ்சினாள்.
வில்லியம்ஸ் அக்குடும்பத்தின் ஒரே ஒரு செல்லப் பையன். அவனுக்குத் தனி அறை. கார்மென் இந்த அறையில்தான் அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள். அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
சுவர்க் கடியாரம் இரவின் 7 மணியை இசைத்தது. வீட்டுக் கூடத்தில் எசமானி, எசமான், அவர்கள் நண்பர்களின் பெருங்கூட்டம். கொஞ்ச நேரம் இரைச்சல், கொஞ்சநேரம் மயான அமைதி. சீட்டுக் கச்சேரி ஓடிக் கொண்டிருந்தது.
கார்மென் கண்டிப்போடு சொன்னாள்: “”நீ சாப்பிடலேன்னா அம்மா கிட்டேதான் சொல்லப் போறேன்.” சொல்லேன் என்பது போல முகம் காட்டிச் சிணுங்கினான் வில்லியம்ஸ். வலுவந்தமாக வில்லியம்ஸின் வாயைத் திறந்து ஒரு சுளையை உள்ளே தள்ளினாள். எது நடக்கக் கூடாதோ, அது நடந்தது. “ஓ’ என்று ஒப்பாரி வைத்தான் வில்லியம்ஸ்.
வீட்டுக் கூடத்திலிருந்து எசமானி ஓடிவருவது தெளிவாகக் கேட்டது. “”ஏய் கார்மென், என்ன செஞ்ச எரும?” சீட்டாட்டம் தடைப்பட்ட கோபம் அவளுக்கு.
“”அம்மா, சாப்பிட மாட்டேங்கிறாம்மா.”
“”பாவம் பச்சக் குழந்தயப் பலவந்தம் செஞ்சியா அறிவு கெட்டவளே. வில்லியம்ஸ், ஒனக்கு திராட்ச பிடிக்குமில்லே, சாப்பிடுறியா? ஏய் கார்மென், குழந்தயத் தொந்தரவு செய்யாம திராட்சயக் குடு.”
வில்லியம்ஸ் திராட்சையைச் சப்பிச் சப்பி உறிஞ்சிக் கடித்து வேகமாக விழுங்கினான். என்னைக்காவது ஒருநாள் ஒரு கொத்து திராட்சை சாப்பிட வேண்டும் என்று நினைத்தாள் கார்மென்.
மணி ஏழரைக்கு விரைந்தது. அடுத்தது, வில்லியம்ஸ{க்கு உடைமாற்ற வேண்டும்; அதற்கடுத்து, படுக்கை.
கார்மெனின் அவசரம் வில்லியம்ஸ{க்குப் புரியாது, புரியவில்லை. வேகவேகமாக நடையை எட்டிப் போட்டாலும் மெகெலெகெல்லேவில் இருக்கிற அவள் வீட்டுக்குப் போவதற்கு குறைந்தது ஒரு மணிநேரத்துக்கு மேல் பிடிக்கும். கார்மென் பதறினாள்.
வில்லியம்ஸ் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டான். “கருப்பி, ஒரே ஒரு பாட்டு கருப்பி’ அன்றைக்குப் பார்த்து ஒன்று, இரண்டு, மூன்று பாட்டுகளுக்குப் பிறகே வில்லியம்ஸ் கண் அசந்தான். முடுக்கிய ரேடியோப் பெட்டி போல கார்மென் பாடிக் கொண்டிருந்தாளே தவிர, அவள் நினைப்பு எங்கோ இருந்தது.
வில்லியம்ஸ் கொழுகொழுவென்று வளர்ந்தான். இவள் மகன் டேவிட் பாவம் எத்தனையோ முறை சாவை எட்டிப் பார்த்துவிட்டுக் காத்திருக்கிறான். பெரிய ஆளுங்கபோல இப்போதே வில்லியம்ஸ் வேலைக்காரர்களிடம் வேலை வாங்குகிறான். அந்தச் சட்டை வேண்டாம், இந்த டவுசர்தான் வேணும், இந்த நீலத்தொப்பிதான் வேணும், பிஸ்கட் வேண்டாம் கேக்தான் வேணும். உடனே பார்க் போகணும் எல்லாம் கேட்பான். பாவம் டேவிட், வாயைத் திறந்து எதுவும் கேட்க மாட்டான். வெளிஆட்கள் வீட்டில் இருந்துவிட்டால் ரொம்பக் கூச்சப்படுவான்.
டேவிட்டையும் பாசம் கொட்டி வளர்க்க வேண்டும் என்றுதான் கார்மென் ஆசைப்பட்டாள். ஆனால் அது வெறும் ஆசைதான். உலகம் இருக்கிற இருப்பில் அது கனவுதான். கார்மென் டேவிட்டை எண்ணி வருந்தினாள்.
அன்று காலை வேலைக்குப் போகவேண்டுமா என்றுதான் கார்மென் யோசித்தாள். முந்தின நாள் ராத்திரிபூரா டேவிட் அழுதுகொண்டேயிருந்தான். அடிக்கடி வயிற்றைப் பிடித்துக் கொண்டான் “வலிம்மா வலிம்மா’ என்று முனகினான். வாந்தி. பேதி. மூன்று முறை வாந்தி எடுத்தான். முதல் முறை வாந்தி எடுத்ததும் “இப்ப பரவாயில்லம்மா’ என்று சொன்னான். ஆனால் வாந்தி அடங்க வில்லை. மூன்றாவது முறை அவனது சின்னஞ்சிறு வயிறு உள்ளுக்குள் இழுத்து ஓங்கரிக்க, பச்சையாக தண்ணியாக வாந்தி எடுத்தான். மூச்சு துரத்தி வாங்கியது, நெற்றியில் வியர்வை துளிர்த்தது. அவனைச் சமாதானப் படுத்துவதற்குப் பதிலாக கார்மென் இடிந்து போனாள். ஏற்கெனவே பறிகொடுத்த இரண்டு குழந்தைகள் நினைப்பு நெஞ்சுக்குள் திரண்டு இறுக்கியது.
வளாகத்தின் இன்னொரு கோடியிலிருந்த அம்மாவைக் கூப்பிட்டு அனுப்பலாமா? அனுப்பலாம்தான். பீதியில் கார்மென் திகைத்தாள். ஏதோ ஒருவழியாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அம்மாவைக் கூப்பிட்டால் அவள் உடனே குடும்ப மாந்திரீகக் கிழவனிடம் டேவிட்டைத் தூக்கிக் கொண்டு போய்விடுவாள். கார்மெனுக்கு விருப்பமில்லை.
எசமான் வீட்டில் செய்வதுபோல “இங்கிலீஷ் வைத்தியமே’ நல்லது என்று நினைத்தாள். முந்திய இரண்டு குழந்தைகளையுமே அந்த மாந்திரீகச் சூனியக் கிழவன்தான் விழுங்கிவிட்டான். சடங்குகள் அவள் செல்வங்களைக் காப்பாற்றவில்லை. ஒவ்வொரு சாவும் ஒரு மாதச் சம்பளம் அளவுக்கு கடனைக் கூட்டியதுதான் மிச்சம். எங்கேயாவது வழியில் பார்த்தால், “”நீ உன்னோட அம்மா சொன்ன பயல கல்யாணம் கட்டிகிடலே, அதான் குத்தம். உனக்குச் சொன்னாப் புரியாது. பட்டுத்தான் கத்துக்குவே.” என்பான் கிழவன்.
அவர்கள் சிபாரிசு செய்த பயல் கிட்டோங்கா. அரசாங்கத்தில் கார் டிரைவர் வேலை. அங்கே அவனுக்கு எசமான் அவனே. வேலைக்குப் போய் வீடு வந்தால் சொந்தமாக வாங்கிப் போட்டிருந்த ஒரு மளிகைக் கடை, ஒரு சாராயக் கடை இரண்டையும் ஓர் எட்டிப் பார்த்து வரவும் கவனிக்கவுமே நேரம் சரியாக இருக்கும். கார்மென் வேலைக்கெல்லாம் போக வேண்டாம் வீட்டோடு ராணி போல இருக்கலாம். அவர்கள் இப்படிச் சொன்னார்களே தவிர அதற்குப் பின்னால் சங்கதி வேறு மாதிரி. அவனுக்கு ஏற்கெனவே இரண்டு பெண்டாட்டிகள், ஒருத்தி மளிகைக் கடைக்கு, இன்னொருத்தி சாராயக் கடைக்கு. கார்மென் வந்தால் வீட்டோடு மூன்றாவது பெண்டாட்டியாக இருக்கலாம்.
இப்போது கார்மென் இருக்கிற கதியே வேறு. அவள் மலைபோல் நம்பிக் காதலித்தவன் டேவிட்டையும் சேர்த்து மூன்று கொடுத்துவிட்டு, மூன்றாம் சுமை கொடுத்த பிறகு ஏமாற்றி சென்று விட்டான். அந்த வட்டாரத்தை விட்டே ஓடிவிட்டான். திரும்பி வருவான் என்று கொஞ்ச நாள் நம்பிக்கையோடு காத்திருந்தாள். அப்புறம் வேறு திருமணத்தையே வெறுத்து டேவிட்டைக் காப்பாற்றினால் போதுமென்று எல்லா ஆசைகளையும் அடக்கிக் கொண்டுவிட்டாள் கார்மென்.
டேவிட் ஏதோ கூப்பிட்டான். அவள் மடியில் தலை வைத்துத் தூங்க வேண்டுமாம். “தனியா இருக்க பயமா இருக்கும்மா’ என்று கெஞ்சினான். விடியும்வரை தாங்குவானா, தெரியவில்லை அவளுக்கு. எசமானி போல இருந்தால், ஃபோனிலேயே டாக்டரைக் கூப்பிடலாம், அவசரம் என்றால் டாக்டரின் வீட்டுக்கே கூட கார் போட்டுக் கொண்டு ஓடலாம். ஏழைகள் என்ன செய்ய முடியும்?
மருந்துக் கடைகளை இந்நேரம் அடைத்திருப்பார்கள். அரசு ஆஸ்பத்திரிக்குப் போகலாம், போனால், “நேரம் காலம் கெடயாதா உங்களுக்கெல்லாம்’ என்று அந்த ஆண் நர்ஸ் வள்ளென்று எரிந்து விழுவான். தனியார் வெள்ளைத்தோல் டாக்டர்கள் ராத்திரி நேரத்தில் ஏழைக் கருப்பர்களை பங்களா கேட்டுக்குள்ளேயே விடமாட்டார்கள். கார்மெனின் கற்பனை சட்டென்று நின்றது அந்த டாக்டர்களுக்குக் கொடுக்க காசு ஏது?
மிரண்டு போனாள் கார்மென். டேவிட்டை இழுத்து அணைத்து எடுத்து மடியில் கிடத்திக் கொண்டாள். டேவிட்டைப் பார்ப்பதும், அவனோடு கொஞ்சி விளையாடிய நாட்களை நினைவில் வருடுவதும், தூக்கமும் விழிப்பும் கலந்த ஒரு பயணமாக அவள் எங்கெங்கோ போனாள்.
