3/26/11

லிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பின் ஆரம்பம்

"லிபியாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதற்காக நேட்டோ படைகள் ஆக்கிரமிப்பு போருக்கு தயாராகின்றன," என்று காஸ்ட்ரோ உட்பட பல லத்தீன் அமெரிக்க நாடுகளின் இடதுசாரி ஆட்சியாளர்கள் ஏற்கனவே எதிர்வு கூறியிருந்தனர். அவர்களின் தீர்க்கதரிசனம் தற்போது மெய்ப்பிக்கப் பட்டு விட்டது. ஐ.நா. அவையின் சம்மதத்தை பெறாமலே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் விமானக் குண்டு வீச்சுகளையும், ஏவுகணை வீச்சுகளையும் ஆரம்பித்து விட்டன. கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டில் இருந்த லிபியாவின் சில பகுதிகளை, கடாபிக்கு விசுவாசமான படைகள் மீட்டெடுத்து வந்தன. நாடு முழுவதும், குறிப்பாக எண்ணெய் வளம் நிறைந்த சிரேனிகா பிரதேசம் மீண்டும் கடாபியின் வசம் வந்து விடும் நிலை ஏற்பட்டது. அத்தகைய தருணத்தில் தான் நேட்டோவின் இராணுவத் தலையீடு இடம்பெற்றுள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடுகள் சில கடாபிக்கு ஆதரவு தெரிவித்தமை கண்டு, நம்மூர் இடதுசாரிகள் கூட அதிருப்தி தெரிவித்தனர். "தனது நாட்டு சொந்தக் குடிமக்களை கொன்று குவிக்கும் சர்வாதிகாரியை எப்படி ஆதரிக்கலாம்?" என்று நீதி கேட்க புறப்பட்டார்கள். தற்போது நேட்டோ படைகளின் குண்டு வீச்சில் லிபிய அப்பாவி பொது மக்கள் மரணமடைவதை கண்டும் காணாது வாளாவிருக்கின்றனர். கடாபியிடம் இருந்து லிபிய மக்களை காப்பாற்ற புறப்பட்ட நேட்டோப் படைகள், அதே மக்களை கொல்வது சரியாகுமா? "ஒரு சர்வாதிகாரியின் இரும்புப் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்கும் பொழுது, இத்தகைய மக்கள் இழப்பு தவிர்க்க முடியாது" என்று, இப்போது அதற்கு நியாயம் கற்பிப்பார்கள். இதே நியாயத்தை தான் ஆப்கானிஸ்தான், ஈராக் போரின் போதும் கூறினார்கள். தம்மை சர்வாதிகாரத்தில் இருந்து விடுவிக்க வந்த அமெரிக்க படைகளை அந்த மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்க வேண்டும். மாறாக அந்நிய ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக போராடி மாய்ந்தார்கள். லிபியாவும் இன்னொரு ஈராக்காக, இன்னொரு வியட்நாமாக மாறிக் கொண்டிருக்கிறது.

சதாம் ஹுசைன், கடாபி ஆகியோர் தனது சொந்த மக்களை கொன்று குவித்தார்கள். மக்கள் படுகொலை, ஏகாதிபத்திய தலையீட்டுக்கு காரணமாக காட்டப்படுகின்றது. இது பல நூற்றாண்டுகளாக, காலனியாதிக்க காலத்தில் இருந்தே கற்பிக்கப்படும் நியாயம். "இந்தியாவில் வாழும் இந்துக்கள் பெண்களை உயிரோடு எரிக்கும் காட்டுமிராண்டிகள்." "இந்தியப் பெண்களை காப்பாற்றும் நல்லெண்ணத்துடன்" தான் பிரித்தானியா இந்தியாவை தனது காலனியாக்கியது. ஐரோப்பாவில் இதனை "வெள்ளை மனிதனின் கடமை" என்று கூறிக் கொள்வார்கள். அதாவது "காட்டுமிராண்டிகளான இந்தியர்கள், அரேபியர், ஆப்பிரிக்கர்களுக்கு நாகரீகம் கற்றுக் கொடுப்பது" ஐரோப்பியரின் கடமை ஆகுமாம். காலனிய சுரண்டலை நியாயப் படுத்தும் நியாயப் படுத்தும் கதையாடல்கள், இன்று லிபியா வரை தொடர்கின்றது. இன்று மேற்குலக மக்களை மட்டுமல்ல, அனைத்து உலக மக்களையும் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு வசதியாக தொலைத் தொடர்பு ஊடகங்கள் வந்து விட்டன. சி.என்.என்., பி.பி.சி., அல்ஜசீரா எல்லாமே ஏகாதிபத்திய தலையீட்டுக்கு வழி சமைத்துக் கொடுக்கின்றன.

பெப்ரவரி 22 , ஆர்ப்பாட்டம் செய்த லிபிய மக்கள் மீது விமானக் குண்டு வீச்சு நடத்தப் பட்டதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும் செய்தி வாசிக்கப்பட்டது. "கடாபி தனது சொந்த மக்களை கொன்று குவிக்கும் கொடுங்கோலன்..." என்று, படித்தவர் முதல் பாமரர் வரை பேசத் தொடங்கி விட்டனர். இத்தகைய பொது மக்களின் அபிப்பிராயம் மட்டுமே, ஏகாதிபத்திய தலையீட்டுக்கு தேவைப் பட்டது. ஐ.நா. பாதுகாப்புச் சபை சும்மா ஒப்புக்கு கண்டனம் தெரிவித்தால் மட்டுமே போதுமானதாக கருதப் பட்டது. வான் பரப்பில் லிபிய விமானங்கள் பறப்பதை தடை செய்யும் படி தாம் கேட்டதாகவும், அதனையே ஐ.நா. பாதுகாப்புச் சபை வழி மொழிந்ததாகவும் அரபு லீக் தெரிவித்தது. லிபியா மீதான நேட்டோ தாக்குதல் அவர்களும் எதிர்பார்க்காத ஒன்று என்பதையே இது தெளிவாக்குகின்றது. ஏற்கனவே செர்பியா மீதான நேட்டோ தாக்குதல் ஐ.நா. சம்மதமின்றியே நடந்தது. இதன் மூலம், நேட்டோ விரும்பினால் உலகில் எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தும் என்பது புலனாகின்றது. பெப்ரவரி 22, லிபிய விமானங்கள் வான் தாக்குதல் நடத்தியதாக நிரூபிக்கும், செய்மதிப் படங்கள் எதனையும் தான் பார்க்கவில்லை என்று ரஷ்யா தெரிவித்திருந்தது. நிச்சயமாக ஐ.நா. கூட்டத்திலும் இது விவாதிக்கப் பட்டிருக்கலாம். ஆனால், சாதாரண மக்கள் ஆதாரம் கேட்கப் போகின்றார்களா? ஊடகங்கள் சொல்வதை உண்மை என்று நம்பும் அப்பாவிகள் இருக்கும் வரை அவர்களுக்கென்ன கவலை?

மேற்குலக அரசுகளும், ஊடகங்களும் ஒரு நாளும் பொய் பேசாத உத்தமர்களா? ஈராக்கில் சதாம் ஹுசைன் பேரழிவு தரும் நாசகார ஆயுதங்களை வைத்திருப்பதாக ஒரு பொய்யைக் கூறித் தான், அமெரிக்கா அந்நாட்டின் மீது படையெடுத்தது. அது ஒரு பொய் என்று, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேர் பின்னர் ஒப்புக் கொண்டார். அமெரிக்கா தமக்கு தவறான தகவல்களை வழங்கியதாக, ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் தமது மக்களிடம் மன்னிப்புக் கோரின. லிபியா குறித்து ஊடகங்கள் வழங்கிய தவறான தகவல்களை, இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து ஒப்புக் கொள்ளப் போகிறார்கள்? காலம் பிந்தி வெளிவரும் உண்மை, அதனது முக்கியத்துவத்தை இழந்து விட்டிருக்கும். அந்நேரம் லிபியா அமெரிக்காவின் காலனியாகி விட்டிருக்கும். லிபியாவின் எண்ணெய்க் கிணறுகளை அமெரிக்க நிறுவனங்கள் அடி மாட்டு விலைக்கு வாங்கி விட்டிருக்கும்.

அயல் நாடுகளான துனிசியாவிலும், எகிப்திலும் மக்கள் எழுச்சி இடம்பெற்றதனால், லிபியாவையும் அதன் தொடர்ச்சியாக பார்ப்பது தவறு. அந்த நாடுகளில் வீதிக்கு வந்து போராடிய மக்கள், அரச அடக்குமுறையை அஹிம்சா வழியில் எதிர்த்து நின்றனர். இராணுவத்தை பகைப்பதும், திருப்பித் தாக்குவதும் போராட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாக கருதினார்கள். சுடுவதற்கு மட்டுமே பயிற்றப்பட்ட படைகளையும், கனரக ஆயுதங்களையும், கண்டு அஞ்சாது வெறுங்கையுடன் எதிர்த்து நின்றதாலேயே உலக மக்களின் அனுதாபத்தை பெற்றார்கள். லிபியாவிலோ நிலைமை வேறு விதமாக இருந்தது. மக்கள் எழுச்சி ஏற்பட்ட முதல் நாளிலேயே சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகளில் ஆயுதங்கள் காணப்பட்டன. ஆர்ப்பாட்டம் தொடங்கி ஒரு சில நாட்களிலேயே, நவீன ஆயுதங்கள் புழக்கத்திற்கு வந்தது எப்படி என்ற கேள்விக்கு யாரிடமும் விடையில்லை. அவ்வாறான கேள்விகள் எதுவும் உங்கள் மனதில் எழுந்து விடக் கூடாது, என்ற அவசரத்தில் ஊடகங்கள் கதை புனைய ஆரம்பித்தன. லிபிய இராணுவம் முழுவதும் ஆர்ப்பாட்டக் காரர்கள் பக்கம் சேர்ந்து விட்டது போன்ற அர்த்தம் தொனிக்கும் செய்திகளைக் கூறின. கடாபி ஆப்பிரிக்க கூலிப்படைகளை அனுப்பி ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கிய கதை பரப்பப் பட்டது. ஆனால் ஓரிரு வாரங்களில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களை, கடாபிக்கு விசுவாசமான படைகள் சண்டையிட்டு மீட்டன. அப்போது அந்த இராணுவம் எங்கிருந்து வந்தது?

லிபியாவின் சகாராப் பாலைவனத்தில் வாழும் துவாரக் நாடோடி மக்களும், சாட் நாட்டின் எல்லையோரமாக வாழும் மக்களும் கறுப்பினத்தவர்கள் தாம். அவர்களும் லிபிய பிரஜைகள் தாம். லிபிய இராணுவத்தில் கறுப்பின வீரர்கள் காணப்படுவது ஒன்றும் புதுமையல்ல. கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்ட, அல்லது கொல்லப் பட்டதாக தெரிவிக்கபடும் ஆபிரிக்க கூலிப்படையினரின் விபரங்கள் இதுவரை ஊர்ஜிதப் படுத்தப் படவில்லை. அதற்கு மாறாக, லிபியாவில் கூலித் தொழிலாளர்களாக வாழ்ந்த ஆபிரிக்கர்கள் பலர் ஆர்ப்பாட்டக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டனர். "லிபிய மக்கள் விடுதலை செய்த" பகுதிகளில் வாழ்ந்த கறுப்பினத்தவர்கள் அனைவரும் விரட்டியடிக்கப் பட்டனர். எகிப்திலும் துனிசியாவிலும் அடைக்கலம் புகுந்த மக்களில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நிறவெறிப் படுகொலைகள் நடந்துள்ளன. ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்று பிடிபட்ட ஆப்பிரிக்க அகதிகளை அடைத்து வைத்திருந்த சிறைச்சாலைகளில் குண்டுகள் வீசப்பட்டன. சிறைக்குள் இருந்த நூற்றுக் கணக்கான அகதிகள் மரணமடைந்திருக்கலாம் என்று பிரபல இத்தாலி பத்திரிகை ஒன்று தெரிவித்தது. கடாபியின் சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்த மக்கள், இனப்படுகொலையாளர்களாக மாறியது எப்படி? சர்வதேச ஊடகங்கள் ஏன் இந்த இனப்படுகொலை பற்றிய செய்திகளை வெளியிடவில்லை?

கடாபி எதிர்ப்பாளர்கள் ஒடுக்குமுறைக்கு முகம் கொடுக்க முடியாமல் மேற்குலக நாடுகளில் அடைக்கலம் கோரியிருந்தனர். அவர்களின் அரசியல் அமைப்பான "லிபிய தேசிய மீட்பு முன்னணி", சி.ஐ.ஏ. இடமிருந்து நிதியுதவி பெற்றுக் கொண்டமை ஒன்றும் இரகசியமல்ல. அவர்களது அரசியல் கொள்கை, அல்கைதாவினதைப் போன்று, இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கொண்டிருந்தது. சோவியத் காலத்தில் ஆப்கான் முஜாகிதினை ஊட்டி வளர்த்த சி.ஐ.ஏ., கடாபி எதிர்ப்பாளர்களின் கொள்கை என்னவென்று பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பெங்காசியின் சில பகுதிகளிலும், தொவ்றுக் நகரிலும் அவர்களது ஆதரவாளர்கள் அதிகம் என்பது கடாபி அரசுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம்.
"லிபிய புரட்சி" ஆரம்பித்த நாள் கூட குறிப்பிடத் தக்கது. சில வருடங்களுக்கு முன்னர், "முகமது நபி கேலிச்சித்திரம்" தொடர்பாக முஸ்லிம் நாடுகளில் ஆர்ப்பாட்டம் நடந்ததை பலர் அறிந்திருப்பீர்கள். அப்போது பெங்காசி நகரில் உள்ள இத்தாலி தூதுவராலயத்திற்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூதரகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிஸ் சுட்டதில் பலர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தின் நினைவு தினத்தன்று தான் இன்றைய கிளர்ச்சி ஆரம்பமானது. துனிசியாவிலும், எகிப்திலும் உணவு விலையேற்றத்தை எதிர்த்து தான் மக்கள் எழுச்சி பெற்றனர். லிபியாவில் அது போன்ற நிலைமை இருக்கவில்லை. ஏற்கனவே லிபிய அரசு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரியை இரத்துச் செய்திருந்தது. மேலும் உணவுப் பொருள் விலையேற்றத்தால் வாழ முடியாமல் கஷ்டப்படும் ஏழைகள் யாரும் லிபியாவில் கிடையாது. அப்படி யாராவது இருந்தால், அவர் ஒரு வெளிநாட்டு கூலித் தொழிலாளியாகவோ, அன்றில் அகதியாகவோ தான் இருப்பார்.

பெங்காசி நகரம் கிளர்ச்சியாளர்களின் தலைமையகமாக இருப்பது ஒன்றும் தற்செயல் நிகழ்வல்ல. கடாபியால் பதவியிறக்கப்பட்ட மன்னருக்கு விசுவாசமான மக்கள் அந்தப் பிராந்தியத்தில் தான் அதிகம். மேலும் எண்ணெய், எரிவாயு குழாய்கள் வந்து முடியுமிடமும், ஏற்றுமதியாவதும் பெங்காசியில் இருந்து தான். அதனால் பல மேற்கத்திய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களும் அங்கே தலைமையகத்தைக் கொண்டுள்ளன. நேட்டோ போர் நடவடிக்கைகள் ஆரம்பமாக முன்னரே, சில மேற்கத்திய இராணுவ ஆலோசகர்கள் கிளர்ச்சியாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் நோக்குடன் சென்றுள்ளனர். ஒரு ஹெலிகாப்டரில் சென்ற நான்கு நெதர்லாந்து போர்வீரர்கள் கடாபிக்கு விசுவாசமான படைகளால் பிடிக்கப்பட்டு விடுவிக்கப் பட்டனர். லிபியாவில் மாட்டிக் கொண்ட தமது நாட்டு பிரஜைகளை மீட்கச் சென்றதாக நெதர்லாந்து அரசு முதலில் கூறியது. ஆயினும் வெளிநாட்டவர்களை திரிபோலி விமான நிலையம் ஊடாக மீட்டெடுத்து செல்லக் கூடிய வசதி இருந்த காலத்தில், லிபியாவுக்குள் இரகசியமாக நுழைய வேண்டிய தேவை என்ன?

விசேட அறிக்கை: மேற்குலகம் ஆதரிக்கும் லிபிய அல்கைதா

அமெரிக்க அரசுக்கு தெரிந்த ஒரு உண்மை, பொது மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்படுகின்றது. லிபியாவில் இடம்பெற்றது மக்கள் எழுச்சி அல்ல. மாறாக கடாபி அரசுக்கு எதிரான அல்கைதாவின் கிளர்ச்சி. ஏற்கனவே தொன்னூறுகளில் இதே கிழக்கு லிபிய பிரதேசத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய- மத அடிப்படைவாத சக்திகளின் கிளர்ச்சி அடக்கப்பட்டது. இன்று கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டில் உள்ள பெங்காசி நகரமும், அதன் சுற்று வட்டாரமும் அல்கைதா விசுவாசிகளைக் கொண்டது. ஈராக்கில் இஸ்லாமிய அரசமைக்கும் நோக்குடன் அனுப்பப்பட்ட லிபிய அல்கைதா உறுப்பினர்கள், இதே கிழக்கு லிபிய பிராந்தியத்தை சேர்ந்தவர்கள். அவர்களது பெயர், ஊர், பற்றிய விபரங்கள் ஏற்கனவே அமெரிக்க பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் உள்ளன. லிபியாவில் அல்கைதா கிளர்ச்சியை பாதுகாப்பதற்காக, நேட்டோ படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பிரான்ஸ் உட்பட சில மேற்கத்திய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட, "இடைக்கால அரசில்" அங்கம் வகிக்கும் அரைவாசிப் பேர் அல்கைதாவுடன் தொடர்புடைவர்கள். இவர்களது பெயர் விபரங்கள் "பாதுகாப்பு காரணங்களுக்காக" இன்னும் அறிவிக்கப் படவில்லை.

அக்டோபர் 2007, ஈராக்கில் சிரிய எல்லையோர நகரமான Sinjar ரில், அமெரிக்க படைகளின் இராணுவ நடவடிக்கையின் போது பல முக்கிய ஆவணங்கள் அகப்பட்டன. அமெரிக்காவை சேர்ந்த West Point Military Academy அந்த ஆவணங்களை ஆராய்ந்தது. ஈராக்கிற்கு எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அல்கைதாவினால் திரட்டப்பட்டனர், அவர்களின் ஊர், பெயர் விபரங்கள் அந்த ஆவணத்தில் இருந்துள்ளன.
அதிகமான போராளிகள் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். அதற்கு அடுத்த இடத்தில் லிபியாவைச் சேர்ந்த, அதிலும் குறிப்பாக டார்ணா நகரைச் சேர்ந்த போராளிகளே அதிகம். பெங்காசிக்கும், தொவ்றுக் நகருக்கும் நடுவில் அமைந்துள்ள டார்ணா வெறும் எண்பதாயிரம் மக்கட்தொகையைக் கொண்டது. அந்த ஊரைச் சேர்ந்த 52 பேரது விபரங்கள் அந்த ஆவணத்தில் காணப்படுகின்றன. இன்று கிளர்ச்சிக் குழுக்களின் "சுதந்திர லிபியாவின் தலைநகரமான" பெங்காசியில் இருந்து 21 போராளிகள் சென்றுள்ளனர். ( West Point Military அகாடமி வெளியிட்ட அறிக்கையின் PDF கோப்பு இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது)

மேற்கத்திய தலையீட்டையும், நேட்டோ படைகளினால் லிபியா விடுதலை விடுதலை செய்யப் படுவதையும் கிளர்ச்சியாளர்கள் எதிர்த்ததில் வியப்பில்லை. கடும்போக்கு இஸ்லாமியவாதிகளான அவர்கள், அமெரிக்கர்களை கொல்வதற்காக ஈராக் சென்றவர்கள். தங்களுக்கு ஆதரவளிக்கும் மக்களின் ஆதரவை இழந்து விடும் அச்சம் காரணமாக மறுத்து விட்டார்கள். இருப்பினும் மக்கள் எழுச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே, எகிப்திய இராணுவ அரசு ஆயுதங்களை அனுப்பி வைத்தது. (
Egypt Said to Arm Libya Rebels, Wall Street Journal, March 17, 2011") கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் அனுப்பி உதவுமாறு, ஒபாமா சவூதி அரேபியாவை கேட்டுக் கொண்டார். (“America’s secret plan to arm Libya’s rebels,” Independent, Mach 7, 2011 )

லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக Libyan Islamic Fighting Group (LIFG) என்ற தலைமறைவு அமைப்பு இயங்கிக் கொண்டிருந்தது. 2007 ம் ஆண்டு, ஈராக்கில் அல்கைதா தொடர்பின் பின்னர் அது தனது பெயரை Al Qaeda in the Islamic Maghreb (AQIM) என்று மாற்றிக் கொண்டது.

Libyan rebel commander admits his fighters have al-Qaeda links

தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்]

(பகுதி - 3)
-[ஓர் ஈழ அகதியின் அனுபவத் தொடர்]-
அகதிகள் பலரிடமும் எப்போது இலங்கை திரும்புவோம் என்ற ஏக்கம் குடிகொண்டிருந்த போதிலும், இந்திய அனுபவங்களையும் தம்மோடு சுமந்து செல்ல எண்ணினார்கள். அரசு கொடுக்கும் ஒரு பிடி அரிசியில், காய்கறி சேர்த்து சமைத்து உண்ணும் அகதி வாழ்வில் உல்லாசப் பயணத்தை நினைத்துப் பார்க்க முடியாது. இருப்பினும் இந்தியா வந்தால், கோயில் பார்க்காமல் திரும்பக் கூடாது என்று பிடிவாதம் பிடித்தார்கள். இந்துக்களைப் பொறுத்த வரையில், இந்தியாவை தமது தாயகமாக கருதும் போக்கு தொன்று தொட்டு நிலவியது. இப்போதும் இலங்கை திரும்பிய முன்னாள் அகதிகள், தாம் இந்தியாவில் எந்தெந்த கோயில்களுக்கு சென்று வந்தோம், என்று கூறி அயலவரின் பொறாமையைக் கிளப்புவார்கள். எமது முகாமில் இருந்தும் இளைஞர்களின் குழு ஒன்று கோயில் பார்க்க கிளம்பியது. எனக்கு அப்போதும் சாமி, கோயில்களில் நம்பிக்கை இல்லாத போதிலும், ஊர் சுற்றக் கிளம்பினேன்.

பஸ் பயணத்திற்கு மட்டும் கையில் காசு வைத்திருக்க வேண்டும். ரயிலில் இலவசப் பிரயாணம் செய்யலாம் என்று கூறினார்கள். அது ஈழ அகதிகளுக்காக MGR வழங்கிய சலுகை என்றார்கள். (MGR அப்போதும் தமிழக முதலமைச்சராக இருந்தார்.) ரயிலில் டிக்கட் பரிசோதகர் வரும் போதெல்லாம், அகதி அட்டையைக் காட்டினால் போதும். தமிழ்நாடு மாநிலத்திற்குள், எந்த ரயிலிலும் டிக்கட் இல்லாமல் பயணம் செய்ய முடியும். ரயிலில் ஏறி திருச்சி சென்றோம். அங்கிருந்த கோயில்கள் எல்லாம் பார்த்து விட்டு, அன்றிரவு ரயில் நிலையத்திலேயே படுத்துறங்கினோம். மீண்டும் ரயில் ஏறி, நாம் வந்திறங்கிய இராமேஸ்வரம் வரையில் சென்று திரும்பி வந்தோம். வரும் வழியில் மறக்காமல் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தையும் தரிசித்தோம். நாம் சந்தித்த இந்திய தமிழர்கள், எங்களை "சிலோன் காரர்கள்" என்று அழைத்து உரையாடினார்கள். இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் எல்லோரையும் சிலோன்காரர்கள் என்று தான் அழைத்து வந்தனர். இதிலே வேடிக்கை என்னவென்றால், இலங்கையில் மலையகத் தமிழரை "இந்தியத் தமிழர்கள்" என்று அழைக்கின்றனர். ஆனால் இந்தியாவில் அவர்களது பெயரும் சிலோன்காரர்கள் தான்.

எமது தமிழக சுற்றுப் பயணத்தின் பின்னர், இந்திய-இலங்கைத் தமிழர்கள் மத்தியில் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 90 % சதவீதமான இலங்கை அகதிகள், அதற்கு முன்னர் இந்தியாவை பார்த்திராதவர்கள். இந்தியத் தமிழருடன் பழகும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கவில்லை. இந்தியாவுடனான அவர்களது தொடர்பு முழுவதும், சினிமா, சஞ்சிகைகள், நூல்கள் ஊடாகவே பரிமாறப்பட்டன. பெரும்பாலும் பாமர மக்கள், தமிழ் சினிமாவில் காட்டப்படுவதைப் போலத்தான் இந்தியா இருப்பதாக நம்பினார்கள். இந்தியா வந்த பின்னர், அவர்களது மாயைகள் யாவும் அகன்றன. பிரமாண்டமான கோயில்களைத் தவிர, இந்தியாவில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்று கூறவாரம்பித்தனர்.