விடியற்காலை. திடுமென விழித்துப் பார்த்தாள் டேவிட், பாவம் குழுந்தை, சுருட்டிப் போட்ட துணிபோல வாடிக் கிடந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவளுக்கு வேறு வழி இல்லை அவனை அப்படியே விட்டுவிட்டு என்றும்போல காலையில் நேரமே எழுந்து வேலைக்கு ஓடவேண்டியதுதான். எசமானிக்கு டாணென்று காலை ஏழரைக்கு அவள் கூப்பிடும் குரலுக்கு கை அருகே கார்மென் வேண்டும்.
இரவு சரியாக உறங்காததால் கார்மெனுக்கு அசதி. ஆனால் படுக்கையிலேயே கிடக்க முடியாது. வேலைக்கும் போக விருப்பமில்லை. அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போய் டேவிட்டுக்கு என்ன பிரச்சினை என்று தெரிந்து கொண்டு விட்டால் நல்லதென்று அவள் மனசு துடித்தது. எப்போது டேவிட்டுக்கு உடம்பு சுகமில்லாமல் போனாலும் அவனைத் தனியே விட்டு விட்டுப் போக அவள் விரும்ப மாட்டாள். ஆனால் விரும்பியபடி நடந்ததே யில்லை. அப்போதெல்லாம் துடித்துத் துடித்துக் களைத்துப் போய்விடுவாள்.
ஒருமுறை அவனை பங்களாவுக்குத் தன்னோடு அழைத்துப் போக விரும்பினாள் கார்மென். “”என் மகன் வில்லியம்ஸைப் பாக்கறதுதான் உன் வேலை. உன் பையனப் பாக்குறதுக்கு நான் சம்பளம் போடலே” என்று எச்சரித்து மூஞ்சியைத் திருப்பிக் கொண்டாள் எசமானி.
டேவிட்டை அப்படியே விட்டுவிட்டுப் போனாலும், அம்மாவோ, உறவுக்காரப் பெண்களோ வைத்தியம் பார்க்காமல் அப்படியே விட்டுவிட மாட்டார்கள் என்று கார்மெனுக்குத் தெரியும். பழங்குடிகளின் மனசில் குடும்பம் என்றால் எல்லோரும்தான், அது மிக மிகப் பெரியது. எது எப்படி நடந்தாலும் எந்த ஒரு குழந்தையையும் எப்போதும் தனியாக விட்டுவிட மாட்டார்கள். ஆனாலும் கார்மென் மனதில் கொஞ்சம் சந்தேகம்தான். தாய் வளர்ப்புபோல மற்றது இருக்காது, அதிலும் நாம் பெற்றெடுத்த குழந்தைகள் உடம்பு சுகமில்லாத போது அதிகம் நம்மைத் தேடும் என்பாள் கார்மென்.
இந்த மாசத்தில் மட்டும் இரண்டு முறை வேலைக்குப் போகவில்லை. ஒருமுறை, சேர்ந்தாற்போல இரண்டு நாள் ஜூரம் பாயில் கிடந்தவன் எழவே இல்லை. ரெண்டாவது முறை, ஒரு சாவுக்குப் போய் விட்டாள். எசமானி சீறுசீறென்று பாய்ந்து விட்டாள்.
அவளுக்கு என்ன சொல்லி எப்படி விளக்குவது? என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்துவிட்டாள். இந்த வெள்ளப் பன்னிகளுக்கு நெனப்பே நாங்க சோம்பேறிங்கறதும், அதனாலதான் வேலைக்கு வரமாட்டேங்குறோம்ங்கறதும்தான்.
டேவிட்டுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தும் இன்று கார்மென் வேலைக்குப் போனாள். உச்சி வெயில் நேரத்தில் அவள் தங்கை செய்தி கொண்டு வந்தாள். டேவிட்டுக்கு மருந்து வாங்கிக் கொடுத்துவிட்டார்கள், பயமில்லை. கார்மெனுக்குத் துணுக்கென்றது. இந்தப் பணத்துக்கு எப்படிச் சரிக்கட்டுவது? என்னவோ செய்யலாம், என்ன செய்தாகிலும் டேவிட் குணமாகிவிடணும்.
எஜமானியின் சீட்டாட்டம் இன்னமும் முடியவில்லை. அவள் எப்ப வருவது, எப்ப பணம் கேட்பது, எப்ப வீடு போய்ச் சேருவது? வில்லியம்ஸ் ஆழ்ந்து தூங்கி விட்டான். கார்மென் சமையலறைப் பக்கம் போய் கிழட்டுக் காவலாளி பெர்டினான்டிடம் பேசிக் கொண்டிருந்தாள். அவரிடம் மனசைக் கொட்டினால் பாரம் குறைந்து விடும்.
ஒருவழியாக எசமானி அங்கு வந்தாள். “”என்ன கார்மென், இன்னமுமா வீட்டுக்குக் கிளம்பலே?”
பணம் வேண்டுமென்று எப்படிச் சொல்வது கார்மென் திக்கினாள், தடுமாறினாள். “”இல்லம்மா… வந்து… கொஞ்சம் பணம் வேணும்….”
“”என்ன, மறுபடி கடனா? பத்து நாளைக்கு முன்னதானே வாங்கினே…”
“”பையனுக்கு உடம்பு சுகமில்ல, மருந்து வாங்கணும்மா….”
“”நல்லா இருக்குது உங்க கத… நா ஒன்னும் இங்க பொதுச்சேவ செய்யலே, புருசன் இல்லாம அவ அவ குழந்தையப் பெத்துக்குவீங்க, அத வச்சுக் காப்பாத்த மட்டும் முடியாது… ஏங்கிட்ட பணத்துக்கு ஓடி வந்துடுவீங்க…”
“”அம்மா அது தொரைமார் பேசற பேச்சும்மா…” கார்மென் துணிந்து பதில் சொல்லிவிட்டாள். ஆனால் அதை வளர்க்க விரும்பவில்லை. இப்போதைக்கு காசு வேணுமே?
“”அப்படிச் சொல்லு. உம் பையனுக்குச் சுகமில்லேங்கிறே. என்னைக்கு நீ எம்பேச்ச கேட்டிருக்கே? அவனுக்கு ஒழுங்கா சோத்தப் போடுன்னு எத்தன முறை தலைப்பாடா அடிச்சிக்கிட்டிருப்பேன்… முதல்ல அதச் செஞ்சியா?”
“”இல்லம்மா… வந்து…”
“”என்ன இல்லயும் நொள்ளயும். வெறுமனே கிழங்கு மாவக் காச்சி அவன் வயித்துல திணிப்பே… ஒங்களுக்கு வேற என்ன தெரியும்?”
“”நீங்க வில்லியம்ஸ{க்கு விதவிதமா ஊட்டுறீங்களே, அப்படியா நாங்க செய்ய முடியும்?” இப்படி கார்மென் பதில் சொல்லவில்லை, மனதில் நினைத்துக் கொண்டாள்.
“”இப்ப எங்கிட்ட காசு இல்லே. உங்களப்போல ஆளுங்களுக்கு என்னைக்குத்தான் ஒறைக்கும்? பணம் மரத்துலயா காய்க்குது? கொஞ்சமாவது பணத்தச் சேத்து வெக்கணும்னு உங்களுக்கு எட்டாதா?”
எசமானி கத்திக் கொண்டிருந்தாள். இவர்கள் வேகமாக பிரெஞ்சு மொழி பேசும் போதெல்லாம் கார்மெனுக்கு ஒன்றும் புரியாது. முழிப்பாள். வெறுமனே தலையைத் தலையை ஆட்டுவாள். இப்போதும் அப்படித்தான் செய்தாள். அதுவே எசமானியை இளக்கி விடுமோ? தெரியவில்லை. அவள் அறைக்குப் போய் கொஞ்சம் ஆஸ்பிரின் மாத்திரை கொண்டு வந்து கொடுத்தாள். அடுத்த நாள் கொஞ்சம் பணம் தருவதாக வாக்கு கொடுத்தாள்.
நாளைக்குக் கொடுத்து என்ன பயன்? நாளைக்குக் கொடுப்பாளென்பதும் என்ன நிச்சயம்?
ஒருவழியாக கார்மென் வீட்டுக்குக் கிளம்பினாள். கருப்பர்கள் குடியிருக்கிற மெகெலெகெல்லேவுக்கு அவள் போக ஒரு மணிநேரம் போல ஆகிவிடும். வழியேற குழம்பிக் குழம்பிப் பல சிந்தனை. எங்கிருந்தோ டேவிட் கூப்பிடுவது போலிருந்தது. நடையை எட்டிப் போட்டாள்.
“”பாவம் டேவிட்! பெரியவனானால் என்னைக் காப்பாற்றுவான். பெரியவன் ஆனால் அவனுக்கு என்மீது பாசம் இருக்குமா? இப்படி விட்டுவிட்டுப் போய்விடுகிறாளே பாவி என்று இப்போது சபித்துக் கொண்டிருக்கிறானோ? எனக்கு இங்கிலீஷ் வைத்தியத்தில்தான் நம்பிக்கை இருக்கிறது. அப்படி ஒருவேளை அம்மா இன்னக்கி ராத்திரி மாந்திரீகனைப் பார்க்க நிர்ப்பந்தம் செஞ்சா, போகவேண்டியதுதான்” கார்மென் அலைபாய்ந்தாள்.
எசமானிக்கென்ன? சேமிப்பு, மருந்து என்று எதைவேண்டுமானாலும் சொல்லுவாள். அவள் கிடக்கிறாள். மாசம் 100 ரூபாய் சேக்கணும்னா நடக்கிற காரியமா? கைக் கடியாரம் வாங்கினதுக்காக இதே எசமானியம்மா மாசாமாசம் கெடுபிடியா பணம் பிடிக்கிறா. இது இல்லாம ஊருக்குள்ளே சீட்டுப் பணம் கட்டணும். மீத மிச்சம் என்ன இருக்கு? மாசம் பூரா நான் செலவு செய்யிற பணம் எசமானி அம்மாவுக்கு ஒருநாள் சாப்பாட்டுச் செலவுக்குக் காணாது.
தெருக்களில் அனேக தெரு விளக்குகள் எரியவில்லை. இருட்டு வழிந்தோடியது. எதிரே வந்த கார்கள் முழு வெளிச்சமும் வாரி இறைத்துக் கண்களைக் குருடாக்கின. பின்னால் வந்த வாகனங்களோ மோதுவதுபோல அருகே தாண்டிப் போயின. யாரும் ஏற்றிக் கொள்ளவில்லை இத்தனைக்கும் கார்மெனைப் போல கருப்பர்கள்தான் டிரைவர்கள். இன்றைய உலகத்துல அவனவன் பாடு அவனுக்கு.
நாளைக்கு எசமானி பணம் கொடுக்கணும் கொடுப்பாளா? கார்மென் மறுபடி மறுபடி யோசித்தாள்.
வீடு சமீபமாக வந்தபோது பெண்களின் ஒப்பாரி வேகமாக வந்து தாக்கியது. ஐயோ டேவிட். மருந்து, மாந்திரீகன் எட்டாத இடத்துக்கு டேவிட் போய்விட்டானா, ஐயோ.
கார்மெனுக்கு கண்கள் இருண்டன.