பொதுவாக இரண்டு சமூகங்களும், ஒன்றை மற்றொன்று தாழ்வாகக் கருதுவதை உணரக் கூடியதாகவிருந்தது. சில அகதி முகாம்களில், அதிகாரிகளின் திமிரான பேச்சு எரிச்சலூட்டியது. வசதிக் குறைபாடுகளை சுட்டிக் காட்டிய போதெல்லாம், ஒன்றில் புறக்கணித்தார்கள், அன்றில் வாயை மூடிக் கொள்ள சொன்னார்கள். "சிங்களவர்களால் அழிக்கப் பட்டுக் கொண்டிருந்த அரிய உயிரினத்தை வைத்துப் பராமரிப்பது," போலப் பேசினார்கள். இதனால் வெறுத்துப் போன அகதிகள், "யுத்தம் மட்டும் இல்லையென்றால், எமது ஊரில் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்," என்று பேசவாரம்பித்தனர்.

மிகப்பெரிய இந்திய-இலங்கை முரண்பாடுகள், வர்க்கம் சார்ந்து எழுந்தது. அகதி முகாமில் கிடைக்கும் சொற்பத் தொகை வாழ்வதற்கு போதாது என்பதால், கூலி வேலை தேடவாரம்பித்தனர். இலங்கையில் இலவசக்கல்வி வாய்ப்பை பயன்படுத்தி, பல்கலைக்கழகம் வரை படித்த ஏழை மாணவர்கள் கூட, கூலி வேலைக்கு சென்று வந்தனர். பட்டதாரிகள் கூட, இந்தியாவில் தமது பட்டங்களுக்கு மதிப்பில்லை என்பதை விரைவில் புரிந்து கொண்டனர். ஒரு ஈழ அகதி எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், எந்தவொரு நிறுவனமும் அவர்களுக்கு வேலை கொடுக்க முன் வரவில்லை. மாநில, மத்திய அரசுகள் சட்டபூர்வ அனுமதி வழங்க மறுத்தன. அகதிகள் கூலி வேலைக்கு செல்வதை மட்டும் தடை செய்யவில்லை. இதனால் உள்ளூர் முதலாளிகளும், ஒப்பந்தக்காரர்களும் வீதிகளை செப்பனிடும் வேலை, மற்றும் கட்டுமானப் பணிகளில் இலங்கை அகதிகளின் உழைப்பை பயன்படுத்திக் கொண்டனர். ஒரு இந்திய தொழிலாளிக்கு கொடுக்கும் சராசரி கூலியை விட குறைந்த அளவு ஊதியமாக வழங்கப்பட்டது.

ஈழ அகதிகள் என்றால் கடுமையாக வேலை வாங்குவது சாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. சில முதலாளிகள், அவர்களின் கையறுநிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். மாதக் கணக்காக வேலை வாங்கி விட்டு, சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றினார்கள். ஒரு பக்கம், இந்தியத் தமிழ் முதலாளிகள் ஈழ அகதிகளின் உழைப்பை சுரண்டி கொழுத்துக் கொண்டிருந்தனர். மறு பக்கம், தொழில் வாய்ப்பை இழந்த இந்தியத் தமிழ் தொழிலாளிகள் அதிருப்தி கொண்டனர். இந்தியாவில் கூலி வேலையாட்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை தலித் மக்கள். இவர்களது குடியிருப்புகளும் அகதி முகாம்களை அண்டியே காணப்பட்டன. தொழில் போட்டியால் ஏற்பட்ட முறுகல் நிலை, "இந்தியத் தமிழ்- இலங்கைத் தமிழ் முரண்பாடு" வளரக் காரணமாயிற்று. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியினர், ஈழ அகதிகளை தம்மை விட தாழ்ந்தவர்களாக கருதினார்கள். சமூகங்களுக்கு இடையிலான சிறு சிறு சச்சரவுகளின் பொழுது, இது போன்ற உணர்வுகள் மேலெழுந்து வெளிப்படையாக பேசினார்கள். இதற்கிடையே வசதி படைத்த அல்லது மேல்நிலை சாதி இந்தியத் தமிழர்கள், அத்தகைய பிரச்சினைகள் குறித்து எந்த அறிவுமற்று வாழ்ந்தனர்.

ஈழத்தில் பல்வேறு சாதிகளை சேர்ந்த அகதிகள் முகாமில் ஒன்றாக வாழ்ந்தனர். இந்திய வழக்கப்படி, ஈழ அகதிகளும் சாதி வாரியாக வகைப் படுத்தப் பட்டு பதியப்பட்டனர். அது ஒன்றும் கட்டாயமல்ல, எனக்குத் தெரிந்த பலர் படிவத்தில் சாதிப் பெயரை குறிப்பிடாமல் வெறுமையாக விட்டனர். சாதிப் பெயரை பதியும் நடைமுறை, இலங்கையில் பல தசாப்தங்களுக்கு முன்னரே கைவிடப் பட்டு விட்டது. (இன்று சிலர் இதைக் காட்டி ஈழத் தமிழர்கள் மத்தியில் சாதிகள் இல்லை என்று வாதிடுகின்றனர்.) ஆனால், கிராமங்கள் சாதி வேறுபாடுகள் தெளிவாகத் தெரிந்த சமூக அமைப்பைக் கொண்டிருந்தன. ஆகவே இந்தியா வந்த பின்னும் சாதிப் பெயரை பதிந்து கொள்வதில் பலருக்கு பிரச்சினை இருக்கவில்லை. மாறாக, இந்த சந்தர்ப்பத்தில் தமது சாதியை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை கண்டு கொண்டார்கள். தங்களை "வெள்ளாளர்களாக" பதிந்து கொண்டார்கள். இதனால் சாதிய படிநிலையில் உயர்ந்து விட்டதாக மனதளவில் திருப்தி கொண்டனர். யார் கண்டது? சில வருடங்களில் ஈழத்து சாதியமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படலாம்.

(
தொடரும்)

3/25/11

லிபியா: இன்னொரு ஈராக் உருவாகின்றது!

லிபியாவில் கிளர்ச்சிப் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள பெங்காசி நகரம். லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியின் இராணுவ ஆயுதக் களஞ்சியம், கிளர்ச்சியாளர்களின் ஆயுத விநியோக மையமாக செயற்பட்டு வந்தது. லிபிய இராணுவத்தை விட்டோடி, கிளர்ச்சிக் குழுவில் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்களை அழைத்து வந்து காட்டுகிறார்கள். ஆயுதக் களஞ்சியம் இருக்கும் முகாமுக்குள் புதிய படையணிகளுக்கு நடக்கும் பயிற்சி எல்லாம் காட்டுகிறார்கள். நுழைவாயிலில் பாதுகாப்புக்காக ஒரு சிறுவன் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறான். வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அதையும் படம் பிடிக்கிறார்கள். அன்றிரவு நடுநிசி, இரண்டு கார்கள் முகாமுக்குள் வருகின்றன. வந்தவர்கள் கிளர்ச்சிக் குழுவை சேர்ந்தவர்களாக இருக்கலாம், என்று முகாமில் தங்கியவர்கள் நினைத்துக் கொள்கின்றனர். எப்படியும் வேறுபாடு கண்டுபிடிப்பது மிகவும் கடினம். திடீரென பயங்கர வெடியோசை பெங்காசி நகரை உலுக்கியது. குண்டுவெடிப்பில் ஆயுதக் களஞ்சியம் முற்றாக எரிந்து நாசமாகியது. முகாமில் தங்கியிருந்த முப்பது வீரர்களும் பலியானார்கள். மீட்புப் பணியாளர்களால் எதையும் மீட்க முடியவில்லை. அங்கே எதுவுமே மிஞ்சவில்லை.

கிளர்ச்சியாளர்கள் போன்று நடித்த கடாபியின் ஆதரவாளர்கள், கிளர்ச்ச்சிப் படைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டிருந்தனர். மேற்கத்திய தொலைக்காட்சி கமெராக்களுக்கு முன்னால் கிளர்ச்சிக்குழு தலைவர் கூறுகிறார். "எங்களுக்கு எந்தவொரு அந்நிய உதவியும் தேவையில்லை. லிபிய மக்கள் பார்த்துக் கொள்வார்கள். சம்பவம் நடந்து அடுத்தடுத்த நாள், லிபியாவுக்குள் புகுந்த சில பிரிட்டிஷ் படை வீரர்களை, கிளர்ச்சிக் குழு கைது செய்கின்றது. மேற்கத்திய நாடுகளின் தலையீடு, கிளர்ச்சியாளர்கள் சந்தித்த மிகப் பெரிய நெருக்கடி. "லிபியாவில் ஏகாதிபத்திய தலையீடு. கிளர்ச்சியாளர்களுக்கு மேலைத்தேய நாடுகள் ஆயுத, நிதி உதவி வழங்குகின்றன." இவையெல்லாம் நிரூபணமானால், லிபிய மக்கள் கிளர்ச்சிக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்தி விடுவார்கள். யாரின் சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி வெடித்ததோ, அதே கடாபியின் பக்கம் மக்கள் ஆதரவு சாய்ந்து விடும்.

துனிசியா, எகிப்து போன்ற வெற்றியடைந்த புரட்சிகளைக் கண்ட நாடுகளை தனது அருகாமையில் கொண்டுள்ள லிபியாவுக்கு, மக்கள் எழுச்சி சற்று தாமதமாகத் தான் வந்தது. "அவர்களுக்கு (லிபியர்களுக்கு) குறை ஏதும் இல்லை. எங்களைப் பார்த்து பின்பற்றுகிறார்கள்." என்றார்கள் எகிப்திய மக்கள் எழுச்சியில் பங்குபற்றிய ஆர்வலர்கள். ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள், எகிப்தில் கிடைப்பதை விட மூன்று மடங்கு அதிக ஊதியத்திற்கு லிபியாவில் வேலை பார்த்து வந்தார்கள். லிபிய பாடசாலைகளில், பெரும்பாலும் எகிப்திய ஆசிரியர்களே பணியில் அமர்த்தப்பட்டனர். லிபிய மக்கள் எழுச்சி விரைவில் உள்நாட்டுப் போராக மாறியதில், எகிப்திய தொழிலாளர்கள் அனைவரும் வேலையிழந்து நாடு திரும்ப நேரிட்டது. முழு ஆப்பிரிக்க கண்டத்திலும், லிபியர்களின் தனிநபர் வருமானம் அதிகம். அவர்கள் பெரும்பாலும் உடல்சார்ந்த உழைப்பில் ஈடுபடுவதில்லை. கட்டுமானப் பணிகளில், துப்பரவுப் பணிகளில் எந்தவொரு லிபியப் பிரஜையும் வேலை செய்ய விரும்புவதில்லை. அத்தகைய அசுத்தமான, கடினமான பணிகளை செய்வதற்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஒப்பந்தக் கூலிகளாக அமர்த்தப்படுகின்றனர். சுருக்கமாக சொன்னால், துபாய் போன்ற வளைகுடா அரபு நாடுகளின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது.

கடாபி, நாற்பதாண்டுகளுக்கு முன்னர், அதிக இரத்தம் சிந்தாத சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தார். அன்றிருந்த மன்னர் மீது அரச படையினர் மத்தியிலேயே அதிருப்தி நிலவியதால், கடாபியின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை எதிர்க்க ஆளிருக்கவில்லை. ஆட்சியைக் கைப்பற்றிய கடாபி, நாட்டின் முக்கிய ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித்தரும் எண்ணெய் உற்பத்தியை தேசிய மயப்படுத்தினார். எண்ணெய் விற்று கிடைத்த பணத்தை மக்கள் நலன் பேணும் திட்டங்களில் செலவளித்தார். அப்போது இரண்டு மில்லியன் சனத்தொகையைக் கொண்ட லிபியா, இலாபப் பணத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில் சிரமமேதும் இருக்கவில்லை. இதனால் நாடு துரித கதியில் அபிவிருத்தியடைந்தது. கடாபியின் புரட்சிக்கு முன்னர், பெரும்பான்மை லிபியர்கள் வறுமையில் வாடினார்கள். பாலைவன ஓரங்களில் கூடாரங்களில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார்கள். பொருளாதார அபிவிருத்தி காரணமாக, இன்று எந்தவொரு லிபியரும் பாலைவனக் கூடாரத்தில் வாழ்வதில்லை, கடாபியைத் தவிர. தலைநகர் திரிபோலியில் கடாபியின் மாளிகை இருந்தாலும், தான் இன்றும் மரபு வழி கூடாரத்தில் வாழ்வதாகக் காட்டுவது கடாபியின் வெகுஜன அரசியல். வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் பொழுதும், அந்தக் கூடாரத்தை தன்னோடு எடுத்துச் செல்வார். எந்த நாட்டிலும், ஹோட்டலில் தங்காமல் கூடாரத்தில் தங்கும் ஒரேயொரு தேசத் தலைவர் அவராகத் தான் இருப்பார்.