6/30/11

"சாப்மி" : சாமிகளின் நாடு - ஓர் அறிமுகம்

வட ஐரோப்பாவின் பூர்வ குடிகளான சாமி இன மக்களின் தாயக பூமி, நான்கு நாடுகளின் எல்லைகளால் பிரிக்கப் பட்டுள்ளது. இன்று வரை, சாமி மக்களுக்கென்று தனியான நாடு கிடையாது. சாமி மக்கள் உரிமை கோரும் சாப்மி நாட்டை, ஐ.நா. அங்கீகரிக்கக் கோரி யாரும் போராடியதும் இல்லை. கடந்த 600 வருடங்களாக ஒடுக்கப்பட்ட இனம். ஒரு காலத்தில், அந்த மக்கள் தமது தனித்துவமான மொழியைப் பேசுவது கூட தடை செய்யப் பட்டிருந்தது. இன்றைய ஜனநாயக அரசுகள், கலாச்சார சுதந்திரம் வழங்கியுள்ளன. இருந்தாலும், பெரும் வணிக நிறுவனங்கள் அந்தப் பிரதேச வளங்களை சுரண்டுவதை தடுக்கவில்லை. ஐரோப்பாவின் அடக்கப்பட்ட சிறுபான்மை இனங்களில் ஒன்றான சாமிகளைப் பற்றிய சிறிய அறிமுகம் இது.