கால்நடைகளை மேய்க்கும் ஏழைக் குடும்பமொன்றில் பிறந்த கடாபி, அதிகாரம் கையில் வந்தவுடன் குடும்ப அரசியலில் ஈடுபட்டு செல்வம் சேர்த்தமை, லிபிய மக்களின் எதிர்ப்புணர்வுக்கு முக்கிய காரணம். கடாபியின் குடும்பத்தினர் மட்டுமல்ல, அவரது "கடாபா" கோத்திரமும் அரசியல்- பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தினர். பிற அரேபியர்கள் போல, லிபிய அரேபியரும் பல கோத்திரங்களாக அல்லது இனக்குழுக்களாக பிரிந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட கோத்திரத்தை சேர்ந்தவர் அரசில் பதவி வகித்தால், "நமது ஆட்கள்" சிலருக்கு வேலை எடுத்துக் கொடுப்பது அந்த சமூகத்தில் சர்வ சாதாரணம். கடாபி லிபியாவின் சர்வ அதிகாரம் பெற்ற அதிபரானதும், அவரது கடாபா கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கே அரசுப் பதவிகள் கிடைத்தன. இதனால் பிற கோத்திரங்களை சேர்ந்தவர்கள் மத்தியில், கசப்புணர்வும் பொறாமையும் காணப்பட்டது. "லோக்கர்பீ" நீதிமன்ற விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபரை ஒப்படைக்கும் விஷயத்தில், இந்த முறுகல் நிலை வெளிப்பட்டது. அந்த சந்தேக நபர் வேறொரு கோத்திரத்தை சேர்ந்தவர் என்பதாலேயே கடாபி அவரை ஒப்படைக்க முன்வந்தார் என்று பேசிக் கொண்டனர். இதை விட, கடாபியின் பிள்ளைகளின் திருவிளையாடல்கள் உலகப் பிரசித்தம். அதிகார மமதையும், பணத்திமிரும் உள்நாட்டு மக்களை முகம் சுழிக்க வைத்தன. பிரான்சில் மதுபோதையில் காரோட்டிய மகன், சுவிட்சர்லாந்தில் நட்சத்திர விடுதியில் கைகலப்பில் ஈடுபட்டு கம்பி எண்ணிய மகன். தனது தறுதலைப் பிள்ளைகளின் நடத்தையை கண்டிக்காத தகப்பனான கடாபி, பதிலுக்கு இராஜதந்திர சர்ச்சைகளை கிளப்பி விட்டார்.

கடந்த காலங்களில் லிபியா, எந்த வித உள்நாட்டுக் குழப்பமும் இல்லாதவாறு அமைதியாகக் காட்சியளித்தது. அதாவது, அங்கே நடந்த சம்பவங்கள் எதுவும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. கடாபியின் அதிகாரத்தை எதிர்ப்போர் அன்றும் கிழக்கு லிபியாவில் தான் தோன்றினார்கள். பண்டைய ரோமர்களின் மாகாணமான சிரேனிகா பகுதியில் இருந்து தான், காலனியாதிக்க எதிர்ப்புப் போர் ஆரம்பமாகியது. பாலைவனச் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஒமார் முக்தார் தலைமையில், இத்தாலியருக்கு எதிராக வீரஞ் செறிந்த விடுதலைப் போர் நடந்தது. போராட்டம் தோல்வியடைந்த போதிலும், அவர்கள் ஸ்தாபித்த மதப்பிரிவு இன்று வரை நிலைத்து நிற்கின்றது. முன்னாள் போராளிகளும், ஆதரவாளர்களும், அவர்களின் குடும்பங்களும் "சானுசி" என்ற மத அமைப்பாக, தம்மைத் தாமே தனிமைப் படுத்திக் கொண்டனர். இன்றைய அரசியல் புரிதலின் பிரகாரம் "இஸ்லாமிய கடும்போக்காளர்கள்" அல்லது "மத அடிப்படைவாதிகள்" என்று அழைக்கலாம். இருப்பினும் அன்று காலனியாதிக்கத்தை எதிர்த்த ஒமார் முக்தார் போன்ற பல தேசிய நாயகர்கள், இஸ்லாமிய கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்பவர்களாக இருந்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிரிட்டிஷாரால் முடி சூட்டப்பட்ட இடிரிஸ், சானுசி சமூகத்தை சேர்ந்தவர். இதனால் அவரது ஆட்சிக் காலம் முழுவதும், சானுசி சமூகத்தை சேர்ந்தோரின் ஆதரவு கிடைத்து வந்தது. குறிப்பாக கிழக்கு லிபிய பிரதேசம், இடிரிஸ் ஆதரவுத் தளமாக இருந்தது. 2011, பெப்ரவரி, கடாபிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஆர்ப்பாட்டக் காரர்கள், மன்னர் இடிரிசின் உருவப்படத்தையும், அவரது கொடியையும் தாங்கியிருந்தனர். பெங்காசி போன்ற, கிளர்ச்சியாளர்களால் விடுதலை செய்யப்பட்ட பகுதிகளில் சிவப்பு, கருப்பு, பச்சை வர்ணங்களில் பிறைச்சந்திரன் பதித்த கொடி பறக்க விடப்பட்டது. மன்னராட்சியைக் கவிழ்த்த கடாபியின் சதிப்புரட்சி வரை, அதுவே லிபியாவின் தேசியக் கொடியாக இருந்தது. இருபது வருடங்களுக்கு முன்னரே, சானுசி மதப்பிரிவை சேர்ந்த போராளிகள் பலர், ஆப்கானிஸ்தானில் அல்கைதாவுடன் இணைந்து செயற்பட்டு வந்தனர். நாடு திரும்பிய போராளிகள், லிபியாவிலும் ஒரு ஆயுதக் குழுவை ஸ்தாபித்து சில தாக்குதல்களை நடத்தியுள்ளனர். லிபிய அரசின் இரும்புப் பிடி, தீவிரவாத நடவடிக்கைகளை தொடர விடவில்லை. இன்று வரை பலர் அறியாத செய்தி என்னவெனில், முதன்முதலாக இன்டர்போல் மூலமாக பின்லாடனை குற்றவாளியாக அறிவித்து பிடியாணை பிறப்பித்தது அமெரிக்காவல்ல! மாறாக லிபியா!! 2001, அமெரிக்கா அறிவித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர்க் காலத்தில், கடாபி இதனைக் குறிப்பிட்டு பல தடவை பேசியுள்ளார். ஆனால் அது சர்வதேச கவனத்தை பெறவில்லை.

கடாபி ஒருகாலத்தில் அரபு சர்வதேசியத்தில் நம்பிக்கை வைத்திருந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியாக இருந்தார். சோஷலிசம் பேசினார். இருந்தாலும் இஸ்லாமிய மதத்திலும் பற்றுறுதியுடன் இருந்தார். கடாபி மார்க்சியம் கலந்த புதுமையான இஸ்லாம் ஒன்றை போதித்தார். சானுசி மதப்பிரிவினர் தூய்மைவாதிகள் அல்லது கடும்போக்காளர்கள். அதற்கு மாறாக கடாபி ஒரு தாராளவாதி. கடாபியின் ஷரியா சட்டமும் பல திருத்தங்களைக் கொண்ட, மென்மையான தண்டனைகளைக் கொண்டிருந்தது. அரபு நாடுகளில் லிபியாவில் தான் பெண்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட்டது. குறிப்பாக சொத்துரிமைச் சட்டத்தில், ஆணுக்கே அதிக உரிமை வழங்கும் சட்டமே அரபு நாடுகள் எங்கும் அமுலில் உள்ளது. லிபியாவில் பெண்களும் சொத்தில் உரிமை கொண்டாடலாம். கடாபியின் காலத்தில் தான், பெண்கள் அதிகளவில் உயர் கல்வி கற்றனர். அரசிலும், தனியார் நிறுவனங்களிலும் உயர் பதவிகளை அலங்கரித்தனர். கடாபியின் மகளிர் மெய்க்காவலர் படையணி, சர்வதேச மட்டத்தில் பலர் கவனத்தை ஈர்த்தது. நிச்சயமாக, இஸ்லாமிய கடும்போக்காளர்கள் அத்தகைய மாற்றங்களை விரும்பவில்லை. தாலிபான்களைப் போல பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்க விரும்பும் பழமைவாதிகளுக்கு, கடாபியின் செயல்கள் எரிச்சலூட்டின. அந்த எதிர்ப்புகளை கணக்கெடுக்காத கடாபி, தனது "தாராளவாத இஸ்லாமிய மார்க்கம்" சிறந்தது என்று லிபியாவுக்கு வெளியேயும் பிரச்சாரம் செய்தார்.

நீண்ட காலமாக உலகின் மிகத் தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாக காட்டிக் கொண்ட கடாபியை, அமெரிக்கா அடக்க விரும்பியதில் வியப்பில்லை. 1986 ம் ஆண்டு, திரிபோலி நகரின் வான் பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானங்கள், கடாபியின் மாளிகையை இலக்கு வைத்து குண்டுவீசின. விமானத் தாக்குதலில் கடாபி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினாலும், அயலில் குடியிருந்த பொது மக்கள் பல கொல்லப்பட்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு போரின் பங்காளிகள் என்ற அடிப்படையில், இஸ்லாமியரல்லாத தேசியவாத, இடதுசாரி இயக்கங்களுக்கும் ஆதரவு வழங்கினார். அயர்லாந்தின் ஐ.ஆர்.ஏ., ஜெர்மனியின் செம்படை போன்ற ஆயுதபாணி அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு லிபியாவில் இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது.

லோக்கர்பீ விமானக் குண்டு தாக்குதலில் கடாபியை வேண்டுமென்றே சம்பந்தப் படுத்திய சர்வதேச சமூகம், ஐ.நா. பொருளாதாரத் தடையை கொண்டு வந்தது. (அந்தத் தாக்குதலில் லிபியாவுக்கு தொடர்பில்லை என்பதும், ஈரானின் பங்களிப்பும் அன்று வேண்டுமென்றே மறைக்கப் பட்டன.) 1993 லிருந்து 2003 வரையிலான பொருளாதாரத் தடை லிபியாவை மோசமாகப் பாதித்தது. சர்வதேச விமானப் பறப்புகள் துண்டிக்கப்பட்டன. எண்ணெய் அகழும் தொழிலகங்களில், பழுதடைந்த உபகரணங்களை திருத்த முடியாமல், உற்பத்தி குறைந்தது. இருப்பினும், லிபியா ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தது என்பதால், கடத்தல் வியாபாரிகள் உணவு, மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வருவதில் தடை இருக்கவில்லை. 2003 ல் பொருளாதாரத் தடை விலத்திக் கொள்ளப்பட்ட பிறகு, கடாபி முற்றிலும் மாறியிருந்தார். சோஷலிச, அல்லது தேசியவாத பொருளாதாரத்தைக் கைவிட்டு விட்டு, முதலாளித்துவத்திற்கு தாராளமான சுதந்திரம் வழங்கினார். கடாபியின் குடும்பத்தினரும், கடாபா இனக்குழுவை சேர்ந்த முதலாளிகளும் செல்வம் திரட்டியது இந்தச் சந்தர்ப்பத்தில் தான். கடாபியின் குடும்ப நிறுவனம், இத்தாலியில் இரண்டு உதைபந்தாட்டக் கழகங்களை வாங்கியது

லிபியாவை காலனிப் படுத்திய நாடான இத்தாலி, பிரதான வர்த்தகக் கூட்டாளியாகும். லிபியாவின் எண்ணெய் வயல்களிலும், பிற துறைகளிலும் இத்தாலியின் முதலீடுகள் அதிகம். நெதர்லாந்தின் ஷெல் நிறுவனமும் எண்ணெய் உற்பத்தியில் குத்தகைகளை பெற்றிருந்தது. இருப்பினும் அமெரிக்க நிறுவனங்களின் வரவு மிகக் குறைவாகவே இருந்தது. தற்போது லிபியா பிரச்சினையில் அமெரிக்கா மிகத் தீவிரமான அக்கறை செலுத்துவது ஒன்றும் தற்செயலல்ல. சதாம் ஹுசைன் கால ஈராக்கிலும், ரஷ்யர்களும், சீனர்களும், எண்ணெய் உற்பத்தியை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் அமெரிக்கா படையெடுத்தது. அதற்குப் பிறகு ஈராக்கின் எண்ணெய் உற்பத்தி முழுவதையும் அமெரிக்க நிறுவனங்கள் கைப்பற்றிக் கொண்டன. தற்போது லிபியாவிலும் அது போன்ற நிலைமை காணப்படுகின்றது.

கடாபிக்கு ஆதரவான லிபியப் படைகள் முன்னேறிச் சென்று, கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களை கைப்பற்றி வருகின்றன. இதனால் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு, சவூதி அரேபியாவை அமெரிக்கா கேட்டுள்ளது. லிபியா முழுவதும் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்திருந்தால், அவர்களுடன் எண்ணெய் உற்பத்தி ஒப்பந்தங்களை செய்து கொண்டிருக்கலாம். கிளர்ச்சியை வழிநடத்திக் கொண்டிருக்கும், "லிபியா தேசிய மீட்பு முன்னணி" புகலிடத்தில் இயங்கிய பொழுது, சி.ஐ.ஏ. தொடர்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் கிளர்ச்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, லிபியா முழுவதும் கடாபியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தால், அடுத்த நடவடிக்கை பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். லிபிய வான் பரப்பை நேட்டோ படைகள் கட்டுப் படுத்துதல், பொருளாதாரத் தடை என்பன, ஐ.நா. பெயரில் கொண்டு வரப்படும்.

ஊடகங்கள் பல தடவை செய்தி அறிவிப்பதை விட பிரச்சாரம் செய்வதற்கே பெரிதும் உதவுகின்றன. ஆரம்பத்தில் இருந்தே லிபிய மக்கள் அனைவரும் கடாபிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து விட்டதாகவே காட்டிக் கொண்டிருந்தனர். இராணுவத்தை விட்டோடியவர்களை சுட்டிக் காட்டி, லிபிய இராணுவம் மக்கள் மீது தாக்குதல் நடத்த மறுக்கிறது என்றும் கூறிக் கொண்டிருந்தன. அவ்வாறு தாக்குதல் நடத்துபவர்கள் எல்லோரும் பிற ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த கறுப்பினக் கூலிப் படைகள் என்று செய்தி வாசித்தன. கிளர்ச்சியாளர்களால் விடுதலை செய்யப்பட்ட பகுதிகளின் மக்களும் அவ்வாறான தகவல்களை தெரிவித்தனர். ஆனால் அங்கே நிலவும் நிறவெறிப் பாகுபாட்டை ஊடகங்கள் வேண்டுமென்றே மறைத்தன. லிபியாவின் தென் பகுதியில் கறுப்பின மக்கள் வாழ்கின்றனர். அவர்களும் லிபியப் பிரஜைகள் தான். அதே நேரம் லிபியாவில் லட்சக் கணக்கான ஆப்பிரிக்க குடியேறிகள், அகதிகள் வசித்து வருகின்றனர். லிபிய நிறவெறியர்கள் அவர்களை தாக்குவது, அங்கே அடிக்கடி நடக்கும் நிகழ்வு. ஒரு தடவை, லிபிய காடையர்கள் நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்கர்களை இனப்படுகொலை செய்யுமளவிற்கு, அங்கே நிறவெறி உச்சத்தில் இருந்துள்ளது. இன்றும் கிளர்ச்சியாளர்கள் விடுதலை செய்த பகுதிகளில் வாழ்ந்த ஆப்பிரிக்கர்கள் தாக்கப்பட்டனர். அனைத்து வெளிநாட்டவர்களும் மோசமான விளைவுகளை எதிர்பார்த்து வெளியேறி விட்டனர்.

3/24/11

அவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி.

இலைதழை அடைத்த வாசல்சந்துகளின் வழி
அவள் கவைகூட்டித் தணல் தள்ள
புகைசூழ்ந்து வேகும் சுண்ணாம்புச் சூளையில்

குருவியும் பறக்க அஞ்சிக் கூடிருக்கும் வெயிலில்
அவள் மடிகூட்டிச் சேர்த்தெடுத்து
மலையென்று குவிந்திருக்கும் பருத்தியில்

இருபது நிமிடப் பேருந்துக் காத்திருப்பால்
களைத்த முகங்கள் இளநீரில் இளைப்பாறும் சாலையொன்றில்
தீமீது தவம்புரிந்து அவள் உருக்கி ஊற்றும் தாரில்

தலையெல்லாம் மயிரும் மயிரெல்லாம் நூலும் சுமந்திருக்க
அக்குள் ரவிக்கையின் வியர்த்த வெள்ளை வரிபடிய
அவள் சுற்றித் தேய்ந்திருக்கும் கதர்க்கடை ராட்டையில்

பேசாத சாமிக்கு ஆச்சாரம் துலங்கவந்து
யாரெல்லாமோ சாத்த
முக்குக்கடை வாசலில் பாலுரிஞ்சும் குழந்தையுடன்
பத்துவிரல் உழைத்து அவள் கட்டித் தந்திருக்கும் மாலையில்

குருடர்கள் உணராத நிறங்களென விரவி ஒளிர்கிறது

அவள் கருப்பை முட்டை வெடித்துச் சிதறும் உதிரம்

______________________________________________

சமூகத் தளங்களில் பங்கெடுக்க ஆரம்பித்திருந்த பதின்மக் காலகட்டங்களில் இந்த மகளிர் தினம் சார்ந்த கொண்டாட்டங்களில் பெரிய ஈடுபாடு இருந்தது. காரணம்… இருந்த ஆர்வங்களுக்கேற்ற வாய்ப்புகளை அத்தகைய கொண்டாட்டங்களும் கொண்டுவந்து கைகளில் சேர்த்தன. அந்த அங்கீகார, புகழ்ப் போதைகளை விலக்கிய போதி மரங்களும் விரைவில் கிடைத்தன. சில வருடங்கள் இருக்கும். அப்போதுதான் அறிமுகமாகியிருந்த தமிழ்வலைப்பதிவுகளில் எண்ணிவிடக்கூடிய மிகச்சில பெண்பதிவர்களே இருந்தார்கள்.

அப்போதும் இப்படியொரு மகளிர் தினம் வந்தது. பெண்பதிவர்களில் சிலருக்கு அது அதீத ஆர்வம் தந்து கொண்டாட வைத்தது. பரபரவென்று பெண்பதிவர்களின் பட்டியலைத் தயாரிப்பதிலும், அந்த வெற்றிகளை அறிவித்துக்கொள்வதிலும் ஆர்வமாக இருந்தார்கள். இது குளிரூட்டிய அறைக்குள் விரைத்துவிடாதிருக்கக் கணினி வெப்பம் தேடி வந்திருக்கும் வசதியான சிறுகூட்டம்தானே? இந்தக்கூட்டத்தின் வெற்றிக்கும் மகளிர் தினத்துக்கும் எப்படி முடிச்சிட முடியும்? என நினைத்துக்கொண்ட மனம் விலகியே இருந்தது.

இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கையில் அசுரன் தன் பதிவில் அடித்தட்டுப் பெண்களின் படம் ஒன்றைப் போட்டு “மகளிர் தினம் யாருக்கு?” என்று ஒற்றைவரியை மட்டும் பொட்டிலடித்தாற் போல் போட்டிருந்தார். அது பிடித்திருந்தது. எனவே நன்றி சொல்லிப் பின்னூட்டம் இட்டேன். அவரின் அமைப்போ அரசியலோ அல்லது வேறு எதுவுமோ தெரியாது. ஆனால் அந்தக் கேள்வியின் நியாயம் அங்கே பிடித்து வைத்தது.

இப்போது தங்கள் அமைப்பை, அரசியலை முன்வைத்து இந்தத் தளத்தை வினவு நண்பர்கள் நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து வாசித்தாலும் கருத்தெழுதுவது எப்போதாவதுதான். அப்படி எழுதுகிற சமயத்திலும், சில தனிமடல் உரையாடல்களிலும் அவர்களோடு நான் அதிகம் காட்டியது சண்டைக்கோழி பாவனைதான். வேறுமாதிரி சொன்னால் விமரிசனங்கள்.

விமர்சனங்களை முன்வைப்பவர்களில் பலவகை இருக்கலாம். விரும்புபவர்கள் சறுக்கல்களைச் சுட்டிக்காட்டவும் விமர்சிக்கலாம், அதையே எதிர்மறையாக, ஒழிக்க விரும்புவர்கள் சறுக்கல்களையே கொண்டாட்டமாகவும் விமர்சிக்கலாம். இதில் வினவுக்கு நான் விமரிசனங்களாக வைப்பவை எந்த வகையைச் சேரும் என வாசிப்பவர்களோ, வினவு நண்பர்களோ அறிந்துகொள்ள முடியும் என்றுதான் கருதுகிறேன். அப்படிப் புரிந்துகொண்டவர்கள் அதை எனக்குத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் புரிதலின் புள்ளியில்தான் இப்போது வினவுக்காக இந்த இடுகையை எழுத ஆரம்பித்தேன். ஏற்கனவே வேறு ஒரு தொடர் எழுத மடல்வழி உடன்பாடு நிகழ்ந்து பிறகு அதற்கான தயாரிப்புகளும், வாசிப்பும் தடைபட்டதால் எழுத இயலவில்லை. அந்தச் சோம்பேறியிடம்தான் இப்போது மகளிர் தினம் சார்ந்து கட்டுரை கேட்டார்கள். இதையும் தாமதமாகவே இப்போதுதான் தர முடிந்தது. அதற்காக மன்னிக்கவும்.

சனநாயகமும், விடுதலையும் சட்டப்படி வந்து அறுபத்திச் சொச்சம் ஆண்டுகள் கழித்து மகளிர் மசோதா ஒரு அவையில் நிறைவேற்றப்பட்டதைக் கொண்டாடும், அதை இன்னொரு சபையில் என் பிணத்து மீதுதான் நிறைவேற்ற முடியும் என சவாலிட்டு நிற்கும், உள் ஒதுக்கீடு ஏன் தேவை, ஏன் தேவையில்லை என விவாதித்து நிற்கும் நம் அரசியலை எழுதலாம். நாளொன்று பெண் ஒருத்தியின் மீதான பாலியல் வன்முறையின்றிக் கழிகிறதா என ஐ.நா வின் புள்ளி விவரம் வரை குறிப்பிட்டு எழுதலாம். அவளின் மீது ஏற்றிவைக்கப்பட்ட கற்பு இறக்க முடியாத சுமையாக பேரழிவு புரிவதையும், எங்கே இறங்கிவிடுமோ எனப்பதறிப் பண்பாட்டுத் தட்டிகளோடு அலையும் பெண் கற்பின் காவலர்களையும் எழுதலாம்.

பெண்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் எனப் பேசிக் கொண்டிருக்கும்போதே மேலே வந்தவர்கள் சந்திரிகாக்களாய், செயலலிதாக்களாய், சோனியாக்களாய் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று எழுதலாம். போகிற போக்கில் “பெண் உடல் நுகர்வுப் பொருள் அல்ல” என்பதும் விளம்பரமாகி அதைப் பொதுசனத்திற்குச் சொல்வதற்காய் ஒரு முக்கால் நிர்வாணப்பெண் தன் உடல்மொழி கொண்டு நிற்பாளோ என்றும் தோன்ற ஆரம்பித்திருக்கும் கணினி யுக அழகிப் போட்டிகளை எழுதலாம். கொஞ்சம் எழுத்தும், வாசிப்பும் இருந்துவிட்டால் “மகளிர் தின” த்துக்கு எழுத விடயங்கள் அதிகம்தான்.

எனக்கு இங்கே பகிர்ந்து கொள்ளத் தோன்றியது வேறுவிதமானது. அவை சில பெண்களைப் பற்றியது. அவர்கள் மகளிர் தினத்துக்கு எந்த மேடையிலும் வராதவர்கள், எந்த ஊடகத்திலும் எழுதாதவர்கள், புரட்சியை அறியாதவர்கள்; ஆனால் தன்னளவில் வாழ்வை வைராக்கியத்தோடு ஒரு போராட்டமாக நடத்தியவர்கள். வறட்டுக்கரை மணலில் நான் ஆடோட்டித் திரிந்த காலத்திலிருந்து என்னால் கவனிக்கப்பட்டவர்கள்; என் தோல்விகளின் விரக்தியில், கனவுகளில் வந்து கைபிடித்துத் தூக்கிவிட்டவர்கள்; வாழ்வு என்பது துணிச்சலிலும், நேர்மையிலும் உள்ளதென்று உணரவைத்தவர்கள் அந்தப் பெண்கள்.