நோர்வே, சுவீடன், பின்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வட துருவத்தை அண்டிய பகுதிகளில் சாமி இன மக்கள் வாழ்கின்றனர். ஒரு காலத்தில் இந்தப் பகுதிகளில் பெரும்பான்மையினராக வாழ்ந்த சாமிகளின் வாழ்விடம், வந்தேறு குடிகளால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இன்று வளர்ச்சி குன்றிய, மனித நடமாட்டம் குறைந்த ஆர்க்டிக் வட்டத்திற்குள் மட்டும் சிறுபான்மை இனமாக வாழ்கின்றனர். அந்தப் பகுதிகளைச் சேர்ந்த நகரங்களில் பெரும்பான்மையின சமூகம் குடியேறி வருகின்றது. பூர்வ குடிகளான சாமிகள், நாட்டுப்புறங்களில் மட்டும் ஒதுங்கி வாழ்கின்றனர். ஸ்கண்டிநேவிய நாடுகளின் கடந்த ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில், ஒரு சிறுபான்மை இனத்தின் இருப்பு மறைக்கப் பட்டு வந்துள்ளது. இன்றும் கூட, அந்த நாடுகளின் மக்கள் ஒரே தேசிய மொழியை பேசுவதாகத் தான் வெளியில் உள்ள மக்கள் கருதுகின்றனர். மிக அண்மைக் காலத்தில் தான், சாமி மக்களின் கலாச்சார அடையாளங்கள் அங்கீகரிக்கப் பட்டன.

முதன் முதலாக, 12 ம் நூற்றாண்டின் நோர்வீஜிய (அல்லது டேனிஷ்) இலக்கியங்கள் சாமி மொழி பேசும் மக்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளன. நோர்வீஜியர்கள் அவர்களை "பின் (Finn) மக்கள்" என்று அழைத்தனர். தற்போதும் சாமி மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடமுனையில் உள்ள மாகாணம் பின்மார்க் என்று அழைக்கப் படுகின்றது. பின்லாந்து என்ற பெயரும் அவ்வாறே வந்திருக்கலாம். ஏனெனில், சுவோமி என்ற இயற்பெயரைக் கொண்ட பின்லாந்து மக்கள் பேசும் மொழிக்கும், சாமி மொழிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. அநேகமாக, புராதன காலத்தில் இருந்து நாடோடி சமூகமாக வாழும் மக்கள், தமது பண்டைய மொழியான சாமியை பேசி வந்திருக்கலாம். விவசாய சமூகமாக நாகரீகமடைந்த மக்கள், பின்னிஷ் மொழியை தனியாக வளர்த்தெடுத்திருக்கலாம். மொழியியல் அறிஞர்களால் "பின்னோ-உங்காரிய" மொழிக்குடும்பம் என்று அழைக்கப் படுகின்றது. சாமி மட்டுமல்ல, பின்னிஷ், கரேலியா, எஸ்தோனியா, ஹங்கேரியா போன்ற மொழிகளும் இந்தக் குடும்பத்தை சேர்ந்தவை. பிற ஐரோப்பிய மொழிகளுடன், ஒரு சொல் கூட ஒற்றுமையற்ற தனித்துவமான மொழிகள் அவை. சொற்கள் மட்டுமல்ல, இலக்கண வடிவம் கூட வித்தியாசமானது. அநேகமாக, இன்றைய ஐரோப்பிய சமூகங்களின் வருகைக்கு முன்பு வாழ்ந்த இனங்களாக இருக்கலாம்.

வட ஐரோப்பாவில் வாழும் சாமி மக்களின் மொத்த எண்ணிக்கை 60000 - 100000. அதிலும் பல்வேறு மொழிப் பிரிவுகள் உள்ளன. பொதுவாக, நாடுகளின் எல்லைகள் அவர்களின் வாழ்விடங்களை பிரித்துள்ளன. நோர்வே, சுவீடன், பின்லாந்து நாடுகளில் வாழும் சாமி இன மக்களுக்கு இடையிலான தொடர்புகள் தொடர்ந்தும் பேணப் பட்டு வந்துள்ளன. இவர்கள் தமது மொழிக்கான எழுத்து வடிவத்தை லத்தீன் அடிப்படையில் அமைத்துள்ளனர். அரிச்சுவடியில் சில விசேட வரி வடிவங்களும் உள்ளன. இதற்கு மாறாக, ரஷ்யாவை சேர்ந்த சாமிக்களின் மொழி, ரஷ்ய எழுத்துக்களைக் கொண்டு எழுதப் படுகின்றது. முன்பு பனிப்போர் காரணமாக, அவர்களுடனான உறவு துண்டிக்கப் பட்டிருந்தது.

குளிர்காலத்தில், - 40 பாகை செல்சியஸ் வரை உறையும் காலநிலைக்கு ஏற்றவாறு, சாமி மக்கள் வாழப் பழகியுள்ளனர். "லவ்வு" என அழைக்கப்படும் எளிமையான கூடாரங்களே அவர்களது வாழ்விடங்கள். அந்தப் பிரதேசத்தில் மட்டும் காணப்படும் துருவ மான் (Reindear) வளர்ப்பு தான், அவர்களது வாழ்க்கைக்கு ஜீவநாடி. மான் பிடிப்பது எப்படி என்று, சிறு குழந்தையில் இருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள். நமது ஊரில் மாடு வளர்ப்பதைப் போல, இவர்கள் துருவ மான்களை பிடித்து பட்டிகளில் அடைத்து வளர்ப்பார்கள். அந்த விலங்கினத்தின் இறைச்சி, பால், உணவாகப் பயன்படுகின்றது. அதன் தோலை எடுத்து, குளிருக்கேற்ற உடையாகவும், காலணியாகவும், அல்லது படுக்கை விரிப்பாகவும் தயாரிக்கின்றனர். சுமார் ஆறு மாத காலம், பனியால் உறைந்து போயிருக்கும் நிலத்தில் போக்குவரத்திற்கும் மான் பயன்படுகின்றது. பனியில் சறுக்கும் வண்டிலை மான்கள் இழுத்துச் செல்லும். நீங்கள் அனைவரும், கிறிஸ்துமஸ் தாத்தாவின் ஓவியத்தை பார்த்திருப்பீர்கள். உண்மையில் துருவப் பகுதி பழங்குடியினரான சாமி மக்களின் அடையாளம் தான் அது. கிறிஸ்துமஸ் தாத்தாவை சர்வதேச வணிகச் சின்னமாக்கிய ஐரோப்பியர்கள், அவரின் "உறவுக்கார சாமிகளை" அடக்கி ஒடுக்கினார்கள்.

முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்தில் ரஷ்ய சாமிகள், கூட்டுறவுப் பண்ணைகளில் மான்களை வளர்க்குமாறு வற்புறுத்தப் பட்டனர். சாமிக்களின் சமுதாயம் ஓரளவு பொதுவுடமைப் பொருளாதாரம் சார்ந்தது. இருப்பினும் சில வேறுபாடுகளும் இருக்கவே செய்தன. குறிப்பாக நாடோடி வாழ்க்கை கட்டுப்படுத்தப் பட்டது. ஓரிடத்தில் நிலையாக தங்க வைக்கப்பட்டனர். பண்ணையின் வருமானத்தின் ஒரு பகுதி அரசுக்கு கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அதற்கு பிரதியுபகாரமாக, முதன் முறையாக சாமியின பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகள் கட்டப்பட்டன. சோவியத் வீழ்ச்சியின் பின்னர் வந்த முதலாளித்துவ அரசு, பண்ணைகளுக்கு சொந்தம் கொண்டாடியது. தனியாருக்கு விற்பதாக அறிவித்தது. ஆனால், சாமி இனத்தவரின் கம்பனிகள் கேட்ட பொழுது அதிக விலை கூறியது. அதே நேரம், ரஷ்ய இனத்தவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்றது. இன்றைய ரஷ்யாவில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சாமி மக்கள், மதுவுக்கு அடிமையாகவுள்ளனர். சாமி பிரதேசத்தில் பெரிய நகரமான மூர்மன்ஸ்கில் அவர்களின் எண்ணிக்கை 1 % மட்டுமே! கனிம வளத்தை உறிஞ்சும் பெரு நிறுவனங்கள் சாமிகளின் பிரதேசத்தில் முற்றுகையிட்டுள்ளன. அதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப் படுகின்றது.

பனிப்போர் காலத்தில் சாமிகளின் வாழ்விடம், இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்தது. எல்லைக்கு அப்பால் இருந்த நோர்வே நேட்டோ கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்தது. இதனால் சோவியத் படைகள் அங்கே நிலை கொண்டிருந்தன. ரஷ்ய எல்லையோரம் உள்ள நோர்வேயின் சாமி பகுதியில் நேட்டோ படைகள் தளம் அமைத்துள்ளன. புவி வெப்பமடைதல் காரணமாக, துருவப் பகுதியில் புதிதாக பெட்ரோலிய, எரிவாயு வளங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இதனால் எதிர்காலத்தில் சாமிகளின் தாயகப் பகுதியில் எண்ணைக் கிணறுகள் தோண்டப்படும். இதில் கிடைக்கும் வருமானம் நேரடியாக சாமி மக்களுக்கு போய்ச் சேரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஐரோப்பாவின் பணக்கார நாடான நோர்வேயிலும், வட பகுதி அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளது. கரையோரத்தில் மீன்பிடியும், உள்நாட்டில் மான் வளர்ப்புமே, அந்தப் பகுதி மக்களின் வருமானம். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தான், வட நோர்வேயின் பொருளாதாரம் சேவைத் துறைக்கு மாறியது. அதன் காரணமாக, சில சாமிகளும் கல்வியறிவு பெற்று முன்னேறினார்கள். ஐம்பதுகளில், அல்லது அறுபதுகளில் சாமி மத்தியதர வர்க்கம் உருவானது. அப்போதிருந்து சாமி தேசியவாதமும் வளர்ந்தது. ஒன்றிணைந்த சாமி மக்களின் தேசத்திற்கு "சாப்மி" (Sápmi) என்று பெயரிடப் பட்டது. அதற்கென தனியான தேசியக்கொடியும் உருவானது.

1987 ல், நோர்வே அரசு சாமி பாராளுமன்றம் அமைக்க அனுமதி வழங்கியது. வட நோர்வேயில் கரஷோக் நகரில் அமைந்துள்ள பாராளுமன்றம் Sámediggi என்று அழைக்கப் படுகின்றது. நோர்வேயை பின்பற்றி, சுவீடனும், பின்லாந்தும், சாமி மக்களை தேசிய இனமாக அங்கீகரித்து பாராளுமன்றம் அமைத்துக் கொடுத்தன. இருப்பினும் இந்தப் பாராளுமன்றங்கள், தொலைக்காட்சி கமேராக்களுக்கு முன்னால் நடக்கும் விவாத மேடையாக மட்டுமே செயற்படுகின்றன. பெரிதாக அதிகாரப் பரவலாக்கல் எதுவும் நடக்கவில்லை. இன்று சாமி பிரதேசங்களில், ஆரம்ப பாடசாலைகளில் சாமி மொழியில் கல்வி புகட்டப் படுகின்றது. நோர்வேயின் தொலைக்காட்சி தனியாக சாமி மொழி சேவை ஒன்றை நடத்துகின்றது. இது போன்ற கலாச்சார சுதந்திரம் காணப்பட்டாலும், பொருளாதாரத் தேவைகளுக்காக ஆதிக்க மொழியில் பாண்டித்தியம் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் போன்று, ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கான கூட்டமைப்பு ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தக் கூட்டமைப்பில் டென்மார்க்குக்கு சொந்தமான பாரோ தீவுகள், கிரீன்லான்ட், மற்றும் பின்லாந்துக்கு சொந்தமான ஒலான்ட் தீவுகள் என்பனவற்றிற்கு தனியான சுயாட்சி அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. சாமிகளின் சாப்மி தேசத்திற்கு அது போன்ற அந்தஸ்து எதுவும் கிடையாது.

இந்தக் கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள்:

1. The Saami language - An introduction (Pekka Sammallahti)
2. Sámit, sánit, sátnehámit (Suomalais-Ugrilainen Seura,Helsinki)
3. Becoming Visible, Indigenous Politics and Self-Government (Centre for Sami Studies)


இணையத்திலும் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்:
Sami People
Sami Parliament of Norway

6/28/11

பின்லாந்தின் சோஷலிசப் புரட்சி - ஒரு மீளாய்வு


நமது கால இளைஞர்கள் நோக்கியா செல்பேசியின் தாயகமான பின்லாந்து குறித்து அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஐரோப்பிய கண்டத்தின் பெரிய நாடுகளில் ஒன்றான பின்லாந்து, இன்று அரசியல் குழப்பங்களற்ற அமைதிப் பூங்காவாக காட்சியளிக்கின்றது. இந்த வருடம், உலகில் சிறந்த வாழ்க்கை வசதிகளைக் கொண்ட முதலாவது நாடாக தெரிவு செய்யப் பட்டதில் அந் நாட்டினருக்கு பெருமை தான். சுமார் என்பது வருடங்களுக்கு முன்னர், பின்லாந்து மிகவும் வறிய நாடாக இருந்தது. ரஷ்யாவை பின்பற்றி சோஷலிசப் புரட்சி வெடித்ததும், அதன் விளைவாக நடந்த உள்நாட்டுப் போரில் முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்ட வரலாறுகள் இன்று பெரிதும் மறைக்கப் பட்டு விட்டன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நடந்த இது போன்ற புரட்சிகள் பல வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப் பட்டு விட்டன. கிடைத்தற்கரிய ஆவணங்கள் பல, ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள "சர்வதேச சமூக வரலாற்று ஆய்வு மையத்தில்" (International Institute of Social History) பேணிப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. அந்த நிலையத்தின் நூலகத்தில் சில நாட்களை செலவிட்டதன் பயனாக, பல தகவல்களை அறிய முடிந்தது. இந்தக் கட்டுரையில் பின்லாந்து பற்றிய சில குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறேன்.

பின்லாந்து ஐரோப்பாக் கண்டத்தில் தனிச் சிறப்பு மிக்க நாடு. பின்லாந்து நாட்டு மக்கள் பேசும் Suomen kieli மொழியடிப்படையில் அமைந்த உத்தியோகபூர்வ பெயர்: சுஒமி(Suomi). எமக்கு நன்கு பரிச்சயமான ஜெர்மானிய, அல்லது லத்தீன், அல்லது ஸ்லாவிய மொழிக் குடும்பத்தை சேராத தனித்துவமான மொழி அது. எஸ்தோனியா, லாட்வியா நாடுகளில் பேசப்படும் மொழிகளுக்கு நெருக்கமானது. சுவீடன், நோர்வே ஆகிய நாடுகளின் வட பகுதியில் வாழும் "சாமி" (Sami) இன மக்கள், மற்றும் வட-மேற்கு ரஷ்யாவில் வாழும் கரேலிய (karelia) இன மக்கள் பேசும் மொழிகளுடன் தொடர்புடையது. பின்லாந்து என்பது, சுவீடிஷ்காரர்கள் வைத்த பெயராக இருக்கலாம். நீண்ட காலமாக பின்லாந்து அகண்ட சுவீடிய சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்தது. பிற்காலத்தில், சுவீடனுடன் போரிட்டுக் கொண்டிருந்த ரஷ்ய சாம்ராஜ்யத்தினால் உள்வாங்கப் பட்டது. 1918 ல் சுதந்திர நாடாகும் வரையில், ரஷ்யாவின் பகுதியாகவிருந்தது.