_____________________________________________________

தாயா…. தாயா பண்ணைகளின் ஏவலில் கூலி வேலைக்காரி. கணவன் இறக்க ஒரே மகன். மழையோ, வெயிலோ கூலிக்குப் போனால் சோறு அல்லாவிட்டால் பட்டினி. குடிசைக்குக் கூரையும், கட்டிக்கொள்ளத் துணியும், கால்வயிற்றுக் கஞ்சியும் போதுமென்ற நிறைவை நெஞ்சில் நிறுத்தியிருந்தால் தாயாவின் பின் அவர் மகனும் அதே பண்ணைகளுக்கு ஒரு அடிமையாய் வந்திருப்பார். எதோ ஒரு தீயும், சமூகம் தந்த ஆறாத காயங்களும் கனன்று கனன்று கனவை விதைத்திருந்தது. எப்பாடு பட்டேனும் மகனைப் படிக்க வைத்துப் பட்டணம் அனுப்பி விடுவது. கிராமங்கள் தேசத்தின் முதுகெலும்போ, கலாச்சாரத்தின் தொல்லியல்போ மட்டுமல்ல. கிராமங்களின் வேர்கள் சாதிப் புற்றுநோய்க் கிருமிகளின் வெகுநல்ல தங்குமிடங்களும் கூட. தயா இதை அறிந்திருந்ததே கூடத் தன் மகனை அதன் முடிச்சுகளிலிருந்து விடுவித்து அனுப்பிவிடும் கனவினை விதைத்திருக்கலாம். எத்தனையோ போராட்டங்களைத் தாண்டி ஒற்றை மனுசியாய் அந்த நினைப்பை நிறைவேற்றினார்.

மலையேறி விறகு வெட்டிப் பொழுது விடியச் சந்தையில் விற்று வீடு திரும்பும் வாழ்க்கை பழனிக்கு. நெடுநெடுவென்ற உயரமும் கன்னத்தில் சிறுபந்தாய் அடக்கிய வெற்றிலைக் குதப்பலும் வாயில் சீலையும் வேத்து வரி விழுந்த ரவிக்கையும் அவர் உருவம். கூடவே கையில் வெட்டிக் கொண்டு போய் விற்ற கட்டிலிருந்து உருவிய ஒரு நீள விறகுக் கட்டையும். பொழுது விடியும் முன்பு பொம்பளை ஒருத்திதானே தனியாகப் போகிறாள் என்று காதுத் தோட்டுக்கோ, வேறெந்தக் கருமத்துக்கோ பின்னால் வந்த ஆம்பளை ஒருவனைக் கையிலிருந்த விறகுக்கட்டையாலேயே ரத்தம் வர மொத்தி அனுப்பியபின் வீரப் பழனியாக வெளித்தெரிந்தவர். அதற்குப் பிறகு ஊரில் ஆம்பிளைகள் சிலர் பழனி எதிர்க்க வந்தால் வெளிக்குப் போவது போல் வேலியோரமாய் உட்கார்ந்து கொண்டது பெண்களுக்கு நகைச்சுவைக் கதைகளாயின. பானை உடைந்ததுக்கும் பதறி அழுத பெண்களுக்குப் பழனி முன்னுதாரணமும் ஆனார்.

ஒரு சிறுநகரத்தின் கல்யாண மண்டபம். வந்த சனம் தின்றது செரிக்க வழி தேடிக்கொண்டிருக்கையில்தான் அங்கே மாப்பிள்ளையைத் தேடும்படி ஆனது. பொண்ணு பார்க்க வந்தபோது நல்லாப் பார்க்கவில்லையென்றும், இன்றுதான் பெண்ணுக்கு ஒருகண் மட்டுமே உண்டென்றென்று தெரிந்ததென்றும் சொல்லி தாலிகட்ட முடியாதென்று ஓடிப்போனார் மாப்பிள்ளை. ஊரும், உறவுகளும் ஏளனப்படுத்தி நிற்க அதே மண்டபத்தின் ஒரு மூலையிலிருந்த தன் கணவனை அழைத்து வந்து “என் தங்கைக்கு நீயே தாலிகட்டு எவன் என்ன சொல்வான்னு பாக்கறேன்” என நடத்தித் தன் நான்கு குழந்தைகளோடு தங்கைக்குப் பிறந்த ஒரு குழந்தையையும் வளர்த்தெடுத்து அத்தனை பேரையும் நல்ல வேலைகளுக்கனுப்பிய லட்சுமி டீச்சர், வாழ்வின் அத்தியாயங்களில் இன்னொரு பெண்.

மூன்று குழந்தைகளும், பால் வியாபாரமும் விக்கித்து நிற்க விபத்தொன்றில் இறந்துபோன பால்காரரின் மனைவி மாரம்மாள். பொட்டையும், பூவையும் அழித்துத் தாலி பிடுங்க வந்த உறவுகளிடம் முடியாதெனத் திருப்பியனுப்பி மூன்றுமாதம் கழித்துத் திருமணமாகாதிருந்த உறவினர் ஒருவரிடம் தானே சென்று “என் வாழ்வுக்கு ஒரு ஆண் தேவை, நீ என்னைக் கல்யாணம் செய்துகொள்ள விருப்பமா?” எனக் கேட்டு மணமும் முடித்து, இருந்த குழந்தைகளோடு தலைநிமிர்ந்த வாழ்வும் சூடி வாழ்ந்தது அவர் கதை.

தாயாவும், பழனியும், லட்சுமியும், மாரம்மாளும் நம்மோடுதான் பயணிக்கிறார்கள் ஆனால் வேறு வேறு பெண்களாக. அவர்கள் சீதையும், கண்ணகியும், ஐஸ்வர்யாராயும், ரஞ்சிதாவும் அல்ல, அவர்கள் வேறு பெண்கள்.

______________________________________

இந்தப் பெண்களின் பிரச்சினைகள் பற்றிய அக்கறை பெண்ணியம் போற்றும் பெரும்பாலான அமைப்புகளுக்கும் கூட இருக்கிறதா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் நமது சமூகங்களில் கடந்த காலங்களில் பங்குபெற்ற, கவனித்து வந்த மகளிர் தினக் கொண்டாட்டங்கள் பலவற்றிலும் இவர்களுக்கான குரல்களும், இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேவையான முகங்களும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்றே உணர்கின்றேன். வெள்ளைக்காலர் வேலைகளை எட்டிப்பிடித்திருக்கிற பெண்களுக்கு அவரவர் பணிபுரிகின்ற வேலைசார்ந்த சங்கங்களேனும் அவர்கள் பணியிடங்களில் பெண் என்ற ரீதியில் பாதிக்கப்படுகிறபோது கொஞ்சமேனும் குரல்கொடுக்க முன்வருகின்றன. இயன்றால் நீதிமன்றங்களுக்கும், ஊடகங்களுக்கும் கூட எடுத்துச்செல்ல முடிகின்றன.

ஆனால் உடல் உழைப்பை மட்டுமே நம்பி, பொருளாதாரத்தின் ஆகக் குறைந்த அடுக்குகளில் வாழும் பெண்களுக்கு அவர்களின் பணி சார்ந்து நடக்கிற எத்தகைய வன்முறைகளாயினும் அவை வெளியுலகுக்குத் தெரியவராமலே முடிந்து விடுகின்றன. புகார் கொடுக்கக் காவல் நிலையம் போனால் அங்கே இன்னொரு முறை அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. பாதிப்பை ஏற்படுத்தியவர்கள், சட்டப்படி மரணதண்டனை வரை பெற வேண்டிய குற்றவாளிகள் என்றாலும் கூட ஒரு வட்டச் செயலாளர் பெயரையோ, எம். எல். ஏவின், எம். பி யின், மந்திரியின் பெயரைச் சொல்லி சமூகத்தில் சகல செல்வாக்கோடும் உலவ முடிகிற கொடுமை நமக்கே உரித்தான “சட்டத்தின் ஆட்சியின்” லட்சணம்.

இத்தனை கண்ணிகளும் தங்களைச் சுற்றி வேடன் விரித்திருக்கும் வலைகளாகப் பரவிக்கிடக்கிற ஒரு சூழலில்தான் தாயாவும், பழனியும், மாரம்மாக்களும் வாழ்ந்து வருகிறார்கள். வெயிலிலும், காற்றிலும், மழையிலும் உழைத்துக் காப்புக் காய்த்துக் கன்னிப்போன தோல்களுக்குள்ளும், எலும்புகளுக்குள்ளும் அவர்களின் உயிரை ஒட்ட வைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது அவர்களிடம் இருக்கும் நெஞ்சுரம் மட்டும்தான். வாழ்வு தொண்டை வரளும் அவர்களின் தாகத்துக்கான நீரை ஒரு உச்சி மலையில் வைத்திருக்கிறது. ஒரு நைந்துபோன தொங்கும் கயிறு கொண்டே அவர்கள் மலையேற வேண்டும், அதுவும் எந்த நேரத்திலும் அறுந்து சாகடிக்கலாம்.

அப்படியொரு நிலையிலும் தளராது சுமந்திருக்கும் அவர்களின் உறுதி எனக்கு நிறையக் கற்றுத் தந்திருக்கிறது. அந்த அவர்களின் வலிகளையோ வாழ்வையோ நாம் இலக்கியத்தில் எழுத வேண்டும். கலைகளில் காட்சிப்படுத்த வேண்டும், ஆவணங்களாகப் பதிவு செய்யவேண்டும். அது நமது வாழ்வின் சாட்சியாய், வரலாற்றின் படித் தடங்களாய் தலைமுறை தாண்டியும் சிந்திக்க வைக்க வேண்டும். எழுதவும், பேசவும் வாய்ப்புக் கிடைத்திருக்கிற பெண்களுக்கு இந்தக் கடமை நிச்சயம் இருக்கிறது என்பதை உணர்கிறேன்.

அரை நூற்றாண்டுக்கும் மேலான பெண்ணுரிமைப் போராட்டங்களின் பயன் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. பெண்கள் தங்களின் உரிமைகளை உணர்ந்திருக்கிறார்கள். அரசாங்கங்கள் பெண் மீதான பாலியல் வன்முறையைக் கடுமையான சட்டங்கள் கொண்டு ஒடுக்கி வருகின்றன. ஆனால் நமக்கு இன்னும் அவை சாத்தியமாகவில்லை. இங்கே தன்னந்தனியாக ஒரு பெண்ணாகச் செய்ய முடிகிற பயணங்களை, வேலைகளை நாம் நம் அமைப்பில் ஒரு ஆண் துணையில்லாமல் செய்வது பகீரதப் பிரயத்தனமாக இருக்கிறது.

ஒரு வெளியூருக்குப் போய் விட்டுத் தனியாக ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்குவதற்கான சுதந்திரத்தையோ, பாதுகாப்பையோ கூட நாம் இன்னும் எட்டிப் பிடிக்காமல் இருக்கிறோம் என்பதையெல்லாம்தான் மகளிர் தினத்தில் நினைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் செய்தித் தாள்களில் பார்த்த மகளிர் தினக் கொண்டாட்டப் புகைப்படங்களில் கனிமொழியும், சுதா ரகுநாதனும் சிரிப்பதைத் தாண்டி நமது நிதர்சனங்கள் குறித்த கவலைகள் பேசப்படுவதில்லை. பல பத்திரிக்கைகள் செய்யாத, கவனிக்காத பக்கத்தைக் கையிலெடுத்து வித்தியாசமான மகளிர் தினத்தைத் தன் வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக “வினவு” க்கு நன்றி.

நமது பெண் விடுதலையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நமது சமூக அமைப்பை உள்வாங்கவேண்டும். பெண்களே என்றாலும் எல்லோரின் பிரச்சினைகளும் ஒன்றல்ல. அது பொருளாதாரம் சார்ந்த மேல்தட்டு, நடுத்தரவர்க்கம், கீழ்த்தட்டு என்றுகூடப் பிரித்துவிட எளிதானது அல்ல. படித்த, படிக்காத பெண்கள் என்று வகைப்படுத்திவிட முடியக்கூடியதும் அல்ல.