சார் மன்னனின் ஆட்சிக் காலத்திலேயே, பின்லாந்து ஓரளவு சுயாட்சி அதிகாரத்தை பெற்றிருந்தது. சார் காலத்தில், பின்லாந்து தேசியவாதிகள் ரஷ்ய மொழித் திணிப்பை எதிர்த்து கலகம் செய்தனர். ரஷ்யாவில் லெனின் தலைமையில் இடம்பெற்ற போல்ஷெவிக் புரட்சியின் பின்னர், பின்லாந்துக்கு சுதந்திரம் வழங்கப் பட்டது. முன்னர் சார் மன்னனால் ஆளப்பட்ட ரஷ்யப் பகுதிகள், புதிய சோவியத் அரசுக்குள் உள்வாங்கப் பட்டன. ஆயினும், போல்ஷெவிக்குகள் எதற்காக பின்லாந்தை சுதந்திர நாடாக்கினார்கள் என்ற கேள்வி எழலாம். அன்றைய புவிசார் அரசியல் காரணிகள் முக்கியமாக இருந்துள்ளன. முதலில், சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரியிருந்த லெனின் குழுவினர், ஜெர்மனியின் உதவியுடன் பின்லாந்து வரை ரயிலில் வந்தனர். பின்லாந்து எல்லையில் இருந்து சுமார் 200 கி.மி. தூரத்தில் சென்.பீட்டர்ஸ்பேர்க் நகரம் இருப்பது குறிப்பிடத் தக்கது. லெனின் குழுவினர் பத்திரமாக ரஷ்யா போய்ச் சேருவதற்கு உதவிய பின்லாந்துக்கு நன்றிக்கடனாக, அதற்கு சுதந்திரம் வழங்கி இருக்கலாம். மேலும், ஜெர்மனியின் வற்புறுத்தலும் பின்லாந்து சுதந்திரத்தை விரைவு படுத்தியது எனலாம்.

"தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை" குறித்து லெனின் எழுதிய கோட்பாடுகளும், பின்லாந்து தேசியவாதத்தை ஏற்றுக் கொள்ள ஏதுவாக அமைந்து விட்டது. இன்று "தமிழ்த் தேசியவாதிகள்" அதைக் காட்டித் தான், இடதுசாரி சக்திகளை தமக்குப் பின்னால் வருமாறு அழைக்கின்றனர். "தேசியவாதத்தை ஏற்றுக் கொள்ளாதவன் கம்யூனிஸ்ட் அல்ல," என்று புது வியாக்கியானங்களை கொடுக்கின்றனர். "பிரிந்து போகும் உரிமை கொண்ட சுயநிர்ணயம்" என்ற கோட்பாடு, அந்த தேசங்களின் பாட்டாளி வர்க்கம் சமதர்ம புரட்சிக்கு இட்டுச் செல்லும் என்ற நோக்கில், லெனினால் எழுதப்பட்டது. வலதுசாரி தேசியவாத சக்திகளே அந்த உரிமையை பயன்படுத்திக் கொள்கின்றன என்பதும், அதிகாரத்திற்கு வந்ததும் பாட்டாளிவர்க்க புரட்சியாளர்களை ஒடுக்குவார்கள் என்பதும், லெனின் கண்கூடாக கண்ட உண்மைகளாக உள்ளன. இதனால், பிற்காலத்தில் ஸ்டாலின் கொண்டு வந்த தேசிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, சோவியத் ஒன்றியத்திற்குள் தீர்வு எட்டப்படுவதை வலியுறுத்தியது. அது வேறு விடயம். இப்போது பின்லாந்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தின என்று விரிவாக ஆராய்வோம்.

பின்லாந்தில் "சுதந்திரப் போராட்டம்" நடந்ததாகவும், அந்தக் காலத்தில் வடக்கே உள்ள வாசா (Vaasa) நகரம் தற்காலிக தலைநகரமாக திகழ்ந்ததாகவும், முதலாளித்துவ சரித்திர ஆசிரியர்கள் எழுதுகின்றனர். அநேகமாக, பின்லாந்து பாட நூல்களிலும், வெளிநாட்டவர்களுக்கான அறிமுக கையேடுகளிலும் அவ்வாறே குறிப்பிடப் படுகின்றது. ரஷ்ய மேலாதிக்கத்தை எதிர்த்து சுதந்திரம் பெற்றதைப் போல காட்டுவதற்காக, பின்லாந்தில் நிலை கொண்டிருந்த ரஷ்ய இராணுவ வீரர்களின் "ஆயுதக் களைவு பிரச்சினை" எடுத்துக் காட்டப் படுகின்றது. உண்மையில் சுதந்திரப் பிரகடனத்தை அடுத்துக் கிளம்பிய சோஷலிசப் புரட்சியை சிறுமைப் படுத்தவே அவ்வாறு பரப்புரை செய்யப் பட்டது. ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவிருந்த பின்லாந்தில், ரஷ்யப் படைகள் நிலை கொண்டிருந்ததில் வியப்பில்லை. அதே நேரம், ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சியின் பின்னர், ரஷ்ய இராணுவத்தினுள் பிளவு ஏற்பட்டதையும் மறுக்க முடியாது. அக்டோபர் புரட்சியின் பின்னர் ரஷ்யாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்ததும், புரட்சிக்கு ஆதரவான செம்படைகளும், மன்னருக்கு விசுவாசமான வெண் படைகளும் மோதிக் கொண்டன. இதே போன்றதொரு பிரிவு, பின்லாந்திலும் தோன்றியது. பழைமைவாத, நிலப்பிரபுத்துவ ஆதரவு வெண்படை அதிகாரத்தை கைப்பற்றத் துடித்தது. பின்லாந்தின் பாட்டாளி வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்திய சமூக- ஜனநாயகக் கட்சி அதற்கு சவாலாக விளங்கியது. அவர்களைப் பொறுத்த வரையில், சோஷலிசப் புரட்சிக்கு ஏற்ற தருணம் அது.

"பின்லாந்தில் ஒரு போதும் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு இருக்கவில்லை. ஆகவே ரஷ்யா, பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்ததைப் போன்று புரட்சிக்கு ஏதுவான சூழ்நிலை இருக்கவில்லை." பூர்ஷுவா சரித்திரவியலாளர்களின் இன்னொரு திரிபுபடுத்தல் இது. அந்தக் கூற்றில் அரைவாசி மட்டுமே உண்மை. பின்லாந்தின் பெரும்பகுதி நாட்டுப்புறங்களில் சிறு விவசாயிகள், தமது ஜீவனோபாயத்தை தாமே தேடிக் கொள்ளும் சுதந்திரம் பெற்றிருந்தனர். அவர்கள் எந்தவொரு நிலப்பிரபுவுக்கும் திறை செலுத்தவில்லை. இன்னும் வடக்கே போனால், பழங்குடியினரின் "லாப் லான்ட்"(Lapland) பிரதேசம் வரும். (அங்கே தான் கிறிஸ்மஸ் தாத்தா வாழ்வதாக ஐதீகம்!) லாப் லான்ட் பழங்குடியினர் இன்றைக்கும் மான் பண்ணைப் பொருளாதாரத்தை நம்பி வாழ்கின்றனர். சுய பொருளாதாரத்தை நம்பி வாழும் மக்கள் மத்தியில் பின்லாந்து தேசியவாதிகள் ஆதரவுத் தளத்தை உருவாக்கிக் கொண்டனர். ஆனால், அன்று மட்டுமல்ல இன்றைக்கும் அந்தப் பிரதேசங்களுக்கும், தொழிற்துறை வளர்ச்சி கண்ட தென் பின்லாந்துக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுகின்றது. பின்லாந்தின் தெற்குப் பகுதியில் தான் அதிகளவு நகரமயமாக்கல் இடம்பெற்றுள்ளது. நகரங்களின் தோற்றத்திற்கு வித்திட்ட தொழிற்புரட்சியின் காரணமாக, பெருந்திரள் பாட்டாளி மக்கள் தென் பின்லாந்தில் வசிக்கின்றனர். மத்திய காலத்தில், சுவீடிஷ் நிலப்பிரபுக்களும் தெற்குப் பகுதிகளில் தான் ஆதிக்கம் செலுத்தினார்கள். அதனால், பெருமளவு விவசாயக் கூலிகளும் அங்கே காணப்பட்டனர். அத்தகைய சமூகத்தில், சமதர்மக் கொள்கைகள் பரவியதில் வியப்பில்லை.

பின்லாந்தின் சுதந்திரத்திற்கு முன்னரே, பாராளுமன்றம் அமைக்கப் பட்டு விட்டது. தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்ற சமூக- ஜனநாயகக் கட்சி அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்தது. உலகிலேயே முதல் தடவையாக, ஒரு சோஷலிசக் கட்சி அதிகளவு ஓட்டுகளைப் பெற்றது பின்லாந்தில் தான். நிலைமை அவ்வாறு இருக்கையில், "ரஷ்ய போல்ஷெவிக்குகளின் சூழ்ச்சியினால் பின்லாந்தின் செம் புரட்சி இடம்பெற்றதாக," என்று வரலாற்றைப் புரட்டுகின்றனர். உண்மையில், பின்லாந்துப் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு தலைமையேற்ற சமூக- ஜனநாயகக் கட்சி லெனினைப் பின்பற்றவில்லை. அந்தக் கட்சியினர் மார்க்சிய நெறிகளை நம்பினார்கள். அதே நேரம், லெனினிசம் தவறான வழி முறைகளைக் கொண்டது எனக் கருதினார்கள். லெனின் முன் மொழிந்த "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்லாந்து சோஷலிஸ்டுகளின் வருடாந்த மகாநாடு ஒன்றில் கலந்து கொண்ட ஸ்டாலின், புரட்சிக்கு தயார் படுத்துமாறும், அதற்கு ரஷ்ய போல்ஷெவிக்குகளின் ஆதரவு கிடைக்கும் என்றும், உறுதிமொழி வழங்கினார். ஆயினும், பெரும்பான்மை பின்லாந்து சோஷலிஸ்டுகள், தேசியவாத அரசியலையும், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் விரும்பினார்கள். "பின்லாந்துக்காரர்கள் புரட்சிக்கு தகுதியற்ற மிதவாதிகள்" என்று லெனின் சாடினார். உண்மையில், சோஷலிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றும் நேரத்தில், பின்லாந்துக்கு சுதந்திரம் வழங்கவே போல்ஷெவிக்குகள் விரும்பினார்கள்.

"பின்லாந்தின் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் (ரஷ்ய) பேரினவாதிகள்...." (V.I.Lenin, Speech on the National Question) ரஷ்ய தரப்பு சலசலப்புகளை மீறித் தான் லெனின் பின்லாந்துக்கு சுதந்திரம் கொடுக்க முன்வந்தார். சுவீடனிடமிருந்து நோர்வே பிரிந்து சென்றதை உதாரணமாகக் காட்டினார். பின்னிஷ் தேசியவாதிகள் பூரண சுதந்திரம் பெறுவதில் ஆர்வமாக இருந்தனர். அந்த விடயத்தில் பின்னிஷ் சோஷலிஸ்டுகளும் உடன்பட்டனர். ஆனால், சுதந்திரத்தின் பின்னர் தேசியவாதிகள் தம்மை அழித்தொழிக்கத் துணிவார்கள் என்பதை சோஷலிஸ்டுகள் எதிர்பார்க்கவில்லை. வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு தொழிலாளர்கள் மடிந்தனர். அந்த சம்பவம் புரட்சிக்கு வித்திட்டது எனலாம். சோஷலிஸ்டுகள், "தொழிலாளர் பாதுகாப்புப் படைகளை" உருவாக்கத் தொடங்கினார்கள். மறு பக்கத்தில் தேசியவாதிகளும் ஆயுதக் குழுக்களை அமைத்துக் கொண்டனர். பின்னிஷ் தேசியவாதிகளுக்கு ஜெர்மனியின் ஆதரவு கிட்டியது. ஜேர்மனிய, சுவீடிஷ் வீரர்கள், பின்னிஷ் தேசியவாத வெண் படையில் முக்கிய பங்கு வகித்தனர். அவர்களின் தளபதியான மன்னேர்ஹைம் சார் மன்னனின் இராணுவத்தில் பணியாற்றியவர். ஜெர்மனியர்களால் பயிற்றுவிக்கப் பட்டவர். இன்றுள்ள பின்லாந்தின் "ஜனநாயக அரசு" கூட, அவர் ஒரு ஒப்பற்ற படைத் தளபதி என்று, மன்னேர்ஹைம் புகழ் பாடுகின்றது. ஆனால், மன்னேர்ஹைம் தலைமை தாங்கிய வெண் படையினர் இழைத்த போர்க்குற்றங்கள் குறித்து மௌனம் சாதிக்கின்றது.

1918 ஜனவரி மாதத்தில் ஆரம்பித்த போர், பின்லாந்து மக்கள் மத்தியில் பாரிய பிளவை ஏற்படுத்தியது. ஒரே இனத்தை சேர்ந்தவர்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், கொள்கை அடிப்படையில் பிரிந்து நின்றனர். ஒருவரை ஒருவர் விரோதிகளாக கருதி கொன்று குவித்தனர். வெளியில் இருந்து பார்ப்போருக்கு அப்படித் தான் தெரியும். ஆனால் அது ஒரு வர்க்கப் போர். வெவ்வேறு இனங்களை சேர்ந்தோர், தாம் சார்ந்த வர்க்கத்திற்கு ஆதரவளித்தனர். உதாரணத்திற்கு, பின்னிஷ் சோஷலிச செம்படையுடன் சேர்ந்து ரஷ்ய தொண்டர்கள் போரிட்டனர். அதே போல, பின்னிஷ் தேசியவாத வெண் படையில் ஜெர்மன், சுவீடிஷ் இனத்தவர்கள் சேர்ந்திருந்தனர். சனத்தொகை அடர்த்தியுள்ள, பெரு நகரங்களைக் கொண்ட பின்லாந்தின் தெற்குப் பகுதி சோஷலிஸ்டுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. "பின்லாந்து சோஷலிசக் குடியரசின்" தலைநகராக ஹெல்சிங்கி இருந்தது. சனத்தொகை குறைந்த பின்லாந்தின் வட- மத்திய பகுதி தேசியவாதப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. "பின்லாந்து மன்னராட்சியின்" தலைநகராக வாசா இருந்தது.