சாதி………ஆமாம், சாதி சார்ந்தும் பெண்களின் பிரச்சினைகள் வேறுபட்டுக் கிடக்கின்றன நம் சமூகத்தில். உயர்சாதிப் பெண்களின் விடுதலை ஆணாதிக்கத்தின் பிடிகளில் இருந்து விடுபடுவதாக இருக்கிறது. ஒரு தலித் பெண்ணின் விடுதலை என்பது ஆணாதிக்கத்தின் பிடிகளில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல, இன்னொரு பெண்ணிடமிருந்தே சாதி அடக்குமுறைக்கெதிராக விடுதலை அடைவதாகவும் அது இருக்கிறது. தலைநோவு, கைகால் குடைச்சல் வியாதியும், மூச்சுவிடவே ஆக்சிஜன் வேண்டியிருப்பதும் ஒரே பிரச்சினை அல்ல. எனவே பெண்கள் சமத்துவம் பற்றிப் பேசினால் அதில் தாயாவும், பழனியும், மாரம்மாளும் கூடப் பேசப்படவேண்டும். ஏனென்றால் அவர்கள் வேறு பெண்கள்.

___________________________________________

- செல்வநாயகி.

அவரது வலைப்பூ முகவரி: http://selvanayaki.blogspot.com/

3/21/11

குலாக் முகாம்கள்: உண்மைகளும் புனைவுகளும்

ஸ்டாலின் கால Gulag தடுப்பு முகாம்களை ஆய்வு செய்து எழுதிய அமெரிக்க எழுத்தாளர் Anne Applebaum உடன், பெல்ஜிய எழுத்தாளர் Dirk Verhofstadt நடத்திய நேர்காணலின் சுருக்கம். "Gulag. A History" நூலுக்கு புலிட்சர் விருது பெற்ற எழுத்தாளர், "குலாக் என்பது வதை முகாம்" என்ற தவறான பிம்பத்தை தகர்த்துள்ளார்.
கேள்வி: சோவியத் ஒன்றியத்தில் தடுப்பு முகாம்கள் எதற்காக உருவாக்கப்பட்டன? அவை வதை முகாம்களா? அன்றில் தொழில் முகாம்களா? 
பதில்: இரகசிய அரசு ஆவணங்களின் படி, சோவியத் ஒன்றியத்தின் தொழிற்துறையை துரித கதியில் விருத்தி செய்வதற்காக அமைக்கப்பட்ட தொழில் முகாம்கள். ஆனாலும் அந்த முகாம்களில் மனிதர்கள் இறந்துள்ளனர். வட பகுதியிலும் (துருவத்திற்கு அண்மையில்), யுத்த காலத்திலும் முகாமில் வைக்கப் பட்டிருந்த பெருந்தொகை மக்கள் இறந்துள்ளனர். 1942 -1943 க்கும் இடைப்பட்ட காலத்தில் 25 % சிறைக் கைதிகள் மரணமடைந்திருக்கலாம்.

கேள்வி: ஆகவே தடுப்பு முகாம்கள் கைதிகளை சித்திரவதை செய்யும், அல்லது அழிக்கும் நோக்கில் அமைக்கப் படவில்லை. அங்கே யாருமே சித்திரவதைக்குள்ளாவோ, அல்லது கொலை செய்யப் படவோ இல்லையா? 

பதில்: ஆமாம், அங்கே பலர் சித்திரவதை, அல்லது கொலை செய்யப்பட்டனர். இருப்பினும் முகாம் பொறுப்பாளர்கள் பொருளாதார நலன்களையே முக்கியமாக கருதினார்கள். முகாம் பொறுப்பாளர்களும், காவலர்களும் கைதிகளை "மக்கள் விரோதிகளாக" கருதினார்கள். அதாவது மக்களை விட தாழ்ந்தவர்கள். ஆனால் அவர்கள் உற்பத்தி சாதனமாக பார்க்கப் பட்டார்கள். யாருமே அவர்களை கொல்லத் துணியவில்லை. எவராவது இறந்தால் வருத்தப் படவுமில்லை.
கேள்வி: எத்தகைய காரணங்களுக்காக குலாக்கில் மனிதர்களை பூட்டி வைத்திருந்தார்கள்?
பதில்: ஸ்டாலின் காலத்தில், அந்நியர்கள், வெளிநாட்டுப் பயணம் செய்தவர்கள், விசித்திரமான நடத்தைகளுக்காக சந்தேகப் பட்டவர்களும் கைது செய்யப்பட்டார்கள். சோவியத் யூனியனின் அனைத்துப் பகுதியை சேர்ந்தவர்களும், எல்லா இனத்தவர்களும் கைதிகளானார்கள். சில நேரம், இராணுவம், கட்சி, போன்ற நிறுவனங்களை சேர்ந்தோரும் கைதானார்கள். எல்லோரும் அரசியல் குற்றங்களுக்காக கைது செய்யப் படவில்லை. சமூக கட்டுப்பாடுகளை மீறியோரும், கூட்டுப் பண்ணையில் திருடியோரும் கூட முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர்.
கேள்வி: மொத்தம் எத்தனை பேர் கைதிகளாக அடைந்து கிடந்தார்கள்? 
பதில்: 1929 லிருந்து 1953 வரையில் 18 மில்லியன் மக்கள் குலாக் முகாம்களில் அடைக்கப் பட்டிருந்தனர். அதை விட ஏழு மில்லியன் மக்கள் தொலை தூர பிரதேசங்களுக்கு நாடு கடத்தப் பட்டனர். அவர்கள் முகாம்களில் அடைக்கப்படவில்லை, மாறாக வேறு இடங்களில் குடியேற்றப்பட்டனர். 25 மில்லியன் மக்கள், அதாவது மொத்த சனத்தொகையில் 15 % பலவந்தமாக இடம்பெயர்ந்தோ அல்லது முகாம்களிலோ வாழ்ந்தார்கள்.
கேள்வி: சோவியத் குலாக் முகாம்களை நாஸிகளின் தடுப்பு முகாம்களுடன் ஒப்பிட முடியுமா? இரண்டுக்கும் இடையில் என்ன வேறுபாடு? 
பதில்: கைதிகளின் அன்றாட வாழ்க்கை, வேலை, மற்றும் காவலர்களின் நடத்தைகள், தண்டனைகள், பிரச்சாரம் அனைத்திலும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. குலாக் முகாம்கள் தசாப்த காலமாக நிர்வகிக்கப் பட்டு வந்துள்ளன. முகாம் வாழ்வு எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. சில வருடங்கள் குரூரமாக இருக்கும். சில காலங்கள் வாழ்க்கைத் தரம் ஏற்கக் கூடியதாக இருக்கும். குலாக் முகாம்கள் பலவகையானவை. தங்கச் சுரங்கத்தை அண்டிய முகாமில் வாழ்க்கை நரகமாக இருக்கும். அதே நேரம், மொஸ்கோவில் அறிவுஜீவிகளை அடைத்து வைத்திருந்த முகாம் ஆடம்பரமானதாக இருக்கும். அங்கே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணி, செம்படைக்கு ஆயுதம் வடிவமைப்பது.

அதற்கு மாறாக, நாஸிகளின் முகாம்கள் சிறிது காலமே நிலைத்திருந்தது. யுத்தத்தில் நேச நாடுகளின் படைகள் முன்னேறிக் கொண்டு வரவும், நாஸிகள் தோற்பது நிச்சயம் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது முகாம் கைதிகளை அழித்தொழிக்க விரும்பினார்கள். சோவியத், நாஸி தடுப்பு முகாம்களுக்கு இடையில் முக்கியமான இரண்டு அடிப்படை வேறுபாடுகள் இருந்தன. சோவியத் யூனியனில் குற்றம் சாட்டப்பட்ட "மக்கள் விரோதிகள்" என்ற சொற்பதம், பொதுவாக எவரையும் குறிக்கும். இலகுவில் பகுத்தறிய முடியாது. மாறாக, நாஸி ஜெர்மனியில் குற்றம் சாட்டப்பட்ட "யூதர்கள்", எந்த வகையிலும் தம்மை மாற்றிக் கொள்ள வழியற்றவர்கள். நாஸி தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்ட எந்தவொரு யூதரும் உயிர் பிழைப்பேன் என்று எண்ணவில்லை.

சோவியத் குலாக் முகாம்களில் மரணங்கள் சம்பவித்திருந்தாலும், அங்கிருந்த கைதிகள் மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. அல்லது குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த காரணத்திற்காக எவரும் கொலை செய்யப்படவில்லை. பொறியியலாளர் போன்ற அறிவுத் தகமை கொண்டோர் தமது திறமையை வளர்க்க முடிந்தது, அல்லது இலகுவான வேலைகள் வழங்கப்பட்டன. சில முகாம்களில் பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் சேர்ந்து விட்டால், பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப்போர் காலத்தில், செம்படையில் போர்வீரராக விரும்புவோரும் விடுதலை செய்யப்பட்டனர். சில நேரம், குறிப்பிட்ட கைதிகளின் நிலைமை திடீரென மாறலாம். உதாரணத்திற்கு, போலந்து சோவியத்துடன் கூட்டுச் சேர்ந்தவுடன், போலிஷ் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர். சில நேரம், முகாம் பொறுப்பாளர்கள், காவலர்கள் கூட கைதிகளாகலாம்.

இரண்டாவது முக்கிய வேறுபாடு, பொருளாதார நலன். சோவியத் குலாக் முகாம்கள் குறிப்பிட்ட இடத்தில் தொழிற்துறை ஆரம்பிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டன. ஆனால், அதற்காக முகாம் கைதிகள் மனிதநேயத்துடன் நடத்தப் பட்டதாக கூற வரவில்லை. காவலர்கள் கைதிகளை கால்நடைகளைப் போல நடத்தினார்கள். அவர்கள் விரும்பினால் உணவு கொடுத்தார்கள், அல்லது நிறுத்தினார்கள்.
கேள்வி: ரஷ்யாவில் இன்றும் குலாக் முகாம்கள் இயங்கி வருகின்றனவா? 
பதில்: இல்லை. ஸ்டாலினின் மரணத்திற்குப் பின்னர் குலாக் முகாம்கள் அகற்றப்பட்டன. ஆயினும், நாடு முழுவதும் அரசியல் கைதிகள் வழமையான சிறைச்சாலைகளில் அடைக்கப் பட்டிருந்தனர். இன்றுள்ள ரஷ்ய சிறைக் கூடங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

(நேர்காணலின் ஒரு பகுதி. http://www.liberales.be இணையத் தளத்தில் பிரசுரமானது.)

3/20/11

அடிமைப் பெண்ணும், போராடும் பெண்ணும் – விஜி

இதோ பெண்களை நினைவு கூற ஒரு தினம் அத்தனை பத்திரிகைகளிலும் அதற்கான கொண்டாட்டம். நாம முந்திக்கு எவ்ளவோ சுதந்திரமா இருக்கோம். முன்னேறியிருக்கோம்னு மட்டற்ற மகிழ்ச்சியால் மனம் திளைக்கிற இந்த நேரத்தில இதெல்லாம் நிஜமாவே உண்மையான்னு ஒரு நிமிடம் யோசிச்சு பார்க்கறேன். கண்ணீரை உள்வாங்கி கிட்டு காலத்தை கடத்திகிட்டிருக்கிற எத்தனையோ பெண்கள தான் வாழ்க்கையில நான் சந்திச்சுகிட்டிருக்கேன். இது கொண்டாட்டமா, இல்லை நம்மள நாமளே ஏமாத்திகிடறமான்னு நினைச்சு பாக்கிறேன்.

என்னோட உறவுக்கார பெண் தான் அந்த பொண்ணு. தாயில்லை. தகப்பனும் அண்ணனும் சீராட்டி வளர;த்து தேடித் தேடி மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க. கட்டிக்கிட்டவன் ஒரு பக்கா அயோக்கியன். இது அந்த பொண்ணுக்கு ஒரு வருஷத்திலேயே நல்லா தெரிஞ்சிடுச்சு சொந்த வீட்டுலேயே தன் மனைவியோட நகை அத்தனையையும் திருடி செலவழிக்கிற அளவுக்கு கேவலமானவன்னும் தெரிஞ்சது. ஒரு பிள்ளையாயிடுச்சு -குடும்பம்னு வந்தா அவன் மனசு மாறும்னு சொன்னதால தொடர்ந்தது உறவு.

எதாவது சொத்தை வித்து அடைக்கிற அளவுக்கு கடன் வச்ச பிறகு தான் அவன் பண்ண அத்தனை பிராடும் வெளியில தெரியும். தன்னோட தவறை தவறே இல்லாம செய்றதுல அவன் மன்னன். திருந்துவது போல நடித்து பொறுப்பானவன்னு, காட்டிகிட்ட அவனோட தொழிலிலும் கொஞ்சம் முன்னேற்றம். கையில புழங்குன பல இலட்சம் அவனோட இருட்டான பக்கங்களை நினைக்காம இருக்க வச்சது அவள.