ஆரம்பத்தில் சோஷலிஸ்டுகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ரஷ்யாவில் இருந்து ஆயுத விநியோகம் நடந்து கொண்டிருந்தது. இன்னமும் வாபஸ் பெறப்படாத ரஷ்ய படைகளும் உதவின. ஆயினும், ஏற்கனவே ஜெர்மனியுடன் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்திற்கு மதிப்பளித்து ரஷ்ய ஆதரவு விலத்திக் கொள்ளப் பட்டது. பின்லாந்தில் செல்வாக்கு செலுத்த, இது தக்க தருணம் என்று ஜெர்மனி கருதியது. வெண் படையின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, ஜெர்மன் படைகள் அனுப்பி வைக்கப் பட்டன. பின்லாந்து சோஷலிச நாடானால், சுவீடிஷ் சோஷலிச இயக்கத்தையும் புரட்சிக்கு தூண்டி விடும் என்று பயந்த சுவீடனும், தொண்டர் படை அனுப்பியது. வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப் பெற்ற தேசியவாதப் படைகள், அனைத்து முனைகளிலும் முன்னேறிச் சென்றன. குறிப்பாக பின்லாந்தின் தெற்குக் கரையோரம், ஜெர்மன் படைகள் நேரடியாக வந்திறங்கியமை, சோஷலிச செம்படைக்கு பேரிடியாக அமைந்து விட்டது. அதுவே பின்லாந்தின் சோஷலிசப் புரட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம். சுமார் மூன்று மாத காலம் நிலைத்து நின்ற "பின்லாந்து சோஷலிசக் குடியரசு" முடிவுக்கு வந்தது.

மூன்று மாத போரில், இரண்டு தரப்பிலும் குறைந்தது முப்பதாயிரம் பேர் கொல்லப் பட்டனர். செம்படையினர் பக்கமே அதிகளவு உயிர்ச் சேதம், பொருட்சேதம் ஏற்பட்டது. பெருமளவு செம்படை வீரர்கள், இராணுவ பயிற்சி பெற்ற தொழில் முறை வீரர்கள் அல்ல. அவர்கள் ஆயுதமேந்திய சாதாரண மக்களாவர். செம்படையின் தோல்விக்கு அதுவும் ஒரு காரணம். சோஷலிச புரட்சிக்கு தலைமை தாங்கியவர்களும், செம்படையின் முக்கிய உறுப்பினர்களும், சோவியத் யூனியனுக்கு தப்பியோடி விட்டார்கள். கீழ்நிலைப் போராளிகளும், ஆதரவாளர்களும் அகப்பட்டுக் கொண்டனர். நூற்றுக் கணக்கான சரணடைந்த செம்படையினர், நிராயுதபாணிகளாக சுட்டுக் கொல்லப்பட்டனர். ஓராயிரத்திற்கும் குறையாத ரஷ்ய தொண்டர்களும் நீதிக்கு மாறாக படுகொலை செய்யப்பட்டனர். போர் நடந்த காலத்தில், செம்படையினரும் "நீதிக்கு புறம்பான கொலைகளில்" ஈடுபட்டதாக ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. நிலவுடமையாளர்கள்,முதலாளிகள்,அரசு அதிகாரிகள், சில மதகுருக்கள் போன்றோரே செம்படையினரால் "மரண தண்டனை" விதிக்கப்பட்டனர். ஆனால், தேசியவாதப் படையினரோ, சோஷலிசக் கட்சி உறுப்பினர்கள், அனுதாபிகள் எல்லோருக்கும் "மரண தண்டனை" விதித்தார்கள். அவர்கள் மீது "தேசத் துரோக" குற்றச்சாட்டு சுமத்தியே தண்டனை நிறைவேற்றப் பட்டது. சோஷலிசத்திற்கு ஆதரவானோர் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விபரம், இன்று வரை கணக்கெடுக்கப் படவில்லை. குறைந்தது பத்தாயிரம் பேர் படுகொலை செய்யப் பட்டிருக்கலாம்.

சோஷலிசப் புரட்சிக்கு ஆதரவளித்த மக்கள் அனைவரும் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப் பட்டனர். பல வருடங்களாக அவர்கள் தடுப்பு முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடந்தனர். முகாம்களுக்கு உள்ளேயும் கொலைகள் நடந்தன. இதை விட, உணவுப் பற்றாக்குறை காரணமாக பட்டினி கிடந்தது மடிந்தோர் ஆயிரம். சுகாதார வசதி இல்லாததால் தொற்று நோய்களும் பரவின. மொத்தம் பத்தாயிரம் பேராவது தடுப்பு முகாம்களில் இறந்திருப்பார்கள். ஹெல்சிங்கி நகருக்கு அண்மையில் உள்ள Suomenlinna தீவு, ஒரு காலத்தில் கொலைகள் மலிந்த தடுப்பு முகாமாக செயற்பட்டது. பின்லாந்து அரசு, தனது கடந்த கால போர்க்குற்றங்களை மறைப்பதற்காக, இன்று அந்த தீவை சுற்றுலாத்தலமாக்கியுள்ளது. பின்லாந்தின் தோற்றுப் போன சோஷலிசப் புரட்சியும், உள்நாட்டுப் போரும், மக்கள் மத்தியில் ஆறாத ரணங்களை ஏற்படுத்தி விட்டது. அண்மைக் காலம் வரையில், இடதுசாரி பின்னிஷ் மக்களும், வலதுசாரி பின்னிஷ் மக்களும், குரோதத்துடன் வாழ்ந்து வந்தனர். ஒருவர் மற்றவரைக் கண்டால் வெறுக்குமளவிற்கு, அவர்கள் மனதில் வன்மம் குடி கொண்டிருந்தது.

பின்லாந்து சோஷலிசப் புரட்சியின் தோல்வியானது, இடதுசாரிகள் மத்தியிலும் பிளவை ஏற்படுத்தியது. மிதவாத சமூக - ஜனநாயகவாதிகள் புதிய அரசுடன் ஒத்துழைத்தனர். அதற்கு மாறாக புரட்சியை தொடர விரும்பியவர்கள், "பின்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி"யை ஸ்தாபித்தனர். அவர்கள் எல்லோரும் சோவியத் யூனியனில் புலம்பெயர்ந்து வாழ்ந்ததால், சோவியத் சார்பு நிலைப்பாட்டை கொண்டிருந்தனர். சோஷலிசப் புரட்சியின் தோல்விக்கு அவர்கள் முன்வைத்த விமர்சனம் பின்வருமாறு: "புரட்சிக்கு தலைமை தாங்கியவர்கள் ஜனநாயகவாதிகள். சோவியத் யூனியனுடன் கூட்டமைப்பை விரும்பாதவர்கள். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை." ஆமாம், பின்லாந்து புரட்சிக்கு தலைமை தாங்கியவர்கள், "நிரந்தரப் புரட்சியை" முன்னெடுத்த சமூக- ஜனநாயகவாதிகள். இன்று மேற்கத்திய ஜனநாயகத்தில் காணப்படும் "கருத்துச் சுதந்திரம், பல கட்சி ஜனநாயகம்" போன்றவற்றை நடைமுறைப் படுத்துவதில் அதிக அக்கறை காட்டினார்கள். உழைக்கும் மக்களுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டால் போதும். மக்கள் ஆட்சி மலரும் என்று நம்பினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி அதனை, "தூய ஜனநாயகவாதம்" என்று விமர்சித்தது.
__________________________________________________

படங்களுக்கான விளக்கம்:

1.மேலே: சோஷலிச பின்லாந்தின் கொடி
2.மத்தி: சோஷலிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த பின்லாந்தின் பகுதிகள். செந்நிற மையினால் காட்டப்பட்டுள்ளது.
3.கீழே: சரணடைந்த செம்படைக் கைதிகள் சுட்டுக் கொல்லப் படுகின்றனர்.
___________________________________________________


இந்தக் கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள்:

1.Dokument från Finska Inbördeskriget (Hannu Soikkanen)
(ஸ்வீடிஷ் மொழியில் எழுதப்பட்டது. பல கிடைத்தற்கரிய ஆவணங்களை தொகுத்துள்ளது.)
2.A brief History of Modern Finland (Martti Häikiö)
3.The Winter War (Engle & Paananen)
4.Speech on the National Question (V.I.Lenin)
5.மற்றும் International Institute of Social History நூலகத்தில் கிடைத்த ஆவணங்கள்.