அப்பவும் சுத்தி இருக்குறவங்க சொல்றாங்க, “இவன் நியாயமான முறையில சம்பாதிக்கிற மாதிரி தெரியலை, இப்படி யாரும் முன்னேற முடியாது, இதுல ஏதோ தப்பு இருக்குன்னு”. 1 லட்சம் 2 லட்சம்னு சம்பாசிச்ச மாதிரி புழங்குன இடத்துல 10 லட்சம் கடன் இருந்தது. “இப்பவாவது நீ யோசிச்சுக்க, இப்படிபட்டவங்க மாற மாட்டாங்க, அவனோட போராடி போராடி நீ உன் வாழ்க்கையை பணயம் வைக்காதேன்னு” சொன்னா, “தப்பா வர;ற காசுன்னாலும் வசதியான வாழ்க்கைக்கு பழக்கப்பட்டதனால என்ன செய்ய, இது தான் விதின்னு நினைச்சு கிட வேண்டியது தான், பன்னியோட சேர;ந்த கன்றும் பீ திங்கும்னு திங்க வேண்டியதுதான், இதுதான் வாழ்க்கைன்னு” பழகுக்கிறேன்னா. சொன்னவர்;கள் வாயடைத்து நின்றார்;கள்.

இன்னொரு குழந்தையும் ஆச்சு. திரும்பவும் ஏணி மரம் சறுக்கு மரம் கதை தான். 1+1ம் நம்ம தேவைக்காக எப்பவும் 11 ஆகாது. இரண்டு தான் ஆகும். யதார்த்தம் தெரியாம 11 ஆயிடும்னு ஆசைப்பட்ட அவளோட வாழ்க்கை இரண்டு பிள்ளைகளோட 20 லட்சம் கடனோட தலைமறைவா வாழ வாழ வேண்டிய நிலைமைக்கு வந்துருச்சு.

“ஐயோ”ன்னு ஒரு சொட்டு கண்ணீர் விட்டவங்க கூட இன்னைக்கு திரும்ப திரும்ப அவ தேர;ந்தெடுத்த பாதைய நினைச்சு பக்கத்துல கூட வரமாட்டேன்ட்டாங்க. இத்தனைக்கும் அவள் படிக்காதவள் அல்ல… சுயமாக தன் காலில் நின்று ஒரு வேலை தேடி கொள்ளக் கூடிய அளவு படித்தவள். எல்லாத்தையும் இழந்துட்ட அவ கையில் இரு பிள்ளைகள். புருசன் இன்னமும் அதே நிலையில் தான்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அவள நான் பார;த்து பேசினேன். “தெரியாம செஞ்சாத்தான் எந்த தப்புக்கும் மன்னிப்பு உண்டு. தெரிஞ்சே இது தான் வாழ்க்கைன்னு வாழ்;றவனோட நீ ஏன் வாழ துணியற. இப்பவும் ஒண்ணும் இல்லை நீ இப்படித்தான் இருப்பேன்னா உன்னோட வாழ மாட்டேன்னு தனிச்சு நில்லு ஒரு சரியான வாழ்க்கைக்காக போராடு”ன்னு சொன்னப்ப அவ சொன்னா “இல்லை எனக்கு அந்த துணிவில்லை”

இதுக்குள்ளேயே என்றாவது ஒரு நாள் இந்த நிலைமை மாறும். காலம் போகும் வழியில் போகட்டும்னா. அந்த பிள்ளைகள நினைச்சு அவள நினைச்சு என்னால சில நாள் தூங்க கூட முடியல. தன்னோட வாழ்க்கைக்காகவே ஒரு போராட்டம் பண்ண துணியாத இந்த பெண்கள் என்று சமூக சிந்தனையோட போராடுறதுன்னு ஒரு மலைப்பு.

_____________________________________

அதே நேரம் அப்படி போராடி ஜெயிச்ச பொண்ணையும் பார்த்திருக்கேன்.

அவள் ஒரு கிராமப்புற பெண். +2 வரை படிச்சிருக்கா. தகப்பனில்லாம 5 பேர் கொண்ட குடும்பம், கடுமையான உழைப்பினால ஏதோ கௌரவமா பிழைச்சுக்கிட்டிருந்துச்சு. திருமண பேச்சு வந்தது. இந்த பெண்ணை என்னோட உறவுக்கார பையனுக்கு பேசி முடிச்சிருந்தாங்க. ஒரு அறிமுகத்துக்காக நான் இந்த பொண்ணை பார்;க்க போயிருந்தேன். ஏழ்மையிலும் நேர்மைன்னு படிச்சு தான் இருக்கேன். ஆனா அந்த குடும்பத்தை கண்ணார பார;த்தேன். பார;த்த உடனேயே ஏனோ ஒரு பெருமிதம். ச்சே! இப்படியும் மனிதர;கள் இருக்காங்களேன்னு மனதுள் அப்படி ஒரு சந்தோஷம்.

இவங்களோட திருமணமும் பேரம் படிஞ்சு முடிஞ்சது. அவன் ஒரு கூலித்தொழில் பார்ப்பவன். கல்யாணமான ஒரே மாசத்துல சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. சந்தேக நோய். நின்னா குத்தம், நிமி;ந்தா குத்தம். இதுல தூண்டி விட அவனோட கூட பிறந்தவுக. அதிர;ச்சியான உண்மை அவளுக்கும் புரிந்தது. உலகத்துல மாத்த முடியாததுன்னு எதுவும் இருக்குதா என்ன? சரி பண்ணுவோம்.

இது ஒரு போராட்டம். கடைசி வரை போராடி பார்ப்போம்னு நினைச்சா. அவனோட டார்ச்சர் தாங்காம தற்கொலைக்கும் ஒரு முறை முயற்சி பன்னுணா. “பாரு, பாரு நான் எப்படி வச்சிருக்கேன், அவ தற்கொலைக்கு முயற்சி பண்றான்னு” என்னை அவட்ட பேச கூட்டிட்டு போனான். “இல்லை ஏதோ அவசரத்துல அப்படி பண்ணிட்டேன், இனி இப்படி பண்ண மாட்டேன்னா”. முடிஞ்ச அளவு சமாதானப்படுத்திட்டு வந்துட்டேன்.

கொஞ்ச நாள்லயே திரும்பவும் பிரச்சனை. அங்க உள்ள கிராம பஞ்சாயத்து வரைக்கும் பிரச்சனை போய் அப்புறம் எங்க கவனத்துக்கு வந்தது. அவன் உறவுன்றதனால எங்கள அவன் தான் கூப்பிட வந்தான்….. கண்ணீர; விட்டான். “நான் நல்லவன்னு” சத்தியமே பண்ணுனான். “இரு, நாங்க அந்த பொண்ணையும் பார்;த்து பேசிட்டு போறாம்”னு சொன்னோம். அவனோட சொந்தமா இருந்தும் அவ பக்கத்து நியாயத்தை நாங்க கேட்க போனதுனால மனம் திறந்து தன்னோட பிரச்னை என்னன்னு சொன்னா.

தப்பு பண்ணும் மகன். அதை தடவிக் கொடுக்கும் குடும்பம். “என்னால சமாளிக்க முடியல, இந்த சூழல்ல அவரோட வாழ்றதே போராட்டமா இருக்குன்”னா. பிரச்னையோட மையம் என்னன்னு தெரிஞ்சதால அவுக இரண்டு பேரையும் பேசி நாங்க இருக்குற ஊருக்கே கூட்டி வந்து குடி வச்சோம். எங்கள் முன்னாடி அப்படி ஒரு அம்மாஞ்சி வேஷம். ஆனால் அவளோட ஒரு சைக்கோ போன்ற அணுகுமுறை.

எங்களோட சின்ன சின்ன உதவிகளோட விளையாட்டு பிள்ளை மணல்வீடு கட்றாப்ல தன்னோட வாழ்க்கைய ஆரம்பிச்சா. தாய் தந்த சீதனமா கையிலே இருக்குற உழைப்பை மதிச்சா. அவன் 3 ரூபா தான் கொடுப்பான் செலவுக்கு. மாற்றுவோம், என்றாவது அவன் மாறுவான்னு அவன் போடுற அத்தனை தடைகளையும் தாண்டி கிட்டே வந்தா. ராத்திரி 1 மணி 2 மணிக்கு அவள ஏதோ ஒரு காரணம் சொல்லி சண்டை இழுத்து அடிச்சு போட்டுட்டு நல்ல பிள்ளை மாதிரி அவளுக்கு முந்தி இவன் வந்துடுவான். “அவ என்னை கொல்ல வாறா, அதனால அடிச்சிட்டு வந்துட்டேன்னு” இவன் வர பின்னாடியே இரத்தக் காயத்தோட அவ வருவா. பொறுப்பேற்றுக் கொண்ட நாங்களே பொறுமை இழந்தோம்.

போலீஸ் ஸ்டேஷன், பஞ்சாயத்து, தெருச் சண்டை, கருக்கலைப்பு என பிரச்சனை வளர்ந்து கிட்டே போச்சு. போராட்டத்தின் நெடிய பயணம் அவளை ஒரு முடிவு எடுக்கத் தூண்டியது.

அவ தெளிவாயிட்டா. இல்லை, இவன் திருந்தி நாம ஒரு நல்ல வாழ்க்கை வாழ முடியாதுன்னு. வாழ்க்கை பூராவும் போராடி வாய கட்டி வயித்த கட்டி காசு சேர்த்து கட்டி கொடுத்த நம்ம பிள்ளை வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னே இந்த பொண்ணோட அம்மாவுக்கு மனநிலை பாதிச்சு ஆஸ்பத்திரியில சேர்க்கிரமாதிரி ஆயிருச்சு. நிலைமைய எங்கட்ட சொல்லிட்டு அவ அம்மா வீட்டுக்கு கிளம்பிட்டா.

அங்கயும் அவனோட தொந்தரவு தொடர்ந்துச்சு. “நீ ஒரு டாக்டரிடம் வா உன்னை சரிபடுத்திக்கோ. சரியான பிறகு இரண்டு பேரும் உழைச்சுனாலும் ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்னா” அவன் அதற்கு தயாரில்லை. “வீட்டுக்கு அடங்காதவ, அவன் அடிச்சா பணிஞ்சு போகாதவ, ஏன் நாங்கள்ளாம் இல்லை, ஆனாலும் பொம்பளைக்கு இவ்வளவு திமிரு ஆகாதப்பா”. எத்தனை எத்தனை பேச்சு. அனைத்தையும் தாங்கி நின்றாள்.

“வாழ்க்கை என்னுடையது, வழியும் என்னுடையது, முடிவும் என்னுடையதாகவே இருக்கட்டும்” என்றாள். நிமிர்ந்து நின்றாள். “நானும் போராடி பார்த்து விட்டேன், அவரு எதற்கும் ஒத்து வர்றமாதிரி இல்லை. இது தான் வாழ்க்கைன்னா நான் இனி இவரோட வாழ தயாராயில்லை”.

அவள் பட்ட பாட்டையும், அலைந்த அலைச்சலையும் அவளோட தெளிவான அணுகுமுறையும் பார்த்து எங்களுக்கே வீரம் வந்தது. அட இவள்ள பொம்பளைன்னு. அவன் குற்றம் சாட்டி போன அதே பஞ்சாயத்துலயே எந்த தயக்கமும் இல்லாம அவனோட குற்றங்களை ஆதார பூர்வமா நிரூபிச்சா. தானே தன்னோட பொண்டாட்டிக்கு மொட்டை கடுதாசி எழுதி யாரோடயோ தொடர்பு இருக்கு என்று சொல்லியிருந்தான். “அது அவன் எழுத்துனதுன்னும், இப்படித்தான் அவன் இருப்பான்னா என்னால வாழ முடியாது”ன்னும் தெளிவா சொன்னா. அவனிடமிருந்து அதே பஞ்சாயத்து மூலமே தன்னோட திருமண உறவ ரத்து பண்ணீட்டா.

மறுமணமும் செஞ்சுகிட்டா. இன்னைக்கு ஒரு குழந்தைக்கும் தாயாகிட்டா. போன வாரம் போய் அவளை பார்த்து வந்தேன். பிரச்னைகளை கண்டு அதற்குள்ளேயே அழுந்தி தானாய் ஏதாவது ஆகி எல்லாம் காணாம போயிடுவோம்னு தான் எல்லா பெண்களும் நெனைச்சிருக்காங்க. இது சமூகம் சார்ந்த பிரச்சனை. அது புரியணும், நிலைமையை சமரசப்படுத்திகிட்டு மட்டுமே வாழ நினைக்கிறாங்க. தன் கை விலங்கொடிக்க யாரோ வருவாங்கன்னு இருக்காங்க. ஆனா போராடினால் மட்டுமே விடிவு.. விடிவு…. விடிவு….

எதிலும் எப்போதும்.

______________________________________________

- விஜி